Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உள்ளத்தில் விழுந்த சவுக்கடி !

 

“ ஏ…வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ வெரசாப் போய்ப் பார் !“ என்று வெள்ளையம்மாள் வசிக்கும் குடிசையில் வந்து குரல் கொடுத்தாள், எதிர்வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள். ‘ இந்த பாவி மனுஷனுக்கு என்னத்த சொன்னாலும் கேட்க மாட்டங்கறானே ,குடும்ப நெலமை தெரியாமல் இப்படி குடிக்கிறானே ! ‘ என தனக்குத்தானே வெள்ளையம்மாள் புலம்பிக்கொண்டு “ ஏலே சின்னராசு வட்டிலே பழைய கஞ்சி ஊத்தி வெச்சிருக்கேன். கஞ்சிய குடிச்சிட்டு, வீட்டுக் கதவை சும்மா சாத்திட்டு பள்ளிக்கு போ” என தன் மகனிடம் கூறிச் சென்றாள்.

வெள்ளையம்மாளும் வெள்ளைச்சாமியும் படிப்பறிவு இல்லாத அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்குகீழ் குடிசையில் வாழ்ந்து வருகிற கணவன் மனைவி. வெள்ளைச்சாமி நாள்தோறும் கூலிக்கு என்ன வேலை கிடைக்கிறதோ அதை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் கிடைக்கிற கூலியை முழுசாக வெள்ளையம்மாளிடம் வந்து அவன் ஒருநாள்கூட கொண்டுவந்து கொடுப்பதில்லை. அவனுக்கு குடிதான் சொர்க்கம். மற்றபடி தன் மனைவி பற்றியோ ஆறாவது படிக்கும் தன் மகன் சின்னராசு பற்றியோ எந்தக் கவலையும் அவன் படமாட்டான். அவன் மனைவி வெள்ளையம்மாள் பக்கத்து தெருவில் நாலைந்து வீடுகளுக்குச் சென்று பத்துபாத்திரங்கள் தேய்த்து அவர்கள் கொடுக்கும் கூலியையும், அவர்கள் வீட்டில் கொடுக்கும் மீதமான உணவையும் வாங்கி வந்து தனக்கும் தன் மகன் சின்னராசுக்கும் கொடுத்து தன் பிழைப்பை நடத்தி வந்தாள்.

மகனுக்கு விபரம் தெரிந்தவுடன் “ அம்மா ஒன்னை அப்பா ஏன் தெனமும் அடிக்கிறாரு “ என்று கேட்டதற்கு “எல்லாம் என் தலைவிதி. அதெல்லாம் ஒனக்குத் தெரிய வேண்டாம். உன் அப்பனை மாதிரி நீயும் குடிகாரனாக மாற வேண்டாம்” என்று கூறியும் சமாளித்துக் கொண்டிருந்தாள். வெள்ளையம்மாள் தன்னோட கையோட எடுத்துச்சென்ற பிளாஷ்டிக்குடத்து தண்ணீரைக் கணவன் வெள்ளைச்சாமி தலையில் கொட்டினாள். அவள் தண்ணீரை அவன் தலையில் கொட்டியவுடன் “என்ன திடீருன்னு மழை பெய்துன்னு “என்று கத்தினான்.

“ஆமா நீ இருக்கிற எடத்திலே மழையாப் பெய்யும் ? வெயில்தான் நல்லா அடிக்கும். எழுந்து நில்லு வா வீட்டுக்கு போகலாம் “ என்று கூறிக்கொண்டே அவனைக் கைத்தாங்கலாக வெள்ளையம்மாள் அழைத்துச் சென்றாள்.

வெள்ளைச்சாமி வீட்டிற்குள் தள்ளாடிச் சென்று சுயநினைவுக்கு வந்தவுடன், “ ஏண்டி வெள்ளையம்மா நான் பேசாம சிவன்னேன்னு பிள்ளையார்கோவில் மரத்தடியில் படுத்திருந்தவனை, ஏன் கூப்புட்டு வந்தே ? நீ வீட்லே எனக்கு மீன் கொழம்பு சோறாக்கி வெச்சிருக்கியா.” என்று கண்டபடி பேசிக் கொண்டே ,திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிகை கோவை சரளாவை கன்னத்தில் ஓங்கி அடித்து, தன்னோட காலால் மிதித்துத் தள்ளுவதைபோல் அவன் வெள்ளையம்மாளை மிதித்து தள்ளினான். .

“அடி பாவி மனுஷா! நான் நேத்துதான் ஊருக்காரங்களோட சேர்ந்து இந்தப் பாழப்போன மதுக்கடையைத் தெறக்க வேண்டாம்னுதான் கடையில் இருந்த பாட்டிலெல்லாம் கீழே போட்டு நொறுக்கிட்டு வந்தேன். நீ தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து இந்தக் கூத்துப் பண்றே. நீ எப்பதான் திருந்தப்போரையோ என் கஷ்டம் உனக்கும் புரியமாட்டங்குது. உன்னைப் போன்ற குடிகாரங்களாலே குடும்பம் கஷ்டப்படுவதைப் பத்தி இந்தக் கவர்மெண்டுக்கும் புரியமாட்டங்குது” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு வெள்ளையம்மாள் அழுதாள்.

இரவு வந்தவுடன் வெள்ளைச்சாமி வழக்கம்போல் வெள்ளையம்மாளை சமாதானப்படுத்தினான்.” வெள்ளையம்மா கண்ணு இனிமேல நான் சத்யமாக குடிக்கமாட்டேன். தெனமும் எனக்குக் கெடைக்கற கூலிக்காசை, அப்படியே வந்து உன்னிட்ட கொடுத்திடறேன்” என்று கூறிக் கொண்டே அவள் கன்னத்தினை மெதுவாகத் தடவிக் கொடுத்து விட்டு, நான் பெலமா அடிச்சிட்டேன்னா? வலிக்குதா ?அவள்மேல் அக்கறை உள்ளவன்போல் கேட்டுக்கொண்டே அவளைத் தொட்டவுடன், அவளும் அவன் சொல்லிலும் செயலிலும் மயங்கி அவனை இதமாக அணைத்தாள்.

மறுநாள் காலை வெள்ளைச்சாமி எழுந்தவுடன் கூலி வேலைக்கு கிளம்புவதற்கு தயாராக குடிசையின் முன் நின்றான். அப்போது அவன் மகன் சின்னராசு “அப்பா எனக்கு நோட்டு வாங்க முப்பது ரூபா பணம் கொடுப்பா .நோட்டு இன்னிக்கி நான் கொண்டு போகலன்னா வாத்தியார் என்னை அடிப்பாருப்பா “என்று அவன் அழுவதுபோல் பயந்துகொண்டே கேட்டான்.

“சின்னராசு நீ இன்னிக்கி ஒருநாள் மட்டும் எப்படியாவது சமாளி, இன்னிக்கி எனக்கு வர்ற கூலியெல்லாம் உனக்கு நோட்டு வாங்கத்தான் போதுமா !“என்று அவனை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தான். சின்னராசுவும் அவன் அப்பா கூறுவதை நம்பினான்.

வெள்ளைச்சாமிக்கு அன்று மதியமே நூறு ரூபாய் கூலி கிடைத்தது. அவனுக்கு உடனே மகன் சின்னராசு நோட்டு வாங்க பணம் கேட்டது நினைவு வந்தவுடன், வீட்டுக்குப் போய் தான் சாப்பிட்டு விட்டு மகனிடம் பணத்தையும் கொடுத்துவிட்டு வந்து விடலாமென்று, வேகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அப்போது அவன் எதிரே வந்த, அவனுக்குத் தெரிந்த கூலி வேலை செய்யும் முனியாண்டி “ என்ன வெள்ளச்சாமி வேகமாக எங்கே போரப்பா” என்று கூறிக்கொண்டு அவன் தோளில் கைபோட்டுக் கொண்டான். வெள்ளைச்சாமி விபரத்தினை கூறியவுடன் முனியாண்டி “வெள்ளச்சாமி இப்ப வாத்தியாரெல்லாம், பசங்களை அடிக்க மாட்டாங்கப்பா, அப்படி அந்த வாத்தியார் உன் மகனை அடித்தால் நாம போய் உண்டு இல்லையான்னு அந்த வாத்தியாரைப் போய் பார்த்திடுவோம். நீ கவலைப்படாதே வாப்பா நூறு அடிச்சிட்டு வீட்டுக்குப் போவோம்” என்று கூறி வெள்ளைச்சாமி மறுத்தும் அவனுக்கு ஆசை காட்டி, அவனை மதுக்கடைக்கு இழுத்துச் சென்றான்.

வெள்ளைச்சாமி மதுக்கடைக்குள் சென்றவுடன் மனைவியை மகனை மறந்தான் குடும்பம் இருக்கும் நிலைமையையும் மறந்து கையில் உள்ள பணத்தைக் காலி செய்தான். வழக்கம்போல் ஆலமரத்தடியில் விழுந்து கிடந்தான். வெள்ளையம்மாள் வழக்கம்போல் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றவளுக்கு வீட்டிற்குள் சென்றவுடன் அடி உதைதான். அவனுக்குப் போதை தெளிந்தவுடன் “வெள்ளையம்மா இனிமேல் நான் குடிக்க மாட்டேன். நம்ம மகனை படிக்க வைக்க கண்டிப்பாக குடிக்க மாட்டேன். அந்த ஆலமரத்துப் பிள்ளையார் மேல் சத்யம்” என்று கூறினான்.

அவன் மறுநாள் காலை கூலி வேலைக்காக கிளம்பி வாசலில் நின்றான். ,மகன் சின்னராசு அப்பாவின் முன் வந்து நின்றவன் “ அப்பா நான் இன்னிக்கி நோட்டு வாங்கிட்டு போகலைன்னா வாத்தியார் என்னை வகுப்பை விட்டு வெளியே அனுப்பிடுவாருப்பா. நோட்டு வாங்க முப்பது ரூபா குடுப்பா”என்று பயந்து கொண்டே அப்பாவிடம் கேட்டான். .

அவன் தன் மகன் தோளை அன்புடன் பிடித்துக் கொண்டே “சின்னராசு இன்னிக்கி ஒருநாள் மட்டும் அப்பாவுக்காக, எப்படியாவது சமாளிப்பா. இன்னிக்கி எனக்கு வர்ற கூலியெல்லாம் ஒன்னிடமே வந்து குடுத்திடுறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தவுடன் மகனும் சரிப்பா என்று நம்பிக்கையுடன் பள்ளிக்குச் சென்றான்.

வெள்ளைச்சாமியும் இன்று குடிக்கக் கூடாது என்ற மன உறுதியுடன். இன்று வரும் கூலியெல்லாம் கொண்டு வந்து மகனிடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய நோட்டுப் புத்தகமெல்லாம் வாங்கிக் கொள்ள கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்லும்போது, எதிரே வந்த குமார்மளிகைக் கடைக்காரர் “வெள்ளச்சாமி இன்னிக்கி நம்ம கடைக்கு வந்து பருப்பு, அரிசி மூட்டையெல்லாம் இறக்கி போடவேண்டும் சாயந்தரம் வரைக்கும் கடையில் உனக்கு வேலை இருக்கும் வா” என்று அவனை அழைத்துச் சென்றார்.அவன் மூட்டையெல்லாம் இறக்கிவைத்து விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு கிளம்பும்போது குமார்மளிகைக்காரர் அவனிடம் இருநூறு ரூபாய் கூலியாக கொடுத்தவுடன், தன் மகன் சின்னராசு நோட்டு வாங்க பணம் கேட்டதுதான் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. குஷியாக வீட்டை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவன் வேகமாக நடந்து வந்தவன் டாஸ்மாக்கடை அருகில் வந்தவுடன் தயங்கி நின்றான். ‘சரி நமக்குத்தான் இருநூறு ரூபாய் கூலி வந்திருக்கே மகன் சின்னராசு முப்பது ரூபாய்தான் நோட்டு வாங்க கேட்டான்’ என தனக்குத்தானே முடிவு செய்து கொண்டு டாஸ்மாக்கடைக்குள் நுழைந்தவன் அங்குள்ள பிளாஷ்டிக் சேரில் சென்று அமர்ந்தான்.

அவன் அமர்ந்தவுடன் தன்மகன் வயதையொத்த ஒரு சிறுவன் அவன் முன்னே வந்து நின்றான். புதிதாக அந்தச் சிறுவன் டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்காக வந்தவன்போல் தோன்றியது. அன்றுதான் வெள்ளைச்சாமியும் அவனைப் பார்த்தான். சிறுவன் அவனிடம் “பிராந்தியா ,விஸ்கியா” எது வேண்டுமென அவனிடம் கேட்டான். அந்தச் சிறுவனிடம் தான் கூலியாக வாங்கி வந்த இருநூறு ரூபாயை கொடுத்து விட்டு , “எதாவது கொண்டு வா” என்றான். சிறுவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனை “தம்பீ தம்பீ இங்கே வா” என அழைத்தான்.

அவன் முன்னால் வந்து நின்ற சிறுவனிடம் “தம்பி இதற்கு முன் உன்னை நான் பார்க்கவில்லையே. நீ படிக்கிற இந்த வயசிலே இப்படி டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்கு வந்திருக்கிறாயே. இங்க வந்தால் உனக்கு குடிப்பழக்கம் வந்து கெட்டுப் போயிடமாட்டாயா. உன்னோட அப்பா அம்மா எப்படி இங்க வேலைக்கு அனுப்பினாங்க. நான் இப்படிக் கேட்கிறேன்னு வருத்தப்படாதே கோபப்படாதே தம்பி ” என்று கவலையுடன் கேட்டான் வெள்ளைச்சாமி.

சிறுவன் முகத்தை கோபத்துடன் வைத்துக் கொண்டு கடுப்புடன் “ நான் ஒண்ணும் குடிகாரனாக மாறமாட்டேன். நான் டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்கு வந்ததத்துக்குக் காரணமே, உன்னைப்போல் என்னோட அப்பாவும் , என்னோட அம்மா குடிக்க வேண்டாம் குடிக்க வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் என் அப்பா கேட்காமல் குடித்து குடித்தே செத்துப் போயிட்டாரு. நான் குடிகாரனாக மாறி விடுவேன்னு நீ என்னைப்பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, நீ குடித்து குடித்து என்னோட அப்பா செத்துப்போனதுபோல் நீ செத்துப்போய், உன் மகனையும் இப்படி என்ன மாதிரி டாஸ்மாக்கடையில் எடுபிடி வேலைக்கு வராமல் நீ பார்த்துக்கோ. அதற்கு நீ குடிக்காமல் திருந்தப்பாரு “ என்று வெள்ளைசாமியிடம் கூறினான்.

சிறுவன் தன்னைப் பார்த்து கூறியதைக் கேட்டவுடன் தன்னோட முதுகிலும் உள்ளத்திலும் யாரோ சவுக்கடி கொடுத்ததுபோல், விழுந்ததுபோல் அப்போது வெள்ளைச்சாமி நன்கு உணர்ந்தான். உடனே சிறுவனிடம் தான் கொடுத்திருந்த இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டு “தம்பீ எனக்கு புத்தியில் உரைப்பதுபோலவே சொல்லிவிட்டாய் இந்த சிறுவயதிலே நல்லாவே பேசறே. பேசியும் விட்டாய். நான் இந்த நிமிஷம் முதல் குடிக்க மாட்டேன் தம்பி. நீயும் கவலைப்படாதே நீயும் என்னோட கூட வா. என் மகனோடு உன்னையும் எப்படியாவது நான் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன் வா “ என்று கூறி அந்தச் சிறுவனையும் கையோட தன்னுடன் அழைத்துச் சென்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோவில் அதுதான். சுற்றுப்பட்டிக் கிராமங்களிலே மிகப்பெரிய விநாயகர் கோவில், அதில ஆறடி உயரத்தில் அதிவீர விநாயகர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். கோவில் பின்புறத்தில் தார்ச்சாலை அதை அடுத்து மிகப் பெரிய கண்மாய் இருந்தது. அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் ...
மேலும் கதையை படிக்க...
“வாங்க சார் ! “ என்ற பழக்கப்பட்ட குரல் தன்னை வரவேற்கவே நிமிர்ந்து பார்த்தான் கணேஷ்குமார். “ லதா நீயா.. நீ எங்கே …. ..?” “ என்னோட அக்கா வைதேகியைத்தான், பெண் பார்க்க நீங்க வந்திருக்கீங்க “ என மெதுவாக அவனுக்கு மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
விநாயகர் படத்தருகில் மணிபாரதி உட்கார்ந்து இருந்தாள். அவள் இருந்த அறைக்கு அருகில் உள்ள ஹாலில் அவள் அப்பாவும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பேசுவது மணிபாரதிக்கு தெளிவாக கேட்டது “ மணிபாரதியை எங்களுக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. உங்களுக்கும் எங்க பையன் சிவாவையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க. மத்த ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளையார்கோவில் திருப்பத்தில் கவிதாவும் அவள் உயிர்த்தோழியாகிய பத்மாவும் நடந்தார்கள் “கவிதா ! இன்று நீ எங்களுடன் புடவை எடுக்க சரவணா ஸ்டோர்க்கு வரணும். நாளை தமிழ் புத்தாண்டு. நாம் எல்லாரும் புதுப்புடவை கட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு தமிழ் புத்தாண்டுக்கு மறுநாள் வரவேண்டும். நீ ...
மேலும் கதையை படிக்க...
காவல் தெய்வம் !
அன்புதான் இன்ப ஊற்று !
அலைகள் ஓய்வதில்லை !
பெண் நினைத்தால்…….!
உன்னால் முடியும் கவிதா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)