Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார்

 

எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார் ~~ சிறுகதைகள்

வீட்டிலிருந்து மூன்று முறைக்குமேல் போன் வந்து விட்டது. அரை மணிக்குள் வந்து விடுவேன் என்று மூன்று முறையும் கூறியாயிற்று. இனிமேலும் இதே பதிலை நீட்டிக்கமுடியாது. மறுபடியும் போன் வந்தது. என் மனைவிதான் மறுமுனையில் இருந்தாள். “எங்கே இருக்கீங்க. எத்தனை தடவைதான் போன் பண்றது. சீக்கிரம் வந்திடுங்க. நம்ம வீட்டுக்கு கடவுள் வந்திருக்கிறார்” என்று என் பதிலுக்குக் காத்திருக்காமல் பட்டென்று போனை வைத்துவிட்டாள். எனக்கு தலையே சுற்றியது. வீட்டிற்கு விரைந்தேன். கேட்டைத் திறந்து கூடம் வரை என்னுடனேயே வந்தாள் என் மனைவி. “சீக்கிரமே டிரெஸ் மாத்திட்டு காப்பி குடிங்க” என்று என்னை அன்பாகத் துரிதப்படுத்தினாள். என்ன ஆயிற்று இவளுக்கு. மீண்டும் ஏதாவது பேசப்போக மறுபடியும் சண்டை சமாதானம் என்று ஒரு சுற்று வரவேண்டும். அந்த மனநிலையில் துளியும் நான் இல்லை. எங்களுக்கான வாராந்திர சண்டை கோட்டாவும் முடிந்துவிட்டது. பிறகு எதற்கு இந்த பீடிகை போடுகிறாள்? காப்பியின் மணம் மூக்கைத் துளைத்தது. கண்களை அசத்தும் சோர்வும் மெல்ல விலகியது. “சரி இப்போ சொல்லு” என்று காயை மெல்ல நகர்த்தினேன்.

என் கைகளைப் பிடித்து வாசலுக்கு என்னை கூட்டிக்கொண்டு போனாள். எங்கள் வீட்டு காம்பௌண்ட் சுவரில் ஒரு கிறுக்கலான உருவத்தைக் காண்பித்தாள். “இதோ பாருங்க இது தான் கண். இதுதான் மூக்கு. இதுதான் உதடு” என்று உருவகப்படுத்தி “ஏசுநாதர் தானே” என்று என்னை மறைமுகமாக விரட்டி ஊர்ஜிதப்படுத்தச் சொன்னாள். நானும் தயக்கத்துடன் “ஏசுநாதர் மாதிரிதான் தெரியுது. அவருக்கென்ன நம் வீட்டில் வேலை” என்று கிண்டலடித்தேன். உடனே உணர்ச்சிவயப்பட்டவள் “பக்கத்து வீட்டு ஈஸ்வர்தான் எனக்குக் காட்டினான். குழந்தைகள் பொய் சொல்லாது. ஆதலால்தான் அவர்கள் கண்ணுக்கு மட்டும் கடவுள் தெரியறார். உங்க கண்ணுக்கு எந்த மண்ணும் தெரியாது”. அவளின் திடமான பதில் எனக்கு மிகுந்த கலவரத்தைக் கொடுத்தது. இந்த வாக்குவாதத்தை லாவகமாக முடிக்கவேண்டும் என்ற ஓரே தீர்மானத்தில் “சரி, நான் என்ன செய்யவேண்டும்” என்று இயந்திரத்தனமாகக் கேட்டேன். “உங்களுக்கு எதுவும் புரியாது. எனக்கு அனுசரனையா ஒரு வார்த்தை பேச உங்க நாக்கு என்னைக்குத்தான் மடிஞ்சிருக்கு” பொரிந்து தள்ளினாள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. ஏசுவே உயிரோடு வந்தாலும் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்று.

அப்போது யாரோ கேட்டைத்தட்டினார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க யுவதி. பெரிய குங்குமப்பொட்டு வைத்திருந்தாள். அளவுக்கு அதிகமாகவே முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். கொஞ்சம் தாட்டியான உடம்பு வாகு. கூடவே ஒரு தொடுக்கும் வந்திருந்தது. “கண்ணு, உங்க வீட்டுலே வேலை பாக்கும் பச்சையம்மாதான் சொல்லிச்சு. ஏதோ உங்க வீட்டுலே சாமி தெரியுதாமில்லே” என்று பேசிக்கொண்டே யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் மிக உரிமையுடன் உள்ளே நுழைந்தாள். கூட வந்த தொடுக்கும் அந்த அம்மாவிடம் அளவிற்கு மீறியபடி பயந்து வழி விட்டுக்கொண்டே வந்தது. சுவற்றில் தெரிந்த உருவத்தை மிகுந்த அக்கறையுடன் ஒரு ஆராய்ச்சி மாணவனைப்போல உற்று பார்த்துக்கொண்டே இருந்தாள் அந்த யுவதி. சுவற்றில் இருக்கும் உருவத்தைப் பார்ப்பதும், பிறகு இடை இடையே மிகத்தாழ்வான குரலில் அந்த தொடுக்குடன் பேசுவதுமாக இருந்தாள். தொடுக்கின் முக உணர்வுகள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருந்தது.

என் மனைவியோ மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டாள். “பயப்படாதே கண்ணு, அம்மாதான் வந்திருக்கு. அவ்வளவுதான். ஏதோ எங்கிட்டே சொல்ல வரா. அதுதான் புரியலை” என்றாள். சிறிது நேரத்திற்குப் பிறகு “நீங்க யாருன்னா சமீபத்துலே வேப்ப மரத்தை பிச்சு போட்டீங்களா” என்று கேட்டவுடன், குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கும் தண்டனைக்கைதி போல என் மனைவி கூனிக்குறுகி “ஆமாங்க, மழைக்கு ரெண்டு வேப்ப மரம் இங்கேதான் முளைச்சிருந்தது. பெரிய மரமானா வேர் விட்டு சுவர் பாதிக்கும்னு இவர் தான் பிச்சுப் போட்டுட்டாரு” என்று மெல்ல இழுத்தாள். “பயப்படாதே கண்ணு, எல்லாம் சரியாயிடுச்சுன்னு நினைச்சுக்கோ. அக்கா கிட்டே சொல்லிட்டே இல்லை. சாந்தி பண்ணிடலாம். குடும்பத்துக்கும் நல்லது. ஆயிரத்து ஐநூறு ஆகும். தெரிஞ்ச பொண்ணா வேறே போயிட்டே. ஐநூறு கொடுத்தா போதும். அக்கா மிச்சத்தை ஏத்துக்குவா” என்றவுடன் அக்காவுடன் வந்த தொடுக்கு அக்கா புராணமே பாடியது. பயத்தின் உச்சிக்குப் போன என் மனைவி அஞ்சறைப்பெட்டியிலிருந்து காய்கறிக்கென்று வைத்திருந்த ரூபாய் ஐநூறை பாதி மனதுடன் அக்காவிடம் நீட்டினாள். “பயப்படாதே கண்ணு, அக்கா பாத்துக்குவா. பூஜை முடிஞ்ச உடனே இந்த உருவம் கொஞ்ச கொஞ்சமா மறைஞ்சுடும்” என்று வாக்குறுதி வேறு அளித்தாள்.

அன்று இரவு நல்ல மழை. ஏசுவாகத் தோன்றி பிறகு மாரியாக உருமாற்றப்பட்டு, இப்போது புத்தரைப்போலத் தெரிகிறது மீண்டும் ஒரு உருவம். 

தொடர்புடைய சிறுகதைகள்
மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது. எங்கு பார்த்தாலும் நெடிய மரங்கள். முதன் முதலாய் இங்கு வருபவர்கள் ஏதோ பண்ணை வீட்டிற்குப் போவது போல முதலில் உணர்வார்கள். இதுவரை தாங்கள் அனுபவித்த ...
மேலும் கதையை படிக்க...
புதிதாக வந்த பல்பொருள் அங்காடியைப் பற்றி ஊர் முழுவதும் ஒரே பேச்சு. வார மலர்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி என்று லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவழித்திருந்தார்கள். முழுவதும் குளிர் ஊட்டப்பட்டது, வலை தளம் மூலம் பொருள் தேடல் வசதி, குறிப்பிட்ட பொருள் குறித்தான ...
மேலும் கதையை படிக்க...
டோரியன் சீமாட்டி
அவள், அவன் மற்றும் நிலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)