எண்ணங்கள் மாறலாம்!

 

மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி.
“”என்ன சுந்தரி, இரண்டு பேரும் கிளம்பியாச்சா?”
“”ஆமாம்…” அலுப்புடன் சொன்னபடி, கணவரின் அருகில் உட்கார்ந்தாள்.
“”சரி, நாமும் ஏதாவது சாப்பிட்டு… வாக்கிங் போய்ட்டு வரலாமா?”
“”என்ன பெரிசா சாப்பாடு… ஓட்ஸ், சீரியல், மப்பின், பிரெட் வகைகளை தான் வரிசையா வாங்கி, ப்ரிட்ஜில் உங்க மருமகள் வச்சிருக்காளே… அதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.”
“”எதுக்கு இப்படி அலுத்துக்கறே. பிரிட்ஜில் தோசை மாவு இருக்கு. தோசை ஊற்றி, இட்லி பொடி வச்சு சாப்பிட வேண்டியது தானே.”
எண்ணங்கள் மாறலாம்!“”எல்லாம் நம்ம நேரம்… என்னத்தைச் சொல்றது. மகன் வீட்டில் வந்து, இரண்டு மாசம் இருக்கலாம்ன்னு புறப்பட்டு வந்து, இப்படி உட்கார்ந்திருக்கோம். மருமகளுக்கு நம்ப மேலே, கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. அவங்களை பார்க்க, அவங்களோடு இருக்கத்தானே வந்திருக்கோம்ன்னு, கொஞ்சமாவது அக்கறை எடுத்து, ஏதாவது செய்யறாளா? ஏதோ, மூணாம் மனுஷங்க வந்த மாதிரி நடந்துக்கறா. காலையில் ரெக்கை கட்டிக்கிட்டு, ஆபீசுக்குக் கிளம்பறா. “ப்ரிட்ஜில் எல்லாம் இருக்கு. எடுத்துக்குங்க…’ன்னு சொல்லியதோட, அவ வேலை முடிஞ்சது. மத்தியான சமையலை, நானே செய்ய வேண்டியிருக்கு. ராத்திரியில் மிச்சம் இருக்கிறதை சாப்பிட்டுட்டு, படுக்கப் போயிடறா. இதெல்லாம் நல்லாவா இருக்கு!”
“”என்ன சுந்தரி, இதையெல்லாம் தப்பா எடுத்துக்க முடியுமா? ஏதோ, அவங்களால முடிஞ்சதை செய்யத்தானே செய்யறாங்க. நேத்து ராத்திரி கூட, வெஜிடபிள் பீசா, சிக்கன் பீசான்னு, வரும்போது, வகைவகையா வாங்கிட்டு வந்தாளே… அப்புறம் என்ன?”
“”புரியாமப் பேசாதீங்க. நீங்க இன்னும் உங்க மருமகளை சரியா புரிஞ்சுக்கலை. பையனை பெத்து, ஆளாக்கி, அவகிட்டே தாரை வார்த்துட்டோம். நல்ல சுகபோகமாக, அதுவும், அமெரிக்காவில் மகாராணி போல வாழறா. இந்த வாழ்வு, யாரால வந்ததுன்னு, நினைச்சு பார்க்கக்கூட அவளுக்கு நேரமில்லை. உட்கார்ந்து அன்பா, ஆசையா, ஒரு வார்த்தை பேசறது கிடையாது. எனக்கு நரகத்தில் இருக்கிற மாதிரி இருக்கு. எப்படா இரண்டு மாசம் முடியும், கிளம்புவோம்ன்னு இருக்கு.”
“”உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. உன் குணம் அப்படி. சரி, ஓட்ஸ் போட்டு குடிச்சுட்டு, வாக்கிங் போய்ட்டு வருவோம். மனசுக்கும், உடம்புக்கும் இதமா இருக்கும். நான் கிளம்பி ரெடியாகுறேன்,” எழுந்து உள்ளே சென்றார் சண்முகம்.
அடுக்கி வைத்தாற் போல், ஒரே மாதிரி காட்சி தரும் வீடுகள், அகலமான தெருக்கள். நடந்து செல்பவர்களுக்காக, இருபுறமும் தனியாக போடப்பட்டிருக்கும் நடைபாதைகள். கண்ணுக்கு குளுமையாக, எங்கும் பச்சை பசேலென காட்சி தரும் புல்வெளிகள். அழகழகு கலர்களில் பூத்துக் குலுங்கும் மரங்களின் அணிவகுப்புகள். அவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்தபடி, குளிர்காற்று வீச, கைகளை கோட் பாக்கெட்டில் நுழைத்து, மனைவி பின் தொடர நடந்தார் சண்முகம்.
“”சுந்தரி, இங்கே எல்லாம் ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கோடு இருக்கு பார்த்தியா. நம்ம ஊரில், இப்படி காலார நடக்க முடியுமா. பஸ், காருக்கு வழிவிட்டு, தெருவில் ஒதுங்க இடமில்லாமல், பார்க்குக்குப் போறதுக்குள்ளே, அந்த பத்து நிமிஷ நடையில், நாம் எவ்வளவு சிரமப்படுவோம்…”
“”ம்… இது ஒண்ணுதான் நாம் இங்கே கண்ட பலன். நிம்மதியா ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நடந்துட்டு வர்றோம்.”
“”ஏன் இப்படி சொல்றே… போன வாரம் சனி, ஞாயிறு உன் மருமகள், சிகாகோ கூட்டிட்டுப் போனாள். எல்லா இடமும் சுத்திப் பார்த்துட்டு வந்தது எவ்வளவு நல்லா இருந்துச்சு.”
“”ஆமாம்… மாமனார், மாமியார் அமெரிக்கா வந்தாங்க. எங்கேயும் கூட்டிட்டுப் போய் சுத்திக் காட்டலைன்னு, நாளைக்கு நாலு பேர் சொல்லக் கூடாதுன்னு அழைச்சுட்டுப் போனாங்க. அவ்வளவும் விரும்பியா செய்யறாங்க.”
“”உனக்கு எந்த விஷயமும் புரிய வைக்க முடியாது. நீ என்ன முடிவு பண்ணினியோ அதுதான் சரின்னு பேசுவே.”
சிறுசிறு தூரலாக மழை விழ ஆரம்பிக்க, “”என்னங்க மழை வருதே… வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்துட்டோம். மழையில் நனைஞ்சிடுவோம் போலிருக்கே.”
“”காலையிலிருந்தே காற்று சில்லுன்னு அடிச்சது… “வெதர் டெலிகாஸ்டில் இன்னைக்கு மழை இருக்கும்ன்னு சொல்லியிருக்காங்க. வெளியே போக வேண்டாம்…’ன்னு பையன் சொல்லிட்டு போனான். நான்தான்… மறந்துட்டு கிளம்பிட்டேன்.”
“”இப்ப என்னங்க செய்றது. பக்கத்தில் ஒதுங்கக்கூட இடமில்லை. வரிசையாக வீடுகள். எல்லாமே கதவு மூடியிருக்கு. வீட்டு வாசலில் போய் நின்னாதான், மத்தபடி நிக்க இடமில்லை.”
“”சரி… பரவாயில்லை. அந்த வீட்டின் முன்னால ஒதுங்க இடமிருக்கு. கொஞ்ச நேரம், அங்கே நிற்போம். மழை குறைஞ்சதும், வீட்டுக்குப் போகலாம்.”
சொன்னவர், சுந்தரியுடன் அந்த வீட்டின் கதவருகே, மழையில் நனையாமல் ஒன்றியபடி நின்றார்.
“”என்னங்க, குளிர் அடிக்குது. நானும், ஓவர்கோட் போடாம வெறும் ஸ்வெட்டர் மட்டும் மாட்டிக்கிட்டு வந்துட்டேன். இந்த சாரலில் நிக்க முடியலைங்க.”
குளிரில் நடுங்கினாள் சுந்தரி.
அவர்கள் நின்ற வீட்டின் கதவு திறக்கப்பட, இருவரும் திரும்பிப் பார்த்தனர். கதவருகில் நின்ற பெண், அவர்களை பார்த்தாள். பார்த்தால் இந்தியப் பெண் போல் தெரிய, “”நாங்க இங்கே பக்கத்தில் இருக்கிறோம். நடைப்பயிற்சி வரும்போது, மழை வந்ததால், கொஞ்சநேரம் நின்னுட்டு போகலாம்ன்னு… உங்களுக்கு ஒண்ணும்
தொந்தரவில்லையே…”
சண்முகம் ஆங்கிலத்தில் சொல்ல, “”நீங்க தமிழகத்தைச் சேர்ந்தவங்களா, உள்ளே வாங்க,” புன்னகையுடன் அவள் தமிழில் பேச, முகம் மலர்ந்தாள் சுந்தரி. அமெரிக்கா வந்து, நம் நாட்டு மனுஷங்களைப் பார்க்கும் போது, எவ்வளவு சந்தோஷமா இருக்கு.
“”நீயும் தமிழகத்தை சேர்ந்தவளாம்மா.”
“”ஆமாம்… சேலம். நீங்க மழையில் நனையாம, முதலில் உள்ளே வந்து உட்காருங்க.”
அவர்களை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தாள்.
“”நான் சென்னையில் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியராக இருக்கேன். இரண்டு மாதம், மகன் வீட்டில் இருக்கலாம்ன்னு வந்திருக்கோம்.”
“”அப்படியா… ரொம்ப சந்தோஷம். என்ன சாப்பிடறீங்க. மழைக்கு சூடா காபி எடுத்துட்டு வர்றேன்.”
“”அதெல்லாம் வேண்டாம்மா. நீ இவ்வளவு தூரம் உபசரிப்பதே பெரிய விஷயம். மழை விட்டதும் நாங்க கிளம்பறோம்.”
அதற்குள் உள்ளிருந்து இருமல் சப்தம் கேட்க, “”ஒரு நிமிஷம்… உடல் நலமில்லாத என் மாமியார் இருக்காங்க. அவங்களுக்கு மருந்து கொடுத்துட்டு வர்றேன்.”
வேகமாக உள்ளே சென்றாள். உள்ளே வயதான பெண் மணியோடு, அவள் ஆங்கிலத்தில் உரையாடுவது, அவர்கள் காதில் விழுந்தது. சற்று நேரத்தில் கையில் காபி கப்புடன் வந்தாள்.
“”எடுத்துக்குங்க.”
“”உனக்கெதுக்கும்மா சிரமம்…” புன்னகையுடன் இருவரும் வாங்கிக் கொள்ள, அந்தப் பெண்ணைப் பார்த்தாள் சுந்தரி.
“”உன் மாமியாருக்கு உடம்பு சரியில்லையா?”
“”ஆமாம்… ஒரு வாரமாக பீவர். நல்லா சுறுசுறுப்பா இருப்பாங்க. அவங்களுக்காகத்தான் ஒரு வாரம் வேலைக்கு லீவ் போட்டுட்டு வீட்டில் இருக்கேன்.”
“”ஊரிலிருந்து வந்திருக்காங்களா?”
“”இல்லம்மா… அவங்க இங்கேதான் இருக்காங்க. இந்த நாட்டைச் சேர்ந்தவங்க. எனக்கு பெத்தவங்க இல்லை. ஒரு காப்பகத்தில் வளர்ந்தேன். மேல்படிப்புக்கு அமெரிக்கா வந்து, இங்கேயே வேலை கிடைச்சு, என்னோட வேலை பார்த்த அமெரிக்கரை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு நாலு நாத்தனார்கள். எல்லாரும் கூட்டுக் குடும்பமாக ஒண்ணா இருக்கோம். தாய், தந்தை யாருன்னு தெரியாம, தனி மனுஷியாக வளர்ந்த எனக்கு, என் கணவரோட சொந்தங்களை, என் உறவுகளாக நினைச்சு வாழ்ந்துட்டிருக்கேன். என்னவோ தெரியலை. உங்களை என் பெத்தவங்களாக நினைச்சு சொல்லணும்ன்னு தோணிச்சு… அதான் சொல்றேன்.”
“”நீ சொன்னதைக் கேட்க சந்தோஷமா இருக்கு. நீ இதே நிறைவுடன் நல்லபடியா வாழணும்,” மனதார வாழ்த்தினார் சண்முகம்.
சுந்தரி மனதில், தன் மருமகளை நினைத்து கோபம் வந்தது. “எவ்வளவு நல்ல குணம் இவளுக்கு…’ என்று மனதில் நினைத்தாள்.
“”என்னம்மா, எப்படி என்னால இவ்வளவு பெரிய குடும்பத்தில், ஒற்றுமையா, சந்தோஷமா இருக்க முடியுதுன்னு பார்க்கிறீங்களா? அன்பு பாசங்கறது, நம் மனசில் இருந்து வர்றது. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் மாதிரி. அதை நான் புரிஞ்சு வச்சிருக்கேன். வஞ்சனையில்லாம அவங்க கிட்டே அதை கொடுக்கிறேன். அது, அப்படியே எனக்குத் திரும்பக் கிடைக்குது.
“”என் மாமியார் என்ன சொல்வாங்க தெரியுமா, “உன்னோட அன்பான உபசரிப்பு, கணவர் குடும்பத்தை, உன் உறவுகளாக உண்மையான அன்போடு நேசிக்கிற பாங்கு, இதெல்லாம், இந்திய வம்சாவழியில் வந்ததால், உன்கிட்டே அதிகளவில் இருப்பதை என்னால புரிஞ்சுக்க முடியுது. எங்கள் இனப்பெண் மருகளாய் வந்திருந்தால் கூட, இந்த அளவு எங்கள் குடும்பத்தில் ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டாள். மனசு விட்டுச் சொல்றேன். அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தால், நான் ஒரு இந்திய தாய்க்கு மகளாகப் பிறக்கணும். உங்க பண்பாடு, கலாசாரத்தோடு, அன்பான இந்தியக் குடும்பத்தில் வாழணும்ன்னு ஆசைப்படறேன்…’ன்னு சொல்வாங்க.”
மழை நிற்க, அவளிடம் விடைபெற்று, வீடு நோக்கி நடந்தனர்.
“”வீட்டுக்குப் போய் கார முறுக்கு செய்யணும். லதா நேற்று இந்திய கடையில் வச்சிருந்த முறுக்கை பார்த்துட்டு, மதன்கிட்டே, “எனக்கு முறுக்கு ரொம்பப் பிடிக்கும். நாலு முறுக்கு வச்சுக்கிட்டு, ஐந்து டாலர் போட்டிருக்கான்…’ன்னு சொல்லிட்டிருந்தா. வீட்டிலே எல்லா சாமானும் இருக்கு. அவங்க ரெண்டு பேரும், ஆபீஸ் விட்டு வர்றதுக்குள் செய்துடணும். லதா பார்த்தா சந்தோஷப்படுவா.”
மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
“”ஆமாங்க. தாய், தகப்பன் யாருன்னு தெரியாம வளர்ந்து, இன்னைக்கு அன்னிய நாட்டிற்கு மருமகளாக வந்து, அந்தக் குடும்பத்தோடு எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கா. அவளோட அன்பான அணுகுமுறையும், பாசமும்தானே அவங்க மாமியாரை, நம் தேசத்தை நேசிக்க வச்சுது. தானும் ஒரு இந்தியப் பெண்ணாகப் பிறக்கணும்ன்னு ஆசைப்படறாங்க. ஆனா, நான், ஒரு இந்தியத் தாயாக இருந்தும், கடல் கடந்து இருக்கிற பிள்ளைகளை பார்க்க வந்திருக்கேன்னு, கொஞ்சமும் நினைக்காம, மனசு பூரா வெறுப்பை சுமந்துக்கிட்டு, என் மருமகளை, ஒரு அன்னிய மனுஷியா பார்த்துட்டு இருக்கேன். என்னை நினைச்சு நானே வெட்கப்படறேன். என் மகன், மருமகளோடு இருக்கிற, இந்த கொஞ்ச நாட்களும், அவங்க மனசு சந்தோஷப்படற மாதிரி இருந்துட்டு போகணும்ன்னு நினைக்கிறேன். இனி எவ்வளவு நாள் கழிச்சு, நாம் ஒண்ணு சேரப்போறோம்ன்னு தெரியாது,” என்றாள்.
தேவையில்லாம, மனதில் இவ்வளவு நாட்களும் இருந்த பகைமை மறந்து, உண்மையான அன்போடும், பாசத்தோடும் பேசும் மனைவியைப் பார்த்தார்.
மழையை வரவழைத்து, தன் மனைவியின் மனதை மாற்றிய வருண பகவானுக்கு, அவர் மனம் நன்றி சொன்னது.

- ஜூலை 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
நிறைவு
""சுஜி... துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.''கண்களை கசக்கியபடி வரும் மகனை கையில் பிடித்தபடி வந்தாள் சுஜி.""ஏன்... என்ன ஆச்சு. எதுக்கு அழறான்.''""ம்... முதுகில் ரெண்டு வச்சேன். ...
மேலும் கதையை படிக்க...
புரிந்து கொள்ளும் நேரம்!
இரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, "டிவி' பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம். ""பரணி... உன் பெரியம்மா, அவங்க சொந்தக்காரங்களோடு சேர்ந்து, ஷீரடி, பண்டரிபுரம் எல்லாம் அடுத்த மாதம் போகப் போறதாக சொன்னாங்க. நானும், அப்பாவும் ...
மேலும் கதையை படிக்க...
வடிகால்
மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், ...
மேலும் கதையை படிக்க...
முடிவு உன் கையில்
""சுகந்தி சாப்பிட வாம்மா...'' உள்ளிலிருந்து அம்மா கூப்பிட, ஹாலில் உட்கார்ந்து திருத்திக் கொண்டிருந்த பேப்பர் கட்டுகளை, மேஜை மேல் வைத்தவள் எழுந்து கொண்டாள். வளைந்த இடதுகாலை லேசாக சாய்த்து, சாய்த்து நடந்து உள்ளே சென்றவள், டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள். அவள் தட்டிலிருந்த சப்பாத்தியை குருமாவில் ...
மேலும் கதையை படிக்க...
மாரி ஆத்தா
துபாயிலிருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் மகனிடம், காலில் கட்டுடன் விந்தி, விந்தி நடந்து வந்தாள் அகிலா. ""பரணி... என் மனசுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைச்சுடுச்சிப்பா... வேலையில்லாம கஷ்டப்பட்ட உனக்கு, துபாயில் நல்ல வேலை கிடைச்சு, இந்த இரண்டு வருஷத்திலே ...
மேலும் கதையை படிக்க...
நிறைவு
புரிந்து கொள்ளும் நேரம்!
வடிகால்
முடிவு உன் கையில்
மாரி ஆத்தா

எண்ணங்கள் மாறலாம்! மீது ஒரு கருத்து

  1. A.George Alphonse says:

    Very nice story. It touched my heart very deeply and I am very proud of my mother India culture,heritage and customs. I always prays Almighty to give me rebirth in India only.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)