ஓசி பேப்பர்

 

(இதற்கு முந்தைய ‘கஞ்சத்தனம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

மச்சக்காளையின் முன்னால் போய் சேலைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டு உட்கார்ந்தபோது, காசியின் பெண்டாட்டிக்கு கூச்சம் தாங்க முடியவில்லை.

அதனால் கொஞ்ச நேரத்திற்கு அவளால் வாயைத்திறந்து பேசவே முடியவில்லை. அதற்காக எத்தனை நேரத்திற்குக் கூச்சப் பட்டுக்கொண்டே உட்கார்ந்திருப்பது? மச்சக்காளையும் அவர் பாட்டுக்கு வாயைத் திறக்காமல் – நல்லதாய்ப் போயிற்று என்கிற மாதிரி அவளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.

யாரிடத்திலும் முதலில் வாயைத்திறந்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்கிறது மட்டும் அவரின் அகராதியில் கிடையாது! ஆனால் பதிலுக்கு காசியின் பெண்ட்டாட்டியும் அவளுடைய அகராதியை மடியில் வைத்துக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது.

அதனால் கூச்சத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு அவள் வந்த விஷயத்தை படபடவெனச் சொல்லி முடித்துவிட்டாள். இதற்குமேல் கெஞ்ச முடியாது என்று சொல்கிற அளவுக்கு அவரிடம் காசியின் பெண்டாட்டி கெஞ்சிப் பார்த்துவிட்டாள். அவள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மச்சக்காளை அவர் பாட்டுக்கு காது குடைய ஆரம்பித்துவிட்டார். காசியின் பெண்டாட்டியிடம் பேசுவதை விட காது குடைவது அப்போது அவருக்கு ரொம்ப அவசியமாக இருந்தது.

‘கல்யாண வீட்டிற்கு போவதற்குத்தான்’ என்று சொல்லி, நடக்கப்போகிற திருமணத்தின் அழைப்பிதழைக் கூட எடுத்து, காது குடைந்து கொண்டிருந்தவரிடம் காட்டிவிட்டாள் காசியின் மனைவி. மச்சக்காளை அந்த அழைப்பிதழை திரும்பிப் பார்த்தால்தானே….

கண்களை ரொம்ப சுகமாக மூடியவாறு காது குடைந்துகொண்டே, “கல்யாண வீட்டுக்கு அசல் பவுன் நகையைத்தான் போட்டுட்டுப் போகணும்னு சட்டமா இருக்கு? மூணு நாளைக்குத்தானே… அம்மாவும் மகளும் ரெண்டு மூணு கவரிங் நகைகளை வாங்கி ஜிலுஜிலுன்னு மாட்டிக்கிட்டு போயிட்டு வாங்க…”

மச்சக்காளை இப்படிச் சொன்னதைக்கேட்டு காசியின் பெண்டாட்டி மனசு என்ன ஒரு பாடு பட்டது என்பது ஒருபக்கம் இருக்கட்டும், இவை அத்தனையையும் தூரத்தில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த கதிரேசனின் மனசு பொங்கிப் பொருமி விட்டது. இத்தனைக்கும் கவரிங் நகைகள் என்றால் என்னவென்று தெரியாத பருவம் அவனுடையது. ஆனால் மச்சக்காளை சொன்ன தோரணையில் இருந்து அது எதோ ஒரு ‘டூப்ளிகேட்’ சமாச்சாரம் என்பது புரிந்துவிட்டது. கோபத்தோடு பாய்ந்து தகப்பனின் கழுத்தை நெறிக்க வேண்டும்போல இருந்தது.

‘நீயெல்லாம் ஒரு மனுசனா?’ என்று ஆவேசத்தோடு கத்த வேண்டும் போலவும் இருந்தது. இருந்தாலும் இந்த இரண்டையும் காரியத்தில் கதிரேசனால் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அப்போது அவன் பன்னிரண்டு வயதுப் பையனாக இருந்ததுதான். அதனால் மச்சக்காளையின் ஈவு இரக்கம் இல்லாத வட்டிக் கடையின் மனிதாபிமானம் இல்லாத நடைமுறைகள் எதையும் பற்றி நேருக்கு நேராக எதிர்த்துக் கேள்வி கேட்கிற வலிமையும் தைரியமும் கதிரேசனுக்கு இல்லாமலேயே இருந்தது.

ஆனால் தகப்பனிடம் கொஞ்சமும் பிடிக்காத மற்றொரு விஷயத்தில் கதிரேசன் நேரிடையாக சம்பந்தப் பட்டிருந்தான். அப்போது ஒருநாள் ரொம்பவும் மானம் போகிற மாதிரியான அனுபவத்திற்கு ஆளாக நேர்ந்தபோது மட்டும் அதே பன்னிரண்டு வயதிலேயே அவன் தைரியமாக அவனின் எதிர்ப்பைக் காட்டிவிட்டான்.

அந்த விஷயம் மச்சக்காளை தினமும் கட்டுக் கட்டாக ஊதித் தள்ளும் பீடி சமாச்சாரம்தான்! தினசரி சுமார் இரண்டு கட்டு பீடிகள் பிடிப்பார் மச்சக்காளை. சிகரெட் குடிக்கலாம்தான். ஆனால் அது பீடியைவிட விலை கூடுதல். வட்டிக் கணக்கு போட்டுப் பார்த்தால் கணக்கு எங்கேயோ போகும்! அதனால் பீடி! பீடி பிடிப்பதை நிறுத்தினால் லாபம்தான். ஆனால் அவரால் பீடி பிடிக்காமல் இருக்க முடியாது.

பொழுது விடிந்து தூக்கம் கலையும்போதே பீடியின் முகத்தில்தான் அவர் முழிப்பார். காலையில் எழுந்ததும் அவர் செய்கிற முதல் காரியம் பீடி பற்ற வைத்துக் கொள்வதுதான். இரண்டாவது காரியம் பற்றவைத்த பீடியோடு கழிப்பறையை நோக்கிச் செல்வது! பீடி பிடிக்காமல் மச்சக்காளையால் காலைக்கடனை முடிக்க முடியாது!

ரொம்பச் சின்ன வயதில் இருந்தே அந்தப் பழக்கம் அவருடைய ரத்தத்தில் ஊறிப்போய் விட்டது. அதற்கும்மேல் மச்சக்காளை ‘மூல’ வியாதிக்காரர் வேறு. பீடியோடு காலைக் கடனைத் தீர்க்க கழிப்பறைக்குள் போனால் மனிதர் வெளியில் வர குறைந்தது அரைமணி நேரம் ஆகும். இந்த அரைமணி நேரத்தில் கழிப்பறைக்குள் அவர் குறைந்தது மூன்று அல்லது நான்கு பீடிகளாவது பிடித்துவிடுவார். உள்ளே அவர் பிடித்த பீடிகளின் புகை நாற்றமெல்லாம் எங்கே போகும்? சுற்றிச் சுற்றி கழிப்பறைக்குள்தான் அத்தனை புகையும், நாற்றமும் இருந்து கொண்டிருக்கும். அதனால் அவர் வீட்டின் கழிப்பறைக்குள் தாங்க முடியாத பீடி நாற்றத்திற்குத்தான் முதலிடம்!

ஆனால் அதைப்பற்றி மச்சக்காளைக்கு கடுகளவும் குற்ற மனப்பான்மையோ வெட்கமோ ஒருநாள்கூட ஒருநிமிஷம்கூட ஏற்பட்டது கிடையாது. அந்தப் பாடு எல்லாம் கதிரேசனுக்குத்தான். எந்த நேரமானாலும் பீடி நாற்றமடிக்கும் கழிப்பறைக்குள் போவதென்றாலே அவனுக்கு குடலைப் புரட்டிக்கொண்டு வரும். அப்படி ஒரு நாற்றமடிக்கும் பீடியை சதா வாயில் வைத்துக் கொண்டிருக்கும் தகப்பனை பின் எப்படி மகனுக்கு பிடிக்கும்? அதனால் பீடியின் மேல் இருக்கும் அதே அருவருப்பு தகப்பன் மேலும் ஏற்பட்டுவிட்டது கதிரேசனுக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது. சில நேரங்களில் வீடு முழுவதுமே பீடிப் புகையின் நாற்றத்தால் வீடே கழிப்பறையாய் மாறிவிட்டாற் போலவும் கதிரேசனுக்குத் தோன்றும்.

பாளையங்கோட்டையில் நிறைய ஆண்களின் கைகளில் கைக்குட்டை எப்போதும் இருந்து கொண்டிருக்கும். மச்சக்காளைக்கு பீடிக்கட்டுதான் கைக்குட்டை மாதிரி! எல்லா நேரமும் அது அவருடைய கையில் இருந்து கொண்டிருக்கும். ரொம்பநாள் வரைக்கும் மச்சக்காளை தினமும் அவருக்குத் தேவையான இரண்டு கட்டு ‘சொக்கலால் ராம்சேட்’ பீடிக்கட்டை பெருமாள் கோயிலுக்குப் பின்புறத்தில் இருக்கும் ‘சம்சுதீன்’ கடையில் போய் அவரேதான் வாங்கி வந்து கொண்டிருந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ, ஒருநாள் கதிரேசனைக் கூப்பிட்டு “நீ இப்ப கொஞ்சம் பெரிய பையனாயிட்டே; இனிமேட்டு நீ போய் எனக்கான பீடிக்கட்டை தினமும் வாங்கிட்டு வந்து குடுத்திடு” என்று சொல்லிவிட்டார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கதிரேசன் ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டான். அப்பா பாட்டுக்குச் சொல்லிவிட்டார். கதிரேசன் கொஞ்சம் பெரிய பையனாகி விட்டானாம். எவ்வளவு பெரிய பையன் என்று பார்த்தால் – பன்னிரண்டு வயதுப் பையன்.

அது வரைக்கும் கதிரேசனுக்கு தினசரி சாயந்திரம் பக்கத்து வீட்டில் போய் அப்பா படிப்பதற்காக அன்றாட தமிழ்ப் பேப்பர் வாங்கிக்கொண்டு வந்து தருகிற வேலைதான். சொந்தக் காசில் பேப்பர் வாங்கிப் படிக்கிற ஆள் கிடையாது மச்சக்காளை. எப்போதுமே ஓசி பேப்பர்தான்!

இத்தனைக்கும் பக்கத்துவீட்டு ஐயரைவிட மச்சக்காளை பலமடங்கு பெரிய பணக்காரர். ஆனால் அவரோடு கூடப்பிறந்த கஞ்சப் பிசினாரித்தனம் காசு கொடுத்து பேப்பர் வாங்க விடாதபடி அவரின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தது. சொந்தக் காசில் பேப்பர் வாங்கினால் ஒரு வருஷத்திற்கு அதற்காக ஆகும் செலவைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏற்படும் ‘வட்டி நஷ்டம்’ எவ்வளவு என்பது மச்சக்காளைக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதை திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பது அனாவசியமானது.

ஆனால் ஒரு முக்கியமான விஷயம். தினசரி ஓசி பேப்பர் வாங்கிவரச் சொல்லிப் படிப்பது என்பது மச்சக்காளைக்கு சிரமம் இல்லாத ரொம்ப சுகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் அவருடைய பிள்ளை கதிரேசனுக்கு தினமும் பக்கத்து வீட்டு ஐயரிடம் போய் ஓசி பேப்பர் வாங்கி வருவது என்பது தர்மசங்கடமான வெட்கங்கெட்ட வேலையாக இருந்தது.

சாயந்திரம் பள்ளியில் இருந்து வந்ததும் பக்கத்து வீட்டு ஐயர் வீட்டுக்குப் போய் ஓசி பேப்பர் வாங்கி வருவதுதான் கதிரேசனின் முதல் வேலை. சில நேரங்களில் ஓசி பேப்பருக்காகப் போகும்போதுதான் ஐயர் வீட்டு மாமி வேண்டும் என்றே மும்முரமாக பேப்பரை படித்துக் கொண்டிருப்பாள். அதுவும் சினிமா செய்திகளை மாமி ஊன்றிப் படிப்பாள்.

சில நாட்களில் காலையில் வந்த அன்றைய பேப்பர் ஐயர் வீட்டில் எங்கே போயிற்று என்பதே தெரியாது. கதிரேசன்தான் அதைத் தேடி எடுக்க வேண்டும்! தேவையா அவனுக்கு இதெல்லாம்? நொந்துபோய் விடுவான். ஒரேயொரு ஆறுதல் பீடி நாற்றம் இல்லாமல் ஐயர் வீடு சுகந்தமான ஊதுபத்தி, தசாங்கம் வாசனையில் கமழும்.

இத்தனைக்கும் கதிரேசனுக்கு இன்னொரு நொந்து போகிற விஷயம் தெரியாது. அந்த விஷயம் அவனுக்குத் தெரிந்துவிட்டால் இன்னும் மோசமாக நொந்து நூலாகிப் போய்விடுவான்.

அது என்ன விஷயம் தெரியுமா? அவனுக்கு ஐயர் வீட்டில் ரகசியமாக ‘ஓசி பேப்பர்’ என்கிற பட்டப் பெயரை வைத்து விட்டார்கள். அவனைப் பற்றி ஐயர் வீட்டில் ஏதாவது பேச்சு எழுந்தால் ‘ஓசி பேப்பர்’ என்றுதான் ரகசியமாக கிசுகிசுப்பார்கள்.

பாவம் ஒரு இடம், பழி ஒரு இடம் என்று சொல்வது இதுதான் போலும். ஓசி பேப்பர் படிப்பது மச்சக்காளை. ஆனால் ‘ஓசி பேப்பர்’ என்ற பட்டம் கதிரேசனுக்கு!

இது தெரிந்தால் தூக்கிலேயேகூட தொங்கி விடுவான் கதிரேசன். அவ்வளவு உணர்ச்சிகரமான பையன் அவன்!! 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘பூரணி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). இசக்கிப் பாண்டியை நன்றாகத் தயார்செய்து பெரிய பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ஐயங்கார் கிட்ட கூட்டிட்டுப்போனா பூரணி. “ஏம்மா, இந்தப் பயலைப் பார்த்தா ஏழெட்டு வயசுப் பயலாட்டம் இருக்கான்... நீ ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அப்பாவும் காமராஜும்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இத்தனைக்கும் காமராஜ் அவன் வீட்டிற்கு வந்து அவன் அப்பாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப்போவார், ஆனாலும் அப்பா காமராஜிடம் அவரின் கல்யாண விஷயம் பற்றி மட்டும் வாயைத் ...
மேலும் கதையை படிக்க...
பசுபதி. வயது முப்பது. ஊர் தேனி. இயற்கை வனப்புச் செறிந்த பிரதேசங்களுக்கு அடுத்ததாக பசுபதியின் உணர்வுகளை எளிமையாகக் கவர்ந்திருப்பவை அழகிய பழமையான கோயில்கள்தான். தென் தமிழ் நாட்டில் அவன் காணாத கோயில்களே இல்லை எனலாம். மதுரைக்கு அருகே உள்ள கள்ளழகர் கோயிலிலிருந்து, செங்கோட்டைக்குச் சற்றுத் தள்ளிய ...
மேலும் கதையை படிக்க...
சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் சிரமணர் தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்ப துன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு பகை அற்றவர் என்றும் கூறலாம். தன்னை ...
மேலும் கதையை படிக்க...
சிவகுமார் அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகியும் அவர்களிடம் அதே மரியாதையுடன், வாஞ்சையுடன் இருந்தான். தாம்பரத்தில் ப்ளாஸ்டிக் காம்போனேன்ட் ஆன்சிலரி யூனிட் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தான். அதன் மூலம் பணத்தில் கொழித்தான். ஆனால் அவன் மனைவி மேகலாவுக்கு தன் வீட்டில் மாமனார், ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சிலிர்ப்பு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). கண் விழித்துப் பார்த்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன். பலவிதப் பரிசோதனைகள் செய்த பிறகு, இருதயத்தில் வால்வு ஒன்றில் கோளாறு என்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் படிப்பு பாதியிலேயே ...
மேலும் கதையை படிக்க...
மாநில அரசாங்கத்தின் வட்டார போக்கு வரத்து மீனம்பாக்கம் அலுவலகத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான வேலை. மேற் கொண்டு படித்து அலுவலகத் தேர்வுகள் எழுதினால் மேல்நிலை எழுத்தர், கண்காணிப்பாளர், மேலாளர் என்ற ...
மேலும் கதையை படிக்க...
சென்னையின் அந்த மிகப் பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலையில் சேர்ந்த முதல்நாளே முரளி இன்பமான அதிர்ச்சியடைந்தான். அவனுடைய ப்ராஜெக்ட் மனேஜர் ஒரு அழகிய பெண்மணி என்பதுதான் அவனுடைய இன்ப அதிர்ச்சிக்கு காரணம். பெயர் கவிதா. வயது முப்பது இருக்கலாம். முரளியிடம் முதல்நாள் அவனுடைய வேலைகளைப் ...
மேலும் கதையை படிக்க...
அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என்று பெயரிட்டனர். அந்தக் குழந்தை சிறுவயது முதலே பக்தியுடன் நிறைய ஸ்தோத்திரங்களையும், பக்திப்பாடல்களையும் கற்றுக்கொண்டாள். பதினைந்து வயதுமுதல், குழந்தைக்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்றும் அந்த சம்பவத்தை மந்தாகினி காண நேரிட்டது. குமார் மானேஜரின் தனியறையிலிருந்த தொலை பேசி எண்களை சுழற்றிக் கொண்டிருந்தான். மானேஜர் இல்லாத சமயங்களில் அவனது இந்த வித்தியாசமான செயல் அவளுக்குப் பெரிய புதிராக இருந்தது. அதாவது, குமார் தொலைபேசியின் எண்களை மட்டும் சுழற்றிவிட்டு, தொடர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
இசக்கியின் பள்ளிப் பருவம்
அப்பாவின் கல்யாணம்
கோயில்கள்
மிதிலாநகர் பேரழகி
முதியோர் இல்லம்
சொட்டைப் பூனை
மனிதர்களில் ஒரு மனிதன்
காதலுக்கு மரியாதை
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
மண் குதிரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)