எப்படியோ போங்க!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 7,695 
 

தாம் பெற்ற செல்வங்களுக்கு இவ்வுலகில் இடம்பெற உயிர் கொடுத்ததே பெரிய காரியம் என்ற இறுமாப்பில், `எப்படியோ போங்க!’ என்று `தண்ணி தெளித்து’ விட்டிருந்தார் முத்துசாமி.

மூத்தவன் வீடு வீடாக பைக்கில் பீட்சா கொண்டு கொடுக்கும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தான். இதுவரைக்கும் நம்மிடம் பணங்காசு கேட்காது, சிகரெட் உள்பட அவன்பாட்டைப் பார்த்துக் கொள்கிறானே என்ற திருப்தி அவருக்கு.

நிறையப் படித்திருக்கக்கூடாதோ என்று தாய்தான் ஆதங்கப்பட்டாள். அதனாலேயே அவருக்கு தன்னைப்போல் இல்லாது, பிள்ளைகளைப்பற்றிய கனவுகளையும், கவலைகளையும் சுமந்திருந்த அன்னத்தைக் கண்டால் ஏளனம்.

“ரமாவைப் பாத்தா எனக்கென்னவோ கவலையா இருக்குங்க. இருக்கிற எடம் தெரியாம, பாடபுத்தகங்களைப் படிச்சுக்கிட்டிருந்த பொண்ணா இது! இப்போ பாட்டுங்கிற பேரில ஏதேதோ கூச்சலைக் கேட்டுக்கிட்டு இருக்கா. எது கேட்டாலும் ஒரு அசட்டுச்சிரிப்பு!”

ஒரு சிறிய டின் பியரைக் கையில் பிடித்தபடி, அந்த கல்யாணமான நடிகைக்கும், இயக்குனருக்குமிடையே இருந்த ரகசிய உறவைப்பற்றி சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருக்கையில், `இவள் எங்கே வந்தாள்!’ என்ற எரிச்சல்தான் எழுந்தது முத்துசாமிக்கு.

“இந்தக் காலத்திலே இப்படி நடந்துக்கிறதுதான் ஃபேஷன்! டி.வியில பாரு, எப்படி எடுத்ததுக்கெல்லாம் சிரிக்கறாங்கன்னு! நீ ஒரு படிக்காத முட்டாள்! ஒனக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகுது!” என்றவர், “என்னைமாதிரி இருக்கக் கத்துக்க.` எப்படியோ போங்க,’ன்னு விட்டுட்டு நிம்மதியா இருப்பியா!” என்று அறிவுரை கூறிவிட்டு, மீண்டும் ஞாயிறு பதிப்பில் முகத்தைப் பதித்துக்கொண்டார்

எப்பாடு பட்டாவது தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும் என்று முனைப்புடன் படித்தாள் ரமா. ஆனால், “சமைக்கக் கத்துக்குடு, போதும். பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?” என்று அவளுடைய படிப்புக்கு அரைகுறையாக முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார் முத்துசாமி.

அதிசயமாக, அன்னம் வாதாடினாள். “இப்பத்தான் பதினஞ்சு வயசாகுது இவளுக்கு. ஸ்கூலுக்குச் சம்பளம் கிடையாது. புஸ்தகமும் இலவசமா குடுத்துடறாங்க. அவ படிச்சா, ஒங்களுக்கு என்ன நஷ்டமாகுது?”

ஒரு கணம் அயர்ந்தார் முத்துசாமி. தன்னை எதிர்த்து கேவலம் ஒரு பெண், அதுவும் தனக்கு அடங்கி இருக்கவேண்டிய மனைவியே, பேசுவதாவது! அவளிடம் நேரிடையாகப் பேசினால் அவளுக்கு மதிப்பு கொடுத்ததுபோல் ஆகிவிடுமென்று, “ரமா! ஒங்கம்மாவோட பேத்தலைக் கேட்டியா? என்னமோ, நீ பெரிய ஆபீசராகிடுவேன்னு நம்பிக்கிட்டிருக்கா. அதையும்தான் பாத்துடுவோமே!” என்றுவிட்டு, பெரிதாகச் சிரித்தார். சற்று ஆசுவாசமாக இருந்தது. வழக்கம்போல், “எப்படியோ போங்க!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

ரமாவுக்கு அவமானமாக இருந்தது. தன் புத்திசாலித்தனத்துக்குச் சவால் விடுகிறார் அப்பா! அம்மாவின்மேல் கோபம்கூட எழுந்தது. நான் எப்படியோ தொலைகிறேன். எதற்கு எனக்கு வக்காலத்து வாங்க வேண்டுமாம்?

இத்தனை ஆண்டுகளாக பெற்றோருக்கு அடங்கிய பெண்ணாய், படிப்பில் கெட்டிகாரியாய், ஒழுக்கத்தின் சிகரமாக இருந்து என்ன கண்டோம்! அப்பாவோ, தான் முன்னுக்கு வந்தால் பெருமைப்படப் போவதுமில்லை, கெட்டழிந்தால் கவலையும் படமாட்டார்!

எட்டாவது படிவ பெரிய பரீட்சையில், எட்டு பாடங்களில் ஏழு `ஏ’ வாங்கியிருக்கிறாள். அது போதாதென்று, `இன்னும் உழைத்துப் படி,’ என்று விரட்டும் ஆசிரியைகள்!

மலேசியாவில், முந்திய வருடமும், எதிர்வரும் வருடமும்தான் நாடுதழுவிய நிலையில் பரீட்சையாதலால், நான்காவது படிவமான `ஹனிமூன் வருடத்தில்’ கிடைக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்துவிட வேண்டும் என்பதுபோல் நடந்துகொண்டார்கள் பதினாறு வயதான மாணவ மாணவிகள்.

அவர்களுடன் முதன்முறையாகச் சேர்ந்துகொண்ட ரமாவிற்கும் புதிய அனுபவங்களும், பழக்கங்களும் ஏற்பட்டன.

தன்னையொத்த பிறருடன் சேர்ந்து ஊர்சுற்றும்போதுதான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! இது தெரியாமல், புத்தகங்களில் முகத்தைப் பதித்துக்கொண்டிருந்தோமே, இவ்வளவு நாளும்!

ஒன்றரை மணிக்கு காலைப் பள்ளிக்கூடம் முடிந்துவிட, மத்தியான வேளைகளில் சிகரெட் பிடித்தபடி பேரங்காடிகளில் சுற்றும்போது, உலகையே வென்றுவிட்டது போன்ற பெருமிதம் உண்டாயிற்று. மனசாட்சி சிறிது குத்த, `அண்ணா மட்டும் சிகரெட் பிடிக்கிறானே! ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டமா!’ என்று சமாதானப்படுத்திக்கொண்டாள்.

தனியாகவே போகும் தைரியம் வந்தது. அப்போது கிடைத்த நண்பன் அவன்.

“ஸ்கூல் போரிங்! வீடு — அதைவிட போரிங்! பெரிய தலைவலி!” என்று சொல்லிச் சிரித்த குமார் அவளைப்போலவே நாட்களை ஜாலியாக கழிப்பவன். அதனாலேயே அவனை அவளுக்குப் பிடித்துப்போயிற்று. சற்றே பெரியவன். அதனால் என்ன! அனுபவசாலி!

“ஏன்? ஒங்கப்பா எப்பவும் ஒன்னை ஏசுவாரா, குமாரு?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள்.

“அவருக்கு நான் ஒருத்தன் இருக்கிறதே தெரியாது. எனக்கு அம்மா இல்லே. சின்னம்மாதான். அது ஓயாம விரட்டும்!” என்று அவன் மனந்திறந்து பேசினபோது, அவன்பால் பரிதாபமோ, அன்போ, எதுவோ ஒன்று ஏற்பட்டது.

தன் பங்குக்கு, “எங்கம்மா நல்லவங்க. ஆனா, படிச்சாதான் முன்னுக்கு வரமுடியும்னு சொல்லிச் சொல்லியே போரடிப்பாங்க!” என்று சிரித்தபோது, ரமா அவனுடன் நெருக்கமாக உணர்ந்தாள்.

“ரமா! எத்தனை நாள்தான் இந்த சிகரெட்டையே கையில பிடிச்சுகிட்டு இருப்பே? வாயேன்!” என்று அவன் அழைத்தபோது, `இன்னும் புதிய அனுபவங்கள்!’ என்று பூரிப்பு ஏற்பட்டது.

மூன்றே மாதங்கள்! உடல் இளைத்தது. உலகமே இன்பமயமாகத் தெரிந்தது. யாரைப் பார்த்தாலும் சிரிப்பு பொங்கியது. அவ்வப்போது கைகால்களில் நடுக்கம். எதிலும் மனம் நிலைக்கவில்லை.

`இப்படியே போனால், அடுத்த வருடம் பரீட்சை எழுத முடியுமா?’ என்று எப்போதாவது சந்தேகம் எழ, அதை அடக்க குமாரைத் தேடிப்போனாள்.

“இதோ பாரு, ரமா. உனக்கு ஃப்ரீயாவே டாடா (போதை மருந்து) குடுக்க எனக்குக் கட்டுப்படி ஆகாது. நானும் காசு குடுத்து வாங்கித்தானே, மத்தவங்களுக்கு சப்ளை பண்ணறேன்!” என்று கறாராகச் சொன்னவன், அவள் பயந்துவிட்டதைப் பார்த்து உள்ளூர மகிழ்ச்சி அடைந்தான். “ஒண்ணு சொல்றேன், கேளு. நிறைய பணம் பாக்கலாம்!”

அவன் சொன்ன வழியைக் கேட்டு ரமா அதிர்ந்தாள்.

“யோசிக்காதே. நீ என் ஃப்ரெண்டு. அதான் ஒனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டறேன்!” குமார் விவரமாகச் சொன்னபோது, முதன்முறையாக அவன்மேல் அவநம்பிக்கை பிறந்தது ரமாவுக்கு.

“இன்னிக்கு வேணாம். எனக்கு நிறைய ஹோம் ஒர்க் இருக்கு,” என்று சமாளிக்கப்பார்த்தாள்.

“அட! ஹோம் ஒர்க் எல்லாம் செய்வியா நீ! என்னைமாதிரி ஸ்கூலுக்குப் போறதையே நிப்பாட்டிட்டேன்னு நினைச்சேனே!” என்று அவன் பெரிதாகச் சிரித்தபோது, அப்பாவையே பார்ப்பதுபோல் இருந்தது ரமாவுக்கு.

இவனுடைய சகவாசம் தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ! ஒவ்வொரு தீய பழக்கமாகப் பழக்கி வைத்துவிட்டு, `நானா ஒன்னை வற்புறுத்தினேன்?’ என்று கழன்றுகொள்வானோ?

SUGAR DADDY என்கிற ஏற்பாட்டின்படி, எவராவது பணக்காரருக்கு `கம்பெனி’ கொடுக்க வேண்டுமாம். சேர்ந்து சாப்பிடுவதுடன் நின்றுவிடுமா? அவள் நம்பத் தயாரில்லை.

அவ்வளவு கலக்கத்திலும் ரமாவுக்குத் தனது எதிர்காலம் நிழலாகத் தெரிந்தது: ஏழு `ஏ’ வாங்கியவள் நான்! இப்போது என் படிப்பு நின்றுபோனால், என்னைப்போலவே உதவாக்கரை ஒருவனை மணந்து, அவனிடமோ, இல்லை, தன்னிச்சைக்குப் பயன்படுத்திக்கொண்ட `சர்க்கரைத் தந்தை’யிடமோ ஏச்சுப்பேச்சும், அடி, உதையும் வாங்கி..!

உண்மை புரிய, உடல் நடுங்கியது.

“நான் போறேன்!” என்று விடுவிடென்று நடந்தாள்.

குமார் அலட்சியமாக தோள்களைக் குலுக்கிக்கொண்டான். எங்கே போய்விடப்போகிறாள்! மூக்கொழுக, உடல் நடுங்க, தாங்கமுடியாமல் போனால், தானே நாளைக்கு வருவாள்!

‘எனக்கு வாய்க்கப்போறவனும், `படிக்காத முட்டாள்’னு வாய்க்கு வாய் என்னை ஏச இடம் கொடுக்கமாட்டேன்!’ என்று ரமா உறுதி எடுத்துக்கொண்டது அவனுக்குத் தெரிய நியாயமில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *