என்பும் உரியர் பிறர்க்கு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 10,735 
 

என் அம்மா ரொம்ப நன்றாக சமைப்பாள் . அம்மா செய்த ரவா தோசை , அடை மாதிரி நான் எங்கேயும் எப்போதும் சாப்பிட்டது இல்லை என்று சொன்னால் பொய்யோ என்று கூட உங்களுக்குத் தோன்றும்.

ஆனால் அது எங்களின்அபிப்ராயம் மட்டும் இல்லை, எங்கள் வீட்டுக்கு அநேகமாக தினந்தோறும் வந்து போகிற என் அண்ணாவின் சிநேகிதர்கள், என் சிநேகிதிகள் எல்லாருடைய ஏகோபித்த அபிப்ராயமாகவும் இருந்தது.அடர்ந்த பொன் நிறத்தில் முறுவலாக கையில் எடுத்தால் படக்கென்று உடையும் ரவா தோசையையும்,கார சாரமான முறுகலான அடையையும், பொன் குவியலான பஜ்ஜிகளையும் இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் நினைவு கூறுகிற சிநேகிதிகள் இருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் என் தம்பியின் நண்பர்கள் என்று எவருமோ. தங்கையின் சிநேகிதிகள் யாருமோ வீட்டுக்கு வந்ததில்லை என்று தோன்றுகிறது.

என் தம்பி இருக்கிறானே அவன் ஒரு மர்மப் பேர்வழி. அவனுக்கு நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா, இருந்தால் அவர்கள் யார் என்பது யாருக்குமே தெரியாத ரகசியமாக இருந்தது . ஒரு நாள் அம்மாதான் அந்த மர்மத்தை விடுவித்தாள்.”அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் படே படே ஆசாமிகளாத்துப் பையன்கள் ! ஒத்தன் ஜட்ஜோட பிள்ளை,இன்னொத்தன்சென்ட்ரல் எக்சைஸ்கமிஷனர்பிள்ளை!,,” சொல்லும் போதே அம்மாவின் குரலிலும் முகத்திலும் பெருமிதம். அப்படியாடா என்று அவனைப் பார்த்தால் ஒரு சின்ன புன்னகையுடன் நகர்ந்து விடுவான்,மர்மப் புன்னகை மன்னன். என் தங்கை சமாசாரம் அதற்கு நேர்மாறு. அவள் பரம சாது( அந்த காலத்தில் ). அவள் வகுப்பிலேயே யாருக்கு ஒரு ஃப்ரெண்ட் கூட இல்லையோ ,யார் ரொம்ப பாவமோ அவள்தான் அவளுடைய தோழி.அவர்களுடனும் பேசியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைச்சல்தான்.அவர்கள் பக்கத்தில் உட்காருவது, மத்தியானம் கொண்டு போன சாப்பாட்டை அவர்களுடன் சாப்பிடுவது என்பதோடு அந்த சிநேகிதமும் முடிந்தது. இவர்கள் இருவரது விஷயம் இந்த கதைக்குத் தேவையில்லாத உபகதைதான்,நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன் .

அந்தக் காலத்தில் எல்லாவீடுகளிலும் எல்லா அம்மாக்களுக்கும் சமையல்தான் ப்ரதானமான வாழ்க்கையாக இருந்தது என்பது உண்மைதான் ,ஆனால் அம்மா விஷயத்தில் அதைத் தவிர வேறு எந்த சுவாரசியங்களும் இருந்ததாகத் தெரியவில்லை சொல்லப் போனால்,தஞ்சாவூர்ப் பக்கத்துக் கிராமத்துப் பெரிய மிராசுதார் வீட்டில் பிறந்து,நகர்ப்புற செல்வந்தரான டாக்டர் வீட்டில் நாட்டுப்பெண்ணாக வாழ்க்கைப்பட்ட அம்மா ,எப்போது,எப்படி,ஏன் சமையலே வாழ்க்கை, வாழ்க்கையே சமையல் என்று ஆனாள் என்பது ஒரு சுவாரசியமான ஆனால் வலி மிக்க கேள்விதான்.

தன்வாழ்க்கையின் நிறைவேறாத ஆசைகள் ,எதிர்பார்ப்புகள் இவைகளை வெல்லும் ஒரு வழியாகவோ, தன்னுடைய ஏமாற்றங்களின் ஒரு வடிகாலாகவோ,இல்லை தான் ஜெயிக்கிற ஒரே இடம் சமையலறை என்கிற அறிதலின் காரணமாகவோ ஒரு தீவிர ஈடுபாட்டுடனும்,திடமான உற்சாகத்துடனும் சமையலில் ஆழ்ந்திருந்தாள்.

தினப்படி நண்பரகள் வரும்போதே குதி போட்டுக்கொண்டு சமைக்கிற அம்மாவுக்கு ,வெளியூரில் இருந்து விருந்தினர்கள் வந்தால் கேட்கவும் வேண்டுமா? அப்படித்தான் ஒரு முறை அம்மாவின் பெரியம்மாவும்,பெரியப்பாவும் வந்திருந்தார்கள்.அவர்கள் ஊரிலிருந்து திருநெல்வேலியில் இருந்த பெரியப்பாவின் உறவினர் வீட்டுக்கு காரில் போய்க் கொண்டிருந்தவர்கள் வழியில் மதுரையில் இறங்கி ஊர் சுற்றிப் பார்க்கிற எண்ணத்தில் வந்திருந்தார்கள்.அம்மாவின் தடபுடலான உபசாரம்,பிரமாதமான சமையல் என்று தினமும் பொழுது கழிந்தது .வந்த அன்றைக்கு சின்ன வெங்காயம் போட்டு அரைத்து விட்ட சாம்பார் ,உருளைக் கிழங்கு பொடிமாஸ்,சேமியா பாயசம் ,அரிசி அப்பளம்,கூட்டு,பச்சடி வகையறாக்கள்.தினமும் ஒரு மெனு.சாயங்காலங்களில் அம்மாவின் ப்ரசித்தி பெற்ற அடையும் ,பஜ்ஜியும் இடம் பெற்றன. அவர்களும் மீனாக்ஷி அம்மன் கோவில் ,திருப்பரங்குன்றம் ,அழகர் கோவில்,மாரியம்மன் தெப்பகுளம் என்று எல்லாம் சுற்றிப் பார்த்தார்கள்.

அவர்கள் இருந்த நாட்களில்,தீடிர் திடீரென மாம்பழ வாசனை அடித்துக்கொண்டு இருந்தது.அவர்கள் வெளியே போயிருந்த தருணங்களில் ஒன்றில் அம்மா எங்கள் வேலைக்காரி தனத்தைக் கேட்டாள்.

“எங்க இருந்துடி இந்த மாம்பழ வாசனை வர்றது?”என்று.

அவள்தான் எங்கள் அம்மாவின் மதியூக மந்திரி, தானைத்தளபதி, அந்தரங்கத் தோழி எல்லாம் .

அவள் சொன்னாள் ” ஊரிலிருந்து வந்தவங்க கொண்டு வந்த சில சாமான்ங்க வாசத் திண்ணையில இருக்குதுல்ல,அதில ரண்டு கூட நிறைய மாம்பழம் இருக்குதும்மா,அதான்”

அதோடு அந்தப் பேச்சு முடிந்தது ,என்றாலும் அவ்வப்போது வீசிய மாம்பழ வாசனை அதன் இருப்பை எங்களுக்கு நினைவுறுத்தியது.

அவர்கள் ஊருக்குப் போகிற நாளும் வந்தது.பெரியப்பா சொன்னார்” குழந்தே! உன் சமையல் பிரமாதம்! வித விதமா சமைச்சுப் போட்டு அமக்களப்படுத்திட்ட! சாப்பிடறதுக்கு இன்னொரு வயிறு இல்லையேன்னு இருக்கு! இல்லையா சிவகாமு!”என்றார். அவருக்கு லௌகீகமான உண்மைகளுக்குக் கூட மனைவியின் ஆமோதிப்பு வேண்டும் ,இது அவர்களுக்குள் ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது.உதாரணமாக “காக்கா கறுப்பு ,இல்லயா ,சிவகாமு?”என்பார் .

பெரியம்மா தன் தங்க ஃப்ரேம் கண்ணாடியை பட்டுப்புடவையின் நுனியில் துடைத்து விட்டு அணிந்துகொண்டே சொன்னாள் ” ஆமா! எல்லாம் நன்னா இருந்தது”. அதற்கு மேல் யாரையும் புகழ்கிற வழக்கம் பெரியம்மாவுக்குக் கிடையாது,தன்னைத்தவிர. வழக்கமான,சம்பிரதாயமான விடை பெறுதலின் போது பெரியம்மா சொன்னாள் ” நீங்க எல்லாம் அந்தப்பக்கம்( தன் ஊரைக் குறிப்பிடுகிறாள்)வரதேயில்லயா?அந்த சைடு வந்தா( ‘வந்தா’ வில் ஒரு அழுத்தம் ,ஒரு இழுவை) நம்மாத்துக்கு ஒரு நாள் வந்துட்டுப் போங்கோளேன்!!”

“அவசியம் வரேன் பெரிமா”

அம்மா வெகு சில சமயங்களில் ,கவனமின்மையின் காரணமாக இந்த மாதிரி பொடி வைத்த பேச்சுக்களைத் தவற விட்டு விடுவாள்.அவர்கள் போன பின் கவனத்துக்கு வரும் போது மூன்று மணி நேர கச்சேரி நடக்கும்,ஆலாபனை,நிரவல்களோடு.

“தனம்! சாமானைக் கொண்டு காரில வைம்மா!” பெரியம்மா சொன்னாள். அவர்கள் கிளம்பிப் போனார்கள் .

அவர்களை அனுப்பி விட்டு படியேறி வந்த தனத்தை அம்மா கேட்டாள் “ஏண்டி தனம்,பொட்டி நிறைய பழம் இருந்ததுன்னயே, இந்த குழந்தைங்க கையில ரண்டு குடுக்கணும்னு அவங்களுக்குத் தோணல பாரேன்”

“ஐயோஅம்மா! நானும் அத்ததான்மா ரோசிச்சுக் கிட்டே படியேறி வாரேன்! இப்படியும் உண்டுமா மனுஷங்க!”

அன்று சாயந்தரமே பொன் நிறத்தில் குண்டு குண்டான வாசனை மாம்பழங்களை அம்மா வாங்கிக் கொண்டு வந்தாள் .

“ஆளுக்கு ஒண்ணு திண்ணுங்கோடா, எல்லாரும்!” என்றாள் .

” தனம் ! இந்தா!நீயும் வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் உன் குழந்தேளுக்கு கொடு” என்று அவள் கையில் நான்கு மாம்பழங்களை வைத்தாள்.

வாழ்க்கையின் போக்கில் சேர்ந்து போகிற பல்லாயிரக் கணக்கான நினைவுத் துணுக்குகளில் ஒன்றாக இந்த நிகழ்வும் என் ஞாபக அடுக்குகளின் ஏதோ ஒரு இடுக்கில் அமர்ந்து கொண்டது.

இதற்கப்புறம் 20,25 வருடங்களில் ,காலமும் ,வாய்ப்புக்களும்,அவரவர் ஆளுமைகளும்,விதியும் எங்களை வெவ்வேறு மாநகரங்களுக்குத் தள்ளியது.மதுரையை விட்டுப்போய் பல வருடங்கள் கழித்து நான் ஒரு முறை என் கணவர், குழந்தைகளோடு மதுரை போயிருந்தேன். வழக்கமாக பார்க்கும் இடங்களை எல்லாம் பார்த்த பிறகு ஒரு நாள் பாக்கி இருந்தது.

” கும்பக்கரை போலாமே! அங்கேயிருந்து வைகை டாம் கூட கிட்டதான்!” என்றேன் .

அதிக கூட்டம் இல்லாத சின்ன அருவியில் குழந்தைகள் உற்சாகமாக குளித்தார்கள் .கையோடு கொண்டு போன கட்டு சாத சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வைகை அணை கிளம்பினோம். போகும் போதே உச்சி வெயில்!! காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே நடக்கும் போது வெயில் மண்டையைப் பிளந்தது.’ இது படு முட்டாள்தனமான ஐடியா! பேசாம மதுரைக்கே போயிருக்கலாம்’ என்று என்னையே திட்டிக் கொண்டேன்.குழந்தைகளின் உற்சாக மன நிலையில் அவர்களுக்கு வெயிலெல்லாம் உறைப்பதில்லை.மரத்தடியை நோக்கி ஓடுவதும், கீழே கிடக்கும் கல்லைப் பொறுக்குவதும் என ஓடிக் கொண்டிருந்தனர்.இவர் முகம் வெயிலிலும் ,கோபத்திலும் சிவக்க ஆரம்பித்தது. சட்டென்று பக்கத்தில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்ட்டிருந்த குழந்தைகள் ரயிலைக் காண்பித்து ” இதில் உட்காரலாமே!” என்றேன்.வெயிலில் இருந்து உள்ளே நுழைந்ததும் இருட்டாக இருந்தது.

” வாங்க அக்கா! வாங்க ஐயா! உக்காருங்க!” என்று இருட்டுக்குள் இருந்து குரல் வந்தது. கண் பழகியதும் , உள்ளே ஒரு பத்து ,பனிரண்டு வயது பெண் உட்கார்ந்து கொண்டிருந்தது தெரிந்தது.ஒல்லிக் குச்சியான உடம்ப வாகு,சீட்டிப் பாவாடை ,சட்டை, கழுத்தில் பாசி மணி மாலை,

கையில் நிறம் வெளிறிய உலோக வளையல்கள் .முகம் முழுக்க சிரிக்கும் சிரிப்பு.

” நீ யாரும்மா? தனியா இங்க என்ன பண்ற?”

“இல்லக்கா! எங்க அப்பாரு இங்க தோட்ட வேலை செய்றாரு! கூட ஒத்தசைக்கு நானும் வந்தேன்.அவருக்கு சாப்பாடு குடுத்தேன், வேலையை முடிச்சுட்டு சாப்டறேன்னாரு.சரின்னிட்டு நான் சாப்பிட உக்காந்தேன்,நீங்க வந்தீங்க !” என்று சொல்லிச் சிரித்தது.

“அப்படியா! சரி! சரி! சாப்பிடு!”

தூக்குப் போணியைத் திறந்து சாத்த்தில் கை வைக்கப் போனவள்,நிமிர்ந்து என்னைப்பார்த்து

“அக்கா ! ஐயா! கொஞ்சம் சாப்பாடு சாப்டறீங்களா? நல்ல வெயில் வேளையா இருக்கு! எப்ப சாப்டீங்களோ ,என்னவோ! ” என்றது.

குரலின் கனிவும்,அக்கறையும் ,அந்தக் குழந்தைக்குள் இருந்த தாய்மையும்…….. என்னுள் ஏதோ பொங்கியது.

” இல்லம்மா! இப்பதான் சாப்டோம்! நீ சாப்பிடு!”என் குரல் இடறியது.

“தம்பிக்கும், பாப்பாக்கும் தரட்டுமா?”கொஞ்ச தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து கேட்டது..

“அவங்களும் சாப்டாச்சும்மா, நீ சாப்பிடு!”

“இல்லக்கா! சாப்பாடு சாப்டாட்டாலும் பரவயில்ல,இதயாவது சாப்டட்டும்” என்று பக்கத்திலிருந்த பையில் இருந்த கிளிமூக்கு மாம்பழக் கீற்றுகளை எடுத்து

“தம்பி! பாப்பா! இங்க வாங்க”என்றது கைகளை நீட்டியபடியே. ஓடி வந்த குழந்தைகள் என்னைப்பர்த்து பார்த்தன. நான் தலையசைத்தேன்.

பையன் வாங்கிக் கொண்டு வெட்கப் புன்னகையுடன் சின்னக் குரலில் “தாங்ஸ்” என்றான் .

பெண் ” ரொம்ப தாங்ஸ் கா” என்று கத்தலும்,சிரிப்புமாக சொல்லியபடியே அவளிடமிருந்து மாம்பழக் கீற்றுகளை வாங்கிக் கொண்டு குதித்துக் கொண்டே ஓடியது.

அந்தப் பெண்ணும் பெரிய சோழி பற்களைக்காட்டிச் சிரித்தபடியே”டாங்ஸ்!!”என்றது.

உறு பசிக்கு உவந்து ஊட்டும் உலக அன்னையின் தரிசனத்தில் கண்கள் பனித்தன.

Print Friendly, PDF & Email

1 thought on “என்பும் உரியர் பிறர்க்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *