எதிர்கால மாமனார்!

 

எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்.

அவர் நல்ல உயரம். உயரத்திற்கேற்ற பருமன். கறுத்த நிறம். ஆரோக்கியமான உடம்பு. ஐயனார் சிலை மாதிரி பார்த்தாலே பயப்படுகிற கம்பீரம்.

அவருக்கு, மிகவும் நெருக்கமான ஒருவர் மின்சாரத்துறையிலே உயர் பதவியில் இருப்பதாகச் சொன்னார். என்னிடம், அவர் காண்பித்த ஒரு துண்டுச் சீட்டில் மைலாப்பூர் முகவரி இருந்தது.
நானும், அவரும் மாநகரப் பேருந்தில் பயணம் செய்யத் துவங்கினோம்.

வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்கு பேச்சு,” இந்த சேதுராமன் யாருன்னு நினைச்சீங்க? அன்புக்கு கரும்பா ஒடிவான். வீம்புக்கு இரும்பா நிமிர்வான் இந்த சேதுராமன் ” என்று பேசிக்கொண்டே வந்தார். பேருந்து கூட்ட நெரிசல் சத்தத்தையும் தாண்டி அவர் பேசுவது கேட்டது.

” மாப்பிள, இப்ப நாம பாக்கப் போறோமே… இவன் சாதாரண ஆளில்லை. இந்த மெட்ராஸ் பட்டணத்திலேயே பெரிய என்ஜினீயராம். கவர்ன்மெண்ட் ஆபிஸர். கரண்ட்டாபிஸில் வேலையாம்”.

‘ சே! என்ன மனுஷன் இவரு. காதுக்குள்ளயே வந்து காட்டு கத்தல் கத்துறாரே ‘ எனக்கு எாிச்சலாக இருந்தது.

பேருந்தில் இருப்பவர்கள் எல்லோருமே எங்களையே பார்ப்பது மிகவும் என்னை வெட்கம் பிடுங்கித் தின்னது.

‘ இந்த மனுஷரிடம் எப்படிச் சொல்வது?’ மனசுக்குள் அடங்காத கோபம் வந்தது எனக்கு.

” மாப்பிள, இந்த சேதுராமன் யாருன்னு நினைச்சீங்க நான் படிக்கலனாலும், ஊர்ல கஷ்டப்பட்ட குடும்பத்துல பலபேத்த படிக்க வெச்சு அழகு பாத்தவனய்யா இந்த சேதுராமன்.நம்ம தேனி மாவட்டம், உப்பார்பட்டி கிராமத்துல, இந்த சேதுராமன எவனும் பல்லுமேல நாக்கப்போட்டு ஒத்த சொல்லு பேச முடியாது மாப்பிள ”

“மாப்பிள, நான் சொல்றத கவனமாக் கேளுங்க. தேனி ஆர்.எம்.டி.சி-யில எனக்கு வேலை கிடைச்சிருந்துச்சு. அப்போ டிரான்ஸ்போர்ட் தொழிற் சங்கத்துல சேதுராமன் வா்றான்டான்னா… அவனவன் கால் வழியா மூத்திரம் பெய்வான். இந்த சேதுராமன் மேல ஒரு தப்பு செஞ்சதா யாரும் சொல்ல முடியாது. எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டேன். அன்புக்கு கரும்பா ஒடிவான் இந்த சேதுராமன். எவனாவது அதிகாரம் செஞ்சான்னா இரும்பா நிமிருவான் இந்த சேதுராமன்.
பத்து வருஷம் தான் வேலை பாத்திருப்பேன். எனக்கு விவசாயத்து மேல தான் கண்ணா இருந்துச்சு. சட்டுன்னு வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம்னுட்டு எழுதிக்கொடுத்துட்டு, கலப்பையத்
தூக்கிட்டேன். மெட்ராசுல ஒவ்வொருத்தரு ஜோப்புலயும் பேனா இருக்குற மாதிரி, கலப்பையும், மாடும் தான் எனக்கு…

இப்பக்கூட இவன ஏன் பாக்கப் போறோம்ன்னா காஞ்சிபுரத்துல கல்யாணத்துக்கு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டு, அப்படியே ஒரு எட்டு உங்களையும் பாத்துட்டு போகலாமுன்னு தான் மெட்ராசுக்கு வந்தேன். சரி, வந்தது வந்துட்டோம் அவன் என்ன பாவம் செய்தான்? அவனையும் ஒரு எட்டு போயி பாத்துட்டு போவோம்னு மனசுல பட்டுச்சு, அதானாலே தான் நாம இப்போ அவன பாக்கப்போறோம்”

‘எனக்கு இந்த மனுஷரு மேல ஆங்காரம் பொத்துக் கொண்டு தான் வருது. இவருக்கு என்ன ஓட்ட வாயா? ஏன் இந்த பேச்சு? என்னமோ பேசுறதுக்காகவே பிறப்பு எடுத்தவரா. சே…இவரு ஊமையா பிறந்திருக்கலாம்’

“மாப்பிள, நாம பாக்கப் போறோமே இவன் படிச்சு என்ஜினீயரு ஆனது முழுக்க முழுக்க என்னோட வளர்ப்புல தெரியுமா? ராஜமாணிக்கம் மகன் இந்த சேதுராமன் தான் படிக்கல. ஆனா, என்னோட வளர்ப்புல எல்லாமே கெட்டி தான்.

என்னோட சொந்தப் பிள்ள மாதிரி தான் இவன். இவன் மெட்ராஸ் வந்து பல வருசமாச்சு.ஏதோ, அவசரமா கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதாயிடுச்சாம். இப்போ பிள்ளைக கூட பெரிய பெரிய பிள்ளைகளா வளர்ந்துட்டாங்களாம். இப்போ எனக்கே அவன அடையாளம் தெரியுதோ, என்னவோ? ஆனா, சும்மா சொல்லக்கூடாது என் மேல உசுரயே விடுவான் மாப்பிள. அவன் இன்னமும் என் கண்ணுக்குள்ளயே இருக்குறான் மாப்பிள்ள”

மயிலாப்பூர் லஸ்ல இறங்கிக் கொண்டோம்.

நடைபாதை எங்கும் பழைய புத்தக கடைகள். ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். டீ குடித்ததற்கு பணம் கொடுத்ததில் டீக்கடைக்காரர் கூடுதலாக பணம் எடுத்துக் கொண்டது குறித்து எனக்கு இன்னும் கோபம் அதிகமானது. டீக்கடைகாரா் இரண்டு டீக்கு அதிகமாக பணம் எடுத்துக் கொண்டது குறித்து அவரிடம் கேட்டதில், “நான் சரியாகத்தானே மீதிப் பணம் கொடுத்தேன்” என்று ஒன்றும் நடக்காதது போல் பதிலளித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது.

“உனக்கு கணக்கு தெரியுமா? தெரியாதா?”

மாமாவே முந்திக்கொண்டு பதில் சொன்னார்.

“மாப்பிள, நான் ரெண்டு டீ குடுச்சேன் மாப்பிள. இத்தூணூண்டு கிளாசு. அதுலயும் அரை கிளாஸ் டீ கொடுத்தா எவனுக்குப் பத்தும். அதெ நான் ரெண்டு டீயா குடிச்சிட்டேன் மாப்பிள”

நல்லவேளை, டீக்கடைகாரர் என்னை திட்டிய மெட்ராஸ் பாஷை மாமாவுக்கு புரிந்திருக்காது.

“மாப்பிள, நாம வீட்டுக்குத் திரும்பும்போது கபாலீஸ்வரா் கோயில் இங்க இருக்குதாமே அத ஒரு எட்டு போயி பாத்துட்டு போவோம் மாப்பிள”

ஒருவழியா தேடிவந்த முகவரியை கண்டுபிடிச்சாச்சு அது ஓா் அபார்ட்மெண்ட் ஆகும்.

இரண்டாவது தளத்தில் அவர் குடியிருப்பதாக அவரது பெயர்ப் பலகை தெரிவித்தது.

மாமாவின் பேச்சு இன்னமும் ஓய்ந்த பாடில்லை தான்.

லிப்டில் போகலாம் என்று தான் லிப்ட் பட்டனை பலமுறை அலுத்தியாகிவிட்டது. லிப்ட் இன்னமும் மூன்றாவது மாடியிலேயே இருந்தது.

“நாம இரண்டாவது தளம் தானே போகணும் வாங்க படியேறியே போயிடலாம்” என்றேன்.

“மாப்பிள, என்ன அவசரம் இப்போ. நாம இந்த லிப்ட்டுலேயே போகலாம் மாப்பிள. ஆசையா இருக்கு மாப்பிள” அவரைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்.

“யாருங்க?”- ஒரு பெண்மணி வந்திருந்தாள். விபரத்தைத் தெரிவித்ததும் அய்யாவிடம் சொல்வதாகக் கூறிவிட்டு, அருகில் இருந்த இருக்கையை காண்பித்து எங்களை அமரச்சொன்னார். சிறிது நேரத்தில் அதே பெண்மணி தான் எங்களுக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார்.

இருக்கையில் காத்திருந்து காத்திருந்து எங்களுக்கு இடுப்பு நிலைக் கொள்ளவில்லை. ஒருவரையும் காணவில்லை.

மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன்.

யாரது அதே பெண்மணி தான்.

“ஓ…நீங்களா அய்யா போன் போட்டிருந்தாா். பசங்கள காலேஜ்ல விட்டுட்டு, அப்படியே ஆபிசுக்கு போயிட்டாராம்”

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையில் மாமாவைக் காணவில்லை.

- தினமணி கதிர் (8.11.2015) 

தொடர்புடைய சிறுகதைகள்
நெளிந்து நெளிந்து வளைந்து நீண்டிருந்தது பொதுஜன வரிசை. ஆதார் புகைப்பட மையம் திறப்பதற்கு முன்னாலேயே காலங்காத்தாலே வந்து வரிசையிலே கடைசி ஆளா நின்றிருந்த லட்சுமியம்மாள் மெல்ல மெல்ல நகந்து இப்போது தான் புகைப்பட மைய வாசலைத் தொட்டிருந்தாள்! லட்சுமியம்மாளுக்கு முன்னாடி இன்னும் பத்து ...
மேலும் கதையை படிக்க...
மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீா்த்து, சற்று நேரம் மழை விட்டிருந்தது. இந்த மழையிலயும் அவங்கவங்க எப்படியெல்லாம் பொழப்பைப் பாக்குறாங்க! கொசுவத்திச்சுருள் பத்து ரூபாய். தீக்குச்சி தடிமத்துல மெழுகுவா்த்தி ஒண்ணு பத்து ரூபாய். பால் பாக்கெட் நூறு ...
மேலும் கதையை படிக்க...
அணிலுக்கு மனது சரியாயில்லை! விடிந்தால் பக்ரித் பண்டிகை. பண்டிகைதின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான். அவனது மனது முழுவதும் அந்த ஆடு பற்றிய சிந்தனை தான்! அணில் முகமதுவை எல்லோரும் அணில் என்று தான் அழைப்பார்கள். அணிலின் வாப்பா கறீம் பாய் இராமநாதபுரத்திலிருந்து தேடிப்பிடிச்சு பக்ரித் பண்டிகைக்காக வாங்கிவரப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்! கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன் செல்வம். ஒன்றக்கண்ணன் எங்க எல்லாருக்கும் வழுக்குப்பாறை என்றால் ரொம்பவும் இஸ்டம். எங்களின் குதூகலம். எங்களின் தேவதை. சந்தோஷத்தை வாரி வாரி வழங்கும் அற்புதம். ...
மேலும் கதையை படிக்க...
சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும் ஆகியிருக்கக்கூடாது. அம்மா...என்னுடன் சென்னையிலேயே நிம்மதியாக இருந் திருக்கலாம். என்னெ படிக்க வச்சு ....கல்யாணம் செய்து வச்சு... ஒரு தனியார் கம்பெனியில் டர்னர் வேலை கிடைத்ததால், அம்மா ...
மேலும் கதையை படிக்க...
ஆதார்
மாமழை போற்றுதும்!
அணில்,ஆடு,இரக்கம்!
ஞாபகம் வருதே!
உயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)