ஒரு பயணப்பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 11,491 
 

பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு…” ஓட்டுநருக்கு எங்களோடு வந்தவர் சொன்னார்.

“ஏன் அப்பிடிச் சொல்லுறியள்…”

“;அப்பாவித்தனமாகக் கேட்ட என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார்.”இந்தப்பக்கம் எல்லாம் ஆமி இருந்தவன்… ஏராளமான புதைவெடிகளட இருக்கும்… பாரத்துக்கு ஏற்றமாதிரி வெடிக்கிறதுக்கு வைச்சிருப்பான்”

கண்ணாடியூடாக வெளியே பார்த்தான். எங்கும் பனைமரங்கள் காயப்பட்டவை. கருகியவை, கழுத்துமுறிந்தவை.. போரின் வடுக்களை அவையும் சுமந்திருந்தன. வீடுகள் அதிகமாய் இல்லை…. இருந்தவைகளும் கற்குவியல்களால் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து இந்தப்பிரதேசம் மீட்கப்பட்டபிறகு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாகச் சனங்கள் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

கட்டிடங்கள் எல்லாம் கற்குவியல்களாகிக்கிடக்க அருனே பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சிறிய குடிசைகளில் மக்கள். கண்ணனம்மாவின் வீடும் இங்குதான். சரியாகத்தெரியாது. சந்திகளில் ஒழுங்கைகளில் விசாரித்து விசாரித்து பயணித்தோம். தங்கள் கிராமத்துக்குள் நுழையும் புதிய வாகனத்தை பல சிறுவர்கள் ஓடிவந்து வியப்போடு பார்த்தார்கள். வழிகேட்டுக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்தோம். “மண்டைதீவில இருக்கிற ஆமி அடிச்ச செல்கூட இஞ்சவந்து விழுந்தது” அப்போது எங்களோடு வந்துகொண்டிருந்த போராளி. “நான் கௌதாரிமுனையில லைன்ல நிண்டனான்…. அங்க சாப்பிட்ட புட்டை என்னால மறக்கமுடியாது….” என்றார்.

“அவ்வளவு ருசியோ அண்ண”

“அவசரத்தில அவியிற புட்டுத்தானே வெறும் மாவா வரும்…..பிறகு நாங்கள்.. அதை தண்ணிவிட்டுக்குழைச்சு….வெய்யில காயவைப்பம்…. பிறகு கொமாண்டோச் சட்டியில வறுத்து….இடைநேரங்களில சாப்பிடுவம்….” வழிநெடுக நீண்ட போரின் வடுக்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். “இப்ப நாங்கள் போறவீடு சொந்தமோ?

“ம்”

எனக்கு கண்ணனம்மாவின் நினைவுகள் எழுந்தன. அவருக்கு என்ன பெயரென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவரது குட்டிமகன் கண்ணன் என்பதால் கண்ணனம்மா என்றுதான் சொல்வோம். கண்ணனம்மாவின் இன்னொருமகன் மாவீரன். மகளும் குடாரப்புத் தரையிறக்கத்தில் வீரச்சாவு. மாவீரனான மகன்தான் முதலில் எங்களுக்குப் பழக்கம். தன் துறைசார்ந்த பணிக்காக எங்களோடு பழகி எங்கள் குடும்பத்திலும் ஒன்றானவன். அவனுடைய வீரச்சாவுக்குப் பிறகு… யாழ்குடாநாடு இடம்பெயர்ந்தபோது…. அவனுடைய குடும்பமும் அறிமுகமானது. அந்தக் குடும்பத்தின் இன்னொரு போராட்ட பங்காளியாக மல்லிகா. “தம்பிக்கு நெருக்காமாயிருந்தவர்கள்” என்று எங்களைத்தேடி வந்தாள். கலகலவென்ற பேச்சு…. மதியம் உணவுண்டு போனாள்… “நேரம் கிடைச்சா வந்து போவன்…….”

அவள் பிறகு வரவேயில்லை. இடம்பெயர்ந்து….அநாதரவாய்.. நாங்கள் ஒதுங்கிக்கொண்டபோது….அரவணைத்தது இந்தக்குடும்பம்தான். அண்ணனும் அக்காவும் போராடப்போக….. படிப்பை நிறுத்திவிட்டு அப்பாவுக்குத் துணையாக இருப்பவன் கண்ணன். தோட்டவேலை செய்து இறுகிய உடம்பு. வெயில் குடித்துக் கறுத்துப்போயிருந்தது. உடம்பும்.. உயரமும் மாறிவிட்டாலும் சிரிப்பு மாறாதிருந்தான். அம்மாதான் குடும்பத்தின் நிர்வாக. அப்பாவுக்கு சமனாக மண்வெட்டிவேலை செய்யவோ அல்லது தண்ணீர் இறைக்கவோ எல்லாம் அம்மாவால் முடியும். வீட்டைச் சுற்றி மரக்கறித்தோட்டம். அது அம்மாவுடையது. ஆலங்கேணியில் அப்பாவின் தோட்டம் நெற்புலவிலிருந்து ஆலங்கேணிக்கு அம்மாதான் உணவு கொண்டுபோவார். இடப்பெயர்வு நேரம் உணவின்றி, உழைப்பின்றி நாங்கள் பரிதவித்தபோது… கண்ணனம்மா குடும்பத்தினர் காட்டிய ஆதரவை எங்களால் மறக்க முடியாது. அம்மாவிடம் யாராது “ இவையள் ஆர்?” என்று யாரும் கேட்டால் “இவை தம்பிக்குத் தெரிஞ்சவை” என்பார் தம்பி என்பது மாவீரனான அவர்களுடைய மகன்.

பூநகரி சிங்களப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டடிருந்த நேரம்… அம்மாவின் குடும்பம் வன்னேரி ஆணைவிழுந்தானில் இருந்தது. நாங்கள் ஜெயபுரத்தில் இருந்தோம். அம்மா அடிக்கடி நடந்துவருவா. வரும்போது பாலைப்பழமோ, வாழைப்பழமோ, எள்ளுருண்டையோ கொண்டுவந்து தருவா. அம்மாவுக்கு வரநேரமில்லை எண்டால்….அப்பாவைப்பிடித்து துரத்திவிடுவா அம்மா…. அப்பா வரும்போதும் மரவள்ளிக்கிழங்கு, வாழைக்காய், பனம்பழம் என்று ஏதாவது கொண்டு வருவார். “என்னத்துக்கப்பா இப்பிடிச் சிரமப்படுறியள் உங்களுக்கு நாங்கள் அப்பிடி என்ன செய்திருக்கிறம்…” என்று கேட்டால். “தம்பி அங்க நிண்ட நேரத்தில அவனைப் பாத்தனீங்கள்தானே” என்பார். “தம்பிய இயக்கமெல்லோ பாத்தது” என்றால் சிரிப்பார். அவர்களின் வீடும் குசினியும் பிறம்பு பிறம்பாக இருந்தது. அப்பா வீட்டுக்குள் தனியத்தான் படுப்பார். அம்மாவும் கண்ணனும் அடுப்படிக்குள். திடீரென்று ஒருநாளிரவு யானை வந்துவிட்டதாம். ஏதோ சரசரப்புக் கேட்க அப்பா எழுந்துவெளியே வர இருளில் யானை பெரிய உருவமாய்…தும்பிக்கையை விசுறுவதற்குள் அப்பா ஓடிவிட்டார்.

“நல்ல காலம்” அம்மா தவித்துப்போனா. இரவு ஓடியவர் காலையில்த்தான் வீடுவந்தார். அம்மா துடித்துப்போய்…. அப்பா வந்தததும் ஆறுதல்பட்டா.

“அக்கான்ர மூச்சுப் பேச்சக் காணேல்ல…ஏதும் கானாக்கினாக் காணுறியளோ……”

ஓட்டுனர் யோகன் கேட்க……

“இல்லையில்லை வீடுவந்திட்டுதே…” கேட்டேன் ஒரு சிறிய தட்டிக் கடைக்கு முன்னால் வாகனம் நின்றிருந்தது. ஏழெட்டுச் சிறுவர்கள் வாகனத்தை மொய்த்தனர்.

“டேய் இயக்கமடா” “இல்லையடா….ஒரு அம்மாவும் இருக்கிற …சனமெடா…..”

சிறுவர்கள் ஆரவாரப்பட்டனர். கடைக்குள்ளிருந்து பெரிய மீசை வைத்த ஐயா ஒருவர் வந்தார். நாதன் அவரிடம் வீடுகேட்க அவர் வீட்டின் குறிப்பைச் சொன்னார். வாகனம் புறப்படுகிறது. சொன்னமாதிரியோ வீட்டின் முன்னால் நிற்கிறது. கடதாசிப்பூ மரப்பந்தலின் கீழ் சாக்குக்கட்டிலில் அப்பா படுத்திருப்பதை நான் கண்டுவிட்டேன்.

“இதுதான் வீடு” முன்னாலிருந்தவர்களை இடித்துக்கொண்டு முதலில் இறங்கினேன். “அப்பா என்னைத் தெரியுதோ?……. கண்களை இடுக்கிப் பார்த்தார். பிறகு பெரிதாகச் சிரித்தார். “இருங்கோ “ பின்னால் நின்;றவர்களைப் பார்த்துச் சொன்னார்.

“அம்மா எங்கையப்பா” “இப்ப வருவா இருங்கோ”

அப்பாவின் சாக்குக் கட்டிலிலும்……முன்னாலிருந்த வாங்கிலுமாக அமர்ந்தோம்…வீடென்பது வெறும் குடிசையாகத் தெரிந்தது. காட்போட் மட்டைகளாலும் எண்ணைபரல் தகரங்களாலும்…இன்னும் வேறு பொருட்களாலும்செருகப்பட்டு ஒழுக்கில்லாமல் தயார் செய்யப்பட்டிருந்தது. அம்மா கையில் தேங்காயெண்ணைப் போத்தலுடன் கடதாசிச் சுருள்களில் ஏதோ பொருட்களுடனும் வந்தா. அம்மாவைப் பாத்தவுடன் என் கண்கள் கலங்கின. இரண்டு பிள்ளைகளை அர்ப்பணித்துவிட்டு அம்மா மெலிந்து முதிர்ந்து தெரிந்தா. அம்மா கொஞ்சநேரம் உற்றுப் பார்த்தா. எந்தவினாடியும் வெடித்துச் சிதறப்போகும் அம்மாவின் அழுகுரலை எதிர்பாத்து…. அதை எப்படித் தாங்கப் போகிறேன் என்று மனம் தவித்தது. “இருங்கோ…அடுப்பில தண்ணிகொதிக்குது..தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்” அம்மா சிறிய அடுப்படிக்குள் நுழைந்தா.

“உள்ளபோய் தம்பி தங்கச்சியின்ர படத்தைப் பாருங்கோ” நாங்கள் நான்:குபேரும் வரிசையால் அந்தக்கொட்டிருக்குள் குனிந்து உள்நுழைந்தோம்…. மண்சுவரில் இறுக்கியிருந்த பலகையில் கப்டன் ஆபிரகாம்…. மேஜர் ஆதவி..கடற்கரும்புலி மேஜர் காந்தி, திருவுருவப்படங்களாய்…… “காந்தி எங்கட வீட்ட வந்துவந்து பழகி…எங்கடை விலாசம்தான் குடுத்தது” அம்மா கூறினா. மீண்டும் வந்து வாங்கில் அமர்ந்தோம். அம்மா தேத்தண்ணி கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் கையில் தந்தா. “கடிக்கிறதுக்கு ஏதும் குடன்” “ஓ…. மாப்பிரட்டி வைச்சிருக்கிறன்…எடுத்துக்கொண்டுவாறன்…”

அம்மாவின் மாப்பிரட்டலும்…தேனீரும்..எங்களுடைய மாலை உணவாகின. “தோட்ட வேலையள்.. எப்பிடியப்பா?……” அப்பா சிரித்தார். முழங்காலுக்குக் கீழே வீங்கிக் கிடந்த தன் கால்களைத் தடவினார். “தோட்டப்பக்கம் இப்ப நான் போறேல்ல… தம்பிதான் போறவன்….. அம்மான்ர தோட்டத்தை நம்பித்தான் இப்ப இருக்கிறன்….” சிரித்தார். அப்பா சிரிக்கும்போது நெற்றியில் நரம்புகள் புடைத்தன. அப்பா மல்லிகாவில் அதிகளவு பாசம். அவளின் இழப்பு அப்பாவை கூடுதலாகப் பாதித்திருந்தது. “நேற்றைக்கும் தம்பி கனவில வந்தவன் பிள்ள… சக்கரைப் புக்கையெண்டா சாப்பிடுறன் எண்டான். திடுக்கிட்டு எழும்பினன் கனவு…..”

அம்மா துயரம் தோயச் சொன்னா. அம்மாவின் மகன் இடிமுழக்கத்தாக்குதலில்தான் வீரச்சாவு. வித்துடல் கிடைக்கவில்லை. அம்மாவுக்கு ஒருவேளை தன்பிள்ளை உயிரோடிருக்காலம் என்ற நப்பாசை. ஆனாலும் அப்பாவைவிட அம்மா உறுதியோடிருந்தா. “அந்த வேம்பைப் பாருங்கோ தம்பி…அதிலை செல்விழுந்து வெடிக்கேக்கைகூட இந்தச் சாக்குக்கட்டிலிலைதான் படுத்துக் கிடந்தனான். இனி எனக்குச் சாவுவாறதெண்டால் இந்த இடத்திலதான் அதை எதிர்கொள்ளவேணுமெண்டு விரும்புறன்” அம்மாவும் அப்பாவும் வசிக்கும் அந்தச் சிறு குடிசையில் அருகருகாக ஒரு தூண் நின்றது. அதிலும் காயங்கள் இருந்தன.

“எங்கட முந்தினவீடு நாலறையில பெரிய கல்வீடு பிள்ளை.. இப்ப நினைவுக்கு ஒரு தூணும்..நாலு தென்னமரமும்தான் இருக்கு” அப்பா கூறினார். “நீ இப்ப வடிவா மீன்குழம்பு வைப்பியோ?….” அம்மா என்னைப் பார்த்துக்கேட்டா சிரிப்புடன்….. அம்மாவை ஒருமுறை வற்புறுத்தி… “நான் வைச்ச மீன்குழம்பு. சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேணும்” என்றேன். அம்மாவும் சம்மதித்தா. அன்று அளவுக்கு அதிகமாக உப்போடும் புளியோடும் அந்தக் குழம்பு இருந்தது. அதைத்தான் அம்மா கேட்கிறா எனப்புரிந்துகொண்டு நானும் சிரித்தேன்.

வீட்டைச் சுற்றியும் பல பனைமரங்கள் முறிந்து கிடந்தன. அந்தக் கிராமத்தின் அமைதியும், எஞ்சிக்கிடக்கும் போரெச்சங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எல்லாவற்றையும்விட.. வழிநெடுக மாபிள் அடித்துக்கொண்டும், வண்டில் உருட்டிக்கொண்டும் திரியும் சிறுவர்களின் மகிழ்ச்சி என்பை; பரவசப்படுத்தியது. இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகத்தானே இத்தனை மாவீரர்களும் தங்கடை அர்ப்பணித்தார்கள்? நான் பூநகரி மீட்புச்சமரில் வீரச்சாவணைத்தவர்களை நினைத்துக்கொண்டேன். அம்மாவின் பிள்ளைகளிலும் இருவர் மாவீரர்… எல்லா அம்மாக்களையும் போலத்தான் அம்மாவும் தன் பிள்ளைகளை எண்ணி உருகுவதும்…பின்னர் “இந்த மண்ணை விடுவிக்கத்தானே போனதுகள்…..” என்று ஆறுவதுமாய்……. அப்பாவுக்கு வெளிப்படையாய் கவலைகளைக் கொட்டத்தெரியாது. அதனால்த்தான் இப்பிடி உருக்குலைந்து போயிருக்கிறார். ஆனால் சிரித்தபடிதான் இருப்பார்……வெற்றிலைபாக்கோடு அவரின் பொழுதுகள் போய்விடுமாம்…….. “உதையேனப்பா சப்புறியள்…. வாய்ப்புண்ணெல்லே வரப்போகுது…..” என்று கேட்டால்….. மிகமெதுவாக….. “தாம்பூலம் தரிக்கிறது… தமிழன்ரை பண்பாட” என்பார் மிகமெதுவாக… “வெளிக்கிடப்போறம்…” எங்களுடன் வந்தபோராளி எழுந்தபோது…. “மல்லிகாவின்ர வீரச்சாவுக்குக்கூட வரேல்ல…..எப்பிடியாவது வரோணும் எண்டு நினைச்சு…. இண்டைக்குத்தான் முடிஞ்சுது….” குற்றி உணர்வோடு கூறியபோது…..அம்மா கையைப்பிடித்தா.

“இந்தா பிள்ளை இது எங்கட மரத்தில காய்ச்சது…முதல்ப்பழம் உங்களுக்குத்தான்” இரண்டு மாம்பழங்களை பையில் வைத்து அம்மா தந்தா. மனம் ஒருமுறை பொங்கித் தணிந்தது. “என்பும் உரியர் பிறர்க்கு” என்பது இதுதானா? என்று மனம் அலசியது. “போட்டுவாறம்” விடைபெற்றுக்கொண்டோம். வாகனம் புறப்பட்டது. மாலை மங்கிக்கொண்டிருந்தபொழுத வெய்யில் அமந்துவிட்டது.

வழிநெடுகலும்….முறிந்த காயப்பட்ட பனைமரங்களில் கீழே புன்னகையோடு வடலிகள் தலைநிமிர்த்தியபடி நிற்கும் அழகையும் அற்புதத்தையும்….அர்த்தத்தையும் உள்வாங்கியபடி நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம்.

நன்றி: எரிமலை, பெப்ரவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *