ஒரு அபலையின் மனப்போராட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 9,261 
 

ரஜினியின் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்போல் தலைவலி அவள் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது அவள் இந்த மூன்று வார காலமாக வெளியில் சொல்ல முடியாத இந்த கடும் துன்பத்தை தன் மனதிற்குள் போட்டு தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவோ ஆறுதல் படுத்தியும் அவள் மனது அடங்குவதாகத் தெரியவில்லை. அவளும் அவள் கணவன் அருள்நேசனும் காதலித்தே திருமணம் செய்து கொண்டனர் . அவர்களது காதல் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல ஏழு வருட காலம் நீடித்தது . அதற்குக் காரணம் அருள்நேசன் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவனாக இருந்ததுதான் . பின் அவர்கள் ஒருவாறு தம் பெற்றோரை சம்மதிக்கச் செய்து திருமணம் முடித்துக் கொண்டனர். அதன்பின் அவர்களது வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் நடுக்காட்டில் தன்னந்தனியே நகர்ந்து செல்லும் அமைதியான நீரோடை போலவே அமைந்திருந்தது.

இப்படி இருக்கும்போதுதான் அன்றொருநாள் அவள் வேலை செய்த நிறுவனத்தின் சாப்பாட்டு அறைக்குச் சென்று தான் வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பிரித்து மேஜை மீது வைத்து சாப்பிட ஆரம்பிக்கும் தருவாயில் அவள் பின்னாலிருந்து அவள் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவதை உணர்ந்தாள். அவள் திரும்பிப் பார்த்து அங்கு நின்றிருந்த அந்த நபரை அடையாளம் கண்டபோது அவளது மனது “திக்” எனறு துடித்தாலும் தனது அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “வாங்க ரமணா , எப்படி சுகமாக இருக்கிறீர்களா ? ” என்று ஒரு சம்பிரதாயத்துக்காக விசாரித்து வைத்தாள் . அவளைப் பார்த்துப் புன்னகைத் அவன் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான் . பின் தானும் அந்த நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரியாக சேர்ந்து இருப்பதாக கூறினான் . அவன் அவளுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்பதையும் கேட்டு அறிந்துகொண்டான். ஒரு நாள் அவளது வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டு அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான். ஆனால் அவளோ அவன் ஒருபோதும் தன் வீட்டுக்கு வரக்கூடாது என தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

ரமணா என்ற அந்த நபர் அவளுக்கு நன்கு பரிட்சயமாவன்தான் . அவள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் அவளுக்கு ஒரு வருடம் சீனியராக இருந்தான்.அவளையும் அவளது ஏனைய சக மாணவிகளையும் இரண்டாம் ஆண்டை சேர்ந்த சீனியர்கள் ராகிங் செய்தபோது ரமணாவுடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது . அதனை சாதகமாக்கிக கொண்ட அவன் அவளைச சுற்றி சுற்றி வந்து ஒரு முறை அவளைத் தான் நேசிப்பதாக கூறினான். ஆனால் ரஜினி அதற்கு ஒரு பதிலும் கூறவில்லை. அவளுக்கு அவனை கண்டாலே பயமாக இருக்கும் . அதன்பின் அவனை தூரத்தில் எங்காவது கண்டால் அவள் பல்கலைக்கழகத்திலிருந்த ஏதாவது ஒரு மூலை முடுக்கில் போய் ஒளிந்துகொள்வாள் . ஒரு வழியாக பல்கலைக்கழக வாழ்க்கை முற்றுப் பெற்றபோது அவர்கள் எல்லோரும் நாடு கடந்து வந்த பறவைகள் போல் அவரவர் ஊர்களுக்கு திரும்பி விட்டார்கள். அதன்பின் ரமணா பற்றிய நினைவே அவளுக்கு வரவில்லை . இப்பொழுது அவன் மீண்டும் வந்து தன்முன் நின்றபோது அவளுக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது .

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி அளவில் யாரோ வெளியிலிருந்து அழைப்பு மணியை அடித்தபோது அது யாரென்று பார்க்க அவள் வாசலுக்குச் சென்றாள் . அங்கு ரமணா சிரித்த முகத்துடன் நின்றிருந்தான். அவனை வீட்டுக்கு உள்ளே அழைக்க அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவனை அழைத்துச் சென்று அருள்நேசனிடம் “அவன் தனது பல்கலைக்கழக நண்பன் ” என்று அறிமுகம் செய்து வைத்தாள் . அருள்நேசனும் ரமணாவும் எடுத்த மாத்திரத்திலேயே நெருக்கமான நண்பர்களாகி விட்டார்கள் . அவர்கள் தம்வயப்பட்டு பேசிக் கொண்டிருந்ததில் மதிய நேரமும் வந்துவிட்டது . ஆதலால் அவனை மத்தியான சாப்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகும்படி அருள்நேசன் அழைப்பு விட்டான். ரமணாவும் அதனை மறுக்கவில்லை.

அவர்கள் இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தபோது அருள்நேசன் தனது நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உபசரிப்பதற்காக தான் குளிர்சாதனப்பெட்டியில் எப்போதும் வைத்திருந்த மது போத்தல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து மேசை மீது வைத்தான் . பின் இரண்டு கிளாஸ் களையும் கொண்டுவந்து ஒன்றை ரமணாவின் முன்வைத்து மற்றதை தான் வைத்துக் கொண்டான் அவர்கள் இருவரும் மதுவை சிறிதுசிறிதாக உறுஞ்சியவாறு பேசிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். அப்போது ரஜினியும் அந்த மேசையில் அவர்களுடன் தான் அமர்ந்திருந்தாள். அவர்கள் உற்சாகமாகவும் உரக்க சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தனர் . ஒருகட்டத்தில் ரமணா பலமாக சிரித்தவாறு ” பல்கலைக்கழக காலத்தில் தான் ரஜினியை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் ஆனால் அவள் ஒன்றுமே பதில் சொல்லவில்லை ” என்றும் எதேச்சையாக கூறிவிட்டான். அதனைக் கேட்டு புன்னகைத்தவாறு அருள்நேசன் தன் மனைவியை பார்த்தான். அவளால் அந்தப் பார்வையில் இருந்து எந்த அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை .

அதன்பின் சில நாட்கள் ஏதும் நடக்காதது போலவே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. அருள்நேசன் ரமணா கூறிய விடயத்தைப்பற்றி கொஞ்சமும் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் அருள் நேசரின் அந்த மௌனமே ரஜினியின் மனதை கீறிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது . அவள் மனதில் குற்ற உணர்வு ஒன்று எங்கிருந்தோ வந்து ஆழமாக ஒட்டிக்கொண்டது . அவள் என்னதான் பிரயத்தனப்பட்டு அதனை துடைத்தெறிய பார்த்தாலும் அது மீண்டும் மீண்டும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. ரமணா தெரிந்தோ தெரியாமலோ பல்கலைக்கழக வாழ்க்கையின் போது ஒருமுறை குறுக்கிட்டான் . இப்போது இரண்டாம் முறையும் குறுக்கே வந்து நிற்கின்றான் . அவளுக்கு இதனை நினைக்க நினைக்க அவன் மேல் மிகக் கோபம கோபமாக வந்தது. ஆனால் அவள் தன்னை நொந்து கொள்வதை விட வேறு மார்க்கம் அவளுக்குத் தெரியவில்லை.

இவ்விதம் நைந்து நாராகிப் போன ரஜினியின் மனது திடீரென ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தது . அது எப்படியாவது அருள்நேசனிடம் இந்த விடயத்தை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு விடவேண்டும் என்பதுதான். அதன்பின் அவள் மனம் சற்று ஆறுதல் அடைந்தது . அடுத்தநாள் போயா தினம். அவள் குளித்து முழுகி விட்டு சேலையை சரி செய்து கொண்டிருந்தாள் . அருள்நேசன் அவள் கொடுத்த டீயைக் குடித்து விட்டு வெளியில் சென்று கடையிலிருந்து ஒரு தினசரி பேப்பரை வாங்கி வந்து அதில் மூழ்கி இருந்தான். அதுதான் சரியான தருணம் என்று கருதிய ரஜினி அவன் அருகில் சென்று அவனை உரசிக்கொண்டு அமர்ந்தாள். அருள்நேசன் செய்தி பத்திரிக்கையில் மூழ்கி இருந்தவன் போல் பாவனை செய்தபோதும் அவன் ஓரக்கண்ணால் தன் மனைவியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டுதான் இருந்தான். ரஜினி அவன் அருகில் வந்து அமர்ந்ததுமே அவன் மெல்ல திரும்பி அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான் . அவளது முகமும் அவளது கண்களும் அவளது உதடுகளும் அவனிடம் என்ன சொல்ல விளைகின்றன என்பதனை அவன் ஏற்கனவே தெரிந்துதான் வைத்திருந்தான். அவள் உடனேயே அவன் தோளில் சரிந்து கொண்டாள் . அவள் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்திருந்தது. அவளை சற்றே தூக்கி நிமிர்த்திய அருள்நேசன் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன் சுட்டுவிரலால் துடைத்து விட்டான் . உடனேயே அவளை தன் மார்புடன் இறுக அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் தெரிந்த இருக்கம் அவர்களுக்குள் இருந்த காதலின் புரிதலை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததுக் காட்டியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *