ஊர்மிளாவின் கனவு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 3,587 
 

ஊர்மிளா…

அம்மா எனக்கு ஆசை ஆசையா வச்ச பேரு…. அம்மாவுக்கு எப்பிடி இந்த பேரு வைக்கணும்னு தோணிச்சு….???

அம்மா காவேரியும் அப்பா மதியும் பள்ளிக்கூட வாத்தியார்கள்..

அப்பா தமிழ் இலக்கியத்த கரச்சு குடிச்சவர்..அப்பாவோட படிப்புக்கு கல்லூரில வேல பாக்க வேண்டியவர்…

ஆனா அவருக்கு பள்ளிக்கூட பசங்களுக்கு பாடம் சொல்லித்தரதிலதான் விருப்பம்…

“சின்ன வயசுல தமிழ் மேல காதல் வராட்டிபோனா கல்லூரிலே எப்படி வரும்??? இந்த வயசுல சொல்லிக்குடுக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது….”

இது அவர் பக்க நியாயம்…

அம்மாதமிழ்..ஆங்கிலம்…

இரண்டிலுமே பட்டம் வாங்கியிருந்தாங்க…

அவுங்க கிட்ட பாடம் படிக்கணும்னு ஆசப்படாத மாணவனே இருக்க முடியாது…

இரண்டு பேரும் எனக்கு சொன்ன கதைகள்..!

ராத்திரி கதை கேட்டு தூங்கும் குழந்தைங்க எல்லோருமே அதிர்ஷ்டசாலிங்க..

எனக்கு ஒரு அண்ணன்.. ஒரு தம்பி…

மூணுபேரும் படுக்க போறதுக்கு முந்தி அப்பாவும்… அம்மாவும்..மாறி மாறி நாலஞ்சு கதையாவது சொன்னாதான் விடுவோம்.

எனக்கு அப்போ மூணு வயசுதான் இருக்கும்…அப்பவே எனக்கு ராமாயணம் அத்துப்படி..அழகா கதை சொல்லுவேனாம்…

“அம்மா…எனக்கு ஏன் சீதைன்னு பேர் வக்கல….ஊர்மிளாவ யாருக்குமே தெரியாதே !!!”

“அதனாலதான் அந்த பேர உனக்கு வச்சோம்..என்ன விட அப்பாதான் பிடிவாதம உனக்கு அந்த பேர வச்சாரு..அவருகிட்டக்க கேளு இந்த கேள்விய…..!!!”

ஆரம்பத்துல எனக்கு அவ்வளவா இந்த பேரு பிடிக்கல…ஆனா போகப்போக அந்தப் பேர் மேல ஒரு காதலே வந்திடிச்சு…..

ஊர்மிளை…இதுதான் இராமாயணத்தில் அவளுடைய பெயர்… இராமனின் தம்பி இலக்குவனின் மனைவி… தசரதனின் மருமகள்..

சனகனின் இரண்டாவது பெண்… சீதையின் தங்கை…

இதைத்தவிர அவளுக்கு வேறு பெருமையோ…அடையாளமோ…இருக்கிறதா?

சீதையைப் போல இராமானுடன் காட்டுக்குச் சென்றாளா??? அவனுக்கு பணிவிடைகள் ஏதும் செய்தாளா..??? காலில் முள் தைக்க கானகத்தில் நடந்தாளா….??? கிடைத்ததைப் புசித்து புல் மெத்தையில் புரண்டாளா..?

ஒன்றல்ல…இரண்டல்ல… தினான்கு ஆண்டுகள்…!

சுகமாக அரண்மனையில் கழித்தாளா…?? இல்லை கணவனைப் பிரிந்த கவலையில் உண்ணாமல்…. உறங்காமல்…..நோன்பு நூற்றாளா….???

என்னதான் செய்வாள்… பதினான்கு ஆண்டுகள் கணவனைப் பிரிந்து வாடும் இளம் மனைவி….????

நித்திராதேவி அவளைத் தழுவிக் கொண்டதாகவும்.. பதினான்கு ஆண்டுகள் உறங்கியே கழித்ததாயும் கேள்விப்படுகிறோம்…

இது நடக்கக் கூடிய காரியமா…?

பொதுவாகவே காப்பியங்களில் சில கதாபாத்திரங்களை விவரித்து எழுத பைடைப்பாளிக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போவதுண்டு….

அவர்கள் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்களாய் இருந்தாலும் கூட…

அவர்களைப் பற்றி வாசகர்கள் தான் அதிக அக்கறைப்படுவார்கள்..

கதாசிரியர் அந்த பாத்திரத்துக்கு ஏதோ அநீதி இழைத்தாற்போல் தங்களுடைய கருத்துகளை வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவார்கள்..

இது ஒரு விதத்தில் ஆசிரியருக்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகத்தான் எண்ணத்தோன்றுகிறது..!

ஏனென்றால் காலாகாலத்துக்கும் சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கும்…

அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் ஊர்மிளை…

அவளில்லையென்றால் இராமாயணமே இல்லை என்பது போல எண்ணுபவர்களும் உண்டு…

சீதை சனகனால் கண்டெடுக்கப்பட்ட செல்வம்….அதற்கப்புறம் பிறந்தவள் ஊர்மிளை…

பின்னர் மாண்டவி..சுருதகீர்த்தி…

நான்கு சகோதரிகளும் நான்கு சகோதரர்களை மணந்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்தால் அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கமுடியும்….?

ஆனால் நடந்ததோ வேறு….

தசரதன் ‘ தீயவையாவினும் சிறந்த தீயாளான கைகேயி ‘ க்கு தந்த வரத்தால் இராமன் வனம் செல்லக் கிளம்பிய போது …..

“நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”என்று சீதை இராமனுடன் கிளம்ப இலக்குவனும் இராமனுடன் செல்லத் தயாராகிறான்.

அப்போது இலக்குவன் தானும் அவர்களுடன் கிளம்புவதை நியாயப்படுத்தும் விதமாக….

நீர் உள எனில் உள மீனும் நீலமும்
பார் உள எனில் உள யாவும்; பார்ப்புறின்
நார் உள தனு உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனில் உளேம் அருளுவாய் என்றான்.

எல்லோரும் அவரவர் நியாயத்தைக் கூறிவிட்டார்கள்….

“அம்மா ..! இங்க வாங்க…. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….”

“என்னம்மா….சொல்லு…..!”

“ஊர்மிளையைப்பத்திதான்…..”

“எந்த ஊர்மிளை…ராமாயண ஊர்மிளையா…?”

“வேற யார்…நீதானே தேடித்தேடி அந்த பேர வச்ச….”

“உனக்கு அந்த பேர வச்சது பெரிய தப்பாப் போச்சு….யூ ஆர் ஒப்ஸெஸ்ட் வித் தாட் நேம்…!”

“உண்மையாலுமே… நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரி..‘yes..I’m obsessed…’”

“சரி..பேர வேணா மாத்திக்கோ….”

“ஒரு நாளும் மாட்டேன்.. எனக்கு ஊர்மிளைய அவ்வளவு பிடிச்சிருக்கு…”

“பின்ன என்னதான் உன் பிரச்சனை..?”

“பிரச்சன எதுவும் இல்லம்மா… அவளைப் பத்தி உனக்கு தெரிஞ்சத சொல்லும்மா….!!”

“நான் உனக்கு எல்லாமே சொல்லிட்டேன். அப்பாகிட்ட பேசிப் பாரேன்…..”

அப்பா குடுத்த தகவல்….

மைதிலி சரண்குப்தான்னு மிகவும் புகழ்பெற்ற கவிஞர்…பத்ம பூசண் பட்டம் பெற்றவர்.

இவர்ஊர்மிளையைப்பத்தி .,

‘ சாகேத் ‘ ன்னு ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கார்…
அதில அவளோட மனநிலைய உணர்ச்சி ததும்ப எழுதியிருக்கார்…

சமீபத்துல அது பத்தின ஒரு கட்டுரைய கீதா சாம்பசிவன் எழுதியிருந்தத படிச்சேன்.. நீயும் படிச்சு பாரு..

ஒரு ஆணாயிருந்தும் பொண்ணோட உணர்ச்சிகளை மிகவும் சரியா புரிஞ்சு வைத்த ஒரு கவிஞர்…!”

படிச்சிட்டு எங்கிட்ட சொல்லு….. ஏதாச்சும் தெளிவு பிறக்கும்…!!”

ஸ்ரீமைதிலிசரண்குப்தாவினால் எழுதப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பு 12 அத்தியாயங்களால் ஆனது.

இதை எழுத அவருக்குக் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பிடித்தது. 1914-ல் எழுத ஆரம்பித்தவர் 1931-ல்தான் முடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ராமாயணக் கதைகளின் அடிப்படையிலேயே ஒரு புது நோக்கோடு செல்லும் இந்தக் கவிதைத் தொகுப்பின் நோக்கம் “ஊர்மிளையின் விரகம்”என்னும் உள்நோக்கத்தைக் குறித்தே செல்லுகிறது.

இதில் 9-வது அத்தியாயத்தில் ஆரம்பித்துப் பத்தாம் அத்தியாயமும் ஊர்மிளை தன் விரகத்தை நினைப்பதைக் குறிப்பதோடு பின் 11, 12-ல் ஸ்ரீராமர் திரும்புவதையும், லட்சுமணன் ஊர்மிளையுடன் சேருவதையும் குறிக்கிறது.

சாகேத்……

மிகவும் அற்புதமான கவிதை தொகுப்பு… எனக்கு இந்தி அவ்வளவா தெரியாததால தமிழில் வந்த கீதாவின் கட்டுரைய படிக்க ஆரம்பிச்சேன்.

ஊர்மிளையும் லக்ஷ்மணனும் மனசாலயே பேசிக்கிறாங்க.. பிரியாவிடை குடுத்து பிரிந்து போகிறான் காதல் கணவன்….

ஊர்மிளை…சீதாவுக்கு இருந்த தைரியமும் உரிமையும் உனக்கில்லையா??? நீ எப்படி உன் கணவன விட்டு பிரிஞ்சு இருக்க சம்மதிச்ச…?? உன் மேல எனக்கு நிஜமாகவே கோபமா வருது…..

உறக்கம் கலஞ்சு போச்சு… தலைவலி ஒரு பக்கம்… கிச்சன்ல போய் சூடா ஒரு காப்பி போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தேன்..

பேனாவை எடுத்து வச்சிட்டு எழுத ஆரம்பித்தேன்…

“இதோ புறப்பட்டு விட்டார்கள்… இராமனும் சீதையும்….இலக்குவனும் ஊர்மிளையும்..!?

பதினான்கு வருடம் வனவாசம்…அயோத்தியே கண்ணீரில் மிதக்கிறது…

“ஊர்மிளை. எனக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா…?

இந்த அரண்மனையை விட்டு எப்போது வெளியே போவோம் என்று காத்திருந்தேன்… அதுவும் உன்னோடு சேர்ந்து போவது எனக்கு அளவில்லா ஆனந்தத்தை தருகிறதே…”

“அக்கா..அங்கே பார்… நமது கணவர்களை…. அவர்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார்களே…!

அக்கா.. உண்மையைக் கூறுங்கள்…..இராமன் அரசாளவில்லை என்பது உங்களுக்கு வருத்தமளிக்கவில்லையா…?

“சகி…பரதன்தான் முடிசூட மிகவும் பொருத்தமானவன் என்று எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு.. இதில் எள்ளளவும் எனக்கு வருத்தமில்லை…”

“அது சரி அக்கா.. நாமும் அயோத்தியிலேயே இருந்து அவருடைய ஆட்சியை கண்குளிரக் கண்டு கொண்டிருக்கலாமே. ஏனிந்த வனவாசம்…?”

“கண்முன்னால் அண்ணன் இருக்க தம்பி அரசாளுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா…பரதனால்தான் அது முடியுமா…?

நமக்கும் வன வாசம் ஒரு நல்ல அனுபவத்தைத் தரப் போகிறது.. பார்த்துக் கொண்டே இரு…”

தூக்கம் கண்ண சுழட்டுது…பேனாவ மூடி வச்சிட்டு விளக்கை அணச்சிட்டு தூங்கப் போனேன்….

சித்ரகூடத்தில் பொழுது இனிமையாகவே கழிந்தது.. சீதையும் ஊர்மிளையும் இணைபிரியா தோழிகள் ஆகிவிட்டனர்.

பேசுவதற்கு நிறையவே இருந்தது…

“ஊர்மிளை, அரண்மனையிலிருந்தால் நாம் இந்த பறவைகளின் கீதத்தை கேட்டுக்கொண்டே உறங்கி இருப்போமா … நாம் இங்கேயே தங்கி விட்டால் என்ன….???”

“பொறு. அக்கா…இப்போதுதானே நமது பயணம் ஆரம்பித்து இருக்கிறது…! இனி வரப்போவதையும் பார்த்துவிட்டு பின்னர் உன் அபிப்பிராயத்தைக் கூறுவாயாக….”

அங்கிருந்து தண்ட காரண்யம் செல்ல வேண்டியதாயிற்று…

இராமனின் கைகளால் சாப விமோசனம் பெற எத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்கள்..!

சீதை மேல் ஆசைப்பட்டு அவளைக் கவர்ந்து சென்ற விராதனின் கைகளை வெட்ட தயாரான இலக்குவன் கைகளைக் தடுக்கிறாள் ஊர்மிளை….

இலக்குவன் விராதனின் கதையை எடுத்துக் கூறி அவனுக்கு இராமர் கையால் தான் சாப விமோசனம் என்பதை புரிய வைக்கிறான்…

அங்கிருந்து பஞ்சவடி…

இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமனின் அழகில் மயங்கிவிட்டாள்..

“அக்கா… இவள் அரக்கியாகத் தோன்றவில்லையே… எத்தனை அழகு…!!

“ஆம்..ஊர்மிளை.. அவள் நடந்து வரும் அழகைப் பாரேன்….

‘பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்….’

ஒரு அரக்கியை வர்ணிக்க கம்பர் எத்துணை மென்மையான வார்த்தைகளை பிரயோகித்திருக்கிறார்…?

ஆனால் அவ்வஞ்சமகள் இராமனை அல்லவா ஆசைப்படுகிறாள்..

அவளது மூக்கை அறுக்க விழையும் இலக்குவனைத் தடுக்கிறாள் காதல் மனைவி ஊர்மிளை….

இராமனுக்காக இன்னும் எத்தனை பேரை வதைக்கப் போகிறானோ தன் மணாளன் என்றும் கவலை கொள்கிறாள்…

ஊர்மிளையின் வருத்தத்தை புரிந்து கொண்ட இலக்குவன் மீண்டும் அவளைத் தேற்றுகிறான்..

“அக்கா.. வனவாசம் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை என்று புரிந்து கொண்டீர்களா…?

“ஆமாம்..ஊர்மிளை.. என்னால் வரும் துன்பத்தைப் போக்குவதே உன் கணவரின் தொழிலாகிவிட்டதே….நானும் இவர்களுடன் புறப்பட்டது தவறா… சொல்…!”

“இல்லையக்கா…. பார்க்கப் போனால் உங்களால் தான் இத்தனை பேரும் சாப விமோசனம் அடைந்திருக்கிறார்கள்…!”

“போடி….என்னை கேலி செய்கிறாய்..”

எல்லாவற்றிற்கும் சிகரமாக நடக்கிறது ஒரு சம்பவம்…

“ஊர்மிளை..அந்த தங்கமானைப் பார்…எனக்கு அது வேண்டும்…”

“வேண்டாம் அக்கா…அது ஒரு மாயமான் போல எனக்குத் தோன்றுகிறது..!”

ஆம்…அது மாயமான் மாரீசன்.. இராவணனின் ஆணைப்படி சீதையைக் கவர இராவணன் செய்யும் தந்திரம்..

அந்தமானின் மனநிலை பற்றி கம்பர் இப்படி வர்ணிக்கிறார்….

வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்

நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்…

மாரீசன் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டான்; மறுத்தால் இராவணன் கொன்று விடுவான்;

இராமனை எதிர்த்தால் அவன் அம்புக்கு இரையாக வேண்டுவது தான்; மரணம் என்பது அவனைக் கூவி அழைப்பதை உணர்ந்தான்.

நச்சுப் பொய்கையில் அகப்பட்ட மீன் தப்ப முடியாது; அந்தக் குளத்தில் இருந்தாலும் சாவு, கரையில் குதித்தாலும் சாவு; இருதலைக் கொள்ளி எறும்பு ஆனான்.

“எனக்கு அதன் மேல் தீராத ஆசை ஏற்பட்டு விட்டதே…”

இராமன் மானைத் தேடி புறப்பட்டு விட்டான்…

“இலக்குமணா….”

காட்டையே உலுக்கும் குரல்….

“ஊர்மிளை.. என் கணவருக்கு ஏதோ ஆபத்து..இலக்குமணனை உடனே விரைந்து போகச் சொல்….”

“இல்லையக்கா..இது இராமனின் குரலாகத் தோன்றவில்லை…ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று தோன்றுகிறது…”

கோடு கிழித்து விட்டுப் புறப்பட்டு விட்டான் இலக்குவன்…

“அம்மா..உள்ளே யாராவது இருக்கிறீர்களா…?? பசியால் குடலே வெந்துவிடும் போல் இருக்கிறதே…!”

“ஊர்மிளை.. வாயிலில் ஏதோ குரல் கேட்கிறதே….

பாவம்..ஒரு முதியவர்..பசி தாங்காமல் அரற்றுகிறார்….”

ஊர்மிளை எட்டிப் பார்த்தாள்… முதியவர் முகத்தில் ஒரு குரூர புன்னகை….ஊர்மிளைக்கு புரிந்து விட்டது…..

“சீதா..பொறு… அவரைப் பார்த்தால் முதியவராகத் தோன்றவில்லை…

இதில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது….!”

“தாயே… பசியில் உயிர் போகிறது.. சீக்கிரம்…!”

“ஊர்மிளை… உனக்கு எடுத்ததெற்கெல்லாம் சந்தேகம்…!”

சீதை உள்ளே சென்று ஒரு பாத்திரத்தில் அன்னத்தை கொண்டு வருகிறாள்..

“சீதா..நிறுத்து… அவன் வேடமணிந்துள்ளான்..போகாதே..நில்…”

“என்னங்க…ஊர்மிளா ரூம்ல ஏதோ சத்தம்… வாங்க பாக்கலாம்…”

வியர்த்துக் கொட்டினபடி ஊர்மிளை உட்கார்ந்து இருக்கிறாள்..

“ஊர்மிளா..என்னாச்சும்மா… ஏதாச்சும் கெட்ட கனவா…?”

“ஆமாம்மா.. ராவணன் வந்து அக்காவ தூக்கிட்டு போகப் பாத்தான்..நல்லவேளை… நான் தடுத்து நிறுத்திட்டேன்…”

மதிக்கும் புரிந்து விட்டது..

“சரி..படு..காலைல பேசிக்கலாம்….”

மறுநாள் காலை … ஞாயிற்றுக் கிழமை… இனியனும் கனியனும் ஜிம்முக்கு போயிருந்தார்கள்…

மூன்று பேரும் வழக்கம்போல் ஒன்றாக அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார்கள்…

“அப்பா..அம்மா..நேத்து உங்கள பயமுறுத்திட்டேன் இல்லியா….”

இரண்டு பேரும் சிரித்தார்கள்…

“ஏன் சிரிக்கிறீங்க….?”

“நீதான் இராமாயண கதையோட க்ளைமேக்ஸயே மாத்திட்டியே…. நீ மீதிக் கதய சொல்லு…!”

“அம்மா..ஊர்மிளைய ஏன் காட்டுக்கு அனுப்பாம வச்சிட்டாருன்னு இப்போ புரிஞ்சு போச்சு.. இரண்டு பெண்கள் சேந்தா கேக்கவா வேணும்..?

யுத்தத்த எப்படியும் நிறுத்திடுவாங்க…. அப்புறம் கதையில என்ன சுவாரசியம் இருக்கப்போவுது…?

நிஜமா நடந்ததோ..இல்லை கவிஞரின் கற்பனையோ…இந்த மாதிரி ஒரு காவியம் கிடைத்தது நமக்கு பெருமைதானே..

ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கி இருக்கும் நேர்த்திய பாராட்டாமல் இருக்கவே முடியாது…இத அரகுறையா படிச்சிட்டு விமர்சனம் பண்ணாம முழுவதும் படிச்சு பாத்து கருத்தை சொன்னா நல்லா இருக்குமில்ல அப்பா….?

ஊர்மிளா…நீ சொன்னதுதான் சரி..!

ஊர்மிளை…நீ செஞ்சது தான் சரி..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *