ஒரு தாமரைப் பூ… ஒரு குளம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,562 
 

‘இன்றைக்கு வீட்டுக்குத் திரும்புவோமா… மாட்டோமா?’ ஒரு போதும் அப்படி எல்லாம் அவருக்குத் தோன்றியதே இல்லை.

எப்போதும்போலத்தான் அவர் சாயுங்காலம் நடப்பதற்குப் புறப்பட்டார். இரண்டு ஜோடிச் செருப்புக்களில் எதைப் போட்டுக்கொள்வது என்று வழக்கம்போல ஒரு சிறு தடுமாற்றம் உண்டாயிற்று. காலின் ஐந்து நகங்களும் குதிகாலும் வழுவழு எனப் பதிந்து மினுமினுக்கிற ஜோடியைத்தான் இன்றைக்கும் தேர்ந்தெடுத்தார். முன்னைப்போல் யாரிடமாவது, எதையாவது பேச்சுக் கொடுத்துக்கொண்டே, கால்களைச் செருப்புக்குள் நுழைத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வோர் உறுப்புக்கும் வயதாகிறது. குனிந்து செருப்பை வலதா, இடதா என்று பார்க்க வேண்டும். சுவரில் கைகளை ஊன்றிக்கொள்ளாமல் அதைச் செய்ய முடிகிறது இல்லை. சுவரில் லேசாகச் சாய்ந்துகொள்ளாமல் உடை மாற்றி வெகு காலம் ஆயிற்று.

முன்னால் எல்லாம் ஜிப்பா போடுவது ரொம்பப் பிடிக்கும். வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சாயுங்காலம் நடக்கும்போது அணிவதற்கு என்று நிறைய கதர் ஜிப்பாக்கள் தைத்து இருந்தார். சர்வோதயாவில் கிடைக்கிற ஜவ்வாதைப் பூசிக்கொள்கிறதும் தவறாது. இந்த ஜவ்வாது வாசனையை மோப்பம் பிடித்துவிட்டதுபோல, எங்கு இருந்தாலும், ‘என்ன மைனர், வெளியே கிளம்பியாச்சா?’ என்று அவர் வீட்டம்மாவிடம் இருந்து சத்தம் வந்துவிடும். மைனர் என்பதை அவ்வளவு சந்தோஷமாகக் கேட்டுக்கொள்வதுபோல, அதே சந்தோஷத் துடன், வெளியே தன் நண்பர்களிடம் போய், ‘நம்ம வீட்டுக் கிழவி சொல்லுதா’ என்று அவர் ஏதாவது சொன்னால், அவர் அன்றைக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கிற தாக அர்த்தம். தன்னுடைய மனைவி கிழவி இல்லை என்பதும், தான் இன்னும் மைனர் தான் என்கிறதுமான அந்தரங்கப் பூரிப்பு அதில் தெரியும்.

இப்போது அப்படி எல்லாம் ஜிப்பா போட முடிவது இல்லை. போடக் கூட முடிகிறது. கழற்றும்போது கையை உயர்த்தி உருவுவதற்குச் சிரமப்படுகிறது. தானாக எதையும் செய்ய முடியவில்லை என்றால், அப்புறம் என்ன மைனர், எதற்கு ஜிப்பா? இப்போது ஜிப்பாவும் கிடையாது. ‘என்ன மைனர், வெளியில கிளம்பியாச்சா?’ என்ற சத்தமும் கிடையாது. மகராசி போய்ச் சேர்ந்துவிட்டாள். இந்தத் தை வந்தால், ஆறு முடிந்து ஏழு வருஷங்கள் ஆகின்றன.

சின்ன மகன் குருசாமி வீட்டோடு வந்தே மூன்று வருஷங்களுக்கு மேல் இருக்கும்.

யாராவது ரொம்ப உருத்தாகக் கேட்பார் கள், ‘அது சரி, அங்கே ஒத்தையில கிடக் கிறதுக்கு, இங்கே பேரன் – பேத்திகூட இருக்கலாம்லா. நமக்கும் வயசு வருதா, போகுதா? நாளையும் பின்னைக்கும் இங்கே இருக்கிறதுதானே எல்லாத்துக்கும் ஒரு ஏந்தலா இருக்கும்.’

அவர்கள் அப்படிச் சொல்லச் சொல்ல… இவருக்குச் சிரிப்பாகவும் இருக்கும். இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கும். சிரிப்பு எதற்கு என்றால், இப்படிப் பழைய மாதிரி, ‘ஒத்தையில’, ‘நாளையும் பின்னைக்கும்’, ‘ஏந்தலா’ என்ற வார்த்தைகளைக் கேட்க

முடிகிறதே என்று. ‘ஏந்தலா’ என்று அவரே மறுபடி சொல்லிப் பார்த்துக்கொள்வார். தன்னை யார் இப்போது ஏந்திக்கொண்டு இருக்கிறார்கள்? தான், யாரை இப்போது ஏந்தி நிற்கிறோம் என்று யோசனை போகும். யாருடைய நீட்டிய கைகளிலோ, பிறந்த குழந்தை மாதிரி தான் கிடப்பது போலவும், சூரியனுக்குக் கீழே உயர்த்திக் காட்டுவதுபோலத் தன்னை அவர்கள் நீட்ட, வெளிச்சத்தில் கண்கள் கூசுவதாகவும் அவருக்குத் தோன்றும். சிரித்துக்கொள்வார். சின்ன மகனுக்குக் குழந்தை குட்டி இல்லை என்பதைச் சொல்ல வருத்தமாக இருக்கும். அப்படி நேராகச் சொல்ல மாட்டார். ‘எழுபது வயசு ஆச்சு. அப்புறம் என்ன? நம்மளே பச்சைப் பிள்ளை மாதிரிதானே’ என்பார்.

‘நீங்க பச்சைப் பிள்ளையோ, இல்லையோ? பார்வதி உங்களைப் பெத்த அம்மை மாதிரி தானே பார்த்துக்கிடுதா’ என்று எதிரே நிற்கிறவர் சொல்வார். பார்வதி என்கிறது அவருடைய மருமகள் பெயர். இதில் என்ன சங்கடம் அல்லது சந்தோஷம் என்றால், மாமியார்க்காரியாகிய அவருடைய மனைவியின் பெயரும் அது தான். பார்வதி என்கிற பெயரே நன்றாகத்தான் இருக்கிறது. அப்படி ஒன்றும் நீளமான பெயரும் அல்ல அது. ஆனால், ‘பாரு’ என்றுதான் குருசாமி தன் வீட்டுக்காரியைக் கூப்பிடுகிறான். மகன் கூப்பிடுகிறதாவது சரி. பக்கத்து வீடு, அடுத்த வீட்டுக்காரர்களுக்கு என்ன வந்தது? அவர்களும் அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.

மருமகளை அவர் பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை. அது எப்படியோ, பெயர் சொல்லிக் கூப்பிடாமலே இதுவரை எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், யாருக்குமே பெயர் என்கிறது அப்படி ஒன்றும் அவசியம் இல்லையோ என்றுகூடத் தோன்றுகிறது. ரேஷன் கார்டுக்கு வேண்டுமானால் அது பிரயோஜனம். அவருடைய ரேஷன் கார்டு சுடலைமாடன் கோயில் தெருவில் இருக்கிறது. அவர் பெயருக்குக் கீழ், பார்வதி என்ற உமையாள் என்று இருக்கும். அந்தப் பட்டப் பெயரையும் சேர்த்து யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

சமயத்தில் இப்படித்தான் பழசு, புதுசு எல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஞாபகம் வருகிறது. வயது ஆக ஆக… பழசு எல்லாம் புதுசு ஆகிவிடும்போல இருக்கிறது. புதியது எல்லாம் பழையது ஆகையில், பழையது புதியது ஆகக் கூடாதா? ஆகும். ஆகிறது. ஹோ அண்ட் கோ டைரியின் ஓரத்தில் பென்சில் செருகிவைத்துக்கொள்ள ஓர் இடம் இருக்கும். இந்தக் குச்சி பென்சில், அதன் சாக்லேட் நிறத்தோடு ஞாபகம் வருகிறது. ஞாபகத்தில் எது புதுசு, எது பழசு? அது எப்போதும் புதியதுதான்.

வாசலில் நின்று செருப்பைப் போடும்போது, வெயில் மாதிரி ஞாபகம் எப்போதும் புதியது என்று அவருக்குத் தோன்றியது. இது தெற்குப் பார்த்த வீடு. மேற்கே இருந்து சாய்கிற வெயிலில் எல்லாச் செடியும் மினுங்கிக்கொண்டு இருந்தது. வெறும் வெயில் மினுக்கம் மட்டும் இல்லை. ரப்பர் குழாயில் இருந்து பீச்சுகிற தண்ணீரின் கனத்தில் அமுங்கி விடுபடுகிற இலைகளின் மேல் விழுகிற பளபளப்பு. இது ஒவ்வொரு கருக்கலிலும் நடக்கிறதுதான்.

‘குருசாமி வீட்டுக்காரிக்கு செடி கொடின்னா உசிரு. வெளியூரில் இருந்து போன் போட்டாலும், அது வாடாமல் இருக்கா? இதுக்குத் தண்ணீ விட்டீங்களா? மார்ட்டின் மல்லி மொட்டு விட்டுட்டதா? என்றுதான் முக்கால்வாசிப் பேச்சு இருக்கும். அவனைக்கூட சாப்பிட்டீங்களா,தூங்கு னீங்களான்னு கேட்கிறது அப்புறம்தான்’ என்று அவரே மற்றவர்களிடம் சொல்வார். சொல்வதற்குக் காரணம் உண்டு. மருமகள் ஊரில் இல்லாத காலத்தில், தண்ணீர் ஊற்ற வேண்டியது அவருடைய பொறுப்பு. அது என்ன மார்ட்டின் மல்லி என்று முதலில் அவருக்கும் புரியவில்லை. அந்த அடுக்கு மல்லி பதியன், மார்ட்டின் என்கிற குருசாமியின் நண்பர் வீட்டில் இருந்துதான் கொண்டுவந்ததாம். அதனால் அப்படிப் பெயர்.

நிஜமாகவே, கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்கிற சின்னப் பிள்ளை மாதிரி, இலைகளுக்கு இடையில் அது முதல் தடவை பூத்தபோது, அவரைத்தான், ‘ஐயோ, வாங்க மாமா. இங்க வந்து பாருங்களேன்’ என்று கூப்பிட்டுக் காட்டினாள். கண்ணாடி போடாமல் பார்த்ததில், அது உத்தேசமான வெள்ளையில்தான் தெரிந்தது. ஆனால், பக்கத்தில் செடியோடு செடியாகக் குத்தவைத்து உட்கார்ந்து இருந்த மருமகள் முகம், அடுக்கடுக்காக மலர்ந்திருப்பது நன்றாகத் தெரிந்தது. இந்த குருசாமி கண்ணாடி முன்னால் முகச் சவரம் செய்துகொண்டு இருந்தால்தான் என்ன? ஒரு இரண்டு நிமிஷம் வந்து இதை எட்டிப்பார்த்தால் ஆகாதா? பூவைப் பார்க்காவிட்டாலும் இவளைப் பார்க்கலாம் இல்லையா? என்ன பிள்ளைகள்?

அவர் வெளியே புறப்பட்டுவிட்டது தெரிந்ததும், ரப்பர் குழாயைத் தரையோடு தரையாகக் கீழே வைத்துவிட்டு, இரும்புக் கதவை அகலமாக மருமகள் திறந்தாள். ‘இருக்கட்டும்’ என்றபடி கேட்டை மறுபடி மூடினார். கீழே குழாயில் இருந்து பெருகுகிற தண்ணீரில் ஒரு தவிட்டுக் குருவி அலகைச் சாய்த்துக் குடித்துக்கொண்டு இருந்தது. அது ஏழு கடல், ஏழு மலை தாண்டி, தாகத்தோடு பறந்து வந்திருப்பது போலவும், இந்தத் தண்ணீரை அது குடித்திருக்காவிட்டால், அதன் சிறகு களுக்குள் பத்திரப்படுத்தி இருக்கிற மொத்த வானத்தையும் எறும்பு அரிக்கக் கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே அது குப்புற விழுந்துவிடும் என்று தோன்றியது.

‘என்ன மாமா, எதையாவது மறந்துட்டீங்களா?’ என்று வளையல் ஈரத்தைச் சேலை நுனியால் துடைத்துக்கொண்டே கேட்பதற்குக் கூட அவருக்கு எதுவும் சொல்ல முடிய வில்லை.

‘உடம்புக்கு என்னமாவது செய்யுதா?’ என்று மறுபடி கேள்வி வரும்போதும் அவர் தண்ணீர் குடிக்கிற குருவியையே பார்த்துக்கொண்டு இருந்தார். அது இப்போது, தண்ணீரின் கம்பளத்தில் புரள்வதுபோல இரண்டு மூன்று முறை அதன் கால்களை மல்லாக்க நிறுத்தி, சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொண் டது. செருகிவைக்கப்பட்ட சிறகின் விசிறி மடிப்புக்குள் இருந்து தண்ணீரை அது திவலை களாக உதறிக்கொள்வதில் எந்தத் துக்கமும் இல்லை. ஒருவகை ஆனந்தத்தில்தான் அது இருந்திருக்க வேண்டும்.

அவருக்கு அது என்னவோ மிகப் பெரும் வாதையில் தரையில் துடிப்பதுபோல இருந்தது. முதன்முதல் அது வெளிவந்த முட்டை ஓட்டின் சிதறல்களை மண்ணில் இருந்து பொறுக்கி எடுத்து, மீண்டும் முட்டைக்குள் புகுந்துவிடத் தவிக்கின்ற பெரும் ஒற்றைப் பிரயாசை அது என்று தோன்றிற்று. கடைசி நிமிட வலியுடன், அவருடைய உள்ளங்கையில் திரும்பத் திரும்ப, வட்டமிடுவதுபோலவும் சுரண்டுவதுபோலவும் சுழன்றுகொண்டே இருந்து ஓய்ந்த அவருடைய ‘கிழவி’யின் விரல்கள் அன்றி அந்தச் சிறகுகள் வேறு இல்லை என்று பதைத்தது.

பொதுவாக, ‘வந்திருதேன்’ என்று யார்முகத் தையும் பாராமல் வெளியே போகும்போது, அவர் சொல்லிக்கொண்டு போவார். ஆதியில் இருந்தே அப்படி மட்டுமே சொல்லி அவருக்குப் பழகிவிட்டது. இங்கே போகிறேன், இவ்வளவு நேரத்துக்கு வருவேன் என்று உறுதியாக ஒரு போதும் அவர் சொல்கிறது இல்லை. வெறுமனே ‘வந்துவிடுகிறேன்’ என்பது மட்டும்தான்.

இன்றைக்கு அவரால் அதைச் சொல்ல முடியவில்லை.

வீட்டுக்குத் திரும்பி வருவோமா என்று தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட வர மாட்டோம் என்றுகூட அவர் நினைக்க ஆரம்பித்து விட்டார். ஒரு குருவிக்கே இப்படி என்றால், மனுஷனுக்கு எம்மாத்திரம்? பறவையைவிட மனுஷன் எந்த விஷயத்தில் உசத்தி? இந்த இரண்டு கை இருந்து என்ன பிரயோஜனம்? இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தோளில் இருந்து தொங்கினால் ஆயிற்றா?

றெக்கை மாதிரி வருமா? ஒரு எவ்வு எவ்வி… இப்படி உச்சி வரை போக முடியுமா? கீழே என்ன இருக்கு என்று கவலை இல்லாமல் தன்னந்தனியாக மேலே பறந்துக்கிட்டே இருக்க லாயக்கு உண்டா?

அவர் பார்க்கும்போதே, அவர் கதவைச் சாத்தும்போது உண்டான சத்தத்தில், அந்தக் குருவி பறந்தது. அந்தரத்தில் இருந்து வந்து அந்தரத்துக்குள் புகுந்து போய்விட்ட மாதிரி ஒரு நொடி அதன் வேகமான மறைவில் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. சரி, இப்போது போவோம். வருகிறதைப்பற்றி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு தெளிவான முடிவு செய்ய முடிந்ததில் அவர் சந்தோஷப்பட்டார். மேலும், வருவது என்பது கூட ஒரு வகையில் எங்கோ, எதற்கோ போவதுதானே என்று ஒரு புதிய கணக்கும் விடையும் பிடிபட்டது.

எதிரே இருக்கிற எருக்கலஞ் செடிகளின் மேல் ஒரு பட்டாம்பூச்சி பறந்துகொண்டு இருந்தது.

தான் தன்னுடைய சின்ன வயதில் தண்ட வாளங்களுக்குப் பக்கத்தில் பார்த்த அதே பட்டாம்பூச்சிதான் இப்போது தனக்கு முன்னே பறப்பதும் என்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். அந்த எருக்கலம் பூக்களைப்போல இந்தச் சாயுங்காலம் கரு நீலமாக இருக்கிறது என்று நினைத்தார்.

அந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, முழுவதுமாகச் சொல்லிப்பார்த்தார். தான் தினந்தோறும் இத்தனை காலமும் வாசித்து வருகிற ஆங்கிலத் தினசரியின் ஞாயிற்றுக் கிழமை இணைப்புக்கு ஒரு கட்டுரையை அந்த முதல் வரியுடன் எழுதி அனுப்ப வேண்டும் என்று மிக உடனடியாக அவர் ஆசைப்பட்டார். அவருடைய கட்டுரை பிரசுரமாகும் அதே பக்கத் தில், தண்டபாணி தேசிகரின் படம் ஒன்று வெளியாகி இருப்பதாகவும், ‘என்ன கவி பாடி னாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்ற அடர்த்தியான குரல், இப்போது நடக்கிற அவருடைய பாதையில் நிரம்புவதுபோலவும் அவர் தன்னைத்தானே ஒரு சங்கிலியின் தொடர்ந்த கண்ணிகளில் கோத்துக்கொண்டார்.

கட்டுமானம் நடந்துகொண்டு இருக்கிற ஒரு புதிய அபார்ட்மென்ட் கட்டடத்தின் உச்சித் தளத்தில் வேலை செய்கிறவர்கள் பரபரப்பாக நகர்ந்துகொண்டு இருந்தார்கள். கான்கிரீட் போடும் தினத்துக்கும், இப்படி வெளிச்சம் குறைந்துகொண்டு இருக்கும் மாலை நேரத்துக் கும், இந்த உரத்துக் கேட்கும் குரல்களுக்கும் எப்போதுமே ஒரு பொருத்தம் இருப்பது எப்படி என ஆச்சர்யப்பட்டார். கொஞ்ச நேரம் அது என்ன திசை என்ற அனுமானத்தில் அவர் நடை இருந்தது. அது கிழக்கும் இல்லை… தெற்கும் இல்லை. அநேகமாக தென் கிழக்கு. தென் கிழக்கில் முழு வட்டத்தில் அஸ்தமனமாகிற ஓர் ஆரஞ்சுச் சூரியன் அந்தக் கட்டடத்தின் உச்சியில் இப்போது இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியவுடன், நிஜமாகவே அப்படி ஒரு சூரியனை அங்கே அவரால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது.

என்ன அழகான சூரியன். அது என்ன அந்த சுற்றுச் சுற்றுகிறது? தன்னுடைய வட்டத்தைத் தானே வெளியே தள்ளுவதுபோல், முடிவற்ற ஆரஞ்சு மையத்தில் இருந்து விளிம்புக்குத் தன்னை அது நகர்த்துவது எப்படி? ஒரு தாமரைப் பூவில் ஒரு குளம் நிரம்பிவிடுமா?

எதிரே சைக்கிளில் வந்தவர் இவரைப் பார்த்ததும் இறங்கினார். ‘சவுக்கியமா’ என்று கேட்டார். யார் என்று சட்டென இவருக்குப் பிடிபடவில்லை. எல்லாம் சற்று மங்கி அப்புறம்தான் தெளிகிறது இன்றைக்கு.

‘முருகானந்தம்லா… போஸ்ட்மேன் முருகானந் தம்’ என்று சொல்லி, ‘சவுக்கியமா ஐயா?’ என்று மறுபடி இவர் கையைப் பிடித்தார். அந்தக் கைப் பிடிப்பில் இருந்து அடையாளம் தன்னை வரைந்து முருகானந்தமாக நிறுத்தியது.

‘சவுக்கியமா இருக்கியாடே’ என்று தன் கையைப் பிடித்த முருகானந்தத்தின் கையை மேலும் கொஞ்ச நேரம் அப்படியே பிடித்து இருந்தார். அவர் விநியோகித்த தபால் கட்டுக்களும் கடிதங்களும் இன்னும் அவர் கையில் அப்படியே இருப்பதுபோல இருந்தது. முருகானந்தமே ஒரு கடிதத்தை எழுதி, அந்தக் கடிதத்தை ஒரு தபால்காரராக இவர் கையில் தருவதுபோல இருந்தது.

முருகானந்தத்திடம் சொல்வதுபோலவும் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போலவும், ‘என் அட்ரஸுக்குக் காயிதம்வந்து எவ்வளவு நாளாச்சு’ என்றார். ‘கடேசிக் காயிததுக்குத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என்று மேலே கையைக் காட்டிச் சிரித்தார். ஆனால், உண்மையில் அவருக்கு அழுகை வருகிறதுபோலத்தான் இருந்தது. அழக் கூடாது என்று மேலும் சிரித்தார்.

முருகானந்தம் கையை இறுக்கினார்.

இவர் கேட்கவே இல்லை. முருகானந்தம் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொன்னார், ‘ரிட்டயர்ட் ஆயிட்டோம்னு சும்மா உக்காந்திருக்க முடியாது இல்லியா ஐயா. ஒரு வீட்ல வாட்ச்மேனா இருக்கேன். நைட் டூட்டி’. அவர் சைக்கிள் செயினும் மட்கார்டும் முன்பு கேட்ட மாதிரி இப்பவும் அதே சத்தத்தைத்தான் போடுகிறது. அந்த உலோகச் சத்தம் அவரை விட்டு விலகிப் போகப் போக… ஒரு புள்ளியில் எந்தச் சத்தமும் அற்ற, யாருமே அருகில் இல்லாத ஓர் இடத்தில் அவர் நின்றுகொண்டு இருந்தார். அவரைப்போலவே சத்தம் இல்லாமல் ஒரு மரமல்லி மரம் அவர் பக்கத்தில் இருந்தது. நிறைய பூ உதிர்ந்துகிடந்தது. இவர் பார்க்கும்போதே இன்னொரு பூ உதிர்ந்தது. கடைசியாக உதிர்கிற இதுதான் கடைசி யாகப் பூத்திருக்குமா? முதலில் பூத்துக் கடைசியில் உதிர்வதும், கடைசியில் பூத்து முதலில் உதிர்வதும் இல்லாமலா இருக்கும்? மகன் குருசாமிக்கு முன்னால் பிறந்து, அறைக்குள்ளேயே இறந்ததே ஒரு பெண் குழந்தை, அதன் ஞாபகம் வந்தது. அந்தக் குழந்தையும் இந்தப் பூவும் ஒன்றுதான் என்று பட்டதும், அதைக் குனிந்து எடுத்தார். உள்ளங் கை விரித்த மாதிரி வெள்ளை. நடுவில் லேசாகப் பட்டும் படாமல் மஞ்சள். பார்த்தபடியே நடந்தார்.

தட்டான்கள் குறுக்கும் மறுக்கும் பறந்து, தரையில் நிழல் சிறகடித்தது.

நடக்கும்போது ஏதோ பின்னால் சத்தம் கேட்டது. பின்னால்கூட இல்லை. கால் பக்கம் இருந்து வந்தது. வேட்டி கரண்டைக் காலில் தடுக்கினால், ரப்பர் செருப்பு குதிகாலில் பட்டால் வருகிற மாதிரி, தரையோடு தரையாகச் சத்தம் நகர்ந்தது. திரும்பிப் பார்க்கையில், ஒரு நாய்க் குட்டி முனங்கிக்கொண்டே வந்தது. நல்ல வெள்ளை. நெற்றியில் காப்பி சிந்தின மாதிரி வேறு நிறம். பிறந்து நான்கு நாள்கள்கூட இருக்காது. அம்மா மடி ஞாபகமாக, காம்பு தொங்கும் திசையில், தாய்ப் பாலை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்தது. சின்ன முனங்கல் தவிர வேறு சத்தம் இல்லை. எறும்பு புறங்கை ரோமத்தில் ஊர்கிற மாதிரி. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்தப் பூ உதிர்ந்த மாதிரி.

காலில் மிதிபட்டுவிடக் கூடாதே என்ற ஜாக்கிரதையில், ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்து எதிர்ப் பக்கமாகப் போனார். அந்தக் குட்டி முன்பைவிடத் தீவிரமாகச் சிணுங்கிக்கொண்டு அவர் பின்னாலேயே அந்தப் பக்கத் துக்கு வந்தது. ஒரு சிறு நூல் பந்துபோல, ஒரு அகல மரக் கரண்டி மாதிரி தலையைக் குனிந்துகொண்டே அது தன்னுடன் வருவது அவருக்குப் பிடித்துப் போயிற்று. கால் பெருவிரலை முகர்ந்து பார்க்கும் அதன் மூச்சு அவர் உச்சிக்கு ஏறியது.

வீட்டு வாசலில் தண்ணீர் குடித்த குருவிதான் இப்போது இப்படி நாய்க் குட்டி ஆகிவிட்டது என்று நம்பினார். அந்த பட்டாம்பூச்சி, எதிரே வந்த முருகானந்தம், மர மல்லிப் பூ எல்லாம்கூட அந்தக் குருவிதான் என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை இப்போது. இப்படி எல்லாம் யோசிக்கையில், கொஞ்ச நேரம் மேற்கொண்டு செல்லாமல் அந்த இடத்திலேயே நின்றதும், அந்த நாய்க் குட்டியும் அப்படியே நின்றது.

குனிந்து அப்படியே அதைத் தூக்கினார். நெற்றிப் பக்கத்தை நீவிவிட்டார். அதன் வெதுவெதுப்பும் சன்னமாக எக்கி எக்கி அதன் வயிறு அதிர்வதும் அவர் உள்ளங்கையில் தெரிந்தது. உடல் மொத்தத்தையும் அது சிலிர்த்த சமயம், கைகளில் ஈரம் பெருகி, அவர் சட்டைப் பக்கம் சிந்தியது. சட்டென்று அவர் அங்கீகரிக்கப்பட்டதுபோலக் கண்களை மூடி நின்றார்.

பூப்போலத் தன் முகத்தின் பக்கம் அதைக் கொண்டுவந்து, அதன் நாசிக் கறுப்பில் முத்தம் கொடுத்துக்கொண்டே, நம்ம வீட்டுக்குப் போலாமா?’ என்றார்.

அவர் சுண்டு விரலைச் சப்பிக் குடிக்கப்போவதுபோல அது முகர்ந்துகொண்டே இருந்தது.

எந்தச் சத்தமும் போடவில்லை!

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஒரு தாமரைப் பூ… ஒரு குளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *