ஒரு ராக தேவதையின் கதை

 

பழைய பெட்டிகளை சிவராமன் குடைந்து கொண்டிருந்தான் .

பரணை ஒழிக்க நேர்ந்தபோது கிடைத்த பொக்கிஷம்.

பூட்டப்பட்டுக் கிடந்த தன் தந்தையின் பழைய லெதர் சூட்கேஸைப் பார்த்தான். ஒவ்வொரு தரமும் இதைப் பார்க்கும் போது பெட்டியைத் திறக்க நினைப்பான். ஆனால் சாவி இல்லாததால் அந்த எண்ணம் தடைபட்டுக் கொண்டே இருந்தது.

ஒரு ராக தேவதையின் கதைஇன்று வேறு வழியில்லை. திறந்துதான் ஆகவேண்டும்.

இவன் மனைவி சில பழைய பண்டங்கள், உடைந்த நாற்காலிகள், ப்ளாஸ்டிக் டீப்பாய்கள், பழைய இரும்புப் பெட்டிகள் என்று ஒரு பழைய சாமான்கள் லிஸ்டே வைத்திருந்தாள். இவர்களுக்குத் தெரிந்த முஸ்லீம் பாய் ஒருவர் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்.

“”அந்த உடைசல் பொட்டியிலே என்ன இருக்கு? ஹரப்பா மொகஞ்ச தாரோ பொக்கிஷமா? அது எங்கப்பா சொத்துன்னு சொல்லி குப்பையைச் சேத்துக்காம தூக்கி எறியுங்க”

இவன் மனைவியின் திருவாசகம். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசசகத்திற்கும் உருக மாட்டார்களாமே? இது இவன் மனைவியின் வாசகம்.

மறுப்பு சொல்ல முடியாத மனைவி வாசகம்.

இவன் ஒரு சுத்தியலை எடுத்துப் பெட்டியின் பூட்டை உடைத்தான்.

பல வருடங்களாகப் பூட்டப் பட்டுக் கிடந்த அந்தப் பெட்டி வாய் திறந்தது.

லெதர் இற்றுப் போய் பரணின் தூசியும் பெட்டியின் தூசியும் சேர்ந்து இவன் நாசிக்குள் நுழைந்து தும்மலைத் தோற்றுவித்தது.

இவன் தும்ம, இவன் மனைவி தும்ம, திரும்பவும் இவன் தும்ம என்று தும்மிக் கொண்டே இருந்தான்.

சந்திரமுகி சினிமாவில் அந்தப் பழைய அரண்மனை பங்களாவில் நுழைய ஜோதிகா கதவைத் திறக்கும் போது ஒரு பயங்கர ஓசை கேட்குமே, அதேபோல் ஒரு பெரிய “க்ரீச்’ ஒலி. பெட்டி திறந்தது.

ஏதேதோ பழைய கடிதங்கள்… பழைய புகைப்படங்கள் அத்துடன்… ஒரு கிரயப் பத்திரம்… இவன் தந்தை விஸ்வநாதன் இருபது வருடங்களுக்கு முன் இவர்கள் திண்டுக்கல்லில் வாழ்ந்தபோது வாங்கப்பட்ட ஒரு வீட்டின் நிலத்தோடு வாங்கிய கிரயப் பத்திரம்… தேதி, சாட்சிக் கையெழுத்து, வில்லங்க சர்ட்டிபிகேட் எல்லாம் பக்காவாக. வக்கீல் ஒருவரின் பரிந்ததுரையுடன் கூடிய யாரோ கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து அப்பா வாங்கிய வீட்டு பத்திரம். அப்பா அந்தக் காலத்தில் வாங்கிய சொத்து. அப்பா இதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை?

இவன் வாழ்ந்த இடம் திண்டுக்கல் புதூர் பாலகிருஷ்ணாபுரத்தில். அந்தப் பழனி ரயில்வே

லைனுக்குப் பக்கத்தில் பத்தே வீடுகள் கொண்ட அந்தப் பகுதியில் ஒரு வீடு இவர்கள் வீடு. இவன் வாழ்ந்த வீடு.

அந்தத் தெருவின் மையத்தில் சிறிய பிள்ளையார் கோவில் உண்டு. அரசமரத்தடி பிள்ளையாரை யாரோ ஒரு சிறு கோவில் எழுப்பி அமர வைத்திருந்தார்கள்.

அந்தப் பிள்ளையார் அனைவருக்கும் சொந்தம்.

காசியில் இருப்பது போல் அனைவரும் அவரைத் தொடலாம். அர்ச்சிக்கலாம். தொட்டு வணங்கலாம்…

இவன் கூட சில நாட்கள் தேர்வு சமயத்தில் அந்தப் பிள்ளையாருக்குத் தோப்புக் கரணம் போட்டிருக்கிறான், தேங்காய் வடல் போட்டிருக்கிறான்.

இவர்கள் அந்த ஊரை விட்டு வந்த பிறகு எல்லாமே மறந்து போன நினைவுகள். கடந்த காலங்கள்…

இன்று அந்தக் கடந்த காலம் காட்சி தருகிறது.

ஒரு வீடு ஒரு கிரவுண்ட் இடம் இருக்குமா?

இன்றைய விலையில் எத்தனை லட்சம் பெறும்?

அப்பா வைத்த புதையல் தனம்.

இவன் மகன் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுகிறான்.

மகள் மாதங்கி கல்லூரியில் சேரத் தயாராகக் காத்திருக்கிறாள்.

விலைவாசி ஏற்றம், குடும்பச் சூழ்நிலை, அடிக்கடி மனைவியின் நகைகள் காணாமல் போகும்.

இந்த நிலையில் எப்படிப்பட்ட அதிர்ஷ்டம்?

“”இப்பவே கிளம்பிப் போங்க. நானும் கூட வரட்டா?”

“”வேண்டாம்.. முதல்லே நான் பத்திரத்தோட போறேன். டாக்மென்ட்ஸ் பத்தி ரிஜிஸ்தார் ஆபீஸிலே ஆளை வைச்சு விசாரிக்கறேன். இருபது வருஷமா எந்தத் தகவலும் இல்லை. யாராவது பினாமி பேர்லே யார் யார் இருப்பாங்களோ? ஏதாவது அரசியல் கட்சி அங்கே ஆக்கிரமிப்பு நடத்தாம இருக்கணும். இதெல்லாம் தெரியாம நீ வர வேண்டாம். முதல்லே நான் கிளம்பறேன்”

கிளம்பினான். குடும்பமே இவனுக்கு “டாடா’ சொன்னது.

புதையலோடு வரப் போகிற அந்தக் குடும்பத் தலைவனை வரவேற்க அந்த வீடே காத்திருந்தது.

“”கஷ்டம் வந்தப்ப எல்லாம் என் நகைகளைத் தந்திருக்கிறேன். பணம் வந்தா முதல்லே இந்தக் கவரிங் நகைகளை வீசி எறிஞ்சுட்டு நல்ல நகை வாங்கிக்கணும். தங்கம் என்ன விலை வித்தாலும் சரி” மனைவி நினைத்தாள்.

மாதங்கி நினைத்தாள்.

“”காலேஜ் போக நல்ல டிரஸ்úஸ இல்லை. முதல்லே நல்ல சுடிதார் செட்டா ஒரு டஜன் வாங்கணும்”

மகன் நினைத்தான்.

“”இன்ஜினியரிங் முடிச்சு எம் எஸ் பண்ண ஸ்டேட்ஸ் போகணும்”

கனவுகள் கற்பனைகள்…

இதோ இந்த ஊர்தான் இந்த இடம்தான். இவன் தவழ்ந்த மண்.

திண்டுக்கல் மலைக் கோட்டையை ரயிலில் வரும் போதே பார்த்து தரிசித்துவிட்டான்.

இவன் படித்த பள்ளியில் ஒரு முறை இவர்களை திண்டுக்கல் மலைக் கோட்டையைப் பார்க்கக் கூட்டிச் சென்றார்கள்.

கட்ட பொம்மனின் தம்பி ஊமைத் துரை இங்கு தான் தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு சொன்னார்கள்.

அபிராமி அம்மன் கோவிலும் மலைக் கோட்டை ஆஞ்சனேயர் கோவிலும் அப்படியே இருந்தன. ஊர் எத்தனையோ மாறி இருந்தாலும் சில அடிப்படை அடையாளங்கள் அப்படியே இருந்தன.

இவன் படித்த செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பஸ் ஸ்டாண்ட். கடை வீதிகள். மற்றபடி பெரிய பெரிய ஹோட்டல்கள் வந்துவிட்டன. ஏஸி ஹோட்டல் பார் அட்டாச்ட். இன்று நிறைய ஆட்டோக்களும் டாக்ஸிகளும் ஓடிக் கொண்டிருந்தன.

பாலகிருஷ்ணாபுரத்திலிருந்து டவுனுக்கு வர இவர்களுக்கு அன்று கிடைத்தது குதிரை வண்டிகள்தான்.

ஒரு ஆட்டோ பிடித்தான்.

ஆட்டோக்காரருக்கு இவனே வழி சொன்னான்.

முன்பு ஐந்து கட்டிடம் என்று சொல்லப் பட்ட இடத்தில் இப்போது பல கட்டிடங்கள் முளைத்திருந்தன.

ஆனாலும் வழி அதே தான். இதோ இந்தப் பாதை தான்.

ரேஸ் கோர்ஸிலிருந்து ஒரு பாதை தனியே பிரிந்து புதூர் பாலகிருஷ்ணாபுரத்திற்குச் சென்றது. அதே வழி தான்.

பிள்ளையார் இன்றும் இருக்கிறார்.

இவர்கள் வீடு புதிய தோற்றத்தில் காட்சியளித்தது.

இன்னும் நிறைய வீடுகள் முளைத்திருந்தன.

கடைகள் காட்சியளித்தன.

அவன் ஆட்டோவை நிறுத்தினான். பிள்ளையாரை வணங்கினான்.

“”உனக்கு எத்தனை முறை தோப்புக் கரணம் போட்டிருக்கிறேன்”. எத்தனை முறை உன்னை வலம் வந்திருக்கிறேன். ஏனோ அந்த மண்ணில் நடக்க வேண்டும் போல் தோன்றியது. இவன் விளையாடிய இடம் கண்ணாமூச்சி விளையாட்டு சடுகுடு.

எத்தனை எத்தனை நிகழ்வுகள்.

அதே ரயில்வே லைன்.

முன்பு ரயில் வரும் நேரத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பயணிகளைப் பார்த்துக் கையசைப்பான். சிலபேர் பதிலுக்குக் கையசைப்பதும் உண்டு. அப்போது அனைவரும் ஒரே குரலில் “ஓ’ வென்று கத்துவார்கள். பழைய நினைவுகள்… இவன் பார்த்துக் கொண்டே நடந்தான். நிறைய வீடுகள். அதில் இவன் தந்தை வாங்கி இருப்பது எந்த வீடு? யாரிடம் கேட்பது?

அதோ அதோ ஒரு தனி வீடு. கொஞ்சம் பராமரிப்பின்றி, அநேகமாய் பாழடைந்த நிலையில் ஒரு டெரஸ் வீடு. பெயிண்டின் நிறம் மாறி இவன் அதன் அருகே போனான், வாசலில் ஓர் உடைந்த போர்ட். கிருஷ்ணசாமி சிரசாஸனம் செய்து கொண்டிருந்தார்.

சந்தேகமே இல்லை இந்த வீடு தான்.

சுற்றிலும் இருந்த நிலத்தில் சில பூஞ்செடிகள் காய்ந்து கிடந்தன காய்ந்த சருகுகள் குப்பையாய்க் கிடந்தன.

எதற்காக இப்படி ஒரு வீட்டை இவன் தந்தை வாங்கினார் என்றே புரியாமல் காலிங் பெல்லை அமுக்கினான்.

மணி வேலை செய்யவில்லை. எல்லாமே ஒரே அழகு தான்.

இவன் கதவைத் தட்டினான்.

யாரோ நடந்து வரும் சப்தம். காத்திருந்தான்.

கதவு திறந்தது.

ஒரு மத்திம வயதுப் பெண்மணி கதவு திறந்தாள்.

“”நான் சிவராமன்…”

அவள் இவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

“”சொல்லுங்க”

“”கிருஷ்ணசாமிங்கிறது?…”

“”இந்த வீடு தான்”

“”அவர்?..”

அவள் தன் கைகளைச் சற்றே உயர்த்திக் காட்டினாள்.

அவள் காட்டிய இடத்தில் சுவரில் கிருஷ்ணசாமி மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் கவனித்தான். அவள் கழுத்தில் தாலி இல்லை. நெற்றி வெறுமையாக இருந்தது.

“”ஸôரி”

“”பரவாயில்லை. என்ன விஷயமா வந்தீங்க?”

தன் தந்தையும் கிருஷ்ணசாமியும் எடுத்துக் கொண்ட பழைய புகைப் படத்தை ஆல்பத்திலிருந்து பிய்த்து எடுத்துக் கொண்டு வந்திருந்தான். இது தான் சாட்சி.

“”இந்த இடத்தை எங்கப்பா வாங்கி இருக்கார். இப்பத் தான் பத்திரம் கிடைச்சது… இந்த இடம் எங்க அப்பாவுக்குச் சொந்தமானது. நான் அவரோட மகன் சிவராமன்”

அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“”நீ நீங்க விஸ்வநாதனோட மகனா?”

“”ஆ..மா எங்க அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?”

அவள் சற்று நேரம் பேசாமல் இருந்தாள்.

கிருஷ்ணசாமி என் சகோதரன். அவனோட நண்பர் தான் உங்க அப்பா. என் புருஷன் இறந்த பிறகு நான் என் அண்ணன் வீட்டோட வந்துட்டேன். என் குடும்பத்துக்காக என் அண்ணன் கல்யாணமே பண்ணிக்கலை. இந்த வீட்டை எனக்குத் தந்துட்டான். என் அண்ணா கடைசியிலே வியாதியிலே படுத்த படுக்கையாயிட்டான். மருந்துச் செலவு குழந்தைகள் படிப்புச் செலவு இந்த வீட்டு மேலே கடன் வாங்கி வாங்கி… உங்கப்பா தான் உதவினார். வீட்டு மதிப்பை விட கடன் தொகை அதிகம். கடைசியிலே இந்த வீட்டையே உங்க அப்பா பேருக்கு எழுதிக் கொடுத்துட்டான் அண்ணா ..உங்க அப்பாவோட நட்பு மட்டும் இல்லையானா… நாங்க எப்பவோ குடும்பத்தோட தற்கொலை செய்துட்டு இருப்போம். உங்கப்பா நல்லவர்”

“”எங்க அண்ணா இறந்தபிறகு உங்க அப்பாவுக்குத் தகவல் சொல்ல முயன்றேன். ஆனா விலாசம் தெரியல்லை. என்னிக்காவது யாராவது தேடி வருவாங்கன்னு தெரியும். அன்னிக்கு விவரம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்”

இவள் பேசப் பேச உள்ளே இருந்து ஒரு பெரிய கூக்குரல்.

“”என்ன ஆச்சு?”

ஓர் இளம் பெண் ஓடி வந்தாள்.

“”அம்மா இந்த சந்தியாவைப்பாரு சாப்பிட மாட்டேன்னு படுத்தறா”

“”இவ என் மூத்த மக உதயா. இளையவள் சந்தியா. அவளுக்குக் கொஞ்சம் மூளை வளர்ச்சி போறாது. வைத்தியம் பாக்க வசதி இல்லை. நான் டைலரிங்கிலே சம்பாதிக்கறேன். இவ உதயா முனிசிபல் பள்ளியிலே வேலை பாக்கறா. ஏதோ குடும்பம் ஓடுது…சந்தியா திடீர் திடீர்னு வீதிக்கு ஓடிடுவா. அதனால அவளைச் சங்கிலி போட்டுக் கட்டி வைச்சிருக்கேன். வீட்டை ஒரு பாதி வாடகைக்கு விடவும் பயமா இருக்கு தம்பி. ஆண் பிள்ளை இல்லாத வீடு. யாராவது மூளை சரியில்லாத பொண்ணை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு …..இந்த வீட்டை காலி பண்ண எனக்குக் கொஞ்சம் டயம் கொடுங்க தம்பி ”

அவள் பேசப் பேச “”ஐயா… ஐயா சங்கிலியைக் கழட்டிட்டேனே”

கத்தியபடி தலைவிரி கோலமாக கிழிந்த உடையில் ஓடி வருகிறாள் சந்தியா.

“”தம்பி அவளைப் பிடிங்க ரோட்டுக்கு ஓடிடுவா”

பெற்றவள் கத்த இவன் ஓடிப் போய் அவளைப் பிடிக்கிறான்.

அவள் தலை முடியைச் சரிசெய்து அவள் முகத்தை நிமிர்த்துகிறான்.

“அப்பா’.

இவனின் மெய் சிலிர்க்கிறது.

இவள் ஒரு ராகம். சந்தியா ராகம். ஜன்ய ராகம். அந்த ராக தேவதை இவனுள் அழுகிறாள்.

அவன் சந்தியாவின் கால் சங்கலிகளை அவிழ்க்கிறான்.

“”தம்பி அவ ஓடிடுவா… ஜாக்கிரதை”

இவன் மெல்லப் பேசினான்.

“”நீங்க காலி பண்ண வேண்டாம். இங்கேயே இருங்க. சீக்கிரம் வீட்டை ரிப்பேர் பணண ஏற்பாடு பண்றேன். சந்தியாவோட ட்ரீட் மெண்டுக்கும் ஏற்பாடு பண்றேன்”

“”தம்பி”

கையோடு கொண்டு வந்திருந்த அந்தக் கிரயப் பத்திரத்தை அவள் கைகளில் தருகிறான்.

இவன் மனைவி திட்டுவாள்.

பிழைக்கத் தெரியாதவன் என்பாள்.

இவன் பிழைக்கத் தெரியாதவனாக இருக்கலாம்.

காத்திருந்த ஆட்டோவில் ஏறுகிறான்.

பர்ஸிலிருந்த இவன் தந்தையின் படம் கீழே விழுகிறது. அதைக்குனிந்து எடுக்கும் போது அப்பா இவனைப் பார்த்துக் கைக் கூப்புவதைப் போல்…

ஆட்டோ வேகம் எடுக்கிறது.

- டிசம்பர் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: விமலா ரமணி. ‘தந்தி’ என்றதும் பகீர் என்றது பட்டுவுக்கு. தந்தியா? எனக்கா? யார் கொடுத்திருப்பார்கள்? என் விலாசம் யாருக்குத் தெரியும்? இவளை ஒதுக்கிய உறவுகளை விட்டு இவளே ஒதுங்கி வந்து அஞ்ஞாதவாசம் ஆரம்பித்து இருபது வருடங்களுக்கு மேலாகின்றன.  இவள் எதற்காக யாருக்காகக் ...
மேலும் கதையை படிக்க...
பார்வதிக்குப் பயம்! எதற்கெடுத்தாலும் பயம்... எதிர்மறை சிந்தனைகள் எப்போதும்! ஏதோ ஒரு பயம். இந்த 'போபியா'விற்கு என்னவென்று பெயரிடுவது? தண்ணீர் பற்றிய பயம் என்றால் 'ஹைட்ரோஃ போபியா!' இருட்டைப் பற்றிய பயம் என்றால் 'க்ளாஸ்ட்ரோ போபியா'... இப்படி பல பயங்கள்... இது பஞ்ச ...
மேலும் கதையை படிக்க...
வேலை
அலுவலகத்திலிருந்து சோர்வுடன் திரும்பிய தன் கணவனை சற்று திகைப்புடன் பார்த்தாள் மாலதி, தான் நினைத்தது நடந்து விட்டதா என்ன? ""என்னால இந்த ஆபீஸிலே வேலை செய்ய முடியாது. நேத்து வந்த பய எல்லாம் அதிகாரம் பண்றான். எனக்குக் கீழே இருந்தவன் எல்லாம் எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
பிறந்த நாள்
வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள். கலர் விளக்குகள் கண் சிமிட்ட.. "ஹேப்பி பர்த் டே டு நேத்ரா' என்கிற ஆங்கில தர்மாகோல் வாசகங்கள் பளிச்சிட... "ஓ இன்று நேத்ராவின் பிறந்த நாள்'. கற்பகத்தின் மகள் நேத்ரா. பன்னிரண்டாம் ஆண்டு பிறந்த நாள். குறிஞ்சி மலர் ...
மேலும் கதையை படிக்க...
பூநாகம்
நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன் நந்திவர்மன் அமர்ந்திருந்தான்.அப்போது வாயில் காப்போன் வந்து, திருமுனைப்பாடி சிற்றரசர் நரசிங்கமுனையார் வந்திருப்பதாகக்கூற, வரச்சொல்லி ஆணையிட்டபின் திருமுனைப்பாடியார் வந்தார்.   ‘‘வாருங்கள் திருமுனைப்பாடியாரே... என்ன ...
மேலும் கதையை படிக்க...
நாராயண அய்யர் அந்த முதியோர் இல்லத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. மனம் எதிலும் ஒட்டவில்லை. 'டார்மெட்டரி' யின் மற்ற உறுப்பினர்களோடு கலந்து கொள்ள முடியாத ஒரு அசெளகரியம். தன்னைத் தனிமைப்படுத்தியதுதான் அதிகப்படியான ஈகோவா? நாராயணனுக்குத் தெரியவில்லை. எப்போதும் தான் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: விமலா ரமணி "ஷிவாங்கி" விஜயா இரைந்து கூப்பிட்டாள். "கம்மிங் மம்மி" - கத்தியபடியே ஷிவாங்கி, அறையிலிருந்து வெளிப்பட்டாள். வாவ்! விஜயாவிற்க்குத் தன் மகளைப் பார்த்தபோது, தன் கண்களே பட்டுவிடும்போல், தோன்றியது. பத்திரிகைகளாக இருந்தால், 'இருபது வயதுப் புயல்' என்பார்கள். 'காதல் சூறாவளி' என்பார்கள். ...
மேலும் கதையை படிக்க...
வா… சுகி!
இவள் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் எகக் கூட்டம் விபத்தா? ஊர்வலமா? மேடைப் பேச்சா? வேடிக்கை பார்க்கும் இந்தக் கூட்டத்துலு நிச்சயமாக ஓர் அறிவு ஜீவி ஒளிந்திருப்பான்.ஆட்டோ நின்றுவிட்டது. ஆட்டோ ஓட்டுநர் விசாரிக்க இறங்கிப் போனார். இவள் ...
மேலும் கதையை படிக்க...
காதல் மொழி விழியா? விலையா?
ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கீழே இருந்த காபி ஷாப்பில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. இவள் ...
மேலும் கதையை படிக்க...
அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று பாயஸமோ, சர்க்கரைப் பொங்கலோ, இல்லை ஏதாவது ஒரு சித்ரான்னமோ படைப்பாள். பயபக்தியாகக் கற்பூர ஆரத்தி வரை காத்திருந்து, பட்டாபிஷேக ராமருக்கு ...
மேலும் கதையை படிக்க...
சாமரங்கள்
பயம்
வேலை
பிறந்த நாள்
பூநாகம்
ஆபத் சந்நியாசம்
பதிவுகள்
வா… சுகி!
காதல் மொழி விழியா? விலையா?
கண்டேன் ராகவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)