உள்ளும் புறமும் – குறுங்கதை

 

‘மெடி கிளினிக்’கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில் ஏராளமானவருக்கு அவர்தான் ‘•பமிலி டொக்ரர், ஜி.பி (G.P)’.

மோகனும் நளினியும் ஒரு மூலையிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகன் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தான். சிறுவர்கள் விளையாடுவதற்கென வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைக் கொட்டிச் சிந்தி விளையாடினான். கதிரைகளில் ஏறிக் குதித்து இறங்கினான். அவற்றின் ஒரு முனையால் புகுந்து மறுமுனையால் வெளியேறினான். துள்ளித் துள்ளி நடந்து அழகு காட்டினான். ‘கொபி ரேபிளில்’ வைத்திருந்த பேப்பர் சஞ்சிகைகளை விரித்துப் படித்து அங்குமிங்குமாக வைத்தான்.

அவனது செய்கைகளை அங்கே வந்திருந்த வேற்றினத்தவர்கள் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். எதிரே இருந்த ராமநாதனின் மனைவி கவிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“வருத்தக்காரர்கள் கிளினிக்குக்கு வரேக்கை பிள்ளைகளை வீட்டிலை விட்டிட்டு வர வேணும். நோயாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படாது” தனது கணவனுக்கு வேண்டுமென்றே பிலத்துக் கூறினாள் கவிதா. மோகனுக்கும் மனைவிக்கும் கேட்க வேண்டுமென்பதுதான் அதன் உள் நோக்கம். கவிதாவின் தோளில் ஒரு ஒட்டி உலர்ந்த பையன் தொங்கிக் கொண்டு இருந்தான். வாடிப் போன தோற்றமுடைய அவனது மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. கடும் காய்ச்சலாக இருக்கலாம்.

மோகனின் மகன் ‘பில்டிங் புளொக்ஸ்’சில் ஒரு கார் செய்து கொண்டு வந்து காட்டினான். மோகன் மகனிற்கு கை தட்டி உற்சாகம் கொடுத்தான். அது கவிதாவிற்கு இன்னும் கடுப்பை ஏற்றியது. ராமநாதனின் காதிற்குள் குசுகுசுத்தாள் அவள்.

மோகனிற்குப் பக்கத்தில் ஒரு கதிரை வெறுமையாகக் கிடந்தது. ராமநாதன் அதில் வந்து அமர்ந்தான். “என்ன வருத்தம் உங்களுக்கு?” தோழமையாக மோகனைப் பார்த்து ராமநாதன் கேட்டான். “வருத்தம் எனக்கில்லை. குழந்தைக்கு. இரண்டு மூண்டு நாளா பிள்ளை சாப்பிடுகுதில்லை” கவலையாகச் சொன்னான் மோகன். “குழந்தைக்கா? சாப்பிடாத குழந்தையா இவ்வளவிற்கு துடியாட்டமாக உள்ளது?” மனதிற்குள் ஆச்சரியப்பட்டான் ராமநாதன்.

சுறுசுறுப்பாக குழப்படிகள் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்தபடியே மீண்டும் மனைவிக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தான் ராமநாதன்.

கொஞ்ச நேரத்தில் மோகனின் மகன், கவிதாவின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை விளையாட வரும்படி சுரண்டினான். அது முழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. கவிதா இருக்கையை விட்டு எழுந்து ‘றிசெப்ஸ்சனிஸ்ட்’டிடம் முறைப்பாடு தொடுத்தாள். ‘றிசெப்ஸ்சனிஸ்ட்’ உள்ளே வந்து நோட்டம் விட்டாள். பின்னர் டாக்டரின் அறைக்குள் சென்று டாக்டருடன் ஏதோ கதைத்தாள். அவளின் புண்ணியத்தில் டாக்டர் அடுத்ததாக மோகனின் குடும்பத்தை உள்ளே எடுத்தார்.

உள்ளே அவர்கள் போனதும் கவிதா புறுபுறுத்தாள் “என்ன பிள்ளை வளர்ப்பு வளக்கினம் இவையள். ஒரே குழப்படி” பக்கத்திலிருந்த அடுத்த தமிழ் குடும்பத்தைப் பார்த்துச் சொன்னாள். அவர்கள் உதட்டிற்குள் சிரித்துவிட்டு இருந்தார்கள்.

சற்று நேரத்தில் மோகனின் குடும்பம் டாக்டரின் அறையிலிருந்து வெளியேறியது. மோகனின் மகன் போகும் போது எல்லாரிற்கும் ‘•பிளையிங் கிஸ்’ கொடுத்துவிட்டுப் போனான். கவிதா வேண்டா வெறுப்பாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“படு குழப்படி. படு குழப்படி” என்று முனகிக் கொண்டாள்.

நாலைந்து பேர் டாக்டரைப் பார்வையிட்ட பின்னர் ராமநாதன் குடும்பம் உள்ளே போனது.

“பிள்ளைக்கு என்ன சுகமில்லை?” டாக்டர் கேட்டார்.

“கொஞ்ச நாளா சோம்பிச் சோம்பி இருக்கிறான். காய்ச்சலும் இருக்கு. சுறுசுறுப்பா இருக்க ஏதாவது விட்டமின் ரொனிக் குடுக்க மாட்டீங்களா?” கவிதா கேட்டாள்.

“இந்த நாட்டிலை விட்டமின் ஒண்டும் குடுக்கத் தேவையில்லை. எல்லாம் இயற்கையான சாப்பாட்டிலேயே இருக்கு.” டாக்டர் கொஞ்சம் விலாவாரியாக குழந்தைகளின் உணவு முறை பற்றி விளக்கம் கொடுத்தார்.

“அப்ப எங்களுக்கு கொஞ்சம் முன்னாலை வந்த அந்தப் பிள்ளை போல, மொழுப்பா நல்ல துறுதுறுப்பா இருக்க வேணுமெண்டா நாங்கள் பிள்ளைக்கு என்ன செய்ய வேணும்?” ராமநாதனும் மனைவியும் ஏக காலத்தில் கேட்டனர்.

டாக்டர் தனது •பைல்களைத் தட்டிப் பார்த்துவிட்டு “நீங்கள் மோகனின்ர பிள்ளையைச் சொல்லுகிறியள் போல கிடக்கு” என்றார்.

“ஓம். ஓம்” என்றனர் இருவரும்.

டாக்டர் தலையிலே தன் கையை வைத்து சிந்தனையில் ஆழ்ந்தார்.

-ஜனவரி 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது."அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது."இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் ...
மேலும் கதையை படிக்க...
விடிந்தால் பரீட்சை. ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின்போது என்ன கலர் மூக்குத்தி அணிந்திருந்தார்? – என்பவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதில் பிரயத்தனப் பட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான். துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ...
மேலும் கதையை படிக்க...
எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று அவரைச் சந்திப்பதற்காக புறப்பட்டிருந்தது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். ...
மேலும் கதையை படிக்க...
நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். 'தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்' அப்பா தேவாரம் பாடிக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே நடந்தார். அம்மாவும் ...
மேலும் கதையை படிக்க...
எதிர்கொள்ளுதல்
பரீட்சை
அனுபவம் புதுமை
நடை
காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)