ஓடிப்போனவள் – சிறு குறிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,834 
 

ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தான் சத்யா. கண்கள்மூடி வாக்மேனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தான்.

சத்யாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் பூங்கோதை. கண்களில் நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது
கண்ணீர் அருவி.

ரயில் மும்பையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது…

அப்பாவை பிரிந்து வந்ததை நினைத்து நினைத்து அழுதாள் பூங்கோதை. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால் அப்பாதான் எல்லாம். இவளுக்காகவே மறுமணம் செய்யாமல்,தனி ஆளாக இவளை வளர்த்தவர்..

அப்பாவை யார் தரக்குறைவாக பேசினாலும் அவ்வளவுதான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் ஒருவர் தவறாக அப்பாவை சொன்னதற்கு நெருஞ்சி முள்ளால் அவரது சைக்கிளை பஞ்சர் ஆக்கியவள் பூங்கோதை.

அப்படிப்பட்ட அப்பாவை பிரிந்து……

சத்யாவை கல்லூரியில்தான் சந்தித்தாள்… கல்லூரியில் எந்த பெண்ணைக் கேட்டாலும் தனக்குப் பிடித்தவன்
சத்யா என்றுதான் சொல்வார்கள்.ஆறடி உயரம்…கூடைப்பந்து அணியின் கேப்டன். திறமையான விளையாட்டு வீரன். பூங்கோதை சத்யாவின் தீவிர ரசிகை,பின் காதலி,இப்போது மனைவி. கொடுத்துவைத்தவள் என்று தோழிகளின் வாழ்த்தோடு சத்யாவின் கரம்பிடித்தவள்.

சத்யாவிற்காக இன்று அப்பாவை பிரிந்து பயணிக்கிறாள்…..

சத்யா பிறந்துவளர்ந்தது மும்பையில்தான்,அவனது அப்பா அம்மா இருப்பதும் மும்பைதான். பாட்டிவீட்டிலிருந்து மதுரையில் படித்தவன்.

சத்யாவிற்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது, இனி மதுரை பக்கம் எப்போதும் வர விரும்பமாட்டான் சத்யா.

மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் பூங்கோதையின் அப்பா வசிக்கிறார். வெள்ளந்தி மனிதர்.எப்படித்தான் தனியாக இனி வாழப்போகிறாரோ?

மும்பை வந்து நின்றது ரயில்.

சத்யாவின் வீட்டிற்குள் நுழையும்போதே பயம் கவ்விக்கொள்ள ஆரம்பித்தது…எப்படி சத்யாவின் அப்பா அம்மாவை பார்ப்பது?

படபடப்புடன் காலடி எடுத்துவைத்தாள் பூங்கோதை.

சத்யாவின் அப்பா பூங்கோதையின் அருகில்வந்து பேச ஆரம்பித்தார்.

“அண்ணன் கல்யாணத்துக்கு டூர்ல இருந்து வந்திடுவேன்னு சொல்லிட்டு ,அந்த ஹிந்திக்காரனோட ஓடிப்போயி என் தலையில மண் அள்ளி போட்டுட்டா எம் பொண்ணு, இனிமேல் நீ மட்டும்தாம்மா எம் மக”

மாமனாரின் வயதான கண்களில் தன் அப்பாவை பார்த்து சிலிர்த்தாள் பூங்கோதை.

– Tuesday, December 4, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *