ஐந்து முத்தங்கள்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 8,165 
 

நண்பகலுக்கு நேர் எதிரான நேரம் அது. எங்கும் அமைதி மொழி மட்டுமே பேசியது. அக்கம் பக்கத்தில் ஒரு சின்ன சிறிய அளவில் கூட சப்தம் கிடையாது. நிசப்தம் மட்டுமே நிலவியது.

திடீரென்று, “”அம்மா… தாங்க முடியல… வலிக்குதே” என்று ஒரு பெண்ணின் சப்தம் ஒரு வீட்டிலிருந்து அலறி ஒலித்தது.

ஐந்து முத்தங்கள்

நிலா வெளிச்சம் ஜன்னலைப் பொத்துக் கொண்டு வருவதுபோல, அந்த வீட்டில் மட்டும் கொஞ்சம் விசேஷமாக ஊடுருவி வெளிச்சம் தந்தது.

வயிற்று வலியால் அவள் கதறிய சப்தம், நிலா வெளிச்சத்தின் ஒளியிலேயே எதிர் நீச்சலிட்டு அந்த நிலாவிற்கே கேட்டிருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணின் சப்தம் விண்ணை முட்டும் அளவில் அல்லவா இருக்கும்? அந்த நள்ளிரவு நேரத்தில் நிலா ஆட்சி செய்ததால் அந்தச் சப்தம் நிலாவிற்கே கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வேலையை முடித்துக் கொண்டு வீட்டின் தெரு முனையில் வந்து கொண்டிருந்த எனக்கு கேட்டது என் மனைவியின் அந்த அழுகுரல். வலி எடுத்துத் துடிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, தெரு முனையில் உள்ள ஆட்டோவை வரும்போதே அழைத்து வந்திருந்தேன்.

வீட்டின் உள்ளே நுழைந்ததும், என்னைக் கண்ட என் மனைவியின் சப்தம் உரிமையின் காரணமாக அதிகரித்தது. நேரத்தைக் கடத்தாமல் அப்படியே அலாக்காக அவளைத் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் அமர வைத்து… மருத்துவமனைக்கு வேகவேகமாக அழைத்துச் சென்றேன்.

மருத்துவமனைக்குள் சென்ற அடுத்த இருபது நிமிடத்திலேயே மழலையின் இனிமையான அழுகுரல் கேட்டது. அடுத்த சில நிமிடத்திலேயே டாக்டர் மற்றும் நர்ஸ் வெளியே வந்து, “”உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்றார்கள்.

மகிழ்ச்சியில் எனக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது. அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம் நான் எதிர்பார்த்தது போலவே எனக்குப் பெண் குழந்தை. வளர்ப்பதற்கு மட்டுமல்ல, கொஞ்சுவதற்கும் பெண் குழந்தையே சரியாக இருக்கும். நினைத்ததுபோலவே நடந்துவிட்ட மகிழ்ச்சியை என்னால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பந்தா பண்ண வேண்டும் போல இருந்தது. அலட்டிக் கொள்ள வேண்டும்போல இருந்தது. இருந்தாலும் அடக்கமாகவே மனதுக்குள் ஆடிப் பாடினேன்.

சென்னை நகரில் இருந்த நான், கிராமத்தில் உள்ள அம்மா, அப்பாவுக்கும், மற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த இனிப்பான செய்தியை விடிய விடியப் பரிமாறிக் கொண்டேன்.

அடுத்த சில நிமிடங்களிலேயே நர்ஸ் என் குழந்தையை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். ஆசையோடும், மிகுந்த சந்தோஷமுடனும் குழந்தையைப் பெற்றுக் கொண்டு… மார்போடு அணைத்தபடி நெற்றியில் முத்தமிட்டு “”தந்தை நான்” என்று அடையாளமிட்டேன்.

“”குழந்தைக்கு எச்சில் படுகிற மாதிரி முத்தம் கொடுக்கக் கூடாது. ஒரு மூணு மாசத்துக்கு யாரும் முத்தம் கொடுக்காமப் பார்த்துக்கங்க… இல்லைன்னா அவுங்க மூலமா இன்பெக்ஷன், அலர்ஜி வந்துடும்” என்று நர்ஸ் சொன்னாள்.

இருந்தாலும் ஆசையை அடக்க முடியவில்லை. பாசத்தில் பொத்துக் கொண்டு வந்தது அடுத்த முத்தம். என்ன செய்வதென்று தெரியாமல்… நர்ஸ் திரும்பியிருந்த நேரமாகப் பார்த்து என் குழந்தையின் பாதத்தில் இதமாக்கினேன். மயங்கிய நிலையில் என் மனைவியும் வெளியே வந்தாள். அவளின் தலையை வருடிக் கொடுத்தவாறு, குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் விடிந்ததே தெரியவில்லை.

நேரம் ஆக ஆக நண்பர்கள் ஒவ்வொருவராகப் பார்க்க வந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் பார்த்துக் கொஞ்சிப் பேசியதோடு சரி. யாரும் குழந்தைக்கு முத்தமிடவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

அந்தப் பிரச்னைக்குரிய முத்தம், அருவருக்கத்தக்க முத்தம். அப்போதுதான் அரங்கேறியது. மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் ஆயாம்மா, பாத்ரூம் உட்பட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்பவள். அவள் கையை நன்றாகக் கழுவினாலோ இல்லையோ? என் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியபடி எச்சில்பட முத்தமிட்டாள்.

எனக்கு பொத்துக்கொண்டு வந்தது கோபம். மருத்துவமனையில் உள்ள குழந்தைகளிலேயே என் குழந்தைதான் நல்ல கலராகவும், அழகாகவும் இருந்தாள். ஒருவேளை அழகில் மயங்கி முத்தமிட்டிருப்பாளோ?

இந்த முத்தம் பாசமா? வேஷமா? ஒருவேளை நம்மிடம் பணம் பெறுவதற்காக நம் குழந்தைமேல் பாசம் இருப்பதுபோல் நடிக்கிறாளா? என்று பலவகையில் கேள்விகள் என்னைத் துளைத்து எடுத்தன.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அருவருக்கத்தக்க முத்தத்தை இவளிடமிருந்து யார் கேட்டது என்று எனக்குள்ளே கோபப்பட்டதோடு நிறுத்திக் கொண்டேன்.

சிறிது நேரம் கடந்திருக்கும். கிராமத்திலிருந்து என் அப்பா, அம்மா, உறவினர்கள் என்று எல்லாரும் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் குழந்தையின் பெருமையைப் புகழ் பாடினர். அதில் சிலருக்கு பெண் குழந்தை பிறந்ததில் வருத்தப்பட்டோரும் உண்டு. அதைப் பற்றிய கவலை எனக்கில்லை.

என் அம்மாவுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை போடுவது பழக்கம். பலநாள் உணவு இல்லாமல்கூட இருந்து விடுவாள். ஆனால், இந்த வெற்றிலை, பாக்கு, புகையிலை இல்லாமல் அவளால் இருக்க முடியாது. அதனாலேயே கறை படிந்த பற்களையே அவளிடம் அதிகம் காண முடியும். என் அப்பாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அதனாலேயே அவரின் வாய், புகை நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.

உறவினர்களைத் தொடர்ந்து, என் அம்மா பாசமாகக் குழந்தையைத் தூக்கி கொஞ்சினாள். சட்டென்று வெற்றிலை, பாக்கு போட்ட வாயுடன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் வெற்றிலை பாக்கு எச்சில் என் குழந்தையின் கன்னத்தில் அப்படியே முத்த ரேகையாகப் பதிந்தது. என் மனைவி உள்ளத்தில் ஊசி தைத்ததாய் இருந்தது. என் குழந்தைக்குக் கிடைத்த இரண்டாவது அருவருக்கத்தக்க முத்தம் இது.

அந்தச் சமயம் நானில்லை, என் மனைவி மட்டுமே படுக்கையில் இருந்தாள். அவளாலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளும் உள்ளுக்குள்ளே புழுங்கிக்கொண்டிருந்தாள்.

பிறகு என் தந்தை, குழந்தையைத் தூக்கி கொஞ்சிவிட்டு அவரும் புகை நாற்றத்துடன் முத்தம் என்னும் முத்திரை பதித்தார். என் குழந்தைக்குக் கிடைத்த அருவருக்கத்தக்க முத்தத்தில் இது மூன்றாவது. என் தந்தையின் “முத்த பரிசில்’ என் குழந்தை மட்டுமா அழுதது. கூடவே என் மனைவியின் மழலைப் பாசத்தையும் சேர்த்து அழ வைத்தது.

ஊரிலிருந்து வந்தவர்கள் கை, கால் முகத்தைக்கூட கழுவாமல் அப்படியே குழந்தையைக் கொஞ்சுகிறார்கள். இது பாசமா? இல்லை அறியாமையின் அடித்தளமா? புலம்ப மட்டுமே முடிகிறது.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நர்ஸ், “”இப்படியெல்லாம் சுத்தபத்தமில்லாமல் முத்தமிட்டால் குழந்தைக்கு இன்பெக்ஷன் ஏற்படும்” என்று சூடாக என் மனைவியிடம் சொன்னாள். என்ன செய்வது? நான் எப்படி சொல்ல முடியும், என் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று? சரிதான். அவள் எப்படி சொல்ல முடியும்?

வெளியே சென்றிருந்த நான் மருத்துவமனைக்குள் நுழைந்ததும் குறைகளைக் கொட்டித் தீர்த்தாள் மனைவி. நானும் அதே பதிலைத்தான் சொன்னேன். நான் எப்படிச் சொல்வது? என் குழந்தையைக் கொஞ்ச வேண்டாம் என்று. அது தாத்தா பாட்டியின் பாசம். அவர்களின் உரிமை. பாசம்தான்… அதற்காக இப்படியா? என்று என் மனைவி கோபம் கொண்டாள். நான் சொன்னேன் அவர்கள் முத்தமிடும் விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவர்களின் முத்த பாசம் தவறு கிடையாது என்றேன். அவள் என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். இருவரும் அமைதியானோம். அப்போது அமைதி இருவருக்குமே நடுநிலையானது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். என் பெற்றோரோடு கிராமத்திலிருந்து வந்திருந்த உறவினர் ஒருவர் யாரையோ பார்த்துவிட்டு அப்போதுதான் உள்ளே வந்தார். போதை தரக்கூடிய அல்லது மயக்கம் தரக்கூடிய பாக்கு என்று சொல்லலாம் அவர் பயன்படுத்தும் பாக்கை. அந்த பாக்கைப் போட்டுக்கொண்ட தடம். அவர் உதட்டில் லேசாக போட்டுக்கொண்ட உதட்டு சாயம்போல காட்சியளித்தது. அதோடு என் குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சிக்கொண்டே இருந்தார். முத்தமிட வேண்டாம், முத்தமிட வேண்டாம் என்று கடவுளை வேண்டி முடிப்பதற்குள், அவர் எச்சில் படிய முத்தமிட்டார்.

அதைக் கண்ட நான் அருவருத்து போனேன். உறவினராக இருந்தாலும் ஊரில் அவர் ஒரு பெரிய மனிதர். என்ன செய்ய முடியும் என்னால்? என் குழந்தைக்குக் கிடைத்த நான்காவது அருவருப்பான பரிசு முத்தமது. அதன் பிறகு குழந்தையை யாரிடமும் கொடுக்காமல், பெரும்பாலும் நானே தூக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.

மறுநாள் மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் ஆயாம்மாவும், அவளின் சிறு வயது மகளும் மருத்துவமனை உள்ளே நுழைந்ததைக் கண்டவுடன், குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டேன். இருவரும் என்னிடம் வந்து… “”கொஞ்சம் தா…. கொஞ்சிவிட்டு தருகிறேன்” என்றார்கள். வந்த கோபத்திற்கு எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு 100 ரூபாய் காட்டி அவர்கள் வாயை அடைத்தேன்.

மாலை வேளை வந்தது. என் தாய், தந்தையர்கள் ஊருக்குக் கிளம்புவதாகச் சொன்னார்கள். இதுதான் தாத்தா பாட்டி பாசமா? “”மூன்று நாள்கூட முழுசா இல்லாமல் ஊருக்கு போரோனு சொல்றீங்களே?” என்றேன். அவர்களின் வேலைப் பளுவைக் காரணம் காட்டியதால் ஒரு வழியாகச் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

விடைபெறுவதற்காக குழந்தையிடம் கொஞ்சி சிரித்துக்கொண்டிருந்த என் அம்மா, திடீரென்று மாறி மாறி கன்னத்தில் முத்தமிட்டாள். கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நான் தடுப்பதற்கு முயற்சி செய்வதற்குள்… “”நேத்துதானே உங்ககிட்ட சொன்னேன், யாரும் எச்சில் படும்படியா முத்தம் கொடுக்க கூடாதுன்னு. இந்தம்மா வேற வெற்றிலை, பாக்கு போட்ட வாயோடு குழந்தைக்கு முத்தம் தராங்க, நீங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டிங்கிறீங்க? ஒரு தடவ சொன்னா கேட்க மாட்டீங்களா?” என்று நர்ஸ் சத்தம் போடவே…

“”சரி சரி…, முத்தம் கொடுக்கல” என்று அவருக்கே உரித்தான பாணியில் கூறி சமாளித்தாள். முத்தம் கொடுக்க வந்த என் அப்பாவும் அப்படியே நின்றுகொண்டார். இப்படி அருவருக்கத்தக்க ஐந்து முத்தங்களையும் என் குழந்தைக்குக் கிடைத்த பரிசாக நினைக்கவில்லை. நோயின் நுழைவாயிலாகவே எண்ணத் தோன்றியது.

என் குழந்தையிடமிருந்தும், மனைவியிடமிருந்தும் விடைபெற்றுச் சென்ற என் அப்பா, அம்மாவை பேருந்தில் ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அப்போது… இப்படியெல்லாம் குழந்தையைக் கொஞ்சக் கூடாது என்று தன்மையாக எடுத்துச் சொன்னேன். சட்டென்று கோபப்பட்ட என் அம்மா, “”நாங்களும்தான் உன்னைய பெற்று வளத்திருக்கோம். உனக்கு மட்டும் என்ன நோயி வந்துச்சு? எனக்கு தெரிஞ்சது இந்த நர்ஸýக்கு தெரியுமா?” என்று என்னிடம் கோபப்பட்டாள்.

“”உண்மைதாம்மா உங்க காலம் வேற. இந்தக் காலம் வேற. அப்ப நோய் கம்மி. இப்ப தொட்டதுக்கெல்லாம் நோய் பரவுது. அதான் அவுங்க அப்படி சொல்லியிருக்காங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா?” என்று அவர்களைச் சமாதானம் செய்ய முயற்சித்தேன். பேசி முடிப்பதற்குள் ஆட்டோ பேருந்து நிலைய வாசலில் நின்றது. அருகிலேயே ஊருக்குப் போவதற்கான பேருந்தும் கிளம்புவதற்காக தயார் நிலையில் நின்றது.

எதற்கும் “”சமாதானம்” ஆகாமல் “”சமாதானம்” சொல்லி விடைபெற்றார்கள். அவர்கள் மனதைவிட என் மனது சமாதானம் ஆகவில்லை. அந்த அருவருக்கத்தக்க முத்தங்களை எண்ணியும், அம்மாவின் வலியை எண்ணியும். வலி கொடியது, உண்மைதான்.

– இரா.அருவி (பெப்ரவரி 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *