ஒரு கோழியும், சில குஞ்சுகளும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,086 
 

இரவு, “ஆப்÷ஷார் டீம்’ உடன் பேசி முடித்து, படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில், கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல் ரேவதிக்கு. இருந்தாலும், காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங் நினைவு, அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி, கிளம்பச் சொன்னது. கார்ன் பிளேக்சை பால் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, இரவு சமைத்ததில் மீதமிருந்ததை, மதியத்துக்கு பேக் செய்து, அவசர அவசரமாய் கிளம்பினாள்.
ஒரு கோழியும், சில குஞ்சுகளும்!மீட்டிங் இருக்கையில் சைலண்ட்டில் போட்டிருந்த அவளது மொபைல் திரையில், ஐ.எஸ்.டி., நம்பர் ஒன்று தொடர்ந்து மின்னிக் கொண்டிருந்தது. அது, ஒரு இந்திய எண் என்பது, ஆர்வத்தை தூண்டினாலும், மீட்டிங் மும்முரத்தில் அதை ஒதுக்கி விட்டு, வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
வெளியே வந்து, மீதி இருந்த வேலையில் மூழ்கியவள், மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும், ஆர்வமாக எடுத்துப் பேசத் தொடங்கினாள்.
“”ஹலோ!”
“”ஹலோ… ஆம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ் ரேவதி சந்திரசேகர்?” எதிர் முனையில் பேசியவருக்கு ஐம்பது வயதிருக்கலாம்; ஆனால், இது வரை கேட்டிராத குரல்.
“”எஸ்… ரேவதி ஹியர்!”
“”இப் யூ டோண்ட் மைண்ட், நாம தமிழில் மேற்கொண்டு பேசலாமா? ஐ கேன் பீல் மோர் கம்பர்ட்டபிள்!”
“”தாராளமா…”
“”நான் பேசறதில உனக்கு ஒண்ணும் சிரமமில்லையேம்மா? இப்ப அங்க மணி பதினொன்னேகால் இருக்கும் இல்லையா? வேலையா இருந்தா அப்புறமா வேணும்னாலும் பேசலாம். ஒண்ணும் அவசரமில்லை!”
“”இப்ப ஒண்ணும் பிரச்னையில்லை சார். உங்களுக்குத்தான் அகாலமாயிருக்கும். பரவாயில்லைன்னா சொல்லுங்க…”
“”என் பேர் ராமமூர்த்தி. திருச்சில இருக்கேன். உங்க பெரிய மாமா ராஜகோபால் மூலமா உன்னோட ஜாதகம் கிடைச்சுதும்மா. உங்கம்மாட்ட பேசினேன். அவாதான் உன் நம்பர், மெயில் ஐடி எல்லாம் கொடுத்தா…
“”என் பையன் பேரு சங்கர். அவனும் செயிண்ட் பால்ல இருக்கான். நீ மினியாபோலிஸ்ல தானே இருக்க? ரெண்டு ஊரும் நம்மூர் ஐதராபாத் – செகந்திராபாத் போல், ட்வின் சிட்டீஸ் இல்லயா? ஊர் ரெண்டும் ரொம்ப பக்கம் இருக்காப்பலயே, நீங்க ரெண்டு பேரும் கூட ரொம்ப பக்கத்துல இருக்கணும்ன்னுதான் பெரியவா நாங்க ஆசப்படறோம். புரியறதில்லையா?”
தன் சிலேடையை தானே மெச்சிய சிரிப்புடன் அவர் பேசிக் கொண்டே செல்ல, ரேவதிக்கு தலை சுற்றியது.
திருமணமா? தனக்கா? இந்த அம்மாவுக்கு என்ன ஆயிற்று, என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவள் அந்தப் பக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சை சரியாக கவனிக்காமலே, “”சரி… சரி…” என்று
சமாளித்து, போனை, “கட்’ செய்தாள்.
அந்த பெரியவர் பேசியதின் சாராம்சம், அவரது மகன் சங்கருக்கு, ரேவதியின் ஜாதகம் ரொம்ப பொருந்துகிறது. பக்கத்திலிருக்கும் நகரத்தில்தான் அவனும் தங்கியிருக்கிறான் என்பதால், இவளது தொலைபேசி எண்ணை அவனுக்கு தந்து, இந்த வார விடுமுறையில் இருவரும் சந்தித்துப் பேச வேண்டுமென ஏற்பாடு. ஆனால், இதை அம்மா சொல்லாமல், வேறொருவர் சொல்லித் தெரிந்து கொள்வதில் வந்த எரிச்சல் ஒருபக்கம் என்றால், முதலில் தனக்குத் திருமணம் என்று எப்படி அம்மாவுக்கு யோசிக்கத் தோன்றியது என்ற குழப்பம் ஒரு பக்கம் பிடுங்கியது.
ஒருவழியாக வேலைகளை பேருக்கு ஒப்பேற்றிவிட்டு, வீடு வந்து சேர்ந்தவள், சோர்வுடன் உட்கார்ந்தாள். இந்தியாவில் மணி ஆறு ஆன பின்னர்தான் வீட்டிற்கு போன் செய்ய முடியும் என்பதால், வேறு எதையும் செய்யப் பிடிக்காமல், கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
சத்தமாக, “”ஹாய்…” என்றவாறே உள்ளே நுழைந்த அறைத்தோழி தாரிணி, குனிந்து தன் ஷூவை கழற்றத் தொடங்கினாள். இவளிடமிருந்து பதில் எதுவும் இல்லாததை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். முகமும், கண்ணும் சரியில்லை என்பதை உணர, அவளுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. இரண்டு வருட பழக்கத்தில், இவளை நன்றாகவே புரிந்து கொள்ளத் துவங்கியிருந்தாள் தாரிணி. மேற்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்று, முகம் கழுவி, உடை மாற்றி வந்தவள் இரண்டு கோப்பை காபியுடன் வந்து, அவளருகில் அமர்ந்தாள்.
“”என்ன… மேடமுக்கு இன்னிக்கு ஆப்÷ஷார் கால் எதும் இல்லயா? இன்னிக்கு டின்னர் உங்க டேர்ன் வேற. நீங்க என்னடான்னா டிரஸ் கூட மாத்தாம அப்படியே போஸ் கொடுத்துகிட்டிருக்கீங்க… என்ன மேட்டர்?”
“”என்ன சொல்றதுன்னே தெரியல தாரிணி. என் குடும்ப நிலமையை உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன். நான் தான் மூத்தவ. இன்னும் ரெண்டு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கா. நாங்க குழந்தையா இருக்கும் போதே அப்பா போயிட்டார். சொத்துன்னு இருக்கறது ஒரு வீடு மட்டும்தான். சின்ன போர்ஷன்ல குடி இருந்துண்டு, மீதி
இடத்தை வாடகைக்கு விட்டு, அதுலதான் அம்மா சிக்கனமா எங்களை எல்லாம் வளர்த்தா…
“”நான் வேலைக்குப் போற வரைக்கும், அம்மா சமையல் வேலைக்கு போயிண்டிருந்தா. வேலைக்குப் போக ஆரம்பிச்சதும்தான், இப்ப நாலு வருஷமா அம்மா ரெஸ்ட்ல இருக்கா. ஆன்சைட் வந்து, ரெண்டு வருஷம் கூட ஆகலை. இப்பத்தான் ஓரளவு ஒரு தங்கைக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு நகையும், பணமும் சேர்ந்திருக்கு…”
இதெல்லாம் ஓரளவுக்கு தாரிணிக்கும் ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தாலும், ஏதோ பெரிய டென்ஷனில் இருக்கும் ரேவதி, எல்லாவற்றையும் தானே கொட்டித் தீர்க்கட்டும் என்று, “அதான் எனக்குத் தெரியுமே!’ என்று குறுக்கு வெட்டெல்லாம் போடாமல், அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“”இப்போ என்னடான்னா கொஞ்சம் கூட யதார்த்தமா யோசிக்காம, எனக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிருக்கா எங்கம்மா. பையனோட அப்பா போன் பண்ணினப்புறம்தான் எனக்கே தெரியவருதுன்னா எப்படியிருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு? தவிரவும், நான் கல்யாணம் வேணும்ன்னு இவாகிட்ட கேட்டேனா? எதை, எப்படி செய்யுறதுன்னு, ஒரு கணக்கு வேணாம்? கொஞ்சங்கூட யோசனையில்லாம எதையாவது பண்ணி வைக்கறதே பொழப்பா போச்சு… எப்படா அங்க மணி ஆறாகும்ன்னு காத்திண்டிருக்கேன். போன்ல மாட்டட்டும்,
இன்னிக்கு இருக்கு எங்கம்மாவுக்கு…” என்றவளை புன்னகையுடன் பார்த்தவாறே, எழுந்தாள் தாரிணி.
“”எங்கப்பா எழுந்துக்கறே?”
“”சமையல முடிச்சுட்டு வந்துடறேன்!”
“”ஹேய்… இன்னிக்கு என்னோட முறை தானே… நானே சமைச் சுட றேன்பா!”
“”வேணாம்மா தாயே… நல்ல நாள்லயே நீ சமைக்கறது ரொம்ப கொடுமை. அதுவும் இன்னிக்கு நீ இருக்கற மூடுக்கு, உன்னை சமைக்கவிட்டு, அதை சாப்பிடற அளவு ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்லை. வேணும்ன்னா நீயும் ரெண்டு நாளைக்கு சமைச்சு காம்பன்சேட் பண்ணிக்கோ… இன்னிக்கு என்னை விட்டுடும்மா; புண்ணியமா போகும்!” என்று சிரித்துக் கொண்டே சொல்லியவாறு, கிச்சனை நோக்கிப் போனாள் தாரிணி.
மேலுக்கு கிண்டல் செய்வது போல் தெரிந்தாலும், அந்த செயலில் இருந்த ஆதரவும், அனுசரனையும் ரேவதியை நெகிழ வைத்தது. “இரண்டே வருடங்கள் உடன் தங்கியவளே இவ்வளவு தூரத்துக்கு மனதைப் புரிந்து கொண்டு
நடக்கையில், தன்னை பெற்று வளர்த்த அம்மா ஏன் இப்படி புரிந்து கொள்ளாமல் படுத்துகிறாள்…’ என்று நினைத்த போது, எரிச்சல் ஏற்பட்டது.
ரேவதி மட்டுமல்ல, நாகலட்சுமி அம்மாவின் நான்கு பிள்ளைகளுமே ரொம்பவும் பொறுப்பான பிள்ளைகள்தான். மற்ற மூவரும், அம்மாவுக்கு அதிக செலவு வைக்காமல், ஸ்காலர்ஷிப்பில் படிப்பர் என்றால், இவள் ஒரு படி மேலே போய், மாலை நேரங்களில், தனக்கு கீழ் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து, வீட்டுச் செலவுக்கே கை கொடுப்பாள்.
மெரிட்டில், பி.இ., முடித்து, கேம்பஸ் இன்டர்வியூவில் ரேவதிக்கு வேலையும் கிடைத்த பின்னர்தான், நாகம் மாமி சிரித்தால், எவ்வளவு அழகு என்பது தெரிய வந்தது. ரேவதி வேலைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் போக்குவரத்து செலவு தவிர்த்து, டீ – காபிக்கு கூட அநாவசியமாய் செலவு செய்தவள் இல்லை. அவ்வளவு ஏன், இரண்டு வருடமாய் யூ.எஸ்.,சில் இருந்தாலும், இன்னமும் நயாகராவை கூட தரிசித்ததில்லை.
தம்பி, தங்கைகளின் படிப்பு, இரண்டு தங்கைகளின் கல்யாணம், அதற்கு பின் தனக்கும், அம்மாவுக்குமான வாழ்க்கைச் செலவுக்கு சேமிப்பு என, அவளது இலக்குப் பட்டியல் பெரிது. அர்ஜுனன் கிளியின் கண்ணை மட்டுமே பார்ப்பது போல்தான், அவள் வாழ்வும் ஓடிக் கொண்டிருந்தது. வாரயிறுதிகளில் விதவிதமான ரெஸ்டாரன்ட்டுகளில் சாப்பிடவோ, லாங் வீக் எண்ட் எனப்படும் நீண்ட விடுமுறைகளில் அக்கம் பக்கமிருக்கும் ஊர் சுற்றிப் பார்க்கவோ அவள் வருவதில்லை. தானோ மற்ற தோழிகளோ கிளம்புகையில் ஒரு துளி ஏக்கமும்
அவள் கண்களில் எட்டிப் பார்த்தது கூட இல்லை என்பதெல்லாம், தாரிணிக்கு அவள் மேல் மதிப்பை அதிகரிக்க வைத்த பல காரணிகளில் ஒன்று.ரேவதியின் குடும்ப நிலமையை வெளியிலிருந்து பார்க்கும் தனக்கே, இந்த கல்
யாண ஏற்பாடு எவ்வளவு அசட்டுத்தனமானது என்று புரிகையில், ரேவதியின் அம்மா ஏன் இப்படி குழப்படி செய்கிறார். ஒரு வேளை ஊரும், உறவும், “வயதுப் பெண்ணுக்கு திருமண முயற்சி செய்யவில்லை…’ என்று தூற்றக் கூடாது என்று, பேருக்கு செய்யும் முயற்சியோ என்று கொஞ்சம் விகல்பமாகக் கூட தோன்றியது.
தாரிணி சமையலை முடித்துவிட்டு, கிச்சனை ஒழுங்கு செய்ய ஆரம்பித்த போது, ரேவதி அம்மாவோடு பேச ஆரம்பித்து விட்டாள் என்பதை உணர முடிந்தது.
அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று, தன் அறைக்குச் சென்றவள்,
கதவைத் தாளிட்டு, தன் வேலைகளில் மூழ்கினாள்.
வயிறு உணவை நினைவு படுத்திய போது, மணி பதினொன்றாகியிருந்தது.
வெளியே வந்தவள் அப்போதுதான் ரேவதியும், சாப்பாட்டுத் தட்டுடன்
உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். பார்த்த மாத்திரத்தில், அவள் முகத்தில்
தெளிவும், மகிழ்ச்சியும் தெரிந்தது, மனதுக்கு இதமாக இருந்தது.””என்ன ரேவ்ஸ், அம்மாவை வறுத்துதெடுத்துட்ட போல… குரல் ரொம்ப பலமா இருந்துச்சே?”
“”ஓ… ரொம்ப கத்திட்டேனா? அதான் ரூம் கதவையே திறக்காம வேலை
பார்த்துகிட்டிருந்தியா? சாரி தாரிணி!”
“”ச்சீ… எதுக்கு இதுக்கெல்லாம் சாரி சொல்ற? நான் சும்மா விளையாட்டுக்கு
சொன்னேன். சரி, அம்மா என்ன சொல்றாங்க? உன் ஸ்டாண்ட் என்னான்றத தெளிவு படுத்திட்டியா? புரிஞ்சுகிட்டாங்களா? என்கிட்ட சொல்லலாம்ணா சொல்லு…”
“”உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன்? எதுக்கு இவ்ளோ
பார்மலா பேசற நீ? அம்மாவுக்கு, நான் தெளிவுப்படுத்த வேண்டியதில்லை.
அம்மா என்னை தெளிவாக்கிட்டா தாரிணி!”
புரியாமல் பார்த்தவளை, புன்னகையுடன் எதிர் கொண்ட ரேவதி, “”ஆமாம்பா…
அம்மாவோட ப்ளானிங்கும், தைரியமும், வித்யாசமான சிந்தனையும்
என்னிக்குமே எனக்கு ஆச்சரியமான ஒண்ணு. இன்னிக்கும் அம்மா வழக்கம் போல, யாரும் கெஸ் பண்ண முடியாத விளக்கத்த கொடுத்து, என்னை வாயடச்சு போக வச்சுட்டா…”
“”புரியும்படியா பேசு ரேவ்ஸ்!”ஆச்சரியத்திலும், ஆர்வத்திலும் தாரிணி சாப்பிடுவதை கூட நிறுத்தி விட்டு, ரேவதியை நோக்கித் திரும்பினாள்.
“”நாமதான் ரொம்ப தமிழ் சினிமா பார்த்து, அப்பா இல்லாத குடும்பத்துல யாராவது ஒருத்தர் தியாகியா ஆகறதுன்ற மாதிரில்லாம் அபத்தமா யோசிக்கறோம்.
“மீதி இருக்கற குழந்தைகளைக் காப்பாத்த, உன்னை பலியிடறதுக்கு, நானென்ன தலச்சன் குட்டிய பத்தியத்துக்கு முழுங்கற பூனையா…’ன்னு அம்மா கேக்கறா…
நாலு மாசத்துக்கு முன்னாடியே என் தங்கை ராஜிக்கும் கேம்பஸ்லயே வேலை
கிடைச்சுடுத்துன்னு சொல்லியிருந்தேன், ஞாபகம் இருக்கா?”
ஆமாம் என்பது போல் தாரிணி தலையசைத்தாள்.
“”அம்மா சொல்றா, “உன் பங்குக்கு அடுத்தவளோட படிப்பு முடியற வரைக்கும் வீட்ட காப்பாத்திட்ட. அதோட ஒருத்தி கல்யாணத்துக்கு வேணுங்கற அளவு நகையும், பணமும் சேர்த்துட்ட. இப்ப நீ உன் வாழ்க்கைய பாக்கணும். நீ சேர்த்தது உனக்கே பயன்படணும். இனி, ராஜியோட பொறுப்புல கொஞ்ச நாள்
குடும்பத்த ஓட்டறேன். இன்னும் நாலு வருஷத்துல அவள் கல்யாண நேரம் வருவதுக்கும், சின்னதுகள் ரெண்டும் படிப்ப முடிச்சுட்டு வேலைக்குப் போகவும், நேரம் சரியா இருக்கும். எல்லாருக்கும் கல்யாணத்த முடிச்சுட்டா, மிச்சம் இருக்க வே இருக்கு, என் ஆம்படையான் வச்சுட்டுப் போன வீடு. நான், என் பாட்டை ஓட்டிப்பேன்.
“இப்ப, நீங்கல்லாம் இப்படி கை நிறைய சம்பாதிக்கறேள்ன்றதாலதான் நான் இப்படி சொல்றேன்னு நினைக்காதே ரேவதி. உங்கப்பா காலமானபோதே அவர் ஆபிஸ்ல கொடுத்த பணம், நம்ம ஊர்ல இருந்த பூர்வீக நிலத்தை வித்த பணம்ன்னு எல்லாத்தையும் போட்டு, மூணு பொண்ணுகளுக்கும் நகை பண்ணி, அதை என் பெரிய அண்ணா மூலமா பாங்க் லாக்கர்ல வச்சுட்டேன். உழைச்சும், இந்த வீட்டு வாடகையை வச்சும் உங்களையெல்லாம் படிச்சு ஆளாக்கிண்டிருந்தேன். நீங்க யாரும் இப்படி ஓகோன்னு படிச்சு சம்பாதிக்கலைன்னாலும் கூட, அந்த நகைய வச்சுண்டு, மேல் செலவுக்கு இந்த வீட்டை வித்தாவது உங்க ஒவ்
வொருவரையும் சக்திக்கேத்த மாதிரி, ஒரு வைதீகம் பண்ற பையனுக்காவது கல்யாணம் பண்ணி அனுப்பி இருப்பேனே ஒழிய, உங்கள் ஒருத்தரோட சம்பாத்யத்தை பிடுங்கி, மத்தவாளுக்கு இட்டு நிரப்பணும்ன்னு நினைக்க மாட்டேன்! “இன்னிக்கு உடம்புல பலமும், நெஞ்சுல தைரியமும் இருக்கறப்போ, தம்பி தங்கைகள்தான் முக்கியம்; அவாளை இன்னும் உயரத்துல கொண்டு போய் வைக்கணும்ன்னு உனக்குத் தோன்றது இயல்புதான். ஆனா, அவாள்ளாம் ஆளாகி, தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுண்டு, உன்னை கவனிக்க நேரமில்லாம ஓடறப்போ, அது நன்றி கெட்ட தனம்ன்னு தோணும். எவ்வளவு தியாகம் பண்ணினேன்னு நினைக்கத் தோணும். அப்போ அவா மேல ஆங்காரப்பட்டோ, உன் மேலயே கழிவிரக்கப்பட்டோ என்ன ஆகும் சொல்லு?
எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கு… யாரும் இன்னொருத்தரோட வாழ்க்கைய அழிக்கவோ, உசத்தவோ வேண்டாம்.”அதுக்கு பதிலா என் வயத்துல பொறந்த கொழந்தையங்க எல்லாரும், வசதி குறைவா இருந்தாலும், அவாவா நிம்மதியாவும், சந்தோஷமாவும் வாழ்ந்தா எனக்கு அது போதும். தியாகம்ங்கறதெல்லாம் ஒரு நேரத்துல உசத்தியா தெரிஞ்சாலும், பிற்பாடு ஏமாந்துட்டோமோன்னு தோண வச்சுடும். அதெல்லாம்
நமக்கு வேண்டாம்…’ன்னு சொல்லிட்டாப்பா.”
“”சோ… சீக்கரம், டும்… டும்… தான்!”
பதில் பேசாமல், தலை குனிந்தபடி தலையசைத்தாள் ரேவதி.
அம்மாவை நினைத்து, நெகிழ்ந்து கலங்கிய அவளின் கண்களைப் பார்த்த போது, படிப்பறிவில்லாத அந்த மனுஷியின் தைரியத்தின் மீதும், உணர்ச்சிவசப்படாது முடிவுகளை எடுக்கும் அவரது நெஞ்சுரத்தின் மீதும் மரியாதை பெருகியது தாரிணிக்கு.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *