கங்காவும் சில ரோஜா பதியன்களும்

 

மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் அந்த போஸ்டர் இருந்தது, சமீபத்தில் திரைக்கு வந்த ‘கோச்சடையான்’ போஸ்டர். ரஜினி, அதில் இளைஞராகத் தெரிந்தார். கங்காவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘எப்படி வயசு குறைஞ்சுக்கிட்டு வருது?!’

கங்காவுக்கு, ரஜினிகாந்தைக் கண்டால் கொள்ளை ஆசை. அந்தத் திமிர் பிடித்த பார்வையும், சிகரெட்டை வீசி வாயில் லபக்கென்று பிடிக்கும் ஸ்டைலும் யாருக்கு வரும்? ஆள்காட்டி விரலால் ஒரு கோடு கிழித்து, ‘என் வழி… தனி வழி…’ என்று ரஜினி ஜம்பமாகச் சொல்வதைக் கேட்கும்போது, அவளுக்குச் சிரிப்பு வரும். எல்லாவற்றையும்விட, அந்தத் தமிழில் தொனிக்கும் கன்னட வாடை பிடிக்கும். பெங்களூரில் இருந்து போனவர்தானே, பின்னே எப்படிப் பேசுவாராம்? அதை மாற்ற வேண்டும் என்று அவருக்கு அக்கறை இல்லையோ… இல்லை, முயன்றும் தமிழ் உச்சரிப்பு வரவில்லையோ, கங்காவுக்கும் அப்படித்தான் பேச வரும் என்பதால், ரஜினி நம்ம ஆளு எனத் தோன்றும்.

இன்று, அவளுக்கு அந்த முகத்தைப் பார்க்கப் பிடிக்க வில்லை. அது பிரச்னைக்கு உரியதாகப் போகும் என்று நினைக்கவில்லை.

”சினிமாக்காரன் படத்தை எல்லாம் சுவத்துல மாட்டிவெக்கறவ என்ன மாதிரி பொம்பள?”

இதுவரை யாரும் அவளை அப்படிக் கேட்டது இல்லை. அவளைக் கட்டின புருஷன்கூட.

”ஏன், வெச்சா என்ன தப்பு? எனக்குப் பிடிக்கும்… உனக்கு என்னய்யா வந்துச்சு?”- அவள் சிரித்துக்கொண்டுதான் கேட்டாள், அது ஏதோ ஹாஸ்யம் போல. சிரித்தது தப்பு என்று அவளுக்கு இப்போது தோன்றியது.

”அதெல்லாம் சரிப்பட்டு வராது. யோக்கியமாக் குடும்பம் நடத்தணும்னா…”

அப்பவே அவன் முகத்திலே காறி உமிஞ்சிருக்கணும். சுறுசுறுவென்று அடி வயிற்றில் இருந்து ஒரு கோபம் நெஞ்சு வரை எழுந்து தொண்டையை அடைத்தது. ஏதேதோ கெட்டவார்த்தைகள் சொல்லித் திட்ட வேண்டும் போல் இருந்தது. கன்னடத்தில்தான் திட்ட வந்தது. ‘சூளே மவனே… லோப்பர்…’ அவள் விருக்கென்று எழுந்து அந்தப் போஸ்டரைக் கிழிக்க ஆரம்பித்தாள். மைதாவைக் கிளறி ஒட்டப்பட்ட காகிதம், லேசில் வரவில்லை. ரஜினி, வாய் கிழிந்து காது அறுந்து பரிதாபமாகத் தெரிந்தார். அவள் சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு எரிச்சலுடன் நகர்ந்தாள். கிடக்கட்டும், அந்த ஆளு சொன்னதுக்காக, நான் ஏன் இதைக் கிழிக்கணும்? நாளைக்கே வேற ஒண்ணு கொண்டுவந்து ஒட்டுறேன். என்ன செஞ்சிடுவே?

”லோப்பர்…”

”அடீ… அது லோப்பர் இல்லே; லோஃபர்” என்று அவள் வேலை செய்யும் வீட்டு மேடம் சிரிப்பாள்.

”நாங்கள்லாம் அப்படித்தாம்மா சொல்றது. லோப்பர். ஏதோ கெட்டவார்த்தை… லோப்பர்… லோப்பர்…”

கங்காவும் சில ரோஜா பதியன்களும்1

கங்காவுக்குக் கோபம் வந்தால், டைகருக்குத் தெரியும் சற்று விட்டுப்பிடிக்க வேண்டும் என்று. சுவர் மேல் சாய்ந்து, தரையில் அமர்ந்து கங்கா யாரையோ திட்டிக்கொண்டிருந்தாள். சற்று நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு டைகர் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டது. திட்டட்டும். யாரையோ கங்கா திட்டினால், மகிழ்ச்சியாகக்கூட இருக்கும் அதற்கு. கூழாங்கற்களைக் கொட்டுவதுபோல அர்த்தம் புரியாத வார்த்தைகள் சிதறியவண்ணம் இருந்தன. சரமாரியாக கட்டாந்தரையில் விழும் பனிக்கட்டிகள் போல அதில் ஒரு லயம் இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், சுகமாகக்கூட இருந்தது.

மொபைல் சிணுங்க ஆரம்பித்தது. பிறகு, கன்னட சினிமாப் பாட்டு பாடியது. அவளுக்குப் பிடித்த பாட்டு. யாராவது கூப்பிடட்டும் என்ற அசட்டையுடன் அவள் பேசாமல் இருந்தாள். அந்த 12-ம் நம்பர் மேடமாக இருக்கும். நேற்றே அங்கு வேலைக்குப் போகவில்லை. காலையில் இருந்து ஏற்பட்ட மனஉளைச்சலில் இன்றும் போகவில்லை. வெகுநேரம் பாடிவிட்டு மொபைல் நின்றது. ‘ஏன் எடுக்கலை?’ என்பது போல டைகர் அவளை நிமிர்ந்து பார்த்தது.

”இன்னிக்கு யாரோடயும் பேசப்போறது இல்லை; உன்கூடவும்தான்” என்றாள் அவள்.

‘என்னவோ செய்’ என்று டைகர் கண்களை மூடிக்கொண்டது. மீண்டும் பாட்டு ஆரம்பித்தது. அவள் சற்றுப் பொறுத்து அதை எடுத்தாள். 12-ம் நம்பர்தான்.

‘எனக்கு உடம்பு சரியில்லேம்மா…’

‘என்ன உடம்புக்கு?’

‘காய்ச்சல் அடிக்குது.’

” ‘இன்னிக்கு வர முடியலை’னு போன் பண்ணிச் சொல்லக் கூடாதா, மொபைல் எதுக்கு வெச்சிருக்கே?” – அவள் எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்டாள்.

”எங்கேம்மா, கண் முழிக்க முடியாமக்கிடந்தேன். ஒரு டீ வைச்சுக் கொடுக்கக்கூட ஆளில்லே” – வார்த்தைகள் தடுமாறின. ஏதோ சாவைப் பற்றி பேசும்போது வரும் துக்கத்தைப்போல துக்கம் சுருண்டு தொண்டையை அடைத்தது. என்னைவிடக் கேடுகெட்ட ஜென்மம் யாரும் இல்லே என்று அழுகை வெடிக்கும்போல இருந்தது.

”சரி, உடம்பைப் பாத்துக்கோ. நாளைக்கு வந்துருவேல்ல? சிங்க் நிறையப் பாத்திரம் கிடக்கு.’

”வரேம்மா.”

”எல்லாருக்கும் அவங்கவங்க பிரச்னைதான்டா பெரிசு” என்றாள் டைகரைப் பார்த்து.

டைகர் வேகமாக வாலை அசைத்து ஆமோதித்து அவள் அருகில் நகர்ந்து படுத்தது. அவளது தொடையில் முகத்தைப் பதித்து, கண்களை மூடிக்கொண்டது.

”இதுவும் உன்கூடவேதான் இருக்குமா?”

”ஆமாய்யா… என்கூடத்தான் இருக்கும்.”

யார் இவன்? அவனும் அவன் முழியும். டைகரின் முன்னங்கால்களைப் பிடித்துக்கொண்டு, கங்கா டான்ஸ் ஆட ஆரம்பித்தாள். பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. பனி மழை கொட்டிற்று. தொட்டியில் மஞ்சள் நிற ரோஜா சிரித்தது. கங்கா, சுழன்று சுழன்று வந்தாள். நா இப்பிடித்தான்… நா இப்பிடித்தான்… இதென்ன திமிர் பேச்சுடீ? கொஞ்சம் அடக்கம் வேணாம்? அவங்க யாரு தெரியுமில்லே?

டைகர் கண்ணைத் திறந்து பார்த்தது. கனா கண்ட மாதிரி இருந்தது. கங்காவைக் காணோம். விருக்கென்று எழுந்து உள்ளே ஓடிற்று. கங்கா, கதவைப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டிருந்தாள்.

இன்று, நேற்றைவிட அதிக வெயில். அவள் வசிக்கும் ஜாகையுடன் ஒட்டிய மொட்டைமாடியில் இருந்து தெருவுக்குச் செல்ல திறந்த படிக்கட்டுகள் உண்டு. அந்த வீட்டின் சௌகரியமும் அசௌகரியமும் அதுதான். கீழ் வீட்டில் வசிக்கும் யார் கண்ணிலும் படாமல் இறங்கி, தெருவுக்கு வரலாம். கண்டவன் மேலே வந்து கதவை இடிக்கக்கூடிய அபாயமும் உண்டு.

சீனி ஆரம்பத்திலேயே சொன்னான், ”இது டேஞ்சர்னு படுது… வேணாம் கங்கா.”

அவள்தான் பிடிவாதம் பிடித்தாள். ”நீ இருக்கும்போது என்ன பயம்?” என்று சிரித்தாள்.

அந்த மொட்டைமாடியும், அந்தக் காற்றும், தொலைவில் தெரிந்த மடிவாலா ஏரியும், அதன் அழகும், அவள் வேலைபார்க்கும் மேடம்களின் பால்கனிகளை நினைவுபடுத்திற்று. அவளும் பூந்தொட்டிகளில் செடி வளர்க்கலாம். நாய்குட்டி இஷ்டப்படி விளையாட நிறைய இடம் இருக்கும். யாரோ கூப்பிட்டு வந்த மாதிரி அது அப்போது எங்கிருந்தோ வந்து சேர்ந்திருந்தது.

”எப்படியோ லீஸுக்கு எடுத்துரலாம். மாசாமாசம் வாடகை கொடுக்கிறது பேஜாரா இருக்கு.”

”ரெண்டு லட்சம் குடுக்கணும்” என்று சீனி முணுமுணுத்தான்.

”ரெண்டு சீட்டு கட்டுறேன்ல? அதை எடுக்கிற நேரம் இப்ப. ரெண்டு வருஷத்துக்குக் கஷ்டம் இல்லை. அது முடிஞ்சதும் பணம் திரும்ப வாங்கிக்கலாம்!” – அதற்கு மேல் அவள் அவனைப் பேசவிடவே இல்லை. ‘ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி’ என்று ரஜினி வசனம் பேசினாள்.

கடைசியில் அவள் இஷ்டப்படியே ஆயிற்று. 10 வருஷங்களாக அவள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துச் சேர்த்த பணம். மொட்டைமாடி சுவரை ஒட்டி பூந்தொட்டிகள் அமர்ந்தன. மேடம்கள் வீட்டில் இருந்து வாங்கி வந்த ரோஜா பதியன்கள், அவள் கைபட்டு அட்டகாசமாகப் பூத்தன. எல்லாருக்கும் ஆச்சர்யம். அவள் கைபட்டு எப்படி இப்படிப் பூக்குது?

அவள் காதுபடப் பேசினார்கள் திமிர் பிடித்த சில பெண்கள், ‘லீஸு கொடுத்து வாங்குற அளவுக்குப் பணம் வெச்சிருந்தாளா?’ ‘பொறாமை புடிச்சப் பேய்ங்க. அவங்க சாபம்தான் நா இப்ப அனுபவிக்கிற எல்லாத்துக்கும் காரணம்’ என்று அவளுக்கு நிச்சயமாகத் தோன்றிற்று.

கங்கா, கிடுகிடுவென்று படியில் இறங்கினாள். தெரு மூலையில் நின்று, மூன்று பெண்கள் இடுப்பில் குழந்தையைச் சுமந்தபடி ஏதோ பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள். கங்காவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மௌனமாக நகர்ந்தார்கள்.

‘என்னதான் பேசுவாங்க?’ – அவள், அவர்களைக் கடந்து சென்றாள்.

”சில பேருக்கு நல்லது சொன்னா, ஏத்துக்கப் புடிக்காதுடீ.”

”ராங்கித்தனம்தான், வேறென்ன?”

”இருக்கற பவிசுக்கு!”

கொல்லென்று சிரிப்பு. அவளுக்கு, திரும்பிச் சென்று அவர்களது தலைமுடியைச் சுழற்றி, சுவரில் மோத வேண்டும் என்று ஆத்திரம் வந்தது.

‘இன்னாடீ அது பவிசு?’

அவள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். ‘உன்னை எங்கே சொன்னோம்..?’ என்று நக்கலடிப்பார்கள். இன்னிக்கு இதுங்க வாயிலே வேற விழக் கூடாது. எல்லாருடைய இடுப்பிலும் ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தது. அந்த மல்லிகாவுக்கு வயிற்றிலும் ஒண்ணு. புருஷன் சரியான குடிகாரன். அவளை அடிச்சு உதைக்காத நாளே இல்லை. இந்த மல்லிகா பெரிய மனுஷி ஆனபோது சாப்பாட்டுக்கு வழி இல்லாத அவளுடைய அம்மா, ஊரெல்லாம் கடன் வாங்கி எல்லாருக்கும் விருந்து வெச்சது.

”எம்மாம் பெரிய விருந்தும்மா?” என்றாள் கங்கா தன் அம்மாவிடம்.

”போடணும்தான்; அதுதான் வழக்கம். அப்பத்தான் நாலு பேர் கல்யாணம் பேச வருவாங்க!” – அம்மா மிச்சத்தைப் பேசாமல் விடுவாள்.

‘என்ன காளியம்மா… நீ எப்ப விருந்து வெக்கப்போறே?’ என்று யாரேனும் கேட்டால், அம்மா சூள் கொட்டுவாள்.

”அதுந்தலையிலே என்ன எளுதியிருக்கோ, ஒண்ணும் புரியலை. சில பேருக்கு நிதானமாத்தான் வரும்னு சொல்றாங்க!”

கால்போன போக்கில் அவள் நடந்தாள். குளுகுளுவென்று காற்றடித்தது. சற்று தொலைவில் மடிவாலா ஏரி தெரிந்தது. சீனி மாதிரியே ஓர் ஆள் கரையில் நின்றிருந்தான். மனசு லேசாக அதிர்ந்தது. தன்னையறியாமல் கால்கள் வேகமாக நடந்தன. அவள் நடக்க நடக்க, ஏரி பின்னுக்கு நகர்வதுபோல் இருந்தது. அந்த ஆளின் உருவமும் நகர்ந்தது. அவள் கரைக்கு வந்து நின்றபோது ஏரி சலனமற்று தெரிந்தது. அந்த ஆளைக் காணோம். ஓர் ஓரமாக, மேடான பகுதியில் அவள் அமர்ந்தாள். சீனியை அவள் முதலில் கண்டது இங்கேதான். ‘உன்னைக் கட்டிக்கிறேன் கங்கா…’ என்று அவன் சொன்னது இங்கேதான்.

அவள், அன்று திக்குமுக்காடிப்போனது நினைவில் இருக்கிறது. அவள் பார்த்த தமிழ் சினிமா நினைவுக்கு வந்தது.

”நெசம்மாவா?”

”நெசம்மாத்தான். பொய் யாராவது சொல்வாங்களா?”

அவளுக்கு நம்ப முடியவில்லை. ‘உன்னை எவன்டி கட்டிக்க வருவான்?’ என்று கேட்டுப் பழகிப்போன காதுகள்.

”என்ன கங்கா, பேச்சைக் காணும்?”

”என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?”

”தெரியும்!”

”என்ன தெரியும்?”

”என்னவோ சொல்றாங்க. எனக்கு எதுவும் தெரிய வேணாம். நீதான் வேணும்!”

”நெசம்மாவா… நெசம்மாவா?”

- ஊர் கேட்டது; அவளைப் பெத்தவளே கேட்டாள்.

கங்கா, சலனமற்று தேமேவென்று இருந்த ஏரியைப் பார்த்தாள்.

சாமினு ஒண்ணு இருக்கா..? ‘இல்லை’ என்று தோன்றிற்று. தெருப் பெண்கள் இருப்பதாகச் சொன்னார்கள்; தங்கள் நன்றிக்கடனைச் செலுத்த நோன்பு இருந்தார்கள்; தீ மிதித்தார்கள்; மாலை போட்டு மேல்மருவத்தூர் சென்றார்கள்; அவள் எதுவுமே செய்தது இல்லை.

சாமினு ஒண்ணு இருந்தாலும், அது மகா பேதம் பார்க்கும் சாமி என்று தோன்றும். நியாயமான சாமினா எல்லாரையும் ஒரே மாதிரி படைக்க வேண்டியதுதானே? அப்பிடி படைச்சிருந்தா, இந்தப் பொண்ணுங்க பல்லு மேல நாக்கை வளைச்சு பேசாம இருக்குமே?

‘பாரு… பாரு… மேனாமினுக்கி, எவனை மயக்கடீ இப்பிடி வேசம் போடுறா?’

‘எவன்கூட போனாலும் வயித்திலே வந்துடுமோனு கவலைப்பட வேண்டியது இல்லை. அந்தத் தைரியம் அவளுக்கு’ – குரல் இறங்கிக் குசுகுசுக்கும்.

‘அவ பொம்பளைதானானு எனக்கு சந்தேகம்டீ!’

முன்பெல்லாம் கோபமும் துக்கமும் வரும் அவர்கள் பேச்சு காதில் விழும்போது. அவர்களுடன் சரிக்குச்சரி வாதம் செய்ய முடியாமல், ஏதோ ஒரு பலவீனம் அவளை ஆட்கொள்ளும். அவர்கள் எல்லாம் ஒரு கூட்டம். அவர்களில் ஒருத்தியைச் சொன்னால், ஊரே கூடிவிடுவதுதான் ஆச்சர்யம். முடிவில் கங்காதான் தோற்றுப்போவாள். அவர்களது வார்த்தைகளுக்கு பயங்கர தாக்கம் ஒன்று இருந்தது. மிக மிகக் கேவலமான இழிந்த பிறவியாக, தான் பிறந்ததாக மனதை ஆற்றாமை சூழ்ந்துகொள்ளும். இருமுறை இந்த ஏரியில் விழுந்திருக்கிறாள். அவளுடைய அதிர்ஷ்டம் சுதந்திரமாகச் சாகக்கூட முடியவில்லை. யாரோ இழுத்து கரையில் போட்டார்கள். துக்கம் விசாரிக்க கும்பல் வந்து உட்கார்ந்தபோது, அவள் பேயாட்டம் ஆடித் துரத்தியதை நினைத்து இப்போது திருப்தி ஏற்பட்டது.

அவள் முழங்காலை மடக்கி அதற்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். சீனியின் நினைவு பொங்கிப் பொங்கி வந்தது. ஓவென்று வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது. அவன், அவள் வாழ்க்கையில் நுழைந்ததே ஏதோ கட்டுக்கதை என்று தோன்றிற்று. நீ ஏமாத்துக்காரன்; நீ லோப்பர்.

‘டைகர், ஒரு மாசம் சரியா சோறு சாப்பிடலை. வாசல்லயே படுத்துக்கிட்டு நீ வருவேனு காத்திருக்கும்!’

அவளும், அப்படிக் காத்திருந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மிகப் பெரிய அநியாயம் தனக்கு நிகழ்ந்திருப்பதாகத் துக்கம் ஏற்பட்டது. ‘உன்கூட அவன் ஒரு வருஷம் வாழ்ந்ததே பெரிசு’ என்கிறார்கள் தெருப் பெண்கள். அவர்களை எப்படிப் பழிவாங்குவது என்று அவளுக்குப் புரியவில்லை.

தனியாக இருந்தபோது குஷியாகத்தான் இருந்தாள். எந்தக் கோளாறையும் அவள் உணரவில்லை. சம்பாதித்த காசைச் சேமிப்பதில் மட்டுமே அவள் குறியாக இருந்தாள். ‘அடி… உனக்குனு காசு வெச்சுக்கணும். உன்னை எவன் வைச்சுக் காப்பாத்துவான்னு நிச்சயமில்லை’ என்று பெத்தவள் விடாமல் மண்டையில் ஓதி, சேமிப்பது ஒரு கட்டாயமானது. சேமித்தது போக, நல்ல டிரெஸ் வாங்கிப் போட்டுக்கொள்ள முடிந்தது. உடம்பு வாளிப்பாக அந்த மல்லிகா மாதிரி வளரவில்லையே தவிர, முகம் நல்ல களையாக இருப்பதாக முகம் பார்க்கும் கண்ணாடி சொல்லும். தெருவில் நடக்கும்போது டீக்கடையில் நிற்கும் ஆண்கள் பார்ப்பதில் இருந்து விளங்கும். ‘பொய் ஜிமிக்கி, பொய் செயின் எல்லாம் போட்டா, சினிமா ஸ்டார் கணக்கா இருக்கே’ என்று சீனி சொல்வான்.

சற்று தொலைவில் இருந்த மாரியம்மன் கோயிலில் மாலை மாற்றிக்கொண்டார்கள். யாருக்கும் பெரிய விருந்து கொடுக்கவில்லை. யாரும் எதிர்பார்க்கவும் இல்லை என்று பட்டது.

ஒரு வருஷம் சீனிக்குப் பெண்சாதியாக வாழ்க்கை ஆனந்தமாகப் போயிற்று. எந்தப் பெண்ணும் அவளைக் கண்டு கேலி பேசவோ, நக்கலடிக்கவோ இல்லை. புதிதாக அவளுக்குக் கௌரதை வந்துவிட்டதுபோல மரியாதை கொடுத்தார்கள். அவனுக்கு அவளிடம் எந்தக் குறையும் தெரியவில்லை.

”யோவ்… நல்லா யோசிச்சுக்க, எனக்குக் குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொல்லியிருக்கார். ஏதோ ஒரு பை எனக்கு இல்லையாம். ‘தெரியாமப் போச்சு’னு நீ பேச ஆரம்பிச்சேனு வெச்சுக்க, எடத்தைக் காலி பண்ணுனு சொல்லிருவேன்!”

”நா அதைப் பத்தி நினைக்கிறதே இல்லை. நீ ஏன் அலட்டிக்கிறே?”

உண்மையில் அவள் அதைப் பற்றி அலட்டிக்கொண்டதே இல்லை. குழந்தை-குட்டி பெறாம இருக்கிறது பெரிய நிம்மதி என்று தோன்றும். கோடி வீட்டு சிங்காரம் மொடாக்குடியன். ஆனால், பெண்சாதியைக் கர்ப்பமாக்கு வதில் அசகாயசூரன். பொசுக்கென்று செத்துப்போனான். அந்தப் பெண் சந்திரா பாவம் தெருத்தெருவாகக் காய் விற்கிறாள்… வண்டியிலே குழந்தைகளையும் காயோடு காயாகப் போட்டு. செத்துப்போன சிங்காரத்தை எழுப்பி உலுக்கணும்போல கங்காவுக்கு ஆத்திரம் வரும்.

சீனி இருந்தது ஒரு கவசம்போல இருந்தது. அவள் வழக்கம்போல வேலைக்குச் சென்றாள். சுயவிருப்பத்துக்காகவே சிங்காரித்துக்கொண்டாள். சம்பாதித்த காசைத் தன்னிச்சையாகச் செலவழித்தாள்; சேமித்தாள். சீனி அதில் தலையிட்டது இல்லை. மிக முக்கியமாக அக்கம்பக்கத்து வம்பிகள் வாயைத் திறக்கவில்லை. இப்போது எல்லா வாசல்களும் திறக்கப்பட்டதுபோல ஆளாளுக்குப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

அதிர்ச்சியில் அவள் உறைந்துபோயிருந்த நாட்கள் அவை. இரண்டு நாட்கள் சீனி, வீட்டுக்கு வரவில்லை. அவனது மொபைலுக்கு அடித்து அடித்துக் கிடைக்காமல், அவள் பயந்து சோர்ந்துபோனாள். எங்கோ தொலைவில் இருந்த அவனது அலுவலகத்தைத் தேடி விசாரிக்கச் சென்றாள். ‘அவன் வேலை செய்யும்போது மாரடைப்பால் செத்துப்போய் ரெண்டு நாளாச்சு’ என்றார்கள். அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

”எனக்கு ஏன் சேதி சொல்லலை… நா அவங்களுக்கு சம்சாரம்” என்றாள் ஆத்திரமும் துக்கமும் பொங்க.

”அவனுக்குப் பெண்டாட்டி நாலு குழந்தைங்க எல்லாரும் இருக்காங்க பொம்மனஹள்ளியிலே. அந்த அட்ரஸ்தான் கம்பெனி ரெஜிஸ்தர்லே இருக்கு. அவங்க வந்து பொணத்தைத் தூக்கிக்கிட்டுப் போனாங்க. அங்கே போனா விவரம் தெரியும். விலாசம் வேணுமா?’ என்று கேட்டார்கள்.

அவள் வேண்டாம் என்று தலையசைத்துவிட்டுத் திரும்பினாள். அவளுக்குத் தாங்கவில்லை. எதிர்பாராமல் யாரோ மரண அடி கொடுத்த மாதிரி இருந்தது… லோப்பர். இத்தனை மோசமாவா என்னை ஏமாத்தினே? அடிவயிற்றில் கனல் பற்றிற்று. அவனுக்காகக் கண்ணீர் வடிப்பது தனக்குக் கேவலம் என்று தோன்றிற்று.

சீனி செத்துப்போனாலும் அவளது உடுப்பு மாறவில்லை. ஏன் மாறணும் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அவள் அப்படி ஒரு சோக கதாநாயகியாக இருக்க வேண்டும் என்று அக்கம்பக்கத்து வம்பிகள் விரும்பினார்கள். அவளுக்கு இல்லாத துக்கம் அவர்களுக்கு இருப்பதாகக் காண்பித்தார்கள். அம்மா, இப்போது அவளுக்குத் துணை தேட ஆரம்பித்துவிட்டாள்.

‘எத்தனை நாளைக்கு நீ ஒண்டியா இருப்பே?’ என்று தினமும் நச்சரிக்கிறாள்.

”எனக்கு இன்னொரு கல்யாணம் வேணாம்.நா இப்படியே இருந்துட்டுப் போறேன்!”

”எப்படி இருப்ப… தனியா, ஆம்பளைத் துணை இல்லாம?”

”இருப்பேனா… இல்லையானு பாரேன்!”

”பத்து பேர் பத்து விதமாப் பேசுவாங்கடீ!”

”பேசட்டும்!”

அம்மா சரியான கிறுக்கு. அவளுக்கு உபதேசிக்க அந்த வட்டாரத்து வம்பிகள். தினமும் ஓர் ஆளின் பெயரைச் சொல்கிறாள் அம்மா. மாலைக்குள் அவன் காணாமல்போகிறான்.

இப்படித்தான் இன்று காலை அவன் வந்தான். சரியான முட்டாள். ரஜினி போஸ்டர் வைக்கக் கூடாது என்றவன். நடையைக் கட்டு என்று தள்ளாத குறையாக அனுப்ப வேண்டியிருந்தது.

அவன் போன பிறகு, அம்மா ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். மனைவி செத்துப்போனவன். குழந்தைகள் கல்யாணமாகி வேறு ஊரில் இருக்கிறார்கள்.

”கெழவனையாக் கட்டிக்கச் சொல்றே?”

அம்மாவுக்குக் கோபம் வந்தது. ”பின்னே குமரனா வருவான், உன்னை இப்ப கட்டிக்க? உன்னைப் பத்தி தெரிஞ்சும் கல்யாணத்துக்கு அந்த ஆளு சம்மதிச்சதே பெரிசு! நானும் போயிட்டேன்னா, உனக்கு யாருடி இருக்காங்க நல்லது பொல்லதுக்கு? சுத்தி இருக்கிறவங்களே சும்மா இருக்கவிட மாட்டாங்க!” – அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

”அந்த ஆளு 100 கண்டிஷன் போடுறான். நான் ரஜினி படம் வெச்சுக்கிட்டா அவனுக்கு என்ன?” – அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்.

”அட அறிவு கெட்டவளே. எது வாழ்க்கைக்கு முக்கியம்னே தெரியாம, சின்னப் பிள்ளையாட்டம் இருக்கியேடீ. அந்த ஆளு வேற… இந்த ஆளு வேற. சொந்த வியாபாரம். காசு பணம் வெச்சிருக்கானாம். நீ வீட்டு வேலை செஞ்சு கஷ்டப்பட வேண்டியது இல்லே. நல்லா கவனிச்சுக்குவான். சாயங்காலம் அழைச்சிட்டு வர்றேன். கொஞ்சம் பாந்தமா சேலை கட்டு. சுடிதார் வேணாம்!”

மடிவாலா ஏரி சலனம் இல்லாமல் இருந்தது. எல்லாரும், அம்மாவும் தெருப் பெண்களும் கழுத்தை நெருக்குவதுபோல் இருந்தது. எதைச் செய்தால் சரி என்று புரியவில்லை. ‘துணை வேண்டாமா?’ என்கிறாள் அம்மா. ‘ஒருத்தனோடு இருந்தாத்தான் உன்னை ஏத்துக்குவோம்’ என்கிறது தெரு. ‘உன்னை நல்லாக் கவனிச்சுக்குவான். நீ வீட்டு வேலைக்குப் போகவேண்டியது இல்லே’ என்று அம்மா சொன்னது, மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.

கங்காவும் சில ரோஜா பதியன்களும்2
அவள் வேலைசெய்யும் சில வீட்டு மேடம்கள் வீட்டில் இருப்பவர்கள். பேப்பர் படித்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டு இருப்பார்கள். விதவிதமாகச் சமைத்து புருஷனுக்காகக் காத்திருப்பார்கள். அவளும் அப்படிக் காத்திருக்க வேண்டியிருக்குமா? அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் என்று அவளுக்குக் கவலை ஏற்பட்டது. ஒவ்வொரு காசுக்கும் புருஷனைக் கேட்கவேண்டி இருக்குமா? அது மகா கேவலமாகத் தோன்றிற்று. சரி… ஆள் வரட்டும். நான் போடுறேன் கண்டிஷன்!

அவள் எழுந்தாள். சற்று முன் கொந்தளித்த மனசு சற்று நிம்மதி ஆகியிருந்தது. வீட்டை அடைந்ததும் டைகர் ஒரேயடியாகத் துள்ளிக் கூத்தாடிற்று, காணாமல்போனவள் திரும்பி வந்ததுபோல. அம்மாவுக்கு எரிச்சல் கொடுக்கக் கூடாது என்று ஒரு புடைவை உடுத்திக்கொண்டாள். அம்மா பலகாரப் பொட்டலத்துடன் வந்தாள். அந்த ஆள் அவளைத் தொடர்ந்து மெள்ள படியேறி வந்தான். பரமசாதுவாக இருப்பவன் போல புன்னகை தவழும் முகம். பார்க்கப் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டாள். வயசு அதிகம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அவளுக்கு அப்பா மாதிரிதான் இருந்தான். கீழே விழுந்து கும்பிட மாட்டேன் என்று முன்பே அம்மாவிடம் சொல்லியிருந்ததால், அம்மா ஒன்றும் சொல்லவில்லை. பலகார உபசாரம் முடிந்ததும் அவள், ‘நான் என்னைப் பத்தி சில விஷயம் சொல்லணும்’ என்றாள். அம்மா கலவரத்துடன் அவளைப் பார்த்து ‘வாயைத் திறக்காதே’ என்று சைகை காண்பித்தாள்.

”சொல்லு” என்றான் அவன் புன்னகையுடன்.

”நா வேலைக்குப் போறதை நிறுத்த மாட்டேன்!”

”யார் நிறுத்தச் சொன்னது?” – புன்னகை.

”சுடிதார் உடுப்புதான் எனக்குச் சௌகரியம்!”

”அதையே போட்டுக்க!” – புன்னகை.

”ரஜினிகாந்த் போஸ்டர் ஒட்டியிருக்கேன் மொட்டைமாடியிலே. அதை எடுக்கச் சொல்லக் கூடாது!”

”சொல்ல மாட்டேன்!” – சிரிப்பு.

அவள் தடுமாறினாள். என்ன இப்படிச் சிரிக்கிறான்?

”இந்த நாய் எங்கூடத்தான் இருக்கும்.”

”இருக்கட்டும். நாய் இருக்கிறது நல்ல துணையாயிருக்கும்!”

அவளுக்கு மேற்கொண்டு பேசத் தோன்றாமல் பேசாமல் இருந்தாள். அம்மா, வெற்றிக் களிப்பில் அமர்ந்திருந்தாள். எதிரில் புன்னகையுடன் உட்கார்ந்திருப்பவன், ஏற்கெனவே இந்த வீட்டுச் சொந்தக்காரனைப்போல தோரணையுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தான்.

”என் உடம்பிலே ஒரு கோளாறு இருக்கு. குழந்தை பிறக்காது!”

”தெரியுமே? எனக்கு ஏற்கெனவே குழந்தைங்க இருக்காங்க. உனக்குத் தொந்தரவு இருக்காது. கல்யாணமாகி வெளியூரிலே இருக்காங்க!” – இதுவரை இப்படி ஒருத்தன் வந்து நின்றது இல்லை.

”எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்?” என்று அம்மா கேட்டாள்.

”நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றான் அவன். ”இந்த வீடு, லீஸுக்கு எடுத்த வீடுதானே?”

”ஆமா… ஏன்?”

”எனக்குத் தெரியணும். இதோட அக்ரிமென்ட் காகிதம் எல்லாம் நான் பார்க்கணுமே!”

அவளுக்குக் காரணம் புரியாமல் கலக்கம் ஏற்பட்டது. போலீஸ்காரரா இவரு, உளவு வேலை பார்க்கிறவரா?

”நீங்க என்ன சொல்றீங்கனு புரியலை!”

”அதிலே கடன் ஒண்ணும் இல்லையே?”

”இல்ல… ஏன் கேட்கிறீங்க?”

”நாளைக்கு நா சொந்தக்காரனாப் போகும்போது விவரம் தெரிஞ்சுக்க வேணாமா?”

அவளுக்குக் குபீரென்று கோபம் வந்தது.

”நீங்க எப்படிச் சொந்தக்காரனாவீங்க?”

அம்மா, திருதிருவென்று முழித்தாள். அர்த்தம் இல்லாத சமிக்ஞைகளைக் காண்பித்தாள்.

”வரதட்சணைக்குப் பதில்னு வெச்சுக்கோ!”

”எழுந்திருங்க!”

”என்னது?”

”மொதல்ல எழுந்திருங்க. அது நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச காசு. முன்ன பின்ன தெரியாத ஆளு, நீங்க வந்து அதைச் சொந்தமாக்கிடுவீங்களோ?”

அவனுடைய முகம் மாறிப்போயிற்று. புன்னகை, காணாமல்போயிற்று. ‘பின்னெ எவன்டீ உன்னைக் கல்யாணம் கட்டிக்குவான்?’

”எனக்குக் கல்யாணம் வேண்டாம்யா… போ. போயிடு!”

”காளியம்மா நான் என்னவோ நினைச்சேன். உன் மக பெரிய ராங்கிக்காரிதான். உன் பேச்சை நம்பி நா வந்தது தப்பு!” – அவன் படி இறங்கிய கையுடன் அம்மாவும் கிளம்பிப் போனாள், ‘நீ உருப்பட மாட்டே’ என்று சபித்தபடி.

கங்கா, எழுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள். ”இனிமே எவனுக்கும் இந்தக் கதவு தொறக்காது” என்றாள் டைகரிடம். அம்மா கொண்டுவந்த பலகாரப் பொட்டலம் இருந்தது. தூள் பக்கோடா. காஸைப் பற்றவைத்து டீ தயாரித்தாள். டிவி-யை முடுக்கிவிட்டாள். திரையில் ரஜினிகாந்த் நின்றார்.

டைகர், மடியில் தலை வைத்துப் படுத்திருக்க, பக்கோடாவும் தேநீரும் சூப்பராக இருந்தது.

‘என் வழி… தனி வழி…’ என்றார் ரஜினி. தெருப் பெண்கள் கூனிக்குறுகி ஒளிந்தார்கள். ‘நாளைக்கு ‘கோச்சடையான்’ போஸ்டர் ஒண்ணு புதுசா வாங்கிட்டு வரணும்’ என்று அவள் நினைத்துக்கொண்டாள்!

- ஜூலை 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: வாஸந்தி. கதவைப் பூட்ட அம்மா வெகு நேரம் எடுத்துக்கொண்டாள்.இத்தனை நேரம் அதற்கு ஆவானேன் என்ற யோசனை எழாமல் ஒரு வித ஜடத்தனத்துடன் அவள் நின்றாள்.கைப்பயைத் திறந்து மீண்டும் ஒரு முறை கையால் துழாவினாள்.பழுப்பு நிறக்காகிதம் இருந்தது.அவளது துப்பட்டாவை யாரோ இழுத்தார்கள்.தூக்கிவாரிப்போட்டு ...
மேலும் கதையை படிக்க...
வாக்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘யீக்ஷீமீமீக்ஷ்மீ!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது. முதலில், ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வாஸந்தி. அவளுக்குப் பீதியில் உடல் உறைந்துபோயிற்று. கால்கள் கல்தூண்கள்போல் அசைக்க முடியாததாய் நிலைகுத்தி நின்றன. எதிரே மாபெரும் ராட்சதர்கள் கையை அகல விரித்து நின்றிருந்தார்கள். ராட்சதர்கள் புராணக் கதைகளில் வருபவர்கள் என நினைத்திருந்தாள். இல்லை. நிஜமானவர்கள். இதோ, அவள் எதிரே ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வாஸந்தி. நைந்துபோன செருப்பின் ஊடாக பாதையில் இருந்த சிறு கற்கள் உள்ளங்காலில் குத்தி வலியெடுத்தது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்றான் ராமப்பா தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல. வெயில் பொசுக்கிற்று. சாதாரணமாக ராமநவமிக்குப் பிறகுதான் சூடு ஆரம்பிக்கும். யுகாதிகூட இன்னும் முடியவில்லை. அதற்குள் ...
மேலும் கதையை படிக்க...
வாக்குமூலம்
வராத பதில்!
ஸ்டீயரிங் வீல்
மீட்சி
நேத்த்திக்கடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)