எனக்கும் சம்மதம்தான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 7,512 
 

“வனிதா! நீ என்ன சொல்கிறாய் ? இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கா இல்லையா? வாயைத் திறந்து ஒழுங்காக சொல்லு… ! ” அம்மாவின் கோபம் உச்சக்கட்டத்தில்…

அப்பா ஒன்றும் பேசவில்லை… ஒன்றும் உருப்படியாக நடக்காது என்பதை முடிவு பண்ணியவராய் வெளியே கிளம்பிவிட்டார்….

அம்மாவின் கோபம் ஆத்திரம் ஆனது… ” ஏய்…என்னடி நான் கேட்டுண்டே இருக்கேன் கொஞ்சம் கூட மரியாதை இல்லை? ” அம்மாவின் பேச்சு சிரிப்பைதான் வரவழைத்தது வனிதாவிற்கு …

இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்தது இந்த பெண்பார்க்கும் படலம்… இன்னும் முடிந்த பாடில்லை….

வனிதாவிற்கு 28 வயதாகிறது…எம். எஸ். சி. படித்து எம். ஹெட். முடித்து ஒரு கல்லூரியில் பேராசிரியை …. மிகவும் கெட்டிக்காரி என்று அப்பா அடிக்கடி எல்லோரிடமும் சொல்லி பெருமைப் படுவார். …அவர்களுக்கு வனிதா மற்றும் சுனிதா இரண்டு பெண்கள்…. இவள்தான் மூத்தவள்… தங்கைக்கு 23 வயதாகிறது… அவள் பீ. ஏ முடித்து ஏதோ கம்ப்யூட்டர் படிப்பு படித்து ஒரு தனியார் வங்கியில் பணி செய்கிறாள்..

வனிதா, 25 வயது வரை கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி வேலையை முதலில் பார்க்க விரும்பினாள்… அம்மாவின் கட்டாயத்தால் ஒப்புக்கொண்டு இதோ ஒருவர் பின் ஒருவராக வந்துப் போவதாக இருக்கிறது…

நேற்று வந்தது விக்ரம்…. கம்ப்யூட்டர் துறையில் நல்ல வேலை… அவனுக்கும் அவர்கள் வீட்டிலும் எல்லோருக்கும் வனிதாவை பிடித்து விட்டது…. வெளிப்படையாக சொல்லிவிட்டுச் சென்றனர்…

வனிதா விக்ரமிடம் பேசவேண்டும் என்றதால் இருவரும் தனியாக பேசினர்… ” விக்ரம் நான் ரொம்ப இண்டேபெண்டேன்ட் …. எனக்கு மற்றவர்கள் என்னை ஆளுவது, கட்டாயப் படுத்துவது , என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது எல்லாம் அறவே பிடிக்காது… இது என் பிறவி குணம். அதை மற்றவர்களுக்காகவோ கல்யாணம் என்ற பந்தத்திற்கோ நான் மாற்றிக்கொள்வதாய் இல்லை… அதே போல் உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் நான் எந்த விதத்திலும் தலை இடமாட்டேன்… நீங்களும் சரி உங்கள் வீட்டில் உள்ளவர்களும் சரி இதற்க்கு சம்மதித்தால் மேற்கொண்டு பேசுவோம்…. கல்யாணம் முடிந்த பிறகு ‘ நான் என்ன செய்யட்டும்… அம்மா அப்படித்தான் சொல்லுவா, நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யணும்’ என்று எல்லாம் சொன்னால் ? வேண்டாம்… ஒபெனாக பேசுங்கள்…. சரிப்பட்டால் பார்ப்போம்..” உறுதியாகவும், தெளிவாகவும் பேசிய வனிதாவை ரொம்பவே ஆச்சரியமாகவும், பெருமையுடனும் ஒரு கள்ளப் பார்வை விட்டான் விக்ரம்…

அவள் பேசியது கொஞ்சம் ஆணவமாகவும், திமிராகவும் இருந்ததை உணர்ந்த விக்ரமிற்கு அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதும் தெளிவானது…. இவள் தனக்கு துணை இருப்பாள் என்பதை மனதில் உறுதிக் கொண்டு வெளி வந்தான்… சற்றும் யாரும் எதிர் பாரா வண்ணம் ” எனக்கு வனிதாவை ரொம்ப பிடித்திருக்கு ” என்றான் கம்பீரக் குரலில் … அவன் பெற்றோர்க்கும் இவளைப் பிடிக்கவே மறுப்பு தெரிவிக்காமல் சந்தோஷமாய் அவர்கள் சம்மதத்தையும் தெரிவித்தனர்…

ஆனால் , வனிதா ஒன்றும் சொல்லாததால் இவர்கள் ஓரிரு நாட்களில்
தெரிவிப்பதாய் கூறினார்… அதன் பின்தான் நமக்கு தெரியுமே…. இன்னும் பதில் வரவில்லை வனிதா வாயிலிருந்து….இரண்டு நாட்கள் ஆகியும் வனிதா ஒன்றும் சொல்லாததினால் அம்மாவிற்கு கோபம் … ..

வனிதாவிற்கு ஆச்சரியம் ஆனாலும் கொஞ்சம் தயக்கம்… எவ்வளவோ பேரிடம் இதைப்போல் பேசியதில் எவரும் இவளைக் கல்யாணம் செய்துக்கொள்ள சம்மதித்ததில்லை … திமிர், ஆணவம் என்ற பட்டப்பெயர்தான்
மிஞ்சும்… அதைப் பற்றி வனிதா என்றுமே கவலைப்பட்டதில்லை …

இதோ! விக்ரம் தான் சொன்னதைக் கேட்டு உடனே சம்மதம் தெரிவித்தானே….திரும்பவும் அவனிடம் பேசவேண்டும் என்று தோணியது… அம்மாவிடம் சொல்லாமல் செய்வது தவறு என்று முடிவெடுத்து அவள் சம்மதத்தை வாங்கினாள்… விக்ரமிற்கு போன் செய்து காபி சாப்பிட அழைத்தாள்..

இதோ இருவரும் ஒரு சிறு சிற்றுண்டியில் …. காபி சாப்பிட்டுக்கொண்டே….
“சொல்லு வனிதா! ” மெல்லிய குரலில் விக்ரம்….
” நான் பேசியது உங்களுக்கு தப்பாய் படலியா? திமிர்த்தனம் என்று தோணலியா? ” வனிதா சட்டென்று கேட்டு விட்டாள்…

இதை எதிர்ப்பார்த்தவனாய் விக்ரம் ” என்ன இதில் தவறு என்று நினைக்கிறாய்? உன் மனதின் உரிமைகளை, எண்ணங்களை வெளிப்படுத்தினாய் … எனக்கு அது சரி என்று தோன்றியது… என் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பதாய் கூறினாயே அது எனக்கு பிடித்திருந்தது…. அப்புறம் , என் அம்மா அப்பா மிகவும் விசால மனம் படைத்தவர்கள்… அவர்கள் என்றுமே என் விஷயத்தில் தலை இடமாட்டார்கள் . கட்டாயம் உன் விஷயங்களில் ஊம் ஊம்…. எனக்கு ஒ. கே ,,, வேறு ஏதாவது கேட்கவேனுமா? ”

அவனை ஆசையோடுப் பார்த்தாள் வனிதா! என்னமோ அவன் மேல் தன மனம் ஈடுப்பட்டால்போல் தோன்றியது… வெட்கமும் வந்தது…. மறைத்தவள் போல் ” விக்ரம்… நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்? ” என்றாள் சற்று தயக்கக் குரலில் …

விக்ரம் கண்கள் அவளை நோட்டமிட்டது… அவள் தலை குனிந்தாள்..

அம்மா சந்தோசத்திற்கு அளவே இல்லை…. நாளைக்கே முஹுர்த்தம் இருந்தால் பாருங்கோ என்றாள்… “சும்மா இருடி…. கொஞ்சம் பொறு…. எல்லாம் பார்த்துதான் செய்யணும்…. ” அப்பா ஏதோ மிரட்டுவது போல் பாவனை செய்தார்..

வனிதா விக்ரமுடன் போனில் பேசிக்கொண்டே இவர்கள் வாக்குவாதத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *