ஏக்கம் நிறைவேறுமா?

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 28,896 
 

“பணி ஓய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு; வாசலில் திண்ணை! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம். உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம். தாழ்வாரத்தின் பக்கவாட்டில் ஒரே ஒரு அறை; அதையும் தாண்டி பூஜையறை.அதையொட்டி சமையலறை. பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்; கிணறு அவசியம்! அதனருகில் துவைக்கும் கல். ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம் கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம்!

குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம். (டவுன்) இருக்க வேண்டும்; வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம். “வாடா அம்பி, என்ன கும்மோணத்துக்கு போய்ட்டு வந்தியா?” என்று அடுத்த வீட்டுக் கிழவர் விசாரணை.

காலை எழுந்து பல் விலக்கியதும் காபி! (அது இல்லைன்னா சரிப்படாது) அதன் பின்னால் செய்தித்தாள். அதை ஒரு பத்தி விடாமல் படித்து முடிக்க வேண்டும். அப்புறம் பழையது! தொட்டுக் கொள்ள வடுமாங்காய், மோர்மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய்; அப்புறம் தோட்டத்தில் கொஞ்சம் நேரம் வேலை.

அதன் பின்னால் குளியல். கொஞ்சம் நேரம் பூஜை முடிந்ததும் ஊரிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ செல்லுதல், வழிபாடு. முடித்து விட்டு வந்தால் பதினோரு மணிக்கு சாப்பாடு. அதன் பின்னால் வாசல் திண்ணையில் ஒத்த வயதுடைய அக்கம் பக்கத்து கிழங்களுடன் அரட்டை சிறிய பேட்டரி ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே விமர்சனம்! சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால் கேரம் போர்டு, காசு வைக்காமல் ரம்மி!

மதியம் இரண்டு மணி நேரம் தூக்கம்; மாலை ஒரு காபி! கொஞ்சம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலை. மாடு இருந்தால் பால் கறப்பது அடிஷனல். அப்புறம் கோவிலுக்கு ஆறு மணி பக்கம். அங்கு தரிசனத்துக்கு பின்னால் ஒரு ஏழெட்டு டிக்கெட்டுகள் உட்கார்ந்து பல விஷயங்கள் பற்றி அலசல் ஒரு எட்டு மணி வரை.

பின் வீடு திரும்பி எளிய டிபன்; நாலு இட்லி அல்லது இரண்டு சப்பாத்தி! கொஞ்சம் பால். ராத்திரி திண்ணையில் பாய் விரித்துக் கொண்டு அக்கம் பக்கம் தோஸ்துகளுடன் இருட்டில் பேசிக் கொண்டே படுக்கை; தூக்கம் வரும் போது தூங்கிப் போகுதல். (முடிந்தால் வாசலில் உள்ள வேப்பமரத்தின் கீழே) கயிற்றுக்கட்டிலில் படுத்து ஜம்மென்று உறக்கம்!

செல்போன் இல்லை; கணினி இல்லை; டிவி இல்லை; பேஸ்புக் இல்லை. வாட்ஸ்அப் இல்லை! எதுவுமே இல்லை!! உடலில் நோயுமில்லை, மனதில் கவலையுமில்லை!!! வாய்க்குமா?”

***

சிவசங்கரன் தன்னுடைய சிறிய உரையை முடித்ததும் அரங்கத்தில் கைத்தட்டல் பலமாக ஒலித்தது. தொடர்ந்து பலர் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும், சிரிக்கும் கலகலவென்று ஓர் சூழ்நிலையை உருவாக்கியது.

அது ஒரு சிறிய, அழகான, சுத்தமான கம்யூனிட்டி ஹால். கிட்டத்தட்ட ஒரு நூறு பேர், எல்லாருமே மூத்த குடிமகன்கள் அமர்ந்திருந்தனர். உரை ஆற்றிய சிவசங்கரனும் ஒரு மூத்த குடிமகன்தான்.

“ஸைலன்ஸ்… அமைதி..” என்றபடி மேடையில் ஒரு நடுத்தர வயது மனிதர் போடியத்திற்கு வந்தார்.

ஹாலில் நிலவிய சப்தம் மெதுவாக அடங்கியது. சிவசங்கரன் மேடை மேல் இருந்த ஒரு நாற்காலியில் புன்னகையுடன் சென்றமர்ந்தார்.

“அன்புள்ள நண்பர்களே, ‘ஏக்கம் நிறைவேறுமா?’ என்ற தலைப்பில் நமது நண்பர் திரு.சிவசங்கரன் மிக அழகாக, எளிமையாக, கவித்துவம் ததும்ப தன் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். நம் எல்லோருக்குமே ஏறக்குறைய இந்த ஏக்கம் மனதின் அடியில் இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது சிவசங்கரன் வெளிப்படுத்திய கருத்துக்களை ஒட்டியோ, அல்லது வெட்டியோ பேச அரங்கத்தில் இருக்கும் ஓரிரு நண்பர்களை அழைக்கிறேன்,” என்றார்.

ஒரு விநாடி அமைதிக்குப் பின் ஒரு பெரியவர் எழுந்து மேடைக்கு வந்தார். அவருக்கும் வயது அறுபதுக்கும் மேலிருக்கும்.

அவர் மைக்கின் அருகில் சென்று பேசத் தொடங்கினார்.

“நண்பர் திரு.சிவசங்கரனின் ஏக்கம் ஏதோவொரு வகையில் நம் எல்லோருக்கும் உள்ளது. ஆனால், அதன் பரிமாணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். நான் எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்,” என்று நிறுத்தினார்.

“பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் தமிழ்நாட்டின் கிராமங்களில் இருந்த வாழ்க்கை முறையை அவர் உரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. நானும், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற போதிலும், என் நினைவில் ஒரு சில நிகழ்வுகளே பதிவாகி இருக்கிறது. குறிப்பாக எங்கள் வீட்டில் காலையில் சாப்பிடும் பழையதும், வடுமாங்காயும். ஆஹா, அதன் சுவையே அலாதிதான்! நான் பள்ளி செல்லும் பருவத்தில் இருந்ததால், பெரும்பாலும் ஸ்கூல் போவதற்கு முன் சாப்பிடுவது பழையதுதான். ஆனால், இப்போது அதே பழையதை இந்த வயதில் காலங்கார்த்தாலே சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா என்பது சந்தேகமே! எனக்கு அந்த வயசிலேயே பழையது சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்குப் போனால் தூக்கம் தூக்கமாக வரும். இந்த வயதில் சாப்பிட்டால் தூக்கம் வருவது ஒருபக்கம் இருக்கட்டும். ஷுகர், பிபி, தவிர, அஸிடிட்டி என்று பல்வேறு நோய்கள் நம்மைப் படுத்தும்போது கார்போஹைடிரேட் அதிகம் உள்ள பழையது எப்படி சரிப்படும் என்று தெரியவில்லை,” என்று அவர் பேசி முடித்ததும், மீண்டும் அரங்கத்தில் சிரிப்பொலியும், பேச்சும் எழுந்தது.

பேசியவர் கீழே வருவதற்கு முன்பே, இன்னொருவர் மேடைக்குச் சென்றார்.

“நான் திரு.சிவசங்கரனின் பேச்சை மிகவும் ரசித்தேன். அந்தக் காலத்து தமிழ் நாவல் ஒன்றைப் படிப்பது போல் இருந்தது. நான் பழைய அமுது பற்றிப் பேசப் போவதில்லை. ஏனெனில், இன்றைய விஞ்ஞான, மருத்துவ உலகில் அதற்கு உள்ள சிறப்பை திடீரென்று உணர்ந்து அதை விளக்கக் கூட வரலாம். நான் சொல்லப் போவது வேறு. அது மாடுகளைப் பற்றி. ஓரிரு பசுமாடு என்றார் நண்பர் சிவசங்கரன்.

மாடு வளர்த்துப் பேணிக்காப்பது என்பது எளிதான சமாச்சாரமில்லை. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் பசுமாடு இரண்டு இருந்தது. அதையும், மாட்டுக் கொட்டிலையும் கவனிப்பது என்பது ஒரு முழுநேர வேலை. அதை என் அப்பா, அம்மா கூட அந்தக் காலத்தில் பார்த்துக் கொண்டது கிடையாது. ரங்கன் என்று ஒரு வேலைக்காரன் இருப்பான். அவன் காலையில் வந்தால் மாடு கறப்பதில் இருந்து, சாணத்தை எடுத்துப் போவது, மாட்டைக் குளிப்பாட்டுவது, அதற்குத் தீனி போடுவது, பிறகு கொட்டிலை சுத்தம் செய்வது என்று பல ஜோலிகள் இருக்கும். அவன், அதோடு தோட்டத்தையும் பெருக்கி, சுத்தம் செய்வான். மாட்டை சினைக்கு விடுவது, அதற்கு உடம்புக்கு வந்தால் பார்த்துக் கொள்வது, கன்று போடுவது, அதைக் கண்காணிப்பது என்று நான் அறிந்தவரை அது ஒரு முழுநேர வேலை. இன்று, இந்த வயதில் நம் நண்பர் சொன்னது போல் கிராமத்தில், அதுவும் அவர் குக்கிராமம் என்றார்; அங்கு போய் இந்த உடலுழைப்புக்கு நம் உடம்பு ஒத்துழைக்குமா, அல்லது ரங்கன் போல் இந்த நாளில் ஒரு வேலைக்காரன் கிடைப்பானா என்பது தெரியாது. நான் சென்னை வந்த புதிசில் சிறிது காலம் திருவல்லிக்கேணியில் இருந்தேன். அங்கு தெருவில் இருக்கும் மாடு நடமாட்டம் இன்றும் தொடர்வதாகப் பலர் சொல்கிறார்கள். பேப்பரில் எழுதுகிறார்கள்.”

பலத்த சிரிப்பு எழுந்தது.

“ஆக, மாடு வளர்ப்பது நமக்கு சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தோன்றவில்லை..” என்று முடித்தார் அவர்.

அரங்கம் மீண்டும் கைத்தட்டலில் அதிர்ந்தது.

அவர் மேடையிலிருந்து இறங்கவும், இன்னொரு மனிதர் ஏறுவதும் நிகழ்ந்தது. அவர் என்ன பேசப் போகிறார் என்பதைக் கூட்டம் ஆர்வத்துடன் கவனித்தது.

“ஏக்கம் நிறைவேறுமா?” என்ற தலைப்பில் சிவசங்கரன் ஆற்றிய உரை ஒரு சிறிய, சுவாரசியமான விவாதத்தை உருவாக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை; இருந்தாலும், கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் காலத்திற்கேற்ப முன் வைக்கப்பட்டது மக்களின் ஆர்வத்தைக் கூட்டியது.

மேடையில் ஏறிய நண்பர் புன்னகை புரிந்தார். பின் பேச ஆரம்பித்தார். “இரண்டு நண்பர்கள் இரண்டு விஷயங்களைப் பற்றியும், அதில் உள்ள பிராக்டிகல் சிரமங்கள் பற்றியும் குறிப்பிட்டனர். நான் வேறொரு விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். அதாவது தோட்டம், வயல் இவை குறித்து. எனக்குத் தோட்டம் வைத்துப் பராமரிப்பது என்பது மிகவும் பிடித்ததொன்று. என் தனி வீட்டில் ஒரு அழகான தோட்டம் போட்டு ஓரளவுக்குப் பாதுகாத்து வந்தேன். ஆனால், தோட்டம் போட்டு வளர்ப்பது சாதாரணம் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் குழந்தைகள், அல்லது மாடு, கன்று, நாய் இவை வளர்த்தால், அதில் எவ்வளவு அக்கறை காட்டுவீர்களோ, அதே அளவு அக்கறை இதிலும் செலுத்த வேண்டும். நல்ல பொழுதுபோக்கு என்றாலும், மேலெழுந்த வாரியாக ஏதோ புத்தகம், படிப்பது போலோ, பிரவசனம் கேட்பது போலவோ, சினிமாவை ரசிப்பது போன்றோ அல்ல. நிறைய உடல் உழைப்பும், கவனமும் மிகவும் அவசியம். ஆனால், அப்படி நீங்கள் வளர்த்து, பெரிதான செடியில் பூக்கும் போதோ, காய்க்கும் போதோ தோன்றும் மகிழ்ச்சி அலாதியே. வயல், வரப்பைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், அவற்றில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதும், அதைச் சரியான முறையில் கவனிப்பதற்கும் தனித்திறமை வேண்டும் என்று சொல்வார்கள்,” என்றார்.

இவருடைய பேச்சு கொஞ்சம் ‘சீரியஸாக’ இருந்ததால் கேட்டுக் கொண்டிருந்த கும்பல் அமைதி காத்தது. எல்லோருமே சற்று யோஜனையில் ஆழ்ந்து விட்டார்கள் போல் தோன்றியது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களில் பெண்டிர் அதிகம் இல்லை. இரண்டு, மூன்று பேர்களே இருந்தனர். திடீரென்று அதிலிருந்து ஒரு பெண்மணி எழுந்து ‘நான் பேசலாமா?’ என்றாள்.

எல்லோர் பார்வையும் அவள் பக்கம் திரும்பின. அந்தப் பெண்மணிக்கும் ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும். சற்று இரட்டை நாடியாக, முகத்தில் களையுடன் இருந்தாள். காதுகளிலும், மூக்கிலும் வைரங்கள் ஜொலித்தன.

மேடையில் இருந்த நடுத்தர வயதுக்காரர் “ஓ.. கட்டாயமாக,” என்றார்.

அந்தப் பெண்மணி மெதுவாக நடந்து மேடையின் படிகளில் கவனமாக ஏறினாள். மைக் அருகே சென்றபோது சற்றுக் கசமுச என்ற பேச்சு அடங்கி அமைதி நிலவியது.

“என் பெயர் வசந்தா. நான் கும்பகோணத்தைத் சேர்ந்தவள்தான். திரு.சிவசங்கரன் பேசியதையும், அதைத் தொடர்ந்து மற்றவர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டதையும் ரசித்தேன். ஆனால், எனக்கு ஒரு குறை. இது ஒரு ஆணின் கனவாகத்தான் தோன்றுகிறது. ஏக்கமாகத்தான் பிரதிபலிக்கிறது. அதே வயதுள்ள, அல்லது சற்று வயது குறைந்த அவர் மனைவிக்கு உள்ள ஏக்கமாக எனக்குத் தோன்றவில்லை. காலையில் சுடச்சுட காபி குடித்து விட்டு எட்டு, ஒன்பது மணிக்கு ‘ஜில்’லென்று பழையது சாப்பிட வேண்டும் என்கிறார். அது இன்றைய சூழலின் முரண்தான். ஆனால், அதற்கும், அவர் வீட்டில் ஒரு பெண்மணி முதல் நாள் சாதம் வடித்துத் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். கிராமங்களில் கூட இப்போது ‘காஸ்’ கனக்ஷன் வந்து விட்டது என்கிறார்கள். அது எனக்குத் தெரியாது. நான் பிறந்து, கொஞ்ச நாட்களே இருந்த என் கிராமத்தைப் பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது. அது போகட்டும். ‘காஸ்’ இல்லை என்றால் ‘இன்டக்ஷன் ஸ்டவ்’வோ, ‘மைக்ரே வேவ் அவனோ’ இருக்குமா? கும்மட்டி அடுப்பிலோ, விறகு அடுப்பிலோதான் சமைக்க வேண்டும் எனில், எங்களால் சத்தியமாக முடியாது.

‘நியூஸ் பேப்பரையும்’, ‘அரசியல் அக்கப்போரை’யும் தவிர வேறெந்த விதமான பொழுதுபோக்கும் இருக்கக் கூடாது என்கிறார் திரு.சிவசங்கரன். பெண்கள் என்ன செய்வது? ஆட்டுக்கல்லில் தோசைக்கும், இட்லிக்கும் அம்மியில் சட்னி, மோர்க் குழம்புக்கும் ‘மாங்கு மாங்கு’ என்று அரைத்துக் கொண்டு சதாசர்வ காலமும் சமையல் பற்றியும், வீட்டைப் பெருக்கித் துடைத்து, பாத்திரம் தேய்த்து, கிணற்றில் தண்ணீர் இழுத்துத் துணி தோய்த்து தேய்வதுதான் பெண்களின் பொறுப்பா? எனக்குத் தெரியவில்லை! இந்தக் கருத்து மொத்தமுமோ ‘மேல் ஷாவினிஸ’மாகத் தோன்றுகிறது. நான் படியேறி வரவும், நடக்கவும் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் பார்த்தீர்களே? ‘ஆஸ்டோ ஆர்த்ரைடிஸ்’ இல்லாத பெண்கள் இன்று சமுதாயத்தில் மிகக்குறைவு. பெண்கள் தன் நாட்டிலும், வெளியூரிலும், வெளிநாட்டிலும், எங்கு சென்றாலும் புருஷனுக்காகவும், குழந்தைகளுக்காகவும், பேரன் பேத்திகளுக்காகவும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு திரு.சிவசங்கரனிடம் ஏதாவது பதில் இருக்கிறதா?”

கூட்டத்தில் சிரிப்பொலியும், பேச்சும் எழுந்தன. புன்னகையுடன் மெதுவாகத் தன் இடத்திற்குத் திரும்பினாள் வசந்தா. மேடையில் இருந்த அந்த நடு வயதினர் “வெல் ஸெட் மேடம்.. வேறு யாராவது கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?” என்றார்.

கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டவர்- இத்தனை நேரம் வரை அவரை எவருமே கவனிக்கவில்லை, அவர் தன் கையை உயர்த்தி விட்டு வந்தார்.

அரங்கத்தில் இருந்த அத்தனை கண்களும் அவரை வியப்புடன் பார்த்தன. “இவர் யார்? இவர் எப்படி இந்தக் கூட்டத்தில் என்ற கேள்வி” எல்லோர் மனசிலும் தோன்றியது.

அவர் மேடையேறி மைக்கின் அருகே சென்ற போது மீண்டும் ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவு நிசப்தம் நிலவியது.

“வணக்கம்” என்ற தமிழில் அவர் தொடங்க அத்தனை பேரும் அயர்ந்தனர்.

“நான் ஜான் ஸ்டீஃபன். பிறப்பினாலும், வளர்ப்பினாலும் நான் ஓர் அமெரிக்கன். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக நான் இந்தியாவில்தான் வாழ்கிறேன்-குறிப்பாகத் தமிழ்நாட்டின் தென்பக்கத்தில்-தஞ்சாவூருக்கு அருகே உள்ள புதுசத்திரம் என்ற கிராமத்தில்.

இந்தப் பத்து ஆண்டுகளில் நான் தமிழை நன்கு கற்றதோடன்றி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன்.

உங்கள் நாட்டின் சரித்திரம், மரபுகள், கடவுள் நம்பிக்கை, தத்துவங்கள் எல்லாவற்றையும் பற்றிக் கொஞ்சம், கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் இந்த அளவுக்குத் தமிழ் பேசக் காரணம் என்னுடைய ஆசான் திரு.வேங்கடரமணன் என்ற தமிழ்ப் பேராசிரியர்தான். நான் அமெரிக்காவின் டல்லஸ் மாநிலத்திலிருந்து தென்னிந்திய வாழ்க்கை, கலாசாரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியா வந்த நாளிலிருந்து எனக்குத் தமிழையும், இந்தியாவின் மக்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

நீங்கள் அனைவரும் இந்த அமெரிக்கன் யார்- இவன் எப்படி நம் வாழ்க்கை முறை, கனவு, ஏக்கங்கள் பற்றிய பேச்சில் குறுக்கிடலாம் என்று நினைக்கலாம்; அதில் தவறில்லை. ஆனால், பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் அலசி, ஆராயும்போது அதில் சம்பந்தப்படாத ஒருவர், இருபுறங்களின் நியாயங்களையும் கேட்டு, எந்தவிதமான சார்பு நிலை இல்லாமல் கருத்து சொல்வது முறையானது என்பது எல்லோருக்கும் தெரியும். தயவு செய்து நான் தீர்ப்பு சொல்ல வந்திருப்பதாக நினைக்க வேண்டாம். நான் இருந்து, பார்த்து, அனுபவித்த சிலவற்றிலிருந்து என் மனதில் தோன்றியுள்ள ஒரு சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் நாட்டில் உள்ள குடும்பம் என்ற கருத்து மிகவும் சிறப்பானதொன்று. உங்கள் நாட்டில் பெரும்பாலான பெற்றோர் தங்களைக் காட்டிலும், தங்கள் குடும்பத்தையே அதிகம் நேசிக்கின்றனர். நாங்கள் பெரும்பாலும் எங்களுக்காகவே வாழ்பவர்கள். உறவின் எல்லைகளை வகுத்துக் கொண்டவர்கள்.

இந்தியப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக எந்தவிதமான சமரசமோ, தியாகமோ செய்யத் தயங்குவதில்லை- அவர்கள் எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்புகூட. அதுதான் உங்கள் பலம்; பலவீனமும் அதுவே! எந்த பலமும், எல்லைகளை விரிக்கும்போதோ, தாண்டும் போதோ பலவீனமடைவதைத் தடுக்க முடியாது.

முதலில் பேசிய திரு.சிவசங்கரனின் ஏக்கம் எனக்குப் புரிகிறது. இப்போது நான் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு கிராமத்தில்தான். ஆனால், அங்குகூட டிவியும், கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் ஓரளவு ஊடுருவி விட்டன. அவர் கற்பனை செய்த காலம் வேறு; இன்றுள்ள நிலை வேறு. குறிப்பாக, மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் வசதியற்ற கிராமங்கள் குறைவு. அங்கு உள்ள பழைய குடும்பங்கள் எல்லாமே நகரங்களையும், வெளிநாடுகளையும் தேடிச் சென்று விட்டன.

நான் இங்கு பேச வந்தது எது சரி- எது தப்பு என்று சொல்வதற்கில்லை.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்க்காமல் இருப்பதில்லை. அது அவனுக்கு ஏக்கத்தைத் தருகிறதா அல்லது மகிழ்ச்சியா என்பதும் அவரவரைப் பொறுத்த சமாச்சாரம். நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து விலகி நகரம் வந்தபோது அவர்களின் வழக்கங்கள், வாழ்க்கை முறைகளிலிருந்து மாறுபட்டிருப்பீர்கள். அதேபோல் அமெரிக்காவில் வாழும் உங்கள் பிள்ளைகள், பெண்கள் உங்களிலிருந்தும் மாறுபடுவார்கள். அமெரிக்க நாடு, எல்லோரும் சொல்வதுபோல் ஒரு முதலாளித்துவ தேசம். இங்கு பணத்திற்கும், அன்றன்றைய சவுகரியங்களுக்கும் தான் முக்கியத்துவம். புலம் பெயர்ந்து வந்து, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் குடியேறி உள்ள ஒவ்வொரு வெளிநாட்டுப் பிரஜைக்கும், உள்ளுக்குள் அந்த ஏக்கம் இருக்கும்.

ஆனால்…

அதை உங்களால் இப்போது செயல்படுத்த முடியாது. சில சுகங்களுக்குப் பழகிப் போன மனமும், உடலும் திரும்ப நீங்கள் ‘எளிமை’ என்று நினைக்கின்ற ‘கடினமான’ வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. இதை நான் குற்றமாகவோ, குறையாகவோ சுட்டிக் காட்டுவதாக நினைக்க வேண்டாம். மாற்றங்கள்தான் நிரந்தரம். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அனைவருக்குமே தெரியும்,” என்று முடித்தான்.

ஒரு விநாடி அமைதிக்குப் பின் எல்லோரும் பலமாகக் கைதட்டினார்கள்.

***

கூட்டம் முடிந்து வெளியே வந்து ஒவ்வொருவரும் அந்த அரங்கத்தின் மிகப்பெரிய கார் பார்க்கிங்கில் இருந்த தங்கள், தங்கள் கார்களில் ஏறி பல மைல் தூரங்களில் இருந்த வீடுகளுக்குச் சென்றனர். சாலைகளில் விரைந்து செல்லும் கார்களைத் தவிர வேறு மனித நடமாட்டம் இல்லை.

ஏனெனில், அது ஸான் ஸான் ஹோஸே என்ற கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓர் பிரபல அமெரிக்க நகரம்.

– ஆகஸ்ட் 2016

Print Friendly, PDF & Email

1 thought on “ஏக்கம் நிறைவேறுமா?

  1. அற்புதம்! அழகாக சொல்லப்பட்டிருக்கிறது இன்றைய ஏக்கமும் அன்றைய வாழ்க்கையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *