ஒரு மனுசி

 

அம்மணியம்மா ஆப்பக் கடையிலிருந்து கொலையே நிகழ்வது போன்ற பெருங் கூச்சல் எழுந்து, சேகரின் தூக்கத்தைக் கலைத்தது. அவன் எழுந்து, பாயில் அமர்ந்து கண்களைக் கசக்கிவி்ட்டுக் கொண்டான் கண்கள் எரிந்தன. இடுப்பில் தொங்கி வழிந்த கைலியைச் சரி செய்துகொண்டான். கையை ஊன்றிக் கொண்டு எழுந்தான். தலை சுற்றுவதுபோல் இருந்தது. முந்தின இரவு சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. கூஜாவில் இருந்து தண்ணீர் கவிழ்த்துக் குடித்தான். வயிறு குளிர்ந்ததுமாதிரி இருந்தது. ஆணியில் மாட்டியிருந்த சட்டைப்பையைத் துழாவினான். ஒரு சார்வினார் சிகரெட்டும் முப்பத்தஞ்சு பைசாவும் இருந்தன. சட்டைப்பைக் கொண்டு, சட்டையையும் மாட்டிக்கொண்டு கிழே இறங்கி வந்தான்.

“நாலு ஆப்பம் குடுன்னா, பெரிசா கிராக்கி பண்ணிக்கறியே நாளைக்குக் கடை வைக்க மாட்டே…“ என்று சொல்லிக் கொண்டிருந்தான் காளி, அம்மணியம்மாவைப் பார்த்து.

“துட்டை எட்ரா, இன்னும் போணி ஆவல்லை“ என்றாள் அம்மணியம்மா, பதிலுக்கு.

“ஆப்பச்சட்டியை எடுத்துப் போட்டு உடைக்கிறேன் பாரு…“

“புடுங்கினே…“

நித்தம்நித்தம் நடக்கிற காட்சிதான் இது. காளி, அவனுக்குச் சற்றும் குறையாத அம்மணியம்மாவின் குரல்களைக் கேட்டுத்தான் கண்விழிப்பது என்பது சமீப காலத்தில் பழக்கமாகிவிட்டிருந்தது சேகருக்கு! ஆப்பச்சட்டியைக் காளி உடைத்ததும் இல்லை. அம்மணியம்மா அவனுக்கு ஆப்பம் கொடுக்காமல் இருந்ததும் இல்லை.

கிஷ்ட்டன் டீக்கடையில் கூட்டம் இருந்தது. அது ஒருவகையில் சேகருக்கு ஆறுதலாக இருந்தது. இன்னும் போணி ஆகல்லை என்று கிஷ்ட்டன் சொல்ல முடியாது கிஷ்ட்டன் அவன் முகத்தைப் பார்த்ததும், அருமையான கடும் மஞ்சள் நிறத்து, சர்க்கரை கம்மி டீ அடித்துக் கொடுத்தான். டீ தொண்டையைச் சூடு பண்ணிக் கொண்டு உள்ளே இறங்கியது மிக இதமாக இருந்தது. காலி டம்ளரை வைத்தபடி கிஷ்ட்டன் முகத்தைப் பார்த்தான். அவன் எங்கோ திரும்பிப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். சேகர் அவனை நெருங்கி, “கணக்கில் எழுதிக்குங்க“ என்றான். யாருக்கும் கேட்காத குரலில். கிஷ்ட்டன் திரும்பி அவனைப் பார்த்து, “கணக்கு ஏறிப்போச்சு“ என்றான். அவன் கூடுதலான சப்தத்தோடு அதைச் சொன்னதாகப் பட்டது சேகருக்கு.

திரும்பி வருகையில், அம்மணியம்மாளிடம், “மாடிக்கு நாலு ஆப்பம்“ என்று கூறிவிட்டு வந்தான். அறைக்கு வந்து, சட்டையைக் கழற்றி மீண்டும் ஆணியில் மாட்டிவிட்டு, சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே இறங்கி வந்தான். வீட்டுக்குள் நுழைந்து, இரு திசைகளிலும் பக்கத்துக்கு நான்காக இருந்த எட்டு போர்ஷன்களையும் கடந்து, அந்த அறைக்கு முன் வந்து நின்றான். குளியல் அறைக்கதவு திறந்திருந்தது. அந்த அறைக்கதவு மட்டும் மூடியிருந்தது. வாயிலில் சின்னத் தண்ணீர் வாளி இருந்தது. அந்தத் தண்ணீர் வாளி அஞ்சலையுடையது. அவளோ, அவள் புருஷனோ உள்ளே இருக்க வேண்டும்.

“என்னா? போட்டோக்கார்ரே… சௌக்கியமா கீறியா?“

எட்டாவது போர்ஷனில் இருந்த எல்லம்மா கேட்டாள். வீட்டுக்கு வெளியே குத்துக்காலிட்டுக்கொண்டு மரச்சீப்பால் தலைவாரிக்கொண்டிருந்தாள் அவள். ஒவ்வொரு இழுப்புக்கும் சற்றே நரை கலந்த, சுண்ணாம்புக் காரை படிந்த தலைமுடிகொத்துக்கொத்தாக வந்துகொண்டிருந்தது. மயிர்க் கற்றைகள் சுருள் சுருளாகத் தரையில் உருண்டன.

“உம்“ என்றான் சேகர்.

“எம்மா நாளாச் சொல்றேன். என்னை ஒரு போட்டோ எடுக்க மாட்டேங்கறே… சின்னதா, அறியாப் பொண்ணுங்களை மட்டும்தான் எடுப்பே போல…“

“எடுக்கறேன். எடுக்கறேன்.“

“எதை?“

அறை திறந்து, ரப்பர் வளையணிந்த கையொன்று வாளியை உள்ளே இழுத்துக் கொண்டது. இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு அவள் – அஞ்சலைதான் – வெளியே வந்தாள். சேகர் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு தொட்டியிலிருந்த வாளியில் தண்ணீர் முகந்து வைத்து விட்டு, உள்ளே புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான்.

சேகர் குளித்துவிட்டு அறைக்குத் திரும்பினான். ஆப்பம், மேசைமேல் வைக்கப்பட்டிருந்தது. அப்படியே தரைமேல் அமர்ந்து, தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தொடங்கினான். ஆப்பத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட, வெல்லம் தூவியிருந்தது. அம்மா ஞாபகம் வந்தது அவனுக்கு.

வாரத்துக்கு இரண்டு நாட்களாவது அம்மா ஆப்பம் செய்வாள். முந்தின இரவே தென்னங்கள் ஊற்றி ஊற வைத்த மாவில் செய்த ஆப்பம் ஐயர் ஓட்டல் பூரி மாதிரி உப்பிக்கொண்டு இருக்கும். தொட்டுக் கொள்ளத் தேங்காய்ப்பால். எவ்வளவு அற்புதமாக இருக்கும்…! அம்மாவும் இல்லை. ஊரும் இல்லை. படடண வாசம் என்று ஆகி, கடல் சொல்லி அம்மணியம்மா ஆப்பம் என்றாகிவிட்டது. பசிக்கையில் ருசி தெரிவதில்லை.

பேண்ட்டை அணியும் முன்தான் நினைவுக்கு வந்தது. ஜட்டியை இரவே துவைத்துக் காய வைத்திருக்க வேண்டும். மறந்து போய் விட்டான். இரு புறங்களிலும் மஞ்சள் கறை படிந்த ஜட்டியை மீண்டும் சகித்துக் கொண்டு அணிந்துகொண்டான் –உடனேயே அரித்தது – பேண்ட்டை அணிந்து கொண்டான். சட்டையை மாட்டிக்கொண்டான். கேமரா இருந்த பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான். அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். கேமராவுக்கு இன்றைக்காவது ஆபீசில் பணம் வாங்கி, பிலிம் வாங்கிப்போட வேண்டும். மத்தியானத்துக்கும் இரவுக்கும் சாப்பிடக் காசு தயார் பண்ண வேண்டும். ஒரு பாக்கெட் சிகரெட் மூன்று ரூபாய் விற்கிறது.

ஆபீசில், துணை ஆசிரியர் ஏழுமலைதான் இருந்தார்.

“இன்னப்பா… ஊரிலதான் இருக்கியா? ஆளையே காணமே..“ என்றான் ஏழுமலை, சேகரைப் பார்த்து.

“ஆசிரியர் இல்லையா? சார்…?“

“வர்ற நேரம்தான். வந்துடுவார். அப்புறம், படமே கொண்டாற மாட்டேன்ற…? புதுசு புதுசா எத்தனை பேர் வந்திருக்கிறா, அவளுங்க படம் கொண்டாற மாட்டேன்ற… இன்னும் கே.ஆர். விஜயா படத்தையுமு் சௌகார் ஜானகி படத்தையும்தான் கொண்டு வரே…“

சேகர் முந்திய வாரத்து இதழைப் புரட்டினான். இரண்டு படங்களின் மேல் தன் கையெழுத்தைப் போட்டான்.

“சார். இந்த இதழிலே என்னோட ரெண்டு படம் வந்திருக்கு, சார்…“

“இன்னா படம்?“

“ஜெயமாலினியும், டிஸ்கோவும் சார்.“

“ஜெயமாலினி உன்னோடதா? சந்துரு கொடுத்த மாதிரி இருக்கு.“

“இல்லே சார்… நான் எடுத்த படம் சார், அது. அந்த அம்மா வீட்டுக்கே போயி நான் எடுத்தது சார்…“

“சரி! பேரை எழுதிட்டியா? எப்படியும் நாளைக்கு செக் வந்திடும்.“

சேகருக்கு ‘திக்‘கென்றது.

“சார்… இன்னைக்குப் பணம் கிடைக்காதா?“

“அக்கவுண்டென்ட் இல்லை. அப்புறம் கையெழுத்துப் போட்டு ஓ.கே. பண்ண ஆசிரியரும் இல்லை.“

சேகர் எழுந்து, உள்ளேயே சுற்றுக்கொண்டு அரைமணியைக் கழித்தான்.

“இன்னா சேகர், சும்மா, இருக்கியா? ஒரு ஹெல்ப் பண்ணு. அந்த ‘என்‘ வரிசை கப்போர்டில் நதியா குளிக்கிற மாதிரி ஒரு படம் இருக்கும், எடேன்…“ என்றான் லே –அவுட் ஆர்ட்டிஸ்ட் கோபி.

நதியாவைத் தேடத் தொடங்கினான் சேகர். சைக்கிள் விடும் நதியா, நடனம் ஆடும் நதியா, குனிந்து வாசல் பெருக்கும் நதியா, குடிக்கிற நதியா, புடவையில் நதியா, புடவையில்லாமல் நவீன உடையில் நதியா எல்லோரும் இருந்தார்கள். குளிக்கும் நதியா மட்டும் இல்லை!

“இல்லையா? எங்கே போச்சு? சார், நதியா கிடைக்கலை சார்“ என்று கோபி ஏழுமலையைப் பார்த்துக் கத்தினான்.

“இந்த எழவு ஆபீசில் எதுதான் இருக்கு? அமலா இருக்கா பாரு. அவளையே வச்சுடு. கொஞ்சம் போல்டா இருக்கிற படமாப் பாரு…!“

சேகர், அமலாவின் படத்தை எடுத்துக்கொடுத்தான்.

“கோபி…!“

“இன்னா?“

“பணம் இருக்கா?“

“விளையாடறியா, தேதி இன்னா?“

“இருபத்து ஏழு.“

“பின்னே?“

மதியம் ஒரு மணிவரை ஆசிரியர் வரவில்லை. அப்புறம்தான் அக்கவுண்டென்ட் அன்று விடுமுறை என்று தெரிந்தது. கேமரா பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பத்திரிகை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான் சேகர்.

பசித்தது.

நான்கு ஆப்பம் என்பது இருபத்து எட்டு வயது இளைஞனுக்கு ஒரு சரியான உணவல்ல! அதுவும் நான்கு ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு, அவை இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்தான்! வெயில் கொளுத்தியது. நிழலுக்காக பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றான் சேகர் பஸ் நிழற்குடையில், பஸ்களின் எண்கள் எழுதியிருந்ததன் மேல் போஸ்டர் ஒட்டி மறைத்திருந்தார்கள் சமூக விரோதிகள். சேகரின் கைகள் பரபரத்தன. அதைப் படம் எடுத்து போட்டோவுடன் பத்திரிகைக்குத் தரவேண்டும் என்று ஒரு கணம் ஆவேசம் வந்தது. அப்புறம்தான் தன் கேமராவில் ஃபிலிம் இல்லை என்கிற நினைவு அவனுக்கு வந்தது. நிழற்குடையை ஒட்டியிருந்த பெட்டிக் கடையில் சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டான். மீதி இருந்த ஐந்து பைசாவை உறங்கும் குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சைக்கேட்ட ஒருத்திக்குப் போட்டான்.

கோடம்பாக்கம் போகிற பஸ் வந்து நின்றது. கோடம்பாக்கத்தை நினைக்கிறபோதெல்லாம் விஜயாவின் ஞாபகம் வராமல் போகாது. விஜயா அவள் காதலன் பக்கிரியுடன் கோடம்பாக்கத்துக்கு வந்த புதிதில் அவளை அவன்தான் படம் எடுத்தான். சில சினிமா பத்திரிகைகளுக்கு அவள் ஸ்டில்லைக் கொடுத்துப் பிரசுரிக்கவும் செய்தான். எப்போது சென்றாலும் ஏதாவது கொடுத்து உபசரிக்க அவள் தயங்குவது இல்லை. ஏற்கெனவே புகழ் பெற்ற மற்றும் புகழ்பெறத் துடிக்கிற விஜயாக்கள் நிறையப் பேர் இருந்ததால் விஜயாவின் பெயரை லாவண்யா என்று மாற்றி அமைத்ததும் சேகர்தான்.

அவன் நின்றிருந்த இடத்திலிருந்து லாவண்யா என்கிற விஜயாவின் இருப்பிடம் சுமார் இரண்டரை மைல் தூரம் இருந்தது. பஸ்ஸில்தான் போக வேண்டும் பஸ்ஸுக்கு எண்பது பைசாக்கள் ஆகும். ஆகவே நடக்கத் தொடங்கினான். வியர்வையில் நனைந்த சட்டை பிசுபிசுத்தது. பசி வரும்போதெல்லாம் இப்போது அவனுக்குள் ஒருவகை மயக்கம் வரத் தொடங்கியிருந்தது. யாரோ சிறுவன், முகம் பார்க்கிற கண்ணாடியைச் சூரிய வெளிச்சத்தில் காட்டி அவன் முகத்தில் அடிப்பது மாதிரி சூரிய வெளிச்சம் பளீரென்று அவன் முகத்தில் விழுந்தது. கண்ணை இடுக்கிக் கொண்டே நடந்து விஜயாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

முக்கிய வீதியிலிருந்து கிளை பிரிந்து, அவசரமாய்ப் பள்ளமாகிப்போன தெருவுக்குப் பெயர் மசூதித்தெரு என்பது தெருவின் அடுத்த முனைப் பகுதியில் மசூதி ஒன்று இருந்தது. ஆகவே அதைக் குறிக்க அப்பெயர். தெருவில் பெரும்பாலும் பழைய நாட்டு ஓடுகள் வேய்ந்த பழைய வீடுகள், குடிசைகள் மிகுந்திருந்தன. கல் சுவர் வைத்து எழுப்பப்பட்ட, மேலே கூரை வேய்ந்த வீடு ஒன்றில் விஜயா ஜீவனம் செய்து கொண்டிருந்தாள்.

வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்பொருட்டுத் தரையில் முந்தியைப் போட்டு படுத்திருந்தவள் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுக் கதவைத் திறந்தாள்.

“அட, சேகரா! வா… வா… இப்பத்தான் வழிதெரிஞ்சதா?“ என்று வரவேற்றாள் விஜயா. இரும்பு நாற்காலியில் அமர்ந்து, பையைக் கீழே வைத்துவிட்டு, “கொஞ்சம் தண்ணீ கொடு“ என்றான்.

விஜயா, மண் கூஜா தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள் ‘மடக் மடக்‘ கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தான் சேகர்.

“எப்படி இருக்கே?“ என்று கேட்டாள் சேகர்.

“ஏதோ காலம் போவுது… நீதான் என்னை மறந்துட்டே…“

“அதெல்லாம் இல்லை. ஒரு விஷயம். புதுசா ஒரு பத்திரிகை வருது. சினிமாப் பத்திரிகைதான். படம் வேணும்… ரொம்பப் பெரிய கம்பெனி, கலர் கலரா படம் வேணும்னு சொல்றாங்க…“

“எடுக்கப் போறியா?“

“ஏன்?“

“முகம் கழுவணும்… கொஞ்சம் மேக்கப் பண்ணிக்கணும்… துணியை மாத்திக்கணும்…“

“அந்தப் பச்சை கவுண் இருக்கி்ல்லை. அதைப் போட்டுக்க…“

அவள் எழுந்து, துணி மறைப்புக்கு உள்ளே சென்றாள். தரையிலிருந்து ஒரு ஜாண் உயரத்துக்கு இடைவெளி இருந்த அந்தத் துணி மறைப்பில், அவள் சேலை வழிந்து விழுவது தெரிந்தது. அடுத்த பத்து நிமிஷத்துக்குள் பச்சை கவுண் அணிந்து, சிவப்புப் பவுடரும், பேன் கேக்கும் அப்பிய முகத்துடன் சிவந்த உதட்டுடனும் வந்து சேர்ந்தாள் விஜயா.

பையைத் திறந்து கேமிராவை வெளியே எடுத்தான் சேகர்.

“எப்படி வேணும்? செக்ஸியாவா, சாதாரணமாவா?“

“இரண்டுமா“

அவள் பல விதங்களில் குனிந்தும், கைகளை மேலே தூக்கியும், பக்கவாட்டில் நிமிர்ந்தும், குப்புறப் படுத்துக் கொண்டும், நிமிர்ந்து படுத்துக் கொண்டும், சிரித்தும், அழுதும், உதட்டைக் கடித்துக் போஸ் கொடுத்தாள். பளிச் பளிச்சென்று பிளாஷைத் தட்டிக் கொண்டிருந்தான் சேகர்.

முடிந்ததும், அவள் அவனுக்கு முன், முங்கில் தூணில் சாய்ந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்து அருகில் வைத்துக்கொண்டாள்.

“வெற்றிலை போடறியா, சேகர்?“

“வேணாம்“

அவள் பாக்கைப்போட்டு சுண்ணாம்பு பூசி, வெற்றிலையை மெல்லத் தொடங்கினாள். சட்டென்று அவள் உதடு வித்தியாசமாகச் சிவந்தது. உதட்டுப் பூச்சும் வெற்றிலையும் சேர்ந்து அவள் உதடுகள் ரத்தமாயின. அப்படியே ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. வயிற்றுப் பசி அந்த எழுச்சியை அடக்கிவிட்டது.

“தொழி்ல் எப்படி நடக்குது விஜயா?“

“நொண்டுது. படத்துக்குப் போயி பத்துநாள் ஆகுது சேகர். ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னும் இந்த மாடி வீட்டு வாடகை கூட தரல்லை.“

“பார்ட்டி ஒண்ணும் வரல்லையா?“

“நாலுநாள் ஆச்சு, ஒருத்தர் வந்தாரு. ரூபாய் ஐம்பது கிடைச்சுச்சு, இடம் வசதி இல்லையே? கட்டில் இல்லை. மெத்தை இல்லை என்க்கும் முப்பது ஆயிருதே? அதுவே அதிகம். அதை வச்சுத்தான் நாலு நாளைத் தள்ளிட்டேன்…“

“கந்தசாமியைக் கவனிச்சுக்கணும்…“

“அந்தக் களவாணியைச் சொல்லாதே! ஒருத்தரு ஐம்பது கொடுத்தா, கமிஷன் பத்தை எடுத்துக்கிட்டு நாப்பதுதான் தரான். அப்புரம் போலீசுக்காரனுக்கு அஞ்சு, பேட்டை பிஸ்தா ஒருத்தனுக்கு அஞ்சு. எல்லாம் போக என் கைக்கு வர்றது முப்பதுதான். அதை வச்சு நான் விளக்கேத்துவேனா, கஞ்சி குடிப்பேனா, நீயே சொல்லு…“

“முன்னையெல்லாம் தினம் பார்ட்டி வருமே உனக்கு?“

“வரும்தான். நான்தான் மூணு நாளா எதுவும் வேணாம்னுட்டேன் நாளைக்கு வரச்சொல்லியிக்கேன்….“

“ஏன்?“

அதான். மூணு நாளா ஒதுங்கியிருக்கேன். அதோட, உடம்பெல்லாம் காயம் வேற! ஒரு குடிகாரப் பய வந்து என்னைச் சின்னா பின்னப்படுத்திட்டான்.“

சேகர் கிளம்ப வேண்டும் என்று நினைத்தான்.

“விஜயா, ஏதாவது பணம் இருக்கா? ஒண்ணுமில்லை, பிரிண்ட் போடணும். பத்திரிகைக்குத் தரணும்…“

விருட்டென்று நிமிர்ந்தாள்.

“ஐயோ, சேகர், உங்கிட்ட சொல்ல என்ன வெக்கம்… நான் காலை முழுசா பட்டினியா கிடக்கேன். கடன் வாங்கக் கூசுது…! இப்பப் போயி பணம் கேக்கறியே“ என்றவள் அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“இரு, இதோ வர்றேன்“ என்று விட்டுக் கதவைத் திறந்துகொண்டு போனாள், கால் மணி சென்று திரும்பி வந்தாள்.

“வரலட்சுமி அக்காகிட்டே வட்டிக்கு வாங்கியிருக்கேன். இந்தா… அடுத்த வாரம் வா, சேகர்… ஏதாவது தர்றேன்“ என்றாள். அவன் கையில் ஐந்து பத்து ரூபாய் இருந்தது.

“நீயும் கொஞ்சம் வச்சுக்கோ…“ என்று இருபது ரூபாயை அவளிடம் கொடுத்துவிட்டு, முப்பதைத் தான் எடுத்துக் கொண்டான் சேகர்.

“வரட்டுமா“

“படுத்துட்டுப் போறியா?“

“வேணாம்“

“சரி. அடுத்த வாரம் வா! கண்டிப்பா வா! ஏதாவது நல்ல சரக்கா வாங்கிக்குவோம்.“

“சரி.“

சேகர் கிளம்பினான்.

சேகர் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் வரலட்சுமி அக்கா வந்தாள்.

“என்னடி தலைபோவற அவசரம்னு பணம் வாங்கிட்டு வந்தே, பார்த்தா, யாரோ ஒருத்தன் பையை எடுத்துகிட்டுப் போறானே என்ன சங்கதி?“

“ஒன்றுமில்லைக்கா, ஒரு சினேகிதக்காரு.“

“சினேகிதன் பணம் கொடுக்கலையா?“

“இல்லை. நான் தான் கொடுத்தேன்.“

“தலைகீழா இருக்கு?“

“நல்ல மருஷங்கா, படம் எடுக்கிறவரு. நான் மொதோமொதோ, இங்க வந்தப்போது என்னை படம் எடுத்தவறு இவருதாங்கா.“

“இப்பவும் எடுத்தானா?“

“எடுத்தாறு. ஆனா…“

“ஆனா?“

“கேமராவில் ஃபிலிம் இல்லாமே எடுத்தாரு“

அவனைச் சும்மாவா விட்டே?“

“பாவம்கா. கண்ணைப் பார்த்தாத் தெரியுதே. சாப்பிடல்லைனு…! சோத்துக்காக நல்ல மனுஷன் பொய் சொல்றாரு, பாரு…! அதுதான்…!“

விஜயா எழுத்து பூட்டு சாவியை எடுத்தாள்.

“சாப்பிடல்லைக்கா. பாய் கடைவரைக்கும் போய் வந்துடறேன்!“

“இந்நேரம் சோறு இருக்காதேடி“

“பிரியாணி இருக்குமேக்கா, வரியா?“

நான் துன்னுட்டேன். நீ போ…“

வீட்டைப் பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினாள் விஜயா தெருவில் வெயில் குறைந்திருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் கேசவன். அந்தக் கோயிலுக்குப் பெரும் கூட்டம் வரும் என்பது அவருக்குத் தெரியும். சில வருஷங்களுக்கு முன் அங்கு வந்திருந்தபோது, அவரே கூட்டம் கண்டு வியந்திருக்கிறார். இப்போது அவர் கண்ட கூட்டத்தைக் கற்பனை செய்திருக்கவில்லை அவர். ஊரிலிருந்து புறப்பட்டுச் ...
மேலும் கதையை படிக்க...
கொண்டப்பாவை எல்லாரும் பரம சாது என்று சொல் வார்கள். அப்படிச் சொல்வது அவனுடன் அலுவலகத்தில் பணி ஆற்றுபவர்கள்தாம். சிலர், பசு என்றும் கூறுவார்கள், மனிதனாகிய அவனை. அப்படிச் சொல்வது இழித்துரைப்பதாகாது. அவ்வளவு சாந்தமானவன் என்பதை அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். அவனது அதிகாரிகள், ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்தில், நீளமாய் ஒரு காலை மடக்கியும் ஒன்றை நீட்டியும், சற்றே வாய் பிளந்து, வெற்றிலைக் காவிநிறப் பற்கள் தெரிய, கைகளைப் பரப்பியவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பிரபுவைப் பார்த்தாள் சத்யா. 'இரையுண்ட மலைப் பாம்பு படுத்துக் கிடப்பதுபோல' என அவள் மனதில் ...
மேலும் கதையை படிக்க...
(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை வெயில் சுள்ளென்று ஊசி குத்தியது. லெச்சுமி ரொம்ப சிக்கிரமாகவேதான் கிளம்பி வந்திருந்தாள். இருந்தும் அவளுக்கு முன் அம்பது அறுபது பொம்பளைகள் நின்று கொண்டிருந்தார்கள். சுவரை ஒட்டிக் கியூ வரிசை ...
மேலும் கதையை படிக்க...
"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு நண்பர்களின் கதை
ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில், சுந்தர சோழன் தெருவில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் பிறந்தவர்கள். ஒன்றாகவே பள்ளிக்கூடம் சென்றார்கள். போகும் வழியில் மாந்தோப்பு இருந்தது. காவலும் ...
மேலும் கதையை படிக்க...
நாங்கள் புதுவீட்டுக்குக் குடி போனோம். ஆச்சரியமாக வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் நிலம் வெறுமே கிடந்தது. ஒரு நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்று கிடந்தது அது. அதை என்ன பண்ணலாம் என்று நாங்கள் யோசித்தோம்.வீட்டுப் பெரியவர்களுக்குச் சலுகை கொடுப்பது மாதிரி, மரியாதை ...
மேலும் கதையை படிக்க...
நீரதன் புதல்வர்
அலுவலகத்தைவிட்டு வெளிவந்தான் மூர்த்தி. வாசலில் நின்றிருந்த போலீஸ்காரன் அடித்த வணக்கத்தை அசிரத்தையாக எதிர்கொண்டான். தெருவில் இருட்டு இல்லை. அந்த நாட்டு முதல் அரசர் பணி செய்யும் பகுதி என்பதால், தெரு இருளாமல்பார்த்துக் கொள்வார்கள். ஆனால், தெருவில் நாய்கள் அதிகமாகி இருக்கின்றன. மனிதகுலத்துடன் ...
மேலும் கதையை படிக்க...
கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது சைக்கிள். வலது கைப்பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு, கன்றுக்குட்டி பார்ப்பது போலவே மாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தது. நடுக் கூடத்தில் கோவணத்தோடு உட்கார்ந்து கொண்டார் மாமா, அவருக்கு முன்னால் அரைப்படி நல்லெண்ணெய்க் கிண்ணம். அவ்வளவையும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கறுப்பு மின்னல் மாதிரி அலைகள் ஒளிர்ந்தன. பொன்னுத்தம்பி அந்தச் சப்பாத்துக் ...
மேலும் கதையை படிக்க...
காரணங்கள் அகாரணங்கள்
சிறுமை கண்டு…
காலம் இனி வரும்
வரிசை
மரி என்கிற ஆட்டுக்குட்டி
இரண்டு நண்பர்களின் கதை
பிரும்மம்
நீரதன் புதல்வர்
சைக்கிள்
பாதுகை

ஒரு மனுசி மீது 0 கருத்துக்கள்

  1. rathinavelu says:

    சிலருக்கு வயிற்றுப பிழைப்பு ‘படுத்து’ ; சிலருக்கு எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)