என்னைப் பார் காய்ச்சல் வரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 4,150 
 

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

மாயா அக்காவிற்கு நடந்ததைப் பற்றி அம்மாவிடம் விசாரித்தேன். மாயா அக்கா மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், மேலும் அன்றுப் பகலில்‌ நீ சரிவர உணவு உண்ணாமல் இருப்பதால் தான் இது போன்ற நோயெல்லாம் வருகிறது என்று பெற்றோர்கள் சிறிது வாய்ச் சொல்லால் கண்டித்திருக்கின்றனர். ஆகவே தான் அவர் மாயா இப்படிச் செய்திருக்கிறாள் என்று அம்மா கூறினார். மேலும் வழக்கமாக அப்பா அண்ணனைக் கடையில் வைத்துவிட்டுக் காலையில் குளித்துவிட்டு மற்றும் உணவு அருந்துவிட்டுச் செல்ல அவ்வழியே வந்திருக்கிறார். சரியாக அப்பா அந்த இடத்திற்கு வந்து கொண்டிருக்கும் பொழுதுதான் மாயா அக்கா நெருப்புடன் அவரது வீட்டிற்குள் இருந்து வெளியே அலரியபடி வந்துள்ளார். மேலும் அவர் என் அப்பாவைக் கண்டவுடன் ஐயோ! மாமா என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறித் துடித்துள்ளார்.

பிறகு அங்கிருந்த மக்கள் சாக்கைக் கொண்டு அக்காவின் உடலை உண்டுகொண்டிருந்த நெருப்பையணைத்து அவசர உதவி வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அங்கு அவர் மெதுவாக அவரது உறவினர்களிடம் கூறிய கடைசி விஷயம் ஒன்றுதான். ஐயோ! அண்ணன் வந்தா என்னைத் திட்டுமே என்பது தான். மாயா அக்காவிற்கு மதி என்ற அக்காவும் ராஜா என்ற அண்ணனும் உண்டு. ராஜா அண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்த நிகழ்வைக் கேட்டு அவர் அவசரக் கால விடுப்பில் வெளிநாட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

கடைசியில் வருதப்பட்டுக் கூறிய வார்த்தைகளுடன் மாயா அக்கா உறங்கினார். சரி சற்று உறங்கட்டும் என்று உறவினர்கள் காத்திருக்க, எவரும் அறியவில்லை அவர் நிரந்தரமாக உறங்கிவிடுவார் என்று. ஆம் அந்த உறக்கதிலேயே அவர் உடல் இவ்வுலகைப் பிரிந்தது. மாயா அக்காவின் ஆன்மாவாகிய உயிரைப் பற்றி அந்த கடவுள் மட்டுமே இன்றளவும் அறிந்திருப்பார். அவர் இறந்து ஒரு சில மாதத்திற்குள்ளேயே தெருவே பதறிய பதற்றம் சிலப் பல வருடங்களுக்கு நீடித்தது.

என் பெரியப்பா வீட்டின் அருகில் என் உறவினர் அத்தை ஒருவரின் வீடு உள்ளது. என் பெரியப்பா வீட்டிற்கும் அத்தை வீட்டிற்கும் நடுவில் ஒரு சந்து உள்ளது. பாகம் ஒன்றில் குறிப்பிட்ட எங்கள் மாற்றுவழிச் சந்து போல இதுவும் சற்றுக் குறுகலானச் சந்து தான். என் அத்தை வீடு இரண்டு பாகங்களைக் கொண்டது. முன்பக்கம் ஒரு வீடு பின்பக்கம் ஒரு வீடும் மற்றும் கழிப்பறையும் உள்ளது. அத்தையின் பின்புற வீட்டிற்குச் செல்ல அந்தச் சந்தின் வழியே தான் செல்ல வேண்டும். இரவில் அத்தையின் மகன் பாபு சிறுநீர் கழிப்பதற்காகச் சந்தினுள் சென்றுள்ளார். தூக்கக் கலக்கத்தில் நான்கடி உள்ளே சென்றவருக்கு அதற்கு மேல் ஒரு அடிவைக்க முடியாமல் உறைந்து போனார். சந்தின் முனையில் மாயாவின் உருவத்தைக் கண்டவரின் இதயத்துடிப்பு உச்சத்தை அடைந்தது. படபடத்துப் போய் வந்த வழியே வீட்டிற்குப் பின்நோக்கித் திரும்பினார். மறுநாள் அவர் காய்ச்சலில் படுத்தார்.

பாபு நம்மோடு பேசாமல் சென்றுவிட்டானே என்ற ஏக்கமோ என்னவோ, மாயா அக்கா விடுவதாக இல்லை. அடுத்தது பாபுவின் சித்தப்பா மகன் வருணைக் காணும் வாய்ப்பு ஒரு நள்ளிரவில் அக்காவிற்குக் கிடைத்துள்ளது. அந்த வழியே இருசக்கர மோட்டார் வாகனத்தில் வருண் வீட்டிற்கு வந்த பொழுது டேய் வருண் இங்கே வா! எப்படி இருக்க? என்ற குரல் அழைக்க திரும்பிப் பார்த்த வருணுக்குத் தூக்கி வாரிப்போட்டது. வாகனத்தை நிறுத்தாமல் வீட்டின் அருகே சென்று வாசலில் வாகனத்தை விட்டவர் அந்தத் திசையில் திரும்பிக்கூடப் பார்க்காமல் வீட்டினுள் சென்று வீட்டு நபர்களிடம் நடந்ததைச் சொன்னார். வீட்டில் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் தெரு முழுவதும் தீயாய் பரவ, அனைவருக்கும் இரவில் தெருவே ஒரு மாற்று உலகமாகவே மாறத் தொடங்கியது. பாபு அண்ணன் வீட்டின் எதிர்புறம் அமைந்த வீட்டில் குடியிருந்த சக்தி என்பவரின் மகள் சபரிக்கு நேர்ந்தது அடுத்த விளைவு. ஆம் அவரின் அசாதாரணமான செயல்களும் முக பாவனைகளும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கும் மருத்துவம் மற்றும் கோடாங்கி வைத்துப் பேய் விரட்டுதல் என்று அத்தனை முயற்சிகளும் செய்து இறுதியில் உடல்நிலை மிகவும் குன்றி அவர் உயிர் நீத்தார். அவருக்குப் பேய் பிடித்ததாக கூறப்பட்ட நிகழ்விற்கும் அவர் உயிர் பிரிந்தற்கும் நடுவிலிருந்த சில மாதங்கள், அந்த மரணத்தை இந்தச் சம்பவத்தோடு அதிகக் காலம் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.

பேய் பிடித்து அசாதாரண நிலைமைக்குத் தள்ளப்படவர்களின் எண்ணிக்கை மாதந் தோறும் உயர்ந்து கொண்டே சென்றது. நசிமா அக்கா, கார்த்திகா அக்கா, அன்னம் அக்கா, கோவிந்தம்மாள் அக்கா மற்றும் மங்கலம் அக்கா என்று பேய் கோளாறுகள் அதிகமானது. இதை எப்படி நான் பேய் கோளாறு என்று குறிப்பிடுகிறேன் என்றால் அவர்களின் நடத்தையே முதல் காரணம். சம்மந்தம் இல்லாமல் சிரிப்பது, முறைப்பது மற்றும் அளவிற்கு அதிகமாய் உண்ணுவது என்பதெல்லாம் மேல் குறிப்பிட்ட அத்தனை நபர்களிடம் பொதுவாகக் காணப்பட்டச் சில செயல்பாடுகள். அப்படிப் பேய் கோளாறு என்றால் எப்படி அது மாயா அக்கா தான் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் !

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *