ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை

 

தமிழ்வாணன் மாடியிலிருந்து இறங்கி வருகையிலேயே எதிர் வீட்டு வாசலில் பூஷணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். நல்ல வேளையாக கம்பிகளுக்குப் பின்னால் திண்ணையில் மீசைக்காரரைக் காணோம். அகம் நிறைந்து முகம் மலர சிரித்தான். பூஷணம் முகத்திலும் புன்னகை. யாராவது பார்த்து விட்டால்… என்று உறைந்த சிரிப்போடு நடக்க ஆரம்பித்தான்.

தமிழ்வாணன் சராசரி உயரம். எண்ணை போட்டு கர்லிங் பண்ணிக் கொண்ட கிராப். பென்சிலால் வரைந்தது போல் சரியாக வெட்டப் பட்ட மீசை. வெள்ளைச் சட்டை. பேன்ட். செருப்பு. கையில் டிபன் பாக்ஸ் பை.

நாலு வீடு தள்ளி தெரு முனையில் இருந்த பிள்ளையார் கோவிலில் நின்று தோப்புக் கரணம் போடுவதைப் போல் திரும்பிப் பார்த்தான். பூஷணம் அங்கேயேதான் அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அவன் கண்களுக்கு அவள் டி. ஆர். ராஜகுமாரி, வைஜயந்திமாலாவையெல்லாம் மிஞ்சி விட்டாள். உண்மையில் அவள் ஒல்லியாக, கச்சலாக, கருப்பாக இருந்தாள். ஆனால் ஒளி மிகுந்த கண்கள். கருப்பான பெண்களுக்கு பெரும்பாலும் அமைவது போன்ற நீண்ட கூந்தல். நெற்றியில் புரளும் கற்றை மயிர். பாவாடை, தாவணி கட்டிய பதவிசிலேயே அவள் சமர்த்து தெரிந்தது.

பிள்ளையார் கோவிலுக்கு எதிர் வீட்டைப் பார்த்தான் தமிழ். பூஷணத்தின் உயிர்த்தோழி ஒரு அய்யங்கார் பெண் அங்கு குடி இருந்தாள். திருமணமான பெண். குழந்தைகள் இல்லை. அவள் வீட்டுக்காரர் அரசாங்க உத்தியோகஸ்தர். காலையில் ஆபீஸ் போனால் இரவுதான் வருவார். சிநேகிதிகள் பல நாள் யாரோ ஒருவருடைய வீட்டில் சேர்ந்து இருப்பார்கள்.

பூஷணத்திற்கு வீட்டு வேலை அதிகம். மீசைக்காரரின் மூத்த பெண் அவள். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, அப்பா, அம்மா, மாமா. அப்பாவின் மண்டி நஷ்டம் ஆகி அவரது நாலைந்து வீடுகளின் வாடகையில் வண்டி ஓடுகிறது. மாமா அச்சாபீஸ் வைத்திருந்தார். கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை. உப தொழில் நாட்டு வைத்தியம். அம்மாவுக்கு உதவி என்ற பெயரில் வீட்டு நிர்வாகம் பூஷணத்திடம். எனவே அவள் சிநேகிதி அங்கு இருக்கும் நாட்கள் அதிகம். அவள் பெயர் சுலோச்சனா.

தமிழ் பார்த்த போது சுலோச்சனாவைக் காணோம். அவளிடமும் தமிழ் பேசியதே இல்லை. எனினும் அவள் பூஷணம் மனதில் இருந்ததை அறிந்தவள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.

தமிழ் பி.ஏ. முடித்ததுமே வீட்டருகில் இருந்த பள்ளியில் ஆறாவது வகுப்பு வாத்தியார் வேலை கிடைத்தது. அவன் பள்ளியில் ஒன்று வேட்டியைப் பஞ்சகச்சமாக அணிந்து வர வேண்டும் அல்லது பேன்ட். அதனாலேயே புதிதாக பேன்ட் போட ஆரம்பித்தான். ஒரு ஸைக்கிளும், பேன்ட்டின் அடிப் பாகத்தில் கால்களை ஒட்டிப் பிடிக்குமாறு வளையங்களையும் (பேன்ட் சக்கரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க) வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குள் ஸைக்கிளில் அவன் பின்னால், முன்னால் பூஷணம் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

-o00o-

பூஷணம் கலங்கிய கண்களோடுதான் ‘வா சுலோ’ என்று சொன்னாள்.

‘என்னாச்சு’

‘வீட்ல தமிழ் விஷயத்தைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துட்டுது.’

‘ஏன் மாப்பிள்ளை பார்க்கறாளா மறுபடியும்’

மண்டியின் நஷ்டத்துக்கப்புறம் கொஞ்ச நாள் கல்யாணப் பேச்சு இல்லாமல் இருந்தது.

‘சொல்லு பூஷணம்’

‘ஆமா’

‘பணம் கிடைச்சுடுத்தா. செலவுக்கு என்ன பண்ணுவார் உங்கப்பா’

‘செலவே இல்லாத கல்யாணம்’

‘என்னது?’

‘மாமாவுக்கே கட்டி வைக்கப் போறாங்களாம்’

‘யார் அந்த ஏணிக்கா?’

எத்திராஜை அவர்களிருவரும் ஏணி என்றுதான் சொல்வர்கள். ஆறடிக்கு குறையாமல் ஒல்லியாக நெடு நெடுவென்று இருப்பான்.

பூஷணத்தின் கண்ணீர் தமிழ் பற்றியா? அல்லது இருவது வயது அதிகமான மாமனைப் பற்றியா? இல்லை இரண்டுமாகத்தான் இருக்கும்.

குடும்பம் பணக் கஷ்டத்தில் இருக்கையில் எத்திராஜ் கையை நாட வேண்டி வந்ததும் அதுவரை இருந்த சுதந்திரம் பறி போய் விட்டது. அரசல் புரசலாக இந்தப் பேச்சு முன்பும் எழுந்தாலும் மீசைக்காரர் அந்த ‘திருட்டுப் பயலு’க்கு தன் மகளைக் கட்டித் தர தயாராயில்லை. அதற்கு எந்தக் காரணத்தையும் விட மச்சினன் என்ற இளக்காரமே முக்கிய காரணம். இப்போ மச்சினன் கை ஓங்கி விட்டது. மீசைக்காரரிடம் பாக்கி இருந்ததும் தொங்கும் நரைத்த சீப்பு மீசையும் எதைப் பார்த்தாலும் எரிச்சலும்தான்.

‘தொத்தா என்ன சொல்றாங்க?’ என்று கேட்டாள் சுலோ. பூஷணத்தின் அம்மாவைத்தான் அப்படி அழைப்பாள், அந்த வீட்டில் பலரும் அழைப்பதைப் போல.

‘தொத்தாவுக்கு அடி வாங்கத் தெம்பில்லை………. அப்பா கிட்டே நீதான் பேசணும்’

மீசைக்காரர் சுலோவிடம் மரியாதையாகவும், அன்பாகவும்தான் இருந்தார். தொத்தாவும் அவளைத் தன் இன்னொரு பெண்ணாகத்தான் பாவித்தாள். அதுவும் சுலோ பெற்றோர் இல்லாத கூடப் பிறந்தவர் இல்லாத பெண் என்பதால் தொத்தாவிற்கு அவளிடம் வாஞ்சை அதிகம்.

சுலோவுக்குத் தூக்கி வாரிப் போட்டது, கூச்சமாக இருந்தது, பயமாகவும் இருந்தது.

இருந்தாலும் ‘சரி’ என்றாள். ஏணியை நினைத்தால், இதைச் சொல்ல வேண்டும் என்ற உத்வேகமும் கூடவே பயமும் அதிகமாயின.

-o00o-

தமிழ் இதுவரை பூஷணத்திடம் பேசியதில்லை. கடிதப் பரிமாற்றங்கள் மூன்று, நான்கு முறை நடந்தது, அகல் விளக்கு மாடம் வழியாக. அவன் அவள் கலங்கிய கண்களைப் பார்த்ததும் பயந்து போய்விட்டான். அவனுக்கும் அவள் அப்பாவின் மீசை மீதும் மாமனின் உயரத்தின் மீதும் பயம் உண்டு. ஆனால் தன் அப்பா நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்தான்.

அவன் அப்பா எடுத்த எடுப்பிலேயே நம்ப ஜாதி என்ன அவங்க ஜாதி என்ன, நம்ப தெய்வம் என்ன அவங்க தெய்வம் என்ன என்று ஆரம்பித்து நம்ப அந்தஸ்து என்ன அவங்க அந்தஸ்து என்ன என்று வந்து நின்றார். தமிழின் அம்மா இராமலிங்க சுவாமிகளின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. மீன் என்று சொன்னால் வாந்தி எடுத்து விடுவாள். ஆனாலும் தன் ஒரே மகனுக்காக அவன் சந்தோஷத்துக்காக எதையும் செய்யச்
சித்தமாயிருந்தாள். கணவரையும் அவள் ஆதியோடந்தம் அறிவாள். அவர் மனசின் பாசம் எப்பேற்பட்ட ஊற்றினது என்பது அவளுக்குத் தெரியும்.

-o00o-

சுலோவும், சுலோவிடம் தன் சொந்தப் பெண்களிடம் போலவே, ஏன் அதற்கு மேலும் அன்பு கொண்டாடிய தொத்தாவும் மீசைக்காரரையும், தமிழின் தாயார் அவன் தகப்பனாரையும் கெஞ்சி, விவாதம் செய்து, காலில் விழுந்து அந்தக் காதல், கல்யாணத்தில் நிறைவேறுவதை சாத்தியமாக்கினார்கள்.

-o00o-

இந்த முடிவு என் மனசுக்குகந்த, என் மறைந்து போன தாயாரின் தீராத மனக் குறைகளில் ஒன்றிற்கு இதமளிக்க வேண்டி நான் கற்பனை செய்த, முடிவு.

எனக்கு பனிரெண்டு வயதாகையில் தொத்தா பாட்டி எங்கள் சமையலறை வாசற்படியில் அமர்ந்து கொண்டு அம்மா கொடுத்த எதையோ சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் கதறி அழுததைப் பார்க்க நேர்ந்த அன்று இரவு அம்மா சொன்னாள்.

‘இவளும்தான் சேர்ந்துண்டு என் பூஷணத்தைக் கொன்னா”

அம்மா மீசைக்காரரிடம் பேசியபோது அவர் ‘நீ உண்மையிலே என் பொண்ணுன்னா இப்படிப் பேசுவியா? இல்லே பூஷணம் உண்மையிலே உன் கூடப் பிறந்தவள்னா இப்படிப் பேசுவியா’ என்று கேட்டு விட்டு தன் வீட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கறாராகச் சொல்லி விட்டார்.

தமிழின் குடும்பத்தில் என்ன நடந்தது என்ற விவரம் இல்லை.

மூன்றே மாதத்தில் பூஷணம் இறந்து போனாள். மூன்று மாதம் அவள் சாப்பிடவே இல்லையாம். படுக்கையிலேயே கடைசி ஒரு மாதம் கிடந்திருக்கிறாள்.

ஆனால் அவள் செத்த அன்று பாடையில் வைத்துத் தூக்கிப் போகையில் தெருவில் தமிழ் எதிர் வீட்டு மாடியிலிருந்து ஓடி வந்து தோளில் பாடையைச் சுமந்து கொண்டானாம். மீசைக்காரரோ, எத்திராஜோ, தமிழின் அப்பாவோ ஸ்தம்பித்துப் போய் ஒன்றுமே சொல்லவில்லையாம். சுடுகாடு வரை தோள் மாறாமல் அவனே போயிருக்கிறான். வந்ததும் அவன் குடும்பம் ஒரே வாரத்தில் ஊரை விட்டே போய்
விட்டார்களாம்.

அம்மாவின் வார்த்தைகளில் இதை நினைக்கையில் தமிழ் இறங்கி வந்து ஒரு வார்த்தை கூடப் பேசியறியாத பூஷணத்தின் பாடையின் ஒரு மூங்கில் கழியைத் தோளில் சுமக்கும் சித்திரம் கண்களின் நீருக்கடியில் தோன்றுகிறது.

எவ்வளவோ முறை தொத்தா பாட்டியும் என் அம்மாவை அக்கா என்று அழைக்கிற தொத்தாவின் இரண்டு பெண்களும் மகனும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். என் முன்னால் பூஷணம் பற்றி யாரும் பேசியதே இல்லை. எனக்கு அவர்களைப் பார்க்கையில் வேறெதுவும் நினைவுக்கு வந்ததே இல்லை.

- ஜனவரி 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
சுரேஷுக்குத் தூக்கம் வரவில்லை. விஜய் நாளை ஊரை விட்டே போகிறான். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆகி விட்டது. ஆனால் தூக்கம் வராததற்கு அவனைப் பிரிவது காரணம் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் அவனுக்கு விஜயைப் பிடிக்காது. சுரேஷ் வீட்டின் மாடியில் விஜயின் மாமா ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் ...
மேலும் கதையை படிக்க...
வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். குளிக்கிறான். நெற்றிக்கு இட்டுக் கொள்கிறான். அம்மா கொடுக்கும் எள், வெற்றிலை பாக்குப் பொட்டலத்தோடு கிளம்பி இதுபோல் வாத்தியார் ...
மேலும் கதையை படிக்க...
வேணுகோபால் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு விட்டான். ஆறு மணிக்குள் கார் வந்துவிடும். ராணிப்பேட்டை, மேல் விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி என்று போய் ‘கோடவுன்’களை ஆய்வு செய்து விட்டு மாலை நான்கு மணிக்குள் பாரிமுனையில் உள்ள அவன் வங்கிக் கிளைக்குப் போய் ...
மேலும் கதையை படிக்க...
வலுவான அடர்த்தியான கனமழை. மூன்று நாட்களாக விட்டுவிட்டும் இன்று காலையிலிருந்து ஓயாமலும் பெய்து கொண்டிருந்தது. திருவல்லிக்கேணி சமுத்திரக் கரையில் எண்பது வருட பழைய வீடு. மூன்று ஒண்டுக் குடித்தனங்கள். ஓவ்வொரு குடித்தனத்துக்கும் இரண்டே அறை. பொதுவான முன் முற்றம். சாக்கடை. கனிந்த ...
மேலும் கதையை படிக்க...
வரம்
எமன்
தர்ப்பணம்
சுரண்டல்
மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)