என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க……!

 

“விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை…சீ… இதெல்லாம் ஒரு வாழ்வா?!” வழக்கம்போல தோன்றும் எண்ணம் அன்றும் உதித்தது. ரம்யமான மணத்துடன் வகைவகையான உணவுகளைக் காணும்போதெல்லாம் என்னுள் எழும் உணர்வுதான்… ம்…. என்ன செய்வது…?

சிவா கேண்டீனுக்குள் வந்து அமர்ந்தான். அங்கிருந்த அனைவரது கண்களும் ஒருவினாடி என்னை ஆவலுடன் பார்த்துவிட்டுப் பார்க்காத மாதிரி திரும்பின. சிவாவின் சக ஊழியரான வாசு, “என்ன சிவா… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்று என்மீது வைத்தக் கண்ணையெடுக்காமல் வினவினான்.

‘பாவி… எப்படி பார்க்கிறான் பாரு…’ என்று மனதில் கருவினாலும், உள்ளூர பெருமிதமாகவேயிருந்தது. இன்று நேற்றா இந்த சங்கதி நடக்கிறது. சிவாவுக்கு கல்யாணமானதிலிருந்தே எனக்கு ராஜமரியாதைதானே. சிவாவின் மனைவி சாந்திக்கு, என்மூலமாகத் தன்னுடைய அன்பை கணவனுக்கு வெளிப்படுத்துவதில் அலாதியின்பம். சிவா மட்டுமென்ன, தன்னுடைய புதுமனைவியிடம் நடந்துகொள்ளும் பிரியத்துடன் அல்லவா என்னிடம் நடந்து கொள்வான். நான் அவனுடன் இல்லாநாட்களில் சாப்பிடவே பிடிக்கமாட்டேங்கிறதென்று அன்றுகூட சாந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தானே.

விருப்பப்பட்டதை சாப்பிட முடியாவிட்டாலென்ன? தம்பதியினரின் அன்புக்கு நான் பாலமாக இருக்கிறேனே என்றுதான் இன்றுவரை இறுமாந்திருந்தேன். எந்தப்பாவியின் கொள்ளிக்கண்பட்டதோ தெரியவில்லை, இன்றைக்கு எனக்கு இந்தநிலை…

அன்றைக்கு தம்பதியினருக்குள் என்னப் பிரச்சினையோ யாருக்குத் தெரியும். காலங்கார்த்தாலேயே சுட்டக்கத்தரிக்காயைப் போன்ற முகத்துடன்தான் சாந்தி சமையலறைக்குள் வந்தாள். பாத்திரங்கள் நாராசமாய் சங்கீதமிட்டன. ஓரினமென்றாலும் முன்பெல்லாம் அவைகளை ஏளனத்துடனேயே பார்ப்பேன். இன்று என்கதி என்னாகுமோ!

பாத்திரங்களைவிட என்மீதுதான் அதீத வெறுப்பைக்கொட்டினாள். ‘ஸ்…ஆ… அடிபட்ட இடம் வலிக்குது….’

பரபரவென்று சூடான உணவை என்னுள் அடைத்தாள். சூட்டை பொறுக்கமுடியவில்லை, என்ன பண்ணுவது. சாந்தி அவ்வுணவைவிட சூடாக அல்லவாயிருந்தாள்.

‘என்ன இன்றைக்கு சாப்பாட்டிலிருந்து ஒரு மணம், குணம் எதுவும் வரலையே…’

என்ன அப்படிப் பார்க்கறீங்க, என்ன பண்றது, பழக்கதோஷம். சாப்பாட்டின் வாசத்தைவைத்தே சப்புக்கொட்டி வாழ்ந்துட்டேன்.

என்னைக் கொண்டுபோய் சிவாவின் மேசைமீது ‘நக்’கென்று வைத்தாள். அதிர்வில் மேசையிலிருந்த காகிதங்கள் சரிந்தன.

அன்புகாட்டுவதில் மட்டும் அவர்கள் மனமொத்த தம்பதிகளில்லை என்பதை அடுத்த நொடியே சிவா புரியவைத்துவிட்டான்.

“எனக்கு சாப்பாடும் வேண்டாம், ஒருமண்ணும் வேண்டாம்” எனக்கூறியபடியே என்னை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு வந்தான். சமையலறை மேடையில்தான் என்னை வைப்பான் என்று சற்று அலட்சியமாக பார்த்தால்… அட… என்ன இது, அதையும்தாண்டி போகிறானே…

‘அங்கிருப்பது குப்பைத்தோம்பு அல்லவா’ எனக்கு வியர்த்துக் கொட்டியது.

அவனது நோக்கம் விளங்கவும் நிலைகுலைந்து போனேன்.

“என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க…” நான் கதறினேன். என் கதறல் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. ஒரு நப்பாசையுடன் சாந்தியாவது வந்து என்னைக் காப்பாற்றுவாளா என்று தலையைத் திருப்பிப் பார்க்கிறேன். வைத்தக்கண் வாங்காமல் சிவாவை முறைத்தபடி கல்லுளிமங்கி மாதிரி நிற்கிறாளே… ராட்சசி…

‘என்னவொரு நன்றிகெட்ட மனிதர்கள், இவர்களுக்குள் பிரச்சினையென்றால் நான் என்ன பாவம் செய்தேன்?’

‘என்கதி அதோகதிதானா…!’

சிவா குப்பைத்தொட்டியின் கதவைத் திறக்கிறான்.

‘பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தால் நசுங்கி நாசமாய்ப் போயிடுவேனே.’

“என்ன இது… சாப்பாட்டைக் குப்பையில் வீசுவது பாவமில்லையா…” சாந்தியின் கை என்னைப்பற்றியது.

“அப்பாடா”

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரத்தெட்டு இருக்கும். நமக்கேன் வம்பு. வாங்க அடுத்தக்கதையை பார்ப்போம்”. 

தொடர்புடைய சிறுகதைகள்
“எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர். “அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?” வினாதொடுத்தார் சிவபெருமான். “மக்கள் மனநிறைவுடன் வாழ்வதே இக்காலத்தில் புதுமைதானே தந்தையே.” “கார்த்திகேயா, எங்கே உமது வாகனம்?” ஐயமுடன் வினவினார் விநாயகர். “அதையேன் கேட்கிறீர்கள் தமையனே, ஜூரோங் ...
மேலும் கதையை படிக்க...
“அங் மோ கியோ நூலகத்தில் அவளைச் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை”. அன்றலர்ந்த ரோஜா மலர் போல எப்போதுமே புத்துணர்ச்சியுடன் இருக்கும் நந்தினியின் வதனம் வாடிப்போய்க் காணப்பட்டது. அது அவள்தானா என்று கூடவே ஓர் ஐயமும் தோன்ற அவளது அருகில் சென்று, ...
மேலும் கதையை படிக்க...
முன்ஜென்மத்து விட்டக்குறை தொட்டக்குறை மேல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு? இல்லையா? நானும் அப்படித்தான் முன்னல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன். எதுக்கு முன்னன்னா கேக்குறீங்க? எல்லாம் இந்த கல்யாணம்னு ஒண்ணு நடக்கிறதுக்கு முன்னதான். முன்ஜென்மத்து வினை தொடரும்னு அனுபவிச்சவங்க சொன்னா கேக்கணும். என்ன அனுபவம்னு பொத்தாம்பொதுவா ...
மேலும் கதையை படிக்க...
“அப்பா, நூலை இன்னும் வேகமா விடுங்கப்பா, பட்டம் இன்னும் மேலே போகட்டும்”, குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு ஐந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க பையன் ஆர்வத்துடன் பட்டத்தைப் பார்த்தபடி இருக்க அவனது தந்தை பட்டத்தின் நூலை சிறிது சிறிதாக ...
மேலும் கதையை படிக்க...
“முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி...?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல் குழப்பங்களென்று  பிரச்சினைகள் விசுவரூபமெடுத்துள்ளதால் பயணத்தைச் சிங்கப்பூரை நோக்கித் திருப்பினேன் தந்தையே. அதற்கடுத்ததாக நாமனைவரும் அருகிலிருக்கும் பத்துமலைக்கும் சென்று வருவோம்!” “அதுசரி, எங்களை அழைத்ததின் ...
மேலும் கதையை படிக்க...
பூலோக சொர்க்கம்
கண் கெட்டப் பிறகு…
(ஏ)மாற்ற சொன்னது நானா…?
அறுந்துபோகும் பட்டங்கள்
அமுதே…! தமிழே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)