Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

எட்டு மாதங்கள்

 

சே! எவ்வளவு நேரமென்று இந்தப் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருப்பான் மனுஷன் …”

ஒரு மணித்தியாலமாகப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் அலுத்துக்கொண்டார். அவர் அலுத்துக்கொண்டதையோ, பஸ் வந்து நின்றதை யோ கவனிக்காமல் தில்லைநாயகம் சிந்தனையில் மூழ்கி நின்றான் … கூட்டம் முண்டியடித்துக்கொண்டு – ஸ்ஸிற் குள் நுழைய முனைந்தது.

“ஏய், இறங்கட்டுமே! என்னையா அவசரம் உயிர்போ றதுபோலே …!”

கொண்டக்டர் அதட்டினார். கூட்டத்திற்கு இதற்கெல் லாம் மசிந்துபோக வேண்டும் என்ற நினைப்புத் தோன்ற வில்லை. ஆறுதலாக ஏறுவதிலும் பார்க்க முண்டியடித்துக் கால் இடறி விழுந்து, ஏறுவதில்தான் பெருமை …

“எங்கே நீங்கள் போறியள், பருத்தித்துறைக்கா?” உணர்விலிருந்து விழித்தான் , தில்லைநாயகம். “இல்லை … மந்திகைக்கு.”

வார்த்தைகளை அவன் முடிக்கவில்லை. நினைவுகள் அவனை ‘எங்கோ’ எல்லாம் இழுத்துச் சென்றுகொண் டிருந்தன …..

‘கடக.மா’ என்ற பேரிரைச்சலுடன் ஆமை வேகத்தில் அசைந்து செல்லும், யாழப்பாணத்திற்கென்றே அமைந்த பிரத்தியேகமான பஸ் …….. பருத்தித்துறை ‘மார்க்கெட்’

விய பாரத்திற்காகப்போகும் பெண்களின்’ கத்தரிக் காய், வாழைக்காய்’ வியவகாரங்கள் … கொன்டக்டரின் ‘அங்கை இரு; இங்கை இரு’ என்ற அதட்டல்கள் … எது வுமே தில்லைநாயகத்தினைக் கவரவில்லை. அப்படி எதிலுமே ஒட்டிக்கொள்ளாத மனோநிலை ….

அன்று விடிய அவன் கிளிநொச்சியில் இருந்து ‘போன அலுவலை’ முடித்துக்கொண்டு, மிகுந்த பசிக்களை யுடன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். வீட்டிற்கு வந்தவ னுக்கு வீட்டின் அலங்கோல மான நிலை, திகைப்பைக் கொடுத்துவிட்டது.

எங்கும் பொருட்கள் இறைந்து கிடந்தன …. போட் டது போட்டபடியே. சமையல் அறையிற் கவனிப்பாரற் றுக் கிடந்த உலை …. சுளகிலே புடைக்கப் போட்டபடியே கிடந்த அரிசி …. என்ன நடந்கதோ?—

ஒருவேளை

தில்லை நாயகத்தின் திகைப்பு நீங்கி அவன் கண்களில் இராசத்தின் உருவம் தெரிந்தது …. அவனுக்குத் தெரிந்த வரை அவள் எட்டு மாதக் கர்ப்பிணி …

“அவளுக்குத்தான் திடீரென்று ஏதும்…?” “இராசம்!…. இராசம்…!”

வாயுழைய அவன் கத்தினான் … பதில் இல்லை.

சலிப்போடு சங்கடத்தைப் பூட்டிக்கொண்டு அவன் வெளிக்கிடவும், “மந்திகைக்கு” என்ற எதிர்க் குரலைக் கொடுத்துக்கொண்டே பக்கத்து வீட்டுச் செல்லாச்சி தோன்றவும் சரியாக இருந்தது.

அவ்வளவுதான். விழுந்தடித்துக்கொண்டு அவன் ஓட எத்தனித்தபோது “ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது”

“என்ன! ஆண் குழந்தையா?”

தில்லைநாயகம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அவனு டைய இராசம் பெற்றுவிட்டாளா? அப்படியானால் …… அந்தக் குறை மாதக் குழந்தை உயிரோடு இருக்காதே.. ஐயோ . அவளின் அந்த அன்புச் செல்வம் உயிரோடு இருக்காதா…?

தலையைக் கைகளால் பிடித்துக்கொண்டே ஆவலு டன் பக்கத்துவீட்டுச் செல்லாச்சியை நோக்கினான். அவ னுடைய கண்களில் இனம் தெரியாத திகிலின் சாயல் … விஷயங்களை அறிந்துவிடவேண்டுமென்ற துடிப்பு …..

“என்ன அக்கை சொன்னனீங்கள்? இராசம் பெத் துப்போட்டாளோ? எப்ப …?”

அவன் தயங்கினான்.

செல்லாச்சி அவனை ஏற இறங்க வைத்துப் பார்த் தாள். அப்படி அவள் ஒரு மாதிரிப்’ பார்த்தால் விஷ யம் ஏதாவது எக்கச்சக்கமாக இருக்கும் என்று சொல் லாமலே தெரியும். தில்லைநாயகத்துக்கோ அவளுடைய முகபாவனைகளை ஆராய்ந்துகொண்டிருக்கப் பொறுமை யில்லை. அவனுடைய இராசத்துக்கு எப்படி இருக் குதோ …… ?

”நீ இப்பவோ வாறாய்? ஏன் அவசரம்?”

செல்லாச்சி விஷமச் சிரிப்புச் சிரித்தாள். இந்த மனுஷி எப்பொழுதுமே இப்படித்தான். எதையும் சொல் லாமற் கொள்ளாமல் அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுப் பிராணனை வாங்கிக்கொண்டு …. மற்றவனுடைய மன நிலையை உணராத ஜென்மங்கள்!

“இப்பதான் வாறன். இங்கை நிக்க நேரமில்லை, நான் வரப்போறன். அவை எப்ப மந்திகை ஆசுப்பத்திரிக் குப் போனவை”

செல்லாச்சி அக்கை முகத்தைச் சுளித்துக்கொண்டே தில்லைநாயகத்தைப் பார்த்தாள்.

”அவை முந்தநாள் போட்டினம். போன அண்டைகே இராசம் பெத்துப்போட்டாள் பொடியும் ‘மொழு மொழு’ என்று ஒன்றும் குறைவில்லாமல் உயிரோடை இருக்குது! ஐஞ்சரையாம் இறாத்தல் .! எனக்கு அப்ப வே தெரியும்…… அவள் இரண்டு மூன்று மாதம் முந் திப் பெறுவள் எண்டு ! உன்னைத்தான் பேர் பதியக் காத்துக்கொண்டு இருக்கினம் . ! கெதியாக ஓடு!”

கண்ணைச் சிமிட்டி அபிநயத்தோடு அவள் சொன்ன இந்தக் கதை-?

ஏதோ நெஞ்சில் வந்து பிறாண்டியது. இந்தப் பாழாய்ப்போன நினைவுகளில் இருந்து விடுபட முடியாமல் திணறினான். திகைத்தான் ….

அப்படியும் இருக்குமோ?

“எனக்கு அப்பவே தெரியும் ! அவள் இரண்டு மூன்று மாதம் முந்திப் பெறுவள் எண்டு ….! உன்னைத் தான் பேர் பதியக் காத்துக்கொண்டு இருக்கினம். கெதி யாக. ஓடு !”

வழியில் யாரோ மறித்து என்னவோ கேட்டதும் ஞாபத்துக்கு வந்தது.

”எட்டுமாதம் கலியாணம் கட்டி! அதுக்குள்ள அப்ப னாகி விட்டியே …! என்னடா லிஷயம்?”

தில்லைநாயகத்தின் மனத்தில் என்னவோ ஒன்று ‘தைத்து’ இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித கவ லையைத் தோற்றுவித்தது ….

அவனுக்கு மகன் பிறந்திருக்கின்றானாம்!

அதுவும் எட்டு மாதத்தில்; ஐந்தரை இறாத்தலில் உயிரோடு!

ஏன் அந்தப் ‘பிண்டம்’ உயிரோடு இருந்து தொலைக் கின்றது. பிறந்த உடனேயே செத்துத் தொலைந்திருக் கக்கூடாதா? அவனுக்கு ஒரு அவமானத்தை உண்டாக்க வேண்டுமென்று பிறக்கும் போதே கங்கணம் கட்டிக் கொண்டு வந்து பிறந்திருக்கிறதே, களிசறை…. பிறந்த உடனே செத்துப்போயிருந்தால் மூடி மறைத்திருக்கலாம் … ஊருடைய வாய்க்கும் வேலை இருந்திருக்காது.” எனக்கு அப்பவே தெரியும் …! கெதியாக ஓடு”

அப்படியானால்?

ஐயோ அப்படியும் நினைப்பதா? அதுவும் இராசத் தையா? அது அவன் குழந்தை இல்லையா?

அது எப்படி முடியும்?

எட்டு மாதத்தில் ஒரு குழந்தை, ஐந்தரை இறாத்தல் உயிரோடு எப்படிப் பிறக்கமுடியும்?

தில்லைநாயகம் திணறினான். இராசத்திற்கு மாலையிட்ட நாளில் இருந்து இன்றுவரை சரியாக எட்டு மாதங்கள் … அதற்குள் அவன் தந்தையாகி விட்டான் ..! இனி ஊரென்ன சொல்லும்?

தில்லை நாயகத்தை இராசத்துக்கு மணம் முடிக்கப் பேச்சு வார்த்தை நடந்தபோது, அவனுடைய காதிலும் இரண்டொரு வார்த்தைகள் வந்து விழத்தான் செய்தது.

“இராசம் அவ்வளவு நல்ல நடத்தையில்லா தவள் …! அவளுக்கும் பக்கத்து வீட்டு வேலாயுதம் வாத்தியாரோ யாரோவாம், அவருக்கும் தொடர்பாம் …!”

தில்லை நாயகம் இந்தக் கதைகளையெல்லாம் பொருட் படுத்தவில்லை. இராசத்தின் அழகு அவனை அடிமையாக்கி விட்டது. அவளோடு வாழ்ந்த இந்த எட்டு மாதங்களில் அவளுடைய குணம் அவனுக்கு நன்கு பிடித்துப்போன ஒன்று. அவனோடு வாழ்ந்துபோன இந்த நாட்களில் அவள் குணத்தில் – நடத்தையில் எந்தவிதத்திலாவது குற்றம் குறையைக் காண அவனால் முடியவில்லை… இராசமென் றால் அவனுக்கு உயிர். அவள் கண்கள் கலங்கினால், அவன் கண்களே கலங்கிவிடும் . செல்லமாக அவளைக் கண்டிக் கக்கூட அவனுக்கு மனம் வராது. அதற்கு இடமும் இருக் காது. அப்படிப்பட்டவனுக்கு இன்றைக்கு அவமானம்!

”நீ இரரசத்தை ஏன்ரா கல்யாணம் செய்ய வேணும்? நடத்தையும் நல்லாயில்லை, எண்டு பேசுகினம்…! கொம் மான்ரை பொடிச்சி கண்ணெதிரிலை வளர்ந்து நிக்கயிக்கை, ஆரோ ஒரு பிறத்தியாளைக் கலியாணங் செய்யவேண்டு மென்று நிற்கிறியே…?”

அப்பொழுது தாய் மறுத்தாள். அவன் -? ”உப்பிடித்தான் ஊர் ஒன்றைப் பத்தாகச் சொல்லும். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு என்ன வேலை வெட்டியில்லையோ? நீ சும்மா உன்ரை அலுவலைப் பார் …” இப்படிச் சொல்லி இராசத்தை மணந்த அவ னுக்கு

இனி ஊரிலே கண் முழிக்க முடியாத நிலை. நாலுபேர் நாலுவிதமாகக் கதைப்பார்கள். அட! பாழாய்ப்போன அந்தக்குழந்தை செத்துத் தொலைந்திருக்கக்கூடாதோ?

அதை உருவாக்கிய பெருமை வேலாயுத வாத்தியாருக்கு! பெயர் வைக்கிற உரிமை தில்லைநாயகத்துக்கா?

“எனக்கு அப்பவே தெரியும்…..! உன்னைத்தான் பேர் பதியக் காத்துக்கொண்டு இருக்கினம் …! கெதியாக ஓடு!”

செல்லாச்சி அக்கை சிரிப்பதுபோல மனப்பிரமை. என்ன…? யாரோ உருவாக்கிய பிள்ளைக்காக அவனா பெயர் பதிவது? அந்தக் குழந்தைக்குத் தந்தையென்று, அவனா கைச்சாத்திடுவது?

“இது ஒருக்காலும் முடியாது – முடியவே முடியாது…… இராசம் தூ! – நடத்தை கெட்டவள்! இன்றோடு பந்தம் பாசம் அத்தனையும் அறுந்தது… !”

தில்லைநாயகத்தின் தலை டங்கென்று ‘ஷீட்’ விளிம்பு டன் மோதியது…. திடுக்கிட்டுக்கண் விழித்தான். உலகமே மங்கி அவன் எங்கோ ஒரு இனந்தெரியாத உலகத்தினை நோக்கி ஓடிப்போவது போலவும், அவனைப் பார்த்து யார் யாரோ, ”எனக்கு அப்பவே தெரியும் ..! பேர் பதியக் கெதியாக ஓடு!” என்று கெக்கலி கொட்டிச் சிரிப்பது போலவும், ஏதோ பலவித எண்ண ங்கள் …..

அவனுடைய கவலையை அறியாமல், எதிர்க்காற்றைக் கிழித்துக்கொண்டு பஸ் ஆடி அசைந்து, நின்றும் நில்லாம லும் ஓடிக்கொண்டிருந்தது… யார் யாரோ ஏறினார்கள். இறங்கினார்கள். இதையெல்லாம் அவன் கவனிக்கவில்லை. எல்லாம் போகிறபோக்கில் நடந்துகொண்டிருக்கிறது.

தில்லைநாயகம் பஸ்சுரையை ஆராய்ந்துகொண்டிருந் தான்.

அவனுடைய கண்களிலே ‘மொழு மொழு’ என்றிருக் கும் அந்த எட்டு மாதக் குழந்தை… அட , அப்படிச் சொல்வதே தப்பு… யாருக்கோ பிறந்த அந்த நிறைமாதக்குழந் தை . அதற்குப் பெயர் பதிய அவன் போப்க்கொண்டிருந் தான். அந்த உரிமை அவனுக்கு….!

“எனக்கு அப்பவே தெரியும்…! கெதியாக ஓடு!”

“என்ன அண்ணை துலையாலேயோ?”- யாரோ யாரை யோ கேட்கும் கேள்வி தில்லைநாயகத்தின் செவிப்பறையிலும் மெல்லிதாக வந்து அதிர்ந்தது…

“என்ன தம்பி செய்யிறது…? அவளை ஆசுப்பத்திரி யிலை கொண்டுபோய் விட்டு விட்டு வாறன் …. அங்கை ஆரோ ‘ஒண்டு’ பெத்துப்போட்டுச் செத்துப்போய்க்கிடக் குது …! இன்னும் அவளின்ரை பிரியன் வரவில்லையாம்…! இவள் பயந்து சீவனை விடுகின்றாள் ….. ! பயப்படாதே என்று தேறுதல் சொல்லிவிட்டு வாறன்!”

தில்லைநாயகம் திடுக்கிட்டுவிட்டான். அவனுடைய இதயத்திலே யாரோ சாட்டை கொண்டு அடிப்பதுபோ லிருந்தது. பஸ் அவனையும் கொண்டு மந்திகையைத்தாண் டிச் சென்றுகொண்டிருந்தது. அவனோ இறங்கும் இடத்தை மறந்து போய்விட்டான் ..!

“ஐயோ! அந்தப் பெண் என் இராசமாகத்தான் இருக்கவேண்டும். செத்துப் போயிருப்பாளோ? … வெல்லனில் பிள்ளையாரே! நீ தான் காப்பாற்ற வேணும் …! அவள் சுகமாயிருந்தால் காவடி எடுப்பேன் ! அவள் சாகக்கூடாது…!”

“ட்ரிங் ட்ரிங்…”

ஓயாமல் பஸ் மணி அலறியது. பட்டனை விசையாக அழுத்திக்கொண்டு கால்பாவாமல், புழுப்போல இறங்கத் துடித்துக்கொண்டிருந்தான், தில்லைநாயகம்:

கொண்டக்டர் ஏதோ நினைப்பு வந்தவனாய் உறுமி னான். “எங்கே போகவெண்டு திக்கற் எடுத்தனி ….. ? எங்கே திக்கற்றை எடு….”

“மன்னிச்சிடு தம்பி. மந்திகைக்கு எண்டு எடுத்தன்! மறதியிலை இடம் போயிட்டுது!”

பஸ் சரிவர நிற்பதற்கு முன்னரே, கொண்டக்டரின் பதிலை எதிர்பாராமலே தில்லைநாயகம், பஸ்ஸில் இருந்து குதித்தான். அவனுக்கு ஆறுதலாக இறங்குவதற்கே பொறுமை இருக்கவில்லை!

“இப்படிப்பட்ட பைத்தியங்கள் ஏறி எங்களுக்கு ஒரே தொல்லை… பட்டிக்காட்டான்கள் …! எங்கே ஏறு றது, எங்கே இறங்கிறது எண்டு தெரியாது.. !”

கொண்டக்டரின் ஏச்சு காதில் பட்டதோ, படவில் லையோ தில்லைநாயகம் தலைதெறிக்க ஓடினான் ….

“கடவுளே என்ரை இராசத்துக்கு ஒண்டும் வரக்கூ டாது! அவள் ஆருக்குப் பெத்தாளோ ….? கவலையில்லை. என்னெட்டை வந்ததுக்குப்பிறகு அவள் நல்லவளாகிவிட் டாள் …! பேர் பதியத்தான் போறேன். யார் சொன்னாலும் எனக்கென்ன? அவள் என்ரை பெண்சாதி!”

“சேர் … ராசமெண்டு என்ரை பெண்சாதி, அவவை எந்த வார்ட்டிலே விட்டிருக்கிறியள்….?” அவசரமும், துடிப்பும் வார்த்தைகளை வேகமாக வரச்செய்தன.

“அட போய்யா போ! ‘நொன் சென்ஸ்’ …. போய் அங்கை கேள் …! மனுஷன் படுகிற கஷ்டத்திலே இராச மாம் இராசம்…!” அற்ரண்டனின் வேலைப்பளு எரிச்சலாக மாறித் தில்லைநாயகத்தின் மேற் பாய்ந்தது.

“என்ன இவனும் ஒரு மனுஷனோ? எனக்கெல்லோ என் துடிப்புத்தெரியும்? கடவுளே… தாயும் பிள்ளையும் சுக மாக இருக்கவேணும்…! அவள் விரும்பின பேர் என்ன … முரளீதரனோ ?”….

இராசம் இருக்கும் வார்டைத் தெரிந்துகொண்டு வார்ட்டிற்குள் துடிப்போடு ஓடிச்சென்றான், தில்லைநாயகம். அங்கே- படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதுகொண் டிருந்தாள், இராசம் …

தில்லைநாயகத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனா லும் இராசம் சாகவில்லையே என்பதில் மனத்திருப்தி …. குதூகலம்…. “இராசம் என்னைப்பார்…! எங்கே குழந்தை ? நீ சொன்னது மாதிரி முரளீதரன் என்று பெயர் வைக் கவா ?”

இராசம் நிமிர்ந்து பார்க்கவில்லை. விம்மல் ஒன்று வெடித்துக் கிளம்பியது.

“ஐயோ! அத்தான் … என்னை மன்னித்து விடுங்கள். ஊர் ஆக்களைப்போல என்னை எண்ணிக் கைவிட்டு விடா தீர்கள் ! உங்கனாக் கலியாணம் செய்தபின் நான் தவ றவே இல்லை …!”

“போடீ… பைத்தியம் ….! நான் பேர் பதியத்தானே வந்தேன்? எங்கே குழந்தை?”

இராசம் வெறிபிடித்தவள் போல எழுந்தாள். “ஐயோ அத்தான் …. நான் …. நான் …. அங்கை … அங்கை … பொலீஸ்…”

தில்லைநாயகம் ஒன்றுமே புரியாமல் மிரள மிரள விழித்தான்…. அவளுக்குப் பக்கத்திலே துவண்டுபோய்க்கிடந்த அந்தக் குழந்தையின் கழுத்திலோ, ஐந்து விரல்கள் பதிந்துபோய்க் கிடந்தன.

- கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

செ. கதிர்காமநாதன் : ”கரவைக்கபி லன்” என்ற புனைப்பெயரிற் பலகவிதைகளை இயற்றியுள்ள இவர், விக்கினேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர். ‘கலை யொளி’ ஆசிரியராகவிருந்த, இக் கரவைக் கபிலர்’, கலைச் செல்வி, தமிழின்பம், தினகரன், வீரகேசரி என்பன வற்றில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி யுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)