கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 26,104 
 

கண் முன்னே அந்த இசைத்தட்டு கீழே விழுந்து உடைந்துபோனது. ஷைலுதான் அதைத் தவறவிட்டுவிட்டாள். வேண்டும் என்றே அதை அவள் கீழே போட்டு உடைக்கவில்லை. ஏதோ ஒரு பொம்மையை எடுக்கப் போனவள், விளையாட்டாக இசைத்தட்டை கவரில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்திருக்கிறாள். திரும்ப வைக்கும்போது, கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது.

அப்பா அதனை எதிர்பார்த்திருக்கவில்லை. சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து ஓடி வந்தவர், பதற்றத்துடன் தரையில் உடைந்துகிடந்த அரக்கு இசைத்தட்டையே வெறித்துப் பார்த்தார்.

ஒற்றை முள்

அவருக்குள் கோபமும் வருத்தமும் ஒருசேர நிரம்பி இருந்ததை அவரது கண்கள் காட்டிக்கொடுத்தன. அப்பா தனது ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தியபடி, ”இதை யாரு எடுக்கச் சொன்னா?” என்று அழுத்தமான குரலில் கேட்டார்.

ஷைலு பயந்து நின்றிருந்தாள். தாத்தா இப்படி முறைத்துப் பார்ப்பது அவளுக்கு என்னவோ செய்தது. அவள் கைகள் நடுங்க, அழும் குரலில் ‘மம்மி…’ என சத்தமிட்டாள். சமையல் அறையில் இருந்து வெளிப்பட்ட நளினி உடைந்த இசைத்தட்டைப் பார்த்தபடியே, ”ஷைலு ஓரமா வந்து நில்லு… கால்ல குத்திடப்போகுது” என்றாள்.

அப்பா மருமகளைப் பார்த்து முறைத்தபடியே, ”இதை யாரு இங்கே கொண்டுவந்து வெச்சது; உன் வேலைதானா?” என்று கேட்டார்.

நளினிதான் அதை அப்பாவின் பையில் இருந்து வெளியே எடுத்து அலமாரியில் வைத்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டில் எலி செத்துப்போன துர்நாற்றம் வீசவே, ஓர் ஆளை வைத்து எங்காவது எலி செத்துக்கிடக்கிறதா எனத் தேடினார்கள். வேலையாள், கட்டிலுக்கு அடியில் தேடும்போது அப்பாவின் லெதர் பேக் இடையூறாக இருக்கிறது என்று படுக்கையின் மேல் வைத்துவிட்டுத் தேடினான். ஒரு சுண்டெலி, செருப்பு வைக்கும் ரேக்குக்குள் செத்துக்கிடந்தது கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. அப்பாவின் லெதர் பையை மறுபடி அவரது கட்டிலுக்குக் கீழே வைக்கும்போதுதான் நளினி அந்த இசைத்தட்டை வெளியே எடுத்துப் பார்த்தாள். தரை துடைக்கும்போது தண்ணீர் பட்டுவிடுமே என நினைத்து அதை ஷெல்ஃபில் கொண்டுபோய் வைத்துவிட்டாள்.

அது ஒரு பெரிய எல்.பி. இசைத்தட்டு. முகப்பு அட்டையில் பிஸ்மில்லா கான், ஷெனாய் வாசித்துக்கொண்டிருக்கும் படம். அதன் அடியில் சிவப்பு மசியில், ‘எனது அன்பளிப்பு, பி.வி.’ எனக் கையெழுத்து. அப்பா இந்த இசைத்தட்டை 40 வருஷமாக வைத்திருக்கிறார். வீடு மாறும் சமயங்களில் எல்லாம் அதைப் பாதுகாப்பாக தானே எடுத்துக்கொண்டு வருவார்.

அம்மா இறந்த பிறகு, அப்பா கிராமத்து வீட்டில் இருந்து எங்களுடன் வசிப்பதற்காக நகரத்துக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது பையில் இந்த இசைத்தட்டு இருந்தது. அப்பாவிடம் இசை கேட்கும் ரிக்கார்ட் ப்ளேயர் கிடையாது. பின்பு எதற்காக இந்த ஒற்றை இசைத்தட்டை வைத்திருந்தார் என்பது யாருக்கும் புரியாத புதிர்.

அப்பா, இசை கேட்பதில் ஆர்வம் கொண்டவர் இல்லை. கச்சேரிகளுக்குப் போயோ, ரேடியோவில் இசை கேட்டோ நான் பார்த்ததே இல்லை. யாராவது பாட்டு கேட்டுக்கொண்டிருந்தால்கூட, ‘என்ன எந்நேரமும் பாட்டு?’ என்று திட்டுவார். இப்படி இசையே பிடிக்காத அவருக்கு யார் அந்த இசைத்தட்டைப் பரிசாகத் தந்தார்கள் என்று தெரியவில்லை.

‘யார் பி.வி.?’ என்று ஒருமுறை அம்மாவிடம் கேட்டபோது, ‘எனக்கு எப்படித் தெரியும்?’ என்றாள். அப்பாவிடம் விசித்திரமான சில பழக்கங்கள் இருந்தன. நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைத்துவரக் கூடாது. இரவில் ஒன்பது மணிக்கு விளக்கை அணைத்துவிட வேண்டும். காலையில் எல்லோரும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். காசு கொடுத்து புத்தகம், நாளிதழ் எதுவும் வாங்கக் கூடாது. சாப்பிடும்போது பேசுவதோ, சிரிப்பதோ கூடவே கூடாது. இப்படி அவரது கட்டுப்பாடுகள் வீட்டை நரகமாக மாற்றிவைத்திருந்தன.

அப்பாவின் நண்பர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. எந்த நண்பரையும் வீட்டுக்கு அழைத்துவர மாட்டார். அவரைப் போலவே நாங்களும் நடந்துகொள்ள வேண்டும் என்பார்.

ஒருமுறை, சாந்தி அவளுடன் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருத்தியை ஹாஸ்டல் லீவு என்று வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள். அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்த இரவே அப்பா அவளிடம், ‘இங்கே ஒரு நாளைக்கு மேல் தங்க முடியாது. நீ ஊருக்குக் கிளம்பு!’ என்று முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டார். இதற்காக சாந்தி கேவிக்கேவி அழுதாள்.

அப்பா, தன் வீட்டு மனிதர்கள் எவர் அழுவதையும் ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. அவரும் எதற்கும் அழ மாட்டார். அவரிடமிருந்து கண்ணீரைக் காண்பது அபூர்வம். அம்மா இறந்தபோதுகூட முகம் வருத்தமாக மட்டுமே இருந்தது. கண்களில் நீர்ப் பொங்கி வரவில்லை. மணி மாமாதான் சொல்வார். ‘உங்கப்பா மனசு கல்லுடா, அதுல ஈரத்தைப் பார்க்கவே முடியாது. நீ பிறக்குறதுக்கு முன்னாடி ஓர் ஆம்பளைப் பையன் பிறந்தான். அவன் பிறந்த ரெண்டு நாள்ல செத்துப்போயிட்டான். தலைப்பிள்ளை செத்துப்போச்சேனு வீடே அழுதுட்டு இருந்துச்சி. ஆனா, உங்கப்பா கலங்கவே இல்லை. ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்கனு சொல்லி வேலை பார்க்கப் போயிட்டார். விநோதமான ஜென்மம் உங்கப்பா. பாவம் உங்கம்மா; இவர்கூட 32 வருஷம் ஒண்ணா வாழ்ந்திருக்கா. எத்தனை நாள் எவ்வளவு அழுதுருப்பா? யார்கிட்டயும் உங்கம்மா ஒரு புகார்கூட சொன்னது கிடையாது. வைராக்கியமான பொண்ணு!’

அப்பா அப்படித்தான். அவருக்கு மென் உணர்வுகள் கிடையாது. தேர்ந்த ரசனை எதுவும் கிடையாது. முகத்துக்கு நேராக ஏசிவிடுவார். மூக்குக்கு மேல் கோபம் இருக்கும். மழை பெய்யும் இரவில்கூட அம்மாவை துவையல் அரைக்கச் சொல்லிக் கத்துவார். மழையின் ஊடே நனைந்தபடியே அம்மா முதுகு நனைய, முகத்தில் மழை தண்ணீர் வழிய அம்மிக் கல்லில் துவையல் அரைத்துத் தருவாள். ‘ஈரத் தலையைத் துவட்டிக்கொள்’ என்று ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டார் அப்பா.

இப்படி ரசனையே இல்லாத மனிதர் எதற்காக ஓர் இசைத்தட்டை இத்தனை வருடங்கள் தூக்கிக்கொண்டு அலைகிறார் என்று எனக்கே ஆத்திரமாக இருக்கும்.

முன்பு எப்போதோ ஒருமுறை மரச் சாமான்கள் விற்கும் கடைக்குப் போயிருந்தபோது, அழகான ரிக்கார்ட் ப்ளேயர் ஒன்றைப் பார்த்தேன். வாங்கி பாட்டு கேட்கலாம் என்று நினைத்து அப்பாவிடம் சொன்னேன்.

”அதெல்லாம் வீண் செலவு. இப்போ யாரு ரிக்கார்டுல பாட்டு கேட்குறா? அதான் சி.டி. வந்துருச்சே!” என்றார்.

”பின்னே, நீங்க மட்டும் எதுக்கு ஒரு ரிக்கார்டை கூடவே வெச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டேன்.

”இது வெறும் ரிக்கார்டு இல்லே. உசந்த ஒரு ஆளோட பரிசு. அதைத் தொலைச்சிட்டா நான் உயிரோட இருந்து பிரயோஜனமே இல்லை” என்றார்.

ஒற்றை முள்2

அப்பா அதைச் சொன்னபோது, அவரது கண்கள் நெகிழ்ந்துபோயிருந்தன. இதயத்தின் ஆழத்திலிருந்து அதைச் சொல்கிறார் என்பதை, அவரது குரல் காட்டித்தந்தது.

ஒருமுறை, ‘உங்க அப்பா ரிக்கார்டை எடுத்துக் கொண்டுபோய் தேரடித் தெருவில் இருந்த சலூன் ப்ளேயரில் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார்’ என்று கல்யாண வீட்டில் வைத்து ரங்கசாமி பெரியப்பா சொன்னது மனதில் இருக்கிறது.

இசை கேட்பதை ஏன் ரகசியமாகச் செய்ய வேண்டும்? ஒருவேளை இந்த இசைத்தட்டைத் தந்தது யாராவது ரகசியக் காதலியாக இருக்கலாமா? என்றும் யோசித்திருக்கிறேன். அப்பாவுக்கு பெண்களுடன் பேசுவதே பிடிக்காது. இதில் எப்படி அவருக்கு ரகசியக் காதல் இருந்திருக்கப் போகிறது? வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மனதைத் தேற்றியிருக்கிறேன்.

அப்பா உடைந்துபோன அந்த இசைத்தட்டை தானே கையில் அள்ளி எடுத்து குப்பைக்கூடையில் போட்டுவந்தார். இசைத்தட்டின் கவரை கையில் வைத்துப் பார்த்தபடியே மௌனமாக உட்கார்ந்திருந்தார். அவரது முகம் இறுகிப்போய் இருந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.

”சின்னப்பிள்ளை… ஏதோ விளையாட்டா செஞ்சிருச்சி… விடுங்கப்பா!” என்றேன்.

”எதுல விளையாடுறதுன்னு தெரிய வேணாமா?” என்று முறைத்தபடியே கேட்டார்.

அதைக் கேட்டதும் நளினிக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.

”உங்க ரிக்கார்டை வேணும்னு ஒண்ணும் உடைக்கலை” என்றாள்.

”எப்படியோ உடைச்சிப் போட்டுட்டீங்கள்ல… இனிமே பேசி என்ன ஆகப்போகுது?” என்று கடிந்த குரலில் சொன்னார்.

”அந்த ரிக்கார்டை நீங்க கேட்குறதுகூட இல்லே. பழைய ரிக்கார்டுதானப்பா, அதுக்குப் போய் ஏன் இப்படிப் பேசுறீங்க?” என்று கேட்டேன்.

”அது வெறும் ரிக்கார்டு இல்ல, என்னையும் மதிச்சிக் கொடுத்த பரிசுடா. இத்தனை வருஷமா அதைப் பாதுகாக்க எவ்வளவு அரும்பாடுபட்டிருக்கேன் தெரியுமா? ஒரு நிமிஷத்துல உடைச்சிப்புட்டீங்களே!” என்று ஆற்றாமையுடன் சொன்னார்.

”குழந்தைக்கு அது எப்படிப்பா தெரியும்?” என நானும் கடுமையான குரலில் கேட்டேன்.

”அப்படி பிள்ளைகளை லட்சணமா வளர்த்து வெச்சிருக்கீங்க” என்று கடுகடுத்த குரலில் சொன்னார்.

”நீங்க எங்களை வளர்த்ததைவிட நல்லாத்தான் வளர்த்துக்கிட்டு வர்றோம்” என்றேன்.

”ஆமாப்பா… நான் என் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமத்தான் வளர்த்தேன். நான் கோட்டிக்காரன்தான். நீயும் உன் பொண்டாட்டியும் என்னைவிட படிச்சவங்க; கை நிறைய சம்பாதிக்கிறவங்க. அதான் ரொம்பப் பொறுப்பா பிள்ளையை வளர்க்குறீங்க…” என்றார்.

”சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. மனுச மக்க யாருமே வேணாம்னு நினைக்குற ஆளு நீங்க. நம்ம வீட்ல யாராவது ஒருத்தர் மேல உங்களுக்கு பாசம் இருக்கா? பெத்த பிள்ளைகக்கிட்டயே குடுத்த காசுக்கு வட்டி கேட்குற ஆள் நீங்க…” என்றேன்.

”ஆமா, நான் அப்படித்தான். நீங்க எல்லாம் பெருந்தன்மையா, கொடை வள்ளலா வாழுங்க. உங்களை யாரும் தடுக்கலை. ஆனா, இப்படி குருவி சேக்குற மாதிரி சேத்த காசுலதான் உங்களைப் படிக்கவெச்சி உண்டாக்கி விட்டிருக்கேன். பெத்த பிள்ளைக மேல எனக்குப் பாசம் இல்லாமப் போயிருந்தா, நீங்க தெருவுலதான் திரிஞ்சிருக்கணும்” என்றார்.

”என்னை ரொம்பப் பேச வெக்காதீங்க. எத்தனை நாள் வீட்ல அரிசி வாங்க காசு இல்லாம பிரகாசம் சார் வீட்ல போயி அஞ்சு, பத்து கடன் வாங்கிட்டு வரச்சொல்லி அம்மா என்னை அனுப்பிருக்கும் தெரியுமா? பிரகாசம் சார் மகன் என்கூடப் படிக்கிறவன். அவன் வீட்டு வாசல்ல போயி நிக்கக் கூச்சமா இருக்கும். 10 ரூபா கடன் கொடுக்குறதுக்கு முன்னால பிரகாசம் சார் கேவலமா என்னைப் பாப்பார். அந்தக் கடனை எல்லாம் நீங்க ஒண்ணும் அடைக்கலைப்பா. அம்மாதான் வீட்ல ஊதுவத்தி உருட்டி அடைச்சா. இதுல ‘அடுத்த வீட்ல போயி ஏன்டி கடன் வாங்குற?’னு அம்மாவை எத்தனை நாள் அடிச்சிருக்கீங்க? அவ இல்லேன்னா, நாங்க எப்பவோ அநாதைகள் ஆகியிருப்போம்பா” என சொன்னேன்.

”ஆமா, நான் வேண்டாதவன்தான். உங்கம்மா அப்படி பிள்ளைக மனசுல விஷத்தை ஊத்திவெச்சிட்டா. நான் ஒருத்தருக்கும் பிரயோஜனம் இல்லாம வாழ்ந்துட்டேன். அப்படியே செத்தும் போயிட்டா, உங்க எல்லாருக்கு நிம்மதியா இருக்கும்” என்றார்.

”நிச்சயமா நீங்க செத்துப்போனா, எங்க யாருக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் வராது” என்றேன்.

அப்பா அமைதியாகக் கேட்டபடியே சொன்னார்… ”அது எனக்குத் தெரியும். நான் அதுக்காக ஒண்ணும் கவலைப்படலை. நான் அப்படித்தான். நான் உன் அப்பன். எனக்கு அந்த உரிமை எப்பவும் இருக்கும்.”

ஒற்றை முள்3

”ஏம்ப்பா புரிஞ்சிக்கிடவே மாட்றீங்க?” என்று ஆதங்கமான குரலில் கேட்டேன்.

”நான் யாரு உங்களைப் புரிஞ்சிக் கிடுறதுக்கு? படிச்சிட்டா, பிள்ளைக அப்பனைவிட பெரிய ஆள் ஆகிட்டதா நினைக்குறீங்க” என்றார்.

”உங்ககூட பேசுறதே வேஸ்ட்ப்பா” என்றேன்.

அப்பா, இசைத்தட்டின் கவரை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். அன்றைய பகல் முழுவதும் ஷைலு பயந்துபோயிருந்தாள். நளினிக்கு, அப்பா மீது ஏகப்பட்ட கோபம். வார்த்தைக்கு வார்த்தை அவரைத் திட்டிக்கொண்டு இருந்தாள். அப்பா மதிய சாப்பாட்டுக்குக்கூட கதவைத் திறக்கவில்லை.

இரவு ஒன்பது மணியிருக்கும்போது கதவைத் திறந்து வெளியே வந்தார். தனது லெதர் பையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது நளினியிடம் சொன்னார்…

”ஷைலுகிட்ட குடுத்து இதையும் கிழிச்சிப்போடச் சொல்லு. இனிமே இதைவெச்சி என்ன செய்யப்போறேன்?” என காலியான இசைத்தட்டின் கவரை நீட்டினார்.

நளினி ரௌத்திரம் வந்தவளைப் போல வாசலில் வைத்து அப்பாவைக் கண்டபடி பேசினாள். அப்பா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, இசைத் தட்டின் கவரை வாசற்படியிலேயே போட்டுவிட்டுக் கிளம்பிப் போனார்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அப்பா உடல்நலமில்லாமல் ஊரில் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. அப்பாவின் சாவுக்காக பிள்ளைகள் ஒன்றுகூடியபோதும் எல்லோரும் அப்பாவின் பிடிவாதத்தை, கோபத்தை, முரட்டுத்தனத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.

அப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்த சலூன் கருப்பையா என்னைத் தனியே அழைத்துச் சொன்னார்…

”உங்கப்பா ஒரு ரிக்கார்டைக் கொண்டுவந்து கடையில போட்டு, ஆசை ஆசையாக் கேட்பார். அற்புதமான இசை. நான்கூட கேட்டிருக்கேன். அதைக் கேட்கும்போது மனசு என்னமோ மாதிரி ஆகிரும். தொண்டையில வலிக்கும். நம்மை மீறிக்கிட்டு அழுகை வர்ற மாதிரி இருக்கும். பல நாள் ராத்திரி சலூனை மூடும்போது உங்கப்பா வந்து ரிக்கார்டைக் குடுத்துப் போடச்சொல்லுவார். நாங்க ரெண்டே பேர். ஒரு குண்டு பல்பு எரியும். அதுக்குக் கீழே உக்காந்து மாறிமாறி அதே ரிக்கார்டைப் போட்டுக் கேட்போம். அந்த நேரம் உங்கப்பா முகத்துல அபூர்வமான சாந்தம் இருக்கும். அவர் தன்னை மீறி அழுது பார்த்துருக்கேன்.

ஒரு நா, ‘இந்த ரிக்கார்டுல ‘பி.வி.’னு பேர் போட்டிருக்கே, அது யாருய்யா?’னு கேட்டேன்.

‘அது என் பொண்டாட்டி பங்கஜவல்லி. சுருக்கமா ‘பி.வி.’னு போட்டுருக்கா. இந்த ரிக்கார்டு, எங்களோட முதல் வருஷக் கல்யாண நாளுக்கு அவ கொடுத்த கிஃப்ட். நான் ஒரு முட்டாப் பய. இதோட அருமை தெரியாம, ‘இதை வாங்குறதுக்கு உனக்கு ஏதுடி காசு? வீட்ல திருடினயா, இல்லே ஊர் மேயப்போனியா?’னு கேட்டுட்டேன். பதிலுக்கு அவ ஒரு வார்த்தை பதில் பேசல.

அவளுக்கு சின்ன வயசுல இருந்தே பாட்டு கேட்குறதுன்னா ரொம்ப இஷ்டம். அந்த ஆசையில இந்த எல்பி ரிக்கார்டை எனக்கு வாங்கிக் குடுத்துருக்கா. ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து இசை கேட்கணும்னு அவளுக்கு ஆசை. ஆனா, நான் அதைப் புரிஞ்சிக்கிடவேயில்லை.

என் கோவத்துல அவ பாட்டு கேட்குற பழக்கத்தையே அடியோட விட்டுட்டா. என்கூட பேசுறதும் குறைஞ்சிப் போச்சி. பேருக்குத்தான் நாங்க கணவன்-மனைவியா வாழ்ந்தோம். குணக்கேடனா இருந்த என்னையும் மதிச்சி ஒரு பரிசு கொடுத்திருக்காளேனு இதைப் பத்திரமா வெச்சிருக்கேன். என் மேல அவளுக்கு இருந்த அன்புதான் இந்த ரிக்கார்டு. நான் இந்த ரிக்கார்டு மேல சுத்துதே முள்ளு, அது மாதிரி. ரிக்கார்டு மேல சுத்துற முள்ளுக்குத் தெரியுமா இசையோட மகத்துவம். பல நேரம் ஏன் இப்படி இருக்கேன்னு என்னைத் திருத்திக்கிட நினைப்பேன். ஆனா, சுபாவம் அதுக்கு இடம் கொடுக்காது.

எப்போதாவது பொண்டாட்டியோட அன்பை நினைச்சிக்கிடும்போது, அவகிட்ட சிரிச்சிப் பேசணும்னு தோணும். ஆனா, வீண் பிடிவாதம் இடம் குடுக்காது. அப்போ எல்லாம் இந்த ரிக்கார்டைத் தூக்கிட்டு இங்கே வந்து கேட்டுக்கிட்டு இருப்பேன். இந்த உலகத்துல பொண்டாட்டி குடுக்கிற பரிசை மதிக்கத் தெரியாதவன், என்னை மாதிரி உருப்படாமத்தான் போயிருவான்.’

இப்படி உங்கப்பா சொல்லும்போது அவர் குரல் கம்மிப்போனது இப்போகூட எனக்கு நினைப்பு இருக்கு தம்பி” என்றார் சலூன் கருப்பையா.

கூடவே வாழ்ந்த ஒரு பெண்ணிடம் அன்பைக் காட்டாமல், அவள் தந்த இசைத்தட்டைப் பாதுகாத்துவைத்து அடிக்கடி கேட்டு அழுத அப்பாவை, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அந்த இசைத்தட்டின் கவரைத் தொலைக்காமல் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. காரணம், அதில்தான் அம்மாவின் தூய அன்புக்கான சாட்சிபோல அவளது கையெழுத்து உள்ளது.

அம்மா தன் பெயரைச் சுருக்கி ‘பி.வி.’ என எழுதியிருப்பது எவ்வளவு வசீகரமாக இருக்கிறது. பகிர்ந்துகொள்ளப்படாத அம்மாவின் அன்பை நினைத்தபோது என்னை அறியாமல் கண்கள் ததும்பின.

அப்பா இறந்துபோனதற்காக நான் அழுகிறேன் என்று நினைத்துக்கொண்ட மாமா சொன்னார், ”நம்ம கைல என்னப்பா இருக்கு?”

அந்த வாசகம், என் அழுகையை மேலும் அதிகப்படுத்தியது!

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *