ஓங்கிய கை

 

இடி இடித்தது. இடையறாது பொழிந்தது. சமையல் அறையிலிருந்துதான்.

தினசரியை முகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டிருந்தவன், கண்கள் வேலை செய்யும்போது இந்தக் காதுகள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டால் என்ன என்று யோசித்தான்.

ஆயிற்று, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக இந்த மாதிரி ஏதேதோ பயனற்ற யோசனைகள். ஆனால், தனது பிரச்னைக்கு உருப்படியாக ஒரு தீர்வுகாணத் தெரியவில்லை!

`பொண்ணு நம்ப கைலாசத்தைவிட பத்து வயசு பெரியவளா இருக்காளே!” என்று அம்மா முதலில் தயங்கியது இப்போது நினைவுக்கு வந்தது.

ஒரு முறை பார்த்தவுடனேயே, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்திராத நிலையில், செல்லத்திடம் ஏதோ கவர்ச்சி ஏற்பட்டிருந்தது அந்தப் பருவத்தில். அவள் ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக… அவனுக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஒரே ஒற்றுமை அவனும் ஒல்லி என்பதுதான்.

அவள் ஏழையாக இருந்தால் என்ன! அவன்தான் கைநிறைய சம்பாதிக்கிறானே!

அப்பா ஏதேனும் ஆட்சேபம் சொல்லிவிடப் போகிறாரே என்று மனம் பதைத்தது. நல்ல வேளை, `வயசு வித்தியாசம் குறைச்சலா இருந்தாத்தான் கவலைப்படணும். அந்தப் பொண்ணு முப்பத்தஞ்சு வயசிலேயே இவனுக்கு அக்கா மாதிரி, வயசானவளா ஆகிடுவா. இப்போ, இவனும் அவளைக் குழந்தைமாதிரி பாத்துப்பான்!’ என்று, அப்பாதான் அந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுத்தார்.

உலகத்திலேயே காணக் கிடைக்காத மனைவி தனக்கு வாய்த்துவிட்டதைப்போல் நடந்துகொண்டான் கைலாசம்.

செல்லத்திற்கோ, தான் சுலபமாகக் கிடைக்காத ஒரு அரிய ஜன்மம், அதுதான் இப்படி மேலே விழாத குறையாகத் தன்னை இவருக்கு மணமுடித்திருக்கிறர்கள் என்ற கர்வம்தான் வந்தது.

`கல்யாணம்தான் ஆகிவிட்டதே, இனியும் என்ன அழகு வேண்டிக் கிடக்கிறது!’ என்ற அலட்சியப் போக்கால், இரு பிள்ளைகளுக்குப் பிறகு, இருபது கிலோ கூடினாள்.

பார்ப்பவர்களிடமெல்லாம், `எனக்கும் அப்பா இருந்திருந்தா, என்னை இப்படி இவருக்குக் குடுத்திருப்பார்களா? கல்யாண சமயத்திலேயே இவருக்கு தலை நரைச்சிருந்தது! முன் நெத்தியில வழுக்கை வேற!’ என்று பொருமுவாள்.

கைலாசத்துக்குத் தலைகுனிவாக இருந்தது. தலை நரைத்துவிட்டதாமே! முப்பத்து இரண்டு வயதுவரைக்கும் அவனுடைய சம்பாதித்தியத்தை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு ஊரார் வாய்க்குப் பயந்து பெற்றோர் தம் மகனுக்கு ஒரு கால்கட்டு போட்டது அவனுடைய தவறா?

பத்து குழந்தைகளில் கடைசி செல்லப்பிள்ளையாக இருந்தவனுக்கு, கோபம், ஆத்திரம் இவைகளின் உபயோகம் தெரிந்திருக்கவில்லை. முதலில் மறைமுகமாக, பிறகு நேரிடையாகவே மனைவி அவனைத் தாக்க ஆரம்பித்தபோது, `ஒரு பெண்ணுடன் தான் எதிர்த்துப் போராடுவதா!’ என்று, பெரிய மனது பண்ணி, விட்டுக்கொடுத்தான்.

போகப் போக, செல்லத்தை நினைத்தாலே குழப்பம் ஏற்பட்டது. சிறிது அச்சம், அவமானம், இப்படி ஒவ்வொரு அந்நிய உணர்ச்சியும் பரிச்சயமாகிக்கொண்டு வந்த வேளையில், ஆசை மட்டும் குறைந்துகொண்டே போயிற்று. மொட்டை மாடியில் தனியாகப் படுத்து, நட்சத்திரங்களைப் பார்த்தபடி விழித்திருக்க ஆரம்பித்தான்.

அது ஏன், தான் எது செய்தாலும் அது தப்பாகவே தெரிகிறது செல்லத்துக்கு? அவன் வாங்கி வந்த புடலை, கத்தரி, வெண்டை எல்லாமே முற்றல், அல்லது அதிக விலை. இவனைப் போன்ற ஏமாளிகளுக்கென்றே கடைக்காரன் வைத்திருப்பது.

வீட்டிலேயே கிடந்து உழலுவதால், அலுப்பில் அப்படிப் பேசுகிறாளோ, என்னவோ! அவளுக்கும் ஒரு மாறுதல் வேண்டாமா என்று யோசித்து, என்றைக்கும் இல்லாத தைரியத்துடன் சினிமா இரவுக் காட்சிக்கு இரண்டு டிக்கட்டுகள் வாங்கிவந்தான் ஒரு முறை.

`வீட்டிலே இவ்வளவுபேர் இருக்கிறபோது, நான் மட்டும் ஒங்ககூட உல்லாசமா சுத்தினா, பாக்க நல்லாவா இருக்கும்? அசிங்கம்!’ என்று செல்லம் பொரிந்தபோது, ஏதோ கள்ளக்காதலியுடன் நேரத்தைக் கழிக்க நினைத்ததுபோல் குற்ற உணர்வுதான் உண்டாயிற்று கைலாசத்துக்கு. அன்று அவனுடன் சேர்ந்து படம் பார்த்தது அண்ணன் மகன்தான்.

தாய் இரக்கப்பட்டாள். `ஹூம்! பொண்டாட்டிதாசனா ஆயிட்டே! அவ எது சொன்னாலும் வாய் திறக்காம கேட்டுக்கறே!’

இப்படி உசுப்பி விட்டாலாவது அருமைபெருமையாக வளர்த்த மகனுக்கு ரோஷம் வராதா என்று எதிர்பார்த்தாள். அவனுக்கோ, `நம் கையாலாகாத்தனத்தை எல்லாரும் கவனித்துவிட்டார்களே!’ என்று அவமானமாக இருந்தது. இன்னும் மௌனியாக ஆனான்.

அவனுக்கும் ஒரு விடிவு வந்தது.

“ஆபீசிலே வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்களா ஒங்களை! அங்கேயெல்லாம் போய் எப்படித்தான் பிழைக்கப்போகிறீர்களோ!”

முதன்முறையாக, செல்லத்தின் மென்னியைப் பிடித்து நெருக்க வேண்டும்போல் கை பரபரத்தது.

தான் இல்லாவிட்டால் இந்தப் பிசாசு யாரைப் பார்த்துக் கத்தும்?

அந்த நினைவே ஒரு விடுதலை உணர்வை எழுப்ப, உதட்டைக் குவித்துக்கொண்டு விசில் அடித்தான். நடையில் ஒரு மிடுக்கு வந்தது.

வெளிநாட்டு ஹோட்டல் வாசம், அதில் கிடைத்த உல்லாசம் — தொல்லை, பிடுங்கல் எதுவுமற்ற உல்லாசம் — கைலாசத்துக்கு சொர்க்கமாக இருந்தது.

`காசை வீசி எறிந்தால், ஆயிரம் பெண்கள் வருகிறார்கள்! எவளாவது ஒருத்தி நம்மை மரியாதைக் குறைவாக, தூக்கியெறிந்து பேசுகிறாளா!’

வீடு திரும்பும் நாள் நெருங்கியது.

செல்லத்திடம் போக வேண்டும்!

நினைக்கும்போதே பயங்கரமாக இருந்தது. கூடவே, கொண்டவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டோமே என்று குத்தியது மனம். அதைச் சமாதானப்படுத்தும் வகையில், பலவிதப் பரிசுப் பொருட்களை வாங்கிச் சேர்த்தான். பாடும் பௌடர் டப்பா, உயர்தரக் கல்மாலைகள், கைப்பை எல்லாவற்றையும் பார்த்து ஆனந்தப்படும்போது, `கணவர் தனக்கு உண்மையாக இருந்திருக்கிறாரா?’ என்று அந்தப் பெண்மனம் பெரிதாகக் கவலைப்படாது என்று கணக்குப் போட்டான்.

`எனக்கு மட்டும் இப்படி இவ்வளவு சாமான்களை வாங்கி வந்திருக்கிறீர்களே, வீட்டிலே இத்தனைபேர் இருக்கிறபோது!’ என்று செல்லத்தின் குரல் — ஓயாது கத்தியதில் கரகரத்துப்போன அந்தக் குரல் — கேட்பது போலிருந்தது.

பயத்துடன் ஒரு முறை உடலைச் சிலிர்த்துக் கொண்டவன், இன்னும் கொஞ்சம் பணத்தை விரயம் செய்தான்.

வீடு திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் போர் முரசு கொட்டவில்லை. `அவ்வளவு தொலைவு போயும் நமக்காக ஆசையாய் வாங்கி வந்திருக்கிறாரே!’ என்று வருபவர்கள், போகிறவர்கள் எல்லாரிடத்திலும் கணவர் தனக்காக வாங்கி வந்தபொருட்களை காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் செல்லம்.

கைலாசத்துக்குப் பாவமாக இருந்தது. அறிவு முதிராத நிலையில், அதிக வயது வித்தியாசத்தில், இளமைக்கனவுகள் கிட்டத்தட்ட முடிந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டோமே என்ற ஏமாற்றம் அவளுக்கு. அது புரியாது, தான் மனம் போன போக்கில் நடந்துகொண்டுவிட்டோமே!

வாரம் இருமுறை விரதம் இருக்கிறாளாமே!

எல்லாம் தனக்காகத்தானே!

நினைக்க நினைக்க, தான் மிகவும் தாழ்ந்துவிட்டதைப்போல் இருந்தது கைலாசத்துக்கு. பரிமாறவோ, வேறு எதற்காகவோ செல்லம் அருகில் வரும்போதெல்லாம் அவனுடைய குற்ற உணர்வு அதிகரித்தது. எப்போதையும்விட அதிகமாகத் தனக்குள் ஒடுங்கிப்போனான்.

ஓட ஓடத் துரத்தும் இந்த உலகம் என்று அவனுக்குப் புரியவில்லை.

மீண்டும் பழையபடி செல்லத்தின் கை ஓங்க, `இது நான் செய்த பாவத்துக்குப் பரிகாரம்!’ என்று, வாய் திறவாமல் எல்லா அவமானத்தையும் ஏற்றுக்கொண்டான்.

எப்போதாவது, உலகில் எல்லா பெண்களுமே செல்லத்தைப்போல் இருப்பதில்லை என்று உரைக்கும். உண்மை அன்பு இல்லாவிட்டாலும், தங்களை நாடி வரும் ஆண்களிடம் பணத்துக்காகவாவது, அருமையாக நடந்துகொள்பவர்களைப்பற்றி நினைக்கையிலேயே சிறிது ஏக்கம் எழும்.

போதும்! கண்காணாத இடத்தின் தனிமையில், கண்டபடி நடந்துகொண்டதற்கே இந்த மனம் படுத்தும் பாட்டைத் தாங்க முடியவில்லை. சே! `மனசாட்சி’ என்ற ஒன்றை ஏன்தான் தனக்குள் வளர்த்தார்களோ!

இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என்று எல்லா கசப்பையும் ஜீரணிக்க ஆயத்தமானான் கைலாசம்.

காலம் ஓடியது. கூடவே செல்லத்தின் எடையும். அதன் வளர்ச்சிக்கு வேண்டிய ஏதோ ஒன்று கைலாசத்தின் உடலிலிருந்துதான் எடுக்கப்படுகிறதோ என்று எண்ணும்படி அவன் உடல் வற்றிப்போயிற்று. வீட்டில் இருக்கும்போது, முணுமுணுப்பே அவன் மொழியானது.

எப்போதாவது, `இந்த நரகத்திலிருந்து எப்படி வெளியேறுவது?’ என்ற யோசனை வரும்.

காது செவிடாகலாம், அல்லது கால தேவன் கருணை காட்டி, அவனையோ, செல்லத்தையோ தன்னிடம் அழைத்துக் கொள்ளலாம்.

நிகழ்காலத்தைவிட எதிர்காலத்தைப்பற்றிய யோசனை இன்னும் பயங்கரமாக இருந்தது.

செல்லம் போய்விட்டால், மரியாதைகெட்ட பிள்ளைகள் அவனை இன்னும் வாட்டி வதைக்குமே!

தான் இறப்பதை அவனால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்த உலகம் எப்படி இருக்குமோ! இங்காவது, பழகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு விவேகம் வளர்ந்திருக்கிறது.

இடி இடித்தது. இடையறாது பொழிந்தது.

“விளக்குக் காசை கட்டணும்னு நான் சொல்லி ஒரு வாரமாச்சு! இன்னிக்கு வந்து கரண்டை வெட்டிடப்போறான்! இவர்கிட்ட ஒரு விஷயம் சொல்றதை செவத்திலே முட்டிக்கலாம்!” எதிரில் யாரும் இல்லாவிட்டாலும், சுவற்றுடனாவது பேசும் வர்க்கம் செல்லம்.

அவள் சொன்ன அன்றே பணத்தைக் கட்டியும், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு அவளிடம் சொல்லாதது நினைவுக்கு வந்தது கைலாசத்துக்கு.

போகிறாள், அவளுக்கும்தான் கத்த ஏதாவது விஷயம் வேண்டாமா? 

தொடர்புடைய சிறுகதைகள்
பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும் என்று எண்ணுபவள் நம் கதாநாயகி. அதனால், அக்காலங்களில் வீட்டிலேயே பூசையை முடித்துக் கொள்வாள். `கதாநாயகி` என்றதும், ஒர் அழகான இளம்பெண்ணை வாசகர்கள் கற்பனை ...
மேலும் கதையை படிக்க...
கையில் பிரித்த பத்திரிகையுடன் தன்னை நோக்கிவந்த மகளைக் கவனிக்காது, மும்முரமாக இட்லி மாவை வார்த்துக் கொண்டிருந்தாள் ராஜம்மா. “அம்மா! இன்னிக்கு என் கதை வந்திருக்கு!” அம்மா தன் உற்சாகத்தில் பங்கு கொள்ளமாட்டாள், குறைந்தபட்சம் அதைப் புரிந்துகொள்ளக்கூட அவளால் முடியாது என்பது தெரிந்திருந்தும், தேவியால் அந்த ...
மேலும் கதையை படிக்க...
“எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது ...
மேலும் கதையை படிக்க...
“உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா!” மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே `பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தவன் ஆயிற்றே! காரணமின்றி அழுதவள். எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பவள். அவளுடைய மனக்குறை என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. திருமணமாகிய முதல் மூன்று வருடங்களில் சாதாரணமாகத்தானே இருந்தாள்? இப்போது, ...
மேலும் கதையை படிக்க...
தாம் பெற்ற செல்வங்களுக்கு இவ்வுலகில் இடம்பெற உயிர் கொடுத்ததே பெரிய காரியம் என்ற இறுமாப்பில், `எப்படியோ போங்க!’ என்று `தண்ணி தெளித்து’ விட்டிருந்தார் முத்துசாமி. மூத்தவன் வீடு வீடாக பைக்கில் பீட்சா கொண்டு கொடுக்கும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தான். இதுவரைக்கும் நம்மிடம் பணங்காசு கேட்காது, ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது. அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “இங்கதான் நல்லா இருக்கே, மஞ்சு! பூனை இருக்கு. சீக்கிரமே ரெண்டு, மூணு குட்டி போடப்போகுது. அதோட விளையாடலாம். ...
மேலும் கதையை படிக்க...
“இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?” வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம் முறையிட்டாள் தாய். ராசுவின் உடலும் மனமும் ஒருங்கே சுருங்கின. முப்பது வயதுவரை கல்யாணத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தவன் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? நண்பர்களின் ...
மேலும் கதையை படிக்க...
“யோவ், பெரிசு! ஊட்ல சொல்லினு வண்ட்டியா?” லாரி டிரைவரின் கட்டைக்குரலோ, விடாமல் ஒலித்த ஹார்ன் ஒலியோ கணேசனின் காதில் விழவில்லை. பத்து வயதிலிருந்தே எந்த வசவோ, சத்தமோ கேட்காதது அவரது அதிர்ஷ்டம்தான். `போனதுதான் போனாளே! போறச்சே இந்த செவிட்டு முண்டத்தையும் அழைச்சுண்டு போயிருக்கப்படாதோ? இதை ...
மேலும் கதையை படிக்க...
“மொத மொதலா நேத்திக்கு ஒரு பொண்ணு பாத்துட்டு வந்தியே!” என்று கேசவன் ஆரம்பித்ததும், சதாசிவம் பெருமூச்செறிந்தான். `இனி இவனிடமிருந்து தப்பிக்க முடியாதே!’ என்ற அயர்ச்சி பிறந்தது. இன்று, நேற்று பழகியவர்களாக இருந்தால் இப்படித் தொணதொணக்க மாட்டார்கள். இவனோ, பால்ய சிநேகிதன்! தான் மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
நாள் பூராவும் அலுவலகத்தில் உழைத்துவிட்டு, அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, பஸ்ஸைப் பிடித்தாள் கல்யாணி. வீட்டில் காலெடுத்து வைத்தவுடன் சமையல்பாட்டைக் கவனித்தாக வேண்டும். கால்கள் கெஞ்சின. `இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை காலமோ!’ என்ற மலைப்பு எழுந்தது. தெய்வாதீனமாகத்தான் அந்த விபத்து ...
மேலும் கதையை படிக்க...
படப்பிடிப்பு
தோழி வேறு, மனைவி வேறு
அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்
சக்குவின் சின்னிக்குட்டி
எப்படியோ போங்க!
யாரோ பெற்றது
வாரிசு
விட்ட குறை
பெண் பார்த்துவிட்டு..
காலம் கடந்தபின்னே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)