Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஊருக்குள் நூறு பெண்….

 

அந்தப் பெண்களோடு பேசிய பின்னால் தான் அவருக்கு இப்படி ஒரு ஞானம் வந்திருக்கோணும். நெஞ்சு இறுக்கம் அடைவது போலவும் அடிமனதிலே சில பேர் சேர்ந்து சம்மட்டியால் அடிப்பது போலவும் ஒரு வலி.

அவரிடம் கடைசியாக வந்த சுகன்யாவுக்கு 20 வயது தான் ஆகிறது. மூன்று வயதிலே ஒன்றும் இரண்டுவயதிலே இன்னொன்றுமாக இரண்டு குழந்தைகளை கையிலே கொடுத்துவிட்டு அவளது கணவன் போய்விட்டான். இங்கே நடக்கக் கூடிய வழமையான செயற்கைச் சாவிலே ஒன்றாக அவனது பெயரையும் காலம் இணைத்துக் கொண்டது. வறுமையோடு போராடும் பெற்றோர் ஒரு பக்கம் வெறுமையாகிப் போன வாழ்க்கை மறுபக்கமுமாகித் தகிக்கின்ற சுகன்யாவின் கதையைக் கேட்கக் கேட்க கவலையாகத் தான் இருந்தது.

இதுவரையிலும் ஒரு பன்னிரண்டு பெண்களாவது சிவத்தம்பியிடம் வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே இந்தச் சுகன்யா போலத்தான் வலிகளையும் ஏக்கங்களையும் தங்கள் வாழ்க்கை வயலிலே நடவு செய்து வைத்திருக்கிறார்கள். இளவயதிலேயே கணவனை இழந்து போய் இருண்ட வாழ்க்கைக்குள்ளே தடுமாறிக்கொண்டிருக்கும் இவளைப் போல எத்தனை ஆயிரம் பெண்களை இந்தக் கலம்பகம் உருவாக்கித் தந்திருக்கிறது.

கல்யாண விளம்பரத்துக்காக பல பேர்கள் விண்ணப்பித்திருந்தாலும் கூட அவர்களுக்குள்ளே சுகன்யாவும் சாந்தியும் தான் அவரது தெரிவுக்குரியவர்களாக இருக்கிறார்கள். சாந்திக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. கறுப்பென்றாலும் சுமாரான வடிவு. மலையகம் தான் அவளது பூர்வீகம். ஊர் சுற்றும் அண்ணனால் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவளது வயதான பெற்றார். சீதனம் அவளது திருமணத்துக்கான தடைக்கல்லாக இருக்கிறது.அதனால் தான் விவாகரத்து செய்தவனைக் கூட கட்டிக் கொள்ள அவள் சம்மதித்திருந்தாள்.

இந்த மனுசப் பயலுகள் எல்லாம் விண்வெளிக்கு போய் சீவிச்சாலும் கூட சீதனச் சமாச்சாரத்தை கைவிட மாட்டாங்கள் என நினைக்கும்போது கவலையாகத்தான் இருந்தது.

“எனக்கும் மனசிருக்கு அய்யா …….! வயசு போனவனோ….. சொத்தியோ….. குருடோ யாராயிருந்தாலும் கூட பரவாயில்லை.. வாறவன் என்னை முழுமையா நேசிக்க வேணும் அதைத்தான் நான் எதிர்பார்க்கிறன்……. ஆனா வாறவன்கள் எல்லாம் எனக்கு இரவிலை மட்டுமே தாலி கட்ட நிக்கிறான்கள்.” அழுதபடி தான் தனது கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள் சாந்தி.

ஒ …..! கடவுளே சீதனம் எனும் இந்த சீழ் வியாதியை விதைத்தவன் யார் ….? இப்பிடி எல்லாம் இந்தத் தமிழ் பிள்ளையள் அவஸ்தைப்பட என்னர பெடியனும் ஒருவகையில் காரணம் தானா ….? இல்லாட்டி வெளியூர் போனவனுகள் எல்லாம் வெள்ளைக் காரியளையே கட்டிக் கொண்டிருந்தா ஊரிலை இருக்கிற எங்கடை பெட்டையளை யார் வந்து கலியாணம் கட்டுறது….?

இன்னும் கூட கண்கள் கசிந்தபடிதான் இருந்தது சாந்திக்கு…… முகத்தை துடைத்து விட்டபடி தொடர்ந்தாள்.
“நான் நேர்மையா இருக்க வேண்டித் தான் இவ்வளவு இடஞ்சலுக்குள்ளையும் போராடிக் கொண்டு இருக்கிறன் … ஆனா என்னை விடமாட்டன் என்டுது இந்த சமுதாயம்“.
நிலத்தை வெறித்துக் கொண்டாள்.

ஏழ்மையிலும் கூட ஒழுக்கமாக வாழவேணும் என நினைக்கும் அவளை அவருக்குப் பிடிச்சிருந்தது. இந்த ஒழுக்கம் ஒன்றைத் தேடித்தானே இங்கு அவர் வந்திருக்கிறார். அதனால் தான் சாந்தியையும் சுகன்யாவையும் அவருக்குக் கூடுதலாகப் பிடித்திருந்தது.

——————————— ———————————— ———————-

ஒரு நல்ல பெண்ணாப் பார்த்து மகனுக்குக் கலியாணம் செய்து வைக்கவே சிவத்தம்பி பாரிசிலிருந்து வந்தவர்; இலங்கைக்கு வந்த நாளில் இருந்து இரவு பகலாக ஓடித்திரிந்தாலும் கூட இன்னும் அவரால் ஒரு முடிவுக்கு வர முடியாமலே இருந்தது.

ஒவ்வொரு பெண்ணையும் வீட்டிலே கூப்பிட்டு வைத்து தனித் தனியாக கதைக்கிறதென்பது அவ்வளவு பண்பானதாக அவருக்குப் படவில்லை. பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாக நினைத்துவிட்டால்…… எனவே தான் சுகன்யாவை அம்மன் கோவிலுக்கு வரச்சொல்லி இருந்தார்.

பத்து மணிக்கெல்லாம் வருவதாகச் சொல்லியவளை இன்னும் காணவில்லை. கூட்டம் குறைவாகத் தான் இருந்தது. செருப்பை பாதுகாக்கும் பெண்மணியிடம் தனது பாதணிகளைக் கொடுத்தார். அவளோ ஐஸ் கிறீம் வாகனத்தையே காட்டிக் காட்டி அழுது கொண்டிருந்த தனது பிள்ளையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். உள்ளே போய் ஒரு தூணோடு சாய்ந்து கொண்ட போதுதான் அந்த இருவரின் பேச்சும் எதேச்சையாக அவரின் காதிலே விழுந்தது.

“ஏன் …… நீங்கள் விழுந்து கும்பிட மாட்டீங்களோ…!“ இது சேலையிலே நின்ற அந்தப் பெண் சொன்னது.

“எனக்கு இதிலை பெரிசா விருப்பமில்லை …… நான் கோயிலுக்கு வந்ததே நீர் கோபிக்கக் கூடாது எண்டதுக்காகத்தான்|” பதிலுக்கு அந்தப் பையன்.

“ஏன்…? எதுக்காக சாமிமேலை இந்தக் கோபம்….?“ இப்போது கும்பிடுவதனை நிறுத்தி விட்டு அவனது பதிலுக்காக அவனையே பார்த்தாள்.

“கோபம் சாமிமேலை இல்லை…… அதோ….! அந்த சனங்கள் மேலை”

அவன் காட்டிய திசையிலே பால்க்குடங்களோடு வரிசையிலை பலர் நின்றிருந்தார்கள். முண்டியடித்துக் கொண்டு சாமி சிலைக்குப் பால் வார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபடி மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“அந்தப் பால் இன்னும் கொஞ்ச நேரத்திலை சாக்கடையோடை சேரப்போகுது. அதே நேரம் பாலுக்கும் வழியில்லாமலே ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தா பக்கத்திலை தான் ….. யாருக்கு அக்கறை வேண்டி இருக்கு.” இப்போது அவன் முகத்திலே ஒரு கவலை படிந்தது.

அதே வேளை அந்தப் பெண்ணின் முகம் வாடிக்கொண்டு போனதை அவதானித்தவன் சுற்று முற்றும் பார்வையால் துளாவினான். ஒரு பக்கத்திலே வைத்திருந்த வள்ளுவன் சிலை அவன் கண்ணிலே பட்டிருக்க வேண்டும். அந்த சிலை முன்பாக சடாரென விழுந்து வணங்கிக் கொண்டான்.

“வணக்கத்துக்குரியவன் வள்ளுவன் இல்லையா ….?” அவன் சிரிக்க பதிலுக்கு அவளிடம் இருந்து செல்லமான முறைப்புத் தான் வந்தது.

—————- —————- ————- ———–

“உங்களுக்கு சில கடிதங்கள வந்திருக்குது அய்யா.”

உடுப்புக்களைக் கழுவிக் கொண்டிருந்தவர் கைகளிலே படிந்திருந்த சவர்க்கார நுரைகளை துடைத்துக் கொண்டபடி குரல் வந்த திசையை எட்டிப் பார்த்தார். வீட்டுக் காவலன் வாசலிலே நின்றான்.

“அலுவலா நிக்கிறன் தம்பி கொண்டு வந்து தாறியோ.” சங்கடப்பட்டுக் கொண்டே கேட்டார்.

“கையெழுத்துப் போட்டுட்டுத்தான் எடுக்கோணும் அய்யா” என்றவன் எதையோ புறுபுறுத்துக் கொண்டு படிகளிலே இறங்கினான். அவன் பின்னே போன சிவத்தம்பியர் கடிதக்காரனிடமிருந்து கடிதங்களை கை ஒப்பமிட்டு எடுத்துக் கொண்டார். ஓரிரு கடிதங்களைத் தவிர வந்த அனைத்தும் கலியாண விசயமாகவே இருந்தது.

வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்த புதிசிலை எங்கடை பண்பாட்டுக்கு இசைஞ்சு தான் அவள் இருந்தவளாம். காலம் போகப் போகத் தான் அவள் தன்ர வழியிலை போகத் துவங்கிட்டாளாம். பிறந்த குழந்தையை சிவத்தம்பியரிட்டை விட்டுட்டு இரவிரவா விடுதியளுக்கும் டிஸ்கோவுக்கும் போய் கூத்துப் போடுறது மட்டுமில்லை தண்ணியைப் போட்டுட்டு நிறை வெறியிலை இரண்டு பேரும் வரேக்கை அதைப் பாக்கிறவன் பின்பக்கத்தாலை எல்லே சிரிச்சாங்கள். இது சரிப்பட்டு வராது எண்டு அவர் முடிவெடுக்கவும் அவளாவே வலிய வந்து விவாகரத்து கேட்டாள். அவரோடை பெடியனும் இப்ப வலு திருத்தம். இனிமேல் கலியாணம் செய்யிறது எண்டா சொந்த ஊரிலை இருந்து தான் பொம்பிளை வேணுமெண்டு நிக்கிறான். அதுக்காகத் தான் கொழும்பிலை இந்தத் தரகர் வேலை.

———– ———— ———— ———— ——–

மாலை நேரமாகியும் கூட வெயில் சூடு குறையவில்லை. கடற்கரைக் காற்று உடலுக்கும் மனதுக்கும் இதமாகத்தான் இருந்தது. காற்றிலே பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறார்கள் அந்த நாய்க்குட்டியின் அவலக்குரல் கேட்டு கடற்கரைப் பக்கமாக ஓடிவந்து பார்த்தார்கள்.

நீல நிறச் சீருடையிலே நின்ற சில இளைஞர்கள் ஒரு நாய்க்குட்டியை பலவந்தப்படுத்தி கடலுக்குள் தூக்கி எறிவதும் அந்த நாய் அலையை எதிர்த்தபடி சிரமப்பட்டு நீந்தி கரைவருவதும் மீண்டும் தூக்கி எறிவதுமாக நாய்க்குட்டியை துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.அதைப் பார்க்க மனசுக்குக் கஸ்டமாகத்தான் இருந்தது. கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்த அந்த குட்டிநாயை இப்போது பெரியதொரு அலை வந்து அள்ளிச்சென்றது. திரும்பி வரும் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிறுவன் ஒருவன் நீண்ட நேரமாக கடலையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு வாடிய முகத்தோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அவர்களுக்கு மிருகாபிமானம் இல்லை என்பது சிறுவனுக்கு எப்படித் தெரியப் போகிறது. மனதுக்கு இதம் தேடிவந்தவர் இருண்ட மனசோடு தான் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்.

—————— —————– ————— ————

மழையில் நேற்று நனைந்ததாலோ என்னவோ தலைக்குள் விண்விண் என்று வலித்தது. இரண்டு பனடோலை எடுத்துக் குடித்துவிட்டு தரகர் முன்னே கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வெத்திலைத் தட்டை அவர் முன்னே நீட்டினார்

“நான் கொண்டுவந்த வரனிலை ஒண்டையுமே பிடிக்கேல்லையா..? ” கவலை தோய்ந்த குரலிலே தரகர் கேட்டார்.

“இதென்ன சின்ன விசயமே… யோசித்துத் தானே சொல்ல வேணும்“ சிவத்தம்பியரின் பதில் சற்று இறுக்கமாகவே இருந்தது. தெருவிலே போன வாகனம் ஒன்று ஒலிபெருக்கியிலே எதையோ அறிவித்துக் கொண்டுபோனது.

“அதொண்டும் விசேசமில்லை பாருங்கோ….. இங்கை இது வழமையான ஒன்று தான் …அஃதாவது தலைநகரத் தமிழரை எல்லாம் வந்து பள்ளிக்கூடத்திலை பதியச் சொல்லி காவல்த் துறை அறிவிச்சுக் கொண்டு திரீது“ என்று அதற்க்கொரு விளக்கம் கொடுத்தார் தரகர்.

அடுத்த சில மணித்துளிகளும் மொனத்துள்ளேயே இருவரும் கரைந்து போனார்கள்.

“உங்கடை மகனை விட பத்து வயசு குறைவா இருக்கிறாள். இந்தா…… இதைக்கூடவா உங்களுக்கு பிடிக்கேல்லை“

கையிலை இருந்த படத்தை அவரது முகத்துக்கு முன்னாலை நீட்டினார்.

“…………..“

“நல்ல சீதனம் ……. பொருத்தம் வேறை வலு திறம் ….. என்ன சொல்றிங்கள்…?“

மௌனத்தை உடைத்துக் கொண்ட சிவத்தம்பியர் “சாத்திரம் குறிப்புகளிலை எனக்கு நம்பிக்கை இல்லைப் பாருங்கோ. பொய் சொல்லாமை நேர்மையா பெண் எடுக்கோணும் எண்டு தான் நினைக்கிறன்.”

“அது … எப்பிடி அய்யா …..! தரகரின்ரை அடிப்படைப் பழமொழியினையே மாத்தச் சொல்றதிலை என்ன நியாயம்.“

“பழமொழியை மாத்திறனோ…? எப்பிடி…? ”

“ஆயிரம் பொய் சொல்லியும் கலியாணம் செய்யலாம் எண்டதை” ….. காவிப் பற்கள் வெளித்தெரிய கெக்கட்டம் போட்டபடி தரகர் சிரித்தார்.

“அந்தப் பழமொழியை நீங்கள் தான் பிழை மொழி ஆக்கீட்டிங்கள்.“

தொண்டை கரகரத்தால் செம்பிலே இருந்த தண்ணியை எடுத்துக் குடித்து விட்டு செருமிக் கொண்டார்.

“அதின்ர சரியான விளக்கம் அதில்லை ……. ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கலியாணத்தை செய்ய வேணும் எண்டது தானே தவிர நீங்கள் சொல்லிறது மாதிரி இல்லை“.

தனது தொழில் கேலிசெய்யப்படுவதை விரும்பாத தரகர் பேச்சின் திசையை மாற்ற முயன்றார்.

“பிரான்சிலை எப்பிடி நடப்புகள் ……… என்ர தொழிலுக்கு மதிப்பிருக்கோ …? “

“நான் என்னத்தச் சொல்ல? ………… வெளிநாட்டில என்ர பெடியன் மாதிரி நிறையப் பெடியள் இருக்கிறாங்கள் அப்பு. அவங்களிலை சிலபேர் வெள்ளைக் காரியளை கட்டிக் கொண்டு திரியிறாங்கள்.”

“அப்படியெண்டா ……. ஊரிலை இருக்கிற எங்கடை பெட்டையளின்ரை நிலமை…..“

“வெள்ளைக்காரன் தான் வந்து கட்டோணும்.“ கைகள் இரண்டினையும் தூக்கி உயர்த்திக் காட்டினார்.

“நான் கிளம்புறன் ……. இந்தப் படங்களிலை யாரையேனும் உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கு சொல்லுங்கோ“ என்றபடி அறையை விட்டுக் கிளம்பினார் தரகர்.

————- ————— ———— ————-

சுகன்யா நிறையவே அழுதிருக்கவேணும் போல அவளின் கண்கள் சிவந்து போய் இருந்தன. அதற்கான காரணத்தை கேட்பது கூட அநாகரிகம் போலவே இருந்தது. எது எப்படியோ அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வதிலே சில தடைகளும் இருக்கத்தான் செய்தது.

“பிள்ளை நான் சொன்னதைப்பற்றி உன்ர முடிவு என்ன …? “

“…………?“ குழந்தையின் தலையினைத் தடவிக்கொண்டிருந்தவளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

“கலியாணம் செய்து பிரான்சுக்கு நீ போகேக்கை பிள்ளைகளை என்ன செய்யப்போறா ….? உங்கடை வாழ்க்கைக்கு குழந்தைகள் தடையாக இருக்கக் கூடாது எண்டு தான் நான் நினைக்கிறன்….“

“நான் என்ன செய்ய ஐயா ….! உங்களுக்கு சிரமம் எண்டா அதுகளை என்ர அம்மா அப்பாட்டை விட்டுட்டு வாரன்.“

சிரமமான கேள்வி என்பதால் பதில் சொல்வதற்கு மிகவும் சிரமப்பட்டாள்

“உன்னாலை அது முடியுமா ….?“

“முடியாது தான் ஆனா பிள்ளையளின்ரை எதிர்காலம் நல்லா இருக்கவேணும் எண்டா இதைத்தவிர வேறு வழியில்லையே எனக்கு ….”

கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் சொல்வதை ஆமோதித்துக் கொண்டது.

…………… ………………. ………………… ………………..

வரவேற்பறையிலே இருந்த மலர்ச்செடிகளுக்கு நீர்தெழித்துக் கொண்டிருந்த பூமணி வாசல் கதவருகே தனது அண்ணன் சிவத்தம்பி வந்து நின்றதை அவதானிக்கவில்லை. அவனது செருமல் சத்தம் கேட்டு திடுக்கிட்டவள் கையிலே இருந்த பாத்திரத்தை கீழே போட்டுவிட்டாள்.

நீயா….! பெரியண்ணை …? பயந்திட்டன். இப்பதான் உன்னை நினைச்சன்.

“என்னையோ ….?“

“ ம் உன்னை விளங்கிக் கொள்ளவே முடியேல்லை …!“

“ஏன்…? “

“இல்லை….. கலியாணமே செய்யாத பிள்ளையள் நல்ல சீதனத்தோடை வந்தும் கூட உன்ர மகனுக்கு ஏன் அண்ணா ஒரு விதவையை கட்டி வக்க நிக்கிறா ….?“

அவளைப் பார்த்து முறுவலித்தவர்

“அவனும் ஏற்கனவே ஒரு வெள்ளைக்காரியோடை சேர்ந்து வாழ்ந்தவன் மட்டுமல்ல அவனுக்கும் குழந்தை இருக்கு .?“

“அதுக்காக….?“

“கலியாணம் முடிக்காத பிள்ளைகளை கட்ட ஏராளம் பேர் போட்டி போட்டு வருவாங்கள். ஆனா வன்முறைகளுக்கு வாழ்க்கையை பறிகொடுத்தவளை யார் வந்து கட்டுவாங்கள்….?“

அவனது கேள்விக்கு அவளிடம் இருந்து பதில் உடனே வந்தது.

“அப்பிடிப் பாத்தா இவளைப் போல ஆயிரம் பெம்பிளையள் இங்கை இருக்குதுகள் …. எல்லாருக்கும் நீ ஒருத்தன் என்ன செய்யவா ….?“

“என்பங்குக்கு ஒண்டு ……. இப்பிடி என்னைய மாதிரி ஊருக்குள்ளை நூறு பேர் இருக்க மாட்டாங்களா….?”

சிவத்தம்பியின் பதில் அவளுக்கு திருப்தியை தந்திருக்கு வேணும் போல அவள் பிறகொன்றும் பேசவேயில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)