எழுதிச் செல்லும் விதியின் கைகள்

 

சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில் சரிந்து உட்கார்ந்து ரிமோட் பட்டனை கிளுக்கினேன். “உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமின்றி; அடுத்து “கிளிக்”, வீட்டில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க ஸ்ரீ தனலக்ஷ்மி எந்திரம் வாங்கு என்று ஆலோசனை சொன்னது அடுத்த வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி; மீண்டும் “கிளிக்”, இங்கே ஏதோ ஒரு பாட்டுக்கு சீருடையில் ஒரு கூட்டமே நடனம் என்ற பெயரில் நடுத் தெருவில் குதித்துக் கொண்டிருந்தது. இது உதவாது என்ற எரிச்சல் வந்து மறுபடியும் “கிளிக்”, திரையில் இப்பொழுது இடுப்பில் இடது கையை முட்டுக் கொடுத்தவண்ணம் அந்த மனிதர் படியில் இறங்கி வந்தார். தலையைத் தலையை ஆட்டிய வண்ணம் ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தவாறு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த மனிதரை முன்பே பார்த்திருக்கிறேன். இப்பொழுது சின்னத் திரையை கண்கள் வெறுமனே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, என் கவனம் அந்த மனிதரின் கடந்த கால வாழ்க்கையை நினைக்க ஆரம்பித்தது. பார்த்தால் ஒரு முப்பது அல்லது முப்பத்திரண்டு வயது போன்ற தோற்றம்.

என் கணிப்பு சரியாக இருக்குமா என யோசித்தேன். இருக்கலாம்… கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில் இருந்தவர், அதனால் இருபது வயதில் இளம்கலை பட்டம், இருபத்திரண்டில் ஒரு முதுகலை பட்டமும் வாங்கியிருக்கலாம். கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்க்க ஒரு முனைவர் பட்டமும் கூட வாங்கியிருக்ககூடும், அப்படிஎன்றால் படித்து முடிக்க ஒரு இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு வயதாகியிருக்கும்.

கல்லூரியில் ஆசிரியர் ஆனவுடன் மாணவர்கள் மிகவும் மதித்து விரும்பும் ஆசிரியராக கருதப்பட்டார். ஆனால், திருமண வாழ்க்கையோ பெண்களோ அவரைக் கவராமல் போனது. காலத்தை இப்படி கொஞ்ச நாள் தள்ளினார் (அப்போ… நான் நினைத்தது சரி, அவருக்கு முப்பதுகளின் ஆரம்ப வயதுதான்). கெளரவமான, மதிப்பான வாழ்க்கை எல்லாம் கொஞ்ச நாள்தான். என்று அந்த பெண்ணின் மேல் விருப்பம் வந்து காதலிக்க ஆரம்பித்தாரோ அன்று தொலைந்தது நிம்மதி, காதலியை அடைய அவள் குடும்பம் முட்டுக்கட்டை போட்டது, பின் அவளும் நீரில் மூழ்கிவிட மனிதர் மேல் கொலைப்பழி விழுந்தது. நீதிமன்றம், வழக்கு என அலைந்தார், வேலை போனது, மதிப்பு போனது, சமுதாயத்தில் கெளரவக் குறைவு என வாழ்வு அவரை புரட்டிப் போட்டுவிட்ட பின் இப்பொழுது சந்நியாசி போல ஊர் ஊராக அலைகிறார்.

எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார், என்ன ஒரு பரிதாப நிலை.

திடீரென இணைய தளம் ஒன்றில் படித்த ஜோதிட பதிவு ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு வேலை இவருக்கு கேது தசை நடக்கிறதோ? என்று தோன்றியது. கேது தசை ஞானம் கொடுக்கும் என்று பதிவின் ஆசிரியர் எழுதியிருந்தாரே என்ற எண்ணம் வர உடனே கணினியைத் தட்டி, இணையத்தில் கலந்து, அந்த வலைப்பதிவில் கேது தசை பற்றி தேடலானேன்.

“பொதுவாக கேது தசை 90% பேர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. கேது ஞானகாரகன். தசை முழுக்கப் பலவிதமான கஷ்டங்களுக்கு ஜாதகனை உட்படுத்தி இறுதியில், தசை முடிவில் ஜாதகனுக்கு ஞானத்தைக் கொடுப்பான். கஷ்டப்படாமல் ஞானம் எங்கிருந்து வரும்? இழப்புக்கள், பிரிவுகள், நஷ்டங்கள், துயரங்கள், துரோகங்கள், துன்பங்கள், உடல்வலி, மனவலி என்று பலவிதமான வலிகளைக் கொடுத்து முடிவில் ஜாதகனை மேன்மைப் படுத்துவான். ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து வலியின் அளவுகள் மாறுபடும்,” என்று கேது தசா புக்தி பதிவில் அந்த ஆசிரியர் எழுதியிருந்தார்.

மேலும், “தீயவன் எங்கிருந்தாலும் தீமையையே செய்வான். அவன் எதைச் செய்தாலும் தீமையே விளையும். ஆனால் கேது ஞானகாரகன் என்பதால், அவனுடைய தீமைகளால், நமது புத்தி தெளிவுறும். நல்லது கெட்டது உறைக்கும். நமது எதிரிகளையும், நமக்குத் துரோகம் செய்பவர்களையும் அடையாளம் காணமுடியும். மொத்தத்தில் கேது தசை முடிவில் நமக்கு ஞானம் உண்டாகும்,” என்றும் எழுதியிருந்தார்.

சரி… ஒவ்வொரு தசா புக்திக்கும் அவர் பரிந்துரை செய்த புலிப்பாணி பாடல்கள் படிக்கலாம் என்று படித்தேன். கேது மகாதசையில் கேதுவின் சுயபுக்திக்குப் பிறகு வருவது கேதுவில் சுக்கிரபுக்தி, சுக்கிரனால் ஒரு சில சந்தோஷங்கள் இருந்தாலும், புக்திக்காலம் பாங்கில்லாமல் இருக்கும் என்று தொடங்கி
” … நாரிழையாள் தன்னுடனே அபமிருந்துகாணும்
வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வான் காணே!”
என்று விளக்கியது புலிப்பாணியின் பாடல்.

அப்போ, நம்ம மனிதர் அப்பத்தான் அந்த பொண்ணு பக்கம் திரும்பியிருக்காரு போல…என்று நினைத்தேன்.

மற்றொரு இடத்தில் கேது மகாதசையில் மனகாரகன் சந்திரனுடைய புக்தி நன்றாக இல்லை என்று புலிப்பாணி தன் பாடலில் குறிப்பிட்டார்…
“… ஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும்
தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்
தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
நன்றாக மடிந்திடுவாள் நலமில்லைதானே”
என்று பாடினார் புலிப்பாணி.

வரிகளை படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி…. என்னது? …. நாரிகையும் சலத்தில் வீழ்ந்து நன்றாக மடிந்திடுவாளா?

தசா புக்தி பாடல்களில், இங்கொன்று அங்கொன்று என பொருந்த, நம்ம ஆளுக்கு கேது தசை தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.

கேது மகா தசை மொத்தம் ஏழு ஆண்டுகள் காலம் நடைபெறுமாம், கேது தசை முடியும் போது வாழ்கையைப் பற்றி ஒரு தெளிவான ஞானம் வந்துவிடுமாம். அப்படியானால், நம்ம ஆளும் ஞானம் வந்தவர் போல் அலைவதைப் பார்த்தால் உத்தேசமாக ஒரு இருபத்தி ஐந்து வயது போல் கேது தசை அவருக்கு ஆரம்பிதிருகக் கூடும். இருபத்திஐந்து வயது போல கேது தசை ஆரம்பம் என்றால் என்ன நட்சத்திரத்தில் பிறந்திருப்பார் என்று அடுத்த கேள்வி தோன்றியது.

உடனே நம் வீட்டுக்காரருக்கு சின்ன வயதில் கேது தசை வந்ததே என யோசித்து, அவருடைய ஜாதகத்தை பார்த்ததில் முப்பதுகளில் அவருக்கு கேது தசை. ஆனால் இதை அவரிடம் சொல்லாமல் விட்டு விடுவது நல்லது. எத்தனை ராசிகள் இருக்கிறது, ராசிக் கட்டத்தில் எத்தனை கட்டம் என்ற விபரமெல்லாம் தெரியாதவர் அவர். உங்களுக்கு முப்பது வயது முடிந்து கொஞ்ச காலத்தில் கேது தசை ஆரம்பம் என்று சொன்னால், அதனால் என்ன? என்பார். கேது தசைன்னா கெட்டகாலம் அப்படின்னு அர்த்தம் என்று விளக்க வேண்டி வரும். அவருக்கு முப்பது வயதானபின் எங்கள் திருமணம் நடந்ததால், உடனே இடக்காக கல்யாணம் ஆனவுடனே கெட்ட நேரம் ஆரம்பம்னு எனக்கு தெரியும், இதுக்கு போய் ஜோசியம் பார்க்க தேவையில்லைன்னு சொல்லலாம். சொல்லிவிட்டு அவர் நகைச்சுவைக்கு அவரே சிரித்து மேலும் எனக்கு வெறுப்பேற்றலாம், எதுக்கு வீண் வம்பு, சண்டை, சச்சரவு எல்லாம்.

மீண்டும் வலைபதிவில் படிக்க தொடங்கினேன்… “புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரக்காரர்களும் கேது தசையைச் சந்தித்தாக வேண்டும். அஸ்விணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு, பிறக்கும்போதே கேது திசை இருக்கும். ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும் கேது அதிபதி”. அப்படியானால் அஸ்விணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களை விலக்கி விடலாம். அப்படியானால் எந்த நட்சத்திர ஜாதகர்களுக்கு 25 வயதில் கேது தசை என்று சிந்தனை தொடர்ந்தது… அப்பொழுது ‘டொயிங்” என்ற சத்தத்துடன் “amma :-) ” என்று மகள் மாதவி இணைய வழி அரட்டைக்கு என்னை அழைத்து என் கவனத்தை திசை திருப்பியிருக்காவிட்டால், அந்த மனிதரின் ஜாதகத்தை இன்னமும் எவ்வளவு குடைந்திருப்பேனோ தெரியாது.

யார் அந்த மனிதர் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருந்தால் “ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பாடலின் காணொளியை ஒரு முறை பாருங்கள்.

குறிப்பு:
இக்கதை “வகுப்பறை” தளத்தில் வெளியிடப்பட்டது 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி ...
மேலும் கதையை படிக்க...
என் சிறு வயதில் ஒரு நாள்... வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை, அந்த நாள் வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது. பள்ளியில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
இரண்டும் கெட்டான் பதின்ம வயது மைனாவிற்கு. அவளது நைனாவிற்கு அவள் ஒரு அருமை மகள். பல சமயம் அவள் சொல்ல நினைப்பது பலருக்குப் புரியாது. சில சமயம் அவள் என்னதான் நினைக்கிறாள் என்று அவள் நைனாவிற்கே கூடத் தெரியாது. அவளது மூளை ...
மேலும் கதையை படிக்க...
தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த ஹீலியம் பலூன் இருக்க, இடதுகை கட்டை விரலை சூப்பிக்கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர் அவளது அம்மா ராஜலக்ஷ்மியும் அண்ணன் ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம். அம்மா பரிமாறுவார்கள். ஏதாவது கதை பேசியவண்ணம் சாப்பாடு நடக்கும். சிலசமயம் பேச்சு எங்கு அராம்பித்தது எங்கு முடிகிறது ...
மேலும் கதையை படிக்க...
கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
அம்மனோ சாமியோ!!!
ஒ மைனா ….ஒ மைனா!
காசியில் பிடிச்சத விடணும்!
அம்மா சொன்ன “கதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)