ஒரு பேருந்துப் பயணம்

 

“என்னை விட்டுடுங்க! இதுதான் என்னோட கடைசி வெளிநாட்டுப் பயணம்!” முகத்தில் அருவருப்புடன், முணுமுணுப்பான குரலில் கூறிய மனைவியைப் பார்த்தார் அருண். தன்னால்தானே அவளுக்கு இவ்வளவு கஷ்டம் என்ற நினைப்பில் சற்று குற்ற உணர்வு உண்டானது அவருக்கு.

“கொஞ்ச நேரம்தானே பிரபா? புதுச்சேரியிலிருந்து மூணே மணி நேரம்! கடற்கரைவழியா போய், சென்னையில கொண்டு விட்டுடுவான்!”

“ஆயிரக்கணக்கா, மலேசிய ரிங்கிட்டில செலவழிச்சுக்கிட்டு பிளேனில வந்திருக்கோம், உல்லாசமா சுத்திப் பாக்க! டாக்ஸிக்கு இரண்டாயிரம், இல்லே மூவாயிரம் ரூபாய் குடுக்க கருமித்தனப்பட்டுக்கிட்டு, யாராவது இப்படி பஸ்ஸில வருவாங்களா!”

“நம்ப ரெண்டு பேருக்கும் பஸ் டிக்கட் நூறு ரூபாய்கூட ஆகலம்மா. மிச்சம் பிடிக்கிற காசில, நீ இன்னொரு பட்டுப் புடவை வாங்கிட்டுப் போயேன்!”

அவரது நைச்சியப் பேச்சு பிரபாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவள் கவனம் லயித்திருந்தது. எண்ண ஓட்டம் அவளைச் சுற்ற ஆரம்பித்தது.

ஒல்லியா இருந்தாலும், பொண்ணு நல்ல களை!

கழுத்தில் முத்து மாலை- – அதில் தோல் உரிந்திருந்தது.

கல்யாணமாகாத பெண் போலிருக்கு! பாவம், ஏழை!

நீண்ட ஒற்றைப்பின்னல். அதன் நுனியில் ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள்.

சரியான பட்டிக்காடு! பெயர் என்னவாக இருக்கும்? சரி, அருக்காணி என்று வைத்துக்கொள்வோம்.

பொழுதைக் கழிக்க, பிரபாவுக்கு இது ஒரு நல்ல விளையாட்டாகப் போயிற்று.

பின்னலுக்கு மேலே சாமந்தி, அரளி, `பச்சை’ என்ற வாசனை இலை — எல்லாம் வைத்துக் கட்டிய தலைகொள்ளாத கதம்பம்.

தலை கனக்காதோ!

ஏறியதிலிருந்து, தலையைப் பரபரவென்று சொறிந்து கொண்டிருந்தாள் அருக்காணி.

இப்படியா தலையைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு பெண், நாலு பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம்கூட இல்லாமல்!

ஒருவாறாக, இரு விரல்களின் நுனியைச் சேர்த்து, மயிர்க்காலை பாடாய் படுத்திக் கொண்டிருந்த பேனை எடுத்து, இன்னொரு கை கட்டைவிரலால் அவள் சொடுக்கியபோது, பிரபாவுக்குக் குமட்டியது.

ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்… நல்லாத்தான் சொல்லி வெச்சிருக்கான், பாட்டிலே!

`சென்னைக்குப் போனதும், முதல் வேலையா மருந்துக் கடையிலே நல்ல மருந்தாக வாங்கி, தலையில அழுந்தத் தேய்ச்சுக்கணும்! முன் சீட்டிலிருந்து பரவிடாது!’ என்று பிரபாவின் எண்ணம் போயிற்று.

பஸ் வழியில் எங்கோ நின்றது. கையில் ஒரு குழந்தையுடன் ஒரு மாது ஏறினாள். இன்னொரு தோளில் ஒரு பெரிய பை. வெளிறியிருந்த நீல நிற நைலான் புடவை. பரட்டைத் தலை என்று பிரபா தன் மனதில் குறித்துக் கொண்டாள்.

“யாரும்மா? கையில பிள்ளையோட எப்படி நிப்பே? அடுத்த பஸ்ஸிலே வா. எறங்கு, எறங்கு!” கண்டக்டரின் அதிகாரக் குரல் சிலரை அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

வேறு சிலர், `இதெல்லாம் தினம் தினம் நடக்கிறதுதானே!’ என்று நினைத்தவர்களாக, வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டோ, `இஞ்சி மொரப்பா! அஞ்சே ரூபா! தலை சுத்தலுக்கு வாங்கிக்குங்க!’ என்று கூவியபடி விற்ற பையனை அழைத்துக்கொண்டோ இருந்தனர். இஞ்சியை வேகவைத்து, சீனிப்பாகில் இட்டுக் காய வைத்திருந்த விரல்களை நினைவூட்டும் துண்டங்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.

`அநியாயம்! இதுக்கு அஞ்சு ரூபாயா!’ என்று பேரம் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.

யாரும் அத்தாய்க்கு தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, நின்றுகொண்டே பயணம் செய்ய ஒப்பவில்லை.

“ஒனக்கு எத்தனை வாட்டி சொல்றது? எறங்கு!’ கண்டக்டர் ஆக்ரோஷமாகக் கத்தினார். அவள் இறங்க யத்தனித்தாள்.

“அவங்க எறங்க வேணாம்!” அபயக் குரல் கேட்டது. அருக்காணிதான்.

“பிள்ளையை இப்படிக் குடுங்க!” என்று தன் கையை நீட்டி, பிடுங்காத குறையாக குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

கறுப்புச் சாந்தில் பெரிய பொட்டு, நெற்றியிலும் கன்னத்திலும். அதைவிடப் பெரிய கண்களால் தன்னைத் தோளில் தூக்கிக் கொண்டவளை உற்றுப் பார்த்தது.

“என்னடா முழிச்சு முழிச்சுப் பாக்கறே?” என்று கொஞ்சியபடி, “அதோ பாத்தியா! எத்தினி பஸ்!” என்று வெளியில் கைகாட்டினாள் அருக்காணி.

குழந்தைக்கு என்ன, ஆறு மாசமிருக்குமா?

பிரபா சுவாரசியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பஸ் புறப்பட்டது. வழியில் தெரிந்த காட்சிகளை எல்லாம் அருக்காணி விளக்க, `இதற்குமேல் என் மூளை வேலை செய்யாது!’ என்பதுபோல், குழந்தை கண்களை மூடிக்கொண்டது. அது தூங்க வசதியாக, மடியில் கிடத்திக் கொண்டாள் அப்பெண்.

பஸ்ஸின் குலுக்கலில் கண்ணயர்ந்த பிரபா இரண்டு மணி பொறுத்துதான் விழித்தாள்.

“அம்மா எறங்கப் போறாங்கடா!” என்று பிரியாவிடை கொடுத்த அருக்காணி, குழந்தையை அதன் தாயிடம் நீட்டினாள். அவளை விட்டுப் பிரிய மனமில்லாததுபோல், குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய புடவையை இறுகப் பற்றியிருந்தது.

“பிள்ளையை நல்லா பாத்துக்கிச்சு!” என்று பொதுவாகச் சொல்லியபடி, அந்த தாய் இறங்கினாள்.

வாய் உபசாரமாக நன்றி கூறத் தெரியாத பாமரப் பெண்!

சென்னையும், ஓடும் மாந்தர்களும், மனிதர்கள், வாகனங்களின் இரைச்சலும் சேர்ந்து வந்தன.

“பஸ்ஸிலே இவ்வளவு பேரை அடைப்பாங்கன்னு தெரியாம போச்சு. என்னென்னமோ எண்ணை நாத்தம்! மூச்சுக்கூட விட முடியல!” கோயம்பேடில் இறங்கி, ஆட்டோவில் இறங்கும்வரை மௌனமாக இருந்த அருண், முதன்முறையாகப் பேசினார். “இனிமே பஸ்ஸே வேண்டாம்பா! டாக்சிதான்!” உடலைக் குலுக்கிக் கொண்டார்.

“ஒரு புத்தகத்தோட மதிப்பை அதோட அட்டையை வெச்சு எடைபோடக் கூடாதுன்னு சரியாத்தான் சொல்லி வெச்சிருக்காங்க!” தான் என்ன சொல்கிறோம், இவள் சம்பந்தா சம்பந்தம் இல்லாது என்ன சொல்கிறாள் என்று, மனைவியைத் திரும்பிப் பார்த்தார் அருண்.

`பாவம்! ரொம்ப நேரம் பஸ்ஸிலே வந்தது இவளுக்குத் தலை சுத்திப் போயிருக்கு!’ என்று பரிதாபப்பட்டுக் கொண்டவர், `ஹோட்டலிலே ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிச்சா சரியாப் போயிடும்!’ என்று ஒரு முடிவும் எடுத்தார்!

(மக்கள் ஓசை, 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன் நின்றபடி அழகுபார்த்தானே, அன்றே அவன் மனதில் அந்த எண்ணம் புதைந்துவிட்டது. “நாலு பொம்பளைப் புள்ளைங்களுக்கப்புறம் ஒரு ஆம்பளைப் புள்ளையாவது பொறந்திச்சேன்னு நான் எவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது!’ அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?” வந்ததிலிருந்து இதே பாடம்தான்! `சே! ...
மேலும் கதையை படிக்க...
“நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கலே?” கேள்வி அந்தரங்கமானதாக இருந்தாலும், கேட்டவன் ஓரளவு தனக்குப் பரிச்சயமானவனாக இருந்ததால், பாமா அதை தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு, அவள் இன்னும் சின்னப்பெண் அல்லவே, கல்யாணப் பேச்சை எடுத்ததும் நாணிக் கோண! தலை நரையை மறைக்க சாயம் ...
மேலும் கதையை படிக்க...
ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா? கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல். தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் ...
மேலும் கதையை படிக்க...
“இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?” வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம் முறையிட்டாள் தாய். ராசுவின் உடலும் மனமும் ஒருங்கே சுருங்கின. முப்பது வயதுவரை கல்யாணத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தவன் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? நண்பர்களின் ...
மேலும் கதையை படிக்க...
நான் பெண்தான்
விலகுமோ வன்மம்?
மாற்ற முடியாதவை
நெடுஞ்சாலையில் ஒரு பயணம்
வாரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)