எண்ணிக்கை

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 10,823 
 

சாலமனின் வாழ்க்கை ஓர் நாடோடியைப் போலவே இருந்தது. இல்லை இல்லை; அவன் இருக்க வைத்தான்.

ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் ஊர் சுற்றிப் பொழுது கழிப்போர் மத்தியில்; தான்தோன்றியாய்த் திரிந்து, கருணையையே வாழ்வின் தவமாகக் கொண்டு; போகும் இடமெல்லாம் புன்னகையைத் தூவி விட்டவன் அவன்.

கோடி கோடியாய்ப் பணமிருப்பினும், மனதின் மகிழ்ச்சியையே மிகப் பெரிய சொத்தாக எண்ணியவன் அவன்.

பாரத தேசத்தின் முதல் பத்து செல்வந்தர்களில் ஒருவனாய் வந்த மறுநாளே, தன் மீதி வாழ்நாட்களை கழிக்க மட்டும் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு; மீதமுள்ள அனைத்தையும் சத்தமிலாமல் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும், நோய்வாய்ப்பட்டோரின் மறுவாழ்வுக்கும், வருங்கால அறிவியல் ஆராய்ச்சிக்கும் எழுதி வைத்து விட்டு; இன்னார் தான் இதைச் செய்தார் என்பதைச் சொல்லாமல்; தன் சாம்ராஜ்யத்தையே விட்டு உலகம் சுற்றக் கிளம்பியவன் அவன்.

அன்று அவனுக்கு வயது வெறும் முப்பத்தி ஆறு.

இருபத்தி ஏழு ஆண்டுகள்! நாடுகள் பல கடந்து, முகங்கள் பல கடந்து, தனக்குள் இருந்த சொர்க்கத்தை பூமியிலும் கண்டு விட மாட்டோமா என்று தேடி அலைந்தான்.

அந்தப் பழங்காலத்து சர்ச் வெறிச்சோடிப் போயிருந்தது.

ஓர் ஓரமாக குருமூர்த்தி வெறித்த கண்களுடன் அமர்ந்திருந்தான். அவனது நினைவுகள் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன.

பல வருடங்களுக்கு முன்பாக, இந்தியாவை விட்டுச் செல்லும் முன், சாலமன் அவனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

“இது இன்னைக்கு, நேத்து பிளான் பண்ணினது இல்லை குரு. நான் அனாதையா தெருவுல நின்னப்பவே நெனச்சது. எங்க அப்பா சாகறதுக்கு முன்னாடி சொன்னது என்ன தெரியுமா? மகனே, அம்மா இல்லாத உன்னை கஷ்டப்பட்டு டிகிரி படிக்க வெச்சுட்டேன். நானும் ஒரு வேலை இந்த பாழப்போன உடம்பை விட்டு போய்ட்டா, நீ துவண்டு போய் தோத்துடக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிகிட்டாரு. சினிமாக் கதை மாதிரி இருக்குல்ல? நெறைய தடவ நம்ம வாழ்க்கைல இருந்து தான் சினிமாவைக் காப்பியடிக்கறாங்க.”

“அன்னைக்கு முடிவு பண்ணினேன்! பணம் இருக்கறவன் என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா நான், இந்த பணத்தை என் கால் தூசிக்கு சமமா மதிக்கணும். என்னைக்கு நான் எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி ஒரு நல்ல நிலையை அடையறேனோ, அன்னைக்கு இந்த பணத்துக்குப் பின்னாடி போறதை விட்டுட்டு; உண்மையான அன்பைத் தேடித் போய்டுவேன். உலகம் பூரா சுத்தனும்டா! என்னை விட்டுட்டு ரெஜினா இன்னொருத்தனோட போனா. அவ போன கொஞ்ச நாட்களலயே நான் முன்னேற ஆரம்பிச்சுட்டேன். அவகிட்ட நிறைய எடுத்து சொன்னேன். கொஞ்சம் பொறுமையா இரு, ஒரு சின்ன பாதை கிடைச்சதுன்னா; நான் ஒரு பெரிய கோட்டையே கட்டிடுவேன்னு! அவ கேக்கல. செக்யூரிட்டி, செகிரிட்டின்னு சொன்னா; இன்னைக்கு செக்யூரிட்டி சர்வீஸ் மேனேஜர் பொண்டாட்டியா இருக்கா! நான் ஒன்னும் சினிமா ஹீரோ மாதிரி வருத்தம்லாம் படலையே! ஆனா, இப்போ அவ கூட இருந்துருந்தான்னா நல்ல இருந்துருக்குமோன்ன!

ு தோணுது. இருந்தாலும், நான் ரொம்ப சந்தோஷமா தான்டா இருக்கேன். நான் நூறு சதவிகிதம் நல்லவன் இல்லை. ஆனால், என்னால முடிஞ்ச அளவு என் தேடல்களையும், அடுத்தவங்க தேடல்களையும் சேர்ந்து தேடணும்னு ஆசைப்படறேன்.”

குருவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. டென்மார்க் நாட்டின் சிறிய ஊர்களில் ஒன்றான எபெல்டாப்டில் அமையப்பெற்ற தேவாலயம் ஒன்றினுள்ளில் தான் அவன் அமர்ந்திருந்தான்.

அறுபத்தி மூன்று வயதான சாலமனின் உடல் அங்கே இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவனைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. அவன் உதவி செய்தோர், அவனால் பலன் பெற்றோர், அவன் நாடோடியாய் இருந்த போதும் அவனை நாடியோர் எனப் பலர் இருந்தும்; அந்தப் பலருக்கும் அவன் இறந்த செய்தி தெரிந்தும்; ஒருவர் கூட வரவில்லை.

அவன் படிக்க வைத்த குருமூர்த்தியின் மகன் ரமேஷ்; ஓர் மிகப்பெரிய வங்கியின் ஐரோப்பிய கிளைச் செயலாளராக அருகில் இருந்த பிரான்சில் தான் இருந்தான்.

“அப்பா, அங்கிளுக்கு என்ன என்ன செய்யணுமோ செஞ்சுருங்க; பணம் அனுப்பிடறேன்” என்று போன் செய்தான்.

“உன் பணத்தை நீயே வெச்சுக்கோ. உங்க அம்மாவை சாகற வரைக்கும் காப்பாத்துன மாதிரி, என் நண்பனையும் எனக்கு அடக்கம் பண்ணத் தெரியும். நான் ஒன்னும் அவ்ளோ ஏழையாவும், தரம் கெட்டும் போய்டல. என் நண்பன் என்னை அப்படி இருக்க விடல. எனக்கும் ஒரு தொழில் வெச்சுக்குடுத்து, என்னை ஒரு சகோதரன் மாதிரி பாத்துகிட்டவன். நீ உன் வேலையைப் பாரு. நான் செத்தாக் கூட என்ன செய்யனும்னு முடிவு பண்ணி வெச்சுட்டேன். உன் தயவு தேவையில்லை” என்று கூறி தொலைபேசியைத் துண்டித்து விட்டான்.

பாதர் நிக்கோலஸ் அவன் அருகில் வந்து ஆங்கிலத்தில் பேசினார்.

“சாலமன் பத்தி நீங்க சொன்னதையெல்லாம் விசாரிச்சும், இன்டர்நெட்ல தேடியும் பார்த்தேன். நெறைய தகவல்கள் கெடச்சது. இந்த இருபத்தி ஏழு வருஷமா, காடு மலைன்னு சுத்தி; ஒரு துறவியோட வாழ்க்கை வாழ்ந்திருக்கார். அவர் ஆசைப்பட்ட மாதிரியே அவரது கண்களையும், கல்லீரலையும் தானம் பண்ணியாச்சு. மாரடைப்பு வந்ததால இதயத்தை குடுக்க முடியலை. இதெல்லாம் உங்களுக்கே தெரியும். இந்தச் சின்ன ஊர்ல வந்து அவர் இறந்ததை நான் பெரிய பாக்கியமா கருதறேன். அவரால பயன் பெற்ற யாருமே வரலையேன்னு வருத்தப்படாதீங்க. இந்த ஊர்ல எனக்குத் தெரிஞ்ச கடவுள் ஊழியர்கள் சிலர்கிட்ட விஷயத்தை சொன்னேன். அவங்கல்லாம் வந்துகிட்டு இருக்காங்க. வந்தவுடனே நாம அவரை அடக்கம் பண்ணிடலாம். திடமா இருங்க” என்று கூறிவிட்டு, குருவின் தலையில் ஆறுதலாய் கை வைத்து விட்டுச் சென்றார் அவர்.

பத்து நல்ல உள்ளங்கள் சாலமனின் இறுதிப் பிரார்த்தனைக்கு வந்திருந்தனர்.

மகாகவி பாரதியின் ரசிகனான சாலமனுக்கு, அவரைப் போலவே குறைவான; ஆனால் நல்லவர்களின் முன்னிலையில் இறுதிச் சடங்கு துவங்கியது.

“செத்தாலும் நீ நெனச்சத சாதிக்கறடா” என்று லேசாக சிரித்தபடியே எழுந்து சென்று பிரார்த்தனையில் கலந்தான் குருமூர்த்தி.

கவிதைப் பிரியனான சாலமனின் “சொர்க்கம்” என்ற தலைப்பு உள்ள கவிதை ஒன்றை, ஓர் குழந்தை ஆங்கிலத்தில் மெட்டமைத்துப் பாடியது.

“என்னோடு வா வா, என்னோடு வா வா நெஞ்சே!

சொர்க்கம் உன் பக்கம், சொர்க்கம் உன் பக்கம் நெஞ்சே!

எங்கேயும் போகாமல் நீ முன்னே மட்டும் செல்!

என்னென்ன பார்த்தாயோ எல்லாமே என்னிடத்தில் சொல்.

எவருமே உன்னை, யாருமே உன்னை; தடுக்க முடியாது.

யாராலும் உன்னையும், உந்தன் சுவடுகளைதயும் தவிர்க்க முடியாது.

எதுவமே உன் முன் நிற்காது.

நீ தான் உன் சொர்க்கம்! வா வா என் பக்கம்”

ஒலிப்பெருக்கியில் ஒலித்த அந்தப் பாடல் ஊரில் உள்ள மற்றோரையும் தன்னால் சர்ச்சினுள் அழைத்தது.

“நண்பனே! உனக்காக அந்த இறைவனே நல்ல உள்ளங்களைக் கூப்பிடறாரு! இந்த எண்ணிக்கையும் கூட உன் வாழ்க்கையோட இன்னொரு வரலாறு தான்!” என்று எண்ணியபடியே; சிரிப்பும் நெகிழ்வும் கொண்ட கண்ணீருடன்; அந்தப் பாடலில் தன்னையும் இணைத்துக் கொண்டான் குருமூர்த்தி.

Print Friendly, PDF & Email

4 thoughts on “எண்ணிக்கை

  1. ரொம்ப நல்ல கதை ராம்! உங்க கவிதைகள் & “அனல் அலைஞன்” தொடர் கதையை உங்க “தமிழ் ரைட்டர்ஸ்” பேஸ்புக் பேஜ்ல படிச்ச எனக்கு, இந்த கதை ஒரு டிபரென்ட் ஸ்டைல்லாத் தெரியுது. நல்ல மெசேஜ்! நல்லவங்க யாரும், எப்பவும் தனியா இருக்க மாட்டாங்க. கீப் இட் அப்!

    1. மிக்க நன்றி ப்ரியா! நீங்க என் பேஸ்புக் பக்கத்தை படிக்கறதே பெரிய விஷயம். இந்த கதைக்கு வேற ஆதரவு குடுத்துருக்கீங்க. உங்களை மாதிரி நல்லவங்களை ரசிக்க வெக்கற மாதிரி என்னுடைய எதிர்காலப் படைப்புகளும் இருக்கும். மீண்டும் ஒருமுறை நன்றி!

  2. அருமையான கதை! வெளியிலிருந்து பார்த்தால் மிகவும் எளிய கதையாகத் தெரியும் இது, ஆழமான உள்ளர்த்தங்களைக் உடையதாக இருக்கிறது. எனது உறவினர் ஒருவருக்கும் இதே போன்ற ஓர் நிலை ஏற்பட்டு; நான் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது, எனக்கு ஏற்பட்ட மனநிலையை குருமூர்த்தியின் பாத்திரம் பிரதிபலிக்கிறது. கடைசியில் சொல்லப்பட்ட அந்தக் கவிதையும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    1. மிக்க நன்றி திரு. சக்தி கணேஷ் அவர்களே! இந்தக் கதையில் சாலமன் கூறுவது போல, திரைப்படம் என்பதே நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கபடுவது போன்று; இந்தக் கதையும், நான் பார்த்த சில நிஜ மனிதர்களின் வலியைக் கற்பனை கலந்து சொல்ல எடுத்த முயற்சி தான். அந்தக் கவிதையை இந்தக் கதைக்காகவே எழுதினேன். உங்களின் பாராட்டுக்களுக்கு மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *