எங்கே போகிறான்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,506 
 

மாதவி களைத்து வீட்டுக்குள் நுழையும் போது, குழந்தைகள் அமைதியாய் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தன.நேராக குளியலறைக்கு சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவள் பால் காய்ச்சாமல் வைத்திருப்பதை பார்த்து “அருண்” என்று கூப்பிட்டாள். படித்துக்கொண்டிருந்த அருண் உள்ளே வந்தான். உங்க அப்பா எங்கடா? பாலைக்கூட காய்ச்சி வைக்காம எங்க போனாரு? சாயங்காலத்துல இருந்து நீங்க ஒண்ணும் சாப்பிடலியா? இல்லை என்று அருண் தலையாட்ட,மனதில் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. சே என்ன மனுசன்? குழந்தைக பசியோட இருக்கும்னு தெரியாம அப்படி எங்க போய் தொலைஞ்சாரு.

மனதுக்குள் திட்டியவாறு,அர்ச்சனாவையும் வரச்சொல், ஒரு நிமிசத்துல பாலை காய்ச்சி கொடுத்திடறேன்.சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்குமா என் அலமாரியில் வைத்திருந்த டப்பாவை திறந்து பார்த்தாள். ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெட் இருக்க அதை உடைத்து இருவருக்கும் பிரித்து கொடுத்து இவளும் இரண்டை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு பால் டம்ளருடன், இவள் மட்டும் காபி கலந்து எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தனர்.

மாதவிக்கு வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி அவள் பணி செய்யும் இடம் இருந்த்து. காலையில் ஒன்பது மணிக்கு கிளம்பினாள் என்றால் வீடு வந்து சேர எப்படியும் ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். இவள் வீடு வந்து சேரும் பொழுதே இருட்டி விடும். இவள் கணவன் கதிரவன் இங்கிருந்து பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்ல வேண்டும். காலையில் ஏழு மணிக்குள் கிளம்பி விடுவான், வீட்டிற்கு ஐந்து மணிக்குள் வந்து விடுவான். அதே நேரத்திற்கு குழந்தைகளும் பள்ளி முடித்து, பக்கத்திலேயே டீயூசனுக்கு சென்றுவிட்டு வந்து விடும். இவன் வீட்டுக்கு வரும்போதே பால் பாக்கெட் வாங்கி வந்து அதற்குள் காய்ச்சி விடுவான். குழந்தைகள் வந்தவுடன் பாலை குடித்து விட்டு சிறிது நேரம் பக்கத்திலேயே விளையாடுவார்கள். அதன் பின் படிக்க உட்காரும்போது அவள் அம்மா மாதவி வரவும் சரியாக இருக்கும். அவளும் காப்பியை குடித்துவிட்டு இரவு சமையல்வேலையை ஆரம்பித்து விடுவாள். இப்படியாக இவர்கள் வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

இந்த இரு வாரங்களாக கதிரவன் குழந்தைகள் வந்தவுடன் பாலைக்கூட காய்ச்சி கொடுக்காமல் அவசர அவசரமாய் வெளியே கிளம்பி போய் விடுகிறான். திரும்ப வீட்டுக்கு மிகவும் லேட்டாக வருகிறான். கேட்டதற்கு வேலைப்பளு அதிகம் என்று சொல்கிறான்.குழந்தைகளும் மாதவி வரும்வரை சாப்பிடாமல் இருப்பது தொடர்கதை ஆகி வருகிறது.இதற்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டே காப்பியை உறிஞ்சினாள் மாதவி.

இரவு பத்து மணி அளவில் வீட்டுக்குள்ளே வந்த கதிரவனை நிறுத்தி “நீங்க எங்கதான் போய்ட்டு வர்றீங்க” கேட்டவளிடம் ப்ளீஸ் எனக்கு டயர்டா இருக்கு,பசிக்குது சாப்பாடு போடறீயா? கேட்டவனிடம் எதுவும் சொல்லாமல் உள்ளே கூட்டிச்சென்றாள்.

அயர்ந்து தூங்கும் கணவனின் முகத்தை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். குழந்தைகளும் உறங்கி விட்டனர்.இவளுக்குத்தான் தூக்கம் வரவில்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வருபவன் அடுத்து எங்கு செல்கிறான்?அவளுக்கு அதுவே பெரும் கவலையாக இருந்தது. கதிரவனுக்கு படிப்பு குறைவு தான் என்றாலும் கடின உழைப்பாளி. தவறான பழக்க வழக்கங்கள் கொஞ்சம் கூட கிடையாது.இவளுக்காவது ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வரும், அவனுக்கு அதை விட குறைவாகத்தான் வரும். இதில் தினமும் பஸ்ஸில் சென்று வர செலவுகள் வேறு.குறைந்த அளவு வருமானம் வந்தாலும் அதற்கேற்றவாறே வாடகை குறைவான வீட்டிலேயே இருந்தனர். வீட்டுக்காரருடன், நான்கு குடித்தனங்கள் வா¢சையாக அமைந்துள்ளதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணயாக இருந்தனர்.

இது வரை இவர்கள் இருவரும் வேலைக்கு சென்று வீட்டுக்கு முன்னால்,பின்னால் வந்து விடுவதால் குழைந்தைகளுக்கும் பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு வந்தால் யாராவது ஒருவர் வீட்டில் இருந்தனர்.இப்பொழுது இவன் இருவாரங்களாக மாலை வீட்டுக்கு வந்தவுடன் எங்கோ சென்று விடுவதால் இவளுக்கு குழந்தைகளை பற்றி பெருங்கவலை வந்து விட்டது. அதோடு இவனைப்பற்றிய கவலை வேறு சேர்ந்து கொண்டது.

காலையில் கதிரவன் வேலைக்கு கிளம்பும்போதே மாதவி சொல்லிவிட்டாள், இன்று வேலை முடிந்து கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர லேட்டாகும். நீங்கள் பாட்டுக்கு குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். ஒரு நிமிடம் யோசித்தவன், சரி என்று தலையாட்டி விட்டு சென்றான்.

இவள் மாலை வேலை முடிந்தவுடன் கடைக்கு செல்லாம் என்று நிணைத்துக்கொண்டிருந்தவள் சரி நாளைக்கு போய்க்கொள்ளலாம் என்று வீட்டுக்கே திரும்பி வந்து விட்டாள். வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்தனர். உங்கப்பாவை இருக்க சொன்னேனே எங்கடா போனாரு என்று மகனிடம் கேட்ட்டாள். அப்பா இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தாரு, பத்து நிமிசத்துல வந்துடறேன்னு போனாரு அம்மா. பதில் சொன்னவனை முறைத்து பார்த்தாள் மாதவி.

அரை மணி நேரம் கழித்தே வந்தான் கதிரவன்.வீட்டில் நுழைந்தவன் இவளை பார்த்தவுடன் முகம் மாறி நீ கடைக்கு போகலியா? முதல்ல நீங்க எங்க போயிட்டு வர்றீங்க? குரலை உயர்த்தினாள்.கத்தாதே, பக்கத்துல ஒரு பிரண்டு இருந்தான் அவங்கிட்ட பேசிட்டு வரலாம்னு போயிருந்தேன். சாந்தமாய் பதில் சொன்னவன், ஆமா நீ கடைக்கு போகலியா?
மீண்டும் அதே கேள்வியை கேட்டவனிடம் முறைத்தவாறு இப்ப என்ன நான் கடைக்கு போறேன்னு சொன்னா போயே ஆகணுமா? நாளைக்கு போலாம்னு வந்துட்டேன். சரி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன் என்று அவசர அவசரமாய் மீண்டும் கிளம்பி விட்டான்.வேகமாய் செல்பவனை இது எங்கே கொண்டு போய் முடியுமோ என்று கவலையுடன் பார்க்க ஆரம்பித்தாள் மாதவி.

இவன் எங்கே போகிறான்? கண்டு பிடிக்க வேண்டும், அருண் ஏழாவது படிக்கும் பையந்தான். ஓரளவு விவரம் தெரிந்தவன், இருந்தாலும் அவன் அப்பாவை கண்காணிக்க சொலவது அவளுக்கு உசிதமாக படவில்லை. அர்ச்சனா ஐந்தாவது படிக்கிறாள், அவளுக்கு இந்தளவுக்கு விவரம் கிடையாது.

ஒரு மாதம் ஓடியிருந்தது, இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மாலையில் இவனை எதிர்பார்ப்பதில்லை, பால் காய்ச்ச அருணுக்கு சொல்லி கொடுத்துவிட்டாள் மாதவி. மாலை வந்தவுடன் பாலைக்காய்ச்சி தங்கைக்கு கொடுத்துவிட்டு இவனும் குடித்து படிக்க உட்காருவார்கள். அரை மணி நேரத்தில் மாதவி வந்து விடுகிறாள்.அவளும் பழகி விட்டாள். இருந்தாலும் கணவனின் போக்கு புரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் மாதவி.

மாதம் ஆரம்பித்த ஐந்தாம் தேதி அதிசயமாய் வீட்டில் இருந்தான் கதிரவன். மாதவி வேலை முடிந்து வீடு வந்தவள் இவனை பார்த்தவுடன் ஏது அதிசயமா இருக்கு ! ஐயா இன்னைக்கு வீட்டுல இருக்கறாரு ! என்று கிண்டலாய் கேட்டுவிட்டு வழக்கம் போல சமையலறைக்கு சென்று இவனுக்கும்,தனக்கும் காப்பி போட்டு எடுத்து வந்தாள். எதுவும் பேசாமல் காப்பியை வாங்கி குடித்தவன் சரி எல்லாரும் கடை வீதிக்கு கிளம்புங்க என்று சொன்னான். அவள் வியப்புடன் அவனை பார்த்து கடை வீதிக்கா? சம்பளம் வந்தா என் கையில தான கொடுப்பீங்க என்று கேட்டாள்.இங்க பாரு எப்பவும் கொடுக்கற பணத்தை உங்கிட்ட கொடுத்திடறேன்.இந்தா பிடி என்று பணத்தை எண்ணி அவள் கையில் கொடுத்தான்.இப்ப நாம கடை வீதி போறோம் கிளம்புங்க என்று சொன்னவுடன் குழைந்தைகள் “ஹோ’ என் கத்திக்கொண்டே கிளம்பின.

நேராக மூவரையும் சைக்கிள் கடைக்கு கூட்டிச்சென்றவன் “அருண்’ உனக்கு எந்த சைக்கிள் வேணும்னு செலக்ட் பண்ணிக்கோ என்றவனை வியப்புடன் பார்த்த் மாதவி ஏங்க இதுக்கு பணம்..என்று இழுத்தால்..ஸ்..நீ கம்முனு இரு என்று அவள் வாயை அடைத்தவன் அருண் என்று கூப்பிட அவன் திணறினான். அப்பா என்று இழுத்தான்.அப்பாவின் கண் அசைவை கண்டவன் அங்குள்ள சைக்கிள்களை ஆசை ஆசையுடன் பார்த்து ஒன்றை கை காட்டினான்.அந்த சைக்கிள் எவ்வளவு? என்று கடைக்காரா¢டம் கேட்டான். அவர் இரண்டாயிரத்து ஐநூறு என்று சொன்னார். இவன் கம்பீரமாய் அவர்களை பார்த்து தன் கால் சட்டை பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி கடைக்காரரிடம் கொடுத்தான்.அருண் சைக்கிளை எடுத்துட்டு வா என்றவுடன் அருண் பாய்ந்து எடுத்து மெல்ல உருட்டி வெளியே வந்தான். அவன் முகத்தில் தனக்குத்தான் சைக்கிளா? என்ற சந்தேகம் தெரிந்தது.மாதவி நம்ப முடியாமல் அவனையே பார்த்து போனஸ் ஏதாவது வந்திருக்குமோ ! இல்லையே, இந்த மாதம் வராதே, என்றவள் அவநம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

கதிரவன் இரவு அவர்களுக்கு கடையில் சாப்பிடச்சொல்லி,விருந்தே வைத்துவிட்டான். வீடு வரும்பொழுது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதுவரை சைக்கிளை உருட்டியே வந்தான் அருண். “அருண்” நாளைக்காலையிலே அப்பா உனக்கு சைக்கிள் சொல்லிக் கொடுக்கறேன். என்று சொன்னான்.

இரவு மனைவியிடம் ஏங்க இன்னைக்கு மட்டும் மூணாயிரத்துக்கு மேல செலவாயிருக்கும் போல இருக்கே என்றவளிடம்,ஆகட்டுமே, மாதவி இந்தா மிச்ச பணம் என்று ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தான். ஏங்க உண்மையை சொல்லுங்க, இந்த மாசம் எப்படி இவ்வளவு பணம் கிடைச்சுது. இவன் மெல்ல எழுந்து அவள் முன்னால் வந்து ஒரு நாள் அருண் அவனை பார்க்க சைக்கிள்ள வந்த பிரண்டுகிட்ட , எங்களால, எல்லாம் இப்ப சைக்கிள் வாங்க முடியாது அப்படீன்னு பேசிகிட்டிருந்தான். கேட்டுகிட்டு இருந்த எனக்கு மனசு சுரீர்ன்னுச்சு. ஏன் முடியாது? சாயங்காலம் ஆறு மணிக்கு மேல நான் வீட்டுல தான இருக்கேன், அந்த நேரத்துல எங்காவது வேலை கிடைக்குமான்னு பார்த்தேன்.ஒரு ஜெராக்ஸ் எடுக்கற கடையில சாயங்காலம் ஆறு மணியில இருந்து நைட்டு பத்து மணி வரைக்கும் வேலை இருக்குன்னு சொன்னாங்க. அதனாலதான் வேலை முடிஞ்சு வந்தவுடனே, பசங்களை உட்கார வச்சுட்டு கிளம்பிடுவேன். இதை நான் ஏன் உங்கிட்ட சொல்லலையின்னா முதல் சம்பளத்துல பையனுக்கு அவனுக்கே தெரியாம சைக்கிள் வாங்கித்தரணும்னு ஆசைப்பட்டேன்.

சே கணவனின் உழைப்பு தெரியாமல் என்ன என்னவெல்லாம் நினைத்துவிட்டோம் என்று மனசுக்குள் வருத்தப்பட்டாலும் தன் கணவனை நினைத்து பெருமிதம் கொண்டாள் மாதவி.

Print Friendly, PDF & Email

1 thought on “எங்கே போகிறான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *