Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

என் குதிரை நல்லது

 

அமெரிக்காவின் மொன்ரானா மாநிலம் எனக்குப் பிடிக்கும். கனடாவைத் தொட்டுக்கொண்டு இது வாஷிங்டனுக்கு பக்கத்தில் இருந்தது. ஏப்ரஹாம் லிங்கன் காலத்தில் இருந்தது போலவே இயற்கை வளங்கள் இன்றும் மனிதக் குறுக்கீடுகளில் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. நிறைய மலைத் தொடர்களும், ஆறுகளும். நேரம் தப்பாமல் சீறியடிக்கும் சுடுநீர்க் கிணறுகள்; வனவிலங்கு சரணாலயங்கள். இவை எல்லாவற்றையும் மீறி நட்பான மனிதர்கள் அங்கே நிறைந்திருந்தார்கள்.

ஆனால் அங்கே போவதற்கு பிடிக்காத காரணம் ஒன்றும் இருந்தது. கணிதம். மொன்ரானாவுக்கு சேமமாகப் போய்ச் சேர்வதற்கு கணித அறிவு தேவை. நீங்கள் கணிதத்தில் வல்லவராக இருக்கவேண்டும். ரொறொன்ரோவில் இருந்து மொன்ரானாவுக்கு நேராக விமானத்தில் பறக்க முடியாது. முதலில் வாஷிங்டனுக்கு போகவேண்டும். கைக்கடிகாரத்தில் மூன்று மணி நேரத்தை பின்னுக்கு தள்ளி வைக்கவேண்டும். பிறகு மொன்ரானா போய்ச் சேர்ந்ததும் ஒரு மணித்தியாலம் முன்னுக்கு தள்ளி வைக்கவேண்டும். அல்லது முதலில் வடக்கு டகோட்டாவுக்கு போய் அங்கிருந்து மொன்ரானா போய்ச் சேரலாம். அப்படி என்றால் முதலில் ஒரு மணித்தியாலத்தை பின்னுக்கு தள்ளி வைத்து மொன்ரானா போனதும் மேலும் ஒரு மணித்தியாலத்தை பின்னுக்கு தள்ளவேண்டும். இந்த கணிதப் போராட்டம் நடக்கும்போது அநேகமாக உங்களுக்கு பிளேன் தவறிவிடும்.

மொன்ரானாவின் ஒடுக்கமான வீதிகளின் வழியாக காற்று சீறியடித்துக்கொண்டு வந்து என்னை முந்திச் சென்றது. அங்கே தனியார் விடுதிகள் பிரபலம். ஒரு வீட்டிலே மூன்று அல்லது நாலு அறைகள் இருக்கும். காலை உணவும் தருவார்கள். நான் தெரிவுசெய்த விடுதியில் அந்தச் சமயம் ஆறுபேர் தங்கியிருந்தார்கள். அதை ரோஸ் என்ற பெண்மணி நடத்தினார். முன்னால் எவ்வளவு அழகாக இருந்தாரோ அதே அளவுக்கு பின்னாலும் அழகாக இருந்தார். காலை உணவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாக இருந்தது. ஒரு நாள் அருந்திய உணவு இன்னொரு நாள் கிடைக்காது. உணவு பரிமாறிய பின்னர் ரோஸ் ஏப்ரனைக் கழற்றிவிட்டு மேசையின் முன்பாக வந்து கைகளைக் குவித்தபடி நிற்பார். நான் நினைத்தேன் இறைவணக்கம் கூறப் போகிறார் என்று. அப்படி இல்லை. அன்று நாம் உண்ணப் போகும் உணவு யாரால், எப்போது கண்டுபிடிக்கப் பட்டது, அதனுடைய பெயர் என்ன, அதன் செய்முறை என்ன, எப்படி அதை உண்ணவேண்டும் என்பதை எல்லாம் விளக்குவார். உங்கள் போசனம் நல்லாக அமையட்டும் என்று வாழ்த்திவிட்டு போய்விடுவார்.

19ம் நூற்றாண்டில் மொன்ரானாவில் வாழ்ந்த ஆனி சார்ள்ஸ் என்பவர் கண்டுபிடித்த விசேஷமான waffle அப்பத்தையும், வேகவைத்த அப்பிளையும் அன்று நாங்கள் சாப்பிட்டோம். அதன் சுவையை நான் வேறெங்கும் அனுபவித்தது கிடையாது. எனக்கு முன்னால் XL சைஸ் ஸ்வெட்டரை முழுக்க நிறைத்தபடி ஒரு பெண் உட்கார்ந்து, பிளேட்டில் இருந்து கண் எடுக்காமல் சாப்பிட்டார். விடுதிப் பெண்ணின் கணவர்போல தோற்றமளித்த ஒருவரும் எங்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அவர் cowboy தொப்பி அணிந்திருந்தார். நான் தங்கியிருந்த ஏழு நாட்களும் அவர் எக்காரணத்தைக் கொண்டும் தொப்பியை கழற்றவில்லை. அவர் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. அதில் ‘நல்லது’ என்ற வார்த்தை அடிக்கடி வரும். மொன்ரானாவைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார். கால நிலைகள், வரைபடங்கள், பார்க்கவேண்டிய இடங்கள். பனிக்காலங்களில் கையுறை, பூட்ஸ் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவற்றின் தரம் பற்றி பேசியவர் மொன்ரானாவின் cowboy கதை தெரியுமா என்று கேட்டார். யாரும் பதில் கூற முன்னரே அவர் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

அவர் சொன்ன கதை அமெரிக்க பேச்சுவழக்கில், மொன்ரானா உச்சரிப்பில், இருந்தது. இன்னும் சில வார்த்தைகள் அகராதியில் இல்லாதவை. அவர் கூறியதில் எனக்கு புரிந்ததை, என்னுடைய மொழியில், ‘நல்லது’ என்ற வார்த்தைகளை அகற்றிவிட்டு, கீழே தருகிறேன்.

அமெரிக்காவில் 1886ம் ஆண்டு பனிக்காலம் கொடுமையாக இருந்தது. எந்தச் சரித்திர புத்தகமும் அதைச் சொல்லும். கால்நடைகள் தீவனம் இல்லாமல் இறந்தன. மூஞ்சியால் பனிக்கட்டிகளை அகற்றியும் தரையில் உள்ள புல்லை அவற்றால் அடைய முடியவில்லை. பனிக்காலம் வழக்கத்திலும் பார்க்க முன்பாகவே இறங்கியிருந்தது. கண்களை மூடினால் இமையும் இமையும் சந்திக்கும் இடத்தில் நோவெடுத்தது. மாடுகள் நின்றபடியே இறந்து விழுந்தன; அல்லது விழுந்து இறந்தன.

மொன்ரானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளம் மாட்டுக் காவலன் (cowboy) அந்த வருடம் முழுக்க பனிக்காலத்துக்காக பணத்தை சேமித்திருந்தான். குளிரிலிருந்து தப்புவதற்கான கோட்டிலோ, கையுறைகளிலோ அவன் பணத்தை செலவழிக்கவில்லை. அதில் மிச்சம் பிடித்த காசை எல்லாம் கொடுத்து கையினால் செய்யப்பட்ட ஒரு பூட்ஸை நல்ல விலைக்கு வாங்கினான். அது பளபளவென்று விளிம்பிலே செய்த வேலைப்பாடுகளுடன், கொடுத்த ஒவ்வொரு சதத்துக்கும் பெறுமதியானதாக, இருந்தது. அதைக் காலிலே அணிவதற்கு அவனுக்கு தயக்கமாக இருந்தது. அவ்வளவு அழகு.

பக்கத்து வயோமிங் மாநிலத்தில் பனிக்குளிர் குறைவு என்று யாரோ சொன்ன வார்த்தைகளை நம்பி எல்லைக் கோட்டை கடந்து அந்த மாநிலத்துக்குள் நுழைந்தான். அவன் தரித்திருந்த மேலங்கியோ, உடைகளோ, கையுறைகளோ அவனுடைய பூட்ஸ் அளவிற்கு உயர்ந்ததாக இல்லை.
வயோமிங் குளிர் உண்மையில் மிகவும் அதிகமாக இருந்தது. அவன் அணிந்திருந்த உடை போதுமானதாக இல்லை. இரண்டு கால்கள் மாத்திரம் கதகதப்பாக இருந்தன. பவுடர் ஆற்றைக் கடந்தபோது அவன் குளிரினால் விறைத்துப்போய் அந்த இடத்திலேயே விழுந்து இறந்து போனான்.

அடுத்த நாள் நண்பகல் குதிரையில் ஆற்றைக் கடந்த மூன்று பேர் மரக்கட்டைபோல கிடந்த அந்தப் பிணத்தைக் கண்டார்கள். அதில் இருவர் சகோதரர்கள். அவர்கள் இருவரும் அருகருகே பயணம் செய்தார்கள். பனிக்குளிருக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சற்று பின்னால் வந்தவன் பஞ்சத்தில் அடிபட்டவன்போல இருந்தான். தரித்திரமான ஆடைகள். அவன் அணிந்திருந்த பூட்ஸ் முன் பக்கம் பிளந்துபோய் உள் காலை பார்க்கக்கூடிய விதமாக இருந்தது.

மூவரும் பிணத்தின் அருகே வந்து குதிரையில் அமர்ந்தபடியே அதைப் பார்த்தார்கள். பிணம் அரைவாசி பனியில் புதையுண்டுபோய்க் கிடந்தது. அதனுடைய முகம் நீலமாக மாறியிருந்ததால் அந்த முகத்தின் சொந்தக்காரனின் உண்மையான நிறம் என்ன என்பது ஊகிக்ககூடிய விதத்தில் இல்லை.
தரித்திரம் பிடித்தவனுடைய பெயர் சீட்ஸ். இறந்தவனுடைய பூட்ஸையே நெடுநேரம் உற்றுப் பார்த்த அவன் திடீரென்று கத்தினான். ‘அவனுடைய கால் அளவும், என்னுடையதும் ஒன்றுபோல இருக்கிறது’ என்று சொல்லிவிட்டுக் குதித்தான். அந்தப் பிணத்தின் காலில் இருந்த பூட்ஸை கழட்டுவதற்கு எவ்வளவோ முயன்றான். முடியவில்லை. அது உறைந்துபோய்க் கிடந்தது. எங்கே பூட்ஸ் முடிகிறது, எங்கே சதை தொடங்குகிறது என்பது தெரியவில்லை.

அவனுக்கு அதை விட்டுவிட்டு வர விருப்பமும் இல்லை. மற்ற இருவரும் குதிரையின் மேலேயே இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் போல தோன்றியவன் ‘ஏ சீட்ஸ், காலை வெட்டி எடு. பிறகு பூட்ஸை உருவிக் கொள்ளலாம்’ என்றபடியே தன் கத்தியை நீட்டினான். சீட்ஸ் இரண்டு கால்களையும் பூட்சுக்கு ஒரு சேதமும் ஏற்படாமல் வெட்டி எடுத்துக்கொண்டான். எலும்பு பகுதியை வெட்டுவது சிரமமாக இருந்ததால் முறிக்கவேண்டி இருந்தது. இரண்டு சோடியையும் கயிற்றிலே கட்டி கழுத்திலே மாலைபோல அணிந்து கொண்டு குதிரையில் ஏறினான். குதிரையில் பயணித்த அவ்வளவு நேரமும் அந்த பூட்ஸ் விளிம்பில் காணப்பட்ட அற்புதமான இலை, பூ வேலைப்பாட்டை நினைத்தபடியே வந்தான்.

மாலை நெருங்கிக்கொண்டு வந்தது. சகோதரர்களில் மூத்தவன் சொன்னான், ‘இன்று நாங்கள் வழக்கமாகத் இளைப்பாறும் தங்குமடத்துக்கு போக முடியாது. இருட்டியபின் வழி தவறிவிடும். பக்கத்தில் கிழவன் கிரைஸின் விடுதி இருக்கிறது. இன்றிரவு அங்கே சமாளிப்போம்.’ மற்றவன் ‘கிழவனிடம் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். ஒரு சிறு கணப்பு அடுப்பு இருந்தாலும் போதும். தேகம் முறிகிறது’ என்றான்.

குளிர் சரசரவென்று கீழே இறங்கியபடியே இருந்தது. துப்பினால் அது படீர் என்று வெடித்தது. சிறுநீர் கழிப்பதற்கு அஞ்சினார்கள். குதிரையில் இருந்து கீழே இறங்கி அந்த முயற்சியை தொடங்கினால் அப்படியே தரையுடன் ஒட்டிக் கொண்டு விடுவோமோ என்ற பயந்தார்கள். வயோமிங்கின் மோசமான குளிர் காற்று அடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களின் எலும்புகள் கூசின.

நல்ல காலமாக கிழவன் கிரைஸ் வீட்டிலே இருந்தான். ‘வாருங்கள், வாருங்கள்’ என்று உபசரித்தான்.
‘குதிரைகளை எங்கே கட்டலாம்?”
‘உள்ளே குதிரைக்கு இடமில்லை. அங்கே வெளியே ஒரு தடுப்பு இருக்கிறது. அதற்குள் கட்டுங்கள். என்னுடைய இரண்டு குதிரைகள் உள்ளே இருக்கின்றன. நீங்கள் குதிரைகளுடன்தான் படுக்கவேண்டும். ஒன்று சாதுவானது. மற்றது கொஞ்சம் கடிக்கும் அல்லது துப்பும். பயமே இல்லை’
அது ஒடுக்கமான அறை. அதில் பாதியை குதிரைகள் பிடித்துவிட்டன. அறை முழுக்க குதிரைகளின் மணமே நிறைந்திருந்தது. உண்மையில் அவர்கள் குதிரையின் அறையையே வாடகைக்கு பிடித்திருந்தார்கள். ‘உங்கள் இடங்களை நீங்களே தேடிப் படுங்கள்’ என்றான் கிழவன்.

சிறிது நேரத்தில் சுடச் சுட ரொட்டியும், சூப்பும் வந்தது. கணப்பில் சூடு கிளம்பிவர, மது அருந்தியபடி நாலு பேரும் பழைய கதைகள் பேசினார்கள். கிழவன் ஒரு பொய் சொல்ல இவர்கள் ஒரு பொய் சொல்ல காலம் சுகமாகப் போனது. குதிரைகளின் மூச்சுக் காற்றும் கதகதப்பை கூட்டியது.
இவர்களுடைய அந்த இரவு சந்தோசத்தைக் கெடுத்த ஒரே விடயம் கிழவன் இவர்களிடம் அறவிட்ட பணம்தான். நாலு டொலர் எழுபது காசு. அதை நினைத்து கொஞ்ச நேரம் அமைதி இழந்து கிடந்தார்கள். கடைசியில் நடு நிசி அளவில் கிழவன் விளக்கை அணைத்தான். சகோதரர்கள் இருவரும் வழக்கம்போல அருகருகே படுத்து தூங்கினார்கள்.

சீட்ஸ் சற்று தள்ளி குதிரைகளுக்கு பக்கத்தில் படுத்துக் கொண்டான். அவற்றின் குளம்பு மாறும் சத்தம் அவனுக்கு தாலாட்டுவதுபோல இருந்தது. கடைசித் தடவையாக தான் வெட்டி வந்த பூட்ஸை இருட்டில் தடவிப் பார்த்து, தலை மாட்டில் வைத்தபடி உறங்கிப் போனான்.

அதிகாலையில் விழித்தது சீட்ஸ்தான். முதல் வேலையாக தலைமாட்டில் இருந்த பூட்ஸை தொட்டுப் பார்த்தான். அது சூட்டுக்கு உலர்ந்துபோய் இருந்தது. மெள்ள ஆட்ட உள்ளே கால் அசைந்தது. தலைகீழாகப் பிடித்து கால்கள் இரண்டையும் வெளியே இழுத்தான். பூட்சுக்குள் தன் கால்களை நுழைத்தான். அது கச்சிதமாகப் பொருந்தியது. தன்னுடைய பழைய பூட்சுகளையும், கால் துண்டுகளையும் அந்த இடத்தில் விட்டுவிட்டு புறப்பட்டான்.

சகோதரர்களை அவன் எழுப்பவில்லை. விடுதிக்கார கிழவனையும் எழுப்பவில்லை. அவனுடைய அம்மாவுக்கு ஒரு தந்தி கொடுக்கவேண்டும். அன்று அவளுடைய பிறந்த நாள்; அவள் காத்துக்கொண்டு இருப்பாள். இப்பொழுதே புறப்பட்டு போனால்தான் தந்தி அலுவலகம் மூடமுன் போய்ச் சேரலாம்.

கிரைஸ் கிழவன் கோப்பியை வறுத்து, பிறகு அரைக்கும் சத்தம் கேட்டது. மூன்று கோப்பி தயாரித்துக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தான். அவன் கண்ணில் முதல் பட்டது இரண்டு கால் துண்டுகளும், பூட்சும்தான். குதிரை பூட்சை நக்கிக்கொண்டு நின்றது. ஆட்களை எண்ணிப் பார்த்தான். இரண்டு பேர்தான் இருந்தார்கள்.
‘ஐயோ மோசம் போயிட்டேனே, ஐயோ மோசம் போயிட்டேனே’ என்று அலறத் தொடங்கினான்.
சகோதரர்கள் இருவரும் பதறியடித்துக்கொண்டு எழும்பினார்கள்.
‘என்ன? என்ன?’
‘என்னுடைய குதிரை நல்லது. அது கடிக்குமே ஒழிய சாப்பிடாது. உங்கள் நண்பரை அது முழுக்க சாப்பிட்டுவிட்டது. இரண்டு கால்கள்தான் மிச்சம். அதைச் சாப்பிடமுன் நான் வந்துவிட்டேன். இந்தக் குதிரை இதற்குமுன் இப்படி செய்ததே கிடையாது.’ என்று தலையிலடித்தபடி அரற்றினான்.

சகோதரர்கள் இருவரும் வெளியே வந்த புன்னகையை மறைத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
கிழவன் அந்தக் குதிரையை பிடித்து இழுத்து அடி அடியென்று அடித்தான். அப்படியும் போதாமல் உதைத்து அதை வெளியே துரத்திவிட்டு சகோதரர்களின் காலில் வந்து விழுந்தான்.
‘இதோ பாருங்கள். நான் வேண்டுமென்று செய்யவில்லை. என்னை மாட்டி விடாதீர்கள். என் வாழ்நாள் முழுக்க சேமித்த காசு நாப்பது டொலர் இங்கே இருக்கிறது. நேற்று உங்களிடம் அறவிட்டது நாலு டொலர் எழுபது காசு. இதையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் இது பற்றி மூச்சு விடவேண்டாம். கெஞ்சிக் கேட்கிறேன். என் குதிரை நல்லது.’ என்றான்.

சகோதரர் இருவரும் காலை உணவை முடித்துக்கொண்டு ( இலவசம்தான்) குதிரைகளில் ஏறி தங்குமடத்தை நோக்கி புறப்பட்டார்கள். மெல்லிய சூரியன் சிரித்துக்கொண்டு வெளியே வந்தான். காது எட்டாத தூரத்துக்கு வந்ததும் இருவரும் பலமாக சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினார்கள்.
சிறிது தூரம் அப்படியே போனதும் தம்பிக்காரன் கேட்டான், ‘அண்ணா, நீதான் கணிதத்தில் விண்ணன் ஆச்சே. எனக்கு பள்ளிக்கூடத்தில் கணிதமே வராது. 40 டொலர். இன்னும் 4 டொலர் 70 காசு. உனக்கு எவ்வளவு, எனக்கு எவ்வளவு’ என்றான். ‘பொறுத்துக்கொள், தம்பி’ என்றான் அண்ணன்காரன்.

ஒரு குளம் பனியில் கட்டியாகிப்போய் இருந்தது. அதைத் தாண்டி அடுத்த கரைக்கு போய்ச் சேர்ந்தார்கள். தங்குமடம் வருவதற்கிடையில் இன்னொரு முறை தம்பிக்காரன் அதே கேள்வியைக் கேட்டான். ‘அண்ணா, எனக்கு சேரவேண்டிய பாதி எவ்வளவு?’ அண்ணன் பதில் சொல்லவில்லை. அந்தக் கணிதம் தம்பிக்காரன் மூளைக்கு எட்டாத தொலைவில் இருந்தது.

அன்று இரவு தங்குமடத்துக்கு சீட்சும் வந்து சேர்ந்தான். அவனுடைய காலில் புது பூட்ஸ் மினுமினுத்தது. ‘உன்னுடைய அம்மாவுக்கு தந்தி அனுப்பினாயா?’ என்று சகோதர்கள் கேட்டார்கள். அவன் அதற்கு ஆம் என்று பதில் சொன்னான். ‘வாழ்த்துக்கள்’ என்றார்கள். 40 டொலர்கள் பற்றி அவனிடம் அவர்கள் மூச்சுவிடவில்லை.
அவர்களுக்கு ஒரு வசதியான அறை அன்றிரவு கிடைத்தது. குதிரைகளோடு அறையை பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. கணப்பு அடுப்பும் அளவான சூடு கொடுத்தது. முதல் நாள் இரவு போல சீட்ஸ் சற்று தள்ளிப் படுத்துக் கொண்டான். அவன் தலை மாட்டில் புது பூட்ஸ் இருந்தது. அதை தொட்டுப் பார்த்தபடி தூங்கிப்போனான்.

வழக்கம்போல் சகோதரர்கள் இருவரும் பக்கத்துப் பக்கத்தில் படுத்துக் கொண்டார்கள். ஒரு வித்தியாசம். அவர்களுக்கு நடுவில் கணிதமும் படுத்திருந்தது.

இதுதான் அவர் சொன்ன கதை. கடந்த பதினைந்து மாதங்களாக இந்தக் கதையை நான் என் மூளையிலே காவியபடி திரிந்தேன். இது ஒரு நாட்டுப்புறக் கதை. மொன்ரானா மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் எங்கோ, ஏதோ இடித்தது. கதையின் முடிவு ஒரு நாட்டுப்புறக் கதை போலவே இல்லை. அதில் இலக்கியம் இருந்தது.

சமீபத்தில்தான் இந்த புதிர் உடைந்து போனது. இது அனி புரூலிக்ஸ் என்பவருடைய கதை. அவருடைய கதையைப் படித்துவிட்டு அந்த மனிதர் சொன்னாரோ அல்லது அவர் சொன்ன கதையை அனி புரூலிக்ஸ் எழுதினாரோ தெரியவில்லை.

அனி புரூலிக்ஸ் என்பவர் அமெரிக்காவின் சிறந்த படைப்பாளி. நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவருடைய Shipping News நாவல் புலிட்ஸர் பரிசைப் பெற்றது. பல சிறுகதைகளுக்கு ஓ ஹென்றி பரிசு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் இவருடைய Brokeback Mountain சிறுகதையை திரைப்படமாக எடுத்திருந்தார்கள். அது பல பரிசுகளையும் மூன்று ஒஸ்கார் விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்களின் காதலை இவ்வளவு நுட்பமாக ஒரு பெண்ணால் எப்படி சொல்லமுடிந்தது?

பழந் தமிழ் பாடல்களில் இடைச் செருகல் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இடைச் செருகல் செய்பவர் மூலப் பாடலை தான் மேம்படுத்துவதாகத்தான் நினைக்கிறார். இந்த மனிதரும் கதை சொல்லும்போது தன் கற்பனையை நிறைய விரித்திருக்கிறார் என்பது தெரிந்தது.
யோசித்துப் பார்க்கும்போது இவர் சொன்ன கதை அனி புரூலிக்சின் கதையை விட சிறந்ததாகத்தான் எனக்கு பட்டது.

- 2010-08-12 

தொடர்புடைய சிறுகதைகள்
கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே அதைக் கட்ட வேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு வருடங்களாக அவன் வேட்டைக்கு போகிறான். அவனுக்கு அது இயல்பாக வந்தது. துப்பாக்கியை தூக்கிப் பிடித்து குறிபார்த்து சுடும்போது வேறு எதிலும் ...
மேலும் கதையை படிக்க...
யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சிநேகிதிகள் இருந்தார்கள். மூன்று உடலும், ஓர் உயிரும் என்று சொல்லாம். ஒன்றாகவே சைக்கிளில் பள்ளிக்கூடம் போனார்கள். ஒன்றாகவே படித்தார்கள். ஒன்றாகவே விளையாடினார்கள். ஒன்றாகவே ரகஸ்யம் பேசினார்கள். ஒரு கரண்ட் வயரில் வேலை செய்யும் மூன்று பல்புகள் ...
மேலும் கதையை படிக்க...
இலங்கை அரசனின் பட்டத்து ராணி அந்த நந்தவனத்தில் உலாவிக்கொண்டு இருந்தாள். மயக்கம் தரும் இந்த மாலை நேரங்களில் வழக்கமா அவள் அங்கேதான் இருப்பாள். அரசன் அவளுக்கா கட்டிய தாடகத்தில் மிதக்கும் வாத்துக்களைப் பார்த்துக் கொண்டிருப்தில் அப்படி ஒரு சந்தோஷம். கார்த்திகை நட்சத்திரங்களோல ...
மேலும் கதையை படிக்க...
என் வாழ்க்கையில் நான் பல பருவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பருவங்கள் என்றால் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மேல்நாடுகள்போல இலையுதிர், பனி, இலைதுளிர், கோடை என்றும் எண்ணலாம். நான் சொல்வது வயதுப் பருவம். ...
மேலும் கதையை படிக்க...
புவியீர்ப்புக் கட்டணம்
வேட்டை நாய்
தளுக்கு
மனுதர்மம்
தாமரை பூத்த தடாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)