எண்ணங்கள்

 

ஹெட்கிளார்க் சுந்தரத்தின் டேபிள் மீது, பைலை பொத்தென்று வைத்தான் அட்டெண்டர்.
“”சார்… சாயந்திரம் டெஸ்பாட்சுக்கு அனுப்பணுமாம். மானேஜர் சொல்லச் சொன்னாரு.”
தன் கடமை முடிந்தது என்று, அவன் வெளியேற, சுந்தரத்திற்கு ஆயாசமாக இருந்தது.
இன்னும் இரண்டு மாதத்தில், ஓய்வு பெறப் போகிறார். பிறகு, வருமானமும் குறைந்துவிடும். ஆனால், வீட்டில் அதே செலவுதான் காத்துக் கொண்டிருக்கிறது. மகன் இன்ஜினியரிங் கடைசி வருஷம். கல்யாணத்துக்கு காத்து நிற்கும் மகள். மூன்று வருடமாக வரன் தேடுகிறார். எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆனால், வேலையிலிருந்து ரிட்டையர்மென்ட் வரப் போகிறது.
பார்டர்லைனில் பாஸ் பண்ணியிருக்கும் மகனுக்கு எப்படி வேலை கிடைக்கப் போகிறது. இன்னும் என்னென்ன பிரச்னைககளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை. செவ்வாய்தோஷம் அது, இது என்று ஏதாவது காரணம் காட்டி, மகளுக்கு வரும் வரனெல்லாம் தட்டிக் கொண்டு போகிறது.
இதில் ஒரே ஆறுதல் மனைவி சாரதா தான். “எதுக்குங்க… எல்லாத்துக்கும் இப்படிக் கவலைப்படறீங்க. கடவுளை நம்புவோம். நிச்சயம் எல்லாத்துக்கும் வழி பிறக்கும்…’
இருபத்தொன்பது வயதில் திருமணம். தாமதமாக பிறந்த குழந்தைகள். ஓய்வு பெறும் வயதிலும் பொறுப்புகள் குறையவில்லை.
எண்ணங்கள்கதவை திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தார். வீடே நிசப்தமாக இருந்தது. சாரதா எங்கே? பின்புறம் இருக்கிறாளா!
“”சாரதா… சாரதா…”
அவரின் அழைப்புக்கு மகள் நர்மதா தான் அடுப்படியிலிருந்து வெளிப்பட்டாள்.
“”அப்பா… அம்மா மாரியம்மன் கோவில் வரைக்கும் போயிருக்காங்க.”
“”அப்படியா… சரிம்மா. எனக்கு சூடா ஒரு டம்ளர் காபி கலந்துட்டு வாம்மா…”
“”சரிப்பா!”
உள்ளே செல்லும் மகளைப் பார்த்தார். துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி அழகாக இருக்கிறாள். வயது ஏறிக் கொண்டே போகிறது. கல்யாணத்திற்கு, சாரதா தன் சாமர்த்தியத்தால், நகைகள், வெள்ளிப் பாத்திரம் எல்லாம் சேர்த்து விட்டாள். மாப் பிள்ளைதான் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. அவரிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
காபி டம்ளரை அப்பாவிடம் கொடுத்த நர்மதா, சுவாமி அலமாரியை திறந்து விளக் கேற்றினாள்.
“”அருண் இன்னும் வரலையம்மா?”
“”ஆமாம்பா… காலேஜில் ஏதோ செமினார் இருக்குன்னு சொல்லிட்டு போனான். வர லேட்டாகும்ன்னு அம்மாகிட்டே காலையிலேயே சொன்னான்.”
இப்ப இருக்கிற காம்படிஷனில் இவன் வைத்திருக்கும் மார்க் எம்மாத்திரம். புற்றீசல் போல் இன்ஜினியரிங் கல்லூரிகள். தடுக்கி விழுந்தால், பி.இ., படித்தவர்கள் ஏராளம். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இவன் நல்ல இடத்தில் வேலை கிடைத்து உட்கார்ந்து, இவன் வாழ்க்கையை தீர்மானம் பண்ணி, இதெல்லாம் கடையேறப் போவது எந்தக் காலத்தில். யோசிக்க, யோசிக்க தலைவலிதான் வந்தது.
வெளிக்கேட்டை திறந்து கொண்டு அருணுடன் பேசியபடி, கையில் தேங்காய் பழ கூடையுடன் சாரதா வருவதைப் பார்த்தார்.
புன்னகை சிந்தும் முகம், சிறிதும் கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவள்.
“”என்னங்க, வந்துட்டிங்களா?”
கேட்டபடி மகனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.
“”அதனால, நீ ஒண்ணும் கவலைப்படாதே அருண். அறுபத்தைந்து பர்சென்ட் வச்சிருக்கே. காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கலைன்னு வருத்தப்பட வேண்டாம். எத்தனையோ வாய்ப்புகள் காத்திருக்கு. கொஞ்சமும் ஆர்வம் குறையாம, உன் திறமையை வெளிப்படுத்துற தகுதியோட வேலை தேடினால், நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும்.
“”இப்ப உனக்கு இருட்டிலே இருக்கிற மாதிரி பீலிங் இருக்கத்தான் செய்யும். ஆனால், உன்னை சுத்தி எத்தனையோ கதவுகள் இருக்குப்பா. சலிக்காம, ஒவ்வொண்ணா தட்ட ஆரம்பிச்சா… நிச்சயம் ஏதாவது ஒரு கதவு திறந்து, உனக்கு வெளிச்சம் கிடைக்கும். அந்த நம்பிக்கை உன் மனசில் இருக்கணும். என்ன புரியுதா? இப்ப உன் மனசு தெளிவாயிடுச்சி தானே.”
அம்மாவை பாசத்துடன் பார்த்தான் அருண்.
“”நீ சொன்னா எதுவும் சரியா இருக்கும்மா!”
“”சரி… இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு. அதுக்கு உன்னை தயார்படுத்திக்க. போய் முகம் அலம்பிட்டு வா. சூடா காபி கலந்து தரேன்…”
சொன்னவள் மகளிடம் திரும்பினாள்.
“”நர்மதா இங்கே வாம்மா…” அழைத்தவள் அர்ச்சனைத் தட்டில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் இட்டாள்.
“”இன்னைக்கு கோவிலில் ஒரு அம்மா சொன்னாங்க. கல்யாணம் தாமதமாவதும் நல்லதுக்குதான். வர்ற வரன்கள் எல்லாம் தட்டிப் போவது, ஏதோ நமக்கு அமையாம போச்சுன்னு வருத்தப்படக் கூடாது. கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்த வாய்ப்புகளை நமக்கு கொடுக்காமல் நழுவ விட்டிருக்கார்ன்னு நினைக்கணும்.
“”இதைவிட நல்லதாக நம்ம மனசுக்கு பிடிச்சதைப் போல் ஒரு வரன் அமையப் போகுதுன்னு நாம் நம்பணும்ன்னு சொன்னாங்க. அது, <உன்னைப் பொறுத்தவரை உண்மைன்னு நான் நம்பறேன் நர்மதா.
“”என் பொண்ணுக்கு இருக்கிற அழகுக்கும், அறிவுக்கும் அவளுக்கான ராஜகுமாரன் நிச்சயம் வருவான். உன் வாழ்க்கை சுபிட்சமா, சந்தோஷமாக இருக்கும் பாரேன். கூடிய சீக்கிரம் அந்த நாள் வரத்தான் போகுது.”
முகம் குங்குமமாக சிவக்க, கல்யாண கனவுகளுடன் அம்மாவை முகம் மலர பார்த்தாள் நர்மதா.
“”என்னங்க… காபி குடிச்சாச்சா, கோவிலில் கூட்டம். அதான் லேட்டாயிடுச்சி. வரும்போது அருண் வந்தான். அவனுடன் பேசிக்கிட்டே வந்தேன்.”
புன்னகையுடன் தன்னைப் பார்க்கும் மனைவியைப் பார்த்தார் சுந்தரம்.
“”என்னங்க… புதுசா பார்க்கிற மாதிரி அப்படிப் பார்க்கிறீங்க. உங்களுக்கென்ன இன்னும் இரண்டு மாதத்தில் ஓய்வு பெற போறீங்க. இனி அரக்க, பரக்க ஆபிஸ், வீடுன்னு அலைய வேண்டாம். மகனும் படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போயிடுவான். உங்க மகளுக்கும் நீங்க நினைச்ச மாதிரி நல்ல வரனாக அமைஞ்சு ஜாம், ஜாம்ன்னு கல்யாணத்தை நடத்தி முடிச்சிடுவீங்க. அப்புறம் என்ன… ஐயாபாடு ஜாலிதான். கோவில், குளம்ன்னு பொண்டாட்டியை கூட்டிகிட்டு சுத்தலாம். என்ன நான் சொல்றது… சரி தானே?”
தன்னை பார்த்து, மனம் நிறைந்து முகம் மலர சிரிக்கும் சாரதாவைப் பார்த்தார்.
அவர் மனதில் இருந்த கவலையெல்லாம், இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ள, சாரதாவின் மலர்ச்சி அவரையும் தொற்றிக் கொண்டது.
“”ஓய்வு பெற்ற பிறகு, எஜமானியம்மா என்ன விருப்பப்படறாங்களோ அதை செய்துக்கிட்டு, இந்த வீட்டின் ஒரு மூலையில் நிம்மதியா இருந்துட்டு போறேன்.”
நல்ல எண்ணங்கள் தானே, வாழ்க்கையை சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு போகிறது என்பதை மனைவியின் மூலம் உணர்ந்தவராக வாய்விட்டு சிரித்தார்.

- அக்டோபர் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
வேரில்லா மரம்
அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால் துடைத்தபடி வந்தாள். ""அப்பா, இந்த ப்ரோக்ராம் இன்னும் ஒரு வாரத்தில் முடித்தாகணும்'' லேப்டாப்பைத் திறந்து அதில் தலையைக் கவிழ்த்திருந்தார்கள் எட்டிப் பார்த்தாள். போஸ்ட்கவரில் ஏதோ ...
மேலும் கதையை படிக்க...
மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். ""என்னப்பா... நல்லா இருக்கியா... பார்த்து ரொம்ப நாளாச்சு... நானும் லாக்கருக்கு வரணும், பாங்குக்கு போகணும்னு அவர்கிட்டே சொல்லிட்டு இருக்கேன். நேரம் கிடைக்கலை.'' ""போன வாரம் கூட சார் பாங்க் வந்தாரே. ...
மேலும் கதையை படிக்க...
""அம்மா கதவை தாழ் போட்டுக்க. நான் வேலைக்கு கிளம்பறேன்.'' பரத் சொல்ல, கட்டு போட்ட காலை தாங்கியபடி நடந்து வந்தாள் அமிர்தம். அம்மாவை பார்த்த பரத்திற்கு மனம் வேதனைப்பட்டது. அப்பாவும், அம்மாவும் எந்த ஒரு ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கொண்டு வாழ்ந்துகொண்டு, பரத்தை ...
மேலும் கதையை படிக்க...
அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே கண்ணில் படவில்லை. எல்லோரும் புதியவர்களாக தெரிந்தார்கள். ""க்ளார்க் சபேசன், சிவராமனை பார்த்துப் புன்னகையுடன் அவரை நோக்கி வந்தார். ""சார், நல்லா இருக்கீங்களா. பார்த்து ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
மதங்களின் சங்கமம்!
""டாக்டர் சார்... கதவைத் திறங்க.'' வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், ""ஜோதி... வாசல்ல யாருன்னு பாரு.'' கதவைத் திறந்தாள் ஜோதி. ""அன்வர்பாய், கையில் பேரனை தூக்கியபடி நிற்க, அவருடன் இன்னும், நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ""அம்மா... டாக்டரை சீக்கிரம் வரச் சொல்லுங்க. ...
மேலும் கதையை படிக்க...
வேரில்லா மரம்
இருவரும் ஒன்றே
கனவு சாம்ராஜ்யம்
கடந்து போகும்
மதங்களின் சங்கமம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)