Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஐந்தாவது பெண் !

 

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு காரில் கிளம்பும்போது எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். அவன் பார்த்த நான்காவது பெண்ணுக்கும், அவனைப் பிடிக்கவில்லை என்கிற தகவலை அம்மா போனில் சொன்னாள். என்ன காரணம் என்று ரத்தம் கசியும் மனதுடன் கேட்டதற்கு, ”அந்தப் பொண்ணு கம்ப்யூட்டர்ல வேலை பாக்கிற ஆளுதான் வேணும்னு சொல்லிருச்சாம்” என்றாள் அம்மா.

”இந்த தை மாசத்துக்குள்ளயாவது உனக்குத் தகைஞ்சிரும், பங்குனியில கல்யாணத்தை முடிச்சிரலாம்னு இருந்தேன். ஆனா, சோசியக்காரன் சொன்னான்… உனக்கு ஏழுல செவ்வாய், குரு நீச்சமாயிருக்குனு. அதனால பொண்ணு கிடைக்கறது ரொம்பத் திகட்டல்தான் போலிருக்கு” என்றவளின் குரலில் பெரிதாகக் கவலையில்லை. தங்கை கல்யாணம் நடக்கும் வரை அம்மா கொண்டிருந்த பதற்றமும் பரபரப்பும் நினைவுக்கு வந்தது. மகளுக்கு கல்யாணம் முடித்து அனுப்புவது தன்னுடைய பொறுப்பென்றும், ஆம்பளைப்பயலுக்கு அதுவாக நடந்துவிடுமென்றும் எண்ணம் அவளுக்கு. மகளைக் கட்டிக் கொடுத்து அனுப்பிவிட்டு, சீரியல்களில் மூழ்கிவிட்டாள்.

சங்கர், ஒரு தகுதியான பிரம்மச்சாரிதான். டிகிரி முடித்து சென்னையில் டிராவல்ஸ் வைத்திருக்கிறான். ஏழு கார்கள் சொந்தமாக இருக்கின்றன. அஃபிஷியலாக இரண்டு காதல் தோல்விகள்… ஒருதலைக் காதல் ஒன்று. இப்போது அதிகாரபூர்வமாக நான்கு நிராகரிப்புகள் என்று போதுமான வடுக்களுடன், ‘என்ன வாழ்க்கைடா..?’ என்று கிளம்பி வந்து கொண்டிருந்த வனின் கண்ணில் அவள் பட்டாள்.

பெரம்பலூர் எல்லாம் தாண்டி நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பறக்க உத்தேசித்து வேகம் பிடிக்க எண்ணியவன், ஒற்றையாய் ஒரு பெண் லக்கேஜ்களுடன் நிற்பதை தூரத்திலேயே கவனித்து, வேகத்தைக் குறைத்தான். வண்டியைப் பார்த்து கையை ஆட்டினாள். வண்டி நிற்க, லக்கேஜ்களை இருந்த இடத்தில் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தாள்.

”வண்டி சென்னைக்கா போகுது?”

ஏற இறங்கப் பார்த்தான். இப்படி நிற்கும் பெண்களின் பின்னணியில் திருடர்களோ… தரகர்களோ இருக்கக் கூடும் என்கிற எச்சரிக்கை மணி உள்ளுக்குள் ஒலிக்க, ”ம்… எதுக்கு?” என்றான்.

”இது டிராவல்ஸ் வண்டிதானே? நான் சென்னைக்குப் போகணும். எவ்வளவு கேக்கிறீங்க?” என்றாள்.

”டிராவல்ஸ் வண்டிதான்… ஆனா, பர்சனல் டிரிப்புங்க… சொந்த ஊருக்குப் போய்ட்டு திரும்பிக்கிட்டு இருக்கேன்.”

”நானும் ஊருக்கு போய்ட்டுதான் வர்றேன். பஸ்ல ஒரே கூட்டம். பத்துப் பேரு வேன் பிடிச்சுக் கிளம்பினோம். அது ரிப்பேர் ஆகவே ஆளுக்கு ஒரு பக்கமா கிளம்பிட்டாங்க…”

- அவள் சரளமாக பேசினாலும் இவனுக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.

”ரிப்பேர் ஆன வேன் எங்க?”

”டிரைவர் போன் பண்ணி இப்பதான் ஒரு வண்டி வந்து அதை இழுத்துக்கிட்டு போச்சு.”

இவன் யோசிக்க, ”நான் பணம் கொடுத்துடறேன்… ப்ளீஸ்” என்றாள். ஒருமுறை அவளை நிதானமாகப் பார்த்தான். மாநிறமாக, அழகாக இருந்தாள்.

”ம்… பெர்சனல் டிரிப்ல யாரையும் ஏத்த மாட்டேன். சரி… பரவால்ல. வாங்க.”

அவள் சென்று லக்கேஜ்களை எடுக்க, இவனும் பைகளில் இரண்டைத் தூக்க, அவள் புன்னகைத்து ‘தேங்க்ஸ்!’ என்றாள். இவனது காதுக்குள் ஹெலிகாப்டர் கிளம்புவது போல் பட்படபட்பட… ‘காதலாக இருக்குமோ!’ என்று தோன்றியது.

டிக்கியில் இவனது லக்கேஜ்கள் இருந்ததால், அவள் பைகளை பின் ஸீட்டில் இவன் போட, அவள் வெகு இயல்பாக முன் ஸீட்டில் அமர்ந்து கொண்டாள். இப்போது சங்கரின் உடம்பெங்கும் ஹெலிகாப்டர் பறந்தது. வண்டி கிளம்பியதும் செல்போனை டயல் செய்தவள். ”கிளம்பிட்டேன். ஒரு டிராவல்ஸ் வண்டி வந்துச்சு.”

மறுமுனையில் ஏதோ விடாமல் சொல்லிக் கொண்டிருக்க இவள் ம்… ம்… என்று மட்டுமே சொல்லி, கட் செய்தாள்.

”ஸாரி… பேசிக்காம ஏறிட்டேன். உங்களுக்கு நான் எவ்வளவு பே பண்ணணும்?”

”பரவாயில்லங்க… இப்ப என்ன அவசரம்?”

முகத்தில் லேசான புன்னகையோடு, ”நீங்க ஓனரா, டிரைவரா?” என்றாள்.

”ஓனர்தான். கோடம்பாக்கத்தில டிராவல்ஸ் வெச்சுருக்கேன். மொத்தம் ஏழு வண்டி ஓடுது. ஓரளவு நல்ல வருமானம்.’

”ஓ!”

”சொந்த ஊரு திண்டுக்கல். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். ஒரு தங்கச்சி… கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. திண்டுக்கல்ல சொந்த வீடு இருக்கு. தவிர ஒரு லைன் வீடு இருக்கு. வாடகைக்கு விட்டிருக்கோம்” என்றான்.

”என்னமோ பொண்ணு தேடறவங்க, தரகர்கிட்ட சொல்ற மாதிரில்ல டீட்டெய்ல்ஸ் சொல்றீங்க!” என்றாள் சிரிப்புடன்.

‘குறி பார்த்து அடிக்கிறாளே… ஒருவேளை இவளுக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்களோ? அந்த அனுபவமோ?’ தடுமாறியபடி சமாளித்தான். ”அது… ஏதோ பேச்சுவாக்கில சொன்னேங்க…”

அவளை ஓரக்கண்ணால் கவனித்தான். கல்யாணமாகாதவள் போலத்தான் இருக்கிறாள். மெதுவாகக் கேட்டான்…

”நீங்க என்ன பண்றீங்க?”

”ஹவுஸ் ஒய்ஃப்’’ என்றாள். இவன் சற்றே திகைத்தான்.

”கல்யாணம் ஆயிருச்சா உங்களுக்கு?”

”ம்… மூணு வருஷம் ஆச்சு.”

இவனுக்குத் தேவையில்லாமல் ஓர் ஏமாற்றம் தோன்றியது. ரோட்டை தேவைக்கதிகமாக உற்றுப் பார்த்து வண்டியைத் தொடர்ந்து ஓட்டினான்.

”என்ன அமைதியா வர்றீங்க?’

”லேடீஸுக்கு ஈஸியா கல்யாணம் ஆயிருது… இல்லீங்களா? என்ன லவ் மேரேஜா?”

”இல்லை. அரேஞ்ச்டு மேரேஜ்தான்.”

”பசங்க இருக்காங்களா?”

”இன்னும் இல்லை. உங்களுக்கு எத்தனை பசங்க?”

சங்கர் சோகமானான். ”ஏங்க என்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவன் மாதிரியா தெரியுது?” என்றவன், பொருமலுடன் தொடர்ந் தான். ”அம்மா பார்த்துக்கிட்டிருக்காங்க. ஒண்ணும் செட் ஆகலை.”

”ஏன்? நிறைய எதிர்பாக்கிறீங்களா?”

”அப்படியெல்லாம் இல்லைங்க. நமக்கு டைம் வரல. நான் ஒரு பாவப்பட்ட ஆம்பளைங்க.’’

அவள் மேற்கொண்டு ஏதோ கேட்கத் துவங்கினாள். ஆனால், சங்கர் உரையாடலில் சுவாரஸ்யம் இழந்திருந்தான். அவளது கேள்விகளுக்கு சுவாரஸ்யமின்றி பதில் சொன்னான். ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்தி, தயிர்சாதம் சாப்பிட்டார்கள்.

வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஸீட்டில் தூங்கத் துவங்கியிருந்தாள். ‘பெண் என்றவுடன் காரில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டோம். மகாராணி மாதிரி தூங்கிக்கொண்டு வருகிறாள். என்ன ஒரு தூக்கம்?!’

- இவன் மனதில் ஒரு ஏக்கம் படர்ந்தது. ‘இவளுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமலிருந்தால், சென்னை போவதற்குள் லவ் சொல்லி இருக்கலாம். என்ன செய்வது… நாம கார்ல போனா… விதி நமக்கு முன்னால ஏரோப்ளேன்ல போகுது…’ என்று நினைத்துக் கொண்டான்.

தாம்பரம் வந்தபோது அவள் விழித்துக் கொண்டாள்.

”நீங்க எங்க போகணும்?”

”குரோம்பேட்டை.”

”அட்ரஸ் சொல்லுங்க.”

”மெயின்ல இறக்கி விடுங்க. ஹஸ்பெண்ட் வந்து பைக்ல பிக்-அப் பண்ணிக்கிருவாரு.”

”பரவால்லைங்க வீட்ல விட்டுர்றேன்.”

”ப்ளீஸ்… மெயின்லயே இறக்கி விட்டுருங்க.”

- உறுதியான குரலில் சொன்னதும், வண்டியை நிறுத்தினான். தனது பர்ஸை எடுத்தாள்.

”எவ்வளவு?”

”பரவால்லங்க. பணம் வேணாம். வர்ற வழியிலே உங்களை இறக்கி விட்டிருக்கேன். இது லிஃப்ட் குடுத்த மாதிரிதானே?”

”அப்படியில்லைங்க. பணம் தர்றதா சொல்லித்தானே நான் ஏறினேன்?’’

”எல்லா நேரமும் மனுஷன் டிரைவராவே வாழ முடியுமா? ஒரு ஃப்ரெண்டு டிராப் பண்ணதா நினைச்சுக்கங்க. நான் வர்றேன்”

- அவள், அவனை வித்தியாசமாகப் பார்த்தாள். அவன் சற்று தயக்கத்துடன் கேட்டான்…

‘உங்க பேர் என்னங்க?’

”நிவேதா.”

”என் பேரு சங்கர்ங்க” என்றான் அவனாகவே. அவள், தர்மசங்கடத்துடன் புன்னகைக்க, வண்டியைக் கிளப்பினான்.

அடுத்த நாள் காலையில் காரைத் துடைக்கும் போதுதான் அந்த வேலட் கவரை கவனித்தான் சங்கர். உள்ளே நிவேதாவின் போட்டோ இருந்தது. கூடவே சில காகிதங்கள், பேங்க் ஏ.டி.எம் கார்டு, டூ-வீலர் டிரைவிங்க் லைசென்ஸ் எல்லாம் இருந்தன. ஒரு போன் நம்பர் இருந்தது. அதை டயல் பண்ணிப் பார்த்தான். ‘ஸ்விட்ச்டு ஆஃப்’ என்றே வந்தது. கொஞ்சம் யோசித்தான். அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஓரத்தில் ஆவல் தோன்றியது. டிரைவிங் லைசென்ஸில் இருந்த அட்ரஸுக்கு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

குரோம்பேட்டையில் ஒரு முட்டுச்சந்தின் ஓரத்தில் உள்ளடங்கி இருந்தது அந்த வீடு. பழைய வீடு. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் ரொம்பப் பழசாக இருந்தது. ஆள் அரவமில்லாத மதிய நேரம்… சங்கர் தயக்கத்துடன் காலிங் பெல்லை அழுத்தினான்.

”யாரு… உள்ள வாங்க” என்று குரல் கேட்டது. தளர்ந்த, பலவீனமான குரல்.

இவன் உள்ளே நுழைந்தான். வீடு அநியாயத் துக்கு அமைதியாக இருக்க கட்டிலில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். வெளுத்துப் போன முகம்… பார்த்தாலே சீக்காளி என்று சொல்லும்படிக்கு இருந்தாள். அறை முழுவதும் கச கச என்று இருந்தது.

”யார் வேணும்?”

”இது நிவேதா வீடுதானே?”

”ஆமா… நீங்க?”

”நேத்து என் கார்லதான் வந்தாங்க. வேலட் கவரை விட்டுட்டு வந்துட்டாங்க.”

”அப்படியா?”

”அவங்க இல்லீங்களா?”

”வெளியில போயிருக்கா…”

”நீங்க?” என்றான் தயங்கியபடி..

”நான் அவளோட அக்கா.”

”அப்படியா!’’ என்றவன், சுற்றுமுற்றும் பார்த்தான். சுவரில் ஒரு கல்யாண போட்டோ இருந்தது. அதில் நிவேதாவின் அக்கா சற்று ஆரோக்கியமாக, புருஷனுடன் இருந்தாள். இவன் அவள் பக்கம் திரும்பினான்.

”அவங்க எப்ப வருவாங்க?”

”தெரியலை…” என்றவள், இவனை சற்றுத் தயக்கத்துடன் பார்த்தாள். ”பர்ஸை கொடுத்துட்டு போங்க… அவ வரவும் நான் சொல்லிடறேன்” என்றாள். இவன் பர்ஸை எடுத்து நீட்டினான். பிறகு, தயக்கத்துடன் கேட்டான்.

”அவங்க ஹஸ்பெண்ட் எங்க வேலை பாக்கறாரு?”

”யாரோட ஹஸ்பெண்ட்?”

”நிவேதாவோட ஹஸ்பெண்ட்.”

”இன்னும் மேரேஜே ஆகலையே..?”

இவன் முகம் மாறியது. ”ஓ, ஸாரிங்க. நான்…”

”பரவால்லை… நீங்க கிளம்புங்க… தேங்க்ஸ்.”

- அவள் குரலின் தொனி, இவனை சங்கடப் படுத்தியது. ”சரிங்க” என்று வெளியேறினான். மனது குழம்பியிருந்தது. அவள் ஏன் பொய் சொல்ல வேண்டும்?

காரைக் கிளப்பினான். அந்த முட்டுச் சந்திலிருந்து வெளியேறினால் போதும் என்கிற மாதிரி ஒரு கலக்கமான உணர்வு அவனைப் பீடித்திருந்தது. தெரு திரும்புகையில் பார்த்தான்… அந்த வீட்டில் பார்த்த போட்டோவிலிருந்த அக்காவின் புருஷன் பைக் ஓட்ட, பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தாள் நிவேதா. அக்கா புருஷன் சிவந்த கண்களுடன், ஏதோ அதட்டலாக சொல்லியபடி வர, இவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பைக்-ஐ கடக்கையில் இவனை கவனித்துவிட்டாள் நிவேதா. இவன் பிரேக்கை அழுத்திய அந்த நொடியில் ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்து சைகை செய்தாள். இவன் அவளையே பார்த்தபடி இருக்க, கலங்கிய கண்களுடன் கடந்து போனாள்.

இவனுக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. வண்டியை ஆஃப் செய்தான். கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். பிறகு, வண்டியைக் கிளப்பினான். ‘பெண்கள் பாவம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

- ஜனவரி 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
ராமையா தட்டில் இருந்த சோற்றை உண்ணாமல் கைகளால் அதனை அளைந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தார். கொஞ்ச காலமாகவே அப்படித்தான் இருக்கிறார். நாச்சார் அவரைச் சலிப்புடன் பார்த்தாள். மனைவிமார் புருஷன்மாரைப் பார்க்கிற பார்வைகள் ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்ப மாறுகின்றன. கல்யாணம் முடிச்ச ...
மேலும் கதையை படிக்க...
யாக்கை
குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... ...
மேலும் கதையை படிக்க...
தாத்தாப் பூ..
சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் கால்களைத் தண்ணிக்குள்விட்டு 'சளக் புளக்' என்று உழப்பிக்கொண்டு ஒரு முக்கியமான வேலை யில் இருந்தான். நாலு வயசுப் பையனுக்கு அப்படி ...
மேலும் கதையை படிக்க...
‘ஓ’ போடு?
நில அதிர்வு பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியபோது ஓரிடத்தில் எங்கள் ஊர் பெரிசுகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் படம் வரைந்த நண்பர் மாத்து பெரிசுகள் என்று எழுதுவதில் ஒருவித எள்ளல் தொனி இருப்பதாகச் சுட்டிக்காட்டவே அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
தெக்குப் புஞ்சை
மகா கனம் பொருந்திய முதன் மந்திரி அவர்கள் சமூகத்துக்கு, மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுக்கா வட வீரநாயக்கன்பட்டி உட்கிடைக் கிராமம் வட புதுப்பட்டியில் வசிக்கும் பெரியசாமி மகன் தியாகராஜன் எழுதிக்கொள்ளும் மடல் என்னவென்றால், நீங்கள் கெவர்மென்ட்டார் சில வருஷங்களுக்கு முன்பு வைகை டேமை ...
மேலும் கதையை படிக்க...
அதனதன் வாழ்வு
யாக்கை
தாத்தாப் பூ..
‘ஓ’ போடு?
தெக்குப் புஞ்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)