என்ன தவம் செய்தனை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 4,328 
 

அம்புஜம் பாட்டியின் தலைமாட்டில் உட்கார்ந்து விசிறிக்கொண்டிருந்தாள் வாசுகி! பாட்டியின் செல்ல பேத்தி ! உயிர் போய் நாலு மணி நேரம் ஆகிறது. முத்துச்சுடராய் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது!

ராத்திரி மூன்று மணி இருக்கும். “வாசுகி … வாசுகி… என்ற குரல் கேட்டு சட்டென்று முழித்தாள். “கொஞ்சம் ஜலம் குடும்மா “பாட்டி தான். இரண்டு மடக்கு உள்ளே போனது. மூன்றாவது வாய் தண்ணீர் வெளியே வழிந்தது. பாட்டி.. பாட்டி… என்று கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லை. அவளுக்கு புரிந்தும் புரியாமலிருந்தது…..

உடனே பக்கத்து மணி மாமா வீட்டுக் கதவைத் தட்டினாள். பரக்க பரக்க வந்து கதவைத் திறந்தவர் வாசுகியை எதிர் பார்க்கவில்லை.

“மாமா ! பாட்டி.. பாட்டி..”

மாமா பார்த்து விட்டு “ஆச்சும்மா…. எல்லாம் ஆச்சு ! “என்றவர் “நா உடனே போய் டாக்டர் பத்ரியை கூட்டிண்டு வரேன்”

பாட்டியின் மரணம் அவள் விரும்பியபடியே அநாயச மரணமாகிப்போனது..

வாசுகியின் அம்மா ருக்மணி அடுத்த ஃபிளைட் பிடித்து உடனே வந்து விட்டாள்.

அதற்குள் தெருவே திரண்டு விட்டது.

சீரங்கம் கோவிலைச் சுற்றி இருந்த உத்திர வீதியின் மூலையிலிருந்த அந்த வீடு கொள்ளாத கூட்டம்.!!

நல்ல வேளை அம்புஜத்தின் இரண்டாவது பிள்ளை வாசு பம்பாயிலிருந்து வந்துவிட்டான். சுமதியும் குழந்தைகளும் வரமுடியவில்லையாம்.
எதிர்பார்த்தது தானே !

நெருங்கிய உறவினர்கள் வேறு யாரும் வரவில்லை! ஒன்று விட்ட சொந்தத்தில் நான்கைந்து பேர்.!

மளமளவென்று நடக்க வேண்டிய காரியங்கள் நடந்தன. ஊரே கூடி வழியனுப்பி வைத்தது போல் அத்தனை கூட்டம்!! .

வாசுவுக்கு லீவு இல்லையாம். உடனே கிளம்பி விட்டான். ருக்மணி அடுத்த நாள் கிளம்ப வேண்டும். ஏதோ முக்கியமான செமினார்.

வாசுகி திட்ட வட்டமாக கூறி விட்டாள் , ஒரு வாரம் யுனிவர்சிட்டிக்கு லீவு போட்டு விட்டு சீரங்கத்தில் இருக்கப் போகிறாள் …

அவளிடம் அப்படி ஒரு உறுதி வாங்கிக் கொண்டது வேறு யாருமில்லை , அம்புஜமேதான்.!!

வீடு வெறிச்சென்றிருந்து. வாசுகிக்கு பாட்டி வீடு அத்துப்படி. எந்த பிறையில் என்ன வைத்திருக்கிறாள் என்பது பாட்டிக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

வாசலிலிருந்து பார்த்தால் கொல்லைப்புறம் தெரியும். எப்படித்தான் பாட்டி தனியாக பத்து வருஷம் காலம் தள்ளினாளோ ?

வீடு பெருக்கி துடைக்கும் பூங்காவனம் ஆறு மணிக்கு வந்து கதவைத் தட்டினாள்.

“கண்ணு ! நீ போவலயாம்மா‌? “என்று கூறியவள் அப்படியே தரையில் உட்கார்ந்து பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

“கண்ணு! நான் இன்னிக்கு உசிரோட இருக்கேன்னா பாட்டியம்மாவாலதான். மூணு தடவ சாவக் கிடந்தேன் ! மருந்தென்ன , மாத்தரயென்ன! டாக்டர் பீஸூ எல்லாம் மகராசி தான் ! ஒரு நாளக்கி நூறூ தடவ வாசுகி ! வாசுகி தான் !”

வாசுகிக்கு அவளைத் தேற்றும்படியாயிற்று.

“பூங்காவனம் ! நா இங்கதான் ஒரு வாரம் இருப்பேன். காமாட்சி மாமியிடம் சாப்பாடு அனுப்ப சொல்லிடு!”

“ஏங்கண்ணு ! பெரியம்மா , மாமா யாரும் வரல்லியா ? பாட்டி எல்லாம் சொல்லியிருக்கு ! ஆனாலும் கடோசி முகமுழி பாக்க வருவாங்கன்னு …

வாசுத் தம்பியாச்சும் காரியம் முடிச்சுபுட்டுத்தான் தான் போவும்னு நினச்சேன்! “

அம்புஜத்தின் மேல் குழந்தைகளுக்கு ஏன் அத்தனை வெறுப்பு ??

***

அம்புஜத்தின் பூர்விகம் ஒன்றும் சீரங்கம் கிடையாது , அது கும்பகோணம் ! அவள் பிறந்தது , வாழ்க்கைப்பட்டது எல்லாமே கும்பகோணம் தான். அம்புஜத்தின் அப்பா சந்தான கோபாலன் சிறந்த சமஸ்கிருத பண்டிதர்! தமிழிலும் புலமை மிக்கவர். வீட்டில் எப்போதும் பண்டிதர் கூட்டம்.

அம்மா படிக்காவிட்டாலும் கேள்வி ஞானம் அதிகம். அப்பாவிடம் சரிக்கு சரி விவாதம் செய்யுமளவுக்கு அறிவு!

அம்புஜத்தின் அக்காவுக்கு இதிலெல்லாம் அத்தனை ஈடுபாடு கிடையாது. எதையாவது தைத்துக்கொண்டோ , சமைத்துக் கொண்டோ பொழுதைக் கழித்து விடுவாள்.

ஆனால் அம்புஜமோ அப்பாவை விட்டு நகரவே மாட்டாள்.

***

வாசுகி ஒவ்வொரு அலமாரியாக குடைய ஆரம்பித்தாள். ஒரு சின்ன நோட்டுப் புத்தகம். பக்கத்திலேயே பேனா , ஒரு பஞ்சாங்கம் , சின்ன கண்ணாடி , சீப்பு , இரண்டு டப்பா அமிர்தாஞ்சனம் , ஒரு டப்பாவில் கொஞ்சம் பட்டன்கள் , ஊசி நூல் , சின்ன டார்ச்… , பக்கத்தில் புது AA பாட்டரிகள்.! தேங்காய் எண்ணெய் சின்ன பாட்டில்! இது போதும் பாட்டிக்கு!! இதிலேயே வாழ்ந்தும் முடித்து விட்டாள்.!!

சில சாமான்கள் மட்டும் பத்திரமாக ஒரு சின்ன காட்ரேஜ் அலமாரியில் வைத்து பூட்டியிருந்தாள். அதில் என்ன இருக்கிறது என்று பாட்டிக்கு மட்டுமே தெரியும். யாருக்கும் சாவி கூட தரமாட்டாள்.

இந்த தடவை என்ன தோணியதோ வாசுகியிடம் சாவியைத்தந்து “எனக்கப்புறம் இந்த சாவியை நீ வச்சுக்கோ ! தெறந்து பாரு….”என்று மட்டும் சொன்னாள்.

இதை அவள் மாமாக்களிடமோ , பெரியம்மாவிடமோ சொன்னால்

“ஆமா ! பெரிய பொக்கிஷம் இருக்கிறமாதிரி ! பூதம் புதையலை காத்துதாம் “என்று ஏளனமாய் பேசுவார்கள் !!

***

பத்து வயதுக்குள் திவ்யப் பிரபந்தம் , பாகவதம் , ஆண்டாள் பாசுரம் எல்லாமே அம்புஜத்துக்கு பரிச்சியமானது! . பள்ளிக்கூடம் போன நேரம் தவிர அனேகமாய் அப்பாவிடம் நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வாள்.

தேவகிக்கு பதினெட்டு வயதானதும் கல்யாண பேச்சு தொடங்கி இரண்டே மாதத்தில் புக்கத்துக்கும் போயாகிவிட்டது.

அப்பா அம்மாவுக்கு அம்புஜம் தான் எல்லாமே! தனிமை அவளுக்கு இனிமையாகவே இருந்தது.!

நிறைய படித்தாள் ! எழுதினாள் ! அடுத்த வருஷம் அவளுடைய கல்யாண பேச்சு அடிபட்டது ! என்ன நடக்கிறது என்று தெரிவதற்கு முன்னால் ‌அவளுக்கும் சீனிவாசனுக்கும் கல்யாணம் நிச்சயமானது !

சீனிவாசனும் ஒரு விதத்தில் தூரத்து சொந்தம் தான். கும்பகோணத்தில் பேர் சொல்லும் வக்கீல் நாராயணனின் சீமந்த புத்திரன். அப்பாவிடமே அப்ரென்டிசாக ஆக பிராக்டீஸ்…..

கூட்டுக் குடும்பம்! எண்ணினால் பதினைந்து பேராவது தேறும். அம்புஜத்தின் அம்மாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை.

ஆனாலும் நல்ல மனுஷர்கள். அம்புஜத்தை ஆசையாய் பார்த்துக் கொள்வார்கள்.! சந்தானத்தின் அப்பா காலத்து சினேகிதம்! அம்புஜம் அதிகம் பேச மாட்டாள்! அப்பா சொன்னால் சரியாத்தான் இருக்கும்!!

***

அம்புஜம் போய் மூன்று நாளாகிவிட்டது ! சமையலறையை சுத்தம் பண்ணி விட்டாள். பாட்டியின் ஈயச் சொம்பை பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டாள்! ரச வாசனை இன்னும் மிச்சமிருந்தது! பாட்டியின் ரசத்தைப்போல் யாரால் வைக்க முடியும்? சொன்னால் “காவேரி தண்ணி மகிமை!”என்று சிரிப்பாள்!

யாரோ கதவைத் தட்டும் சத்தம்!
அம்மாவுக்கு பக்க பலமாயிருந்த அம்பி மாமா!

“வாசுகி ! நீ இங்க தான் இருக்கேன்னு சொன்னா! நல்ல வேளை ! நீயும் நமக்கென்னன்னு கிளம்பாம இருந்தியே! பாட்டி சொல்லியிருப்பா! பீரோ சாவிய உன்னண்ட தரதா சொன்னா!

எல்லா பில்லும் சரியா பே பண்ணி ரசீதெல்லாம் பீரோவில் இருக்கும்.

உனக்கு ஒரு கடுதாசி வச்சிருக்காளாம். படிச்சுட்டு ஏதாவது சந்தேகம் இருந்தா என்ன கூப்பிடும்மா “என்றவர் , பெரிதாக அழுது விட்டார்.

“தெய்வம்மா , தெய்வம்! உங்க பாட்டியில்லைனா, இந்த அம்பி இருந்த இடம் புல்லு முளச்சிருக்கும்! என்னோட ஹார்ட் ஆபரேஷன் நடந்திருக்குமா?

“நீ நன்னா இருப்ப குழந்த ! “

***

வக்கீல் நாராயணனின் வீடு நல்ல விசாலாமாய் இருந்தது. மாமனார் மாமியார் மனசும் அப்படித்தான்.! வீடு நிறைய ஜனங்கள்.

இரண்டு ‌மைத்துனர்கள் , நாத்தனார்கள், அப்பறம் வீட்டோடு வந்துவிட்ட இரண்டு அத்தைமார்கள் ! உறவுகள் புரிவதற்கே நாள் எடுத்தது. சமையலறை எப்படி இருக்கும் என்றே தெரியாது.

சமையல் வேலை இல்லையே தவிர , சாப்பாடு பரிமாறுவது , துணிகளை மடித்து எடுத்து வைப்பது என்று…. . ஏதோ சின்ன சின்ன வேலைகள்……

வாசலை ஒட்டிய அறையில் தான் ஆபீஸ் ரூம்… அதனால் பெண்கள் யாரும் அந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்க பயப்படுவார்கள்.

வக்கீலைப் பார்க்க வந்து போகிறவர் என்று ஜே ஜே என்றிருக்கும்.

காய்கறி ‌ , பால் என்று பெண்கள் சமாச்சாரம் எல்லாமே கொல்லைப்புறமாகத்தான்!

முதலில் அம்புஜத்துக்கு இதெல்லாம் வேடிக்கையாய் இருந்தாலும் போகப் போக பழகிக் கொண்டாள்!

***

காப்பி குடித்துவிட்டு சாவியை எடுத்து பீரோவைத்திறந்தாள். மேல் தட்டில் நிறைய ஃபைல்கள்.

அடுத்த தட்டில் ஒரு டிரான்ஸ்ஸிஸ்டர் , ஃபோட்டோ ஆல்பம் , 2 ஸ்வெட்டர் ( வாசு முதல் முறை லண்டன் போன போது வாங்கித்தந்தான் என்று பாட்டி சொல்லியிருக்காள்) , தடி தடியாய் ஆறேழு நோட்டுப்புத்தகங்கள்……..

கீழ் தட்டில் புது புடவைகள் மூன்று , ஜாக்கெட் துணிகள் ! பாட்டி வெறுங்கையுடன் யாரையும் அனுப்பிப் பார்த்ததேயில்லை!
புடவைகளின் மேலாக ‘ வாசுகிக்கு ‘ என்று விலாசமிட்ட நீண்ட கவர் !

அவசரமாய் பீரோவை மூடிவிட்டு கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.

***

அம்புஜம் சில சமயம் ஆபீஸ் ரூம் பக்கம் போய் எட்டிப் பார்ப்பாள். அவளுக்கு மாமனார் , கணவரிடம் மரியாதை இருந்ததே தவிர பயம் இருந்தேயில்லை! கட்சிக்காரர்கள் யாருமில்லையென்றால் “உள்ள வாம்மா “என்று அன்புடன் கூப்பிடுவார்.

சந்தானத்திடம் மிகவும் மரியாதை. சில பாசுரங்கள் பாடப் சொல்வார். “சீனு ! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி “என்று அடிக்கடி சொல்வார். ஒரு தடவை சில தினசரிகளை எடுத்துக் கொண்டு வந்து படித்துக் கொண்டிருந்தாள்!

“இது எப்படி இங்கே வந்தது? அண்ணா தேடுவாரே….. “என்று பெரிய நாத்தனார் ஏதோ கொலையே நடந்த மாதிரி எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.

அம்புஜம் ஆசையுடன் எதிர்பார்ப்பது அந்த மூணுநாட்கள் தான். அதெற்கென தனி அறை. சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான். !
அங்கு ஒரு நோட்டுப் புத்தகமும் பேனாவும் யாருக்கும் தெரியாமல் பிறையில் செருகி வைத்திருப்பாள். ஏதோ எழுதிக் கொண்டே இருப்பாள்….அப்படி என்னதான் எழுதுவாள்…?

ஏன்தான் மூணு நாட்கள் முடிகிறது என்றிருக்கும்!

***

“அன்புள்ள வாசுகிக்கு
பாட்டியின் ஆசீர்வாதங்கள்! அநேகமா நீ இந்த கடுதாசியைப் படிக்கும்போது யாரும் கூட இருக்க மாட்டா! அதுவும் நல்லதுக்குத்தான்! இந்த குடும்பத்தில் என்னைப் புரிந்து கொண்டவள் நீ ஒருத்திதான்!

உன்னைப்பார்க்கும்போதெல்லாம் நான் சின்ன வயசு அம்புஜமா மாறிப் போவேன் ! இந்த வீடோ , நானோ …என் குழந்தைகளுக்கு ஒரு தூசுக்கு சமம்!

ஆனா வாசுகி , நீ ஒருநாளும் அப்படி நெனக்கமாட்ட! ‌ இதுல ஒரிஜினல் டாக்குமெண்ட் இருக்கும்! அதை உன் பேருக்கு மாத்தியிருக்கென் !

நீ சீரங்கத்து கோயில் உற்சவங்கள் பத்தி ஆராய்ச்சி பண்ணப்போறதா சொல்லியிருந்த! நீ வந்து தங்க உனக்கு சவுகரியமாக இருக்கும்!

மேலே படிக்க முடியாமல் கண்ணில் நீர் முட்டியது!

***

கல்யாணமாகி அடுத்த வருஷம் ராகவன் வயிற்றில் ! குடும்பமே எதிர்பார்த்த வரவு ! குழந்தை பிறந்த நாள் முதல், பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அத்தையோ மாமாவோ , குழந்தை யாரிடம் இருக்கிறது என்றே தெரியாது!

கங்காதேவி குழந்தைகளை ஆற்றில் எறிந்தாள்! அம்புஜமோ உயிருடனே குழந்தைகளைத் தூக்கிக் கொடுத்து விட்டாள்!

வரிசையாய் வாசுதேவன், ராதா, ஜானகி , நடுவில் இரண்டு அபார்ஷன்…, கடைக்குட்டி ருக்மணி! இதற்கு நடுவில் மாமனார் மாமியார் காலம் முடிந்தது!

மச்சினர் , நாத்தனார் எல்லோரும் கல்யாணம் முடிந்து இப்போது சீனிவாசனும் அம்புஜமும் குழந்தைகளும் மட்டும் தான்!

ஒரு பெரிய நாத்தனார் மட்டும் வீட்டோடு வந்துவிட்டாள்! குழந்தைகள் அத்தை…அத்தை.. என்று அவளிடம்தான் ஒட்டிக்கொண்டது!

கொஞ்ச நாளாகவே அம்புஜத்தின் மனசு அவளிடமிருந்து நழுவிக் கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்துவிட்டது!

குழந்தைகளைத் தூக்கி அதிகம் கொஞ்ச மாட்டாள். சில சமயம் பிரமை பிடித்தது போல் யாரோடும் ‌ பேச மாட்டாள். அவளுடைய போக்கு சீனிவாசனுக்கு கவலையளித்தது!

குடும்ப டாக்டர் நீலகண்டன் பார்த்து விட்டு ‘ post partum depression ‘ என்று மாத்திரைகள் கொடுத்தார்.

குழந்தைகள் அவளை விட்டு விலகி ரொம்ப தூரம் போய்விட்டார்கள்! வாசுவும் ருக்மணியும தவிர யாருமே அவளை ஒரு மனுஷியாக்கூட மதிக்கவில்லை!

***

வாசுகி மேலே படித்தாள்…..

“சில புத்தகங்களும் ‌‌ நோட்டுகளும் உனக்கு உபயோகமாய் இருக்கும் என்று தோணித்து! நீ எங்க இருந்தாலும் சிறப்பான பெயரெடுக்க வாழ்த்துக்கள்!

வாசுகி கடிதத்தைப் பத்திரப்படுத்தி விட்டு புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள்! அத்தனையும் அவள் ஆராய்ச்சிக்கு சம்பந்தப்பட்டது தான்!

காமாட்சி மாமி வந்தாள்.

“வாசுகி! சாப்பாடு பிடிச்சுதாம்மா ? உங்க பாட்டிக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் கடன் பட்டிருக்கேன்!

மாமா போனதும் திக்கு முக்காடிப் போனேன்! பாட்டி தான் ‘ விதவா பென்ஷன் வரும் ! அத வச்சிண்டு உன்னாலே நாலு பேருக்கு சமச்சு குடுக்க முடியும்னா…. அதப் பண்ணி குடும்பத்த காப்பாத்துன்னு ‘ எனக்கு இந்த வழியைக் காமிச்சு குடுத்தா! உன்னப்பத்தியேதான் பேசிண்டிருப்பா’ “

***

குழந்தைகள் படித்து முடித்து ஒவ்வொருத்தராய் கல்யாணம் பண்ணிக்கொண்டு போனது…… சீனிவாசனுக்கு மாஸிவ் ஹார்ட் அட்டாக் வந்து அவளைத் தனியாய் விட்டுப் பிரிந்தது….

ருக்மணியின் புருஷன் விபத்தில் போனபின் கைக்குழந்தை வாசுகியுடன் திரும்பி வந்தது எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருந்தது!

ருக்மணிக்கு டில்லியில் JNU வில் லெக்சரர் போஸ்ட் கிடைத்ததும் அம்புஜத்தைக் கூட்டிக் கொண்டு அவள் டில்லிக்குப் புறப்பட்டாள்.
அம்புஜத்துக்கு புனர் ஜென்மம் என்றே சொல்லலாம்!

மெல்ல மெல்ல வாசுகி பழைய அம்புஜத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டாள்!

பத்து வருஷம் பறந்து விட்டது!

கும்பகோணம் வீட்டை விற்க முடிவானது!

டில்லி குளிர் அம்புஜத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை! வீட்டை விற்ற பணத்தில் அம்புஜம் சீரங்கத்தில் வீடு வாங்கி தனியாக வாழ ஆசைப்பட்டாள்! யாருக்கும் இந்த முடிவு பிடிக்கவில்லை! அம்புஜம் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்!

“வாசுகி ! நீதான் என்னைப் புரிந்து கொண்டவள்! என்னை இந்த சம்சார சாகரத்திலிருந்து எப்படியாவது விடுவித்து விடு அம்மா! “என்று கெஞ்சியபோது வாசுகி தீர்மானம் பண்ணி விட்டாள்!

அம்புஜம் சீரங்கம் வந்த இந்த பத்து வருஷத்தில் வாசு மூணு நாலு தடவை‌ வந்திருந்தான். மற்ற குழந்தைகள் எட்டியும் பார்க்கவில்லை!

அம்புஜம் யாரிடமும் ஒன்றையும் எதிர் பார்க்கவில்லை! ருக்மணி மட்டும் வருஷம் தவறாமல் ஒரு மாச லீவில் வருவாள்.

ஆனால் வாசுகி மட்டும் வருஷத்தில் மூணு தடவை வந்து விடுவாள். பாட்டி ஒரு தவ வாழ்வு வாழ்வதாகவே நினைத்தாள்!

***

இப்போது அவள் இருபத்தைந்து வயது யுவதி! டில்லி யுனிவர்சிட்டியில் ஆராய்ச்சி மாணவி !

வாசுகி வந்து பத்து நாளாகிவிட்டது! பாட்டியின் நோட்டுப்புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்!

படிக்க படிக்க அவளுக்கு புல்லரித்தது! கட்டுரைகள் , கவிதைகள், ஆய்வுகள் , பிரபந்தகளுக்கு புது விளக்கங்கள்! பிரமித்துப் போனாள்!

“பாட்டி….. நீ ஒரு ஜீனியஸ்….!!!!!”

‘பெரியபொக்கிஷமா இருக்கு ??’ என்று கேலி செய்தவர்களைப் பார்த்து வெட்கப்பட்டாள்!!!

இப்போதய வேலை இதை வெளி உலகத்துக்கு அர்ப்பணிப்பதுதான்”

பதிமூன்று நாட்கள் கழிந்தது! பாட்டியின் ஆத்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கும் !

வீட்டை பூட்டி விட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்! இனிமேல் அடிக்கடி வருவாள்!

வருஷங்கள் ஓடிவிட்டது!

சீரங்கம் உத்தர வீதியில் பெரிய போர்ட்…! “அம்புஜம் வாசகசாலை”

‘அம்புஜம் கல்வி அறக்கட்டளை…’

ஆராய்ச்சி மாணவர்கள் தங்கியிருந்து படிக்க இலவச விடுதி!

பிரபந்தமும் பிரபஞ்சமும் by அம்புஜம் சீனிவாசன்…! 5 வது பதிப்பு அச்சில்!…..

வாசுகி நிம்மதியாக ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *