என் தோட்டத்து இலுப்பைமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 7,251 
 

நான் பிறந்து, வளர்ந்து, படித்து, தாவரவியலில் பட்டம் பெற்று ஆசிரியராக வேலை பார்த்து, குடும்பம் நடத்தும் ஊர் இலுப்பையூர், அனேகம் ஊர் பேர்கள் மரத்துடன் தொடர்புள்ளது. உதாரணத்துக்கு உரும்பிராய், விளாத்திகுளம், ஆலங்குளம், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம் இப்படிப் பல ஊர்ப் பெயர்களில் மரங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு அந்த ஊர்களிலேயே அந்த மரங்களை இருக்கிறதோ தெரியாது . என் ஊர் அதுக்கு விதிவிலக்கு .

இலுப்பையூரில் இலுப்பை மரங்கள் ஏராளம். ஒரு சில விளாத்தி, வேப்பமரங்களும் உண்டு. ஒரு பெரிய அரச மரம் சந்தியில் பிள்ளையாரின் துணையோடு கம்பீரமாகக் காட்சி தந்தது. பிரதம பாதையின் இரு பக்கத்திலும் ஓங்கி, சடைத்து வளர்ந்த இலுப்பை வேப்பம் மரங்கள், இலுப்பை எண்ணெய் “ஏழைகளின் நெய்’ என்றழைக்கப்படுகிறது இலுப்பை பூவில் இருந்து வடகம் ஊர் பெண்கள் செய்து விற்பார்கள் .ஊரில் உள்ள இலுப்பம் எண்ணைத் தயாரிக்கும் ஆலையில் பத்து பேர் வேலை. செய்கிறார்கள் “இலுப்பை“ மரத்திலிருந்து எடுக்ககிற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாச்சாரத்தில் நிறையக் காலமாக விளக்கேற்றப் பயன்பட்டிருக்கிறது. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

மரங்கள் நிழலை மட்டும் தருவதில்லை. மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் சுவாசிக்கப் பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. இதுமட்டுமா, புவி வெப்பத்தைக் குறைத்து மழையைத் தருவிக்கின்றன.

இலுப்பை மரத்தின் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது. இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு என்று என் அப்பா சொல்லுவார் .

****

என் பூர்வீக வீட்டின் பின் தோட்டத்தில் உள்ள நாற்பது அடி உயரமுள்ள இலுப்பை மரத்தில் உள்ள ஊஞ்சல் என் அப்பா கட்டியது அதில் பாடியபடி என் தங்கச்சியும் அவளின் தோழிகளும் ஊஞ்சல் ஆடுவதைக் கண்டு என் பழைய கால நினைவுகளை நான் மீட்பேன். இப்ப என் மகள் ஊஞ்சல் ஆடுவாள்.

அந்த மரத்தில் அணில்களுக்கும். பறவைகளுக்கும் குறைவில்லை. அந்த மரத்தில் ஒரு காகம் கூடு கட்டி முட்டை இட்டு குஞ்சு பொரித்து குடும்பம் நடத்தியது. அந்த காகத்துக்கு என் மனைவி புரட்டாதி சனியன்றும் விசேஷ தினங்களிலும் உணவு வைப்பாள் . என் அம்மா அந்த இலுப்பை மரத்தின் கீழ் பாய் விரித்து, மரத்தில்இருந்து சொரியும் பூக்களை சேர்த்து வடகம் செய்து மதியப்போசனத்துக்கு தருவாள் . பல தடவை என் கால் சுளுக்கு பட்டவுடன் இலுப்பை எண்ணைப் பூசி என் அம்மா குணம் படுத்தியதை இன்றும் மறக்க முடியவில்லை.

ஓய்வு நேரங்களில் அந்த மரத்தின் நிழலில் இருந்து புத்தகம் வாசிப்பேன். சில நேரம் என்னோடு என் மனைவியும் சேர்ந்து கொள்வாள். அந்த இலுப்பை மரம் என்னிலும் பார்க்க வயதில் மூப்பு. என் பாட்டனார் நட்ட மரம் என்று என் அப்பா சொல்லிக் கேள்விப்பட்டேன்.

என் பாட்டனார் ஒரு இலுப்பை எண்ணைத் தயாரிக்கும் ஆலை வைத்திருந்ததாக என் அப்பா சொன்னார். அதனால் அவருக்கு இலுப்பை மரத்தின் பெருமை தெரியும். எங்கள் ஊர் நாட்டு வைத்தியர் சுந்தரம்பிள்ளை இலுப்பை மரத்தின் பயன்களைப் பெருமையாகப் புகழ்வார்.

என் கிராமத்தில் நான் பிறந்து பல வருடங்களாகும் வரை மின்சாரம் இருக்கவில்லை . நான் ஒரு காலத்தில் வீட்டில் படித்தது .இலுப்பை எண்ணை விளக்கில் . அது கண்ணுக்கு நல்லது என்பாள் என் அம்மா. எங்கள் ஊர் எம் எல் எ மின்சாரம் கிராமத்துக்குக் கொண்டு வருவதாக ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி வாக்கு சேகரித்தாரே தவிர மின்சாரம் கிராமத்துக்கு வரவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட மின்சார இலாக்காவுக்கு அதிகாரியாக வந்ததும் அவரின் முயற்ச்சியால் கிராமத்துக்கு மின்சாரம் கொடுக்க அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது . ஐந்து கி மீ தூரத்தில் இருந்து மின்சாரம் எங்கள் கிராமத்துக்குக் கொண்டு வரவேண்டும். அதற்குத் தேவையான பல போஸ்டுகள் நட்டாக வேண்டும். அந்த போஸ்டுகளில் இரண்டு என் தொட்டதுக்குப் பின்னல் நட வெண்டி இருந்தது. மின்சாரக் கம்பிகள் செல்லும் பாதைக்கு என் தோட்டத்து இலுப்பை மரம் தடையாக இருக்கிறது என்று அதிகாரி சொன்னார்.

“என்ன செய்வதாக உத்தேசம்”? நான் அவரைக் கேட்டேன்:

“மின்சாரக் கம்பிகள் போகும் பாதையைத் திருப்பி சற்று தள்ளிச் செல்வதானால் செலவு அதிகம் ஆகும், ஆகவே உங்கள் தோட்டத்து இலுப்பை மரத்தை நீங்கள் தியாகம் செய்ய வேண்டி வரும்” அதிகாரி சொன்னார் .

“அப்போ அந்த மரத்தில் வசிக்கும் காகத்துக்கு வீடு இருக்காதே. என் மகளுக்கு ஊஞ்சல் இருக்காதே . . என் அம்மாவுக்கு வடகம் சுட இழுப்ப பூ கிடைக்காதே. நான் புத்தகம் வாசிக்க நிழல் இருக்காதே ” நான் சொன்னேன்.

நான் சொன்னதைக் கேட்ட அதிகாரி சிரித்து விட்டு, ”சேர் மின்சாரம் முழுக் கிராம மக்களுக்கும் வருகிறது. இந்த ஒரு மரத்தைத் தியாகம் செய்வதால் ஓன்றும்குறையப் போவதில்லை”.

“மரத்தை வெட்டாமல் வேறு மாற்று வழியில் மின்சாரம் கொடுக்க முடியாதா ஐயா “ ? நான் கேட்டேன் .

அவர் சற்று யோசித்து விட்டு. “ வழி இருக்கு. உங்கள் தோட்டத்து இலுப்பை மரத்தைத் தவிர்த்து மின்சாரக் கம்பி செல்வதால் கம்பி போகும் போஸ்டுகள் உள்ள பாதையை அரை கி மீ தூரத்துக்கு மாற்ற வேண்டும். அதற்கு அதிகம் போஸ்டுகள் தேவை. செலவு அதிகமாகும். அரசு அதற்குச் சம்மதிக்காது.

நான் சிந்தித்தேன். பணமா அல்லது என் இலுப்பை மரமா. முக்கியம். அதுவும் என் பாட்டனார் நட்ட மரம். அதற்கு ஒரு தனி மதிப்பு எங்கள் குடும்பத்தில் உண்டு . என் அம்மாவுடனும் மனைவியோடும் பிரச்சனையை கலந்து ஆலோசித்தேன் அம்மா தனது நகைகளை விற்று காசு தாறன் அந்த மரத்தைக் காப்பாற்று என்றாள். அதைக் கேட்ட என் மனைவியும் என் மகளும் தங்கள் சேமிப்பையும் தங்கச் சங்கிலிகளைக் கொடுக்க சம்மதித்தனர் . எனது சேமிப்பிலிருந்த பணத்தையும் அவர்கள் தரும் பணத்தோடு சேர்த்து மின்சாரக் கம்பியை திசை திருப்பத்தேவையான பணம் சேர்ந்து விட்டது என்றதும் எனக்கு என் மனதுக்குள் மகிழ்ச்சி. .

அதிகாரியைச் சந்தித்து சொன்னேன் “ ஐயா எங்கள் குடும்பம் எங்கள் தொட்டத்து இலுப்பை மரத்தைக் காப்பாற்றத் தீர்மானித்து விட்டது. அது என் பாட்டனார் நட்ட மரம். அவர் நினைவாக அது இருக்கட்டும். அந்த மரம் பலரின் வியாதியைத் தீர்த்துள்ளது . மின்சாரம் கம்பிகள் போகும் வழியை மாற்றத் தேவையான செலவை எனது குடும்பம் தரும்.. எவ்வளவு அதிக செலவு வரும் என்று கணித்துச் சொல்லவும்” என்றேன் நான்.

அதிகாரியால் நான் சொன்னதை நம்ப முடியவில்லை .

“சேர் உங்கள் குடும்பம் இயற்கை மேல் வைத்து உள்ள மதிப்பையும், உங்கள் தோட்டத்து இலுப்பை மரத்தின் மேல் உங்கள் குடும்பம் வைத்துள்ள பற்றுதலையும் நான் அறிந்து பெருமைப் படுகிறேன் மின்சாரக் கம்பிகள் போகும் பாதையைத் திருப்பும் அதிக செலவைப் பற்றி என் உயர் அதிகாரியோடு பேசி அதில் வரும் செலவின் அரை வாசியை அரசு ஏற்க ஆவன செய்கிறேன் . ஆனால் ஒரு நிபந்தனை” அதிகாரி சொன்னார்

“என்ன நிபந்தனை சொல்லும் ஐயா “

“ உங்கள் அம்மா செய்யும் இலுப்பம் பூ வடகம் எனக்கும் தர உங்களால் முடியுமா? . என் மனைவிக்கு அந்த வடகம் செய்யத் தெரியாது . அதை நான் செய்யும் உதவிக்கு நீங்கள் தரும் ஊழலாகக் கருத வேண்டாம்”

“ நிட்ச்யமாக அம்மாவை தரச் சொல்லுகிறேன்” என்றேன் சிரித்தபடியே நான்.

( யாவும் புனைவு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *