என் பொண்டாட்டி ரொம்ம்ம்ம்ப நல்லவ!

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 22,281 
 

மிகச் சாதாரணமான விஷயம் தான். அது இவ்வளவு பெரிய சண்டையாக மாறி எனக்கும் என் மனைவிக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை.

எங்களுக்குக் கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. டிகிரி படித்து முடித்த ப்ரியா, கல்யாணம் முடிந்த கையோடு, அண்ணாநகரில் நான் புதிதாக வாங்கியிருந்த பிளாட்டுக்கு எங்களுடன் வந்து விட்டாள். பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த கல்யாணம் தான். வெளியில் வேலைக்குப் போக விருப்பமில்லாததால் வீட்டு வேலைகளை எல்லாம் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள். வந்த சில நாட்களுக்குள் அம்மா, தங்கையுடன் சுமுகமாகப் பழகி எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள்.

நான் ஆபீஸுக்கும், என் தங்கை கல்லூரிக்கும் கிளம்பிப் போனதும், மாமியாரும் மருமகளும் சேர்ந்து உட்கார்ந்து டிவியில் ஒரு சீரியலையும் விடாது விமரிசித்துக்கொண்டே பார்ப்பார்கள். நான் ஆபீஸிலிருந்து மாலையில் வீடு திரும்பிய போதும் டிவியில் ஏதாவதொரு சீரியல் ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்த்தபடியே, சமையல் மற்றும் வீட்டு வேலைகளை என் அம்மாவும் ப்ரியாவும். செய்து கொண்டிருப்பார்கள். .நான் சற்று நேரம் நியூஸ் சேனல் பார்த்துவிட்டு என் அறைக்குப் போய் என் லேப்டாப்பில் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்ப்பேன். எந்த காலத்திலும் தமிழ் சீரியல்களை நான் பார்த்ததில்லை. என் தங்கை கொஞ்ச நேரம் மியூசிக் சேனல் பார்த்துவிட்டு, மொபைல் போனில் அவள் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள். ஆக, முழு நேரமும் டிவியின் ரிமோட் என் அம்மாவின் கையிலோ அல்லது ப்ரியாவின் கையிலோ தான் இருக்கும். என்னோடு வெளியில் வருவது கூட சீரியல் இல்லாத விடுமுறை நாட்களில் மட்டுமே. ப்ரியாவின் உலகமே சீரியல்கள் தான் என்றானது.

சென்ற வாரம், அம்மாவும் தங்கையும் சேலத்திலிருக்கும் என் மாமாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று பார்க்கப் போயிருந்தார்கள். தங்கைக்கு கல்லூரி விடுமுறையானதால், நான்கைந்து நாட்கள் அங்கு தங்கிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனார்கள். ப்ரியா, தானே வீட்டு வேலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டாள். ஒரு நாள் அவளை நான் சினிமாவிற்குக் கூட்டிச் சென்றேன். இன்னொரு நாள் அவள் விரும்பிக் கேட்டதால் ஒரு வீணைக் கச்சேரிக்கு அழைத்துப் போனேன். மற்றபடி, தினமும் சீரியல் நிகழ்சிகளைத் தவறாமல் டிவியில் பார்த்துவிட்டுத்தான் படுக்க வருவாள்.

அன்று நான் ஆபீஸ் வேலையாக வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு சீக்கிரமாக வந்தேன். ஒரு கஸ்டமரோடு தகராறு ஏற்பட்டதால், என் மூட் அப்செட். ப்ரியா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். உடை மாற்றிக்கொண்டு முகம் கழுவி அறையில் படுத்துக் கொண்டிருந்த எனக்கு, காபி கலந்து கொடுத்துவிட்டு, சீரியலைத் தொடர்ந்து பார்க்க ஹாலுக்குச் சென்றுவிட்டாள். வீட்டில் நாங்கள் தனியாக இருக்கும்போது, இந்தப் பெண்ணால் எப்படி ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது என்று எனக்குக் கோபம் வந்தது.

‘ஏய் ப்ரியா! இங்க வா’ என்று கூப்பிட்டேன். ‘ஏங்க, நான் சீரியல் பார்த்திட்டிருக்கேன், என்ன வேணும், நீங்க இங்க வாங்களேன்’ என்றாள். நான் கோபமாக அறையிலிருந்து ஹாலுக்கு வந்தேன். நான் வெளியில் வந்ததைக் கூட கவனிக்காமல் சீரியலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆக்ரோஷமாகச் சென்று ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்தேன். அப்போது தான் என் முகத்தில் தெறித்த கோபத்தைப் பார்த்தாள். ‘என்னங்க, என்ன ஆச்சு’ என்றாள். ‘சரியான சீரியல் பைத்தியம். இன்னிக்கி ஆபீசிலிருந்து சீக்கிரம் வந்தேனே, என் கூட உட்கார்ந்து பேசணும்னு உனக்குத் தோணாதா? எப்பவும் டிவி தான் கதியா?’ என்று சத்தம் போட்டேன். ‘நீங்க சீக்கிரம் வந்ததால், படுத்து ரெஸ்ட் எடுப்பீங்கன்னு நெனச்சேன். டிவி தானே பார்த்துட்டு இருந்தேன், என்ன தப்பு?’ என்றாள். ‘அப்படி என்னடி இருக்கு, அந்த சீரியல்லே, உலகத்தையே மறந்து போற மாதிரி?’ என்றேன். ‘வீட்டு வேலையெல்லாம் செய்துட்டு தான் சீரியல் பாக்கிறேன். அது ஒன்னு தானே எனக்கு பொழுபோக்கு. ரிமோட்டை குடுங்க, அந்த சீரியல் முடிஞ்சிடும்’ என்றாள். அவளுடைய அழுத்தமான அமைதியான பதிலைக் கேட்டு எனக்குக் கோபம் தலைக்கேறியது. ‘நான் கூப்பிடறது கூட காதில வாங்காம, அந்த சீரியல்ல அப்படி என்ன மோகம்? தூங்கற நேரம் தவிர எப்பவும் சீரியலையே கட்டிட்டு அழறது தான் உன் வேலையா? சரியான சோம்பேறி. ஏதாவது வேலைக்கு போனியானால், இப்படி டிவி பைத்தியமா இருக்க மாட்டே. வீட்லயே அடைஞ்சு இருக்கறதாலே தான் இப்படி ஆயிட்டே’ என்று திட்டினேன்.

‘நான் வெளியில் போய் வேலை செய்யமாட்டேன்னு சொல்லித்தானே உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க? இந்த கூட்ட நெரிசல்ல பஸ்ஸில் இடிபட்டு நசுங்கி வேலைக்கு போயிட்டு வர்றது எனக்குப் பிடிக்காது. வீட்டு வேலை எல்லாம் நான் தானே செய்யறேன். நான் ஒன்னும் சோம்பேறி இல்லை. சும்மா இருக்கற நேரத்தில நான் டிவி பார்த்தா உங்களுக்கு ஏன் கோபம் வருது?’ என்றாள். ‘அதுக்காக எப்பவும் எதாவது ஒரு சீரியல் பார்த்துட்டு இருப்பியா? உங்கம்மா உன்னை சீரியல் பார்த்துகிட்டே தான் பெத்தாங்களாடி?’ என்று முரட்டுத் தனமாகக் கத்தினேன். அதுவரை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளும் கோபமாக, ‘அனாவசியமாக எங்க வீட்டாரைப் பத்தியெல்லாம், பேசாதீங்க. நீங்க மட்டும் உங்க லேப்டாப்பில் கிரிக்கெட் பாக்கறதில்லையா? குடுங்க அந்த ரிமோட்டை’ என்று என் கையிலிருந்த ரிமோட்டை வாங்க வந்தாள். ‘டிவியை ஒடச்சிப் போட்டுடுவேன், கழுதை. இவ்வளவு கத்தறேன், இன்னும் அந்த சீரியல் தான் பெரிசாப் போச்சு உனக்கு. சரியான சீரியல் பைத்தியத்தை என் கழுத்தில் கட்டிட்டாங்க’ என்று சொல்லி ரிமோட்டை ஓங்கித் தரையில் அடித்து உடைத்தேன். ப்ரியா ஒரு நிமிடம் பதறி விட்டாள். பிறகு உடைந்துத் தெறித்திருந்த ரிமோட் துண்டுகளைத் தரையிலிருந்து எடுத்த படியே, ‘இனிமே எந்த சீரியலும் பார்க்க மாட்டேன். நான் நாளைக்கு எங்கம்மா வீட்டுக்குப் போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றாள். ‘சரி தான் போடி’ என்று சொல்லிவிட்டு நான் என் அறைக்குச் சென்றேன். இரவு டைனிங் டேபிளில் வைத்திருந்ததை சாப்பிட்டுவிட்டு படுக்கப் போனேன். அவள் ஹாலிலேயே படுத்துக் கொண்டாள். \

மறுநாள் காலையில் நான் ஆபீசுக்குக் கிளம்புவதற்குத் தயாரானேன். டைனிங் டேபிளில் எனக்கு டிபனும், லஞ்சுக்கு ஹாட்பேக்கும் தயார் செய்து வைத்திருந்தது. நான் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ‘மாமி கிட்டே போன்ல நான் என் அம்மா வீட்டிற்கு போவதைப் பத்தி சொல்லிட்டேன். நான் கெளம்பறேன்’ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் கையில் பையுடன் வெளியில் சென்றாள் ப்ரியா. அவளுடைய பெற்றோர்கள் வேளச்சேரியில் வசித்து வந்தார்கள். எனக்கு டிபன் பிடிக்கவில்லை. சாப்பிடுவதை நிறுத்தினேன். கோபம் வந்தது. தலை வலித்தது. படுக்கையில் விழுந்து கண்களை மூடினேன். சற்று நேரம் கழித்து எழுந்து சென்று ப்ளாஸ்க்கிலிருந்த காபியுடன் ஒரு தலைவலி மாத்திரையை விழுங்கினேன். நடந்ததை எல்லாம் மனதில் ஓட்டிப் பார்த்தேன். முட்டாள்தனமாகக் கோபப்பட்டு ப்ரியாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தவறு என்று புரிய ஆரம்பித்தது. அவள் போவதைத் தடுத்திருக்கலாமே என்று தாமதமாக எண்ணி வருந்தினேன். ‘சரி, போய் ரெண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்கட்டும், பிறகு போன் செய்து திரும்பி வரச் சொல்லலாம்’ என்று என்னை சமாதானப் படுத்திக் கொண்டேன். மனது வலித்தது. ஆபிசுக்குச் செல்லப் பிடிக்கவில்லை. போன் செய்து லீவு சொன்னேன். பிறகு, தெருக்கோடியில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஒரு புது டிவி ரிமோட் வாங்கி வந்து வைத்தேன். சிறுது நேரம் படுத்திருந்து விட்டு ஹாட்பேக்கிலிருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு டிவியை புதிய ரிமோட்டால் ஆன் செய்தேன். ஸ்போர்ட்ஸ் சேனலை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, ‘தமிழ் சீரியல்களை இப்படி விடாமல் இந்தப் பெண்கள் மாய்ந்து மாய்ந்து பார்க்கிறார்களே, அதில் என்ன தான் காட்றாங்க பார்க்கலாம்’ என்று ஒரு சேனலை வைத்தேன். அது ஒரு குடும்பக்கதை சீரியல் போலிருந்தது. பத்து நிமிடங்கள் பார்த்ததில், அதில் வந்த ஒரு பெண் கதாபாத்திரம் வில்லத்தனமாகப் பேசிக் கொண்டிருந்தாள். வேறு சேனல் மாற்றினேன். அதில் மாமியார் மருமகள் தகராறு நடந்து கொண்டிருந்தது. அடுத்த சேனலில் பார்த்த சீரியலில் அரை மணியில் ஒரு குடும்பத்து ரகசியங்களை நடு வீதிக்குக் கொண்டுவந்து ரகளை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. ‘ஐயோ, இத்தனை மோசமாகவா பெண்கள் இருப்பார்கள்’ என்று தோன்றியது.

நாலைந்து சீரியல்களைத் தொடர்ந்து பார்த்ததில் எனக்கு மீண்டும் தலை வலிக்க ஆரம்பித்தது. சமையலறைக்குப் போய் காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து, மீண்டும் சீரியல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு சீரியலில் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண், உடன் பணியாற்றும் இன்னொரு பெண்ணின் காதலைத் துண்டிக்க முயற்சித்தாள். ஒரு சீரியலில் மனைவி கணவனை கோர்ட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்பது போல், அவன் நடத்தையைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தாள். அடுத்த சீரியலில், அண்ணி கதாபாத்திரம் தன் நாத்தனாரின் கல்யாணத்தைத் தடுக்க ஒரு அந்நிய ஆணுடன் சேர்ந்து திட்டம் போட்டாள். இன்னொரு சீரியலில் மாமியாராக நடித்தவர் இந்த சீரியலில் எல்லார் முன்பும் கேவலமாகத் திட்டி அவமானப் படுத்தப் பட்டார். ஒவ்வொரு சீரியலிலும் பெண்கள் ஆண்களை விட அதீத வில்லத்தனத்துடன் காட்டப் பட்டனர். ஆள் கடத்துவது, அடிப்பது, அடியாள் வைத்து கொலை செய்வது போலெல்லாம் சித்தரித்து இருந்தார்கள். பூதனா, தாடகை, சூர்பனகை, பூலன்தேவி என்று பெயரிட வேண்டிய சீரியல்களை எல்லாம் நல்ல குடும்பப் பெயர் வைத்து ஏமாற்றுவது போல் எனக்குத் தோன்றியது. சில சீரியல்களில் பெண்களை சோக நாயகியாகவும், எப்போதும் அழுது வடிந்து கொண்டிருப்பதாகவும் காட்டினார்கள். இது எதுவும் யதார்த்தமாக எனக்குப் படவில்லை. பெண்கள் இப்படி கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா என்று தோன்றியது. இந்த மாதிரி சீரியல்களை எப்படி பெண்கள் ரசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

நல்ல வேளை, நம் வீட்டில் பெண்கள் இப்படி இல்லை என்று ஆறுதலாக இருந்தது. இந்த மாதிரி சீரியல்களைப் பார்த்தும், இவர்கள் பாதிப்படையாமல் இருப்பதே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன். ப்ரியாவின் மேல் கோபப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்று வருந்தினேன். அந்த சீரியல் கதாப்பாத்திரங்களைப் பார்க்கும்போது, ப்ரியா எவ்வளவு நல்லவள் என்பதை உணர்ந்தேன். நாளைக்கே அவள் வீட்டிற்குப் போய் அவளுக்கு சாரி சொல்லிக் கூட்டி வந்து விடவேண்டும் என்று நினைத்தபடி தூங்கிப் போனேன்.

மறுநாள் காலை, அம்மாவும் தங்கையும் சேலத்திலிருந்து வந்தார்கள். ‘பிரியா ஏன்டா அவங்கம்மா வீட்டுக்குப் போனா? நீ போய் விட்டுட்டு வந்தியா? என்ன உடம்பு அவளுக்கு?’ என்று கேட்டார் என் அம்மா. நான் எதையும் மறைக்காமல் நடந்ததை சொன்னேன். ‘அட ராஜா! என்னப்பா இப்படி பண்ணிட்டே. பிரியா நல்ல பொண்ணுப்பா. அவ வீட்ல இருந்த வரைக்கும் கதை புத்தகம் படிச்சிகிட்டு , வீணை கிளாசுக்குப் போய்வந்திகிட்டு தான் இருந்திருக்கா. சீரியல் எதுவும் பார்க்கவே மாட்டாளாம். நான் தான் எனக்கு தனியா சீரியல் பார்க்க போரடிக்குதுன்னு அவளை என்னோடு சேர்ந்து பார்க்க பழக்கிட்டேன். நீ வேலைக்கு போய்டுவே. காவ்யா காலேஜுக்குப் போய்டுவா. வீட்டு வேலையெல்லாம் முடிச்ச பிறகு, எங்களுக்கு என்ன பொழுதுபோக்கு சொல்லு? அப்படியே சீரியல் பார்த்தாலும், அதுல வர விஷயங்களைப் பத்தி பேசும்போது, நல்லது எது கெட்டது எதுன்னு எங்களுக்கு தெரியாதா? அது கிடக்கட்டும், உம் பொண்டாட்டி என்னைக்காவது அந்த சீரியல்ல வர்ற பொண்ணுங்க மாதிரி உன்னை டார்ச்சர் பண்ணி இருக்காளா? அது வேணும், இது வேணும்னு கேட்டு உன்னை தொந்தரவு பண்ணி இருக்காளா? இல்ல நீ தான் அவளுக்கு என்ன வேணும், என்ன பிடிக்கும்னு கேட்டிருக்கியா? நல்ல பொண்ணைப் புரிஞ்சிக்காம காயப் ‘படுத்திட்டியேப்பா என்றார். ‘ஆமாண்ணா அண்ணி ரொம்ப நல்லவங்க’ என்று ஒத்து ஊதினாள் என் தங்கை. ஆஹா! இந்த மாதிரி மாமியார் – மருமகள் – நாத்தனார் பாசம் நான் பார்த்த எந்த சீரியலிலும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். ‘ஆமாம்மா, நான் தப்பு பண்ணிட்டேன். ஈவ்னிங் அவளைக் கூட்டிட்டு வந்திடுறேன். ஆனா இனிமே ப்ரியா உன்னோடு உட்கார்ந்து சீரியல் பார்க்க மாட்டாள்’, என்று சொல்லிவிட்டு ஆபிசுக்குக் கிளம்பிச் சென்றேன்.

மாலை நேரே ப்ரியாவின் வீட்டிற்குப் போனேன். ஹாலில் அவள் அம்மாவும், தங்கையும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் அப்பா, ‘வாங்க மாப்ளே, நீங்க ஊருக்குப் போயிருக்கறதா சொன்னாளே ப்ரியா, எப்போ வந்தீங்க? என்றார். நான் அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ ப்ரியா எங்கே?’ என்றேன். ‘மாடியில் இருக்கிறாள்’ என்று கைகாட்டினார் ப்ரியாவின் அம்மா. மாடிப்படி ஏறிச் சென்று அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கட்டிலில் குப்புறப் படுத்தபடி சிவசங்கரியின் ‘பாலங்கள்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். சத்தமிடாமல் அவளருகில் சென்று, ‘ஐ யாம் சாரி ப்ரியா’ என்றேன். திடுக்கிட்டு எழுந்து, விலகிய புடவைத் தலைப்பை சரி செய்தபடி , ‘ஐயோ, எப்போ வந்தீங்க’? என்றாள். அவளை சேர்த்து அணைத்து மீண்டும் அவள் காதில், ‘ஐ யாம் வெரி சாரி, உன்னை அனாவசியமா காயப்படுத்திட்டேன் ‘ என்றேன்.

அவள் சிரித்துக் கொண்டே, ‘போகட்டும் விடுங்க இதுகெல்லாம் சாரி கேட்டுகிட்டு. நான் அப்பா அம்மா கிட்ட எதுவும் சொல்லலை, நீங்க ஊருக்குப் போயிருக்கீங்கன்னு தான் சொல்லி இருக்கேன் நீங்க அவங்க கிட்ட எதையாச்சும் சொன்னீங்களா?” என்று ப்ரியா கேட்டாள். “ஏன் ப்ரியா, நான் உன்னைத் திட்டிய விஷயத்தை உன் பெற்றோரிடம் சொல்லவில்லையா?” என்றேன். “இதையெல்லாம் சொல்லி அவங்களைக் கஷ்டப்படுத்தணுமா? உங்களைப்பத்தி அவங்க தப்பா நெனைக்கிறது எனக்குப் பிடிக்காது. உங்க கோபம் தணிஞ்ச பிறகு வருவீங்கன்னு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா வந்து நிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை” என்று சொல்லி சிரித்தாள்.

“ஒரு நாள் பிரிஞ்சிருந்ததே தாங்கலை, வா வீட்டுக்குப் போகலாம்” என்றேன்.

“கீழே போய் காபி சாப்பிடுங்க. அஞ்சே நிமிஷத்தில் ரெடியாயிட்டு வரேன்” என்று சந்தோஷமாக சொன்னாள். பத்து நிமிஷத்தில் பிரெஷ்ஷாக மாடியிலிருந்து இறங்கி வந்தாள். காப்பர் சல்பேட் கலரில் பூக்கள் போட்ட வெள்ளை நிற காட்டன் புடவையில் என் கண்களுக்குத் தேவதை போல் தோன்றினாள்.

“என்னடி, நேத்து ரெண்டு நாள் இருந்திட்டுப் போவேன்னு சொல்லிட்டு, இன்னைக்கே கிளம்பறே” என்று கேட்டார் ப்ரியாவின் அம்மா. “அவர் கூப்பிட்ராருப்பா, நான் போயிட்டு வரேன்” என்றாள் ப்ரியா. “ஒரு நாள் கூட பிரிஞ்சிருக்க முடியலைப்பா அக்காவுக்கு. நேத்து ராத்திரியெல்லாம் தூக்கம் வராம புரண்டு படுத்துக்கிட்டே இருந்தா” என்று ப்ரியாவின் தங்கை கேலி செய்தாள்.

அவள் பெற்றோரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம். அண்ணா சாலையில் வாத்தியக் கருவிகள் விற்கும் கடைக்குப் போய் ஒரு தஞ்சாவூர் வீணைக்கு ஆர்டர் செய்தேன். ப்ரியா மகிழ்ச்சியுடன் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தாள். வீட்டுக்கு வந்து மாமியார், நாத்தனாரிடம் பேசிவிட்டு, சாப்பிட்டு முடித்ததும் படுக்கை அறைக்குள் வந்து என்னருகில் உட்கார்ந்து, “என்னாச்சு உங்களுக்கு? வீணை எதுக்கு வாங்குறீங்க” என்றாள். நான், அவள் புண்ணியத்தால் ஒரு நாள் முழுக்க பார்த்த சீரியல் கொடுமைகளைப் பற்றி சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தாள். “இனிமேல் நீ சீரியல் பார்க்க வேண்டாம் ப்ரியா. வீணை கிளாசுக்குப் போ. வீட்டிலும் வீணை ப்ராக்டிஸ் பண்ணு. நல்லா கத்துக்கிட்ட பிறகு நீ பிரியப்பட்டால் வீட்டிலேயே மற்ற பிள்ளைகளுக்கு வீணை வாசிக்க சொல்லிக் கொடு. நானும் கத்துக்கிறேன்” என்று அவள் இடுப்பைப் பற்றி அணைத்தேன்.

“நீங்க வீணை வாசிக்கிறேங்கிற சாக்குல என் இடுப்பை வாசிக்காதீங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று அறைக்கதவை சாத்தி உள்தாளிட்டாள்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “என் பொண்டாட்டி ரொம்ம்ம்ம்ப நல்லவ!

  1. 100% true story.NO 1 reason for the destruction of tamil culture is serials.WE NEED TO STOP THIS!!! NOW!!

  2. 100% true story.NO 1 reason for the destruction of tamil culture is serials.WE NEED TO STOP THIS!!! NOW!!!

  3. Beautiful story. Every one must read this story to understand each other.Both the husband and wife understood each other and live happily without any misunderstanding. The TV Seriels are only for time passing and entertainment should not follow the Seriels’ characters in real lives.There are lot of difference between reel lives and real lives.

  4. வேறு வழி இல்லாமல், தங்களுடைய உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாததால் தான், இன்று அனைவரும் சீரியல் பார்க்கிறார்கள். கதை சூப்பர். சீரியல்களில் காட்டப்படும் பல்வேறு பெண்கள் பற்றிய வரிகள் அருமை.

  5. கதை நன்றாகவே இருக்கிறது. ஒருவராய் ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவர் ரசனையை மற்றொருவர் அறிந்து கொள்ளாமல் வாழ்ந்தால் இதே மாதிரி தான் எல்லோரும் சீரியல் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *