என் அம்மா பாவங்க…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 12,376 
 

நான் சுமார் எட்டு மாசமா இங்கதான் குடியிருக்கேன். அம்மாவுக்கே இடைப்பட்ட காலத்துலதான் நான் இங்க குடியிருக்கேனு தெரியும். வாடகையும் இல்ல, வெளிச்சமும் இல்ல. ஏதோ ஒரு காரணத்துக்காக தலை வணங்கியபடிதான் இருப்பேன். எனக்குனு எதும் பேரு கிடையாது. அம்மா மட்டும் என்ன சனியன்னு கூப்பிடும். அதுவும் இடைப்பட்ட சிலமாசம் முன்னாடிதான் அந்த பேரும் என் காதுக்கு முதன்முறையா எட்டுச்சு. அதுல இருந்து இப்பவரைக்கும் என் அம்மாவுக்கு நான் சனியந்தான். என்னோட வயசுனு எடுத்துகிட்டா எதுவும் சொல்லமுடியாது. ஆனா அறிவியல் ரீதியா வயச கணக்குப் பண்ணி பார்த்தா 240நாள் ஆவுது. என் ஆரோக்கியம் பத்தி சொல்லனும்னா அடிப்படையில கொஞ்சம் அடிபட்டுத்தான் போகுது. என்னோட வளர்ச்சி கூட நாளுக்கு ஏத்த மாதிரி கிடையாது. யான் என் பேச்சுல இவ்வளவு விரக்தினு நீங்க நினைக்கலாம். கொஞ்சம் என்னோட முழு கதையையும் சொல்றேன். கேளுங்க…

அம்மாவோட கருப்பையில கருவுற்று இருந்தப்போ அந்த நிமிஷம் என்னவிட யாரும் அவ்வளவு சந்தோசமா இருந்திருக்க மாட்டாங்க. எனக்குள்ளதான் எத்தன கற்பனைகள் வளர ஆரம்பிச்சிடுச்சு. கருவறையின் இருட்டுல நான் கண்ட கனவு இருக்கே, அப்பப்பா சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்! ஆனா அதெல்லாம் ரொம்ப நாளு நீடிக்கல. பொதுவாவே மதத்திலேயும் சரி… மருத்துவத்திலேயும் சரி… தாய்மை அடைஞ்ச நேரத்துல தாய்மார்களெல்லாம் நல்லதையே பார்க்கனும்… நல்லதையே பேசனும்… நல்லதையே கேட்கனும்னு சொல்லப்பட்டுருக்கு. அந்த நேரத்துல அவங்க பார்க்கறது, பேசறது, நினைக்கறது எல்லாமே கருப்பையில இருக்குற சிசுவால உணர முடியுமாம். என்னாலயும் அம்மாவோட நினைப்ப உணரமுடிஞ்சது. அந்த நிமிஷத்துலதான் நான் பாவத்தோட அடையாளம்னு உணர்ந்தேன்.

அம்மாவோட கருப்பைல நான் உருவானது அவங்களுக்குப் பிடிக்கல. யான் அம்மாவுக்கு என் வருகை பிடிக்கலனு கடவுள் மேல் ஆணையா எனக்கே தெரியாதுங்க. அம்மா என்ன கருவோட அழிச்சிட அவங்க மேற்கொண்ட காரியங்கள் எல்லாமே விவரிக்க முடியாத கொடுமைகள்தான். வாழ்க்கையில ஒவ்வொருவருக்கும் ஒரு காலக்கட்டம் சத்தியசோதனைனு சொல்வாங்க. ஆனா என்னோட வாழ்க்க தொடங்கன காலகட்டமே சத்தியசோதனனு சொல்லும் போது என் நிலைமைய கொஞ்சம் நீங்களும் யோசிச்சு பாருங்க… அப்பதான் ஆழமா புரியும். ஆனா கடவுளோட சித்தத்த பாருங்க… நான் எல்லாத்தையும் கடந்து எவ்வளவோ தூரம் வந்துட்டேன். நான் இன்னும் கடவுள பார்க்கல; அவரு எப்படி இருப்பாருனும் தெரியல; ஆனா அவர பார்க்க முடிஞ்சிருந்தா கடவுளே என்ன அழிக்கறதுக்கான அம்மாவோட முயற்சிக்குக் கருணைக் காட்டியிருக்கலாமேனு கேட்டிருப்பேன்.

எனக்குனு எந்தவித கோவமும் அம்மா மேல கிடையாது. பாவம் அம்மா! நம்பியவனுக்கு நம்பிக்கையா நடந்துகிட்டதால அவளுக்கு அந்த பெரிய மனுஷன் கொடுத்த பரிசுதான் நான். என்ன பாக்குறீங்க? ஓ..! யாரு அந்த பெரிய மனுஷனு தானே உங்க கேள்வி? வேற யாரு…? அப்பா என்ற ஸ்தானத்துக்கு உரிமைய கொண்டாடாத பெரிய மனுஷன் அவரு. என்னடா மரியாதையெல்லாம்னு தோனலாம். இதுவும் பாசம்தான்; ஆனா இதுல அன்பு கிடையாது. முழுக்க முழுக்க தீராத ஆத்திரம்தான் அடங்கியிருக்கு.

ஆரம்பத்துல எனக்கு அம்மா மேல கோவம் இருந்துச்சு… ஆனா போக போக அம்மாவ நினைச்சு பார்க்கும் போது அவ மேல இருந்த கோவம் தனிஞ்சு பரிதாபமா மாறிடுச்சு. ம்ம்ம்…..என்ன பண்றது? நூலு போல சேல…. தாய போல புள்ளனு நீங்க கேள்விபட்டது இல்லையா? அம்மா ஒவ்வொரு நாளும் அந்த பெரிய மனுஷன் கிட்ட கைப்பேசில பேசும்போதுதான் அம்மாவோட நிலைமை புரிஞ்சுது. ஆனா இப்பலாம் அப்படி எந்தவொரு அழைப்போ பேச்சோ அவங்க இடைய கிடையாதுன்றது உறுதி.

உண்மையிலேயே என் அம்மா பாவங்க! ஆரம்பத்துல என்ன அழிக்க அம்மா மேற்கொண்ட காரியங்கள நினைச்சு கோவம் இருந்தாலும், அந்த கோவத்துல ஒரு கேள்வியும் மறைஞ்சிருந்துச்சு. எந்த தைரியத்துல அம்மா இதற்கெல்லாம் துணிஞ்சாங்கன்றதுதான்! ஆனா அதுக்கான விடை கிடைச்சப்ப என்னோட பிஞ்சு இதயமே இருண்டு போச்சு. ஒருமுறை பெரியவர் ஒருத்தர் அம்மாகிட்ட “ஏய் கலா? இன்னிக்கு நீ ஸ்கூலுக்குப் போலாயா”-ன்னு கேட்டாரு. அம்மா சொன்ன பதிலு “இல்லப்பா”. அந்த பதில வச்சு கேள்விய கேட்டது என் தாத்தானு உறுதிபடுத்திகிட்டேன். தாத்தாவோட கேள்விதான் எனக்கான கேள்விக்கு விடைய தந்துச்சு. அம்மா ஸ்கூலுக்குப் போறாளாம்! அப்பனா என் அம்மாவுக்கு என்ன வயசு இருக்கும்னு நீங்களே அனுமானம் பண்ணிக்கோங்க! பாவங்க என் அம்மா! புத்தகப்பைய சுமக்க வேண்டிய வயசுல கருவறைல என்ன சுமந்துகிட்டு இருக்குறா. அந்த இளம்வயசோட வேகம்தான் அம்மா என்ன அழிக்க மேற்கொண்ட காரியங்களுக்கான காரணமா இருந்துச்சு. அம்மா செஞ்ச காரியம் அவ உயிருக்கே ஆபத்த முடிஞ்சிருக்கும். ஆனா அப்படி எதுவும் நடக்கல.

அம்மாவுக்கு என் மேல பாசம் இல்லனு சொல்லிட முடியாது. என்ன சனியன் சனியன்னு திட்டினாலும் அவளுக்கு என் மேல பாசம் இருக்கு. என்ன நினைச்சு ஒவ்வொரு இரவுலேயும் அம்மா அழாத நாளே கிடையாது. பாவம் அம்மா! ஓடியாடி விளையாட வேண்டிய வயசுல அறைக்குள்ளேயே அடைப்பட்டு இருப்பா. அம்மாவோட மனசுல எப்பவும் ஒரு படபடப்பு இருந்துகிட்டேதான் இருக்கும்; இப்பவரைக்கும். அம்மாவோட உயிருல கடன் வாங்கி உயிர் வாழ்ற எனக்கு அம்மாவோட உணர்வுகளோட மாற்றம் ஒவ்வொன்னும் நல்லாவே உணர முடியும்.

அம்மாவோட வேதனைய நினைக்கும் போது என்னால எதையும் செய்யமுடியலையேனு வருத்தம் இருக்கும். இருந்தாலும் கருவறையில இருந்தபடி “கவலபடாதம்மா….!!! உனக்கு நான் இருக்கேன். உனக்காக நான் போராடுவேம்மா”-ன்னு சொல்வேன். ஆனா அதெல்லாம் அம்மாவோட காதுக்கு எட்டாது. கடவுளோட படைப்ப பாருங்க… கருவறைல இருக்கும் போது தாயோட உணர்வுகளோட உணர்ச்சியையும் அசைவயும் சிசுவால உணரமுடியுது. ஆனா சிசுவோட அசைவ மட்டும் உணருர தாய் அதோட உணர்ச்சிய உணருவது கிடையாது. அதுசரி அப்படி உணரமுடிஞ்சிருந்தாதான் என் அம்மா என்ன அழிக்க முயற்சி செஞ்சிருக்கமாட்டாளே!

நீங்களும் என் அம்மாவோட வேதனைய கொஞ்சம் நினைச்சு பாருங்களேன். படிக்கிற வயசுல அம்மா என்ன சுமந்துகிட்டு இருக்கா. கண்டிப்பா நான் ஒருத்தி இங்க குடியிருக்கேனுன்ற சங்கதி அம்மாவ தவிர வேற யாருக்கும் தெரியாது என் தாத்தாபாட்டி உட்பட. பொதுவாவே தாய்ம அடைஞ்சிருந்தா அந்த மாற்றம் கண்டிப்பா வெளிய தெரியும். ஆனா அம்மா பள்ளியிலயும் சரி… வீட்லயும் சரி… நான் ஒருத்தி அவளுக்குள்ள வாழ்றேனு என்பத யாருக்கும் தெரியாம மறச்சி நாட்கள கடத்திகிட்டு இருக்கா. அந்த காரியத்த செய்யும் போது என் அம்மா எவ்ளோ கஷ்டத்தையும் வேதனையும் அனுபவிப்பா? பாவம் அம்மா!

தாத்தா அடிக்கடி எதோ ஒரு பேர சொல்லிகிட்டே இருப்பாரு… எதோ ஆர்னு முடியும். ஆ…. பி.எம்.ஆர்னு சொல்லி சொல்லி அம்மாவ படிக்கலையானு கேட்பாரு. அது கண்டிப்பா எதோ முக்கியமானதாதான் இருக்கும். ஆனா அதுக்கும் அம்மா படிக்காம ஒவ்வொரு நாளும் பயத்துல அழுந்துகிட்டே இருப்பா. படிக்க வேண்டிய வயசுல படிப்புல மட்டும் கவனத்த செலுத்தாதனால இன்னிக்கு அம்மா அவளோட கல்விவாழ்க்கைய தொலச்சிட்டா. காதலுக்கும், காம இச்சைக்கும் வித்தியாசம் தெரியாத அம்மா அந்த பெரிய மனுஷனோட தப்பான நோக்கத்துக்குப் பலிகடா ஆயிட்டா. ஆனா இதெல்லாம் அந்த பெரிய மனுஷன பொருத்தவரைக்கும் அலட்டிக்க வேண்டாத விஷயங்க. நல்லது கெட்டது பகுத்து பார்க்க தெரியாத என் அம்மாவுக்கு அந்த பெரிய மனுஷன் என்ன பாவத்தோட அடையாளமா கொடுத்துட்டாரு.

உங்களுக்கு இன்னொரு சங்கதிய சொன்னா கண்டிப்பா அந்த பெரிய மனுஷன் மொகத்துல வெள்ளத்திட்டு நெறஞ்சிடும். நான் ஒருத்தி அம்மாவோட இணைஞ்சு இருக்கறது தெரியாத வரைக்கும் அந்த பெரிய மனுஷன் பேசுன பேச்சு இருக்கே, சொல்ல முடியாது. தான் செஞ்ச காரியத்த பெருமையாவே பேசுவாரு. “ச்சே…இவனெல்லாம் மனுஷனா”ங்கனு நீங்களே கேட்பீங்க. அப்படிப்பட்ட பெரிய மனுஷன் காதல பரிட்ஷயம் பண்றதா சொல்லி அம்மாவோட வாழ்க்கைய பாழ்படுத்திட்டாரு. காதல் என்ற பேருல அந்த பெரிய மனுஷன் கண்ட சுகத்துக்கு எனக்கு வந்த பேரு சனியன். அந்த பெரிய மனுஷனோட வாரிச சுமக்கறதா அம்மா அவருகிட்ட சொன்னப்ப, அந்த பெரிய மனுஷன் இதுநாள் வரைக்கும் பேசுன பேச்சும் அதுக்கு அப்புறம் பேசுன பேச்சும், தன்மையும் தொனியும் மாறிடுச்சு.

அந்த பெரிய மனுஷன், “ச்சே… இத என்கிட்ட சொல்ற வரைக்கும் அந்த சனியன வளரவிட்டுட்டியே! அந்த சனியன கலைச்சிடுற வழிய பாரு, நான் ஏதோ டைம்பாசுக்கு உன்கிட்ட காதல்கீதல்னு இருந்தேன். அதுல அப்படி இப்படினு இருக்கத்தான் செய்யும். நீதான் கொஞ்சம் பார்த்து சாதுரியமாவும் சாமார்த்தியமாவும் நடந்துகனும்”-ன்னு சொல்லிட்டாரு. அந்த வார்த்தையைக் கேட்டு அம்மா அந்த பெரிய மனுஷன் கிட்ட கெஞ்சனது கொஞ்சநெஞ்சமல்ல. அந்த நிமிஷம் அம்மாவ நினைச்சு நான் ரொம்பபே பரிதாபப்பட்டேன். அம்மாவே ஆறுதல் படுத்துனேன். ஆனா வழக்கம் போல அம்மாவுக்கு விளங்கவில்ல.

அம்மா அவள நினைச்சு அருவருப்பு கொள்வா… என்ன நினைச்சு வேதன படுவா. “சனியனே…சனியனே… யான் என் வயித்துல வந்து தங்கி தொலச்சே…” இதுதான் அந்த நேரத்துல நான் வாங்கிக் கொள்ற தாலாட்டா இருக்கும். ஆனா அந்த நேரத்துல அம்மா மேல பரிதாபத்த தவிர வேற எதுவும் எனக்கு வராது. ஒருகட்டம் தாத்தாபாட்டி மேல சின்ன வருத்தமும் பயமும் இருந்துச்சு. அம்மாவோட விஷயத்துல அவங்க ரெண்டு பேரும் இவ்ளோ அஜாக்கிரதையா இருந்துடாங்களே. என்ன பத்தி அவங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்ல. அப்படி தெரிஞ்சிட்டா அவங்களோட நிலம என்னவாகும்? வெளிய தலகாட்ட முடியுமா? மானம் மரியாதை எல்லாமே இழந்துடுவாங்களே! அப்படி ஒன்னு நடந்துடுச்சுனா கண்டிப்பா உயிரோட இருக்கவும் மாட்டங்களே. ஐயய்யோ!!! இதுக்காகவாச்சும் நான் அழிஞ்சிருக்க கூடாதா?

நல்ல வேளைங்க நான் ஆம்பலையா இல்லாம போயிட்டேன். ஏனா இப்ப அந்த பெரிய மனுஷன் தான் பண்ணது தப்பே இல்லாத மாதிரி எந்தவித கவலையும் உறுத்தலும் இல்லாம வெளிய சந்தோசமா திரிஞ்சுகிட்டு இருப்பாரு. இந்த தப்புக்கு அந்த பெரிய மனுஷனும் காரணம். ஆனா கஷ்டத்தையும், வேதனையையும், மன உலைச்சலையும் அனுபவிக்கறது என்னமோ என் அம்மா மட்டும்தான். இதுக்கெல்லாம் காரணம் அவரு ஒரு ஆம்பளங்கறதாலதான். இதுக்கு பேரு ஆம்பளபலமாவும் இருக்கலாம்; ஆம்பள ஆதிக்கமாவும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஆம்பளையா இல்லாம பொம்பளையா போயிட்டேன். ஆனா கண்டிப்பா அம்மாவ போல ஏமாளியாவும் இருக்க மாட்டேன்; வழி தவறியும் போக மாட்டேன்.

கொஞ்சம் அமைதியாக இருங்க… அம்மா யாருகிட்டையோ பேசுறாங்க. உங்களுக்கு கேட்குதா? அம்மா அந்த பெரிய மனுஷன்கிட்டதான் பேசுறாங்க. பாவம்ங்க அம்மா, அந்த பெரிய மனுஷன்கிட்ட கெஞ்சுறாங்க. அம்மா அழறாங்க.

“அம்மா… அழாதம்மா அழாத… அந்த ஆளுகிட்ட கெஞ்சாத… அந்த ஆளு நமக்கு வேணாம்மா… அந்த ஆளு பண்ண தப்புக்குத் தண்டனைய அனுபவிப்பான் பாரு… நீ அழாதம்மா…”

பாருங்க… என் அம்மா அந்த மனுஷன்கிட்ட கெஞ்சுறாங்க… நான் வேணாம் அம்மானு சொல்றது அவங்களுக்கு வெளங்க மட்டுது. நீங்களாச்சும் சொல்லகூடாதா?

“அம்மா… அம்மா… வேணாம்மா நீ யாம்மா அந்த ஆளுகிட்ட கெஞ்சுற? நான் இருக்குறேன் உனக்கு. எனக்கு உன் மேல கோவம் எதுவும் இல்லம்மா. நான் உன்ன நல்லா பாத்துப்பேன். அந்த ஆளுகிட்ட பேசாதம்மா…”

பாருங்க… அந்த ஆளு அம்மாவே கெட்டவார்த்தைல திட்டுறான்… என்னால தாங்கமுடியல. எனக்கு வர கோவத்துக்கு அந்த ஆள அறையனும் போல இருக்கே. போதும் இதுக்குமேலயும் என்னால இங்கயே இருக்க முடியாது. அம்மாவுக்காக நான் போராட வேண்டிய நேரம் வந்துடுச்சு. அந்த ஆளு பண்ண காரியத்த கேட்க யாரும் இல்லங்கற தைரியத்துலதானே அம்மாவே பேசக்கூடத வார்த்தையெல்லாம் பேசுறான். இதுவரைக்கும் என்ன அழிச்சிட சொன்னவன் இப்ப என் அம்மாவயே செத்து தொலஞ்சிடுனு சொல்றான். இனியும் நான் எப்படி அமைதியா இருக்க முடியும்? இப்பவே வரம்மா…

அம்மா நீ எங்கம்மா போற? நான் உனக்காக வரம்மா… நீ எங்கயும் போகதம்மா… இதோ நான் வந்துகிட்டே இருக்கேன். பாவம் நிறைஞ்ச உலகத்துக்கு நான் வரம்மா. என்னால அத உணர முடியுது. இந்த உலகத்தோட வாட என்னால நுகர முடியுது அம்மா…

அம்மா… அம்மா…

இதோ நான் என் அம்மாவ பார்க்குறேங்க. என் அம்மாவே ஒரு கொழந்த போல இருக்காங்க. பாவங்க அம்மா… அம்மா வலியோட என்ன கையில தூக்கி வெச்சு பார்க்குறா…

ஏம்மா என்ன நீ ஒரு மாதிரியா பார்க்குறே? தயவுசெஞ்சு என்ன உன் புள்ளையா பாரும்மா… அந்த ஆளோட புள்ளையா பார்க்காதம்மா… என்ன உனக்கு பிடிக்கலயாம்மா? ஏம்மா என்ன எடுத்து அணைச்சுகனும்னு உனக்கு தோனலாயாம்மா?

அம்மா என்ன நல்லா பிடிச்சுக்கோம்மா… நான் உன் கையில இருந்து கொஞ்சம் கொஞ்சமா நழவுறேன அம்மா. கெட்டியா பிடிச்சுகோம்மா.

யேம்மா நான் உனக்கு பாவத்தோட சின்னமா தெரியுறேனா? உனக்காக போராடதானே வந்தேன். யாம்மா என்ன அப்படி பார்க்குற? அம்மா எனக்கு ஒரே ஒரு முத்தம் தாயேன்…

பாருங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கல… நீங்களாச்சும் சொல்லுங்க…

அம்மா என்ன விட்டுடாதம்மா… அம்மா நான் அந்த வெள்ளகுழிக்குள்ள விழுந்துடுவேம்மா… ஏம்மா உன் கை நடுங்குது? என்ன நல்லபடியா பெத்தெடுத்துட்டோமேனு பூரிப்பா இல்ல பாவத்த கையில சுமக்குறோமேனு பயமா?

அம்மா நான் உன் பிடியில இருந்து நழுவுறேம்மா… அம்மா… அம்ம்மா… ம்மா… மா………

அம்மா பாவங்க. அம்மாவ வாழவிடுங்க. நாந்தான் இப்போ அந்த வெள்ளகுழியில மூழ்கிட்டேனே. அம்மா தப்பு பண்ணலேனு சொல்லல… ஆனா அம்மா பாவங்க.

– மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை 2011 ஆண்டு நடத்திய பேரவைக்கதைகள்-25 சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *