ஒற்றை யானை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 8,159 
 

தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கை பட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தடவியபோது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் எனத்தெரியாது. ‘முழிப்பு வந்தபோது பசித்தது. எழுந்துகொள்ள முடியாதபடி கால்கள் வலித்தன. பிளாஸ்டிக் கதிரையை நம்ப முடியாது. ஊன்றி எழும்பும்போது திரும்பவும் வழுக்கிவிடும். மெள்ளத் தவண்டு சாய்மனைக் கதிரைக்குக் கிட்டப் போனால் ஊன்றி எழும்பி விடலாம். கோயிலுக்கு போன மூத்தவள் வாறதுக்குள்ள எப்படியாவது எழும்பிரனும்’.

முதுமைக்கென்றே இருக்கும் அழகில் ஒரு முறை முக்கியெடுக்கப்பட்ட தோற்றம் டெய்சியாச்சிக்கு. மலையிலிருந்து தலைவிரிகோலமாய் இறங்கும் ஆற்றின் வகிடினைப்போல சுருக்கங்கள் நிறைந்தது அவள் முகம். இடுங்கிய கண்களுக்குள் இன்னும் ஒளி இருந்தது. கண்களினடியில் பைவிழுந்துவிட்டது. செத்துவிட ஆசைப்படும் வயது. இரண்டு உலகப் போர்களையும் கண்டவள். ஐம்பத்தியாறாம் ஆண்டு மொழிப்பிரச்சினையில் புருசன் வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தபோது ஐய்ந்தாவது பிள்ளையாக அவரையும் ஏற்றுக்கொண்ட கருணை இன்னும் வடியாமல் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுடுதண்ணீர் வைத்து முழுகிவிடுவாள். ஞாயிற்றுக்கிழமை ஏழுமணிப்பூசைக்கு அவள் போகும் போது அறுபதை நெருங்கும் ஆச்சிகளுக்கு அசிட் குடித்ததைப் போல வயிறு எரியும். “சாகிற காலத்துல சென்ட் அடிச்சிட்டு திரியுறா பாரென சபித்துக்கொள்வார்கள்.

ஊன்றி எழும்பிய போது தலை சுற்றுவதைப் போலிருந்தது. கைத்தடியை எடுத்துக்கொண்டால் தேவலாம். கனடாவில் இருந்து வந்திருக்கும் மூத்தவள் வாங்கியனுப்பியது. கை பிடிக்கும் இடத்தில் ஒரு வாய் திறந்த யானை தும்பிக்கையை உயர்த்தி பிளிறிக்கொண்டிருந்தது. எண்பதாவது வயதுவரை கைத்தடியை பாவிக்கவில்லை. ஆனால் வெளியில் எங்கும் போகும்போது தனது கையில் கொழுவிக்கொள்வாள். மகளை ஒத்த வயதுடையவர்கள் வரும்போது பெருமையாகக் காட்டுவாள். அவளுக்கு கைத்தடியை ஊன்றுவதும் கண்ணாடியைப் பாவிப்பதும் கெளரவக்குறைச்சல்தான். ஆனால் தனித்த இரவுகளில் கைத்தடியை அருகில் வைத்துக்கொள்வாள். அந்த யானை தன்னை தும்பிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பதைப்போல இருக்கும். சில இரவுகளிலும், நீண்ட பகலிலும் யானையின் பிழிறல்கள்கூட கேட்டதுண்டு. முன்வாசலில் இருந்து சாலையைப் பார்த்தபடி யானையின் தலையைத் தடவிக்கொண்டிருப்பதில் அவளுக்கு நிறைய விருப்பம். அது தனது கனடா பூட்டனின் முன் தலையைத் தடவியதை ஞாபகப்படுத்தும்.

பாக்கு போட்டதைப் போல தொண்டை அடைத்துக்கொள்ள செருமிக்கொண்டாள். வழிந்த கண்ணீரை துடைக்கவில்லை. முகத்தைக் கழுவிக்கொண்டாள். இரத்தம் நின்றிருந்தது.

இரண்டு இடியப்பத்தை போட்டுக்கொண்டு குசினிக்குள் இருந்த கதிரையை இழுத்துப்போட்டு இருந்தாள். நேரத்தைக் கடத்துவதற்காக ஒவ்வொரு நாளும் சமைக்கிறாள். வர வர சாப்பாட்டில் நாட்டமில்லை. குசினிக்குள் வியர்த்து வடிந்தது. இரத்த அழுத்தம் கூடியிருக்கலாம். மனம் ஒரு இடத்தில் நின்றபாடில்லை. நடுச்சாலைக்குள் சென்றால் சுகப்படும் என அங்கு வந்து காற்றுப்படுமாறு அமர்ந்துகொண்டாள்.

கணவன் அரசாங்க வேலையிலிந்து விலகி அரசியலுக்குள் இறங்கியபோது குடும்பம் ஆட்டம் கண்டிருந்தது.நான்கு பிள்ளைகளையும் படிப்பிக்க அவள் தான் உடுப்புத் தைக்கத் தொடங்கினாள். இனப்பிரச்சினை தொடங்கிய காலத்தில் பெரியவன் இந்தியாவிற்கும், ஒருத்தி கனடாவிற்கும் புலம்பெயர்ந்துவிட மற்றைய இருவரும் நகரத்துக்குள் திருமணம் முடித்துக்கொண்டு போய்விட்டனர்.

பேரப்பிள்ளைகள் பிறந்தபோது கனடாவில் இருப்பவள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக கனடாவிற்குக் கூப்பிட்டாள். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் இவள்தான் போயிருந்து பத்தியம் பார்த்தாள். பேரப்பிள்ளைகளோடு இருப்பது கணவனின் சாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வசதியாயிருந்தது. மகனின் பிள்ளைகள் பிறந்தபோது இந்தியாவிற்கும் சென்றாள். ஆனால் எங்கும் வசதிப்படவில்லை. கனடாவில் கறியைச் சூடாக்கி சாப்பிடவேண்டிருந்தது. கிழமைக்கு ஒருக்கா சுடுதண்ணி போட்டு தலைமுழுகிறவக்கு அங்க கிழமைக்கு ஒருக்கா சமைச்சு ஒவ்வொரு நாளும் சூடாக்கி சாப்பிடறது அரியண்டம் தான். அதைச் சொல்லி “போகப்போறன் புள்ள … டிக்கட் போடு” என்ற போது மகள் பேசினாள். அடுப்பணைக்க மறந்த ஒருநாளில் சட்டியும் எரிந்து குசினிக்குள் புகை மூண்டபோது மகள் சொன்னாள் “எங்களைக் கொண்டிராதனை… நீ அங்கயே போயிரு”

அம்மா நாட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில கனடாக்காரிக்கு மனது பொறுக்கவில்லை… அம்மாவுக்கு ஏதாவது உபகாரம் செய்யணுமெண்டு நினைச்சு வருசா வருசம் ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் குடுங்கன்னு நாட்டுக்கு வர்ரவங்களிட்ட காசு குடுத்துவிடுவா… இப்ப வீடு நிறைய சாமான்… ஒத்தயா டெய்சியாச்சி.

***

கனடாக்காரி நாட்டுக்கு வந்தா சகோதரங்களையும் கூப்பிடுறது வழமை.. இந்தியாவில் இருக்கும் தம்பிக்கு தானே டிக்கட் போடுவா… இவ கொண்டு வார சொக்லட்டுகள் டின்பால் குடிக்கிற மாதிரி இனிப்பும் கொஞ்சம் கசப்புமா இருக்கும். … உடுப்பும் நல்ல வாசம்… எப்பவுமே வராத சின்னவனும், சவுந்தரியும் கூட வருவாங்க…

வீட்டுக்கு வந்த இளைய மகனும், மகளும் சாமான்களை கண்டு திகச்சுப் போயிட்டாங்க… அம்மா செத்தா இதையெல்லாம் யாரு எடுக்கிறது… இளையவனின் மனுசி கராராக சொல்லிவிட்டாள், சாமான் தராட்டி “மாமி செத்தா, எங்கட வீட்டுல வைக்க முடியாது”.

மகளுக்கு அப்படி சொல்ல முடியல. “சீதனம் தந்த வகையில எனக்கு எல்லாமே கொறச்சல்தான்… அதனால மர அலுமாரி, ஆறுபிளாஸ்டிக்கதிரை, சாப்பாட்டு மேசை, சாய்மனைக்கதிரை, தையல்மெசின், பிரசர் பொக்ஸ், கியாஸ் அடுப்பு, சிலிண்டர் எல்லாத்தையும் எனக்குத் தான் தரனும்”.

வாய்த்தர்க்கம் கைக்கு எட்ட முன்ன கனடாக்காரி தான் சொன்னா, “அம்மா சாகிற வரைக்கும் யாரும் ஒரு பொருளையும் எடுக்கக்கூடாது. அம்மா யாருக்கு குடுக்கனும் எண்டு விரும்புறாவோ அவங்களுக்கு குடுக்கலாம்”.

சாப்பிட்டுவிட்டு ஆச்சி அறைக்குள் சென்றவுடன் இளையதம்பி தொடங்கினான்… “அம்மாவுக்கு முன்னப்போல இல்லை… இப்ப எத்தன தரம் விழுந்துட்டா. போன முறை டொக்டர்ட கொண்டுபோன நேரமே சொன்னவர் ,தொடர்ந்து தையல் மெசின்லயே இருந்ததால காலில தேய்மானம் கூடவாம், நிக்க நடக்க கஷ்டமெண்டு”.

“எங்கட நாட்டுல ஒருத்தர் உழைச்சு ஒருத்தர் வாழுறதே பெரும்பாடெண்டு உனக்கு நான் சொல்லியா தெரியனும்” என்றவாறே சாப்பாட்டுக் கோப்பைக்குள் கையைக் கழுவினான் பெரியவன்.

“இவ்வளவு காலமும் நீங்களா பாக்கிறிங்கள். உங்கட பிள்ளைகளையும் அம்மா வளத்துவிட்டவா தானே… உங்களுகளுக்கும் கடமை இருக்கெண்டுறத யாரும் மறக்காதிங்க. விளங்கிச்சோ… நீங்க செய்யாட்டியும் மாசாமாசம் நான் காசு அனுப்புவன்”.

“அம்மாவ வச்சிப்பாக்க எங்களுக்கு விருப்பம்தான் அக்கா. ஆனால் என்ற மனுசனை உனக்கு தெரியும் தானே… அவருக்கும், இவவுக்கும் ஒவ்வாமை கிடக்கு… ஆளில்லாத நேரத்துல அடிச்சு சாக்காட்டினா நாளைக்கு உனக்கென்ன பதில் சொல்றது..”

“அம்மா இருக்கிற மாதிரியே இங்க இருக்கட்டும். இந்த பாங்க் கணக்க மட்டும் என்னோட பேருக்கு மாத்திட்டுப் போ… இல்லாட்டி எண்ட கணக்குக்கு காசை போடு. நாளைக்கு செத்தா கனடாவிலருந்து வந்தா அடக்கம் செய்யப்போற. கையில காசில்லாம இங்க ஒரு வேலையும் செய்யமுடியாது”.

“சின்னவன்… பாங்க் கணக்கு அப்படியே இருக்கட்டும். அதுதான் அவக்கு சுகப்படும். உனக்கு கொஞ்சம் காசு தந்திட்டு போறன்.. இடையில எதுவும் நடந்தாலும் கடனை வாங்கியாவது செஞ்சு போடு. நானும், பெரியவனும் நினைச்ச உடன வரமுடியாதெண்டு உனக்கு தெரியும் தானே. பிறகும் காசு அனுப்புவன்…”

“எல்லாரும் நிக்கிற நேரமே எதுவும் நடந்திட்டால் நல்லம் போலக் கிடக்கனை… காரியத்தை எல்லாரும் சேந்து செஞ்ச மாதிரி போயிருமே… இதேன் ஒராள ஒராள் பாத்துக்கொண்டு… கடைசி நேரத்துல முகம்பாக்க முடியாம நீயுமல்லா நொந்து சாகனும்… அம்மாவுக்கும் அதொரு கொடுப்பினையா போயிரும்… ”

பெரியதம்பி நித்திரைக்கு போகமுதல் அக்காவிடம் கேட்டான் “அந்த டிஜிட்டல் பிரசர் பொக்சை மட்டும் நான் எடுத்துட்டுப் போகவா.”

ஆச்சிக்கு அன்றிறவு நித்திரையில்லை. கண்மூட முடியாமல் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தன்னை யாரும் கூட்டிக்கொண்டு போவதாக சும்மா கூட ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே… “ஏன் பிள்ளை…. உங்களுக்கு அவ்வளவு பாரமாவ போயிட்டன்” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். அருகிலிருந்த யானையைப் பார்த்தாள். அது ரெளத்ரமாக பிளிறிக்கொண்டிருந்தது.

***

நாலு மணிக்கே கனடாக்காரி எழும்பிட்டா… அவவுக்கு நித்திரை போகலை… வாசலைதிறந்து படியில் இருந்தாள். பழைய நினைவுகள் வந்தன. அப்பா மடிக்குள் வைத்துக்கொண்டு பல்லுத்தீட்டி விட்டதும், குளிப்பாட்டியதும் ஞாபகத்தில் வந்தது. அப்பா வேலைக்கு போகாத காலத்துல கூட அம்மா அப்பாவை எதற்கும் கோவித்துக்கொண்டதில்லை. அம்மா நல்ல வடிவு… சாயலில் அம்மாவைப் போலிருப்பதில் பெருமை தான். எதுவும் வேணுமெண்டு அம்மா கேட்டதில்லை..

இளம்பனியும் குளிரும் மனதை இலேசாக்கியது… புழுதி மணம்… வீட்டைச் சுற்றி நிறைய பூக்கள் பூத்துக்கிடந்தன. ஒரு பூவைக் கொண்டு வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தாள். அப்பா சிரிப்பது போலிருந்தது. அப்பா உயிரோடு இருந்திருந்தால் அம்மாக்கு தனிமை இருந்திருக்காது. எங்களை நினைச்சுத்தான் வேதனைப்பட்டிருப்பார்.

அம்மாவின் அறை மங்கல் வெளிச்சத்தில் திறந்துகிடந்தது. உள்ளே நுழைகையில் மூத்திரவாடை அடித்தது. கதிரையை அருகில் இழுத்து தலகாணியில் கையூன்றி அமர்ந்தாள்… அம்மா அழுதிருந்தது தலகாணி ஈரத்தில் தெரிந்தது. கண்ணீரும் பீழையும் சேர்ந்து ஒரு வகிடாய் மூக்குவரை உறைந்து கிடந்தது. கைகளால் தலையை வருடினாள். உறைந்து போன பீழையைத் தடவி எடுத்தாள்… அம்மா முழித்துக் கொண்டாள். என்ன பிள்ள காத்தாடி இல்லாம நித்திரை போகலையோ… தேத்தண்ணி போடவா… என மெல்லிசாய் கேட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.

மெல்லிய இரவுடையில் அம்மா வெறும் கூடாகத் தெரிந்தாள். கூன் உடம்பில் கழுத்து எழும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மார்புகள் தொங்கி வயிற்றைத் தொட்டிருந்தன. மெல்லிய உடலிற்கு சம்மந்தமில்லாமல் வயிறு தனியாக சரிந்து கிடந்தது. மெல்ல வயிற்றைத் தடவிப்பார்த்தாள்… மிருதுவாக இருந்தாலும் பேறுகாலத் தழும்புகளை கையில் உணரமுடிந்தது. இந்த வயிற்றில்தானே எங்களைச் சுமந்தாள்…. எத்தனை ஆசைகளோடு வளர்த்திருப்பாள்….

“வேலை முடிஞ்சதும் எழும்பிப் போயிருவீர்… நானல்லா சுமக்கனும்…” என இரண்டாவது கருவைக் கலைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. எழுந்து கண்ணாடியில் ஒரு முறை வயிற்றைப் பார்த்துக் கொண்டாள். அதுவும் வெளியில் தான் தள்ளிக் கிடந்தது.

படுக்கையறைக்குள் இருந்த மூத்திரவாளியை தூக்கிக்கொண்டு வெளியேறினாள். புழக்கடையில் பன்னாடைகளைப் போட்டு சுடுதண்ணி வைத்த அடையாளம் இருந்தது. எரிச்சல் பட்டாள்… கியாஸ் அடுப்பு இருக்க இவ ஏன் புகையில கிடந்து சாகிறா… சலித்தபடி வீட்டிற்குள் வந்தாள்..

அம்மா எழும்பியிருந்தாள்… அவளிடம் கதைத்து எதுவும் மாறிவிடப்போவதில்லை. தேத்தண்ணி போட்டாள். அம்மாவிடம் குடுக்கும் போது சுடுதண்ணி வைக்கிறன் … குளிக்கிறீங்களா… என்றாள்.

வேணாம் பிள்ளை… கஷ்டப்படாதை… என்றபடி நடுங்கும் கைகளுடன் தேத்தண்ணியை வேண்டிக்கொண்டாள்.

திருந்தாதி மணி அடித்தது. குருசு போட்டுக்கொண்டாள். பூசைச் சத்தம் மைக்செட்டில் தூரத்தில் கேட்டது. ஒரு கட்டு செபப்புத்தங்களை எடுத்துக்கொண்டுவந்து செபம் சொல்லத் தொடங்கினாள். அம்மாவின் பழக்கங்கள் எதுவும் மாறியிருக்கவில்லை. பெரியவளும் இங்கிருந்து போகும் வரை காலைச் செபம், மதியச் செபம், மூணு மணிச் செபம், இரவுச்செபம் என எல்லாம் சொன்னவள் தான்.

வெளிநாட்டிற்கு போனபிறகு காசிருந்தா காணும் என நினைத்துக்கொண்டாள். வருடத்திற்கு ஓரிரு முறை உல்லாசப் பிரயாணம் போல கோயிலுக்கு போறது தான். கோயிலுக்கு போனால் பழைய ஆக்களை எல்லாம் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

விடிந்திருந்தது…. டோஸ்டரில் இரண்டு பாண் துண்டுகளைப் போட்ட படியே அம்மாவிடம் சொன்னாள் “பெரியவனோ, சின்னவனோ, சவுந்தரியோ யாரு கேட்டாலும் எதையும் குடுக்க வேணாம். ஆனா… யாருக்கு எதைக் குடுக்கலாம் என யோசிச்சு எழுதி வையுங்க.. வீட்டை மட்டும் யாருக்கும் குடுக்காதீங்க.. பிறகு நானோ, பெரியவனோ நாட்டுக்கு வந்தா ரோட்டுல தான் நிக்கனும்… வீட்ட இதுல வச்சுக்கொண்டு ஹோட்டலில தங்கினா நல்லாவா இருக்கும்… கேட்டீங்களோ அம்மா… அப்பாட பேருக்குத் தான் மரியாதயில்லாம போயிரும். வீட்டை என்னட பேருல எழுதிவிடுங்கோ… யாரெண்டாலும் இருக்கட்டும். நாங்க வந்தாலும் தங்கலாம்..

எங்கட கடசிக் காலத்துக்கு நாங்க எப்படியும் இங்க தானம்மா வரனும்.. பிள்ளைகள் பாக்கும் எண்டு எதிர்பாக்கமுடியாது. வீடு கைமாறினா இந்தச் சந்ததி இருந்ததுக்கு அடையாளம் இருக்காதெண்டு தெரியும் தானே..

லோயர்ட கதைச்சிட்டன்… டொக்குமெண்ட்ஸ் எல்லாம் சரி… பின்னேரமா போய் கையெழுத்து போட்டா சரி என்றபோது டெய்சியாச்சி ஜன்னலைத்தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

***

டெய்சியாச்சி பிறந்து சில நாட்களில் அப்பா இறந்துவிட்டார். பதிமூன்று வயதிருக்கும் போது அம்மாவும் இறந்துவிட திருமணம் முடித்த அக்காதான் வளர்த்தாள். வீட்டிற்கு பின்புறமிருந்த காணியை அக்கா தந்தபோது காடு மண்டிக்கிடந்தது. 18 வயதில் டெய்சியாச்சிக்கு ஆங்கில ஆசிரியையாக வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளமெடுத்து காடு திருத்தினாள். மாதச் சம்பளத்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைக் கட்டினாள். அத்திவாரம் முடித்தபோது மழை கொட்டியது. அக்காவுடைய மேட்டுவீடே தண்னீருக்குள் மூழ்கி கிடந்தது. டெய்சியாச்சியின் அத்திவாரத்தைக் காணவேயில்லை. நிலம் காய்ந்தவுடன் அத்திவாரத்தை உயர்த்திக் கட்டினாள். ஆறடி உயரத்தில் அத்திவாரம் போட்டாள். வாசலில் நின்று பார்த்தால் நாலு ரோடும் தெரியும் உயரம். வீடு இரண்டு அறையும், குசினியும் விறாந்தையும் பின்னுக்கு கக்கூஸ் என கட்டிக்கொண்டாள். அந்த நாட்களை நினைத்தால் ஆச்சிக்கு இன்னும் அழுகை வரும்.

***

கண்களைத் துடைத்துக்கொண்டாள். பெரிய மகளுக்கு வீடு எழுதியாச்சு. மிச்சம் இருக்கிறதுகள சின்னவங்கள் ரெண்டு பேருக்கும் சரி பாதியா பிரிச்சா சரி. பேப்பரில் பேர் எழுதி விடுபட்ட பொருட்களில் செலோடேப் போட்டு ஒட்டினாள். பிரசர்பொக்ஸ்சில் பெரியமகனின் பெயரை ஒட்டினாள்.

நெஞ்சு கனப்பது போலிருந்தது. மூச்செடுக்கவும் முடியவில்லை. சுடுதண்ணி வைக்க நேரமில்லை.. குளித்தாள்.. தன் சின்ன சூட்கேசை எடுத்து கல்யாண சீலையை உடுத்திக்கொண்டாள். அதில் தன் கணவனின் வாசம் அடிப்பதைப் போலிருந்தது. முந்தானையை திரும்பத் திரும்ப மணந்து பார்த்தாள்… காலுறையும், கையுறையும் அணிந்து கண்ணாடியில் ஒருமுறை பார்த்தாள். மணக்கோலம் மனதில் நிழலாடியது. கையில் சுற்றிவிட ஒரு செபமாலை, வாசனைத் திரவியம் என அருகில் எடுத்து வைத்துக் கொண்டு கட்டிலில் படுத்தாள்.

மார்போடு அணைத்திருந்த யானையைப் பார்த்தாள்… அதன் தலையைத் தடவினாள்…. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது… அதில் ஒட்டப்பட்டிருந்த துண்டில் எழுதிக்கிடந்தது “இன்றே அடக்கம் செய்யவும்”.

– பிரசுரமான இதழ்: காக்கைச்சிறகினிலே சிற்றிதழ் 06/2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *