(எனக்குத் தெரிந்த‌)ஒரு நடிகையின் கதை

 

பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். ஒரு விஷயம் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டாலும் கூட ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியாமல் மறைத்தால் அதுவும் ரகசியம்தானே. இதுவும் அப்படியான ரகசியம்தான்.

இந்த விஷயத்தை நீங்கள் எல்லோரும் தெரிந்து வைத்தாலும் கூட பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்த விஷயம் தீப்திக்கு ம‌ட்டும் தெரிந்துவிடக் கூடாது.

தீப்தி என்னுடன் ப‌டித்த‌வ‌ள்தான். த‌ற்பொழுது ந‌டிகையாகிவிட்டாள். ந‌டிகை என்றால் டிவி சீரிய‌லில் இல்லை. திரைப்ப‌ட‌ங்க‌ளில் நடித்து முக்கியமான வாரப்பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களை அலங்கரிக்கும் சினிமா நடிகை. ஆனால் தீப்தி என்ற‌ பெய‌ரில் இல்லை. உங்க‌ள் மேல் ந‌ம்பிக்கை இருக்கிற‌துதான் என்றாலும், தீப்தியின் த‌ற்போதைய‌ பெய‌ரை உங்க‌ளிட‌ம் சொல்ல எனக்கு விருப்ப‌மில்லை. இந்த‌க் க‌தையை முடிக்கும் போது உங்களில் சிலர் தீப்தி யார் என்று க‌ண்டுபிடித்து விடும் வாய்ப்பிருக்கிற‌து.

நான் எட்டாவது படிக்கும் போது நாங்கள் படித்த சசி அண்ணன் டியூசனில் தீப்தியும் சேர்ந்தாள். நாங்கள் காட்டுப் பள்ளிக்கூடத்தில் வெறும் காலோடு கில்லி ஆடிவிட்டு காலையில் அம்மா கொடுத்த‌ எட்டணாவிற்கு இலந்தப் பொடி வாங்கிக் கொண்டு புழுதியப்பியபடி டியூசனுக்கு வருவோம். காலையிலேயே நாக்கையும், ஆசையையும் அடக்க முடியாமல் ஏதாவது வாங்கித் தின்றிருந்தால், சாயந்தரமாக் ஏதாவது தின்ன வேண்டும் என்றிருக்கும் போது யாரிடமாவது ‘துளியூண்டு’ பொடி வாங்கி நக்கிக் கொள்வோம்.

தீப்தி எங்களை மாதிரி இல்லை. அமலா மெட்ரிகுலேஷனுக்கு ஆட்டோவில் போய்த் திரும்புவாள். பள்ளி முடிந்து வந்தவுடன், கைகால் கழுவி, துணி மாற்றி, தலை சீவி, பவுடர் அடித்து ‘ஜம்’ என்று டியூசனுக்கு வருவாள். சில நாட்களுக்கு ஜாதிமல்லி பூ வைத்துக் கொண்டு வருவாள். அந்த மல்லிப்பூ வாசமும், பவுடரின் நறுமணமும் எனக்கு மிகப்பிடித்ததாக இருக்கும்.

அவளோடு பேசுவதற்கான தைரியத்தைக் கூட எங்களுக்கும் அவளுக்கும் இருந்த வித்தியாசங்கள் தடுத்து வந்தன. அவள் எங்களோடு சேர்ந்தால் பன்றிக் குட்டிகளோடு பசு சேர்ந்து சுற்றுவதைப் போல ஆகிவிடும். ‘கருவாயன்’ குமார் எல்லாம் தெரிந்தவன் போல நடந்து கொள்வான், எங்களோடு திரியும் போது எருமை மாதிரி இருந்தாலும், பெண்களைப் பார்த்தவுடன் பெரிய மனுஷத்தனத்தை அவிழ்த்து விடுவான். ‘ஆய்ஷ்மன் பவ’ என்று சமஸ்கிருத வார்த்தையை தெரிந்து வைத்துக் கொண்டு அலம்பல் செய்து கொண்டு திரிந்தான். தீப்தியிடம், இந்த மந்திரத்தை நோட்டுகளில் எல்லாம் எழுதி வைத்தால் நன்றாக படிப்பு வரும் என்று சொன்னான். அவளும் எழுதிக் கொண்டாள். கருவாயன் ஹீரோவைப் போல‌ சுற்றித் திரிந்தான். அவனை விடவும் நான் கொஞ்சம் சிவப்புதான். இருந்தாலும் என்னுடன் அவள் பேசவே இல்லை.

கொஞ்ச நாளில் ‘கருவாயன்’குமார் பெரிய அண்ணன், ‘கூளையன்’ சரவணன் சின்ன அண்ணன், தீப்தி தங்கை என்று உறவு முறை அமைத்துக் கொண்டு, அவர்கள் தனிக்குழுவாக அமர்ந்து படித்து ஒப்பித்து பார்த்துக் கொள்வார்கள். கருவாயனுக்கும், கூளையனுக்கும் கையெழுத்து வேறு அழகாக இருக்கும். என் கையெழுத்தை பார்த்து ‘கோழி குப்பையை கிளறிய‌து’ போல இருப்பதாக ராமசாமி வாத்தியார் குட்டு வைப்பார். இது வேறு எனக்கு எரிச்சலாக இருக்கும். மற்ற பையன்கள் இந்த விவாகாரத்தை எல்லாம் கண்டுகொள்ளவில்லையென்றாலும் எனக்கு காதில் புகை வந்து கொண்டிருந்தது.

பிரகாஷ் என்னிடம் வந்து ‘டேய் அவுங்க மூணு பேரும் லவ்ஸ் பண்ணிக்கிறாங்களாமாடா’ என்றான். அந்தச் ச‌மயத்தில் ‘லவ்ஸ்’ன் அர்த்தம் ‘கெட்ட வார்த்தை’தான். ‘போடா..அவுங்க அண்ணன் தங்கச்சிடா’ என்று சொன்னேன். இதைச் சொல்வது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் பிரகாஷ் ஏதோ சொல்லிவிட்டு போய்விட்டான். இதன் பிறகு எப்படியாவது அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் இருந்தது.

என் எட்ட்ணா இலந்தப் பொடியை கருவாயனுக்கும், கூளையனுக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். நான் தீப்தி கூடப் பழகத்தான் இவர்களுக்கு வாங்கித்தருகிறேன் என்பதை கருவாயன் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான். ‘எங்க கூட நீ பிரண்டா இருந்துக்கலாம். ஆனா எங்க தங்கச்சி கூட நீ சேரக் கூடாது. ஏன்னா நாங்கதான் அவளை நல்லபடியா பார்த்துக்கணும்ன்னு குமார் சொல்லி இருக்கான்’ என்று கூளைய‌னை தூதாக‌ அனுப்பி சொல்ல‌ச் சொன்னான். எனக்கு வந்த கோபத்திற்கு கூளையன் பல்லைத் தட்டிவிட வேண்டும் போலிருந்தது. வேறு விஷ்யமாக இருந்தால் என் பொடியை எல்லாம் ‘கக்குங்கடா’ என்று சண்டை போட்டிருக்கலாம். இதற்கு சண்டையும் போட முடியாது. தீப்தியிடம் உனக்காகத்தான் சண்டை போட்டோம் என்று பாசமாக பேசி என்னை வில்லனாக்கிவிடுவார்கள்.

கால்பரீட்சை விடுமுறை சமயத்தில் எப்படியோ தீப்திக்கு நண்பனாகிவிட்டேன். எப்படி ஆனேன் என்று இப்பொழுது யோசித்தால் ஞாபகம் வரவில்லை. தீப்தியின் அம்மா பேங்க் வேலை, அப்பா கரண்ட் ஆபிஸில் வேலை என்பதால் இரண்டு பேரும் பகல் நேரத்தில் இருக்கமாட்டார்கள்.

கருவாயனும், கூளையனும் ‘சீன் பாத்’ எடுக்க வாய்க்காலுக்கு போய்விடுவார்கள். ‘சீன் பாத்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்கள் மார்பை மறைக்கும்படி பாவாடையைக் கட்டிக் கொண்டு வாய்க்காலில் குளிப்பதை வேடிக்கை பார்ப்பது. வயலில் வேலை செய்யும் பெண்கள்தான் குளிப்பார்கள். எனக்கும் போக ஆசையாக இருக்கும் என்றாலும் தீப்தி கூட பேசுவதற்காக நான் போக மாட்டேன்.

சரி இதுவா முக்கியம்? ப்ள்ஸ் ஒன் படிக்கும் போது தீப்தியின் பக்கத்து வீட்டுக்கு அவர்களின் தூரத்துச் சொந்தக்காரக் குடும்பம் குடி வந்தது. மாமா என்று சொன்னாள். அவர்களின் மகன் படு அசிங்கமாக இருந்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே அவள் ‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள் என்று எங்களோடு பழகுவதை குறைத்துக் கொண்டாள்.

ஆனால் அவர்களின் மாமா குடும்பம் வந்த பிறகு அந்த வீட்டீற்கு போகும் போதும், வரும் போதும், பொதுக் குழாயருகில் கிரிக்கெட் விளையாடும் போது பார்த்துச் சிரிப்பாள். கொஞ்ச நாட்களுக்குள்ளாக‌ தீப்தி வீட்டில் அடிக்கடி பெரும் சண்டை நடக்க ஆரம்பித்தது. பிளஸ் டூ பாதி வருடம் கழிந்த பிறகு தீப்தியின் அம்மா தீயில் கருகிப் போனார். நான் தகவல் தெரிந்து ஓடி பார்க்கும் போது, அவரை உடம்பில் துணியில்லாமல் வாழையிலை மீது படுக்க வைத்திருந்தார்கள்.

தீப்தி அழுது கொண்டிருந்தாள். நான் அதுவரை நிர்வாணமாக ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை என்பதால் வருத்தத்தை மீறி காமப்பார்வை பார்த்தேன். எனக்கு நான் தவறு செய்வதாகத் தோன்றியது. ஆனால் நகராமல் நின்று கொண்டிருந்தேன்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற மூன்று நாட்களில் தீப்தியின் அம்மா இற்ந்துவிட்டார். தீப்தி அவளின் மாமா பையனைக் காதலித்திருக்கிறாள். இருவரும் அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் சென்று பாரியூர் கோவிலில் திருமணம் செய்திருக்கிறார்கள். அந்தப்பையனின் அம்மா நடத்தை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். அவளின் குடும்பமே ‘தறிகெட்ட’ குடும்பமாம். இதனால் தீப்தியின் அம்மா இவ‌ர்களின் காதலை எதிர்த்திருக்கிறார். அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் மனமுடைந்து தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாராம்.

ஆனால் வேறு மாதிரியும் ஒரு பேச்சு இருக்கிறது. தீப்திக்கு எப்படியாவது தன் அண்ணன் மகனை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என அவளின் அம்மா முயன்றிருக்கிறார். இதனை தீப்தியும், அவளது அப்பாவும் எதிர்த்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை முற்றிப் போய் தீப்தியின் அப்பா கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் கோபம் வந்து தீயீட்டுக் கொண்டாராம். இந்தக் இரண்டு கதைகளையும் “விருமாண்டி” பட ஸ்டைலில் இன்னொரு நாள் சொல்கிறேன்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தீப்தியும் அவரது அவளது அப்பாவும் சென்னை சென்றுவிட்டார்கள். தீப்தி ப்ளஸ் டூ தேர்வு கூட எழுதியிருக்கவில்லை. நாடகமாக இருந்தால் கதையின் இந்த இடத்தில் திரை விழ வேண்டும். திரை விலகும் போது, தீப்தி அஜீத் அல்லது விஜய்யுடன் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் க‌தை இங்கு முடிய‌வில்லை.

தீப்தியின் அம்மா இரண்டு கதையிலும் வருவது போல தானாக கொளுத்திக் கொள்ளவில்லை. தீப்திதான் கொளுத்தினாள். சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வாங்கித்தருவதாக அவளின் மாமா சொன்ன போது தீப்தியின் அம்மா தெரிவித்த மறுப்புக்கான தண்டனைதான் இது.

இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும். எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேட்டாலும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

- அக்டோபர் 10, 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார காலத்திற்கு ரங்கநாதன் ஃப்ரான்ஸ் போய் வர வேண்டுமாம். கேட்ட வினாடியில் இதயம் உச்சந்தலைக்கும் அடிவயிற்றுக்கும் குத்தாட்டம் போட்டது. அத்தனை குஜால்களுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
உங்ககிட்ட எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லி இருக்கேனா? அதுவே ஒரு பெரிய கதை. ஆனால் இங்கு அது ஒரு கிளைக்கதைதான். எனக்கு பொண்ணு பார்க்கப் போகிற செய்தி கிடைத்தவுடன் வீட்டில் பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனக்கு காதல் திருமணம் செய்து கொள்ளத்தான் ...
மேலும் கதையை படிக்க...
"பெங்களுர்ல இருந்து நேரா வந்துட்டீங்களா?" "ஆமாங்க" "நேரத்திலேயேவா?" "வந்து ஒரு மணி நேரம் இருக்கும்" "ம்ம்ம்" "ரவி அண்ணனோட ஆபிஸ் எங்க இருக்கு?" "ஈரோடு கலெக்டர் ஆபிஸ்க்குள்ளங்க" "பி.டபிள்யூ.டியில்தானே இருக்காரு" "ம்ம்...ட்ராஃப்ட்ஸ்மேன்" "கோயமுத்தூர்ல இருந்து தினமும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் போய்ட்டு வந்துடுவார்ன்னு சொன்னாங்க" "ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பைக்ல வீட்டுக்கு வந்துடுவாரு" "அவிநாசியில் இருந்தாங்களே" "ஆமாங்க...கோயமுத்தூரில் புது ...
மேலும் கதையை படிக்க...
ஏதோ தட்டும் சத்தம் கேட்டது. அப்பொழுது சந்தானம் மாடியில் இருக்கும் தனது அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியிருந்தது. அநேகமாக இரண்டு மணியாக இருக்கக் கூடும். மொட்டை மாடியில் இருந்து வீட்டிற்குள் வருவதற்கான கதவில் இருந்துதான் சத்தம் வந்தது. பூனையாக ...
மேலும் கதையை படிக்க...
நிகில் இன்று காலையிலிருந்து நிலத்தில் கால்படாமல் திரிந்து கொண்டிருக்கிறான். உங்களுக்கும் எனக்கும் அது சிம்பிள் காரணம்தான் ஆனால் நிகிலுக்கு அது அத்தனை சந்தோஷம் தரக்கூடிய காரணம். வேறொன்றுமில்லை, நிகிலின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். பதினைந்து நாட்களுக்கு அவள் ஊரில் இருக்கப் போவதில்லை. ...
மேலும் கதையை படிக்க...
இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்றும் ஒரு உந்துதல் இருக்கிறது. தற்சமயம் மென்பொருள் ஒன்று கற்றுக் கொண்டிருக்கிறேன். நிறுவனத்தில் பணி முடிந்த பிறகு பயிற்சி, அதன் பின்னர் இரவு உணவு முடித்து வீடு ...
மேலும் கதையை படிக்க...
முத்தானை கீழே தள்ளி அம்மினியம்மாள் அமுக்கியபோது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. இது நடந்தது ஆலாம்பாளையத்தில். இப்பொழுது யாராவது ஆலாம்பாளையம் எங்கிருக்கிறது என்று கேட்டால் பவானிசாகருக்கு பக்கத்தில் என்று சொல்லிவிடலாம். ஆனால் அம்மினியம்மாள் காலத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆலாம்பாளையம் ஆலாம்பாளையத்தில்தான் ...
மேலும் கதையை படிக்க...
லதாவுக்கு பரந்தாமன் இரண்டாவது புருஷன். இப்படித்தான் இந்தக் கதையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஓரளவுக்குத்தான் உண்மை. லதாவுக்கு பதினேழு வயதாக இருக்கும் போதே கொண்டையம்பாளையத்து மிராசுதார் சுப்பிரமணியத்துக்கு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். விவரம் பத்தாத வயது என்றெல்லாம் சொல்ல முடியாது. பக்குவம் ...
மேலும் கதையை படிக்க...
மது பிணமாகக் கிடந்தான் என்று ஆரம்பித்தால் எவனோ ஒரு மதுதானே என்று நீங்கள் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். அதுவே உங்கள் மகன் அல்லது உங்கள் கணவன் அல்லது உங்களின் காதலன் பிணமாகக் கிடந்தான் என்று தொடங்கினாலும் சோகத்தை ஏற்று அடுத்த வரிக்குச் ...
மேலும் கதையை படிக்க...
“அய்யோ! இப்போ பி.வி.ஆறுமுகம் க்ளாஸ்டா” “பேப்பர் கொடுப்பானா?” “இன்னும் திருத்தி இருக்க மாட்டான். அவன்கிட்ட ட்யூஷன் போற பசங்க பேப்பரை மட்டும் திருத்திட்டானாம்” “அங்கப்பனுக்கு தொண்ணூத்தி நாலு மார்க்” “நமக்கு எல்லாம் நாப்பது அம்பதுதாண்டா போடுவான்” “வவுறன் வந்துட்டான். யாரையாச்சும் கூப்ட்டு மொத்துவான் பாரு” “வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யா” “ம்ம்..உக்காருங்க” “நேத்து நடத்துன வெப்பவியல் ...
மேலும் கதையை படிக்க...
குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்
ஜாலியான சோகக் கதை
புரியாத விளையாட்டு
திருட்டுப்பசங்க
காசுக்கு வாங்கிய காதல்
எனக்கு வெட்கமாக இருக்கிறது
திருடர்களின் க்ளாஸிக் காலம்
லதாவின் இரண்டாவது கணவன்
தெறித்து விழுந்த கனவுகளின் கதை
ட்யூசன் டீச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)