ஒரு குழந்தை டீச்சர் ஆகிறது!

 

‘‘சார், உங்களுக்கு போன்!’’

எழுந்து போய் ரிசீவரை எடுத்து, ‘ஹலோ’ என்றேன்.

‘‘அப்பா… நான் காயத்ரி பேசறேன்…’’

‘‘சொல்லுடா கண்ணா..!’’

‘‘இன்னிக்கு ஸ்கூல் ஆண்டு விழாவுல, என்னோட டான்ஸ் புரொகிராம் இருக்குன்னு சொன்னேனே… கிளம்பி வர்றீங்களாப்பா?’’

அடடா… பிஸியான வேலையில அது மறந்தேபோச்சு!

‘‘எத்தனையாவது ‘அயிட்டம்’ உன்னோடது?’’

‘‘அஞ்சாவது!’’

‘‘சரிம்மா! பர்மிஷன் சொல்லிட்டு வந்துடறேன்!’’

ரிசீவரை வைத்துவிட்டு வந்து, என் டேபிளை ஒழுங்குபடுத்திவிட்டு, பேனாவை மூடி பையில் வைத்துக்கொண்டே, மேனேஜரிடம் போய் விஷயத்தைச் சொல்லி பர்மிஷன் கேட்டு வெளியே வந்து, ஸ்கூட்டரை உதைத்தேன்.

நான் வீட்டுக்கு வருவதற்கு முன்பே என் மனைவியும், காயத்ரியும் ஸ்கூலுக்குப் போயிருந்தார்கள்.

என்னிடமிருந்த சாவியைப் போட்டுத் திறந்து, உள்ளே போய் முகத்தைக் கழுவிக் கொண்டு, தலையை வாரிக்கொண்டு, ஃப்ரெஷ்ஷாகக் கிளம்பினேன்.

சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. எனக்கும் பனிக்கும் ஆகவே ஆகாது. ராத்திரியெல்லாம் மூக்கடைப்பு, சளி, இருமல்… இத்யாதி!

ஸ்கூலில் ஃபங்ஷன் நடந்துகொண்டு இருந்தது. ஐந்தாவதாக மேடை ஏறினாள் என் பெண். ஆடி முடித்ததும் பெருமையாக, வலிக்க வலிக்கக் கை தட்டினேன். மணி பார்த்தேன். எட்டு. முதல் நாள் ராத்திரி பூரா குழந்தை லொக் லொக்கென்று இருமிக்கொண்டு இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

எழுந்து, ஸ்டேஜின் பின்பக்கம் போய், காயத்ரியைத் தேடினேன்.

பட்டாம்பூச்சிகளாய் நின்றிருந்த மழலையர் கூட்டத்தில், என் மனைவி புகுந்து போய், காயத்திரி யைத் தேடிப் பிடித்துக் கூட்டி வந்தாள்.

‘‘சரி காயத்ரி… வீட்டுக்குப் போகலாமா? கிளம்பு!’’ என்றேன்.

‘‘என்னப்பா… இன்னும் நிறைய புரொகிராம் இருக்கே?’’

‘‘இருக்கட்டுமேம்மா! உன் புரொகிராம்தான் முடிஞ்சுடுச்சே! எல்லாம் முடியணும்னா ராத்திரி பத்து மணி ஆயிடும். நீ சின்னக் குழந்தை. எட்டு மணிக்கெல்லாம் உனக்குத் தூக்கம் வந்திடும். வா, போகலாம்!’’

‘‘இல்லப்பா! எல்லோரும் என்னை மாதிரி குழந்தைங்க தானே? நிகழ்ச்சி முடிய முடிய நம்மளை மாதிரி ஒவ்வொருத்தரா கிளம்பி எல்லோரும் போயிட்டா, கடைசி புரொகிராமைப் பார்க்கக் கூட்டமே இல்லாம போயிடாதா? அந்தக் குழந்தைங்க மனசு என்ன கஷ்டப்படும்? என்னோட டான்ஸ் கடைசி அயிட்டமா இருந்தா…?’’

காயத்ரி பேசப் பேச, நான் பெருமிதமாக அவளை என் மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, ஆவலோடு மற்ற புரொகிராம்களை ரசிக்க ஆரம்பித்தேன்.

- வெளியான தேதி: 19 பெப்ரவரி 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
பரபரப்பாய் இருந்தாள் கௌரி. ஆபரேஷன் சரியாக ஒன்பது மணி. கடிகாரமுள் ரொம்பவும் மெதுவாய் ஊர்ந்தது. “சுவாமி’ படத்தின் முன் உட்கார்ந்து, குத்துவிளக்கை ஏற்றினாள். புதிதாய் பறித்து வந்த மல்லிகைப் பூக்களை முருகன் படத்தின் முன் தூவினாள். கம்ப்யூட்டர் சாம்பிராணியில் இடமே மணத்தது. சுலோகத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். இதயம் விரிந்து ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் பேத்தி வரவில்லை? தாத்தாவும் பாட்டியும் பரபரத்தனர். ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வரும் செல்லக்குட்டி நந்தினி. நீங்க போய் பார்த்துட்டு வாங்கோ ராஜம்மாள் சொல்ல, பெரியவர் கிளம்பினார். நேரம் நழுவிக்கொண்டே இருந்தது. சட்டென கண்ணில் பட்டது – சரண்யா சரண்யா எங்காத்து நந்தினியை பார்த்தியோ? ...
மேலும் கதையை படிக்க...
வேண்டுதல் – ஒரு பக்க கதை
பேத்தி – ஒரு பக்க கதை

ஒரு குழந்தை டீச்சர் ஆகிறது! மீது ஒரு கருத்து

  1. rajusundararajan says:

    good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)