Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு!

 

வரதராஜனுக்கு நேரம் ஆகியபடியிருந்தது. வீட்டில் அம்மா ஒருத்தி மட்டும் தான். நேரம் இரவு பத்தையும் தாண்டிவிட்டது. கிட்டத்தட்ட அந்த குறுநகரில் எல்லாக் கடைகளும் சாத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இவன் பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்றிருந்தான். அம்மா இவன் போய் வீடு சேர்ந்து வண்டியை நிறுத்தும் வரை தூங்காது. அம்மாவுக்கு ப்ரஷர் வேறு இருக்கிறது. மாத்திரையை சரியான நேரத்திற்கு போட்டு விட்டு தூங்க வேண்டும். அம்மாவுக்கு ஒரு செல்போனை வாங்கி கொடுத்து விட்டால் இந்த மாதிரி சமயங்களில் வர தாமதமாகுமெனச் சொல்லி விடலாம்.

எப்படியும் சீதா வந்து நிறுத்தத்தில் இறங்க பதினொன்று கூட ஆகிவிடும். சற்றும் முன்பாகத்தான் அவள் எண்ணிற்கு அழைத்துப் பேசியிருந்தான். பேருந்து இறைச்சலில் அவள் சொன்னது, ’இன்னம் அரைமணி நேரத்துல வந்துடுவேங்கண்ணா!! அண்ணா சாரிண்ணா’. இவன், சாரியெல்லாம் எதுக்கு சீதா! என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். சீதாவை இதற்கும் முன்பாக இரண்டுமுறை சந்தித்திருக்கிறான் வரதராஜன். அதுவும் இவன் கீதா அறிமுகப்படுத்திய பின் தான்.

என்னோட ஆள் தான் வரதராஜன், என்று சீதாவிடம் முதன்முதலாக அறிமுகப் படுத்துவாள் என்று நினைத்திருந்தவனுக்கு அன்று ஏமாற்றம் தான். என்னோட பெஸ்ட் ஃப்ரண்டு, எனக்குன்னா எது வேணா செய்யும், என்றே அறிமுகப்படுத்தினாள் கீதா. அது இவனுக்கு ஏன் என்று தான் தெரியவேயில்லை.

கீதாவும் சீதாவும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கிறார்கள். சீதாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம். இப்படி வெளியூர்களில் இருந்து பெண்கள் பலர் இங்கே திருப்பூர் பகுதிகளுக்கு வந்து அறையெடுத்து தங்கி பணிக்குச் சென்றுவந்து கொண்டுதான் இருந்தார்ர்கள். சீதாவை இருள் சூழ்ந்த நேரத்தில் கீதா அன்று அறிமுகப்படுத்தினாள். இவன் உயரத்திற்கே கீதா இருப்பாள். ஆனால் சீதா இவன் தோள்பட்டைக்குத்தான் வருவாள் போலிருந்தது. போக சீதா மாநிறமா? சிவப்பா? என்றுகூட இரவு நேரத்தில் இவனால் கண்டறிய முடியவில்லை. ஆனால் கீதாவை விட சாப்பாடு நன்றாய் சாப்பிடுகிறாள் போல! என்று நினைத்துக் கொண்டான். மஞ்சள் வர்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்.

அவளின் அறை ஒரு காம்பெளண்டினுல் பின்பக்கத்தில் இருந்தது. சாலையோரத்தில் முகப்பில் வீட்டு ஓனர் பங்களாவில் தங்கியிருந்தார். அன்று அந்த சாலையில் நின்று தான் அவசரமாய் பேசி விடைபெறுவதில் கீதா குறியாய் இருந்தாள். இரண்டாவது முறையாக கீதா இவனை பகலில் ஒரு விடுமுறை நாளில் கூட்டிப் போனாள். பத்துக்கு பத்து அளவிலான சிறிய அறை தான் அது. பெண்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குள் இவன் முன்பாக எங்குமே சென்றதில்லை. உள்ளே வெய்யில் வேக்காட்டிலும் வேறு எதோ பூவின் மணம் வீசிக் கொண்டிருந்தது. போக முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பவுடர் டப்பா என்று ஒரு ட்ரேயில் இருந்தன.

காலையில் சிக்கன் ஒருகிலோ எடுத்து வந்திருந்தாளாம் சீதா. இவளுக்கு போனைப் போட்டு அறைக்கு மதியம் வரச் சொல்லி விட்டாள். இவள் வரதராஜனை வண்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டாள். இவனுக்கு சிக்கன் விசயம் அறைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. சும்மா எப்படி வாயை நனைக்காமல் சிக்கனில் கை வைப்பது? இவன் ஒன்றும் பேசாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து அவளின் சூட்கேஸ் மீது கிடந்த விகடன் இதழை எடுத்து புறட்ட ஆரம்பித்தான்.

இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டால் பேச்சுக்கு குறைச்சலாகவா இருக்கும்? கம்பெனி விசயங்களை அலாசு அலாசென அலாசினார்கள். மேனேஜருக்கு வர வர திமுறு ஜாஸ்த்தி ஆயிட்டே இருக்குடி! என்று பேசினார்கள். அடிக்கடி குமாரு, குமாரென பேசிக் கொண்டார்கள். இவன் பத்திரிக்கையை புறட்டுவதை நிறுத்தி அவர்களைப் பார்த்தான். இவன் பார்ப்பதைக் கண்ட கீதா இவனுக்கு பதில் சொன்னாள். ‘குமாரு கம்பெனில இவளோட ஆளு!’

ஆமாம் பின்னே வெளியூரிலிருந்து வந்து தங்கியிருக்கும், சம்ப்பாதிக்கப் போகும் பெண்ணுக்கு ஒரு காதலன் இல்லாமல் இருந்தால் எப்படியிருக்கும்? போரடிக்குமே சும்மா இருந்தால்! என்று இவனாக மனதில் நினைத்துக் கொண்டு பத்திரிகையில் ஆழ்ந்தான். ஆனால் கீதா விட்டபாடில்லை இவனை. ‘இவுங்க ரெண்டு பேரும் இன்னம் ரெண்டொரு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க வரது. அப்புறம் இந்த ரூமை காலி பண்ணிட்டு அவன் ரூமுக்கு திருப்பூரே போயிடுவா.’ என்று சொல்லிக் கொண்டிருகையில் சீதா தன் செல்போனை எடுத்துக் கொண்டாள். ‘யாருக்குடி போன் பண்றே? குமாருக்கா?’ என்ற கீதாவுக்கு ஆமாமென தலையை ஆட்டினாள் சீதா.

எதிர்முனையில் ஆள் எடுத்ததுமே கீதா இவனிடம் ஆரம்பிப்பது மாதிரியே. ‘எங்கிருக்கீங்க?’ என்றாள். பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றாள் சீதா. சீக்கிரமாய் திரும்பி வந்தவள், ‘குமாரு கஜலட்சுமியில படம் பாத்துட்டு இருக்கான். அவன் பேசுறதே கேக்க மாட்டீங்குது!’ என்று சொல்லியபடி வந்து அமர்ந்தாள்.

‘நீயும் போயிருக்கலாமேடி! ஜம்முனு உக்கோந்து ஞாயித்துக்கிழமையும் அதுவுமா ஜாலியா படம் பாக்கிறதை உட்டுட்டு’ என்றாள் கீதா அவளிடம்.

‘பாத்தீல்லடி வெளிய, ஆறுசெட் துணிமணிகளை துவைச்சி காயப் போட்டிருக்கேன். குமாரு கூட போயி படம் பார்த்துட்டு இருந்தா அழுக்குத் துணி போட்டுட்டு தான் கம்பெனிக்கி வரணும். சரி சாப்பிடலாமா?’ என்றாள். ‘சரி நீங்க சாப்பிடுங்க, நான் வண்டியெடுத்துட்டு போயிட்டு வந்துடறேன்’ என்றான் வரதராஜன்.

‘எங்கெ சரக்கடிக்கிறக்கா?’ என்றாள் கீதா. இவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்தான்.

‘நீங்க அங்கியே அடிச்சுட்டு வர்றப்ப எங்களுக்கு மூனு பீர் வாங்கிட்டு வாங்க! சீக்கிரம் வரணும் பாத்துக்கங்க! எனக்கு பசி இப்பவே!’ என்றாள் கீதா. கீதா எப்பாவது இவனோடு அமர்ந்து பீர் அருந்துவாள். ஆனால் இன்று அவள் தோழி சீதாவோடு இருக்கையில் குடி பற்றி பேசவே மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தான் வரதராஜன். ஆனால் அவளோ அவளுக்கும் சேர்த்து வாங்கி வரச் சொல்லிவிட்டாள். இவன் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

இவன் டாஸ்மார்க் பாரில் அமர்ந்து அருந்திக் கொண்டிருக்கையில் கீதாவின் அழைப்பு வந்தது. வரும்போது பெப்ஸி ஒன்னரை லிட்டர் கேன் வாங்கி வரவேண்டுமாம். இவனிடம் பைசா அதற்குத் தேறாது தான். மூன்று பியர் பாட்டில்களோடு அறைக்கு இவன் திரும்பி வந்ததும் கீதா முதலாக அதைத்தான் கேட்டாள். இவன் ‘மறந்துட்டேன் சாரி’ என்றான்.

‘உங்க சாரியைக் கொண்டி குப்பைக்கூடைல போடுங்க! ஒன்னு சொன்னா மறந்துட்டேன்னு சொல்லிடறது. சரி நீங்க முதல்ல சாப்டுட்டு கிளம்புங்க! நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம். ஈவனிங் நான் பஸ்சுல வந்துடறேன்.’ என்றாள். பாட்டில்களை அறையின் ஓரத்தில் வைத்து விட்டு,‘கடையிலயே சாப்டுட்டேன் கீதா, நான் கிளம்புறேன்’ என்று சொல்லி விட்டு வெளியேறினான். கீதாவோ இல்லை சீதாவோ எதாவது சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சே! வெட்டிச் செலவு செய்யவே வந்த மாதிரி ஆயிடுச்சே!, முனகிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

பின்பாக இப்போது தான் சீதாவுக்காக இங்கே காத்து நின்றிருக்கிறான் இரண்டு மாதங்களுக்குப் பிறகாக. இதுவும் கீதாவின் ஏற்பாடு தான். சீதா திருநெல்வேலியில இருந்து கிளம்பி இங்கே வந்து சேர எப்பிடியும் மணி பத்தாயிடும் வரது. நீதான் பார்த்து கூட்டிட்டு வந்து அவ ரூம்ல விடணும், என்று காலையிலேயே கீதா இவனிடம் சொல்லியிருந்தாள். இவனைப் பற்றி சுத்தமாய் தெரிந்து வைத்திருந்தாள் கீதா. இவனும், அதுக்கென்ன! கூட்டிட்டு வந்து விட்டுடறேன்! என்றே சொலியிருந்தான். ஒன்பதரை மணி போல ஒரு கோட்டர் போட்டது. கொஞ்சம் திருகலாய் இருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு கோட்டரையும் தண்ணி பாக்கெட்டும் வாங்கி வண்டி டேங்க் கவரில் வைத்திருந்தான். வெறும் வயிறாய் இருக்க பசி வேறு அவனை வாட்டியது. நல்ல காரமாய் மீன் சில்லி வீசலாம்! ஆனால் எட்டரை மணிக்கே தள்ளுவண்டிக்காரர்கள் பொருள்களை முடித்து விட்டு கிளம்பி விடுவார்கள்.

வந்து வந்து நின்று கிளம்பிக் கொண்டிருக்கும் பேருந்துகளில் சீதா ஏதேனுமொன்றில் இறங்கி விடுவாளென பேருந்துகளின் படிக்கட்டுகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவழியாய் சீதா கையில் ஒரு பெரிய பேக்கோடு பேருந்தில் வந்து இறங்குகையில் சரியாய் மணி பதினொன்று தான். கூடவே ஒன்றிரண்டு பேர் இறங்கினார்கள். பேருந்திலிருந்து இறங்கியதுமே இவனைப் பார்த்து விட்ட சீதா பேக்கை தூக்கிக் கொண்டு இவனிடம் வந்ததும் மீண்டும், ‘சாரிண்ணா! கீதா வேற போன்ல திட்டிட்டே இருந்தா இப்பக் கூட! உங்ககிட்ட எதாச்சும் சொன்னாளுங்களா அண்ணா?’ என்றாள். இவனுக்கு அவள் காலையில் சீதா வரும் தகவலை சொன்னதோடு சரி. இப்போது வரை அவள் இவனுக்கு போன் செய்யவேயில்லை. அதுவும் கூட ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு.

‘நைட்டுக்கடையில சாப்டுட்டு போயிடலாம் சீதா’ என்றான் இவன்.

‘ஐய்யோ வேண்டாம்ணா! போலாம்ணா. வீட்டுல ரவை இருக்கு போயி செஞ்சுக்கறேன்’

‘இல்ல எனக்கு பசி கொன்னெடுக்குது. பேசாம வண்டியில ஏறு சீதா. கடைசிக்கி ஆளுக்கு ரெண்டு புரோட்டாவாச்சிம் சாப்டுட்டு போயிடலாம்’ என்றதும் மேலே பேசாமல் இவனுடன் இரவுக் கடைக்கு வந்து மூன்று விரலில் புரோட்டாவை எடுத்து சாப்பிட்டாள். ‘நல்லா அள்ளிப் பூசு சீதா’ என்று சொல்லலாமென நினைத்தான் வரதராஜன். ஆனால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ! என்று விட்டு விட்டான். அதற்குள் சீதாவுக்கு கீதாவின் அழைப்பு வந்துவிட்டது. சீதா மெதுவாகவே அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘சாப்டு முடிச்சுட்டு கூப்பிடறேன்’ என்று கட் செய்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்தபிறகு இவன் கல்லா டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சுவீட் பீடா இரண்டை எடுத்து வாயினுள் திணித்துக் கொண்டான். சீதாவுக்கும் இரண்டு எடுத்துக் கொடுத்து விட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வண்டி அருகே வந்தான். வண்டி சீதாவை ஏற்றிக் கொண்டு கிளம்பிற்று. தன் பெரிய பேக்கை முதுகில் மாட்டிக் கொண்ட சீதா தாண்டுக்கால் போட்டு இப்போது இவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள். எப்பவுமே டூவீலரில் தாண்டுக்கால் போட்டுத்தான் உட்காருவாளாம்! ஒரு சைடாக அமர்ந்தால் கீழே விழுந்து விடுவோமோ என்று பயமாய் இருக்குமாம்! மெயின் சாலையிலிருந்து இவளின் அறை இருக்கும் ஊருக்கு கிளைப்பாதையில் பிரிந்தான்.

‘அண்ணா அப்படி ஓரமா வண்டியை நிறுத்துங்கண்ணா! யூரின் எனக்கு பஸ்ல வர்றப்பவே அர்ஜெண்ட்டு!’ என்றாள் சீதா. இவன் சாலையின் ஓரமாய் வண்டியை நிப்பாட்டினான். அவள் பேக்கை கழற்றி சீட்கவர் மீது வைத்து விட்டு தூரமாய் தள்ளிப் போனாள். உலகத்திலேயே யோக்கியமானவனாக இருப்பவன் போல அவள் சென்ற திசை நோக்கிப் பாராமல் எதிர்க்கே சாலையில் ஏதாவது தட்டுப்படுகிறதா? என்று பார்க்க ஆரம்பித்தான்.

இவனுக்கும் சிறுநீர் வரும்போல இருக்கவே நேராக நடந்து குழி அருகில் நின்று பேண்ட் ஜிப்பை இறக்கினான். ஒருவருக்கு வந்தால் அடுத்தவருக்கும் வந்துவிடுமென சொல்கிறார்களே! அது நிசம் தான் போல! என்று நினைத்துக் கொண்டான். இவன் திரும்ப வண்டிக்கி வருகையில் சீதா காதில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

‘வந்துட்டோம்டி! வீட்டுக்கிட்ட இறக்கி வுட்டுட்டு இப்பத்தான் கிளம்பிப் போனாப்ல வரதராஜண்ணன்’ என்றவள் கட் செய்து விட்டு சிறிது நேரம் மேலே வானத்தை அன்னாந்து பார்த்தாள். அவள் விடும் மூச்சு கொஞ்சம் விரைவாக இருப்பது மாதிரி இவனுக்கு தோன்றியது. அடுத்து இவனது செல்போன், ’லில்லி மலருக்குக் கொண்டாட்டம்! உன்னைப் பார்த்ததிலே!’ என்று பாட ஆரம்பித்தது.

‘கீதாவா இருந்தா அவுட் ஸ்பீக்கர் போடுங்கண்ணா!’ என்றாள் சீதா. இவன் அழைப்பது கீதா தான் என்று சீதா சொன்னது மாதிரியே அவுட்ஸ்பீக்கர் போட்டு பேசினான்.

‘எங்கிருக்கிறீங்க?’

‘வந்துட்டேன் நம்ம ஊருக்கிட்டயே!’

‘வண்டிச் சத்தமே கேக்கலியே! ஏன் தான் இப்படி பொய் பேசறீங்களோ! சீதாவை எந்தக் காட்டுக்குள்ள கூட்டீட்டு போயி பண்ணீட்டு இருக்கீங்க?’

‘ஏண்டி இப்படியெல்லாம் பேசுறே? பாவம்டி! பாவம் புடிச்சுக்கும் உனக்கு!’

‘பாவம் புடிக்குது அஞ்சாறுல, எனக்கு சீதாவைப் பத்தி தெரியாதுன்னு நினைச்சுட்டீங்களா? இல்ல உங்களைப் பத்தி தான் எனக்கு தெரியாதா? அதும் நைட்டுல சான்ஸ் கெடச்சு நீங்களாவது உடறதாவுது! அவ அதுக்கும் மேல இருப்பா!’

‘போனை வெய்யிடி மொதல்ல லூசுக்கருமம்! அப்புறம் ஏண்டி என்னை கூட்டிட்டு போயி உட்டுருங்க! பாவம் சாமத்துல அவ என்ன பண்டுவான்னு சொன்னே? மூடீட்டு கம்முன்னு இருந்துருக்கலாம்ல!’ கோபம் மிகுதியில் போனை கட் செய்தான். இப்போது இவனும் வானத்தை வெறிக்கப் பார்த்தான்.

மீண்டும் அவள் அழைப்பே வந்தது. கட் செய்தான். மீண்டும் அழைப்பு வரவே ஒட்டு மொத்தமாய் சுவிட்ச் ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். இப்போது இவனுக்கும் மூச்சு வாங்கிற்று.

‘இவ பேசிக் கடுப்பைக் கிளப்புறதைக் கேட்டா இவ சொன்னமாதிரி நெசமாவே பண்ணிடலாம்னு இருக்கு சீதா!’ வானம் பார்த்துக் கொண்டே பேசினான்.

‘எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு வரது’ என்றாள் சீதாவும். அப்போது அவள் போனுக்கு அழைப்பு வரவே யாரெனப் பார்த்து கட் செய்து இவனைப் போலவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்தாள் சீதா.

‘உடுங்க வண்டியை, என்னோட ரூமுக்கு போயிடலாம். நீங்க மெதுவா அப்புறம் போயிக்குவீங்களாம்’ என்றாள் சீதா. 

தொடர்புடைய சிறுகதைகள்
கீதா விஜயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தாள். சுந்தர் திருப்பூரி லிருந்து கே.கே.சி பஸ்ஸில் தான் வருவதாகக் கூறியிருந்தான். ஆனால் இப்போதுதான் இவள் கைப்பேசிக்கு அழைத்து பஸ் ஸ்டாண்டில் கே.கே.சி நிற்கிறது என்றும் இன்னமும் வண்டியை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தான். இருவரும் பெருந்துறை ...
மேலும் கதையை படிக்க...
Ayiram Sontham Nammai Thedi Varum. Aanaal Thedinalum Kidaikatha Orey Sontham Nalla ‘NANBARGAL’ I am very lucky for your ‘friendship’ Kutty Pisasu : 13/8/2011/ 10/34 Pm. உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது ...
மேலும் கதையை படிக்க...
சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில் புதைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தலையணையை சாமிநாதன் என்றெண்ணி உயரத் தூக்கி முத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டாள். 'உடுங்க என்னெ ...
மேலும் கதையை படிக்க...
பிரகாஷ் ஈரோடு எல்.கே.எம்.மருத்துவமனையில் தனியறையில் படுத்திருந்தான். சூரம்பட்டி நான்கு சந்திப்பு சாலைக்கு அருகில் மருத்துவமனை இருந்தது. பிரகாஷின் வலது காலில் மாவுக்கட்டு போட்டிருந்தார்கள். அந்தக்கட்டு பார்ப்பதற்கு பெரிதாக முட்டிங்காலில் இருந்து கீழ்மூட்டு வரை இருந்ததால் நாளையும் பின்னி எழுந்து நடப்பானா? என்ற ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முறை தான் பூக்கும்
பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல... மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
குட்டிப்பிசாசு
குட்டிப் பிசாசு 2
சரோஜா
தொழுவம் புகுந்த ஆடுகள்
ஒரு முறை தான் பூக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)