எனது இரயில் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 9,936 
 

வணக்கம்!

என் பெயர் சங்கர். என்னைப்பற்றி நீங்கள் இன்னும் விவரம் அறிந்துகொள்ள ஆசைப்படலாம், ஆனால் எனக்கு இரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் அரை மணிநேரத்தில் நான் தாம்பரம் இரயில் நிலையம் அடையவேண்டும். இப்பொழுது துரிதமாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடப்பதால் சற்று மூச்சு வாங்குகிறது. என்னுடன் நீங்கள் பயணம் செய்தால் என்னைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

விரைவாக நடந்ததால் ஐந்தே நிமிடத்தில் பேருந்து நிருத்தம் வந்துவிட்டோம். ஆம் அது ‘தாம்பரம்’ என்று பலகையில் எழுதப்பட்ட மாநகராட்சி பேருந்துதான். நேரம் இரவு 10மணி ஆதலால் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன. எனினும் இன்னும் எட்டு நிமிட பயணத்தில் இறங்கிவிடுவேன் என்ற எண்ணமும் இரயிலை பிடித்தாக வேண்டும் என்ற பரபரப்பினாலும் நான் உட்காரவில்லை. என் கருப்பு நிற பெட்டியை கெட்டியாக பிடித்துக்கொண்டு நின்றேன்.

இதோ இறங்கிவிட்டேன். நடையை ஓட்டமாக்கினேன் இரயில் நிலையம் நோக்கி. 8ஆம் நம்பர் பிளாட்பார்ம் செல்லவேண்டும். இடைஇடையில் என் சட்டைப்பையில் உள்ள எனது முன்பதிவு டிக்கெட் ஐ என் இடது கை தொட்டு பார்த்து உறுதிபடுத்திக்கொண்டது. அப்படா! இன்னும் இரயிலுக்கான முன்னறிவிப்பு ஒலிக்கப்படவில்லை, இதனை விசாரித்துத் தெரிந்துக்கொண்டேன். இரும்பு நாற்காலியில் உட்காருவதற்கும் என் செல்போன் சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது. என் மனைவிதான் அழைக்கிறாள். என் வருகையை உறுதிப்படுத்திகொள்ள அழைக்கிறாள் போலும். “ம்ம்ம். ஸ்டேஷன் வந்துட்டேன், காலைல வந்துருவேன். சாப்டியா?……… ….” அளவாக பேசிவிட்டு அழுத்தினேன் பொத்தானை.

என் வயது நாற்பதை தொட்டிருக்கும் என்பதை என் தோற்றத்தை பார்த்து ஊகித்திருபீர்கள். ஊர் கும்பகோணம். அலுவல் காரணமாக சென்னை வந்து இப்போது ஊர் திரும்புகிறேன். அன்பான மனைவியும் அழகான இரண்டு மகள்களும் இருக்கின்றனர். “கூ…. கூ…” இரயில் வந்துவிட்டது. எனக்கு லோவர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏறியதும் நன்றாக தூங்கிவிட வேண்டும். என் களைப்பை போக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி இரயில் ஏறினேன்.

S 5 ல் 25 ஆம் பெர்த். என் இருக்கையை இல்லை இல்லை என் படுக்கையை அடைந்தேன்.

ஒரு இளம் தம்பதியினர் என் கம்பார்ட்மென்ட் வந்தனர். கையில் குழந்தையுடன். பொருத்தமான நடுவர்க்கத்து நாகரீக தம்பதியினர். அவன் ஜீன்ஸ் டி-ஷர்ட்டும் அவள் சுடிதாரும் அணிந்திருந்தார்கள். கணவன் என்னை அணுகி ” சார், குழந்தை இருக்கு நீங்க அப்பர் பெர்த் எடுத்துகிரிங்களா? ப்ளீஸ்..” என்றான். நானும் தலையை ஆட்டிவிட்டு அப்பர் பெர்த்துக்கு சென்று படுத்தேன் பெட்டியோடு.

இரயில் புறப்பட்டது. குழந்தையும் அழத் தொடங்கியது. இரயிலின் “கூ… கூ ….” என்ற இரைச்சலுக்கு நான் தான் போட்டி என்பது போல “ஊ… ஊ …” என அலறியது. நான் மேலிருந்து பார்த்தேன். தாயின் முகம் மாறியது. ஒருவித பயம் கலந்த சோகம், தன் குழந்தையின் அழுகையால் மற்றவர்களின் உறக்கம் களைந்து விடுமோ என்ற கவலை. இரண்டு பிள்ளைகளின் தந்தை எனினும் அக்குழந்தையின் வயதை துல்லியமாக என்னால் கணிக்க முடியவில்லை. ஒரு வயதோ அல்லது அதற்கு மேலோ இருக்கலாம், ஒரு வயதுக்கு கீழ் இருக்கவும் வாய்ப்புண்டு. அக்குழந்தையின் அழுகையை நிறுத்தமுயன்றனர். பயனில்லை. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்பது தெரிந்தது. என் கவலையோ என் தூக்கம் பறிபோய்விட்டதை எண்ணி. குழந்தைக்கு இரண்டு அப்பர் பெர்த்திலும் சேலையை கட்டி தொட்டி போட்டு தூங்க வைக்க முயன்றனர். ஆனால் அது கடலில் மோதிரத்தை போட்டு தேடும் முயற்சியை போல வீணாயிற்று.
ஒருவாறு அழுது அழுது களைப்புற்று குழந்தை தூங்கிப்போனது. கணவன் மிடில் பெர்த்தில் படுக்க, அவளோ லோவர் பெர்த்தில் படுத்தாள். குழந்தை தூங்கியபோதும் அவள் தூங்கவில்லை. சிறிது நேர இடைவெளியில் எழுந்து எழுந்து குழந்தையை கவனித்துக்கொண்டாள். ரோடியம் உள்ள எனது கைகடிகாரத்தில் இரண்டு முட்களும் பன்னிரெண்டாம் எண்ணில் கட்டித்தழுவின. அதே நேரம் என் இமைகளும் ஆரத்தழுவின.

இடையில் விழிப்பு வந்து எழுந்தேன் உடல் வியர்த்திருந்தது. இரயில் நின்றுக்கொண்டிருந்தது. நீண்ட நேரமாக நின்றுக்கொண்டிருக்கவேண்டும். மணி 1.30 விழுப்புரம் ஜங்ஷன் ஆக இருக்கும் என நான் நினைத்தது சரிதான். கீழே பார்த்தேன். அந்த பெண் தன் குழந்தையை ஆட்டிகொண்டிருந்தாள். குழந்தையின் தூக்கம் கலைந்துவிடாமல் இருக்க ஆட்டுகிறாள் போலும். அவளோ இளம் பெண். இச்சிறியவயதில் தூக்கத்தை பொருட்படுத்தாமல் தன் அசௌகரியத்தை பற்றி கவலைபடாமல் குழந்தைகாக தியாகம் செய்கிறாள். இத்தனையையும் அவள் விரும்பியே செய்கிறாள்.

இரயில் கிளம்பியது. அவள் உட்கார்ந்து கொண்டு ஆட்டினால் தொட்டியை. எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. பல யோசனைகள் என் மனக்கண் முன்னே தோன்றின. அவை என் பிள்ளைப்பருவத்தில் என் தாயுடன் நான் களித்த நாட்கள். என் கூடபிறந்தவர்கள் ஏழு பேர். எல்லோரையும் என் தாய் அளவில்லா அன்புகொட்டி வளர்த்தாள். இன்று என்னை பெற்றவள் எங்கள் சொந்த ஊரான திருநாகேஸ்வரத்தில் வசிக்கிறாள். அந்த ஊர் எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? கும்பகோணத்தில் இருந்து ஏழு கீ.மீ தூரம் தான் ஆனால் நான் அங்கு சென்று என் தாயை பார்த்து ஏழு ஆண்டுகள் இருக்கும். ஆம் சொத்துத்தகராறு. அவள் என் தமையன் வீட்டில் வசிப்பதால் நான் சென்று பார்ப்பதில்லை. மறுபடியும் குழந்தை முனகும் ஓசை கேட்டது. மெல்லிய குரலில் இங்கிலீஷ் பள்ளி படலை தாலாட்டாக பாடினாள். அவள் கண்ணில் குற்றவுணர்வு அவ்வப்போது தலை நீட்டியது.

நேரம் 4மணி. இதோ நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தேன். ரயில் நிலையம் அருகில் தான் என் வீடு. ரயிலின் சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டு என் மனைவி என் வரவுக்காக காத்திருப்பாள். ஆட்டோவில் செல்ல 50 ருபாய் ஆகும். ஆட்டோ ஸ்டான்ட் நோக்கி நடந்தேன். அழுத குழந்தையின் நினைவும் அந்த இளம் தாயின் முகமும் என்னுள் புகுந்து கொண்டு வெளியேற மறுத்தன. இனம்புரியாத குற்றவுணர்வும் பாசவுணர்வும் என்னை ஆட்கொண்டது. ஆட்டோ ஸ்டான்ட் அடைந்தேன். “எங்க சார் போகணும்?” என்ற ஆட்டோ டிரைவரின் மொழி எனக்கு புரிந்தாலும் என் மனதில் பதியவில்லை. எதிரே பஸ் ஸ்டாப்பில் “திருநாகேஸ்வரம்” என்ற முன் பலகை ஜொலிக்க, நின்றுகொண்டிருந்த பேருந்தை நோக்கி என் மனதின் உந்துதலை புரிந்து கொண்ட கால்கள் நடந்தன….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *