Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு தாய் மக்கள்!

 

அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும் இல்லாமல் கர்நாடகம் காவிரியை அடைத்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்காமல் அழிச்சாட்டியம் செய்தாலும் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் பூமித்தாய் வயிற்றிலிருந்து வாரி வழங்கும் நீரில் நெல், கரும்பு, வாழை, கேழ்வரகு, சோளம், கத்திரி, வெண்டை, மிளகாய் என…..அனைத்துவகை பயிரினங்களையும் வளர்த்து விளைவித்து எக்காலத்தும் எந்நேரமும் பச்சைப் பசேலென்று இருக்கும் இடம்தான் அ+டுதுறைக்கு அடுத்து இருக்கும் அனுப்பப்பட்டி கிராமம்.

எண்ணி பதினைந்தே சின்னதும் பெரிதுமான கூரை வீடுகள். அனைத்தும் கொல்லை வாசல் புழக்கம் அதிகம் உள்ள தோட்ட வீடுகள். எல்லாருமே சொந்த காடு, கழனி உள்ள மிராசுகள். அனைவரும் சூதுவாதில்லா விவசாயிகள். இங்கு சென்றால் கத்தரி கோடை தெரியாது. ஊட்டி கொடைக்கானலுக்கு நிகராய் எங்கும் பசுமை, குளுகுளு.

எனக்கு இந்த ஊரிலிருக்கும் தங்கை வீட்டிற்குச் செல்வதென்றால் கொள்ளைப் பிரியம். இந்த கொள்ளைப் பிரியம் இப்போது குறை. காரணம்…..தற்போது செண்பகத்தைப் பார்க்க எனக்குப் பிடித்தம், விருப்பமில்லை. ஆனாலும் தங்கையைப் பார்க்க வேண்டிய தவிர்க்க முடியாத வேலை. வழி இல்லை புறப்பட்டேன்.

அங்கே அண்ணன் – தம்பி இருவரும் பக்கத்துப் பக்கத்து வீடு. செண்பகம், என் தங்கை வீட்டிற்கும் அடுத்த வீடு. கொழுந்தன் மகள். அவருக்கு ஆண் பெண் இரு குழந்தைகள். ஆண் மூப்பு பெண் அடுத்தது. என் தங்கை வீட்டிலும் அப்படி. பாய் படுக்கைதான் வேறு வேறேயொழிய மற்ற அனைத்தும் ஒன்று. ஒரு வீட்டு விருந்தாளிக்கு இரண்டு வீடுகளில் கொண்டாட்டம். அண்ணன் தம்பி குடும்பங்கள் அத்தனை ஒற்றுமை.

செண்பகம் பக்கத்து ஊரில் வசிக்கும் சொந்த அத்தை மகனைக் காதலித்துக் கைப்பிடித்தாள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வாழ்க்கையில் விதி கோர தாண்டவம் ஆடிவிட்டது. திருமணம் முடித்து முதல் வருடமே ஒரே பிரசவத்தில் ஆண், பெண் இரட்டைக் குழந்தைகள். சந்தோசமில்லை துக்கம் !. காரணம்….. நெருங்கிய உறவிற்குள் திருமணமென்றால் பிள்ளைகளுக்குப் பாதிப்பு என்கிற எப்போதாவது எங்காவது பலிக்கும் சூத்திரம் இவர்கள் விசயத்தில் பொருந்திவிட பிறந்தது இரண்டும் கால் கை சூம்பல்;, மூளை வளர்ச்சி இன்மை. விதி அதோடு விட்டாலும் தம்பதிகள் தப்பித்திருப்பார்கள். குழந்தைகள் பிறந்த ஆறே மாதத்தில் விவசாயத்திற்குச் சென்ற கணவன் பாம்பு கடித்து பலி!!.

அத்தை வீடு அனுசரணனையாய் இருந்தாலும் சுமக்க ஆளில்லாததால் செண்பகம் தாய் வீடு வந்தாள். பிள்ளைகள் தாக்கம், நிலை…..மறுமண முயற்சி கூட முடியாத நிலை. இதன் விளைவு ?…. பாசநேசமான இவள் அண்ணன் பாஸ்கர் மனதில் வேறொரு முடிவு. கடைசிவரை தங்கைக்கும் அவள் பிள்ளைகளுக்கும் தான் துணை என்று மனதில் முடிச்சு. தனக்குத் துணை வந்தால் இடைஞ்சல் எண்ணம். திருமணமே வேண்டாம் மறுத்தான். முப்பது வயதுவரை பொறுத்த பெற்றவர்கள் அதற்கு மேல் பொறுக்காமல் அவனுக்கு நல்லது கெட்டது சொல்லி செண்பகத்தையும் சொல்லச் சொல்லி மணம் முடித்தார்கள்.

பாஸ்கர் மனதிற்கு பெண் நல்லவளாகவே வாய்த்தாள். நாத்தி, அவள் மக்களை வெறுத்து ஒதுக்காமல் கொஞ்சமும் முகச் சுளிப்பின்றி பிள்ளைகளைத் தூக்கி மூக்கு, முகம், வாய் ஒழுகல் துடைத்து மலஜலத்திலிருந்து எடுத்து பணிவிடைகள் செய்து பரிவு, பாசம் காட்டினாள்.

இது அக்கம் பக்கம் எல்லாருக்கும் ஆச்சரியம். செண்பகம், அவள் பிள்ளைகள் மீது இனி கவலை இல்லை என்று பெற்றவர்கள் உட்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம்….. குடும்பத்தில் குதர்க்கம்.! வந்தவள் வயிறும் வாயுமாய் ஆக…..பிறந்தகத்தில் ஆண் வாரிசுக்கு வாரிசு வந்தால் பெண் வாரிசான தன் வாரிசுகளுக்கு இறக்கம் வரும், மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாய் பிறந்தால் இந்த குறை குழந்தைகள் மேல் தாத்தா பாட்டிக்கு பிடிப்புபோகும். அண்ணனுக்கும் தன் மீது பாச நேசம் விட்டுப் போகும் என்று செண்பகம் மனதில் பட்டதின் விளைவு…..அண்ணி தொட்டால் குற்றம் வைத்தால் வருத்தம் என்று வந்தவளை வருத்தினாள். ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் வந்தவளும் வாய்திறக்க…. தினம் சண்டை என்றில்லாமல் நிமிசமும் பிரச்சனை. எந்தப் பக்கம் பேசுவதென்று புரியாமல் ஓதுங்கிப் போன அண்ணன்காரனையும் செண்பகம் சும்மா விடவில்லை.

” பொண்டாட்டிக்குப் பயந்து, பரிந்து நியாயம், நீதி கேட்காம வாய் மூடி மௌனியாய்ப் போற நீ மனுசன் இல்லே. அடுத்த வீடு போனாலும், என் விதி நான் கடைசிவரை பெத்தவங்களோடதான் இருப்பேன். உனக்கு, உன் பொண்டாட்டிக்குப் பயந்து வெளியேற மாட்டேன். என் இருப்பு இங்கேயே என்கிறதுனால உன் சொத்துக்களை; மேல ஆசைன்னு நெனைக்காதே. எனக்கு என் வாக்கப்பட்ட வீட்ல கொட்டிக் கிடக்கு. அங்கே சுமக்க ஆளில்லாமத்தான் நான் இங்கே சுமை. நீ சுத்த ஆம்பளையா இருந்தா இந்த வீட்டைவி;ட்டு வெளியில போ. அசலூர்ல இருந்து உன் நிலம் நீச்சைக் கவனி !” என்று வாய் வருத்தமில்லாமல் ஒரு தடவைக்குப் பத்து முறை சொடுக்கினாள்.

பாஸ்கர், ‘ச்சே !’ பாஸ்கர் வெளியேறி விட்டான். பாச நேசமான அண்ணனையே விரட்டிய செண்பகம் மீது எல்லாருக்கும் கொதிப்பென்றால் எனக்கு கசப்பு.

நான் தங்கை வீடு சென்றபோது அடுத்த வீட்டில் செண்பகம் தென்படவே இல்லை.

நல்லதென்று நினைத்து உட்புகுந்தேன்.

மதிய சாப்பாடு சாப்பிட்டு கொல்லையில் கை கழுவும் போதுதான் அவள் அடுத்த வீட்டில் தென்பட்டாள், என்னைப் பார்த்தாள். நான் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உள் வந்தேன். அடுத்து அவள் என்னைத் தேடிக்கொண்டு வருவாளென்று எதிர்பார்த்தேன்.

என் வெடுக். வரவில்லை.

வெயில், உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு. நான் வழக்கம்போல் ஒரு மதிய தூக்கம் போட்டேன். மாலை ஐந்து மணி சுமாருக்கு வந்த வேலை முடித்து தங்கை வீட்டில் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். கருப்பங்காடுகளுக்கு இடையில் உள்ள மண் சாலையில் நடக்கையில்….. பாதி வழியில் சடாரென்று குறுக்கே வந்து வழி மறைத்தாற் போல் நின்றாள்; செண்பகம்.

”உங்களுக்காக ரொம்ப நேரமா இந்த கழனியில களை புடுங்கிட்டிருக்கேன் !” என்று இடது சாரியில் கரும்பு வயல்களுக்கு நடுவில் உள்ள நடவு வயலைக் காட்டினாள்.
எனக்குள் கடுகடுப்பு ஏறியது. முகம் இறுகியது.

”என்ன விசயம் சொல் ?” குரலும் அதற்கேற்றாற் போல் மாறியது.

”என் மேல கோபம் போலிருக்கு?” செண்பகம் நேருக்கு நேராகவேக் கேட்டாள்.

நான் பார்க்க விருப்பப்படாமல், ”ஆமா” என்றேன் தலை குனிந்து.

”காரணம் ?”

”அது உனக்கேத் தெரியும் !”

”நல்லது.! தெரியாத காரணத்தை நீங்க மட்டும் தெரிஞ்சுக்கோங்க. மத்தவங்களுக்குச் சொல்ல வேணாம்.”

”…………..சொல்லு ?”

”அண்ணனை நான் வேணும்ன்னுதான் வெறுப்பேத்தி வெளியேத்தினேன்.”

”ஏன் ???……”

”இயற்கையாகவே என் அண்ணனுக்கு என் மேல பாசம் அதிகம். அதுவும் நான் இந்த நிலைக்கு ஆளானதில் ரொம்ப வருத்தம். விளைவு திருமணமே வேணாம் முடிவு. நமக்காக அண்ணன் தனி ஆளாய் ஆகிடக்கூடாதுங்குற தவிப்பு அதுக்கு நல்லது கெட்டது சொல்லி திருமணம் முடிச்சேன். ஏதோ என் வற்புருத்தலுக்குத்தான் திருமணம் முடிச்சுதேயொழிய கட்டின மனைவியை அது சரியா கவனிக்கலை மாமா. தனக்கு ஒரு குழந்தை உண்டான பிறகும் அதே நிலைமை நீடிப்பு. இது சரி இல்லேங்குறது என் மனசுக்கு நல்லா பட்டுது. அது மட்டுமில்லாம அண்ணி என் புள்ளைங்களுக்கு அனைத்தும் செய்யிறதால அதுக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமா பொறக்குமான்னு எனக்குள் சந்தேகம். ஆரோக்கியமா பொறந்தாலும் என் குழந்தைகளோட வளரும்போது அந்த குழந்தை நல்ல நிலைக்கு வருமான்னு பயம். இப்படி பல நினைவுகள், பயங்கள் என் மனசுக்குள் சுழட்டி அடிக்க……. இதுக்கெல்லாம் காரணங்களும் தெரிய…..இதுக்கு வழி, தீர்வுகள் தேடும்போதுதான்….. அண்ணன் என் மேல வெறுப்பாய் வீட்டை விட்டுப் போறதுதான் சரின்னு எனக்குள் வெளிச்சம் அடிச்சுது. விளைவு….. வலிய வம்பிழுத்து அனுப்பினேன். இது தப்புன்னா என்னை மன்னிச்சுடுங்க மாமா.” என்று மனதைத் திறந்து கொட்டிவிட்டு விடுவிடுவென்று நடந்தாள்.

செண்பகம் நடக்க நடக்க தூரம் மட்டும் அதிகமாகவில்லை. உயரமும் விஸ்வரூபமாக உயர…. எனக்குள் என்னையுமறியாமல் நெகிழ்ச்சி. 

தொடர்புடைய சிறுகதைகள்
அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான். அன்பு வசந்திற்கு வணக்கம். நான் தங்களை நேரில் வந்து அழைக்க அருகதையற்றவள் நினைப்பில் இந்த மடல் அழைப்பு. நம் மகன் அஜய்க்குத்; திருமணம். இதுவரை என்னோடு வளர்ந்த பிள்ளை அப்பா வந்தால்தான் தாலி கட்டுவேன் ...
மேலும் கதையை படிக்க...
நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். "என்னப்பா அது ?" கேட்டேன். "கோதுமை சார்." "எங்கே வாங்கி வர்றே ?" 'நியாயவிலைக் கடையில சார்." சொல்லிச் சென்றான். அடுத்த விநாடி எனக்குள்ளும் வாங்க வேண்டுமென்கிற உந்துதல், கட்டாயம். 'ராத்திரி வேலையில ...
மேலும் கதையை படிக்க...
பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின் மலர்ந்து என்னை நோக்கி வந்தது. ரொம்ப களையான முகம். இவள் என் அப்பாவின் தோழி. தலையில் கொஞ்சம் நரை. கண்களின் கீழ் கரு ...
மேலும் கதையை படிக்க...
புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்.... புது சோபா, புது பாலிமர் நாற்காலி. சுவரில் மாடர்ன் ஆர்ட் படங்கள். ஷோ கேசில் பொம்மைகள், பூக்கள். '' இந்த வீட்ல டி. வி. மட்டும்தான்ப்பா பழசு..! ...
மேலும் கதையை படிக்க...
நான் அண்ணன் வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த அண்ணி செண்பகத்தின் கண்கள் குபுக்கென்று கொப்பளித்து.... கண்ணீர் அருவியாகக் கொட்டியது. ' ஏன்...ஏன்....? ' எனக்குள் பதற்றம் பெட்ரோல் மீது பட்ட தீயாய்ப் பற்றியது. நான், அண்ணன் அர்ச்சுனன் ...
மேலும் கதையை படிக்க...
கல் விழுந்த கண்ணாடிகள்..!
நியாயவிலைக்கடை
அப்பாவின் தோழி….!
கோபாலா…கோபாலா…!
கணவன்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)