எங்க காலத்துல…
மாதவன் ஸாரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். ரொம்ப சுவாரஸியமான ஆள். நிறைய அறிவு. நல்லா பழகுவார். ரொம்ப பேசுவார். பிறருக்கு உதவிகள் செய்ய தயங்கமாட்டார். சாயந்திரம் ஆனால் போதும், எங்கள் குடியிருப்பில் உள்ள சிறு பூங்காவின் இருக்கையில் வந்து உட்கார்ந்துகொண்டு, போவோர் வருவோரை எல்லாம் விடாப்பிடியாக அழைத்து உட்கார வைத்து ரம்பம் போட ஆரம்பித்துவிடுவார். அவருக்கு பயந்தே அனைவரும் வேறு நுழைவாயில் வழியாகச் செல்வார்கள். யாருமே அகப்படாவிட்டால் வாயிற்காப்போனிடம் கதை அளக்க ஆரம்பித்துவிடுவார்.
அவர் மனைவி அம்புஜம் பரம சாது. கணவனுக்கு அடங்கியவர். இவர்களுக்கு ஒரு பையன், ஒரு பெண். பையன் லவன் ஒரு தனியார் வங்கியில் கிளை மேலாளராக நல்ல சம்பளத்தில் இருக்கிறான். அவனது மனைவி காயத்ரி வீட்டை கவனித்துக் கொள்கிறாள். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண், நிஷா. மாதவன் ஸாரின் பெண் கீதா, அதிர்ஷ்டவசமாக இந்த ஊரிலேயே பணிபுரியும் நலனை மணம்புரிந்து இதே குடியிருப்பில் வேறு வீட்டில் வசிக்கிறாள். அவளுக்கு ஆறு வயதில் ஒரு பையன், கீசன். சுருக்கமாகச் சொன்னால் மாதவன் ஸாரைத் தவிர அவர் வீட்டில் அனைவரும் அமைதியானவர்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்த்து வைத்து அவர் ஒருவரே பேசித் தள்ளிவிடுவார்.
லவனும் நலனும் அவரது மனம் புண்படாமல் அவரை நாசூக்காக தவிர்ப்பதைப் பார்க்கவே அழகாக இருக்கும். அவர்களுக்கு அவரைப் பிடிக்காமல் இல்லை, ஆனால் பல சமயங்களில் அவர்கள் ஏதோ முக்கிய வேலையில் தீவிரமாக இருக்கும்போது அதைப் புரிந்துகொள்ளாமல் அவர் ரம்பம் போட ஆரம்பித்தால் அவரைத் தவிர்க்காமல் என்ன செய்வார்கள்? நிஷாவுக்கும் கீசனுக்கும் மாதவன் தாத்தாவை ரொம்பப் பிடிக்கும், படிக்கும் நேரம் தவிர அவருடன் ஏதாவது விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
மாதவன் ஸார் பலவிதமான வேலைகளில் இருந்திருக்கிறார். ராணுவத்தில், பத்திரிகை அலுவலகில், வக்கீல் அலுவலகில், மாவட்ட ஆட்சியாளர் பணியிடத்தில், இன்னும் பல. அதனால் அவருக்கு பொது அறிவு நிறையவே உண்டு. எல்லாவற்றுக்கும் ஒரு பதில், ஒரு விளக்கம், ஒரு அறிவுரை, ஒரு விளாசல், ஒரு நக்கல், ஒரு நையாண்டி, ஒரு அக்கறை, ஒரு கரிசனம் இருக்கும் அவரிடம். எவரையும் அசாத்தியமாய் குறை சொல்வார், எல்லோரையும் பிடிக்கும் அவருக்கு. இப்படி ஒரு வித்தியாசமான கலவைதான் மாதவன் ஸார்.
அவரிடம் உள்ள ஒரு முக்கிய அசௌகர்யம் – அவருக்கு நவீன கருவிகள் பற்றி எதுவும் தெரியாது, தெரிந்துகொள்ளவும் விரும்பமாட்டார். நவீன கருவிகள் என்றால், கிட்டத்தட்ட எல்லாம்தான். இன்றுவரை மை ஊற்றி எழுதும் எழுதுகோல்தான் பயன்படுத்துகிறார். அவருக்கு மட்டும் எங்குதான் மை வகையறாக்கள் கிடைக்கின்றனவோ தெரியாது. கைபேசி உபயோகிக்கமாட்டார், உயிர்போகும் அவசரம் என்றாலும். மிஞ்சிப்போனால் தரைவழித் தொலைபேசி உபயோகிப்பார். இன்னமும் தன் நண்பர்கள், உறவினர்களுக்கு தபால் கடிதம்தான் எழுதிக்கொண்டு இருக்கிறார். முடிந்தவரை எங்கும் நடந்தே செல்வார், இல்லை பேருந்தில் செல்வார், வெகு அரிதாகத்தான் மகிழுந்தில் செல்வார். கணினியை உபயோகிக்கப் பிடிக்காது, அது நம்மைச் சோம்பேறி ஆக்கும் என்பார். எவரின் தொலைபேசி எண்ணையும் விரல் நுனியில் வைத்திருப்பார், இருப்பினும் அவற்றைத் தெளிவாக ஒரு நோட்புக்கில் எழுதி வைத்திருப்பார். ஊரில் உள்ள முட்டுச்சந்து முதற்கொண்டு எல்லா வழிகளும் அத்துப்படி, அடிக்கடி எங்காவது சென்று வந்துகொண்டே இருப்பதால். எப்போது எந்த சாலை செப்பனிடப்படுகிறது, எப்போது ஒருவழிச்சாலை ஆக்கினர் போன்ற எல்லா விவரங்களும் மனப்பாடம்.
இவையெல்லாம்விட ரொம்ப முக்கியமான ஒரு திறமை மாதவன் ஸாருக்கு உண்டு. பாட்டி வைத்தியங்கள் எல்லாம் அவருக்கு தண்ணி பட்ட பாடு. அவரது பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டார். வீட்டில் எவருக்கு என்ன விதமான உடல் உபாதை என்றாலும், இவர் வைத்தியம் செய்தே பெரும்பாலும் சரியாகிவிடும். முக்கியமாக நிஷாவுக்கும் கீசனுக்கும் இதுவரை ஆங்கில மருத்துவரிடம் ஆலோசனைக்குப் போனதே இல்லை என்றால் நம்புவீர்களா?
ஆரம்பத்தில் கீதாவும் காயத்ரியும் வேண்டா வெறுப்பாகத்தான் நிஷாவையும் கீசனையும் இவரிடம் வைத்தியம் காட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் போகப்போக அவர்களுக்கு இவரது வைத்தியத்தின் வலிமையும் பலமும் புரிய ஆரம்பித்தது. நிஷாவும் கீசனும் காய்ச்சல் என்றோ, தலைவலி/வயிறுவலி என்றோ என்றைக்கும் படுத்ததில்லை. சொல்லப்போனால் சாதாரண சளி, ஜலதோஷம் கூட அவர்களுக்கு வந்ததில்லை. மழைக்காலங்களில், பனிக்காலங்களில் அவர்களின் பள்ளியில் படிக்கும் மற்ற எல்லா பிள்ளைகளுக்கும் பலமுறை ஜுரம் தாக்கியதுண்டு, ஆனால் எப்போதும் நிஷாவும் கீசனும் தெம்பாகவே இருப்பார்கள். இதையெல்லாம் அனுபவித்த கீதாவும் காயத்ரியும் மாதவன் ஸாரை தெய்வமாகவே பார்த்தார்கள்.
தன் பேரன் பேத்திக்கு மட்டுமல்லாமல் எங்கள் குடியிருப்பின் எல்லாப் பிள்ளைகளுக்கும் மாதவன் ஸார்தான் ஆஸ்தான மருத்துவர். இதனால் சிறுவர் சிறுமிகள் எல்லாருக்கும் அவர் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆமாம் – மருத்துவரைப் பிடிக்காத குழந்தைகளைத்தான் பார்த்திருக்கிறோம், அவரைப் பிடிக்கும் குழந்தைகள் எங்கள் குடியிருப்பில்தான் உண்டு.
அவருக்கு எப்போதும் உடல் உழைப்பு இருந்ததால் ரொம்ப ஆரோக்கியமாக இருப்பார். குப்பை பொறுக்குபவர், பெட்டிக்கடைக்காரர், சமையல் எரிவாயு பட்டுவாடா செய்பவர், செய்தித்தாள் போடுபவர் என எல்லாரிடமும் அன்பாகப் பழகுவார். அவர்களின் குடும்பம், வேலைப்பளு என பல விஷயங்களை அக்கறையாக விசாரிப்பார். அவர்களையும் மனிதர்களாக மதித்துப் பேசுபவர்கள் யாருமில்லாததால் அவர்களுக்கெல்லாம் இவர்மீது தனி பாசம்.
இப்படியாக மாதவன் ஸாரிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும், சிறுவர் சிறுமியர் தவிர இளைஞர்/இளைஞிகள், நடுத்தர வயதினர் என எல்லோரும், அவர் அதிகமாகப் பேசுகிறார் என்பதை மட்டும் பார்த்து, அவரிடம் பேசப்பிடிக்காமல் ஒதுங்குவார்கள். அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். பலபேர் பலமுறை அவரை கேலி, கிண்டல் செய்வார்கள், அவர் அருகில் இல்லை என நினைத்துக்கொண்டு.
இவையெல்லாம் விட கொடுமை என்னவென்றால், ஒரு விபத்தில் முட்டியில் பலமாக அடிபட்டதால் விந்தி விந்தி நடக்க ஆரம்பித்த அவரைப் போலவே கேலியாக நடந்து பழிப்புக் காட்டிச் செல்வார்கள், அவருக்குத் தெரியாது என நினைத்துக்கொண்டு. இதையெல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் அவர் அமைதியாக இருப்பார், அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் மாதவன் ஸார். ஆனால் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் ஆத்திரமாகவும் வேதனையாகவும் இருந்தது, அவரை இப்படி கேலி, கிண்டல் செய்கிறார்களே என ஆதங்கம் தாங்கவில்லை. லவனும் நலனும் அவர்களுடன் சண்டை போடப் போகும்போதேல்லாம் மாதவன் ஸார் தடுத்துவிடுவார். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்வார்கள்.
இதற்கெல்லாம் பதிலடியாக இயற்கையே ஒரு நிகழ்வை நடத்திக் காட்டியது.
சில வருடங்களுக்கு முன் நூறாண்டுக்கான அடைமழை பெய்து சென்னையே அவதிப்பட்டதே? மறக்க முடியுமா? அதில் எங்கள் குடியிருப்பும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மொத்தக் குடியிருப்பின் தரைத்தளமும் தண்ணீரில் மூழ்கியது. யாராலும் வெளியே போக முடியவில்லை. தரைத்தளத்தின் சிறிய அறையில் குடியிருந்த வாயிக்காப்போன் குடும்பத்தை தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார் மாதவன் ஸார். மழை பெய்த முதல் வாரத்தில் தரைவழித் தொலைபேசி, அலைபேசி எதுவும் பணி செய்யவில்லை. பால், காய்கறி என எதுவும் வாங்க முடியவில்லை. குடியிருப்பில் சிலரது பிள்ளைகள் வெளியில் சென்றிருந்தனர், வீடு திரும்பவில்லை. மொத்தத்தில் அனைவரும் தவித்துவிட்டனர்.
மாதவன் ஸார் களத்தில் இறங்கினார்.
சில இளைஞர்களைக் கூட்டிக்கொண்டு அக்கம்பக்க வீதிகளில் வீடு திரும்பாத பிள்ளைகளைத் தேடினார். எங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், கூடவந்த இளைஞர்கள் பயந்தார்கள். தவிர எந்தத் தெருவில் எப்படி போவது என ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு. திறமையாக அவர்களை வழிநடத்தினார் மாதவன் ஸார்.
மூன்று குழுக்களாகப் பிரித்து ஒரு காகிதத்தில் தெளிவாக வரைபடம் வரைந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். எந்த வழியில் போனால் வெள்ளத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதைத் தெரிந்துவைத்திருந்தார். இரண்டு மணி நேரத்தில் அவர் சொன்ன இடத்தில் மீண்டும் கூடினர், அதில் இரு குழுவினர் தொலைந்தவர்களைக் கண்டுபிடித்திருந்தனர். அந்த இடம் எங்கள் குடியிருப்பில் இருந்து பல கிலோமீட்டர்கள் தூரம் இருந்தது. அப்போது இருட்டிவிட்டது, மழையும் அதிகமாகிவிட்டது. எல்லோருக்கும் மரண பயம் தொற்றியது.
அனைவரையும் ஆறுதல்படுத்தி அங்கே இருந்த தனது நண்பர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் அனைவருக்கும் இரவு உணவு தயாராக இருந்தது, முன்னரே சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அதே சமயம், எங்கள் குடியிருப்பில் அனைவருக்கும் ரொட்டித்துண்டுகள், சிறுவர்/சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால்/பிஸ்கட், மற்றவர்களுக்கு பழம், இன்னும் பல உணவுவகைகள் போன்றவற்றை தனது நண்பர்கள் மூலமும் மற்றும் எங்கள் குடியிருப்பில் பால் பாக்கெட் போடுபவர், பெட்டிக்கடைக்காரர் போன்ற அவர் பழகிய ஆட்கள் மூலமும் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.
தொலைந்தவர்களுடன் மற்றவர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பத்திரமாக காலையில் வந்து சேர்ந்தார். அப்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவரைக் கைகூப்பி வணங்கினர்.
ஊர் முழுக்க மீனவர்கள் தங்கள் கட்டுமரங்களைக் கொண்டு பாதிப்படைந்தவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் குடியிருப்புக்கு வரும்வரை காத்திருக்கவேண்டாம் என, குடியிருப்பு ஆட்களைக்கொண்டே கட்டுமரம் செய்யத் தயாரானார் மாதவன் ஸார்.
அலைபேசியில் ஆங்ரி பேர்ட், டெம்பிள் ரன் போன்றவற்றை விளையாடிய தலைமுறைக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. மாதவன் ஸார் கட்டுமரம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என காகிதத்தில் எழுதி, பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொருவரை ஒவ்வொன்று சேகரிக்கச் சொன்னார். அதனால் துரிதமாக அரைமணி நேரத்திலேயே அனைவரும் அவர் சொன்ன பொருட்களுடன் வந்தனர். அதற்குள் ஒரு பெரிய காகிதத்தில் கட்டுமரத்தின் மாதிரியை வரைந்து வைத்திருந்தார்.
ஒரு பக்கம் பரபரவென பொருட்களைச் சேகரித்துக்கொண்டே அவர் செய்வதையெல்லாம் அனைவரும் கவனித்துக்கொண்டே இருந்தனர். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் ‘தலைமைத்துவம்’ பற்றி பலப்பல பயிற்சிகள் எடுத்து கற்றவற்றை இவர் கண்கூடாக நிகழ்த்திக் காட்டுகிறாரே என அசந்துவிட்டனர். அந்த உட்சபட்ச நெருக்கடி சூழலிலும் அவ்வளவு திறமையாக அனைவரையும் வழிநடத்தி, எளிமையான பொருட்களைக் கொண்டே பலமான ஒரு கட்டுமரத்தை உருவாக்கிவிட்டார். அனைவரும் ஆனந்தக் கண்ணீரில் ஆரவாரித்து அவரைத் தட்டாமாலை தூக்கிக் கொண்டாடினர்.
பிறகு சில இளைஞர்களுடன் சேர்ந்து குழந்தைகள், பெண்கள், சிறுவர்/சிறுமியர் அனைவரையும் பத்திரமாக அப்புறப்படுத்தி, அக்கம் பக்கத்தில் மழையால் பாதிப்பில்லாத குடியிருப்புகளில் தனது நண்பர்கள் வீடுகளில் அவர்களைத் தங்கவைத்தார். அவர்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார்கள். அந்த இளைஞர்களுடன் சேர்ந்து குடியிருப்பில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினார். மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளையும் செய்தார்.
இரு வாரங்களில் நிலைமை சரியானது. அனைவரும் குடியிருப்புக்குத் திரும்பினர்.
அதன் பிறகு ஒரு நாள் அவர்கள் அனைவரும் குடியிருப்பின் வளாகத்தில் மாதவன் ஸாருக்கு பாராட்டு விழா வைத்து, தாங்கள் அவரை அவமானப்படுத்தியதை வருந்தி ஒட்டு மொத்தமாக அவர் காலில் விழுந்து வணங்கினர். அவரது ஆளுமை இல்லாவிட்டால் அவர்களால் அந்த இக்கட்டான சூழலைச் சமாளித்திருக்கமுடியாது என்று பாராட்டினர்.
மாதவன் ஸாரின் குடும்பத்தினருக்கு இப்போதுதான் மனம் சமாதானமானது.
மாதவன் ஸார் வழக்கம்போல் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வருவோர் போவோரிடம் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். அதுதான் மாதவன் ஸார்!!
ஒரே வித்தியாசம், இப்போதெல்லாம் எல்லாரும் அவரை மதித்து அவருடன் பேசுகிறார்கள்.
அருமையான படைப்பு… கற்பனை கதையா இல்லை உண்மை சம்பவமா என அறியவில்லை… இருப்பினும் சென்னை வெள்ளத்தை கொண்டு மாதவ சாரின் முக்கியதுவத்தை பலர் அறியும்படி செய்தது அழகு… மேலும் இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்கிறேன்…
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி