ஒய்யார கொண்டை

 

சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன. நியான் விளக்குகளில் சொலிக்கும் கனவு நகரம். வழு வழுச் சாலைகளில் வழுக்கியபடி விரையும் கார்கள். மாட மாளிகைகள். சுகந்தம் வீசும் கடற்கரை காற்று… புரண்டு புரண்டு படுத்தாள், சிறிது கண் அயர்ந்திருப்பாள். அதற்குள் அம்மா எழுப்பி விட்டாள்.

மணப்பெண்ணை அலங்காரம் செய்ய வேண்டும். காலை கடன்களை முடிக்க அவசரப்படுத்தினாள். முழுநிலா வானில் பிரகாசமாக ஒளி வீசியது. பச்சை பசலேன மரம், செடி, கொடிகளில் எல்லாம் வெண்ஒளி பட்டு பசும்ஒளியாக சிதறி தெறித்து மனோரஞ்சிதமான சூழலை உருவாக்கியது. நுணா மரத்தில் கொடிமல்லிகை போல் வெண்ணிற மலர்கள் அவ்வெளியில் பூத்து குலுங்கின. அதன் மயங்கும் நறுமணம் அந்த புழங்கடை எங்கும் பரவி கிடந்தது. மினிமினிப் பூச்சிகள் அந்நறுமணத்தில் மயங்கி, மலர்களில் தேனுண்டு, களி பேருவகை கொண்டு மகிழ்ந்து மின்னின. இந்த அழகை இனி பார்க்க இயலாது என்ற ஏக்கம் சுசீலாவிடம் வெளிப்பட்டது.

அதற்குள் அம்மா அழைத்தாள். அதிகாலை கடன்களை நடுநிசியில் முடிக்க அவசரப்படுத்தினால் முடியுமா? இருப்பினும் அம்மாவின் அவசரம் புரிந்து நடந்த்தாள்.

அதிகாலை நான்கு மணி பேருந்தை பிடித்தால் தான் வடபழனி முருகன் கோவிலுக்கு ஏழு மணிக்கு செல்ல முடியும். உறவுகள் சூழ புதுபெண் அலங்காரத்துடன் சென்னையை அடைந்தாள்.

திருமணம் இனிது நடந்தேறியது சரவணபவனில் திருமண விருந்து. புது தம்பதிகள் அருகருகே வைத்து விருந்து பரிமாறப்பட்டது. மாப்பிள்ளை தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். மணப்பெண் முகம் வெட்கத்தால் அழகாக மிளிர்ந்தது. காலை விருந்துண்டு உறவினர்கள் மொய்யெழுதி விடைபெற்று சென்றனர்.

சுசீலாவின் வயிறு கனமாகி கடகடக்கும் உணர்வு ஏற்பட்டது. மாப்பிள்ளை ஆட்டோவில் மணப்பெண்ணையும், அவள் பெற்றோரையும் வைத்து ஓட்டி சென்றார். சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல மாப்பிள்ளை ஆட்டோவை லாவகமாக வளைந்து வளைத்து ஓட்டினார். தனது கணவனின் திறமை சுசீலாவிற்கு மகிழ்ச்சியை தந்தது. ஆனால் ஆட்டோ குலுங்கிய குலுக்களில் வயிற்று கடபுடா அதிகமாகியது. வயிற்றின் இறுக்க உணர்வு உடலெங்கும் பரவியது. அடிவயிற்றில் இலேசான வலி பரவியது. மாப்பிள்ளை முறுக்கில் ஆட்டோவை இன்னும் முறுக்கி வளைந்து நெளிந்து வாகனங்களை முந்தி கொண்டு ஒட்டினார். அவளுக்கு ஒரு புறம் மகிழ்வை அளித்தாலும் இன்னொருபுறம் துன்பமாக இருந்தது.

நூங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் கூவம் ஆற்றங்கரை எனப்படும் சாக்கடை ஒடையின் கரையில் அமைந்த குடிசைப் பகுதியில் சிறிய சந்து பொந்துகளில் ஆட்டோ சர்க்கஸ் லாவகத்தில் சென்றது. மணமகளை ஆரத்தி எடுத்து வரவேற்க மகளிர் கூட்டம் கூடி இருந்தது. அவர்களின் சிநேகப் பார்வை சுசீலாவிற்கு உற்சாகத்தை தந்தது.

மாமியார், பள்ளியில் பயிலும் நாத்தனார், கணவன் என்ற சிறிய தொகுப்புதான் அவளின் புது வீட்டின் அங்கங்கள்…சொந்தங்கள்.

மதிய உணவு ஒட்டலில் இருந்து ஆட்டோவில் வந்து இறங்கியது. மணப்பெண்ணின் பெற்றோர், சில உறவினர்கள் சாப்பாட்டை ஒருபிடி பிடித்தனர். மகளை விட்டு பிரியாவிடை தந்தனர். பெற்றோரைப் பிரிவது சுசீலாவிற்கு துயரத்தைத் தந்தது. கண்களில் கண்ணீர் மல்கியது. மாப்பிள்ளை தனது ஆட்டோவில் அவர்களை பேருந்து வரை அழைத்து சென்றார்.

மாமியார் மணமகளைச் சாப்பிட வற்ப்புறுத்தினார். சுசீலாவிற்கு அடிவயிறு கனத்தை இறக்க வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது. நாத்தனானிடம் ஒன்றுக்கு போக வேண்டும் என்றாள். குடிசைக்கு பக்கத்தில் புதிதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒலைத்தடுப்பிற்கு வழி காட்டினாள். வாழ்வு, கழிவு என்று அனைத்தும் அருகருகே இருந்தது. கிராமத்து பெண்ணிற்கு இது கூச்சத்தை ஏற்படுத்தியது. முழுமையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை. சளசளவென பக்கத்தில் பேசும் குரல்கள் காதில் கேட்பது மாதிரி இருந்தது. கூப்பிடும் தூரத்தில் குடிசைகளைத் தாண்டி கூவம் ஆற்றங்கரையில் அப்பெண்கள் அதையே அவர்கள் மிக இயல்பாக, எந்த சங்கடமற்ற செயலாக செய்துக் கொண்டிருந்தனர். ஒர் அருவருப்பு சுசீலாவின் உடலெங்கும் ஊர்ந்து சென்றது. மதிய வெயில் வெப்பத்தில் சூடேறிய கூவத்தில் துர்நாற்றக் குமிழ்கள் தோன்றி வெடித்ததன. அந்த இடம் முழுவதும் மெல்லியதான துர்நாற்றம் காற்றில் பரவி வியாபித்தது. இயற்கையான காற்றில் புழங்கி இருந்தால் இந்த துர்நாற்றம் என்னமோ செய்தது. சுசீலாவிற்கு குமட்டி குமட்டி குடலை பிராண்டி கொண்டிருந்தது.

மதிய சாப்பாடு சுவையாய் இருந்தும் வயிற்றினுள் இறங்க மறுத்தது. மாமியார் உடன் இருந்து அன்பாக பறிமாறி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். காலையில் சரியாக மலம் கழிக்க முடிக்காதது, பேருந்து பயணம், கல்யாண அலச்சல், ஆட்டோ குலுக்கல் அனைத்தும் இணைந்து தங்களது வேலையை காட்டத் துவங்கின்.. வயிறு உப்பிசமாகி குடலை பிழிவது போல் இருந்தது.

சிறிது நேரத்தில் மலம் கழிக்க வேண்டும் என்று உணர்வு உந்தி தள்ள தொடங்கியது. நாத்தனாரிடம் இரண்டுக்கு போகவேண்டும் என்று சங்கடத்துடன் சொன்னாள்.

மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த குடிசை பகுதியின் குறுகலான சந்துகளில் நடத்து சென்றாள். ஏராளனமான சிறுசிறு குடிசைகள். பல கிராமங்களை சிறிய இடத்தில் நெறிசலாக அடைந்து விட்டது மாதிரி அந்த காலனி கிடந்ததை சுசீலா ஆச்சிரியத்துடன் பார்த்தாள்.

குடிசைப் பகுதியின் முடிவில் கூவமும் மின்சார ரயிலின் தண்டவாளங்களும் இருக்கும் பகுதியை அடைந்தனர். உருண்டுதிரண்ட கறுப்பு பன்றிகளும், அதன் அழகிய குட்டிகளும் ,கோழிகளும் அதன் வண்ணக்குஞ்சுகளும் குப்பைகளையும், கழிவுகளையும் கிளறி கொண்டிருந்தன. கூவம் ஆறு, தண்டவாளம், குடிசைப் பகுதிகள் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்புதர்களும், வெட்ட வெளியும் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களின் மலம் கழிக்கும் பகுதியாகும்.

கடகடவென்று மின்சார ரயில் ஒடியது. இரண்டு பெண்கள் டக்கென்று எழுந்து நின்றனர். ஒரு வயதான அம்மாள் கவலையின்றி குந்திக் கொண்டிருந்தாள். ரயில் சென்றவுடன் மீண்டும் குத்துகாலிட்டு குந்தி கொண்டனர்.

இதைக் கண்ட சுசீலாவிற்கு மலம் கழிக்கும் உணர்வே போய் விட்டது. இரயிலும், தண்டவாளங்களும் மரவட்டைகளாய் உடம்பினுள் ஊரும் ஒருவிதமான அருவருப்பு உண்டானது.

“ வா.. வீட்டிக்கு போகலா டி ”

“ இன்னா அண்ணிய் அவுட்சய்டு போலயா ”

“ வர மாதிரி இருந்தது,, இப்பவரல்ல ”

தடதடதடவென மின்சார ரயில் சென்றது. ஆயிரமாயிரம் கண்கள் தனது அந்தரங்கத்திற்குள் எட்டிப்பார்க்கும் அவமானம் மேலிட்டது. மணமகள் அலங்காரமும் அந்த இடத்திற்கு அந்நியமாகப் பட்டது. மன உளச்சலுடன் சசீலா வீட்டிற்கு திரும்பினாள்.

மாப்பிள்ளை ஆசை ஆசையாய் புதுபெண்ணிடம் ஜாலியாக பேச முனைந்தார். அவளுக்கும் தன் கணவனிடம் ஆசையுடன் பேசி சிரிக்க வேண்டுமென்று நினைத்தாள். வயிறு கடபுடா சத்தம் போட்டு கலாட்டா செய்து அதை தடுத்தது.

மலம் கழிக்கும் உணர்வை அடக்க அடக்க அது உடலை அவஸ்தைக்கு உள்ளாக்கியது. ஆயா சொன்ன தெனாலிராமன் கதை நினைவிற்கு வந்தது.

மனிதனும் அதிகம் சுகம் தருவது எது? ராஜாவின் இந்த கேள்விக்கு, மலம் கழிப்பதுதான் சுகம் தரும் விசயம் என்பதை நிரூபிக்க படுக்கை அறையில் ராஜாவை அதிகாலையில் பூட்டி தத்தளிக்க விட்ட கதை தேவையில்லாமல் அவள் நினைவில் நிழலாடியது. குடிசையின் மூலையில் குத்துகாலிட்டு முடங்கி கிடந்தாள்.

முதல் இரவிற்கான சில ஏற்பாடுகளை அந்த குடிசையில் உள்ளவர்கள் செய்ய துவங்கினர். புது தம்பதிகள் அந்த குடிசையிலும், மற்றவர்கள் பக்கத்து குடிசையிலும் தங்க ஏற்பாடு நடந்தது. அதை விட இரவு எப்பொழுது வரும் என்று சுசீலா காத்திருந்தாள்.

மலத்தை அடக்க அடக்க லேசாக வயிறு வலிக்க ஆரம்பித்தது. அடிவயிறு உப்பிசம் கண்டு முறுக்க ஆரம்பித்து. நாத்தனார் கலந்து தந்த காப்பியைக் கூட தொட மனமில்லை. தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் இருந்தாள். நாக்கு வரண்டு போனது. அவளின் நிலைமை அங்கு உள்ளவர்களுக்கு புரியத்தான் செய்தது. இந்த சூழ்நிலைக்கு அவள் பழகித் தான் தீரவேண்டும். வேறுவழி கிடையாது. இந்த விசயத்தில் கிராமத்து சேரியை விட நகரத்து காலனி மிக மோசமாக இருந்தது.

வாழ்நிலைக்கு ஏற்ப மாற்றி பழகி கொள்ள, உறவுகள் பாசத்துடன் எடுத்து சொன்னது. கதிரவன் மறைந்து காரிருள் கவிழ்ந்தது. மணப்பெண்ணை மீண்டும் ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துக் கொண்டு நாத்தனார் சென்றாள்.

இவர்கள் அங்கே போய் சேரவும் முழுநிலவு தகதகவென பொன்னிறத்தில் வானில் எழுந்து ஒளி வெள்ளத்தை பாய்ச்சவும் சரியாக இருந்தது. அங்காங்காங்கே கிடந்த பிளாஸ்டிக்கு குப்பைகளும், ஜிகினா காகிதங்களும் அந்த ஒளியில் மின்னி அருவறுப்பை தந்தன.. நேற்று மகிழ்வையும், பரவசத்தையும் தந்த நிலவு இன்று எரிச்சலையும், துன்பத்தையும் தந்தது. வானில் கருமேகத் துண்டுகள் மிதந்து கொண்டு இருப்பினும் நிலவு மறையவில்லை. அப்பகுதி பெண்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் சதாரணமாக இயங்கி தங்கள் கடனை முடித்து கொண்டு சென்றனர். சுசீலாவால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

மேகத்திற்கு ஒளிவதும் மறைவதுமாக கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டு இருந்த முழுநிலா பெரிய கருமேகத்துண்டிற்குள் மறைந்தது. சுசீலாவின் அவஸ்த்தை அதற்கு புரிந்ததோ, என்னவோ!. ஆசுவாசத்துடன் அவள் தன் சுமையை இறக்கினாள். திடுமென்று பிரகாசமான் ஒளி வெள்ளத்தை பாய்ச்சி கொண்டு மின்சார ரயில் கடக்.. கடக்.. கடக்.. வென்று அவளின் உடலினுள் புகுந்து கடந்து சென்றது. இரயிலின் ஆயிரம் சன்னல்கள் பெரிய பெரிய முட்டை கண்களாக கண்கொட்டாமல் விழித்து விழித்து பார்த்து விட்டு மறைந்தது. சுசீலாவை நிலைகுலைந்து போனாள். அவளின் முதல் இரவு இப்படியாக கழிந்த்து..

மறுநாள் மாப்பிள்ளை அவளை சென்னை கடற்கரைக்கு அழைத்து சென்றார். தலைக்கு மேலே சாலைகளில் மெட்ரோ இரயிலுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நல்ல வேலை கூவம் ஆற்றினுள் இந்த மெட்ரோ ரயில் போடப்படவில்லை. வானம் பிளந்த ஒலைதடுப்பு குளியலறைகளும், ஏராளமான குடிசை பகுதிகளின் அந்தரங்களும் வானத்தில் இருந்து பார்க்கும் வேடிக்கை பொருளாகி விட்டிருக்கும் என்று அவள் மனம் புழுங்கி வெந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
“இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட அழகிய கண்கள் வேறு எங்கோ நோக்கின. இருளப்பன் அந்த பணத்தை வாங்காமல் கைகளைப் பின்னுக்கு இழுத்து கொண்டு பிகு செய்தான். அவன் ...
மேலும் கதையை படிக்க...
குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி மேன்சன் பேச்சலர் வாழ்க்கையை ஒருமுறை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட மனசு இடம் தராது. சாம்பாரில் மிதக்கும் ...
மேலும் கதையை படிக்க...
'மாடர்ன் டைம்ஸ்' திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை நகரின் மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளாய் இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் ரோபோட்கள் அதன் உள்ளும் புறமும் இருந்து கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டுமே அங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. ...
மேலும் கதையை படிக்க...
கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டும் ஆங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ...
மேலும் கதையை படிக்க...
தீச்சுவை பலா
பய – பக்தி
ஆன்மாக்களின் கல்லறை
தெருநாயும் போலிஸ்நாயும்
கொடிதினும் கொடியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)