உறுத்தல்

 

நல்ல இருட்டு. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரொம்ப தூரத்துக்கு நெடுஞ்சாலை தெரிந்தது. எதிரே அவ்வப்போது தொடர்ந்து வந்த லாரிகளின் எதிர் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டி, விளக்குகளை அணைத்து அணைத்து ஓட்டுவது குமரனுக்குப் பெரும் துன்பமாய் இருந்தது. சில லாரிக்காரர்கள் தங்கள் ஹெட்லைட்டுகளை அணைக்க மறுத்ததால், வேகத்தைக் குறைத்து, சாலை சரியாக இருக்கிறதா என்று கவனித்ததில் காரின் வேகத்தைச் சீராய் எண்பது கிலோ மீட்டரில் வைப்பது கஷ்டமாக இருந்தது.

மணிக்கட்டைத் திருப்பிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் குமரன். பதினொன்று. எட்டு மணிக்குள் ஊருக்குப் போய் விடலாம் என்று எண்ணியிருந்தது நடக்கவில்லையே! திருச்சியை விட்டுக் கிளம்பித் தொட்டுத்தொட்டு நாலு மணி ஆனபோது சரி, பரவாயில்லை, எட்டுக்குள் செங்கல்பட்டை அடைந்துவிட முடியாதா, என்று நம்பியிருந்தவனின் திட்டத்தில், வண்டியில் உண்டான கோளாறு மண்ணை வாரிப் போட்டது.

உளுந்தூர்ப்பேட்டையில் நிறுத்தி காபி டிபன் சாப்பிட்டுப் புறப்பட்டார்கள். கொஞ்ச தூரம் வந்திருக்க மாட்டார்கள். நன்றாய் ஓடிக்கொண்டிருந்த என்ஜினில் திடீரென்று ஃபான் பெல்ட் அறுந்து, வண்டி நின்றுபோனது.

விழுப்புரத்துக்குப் பத்து மைல்கூட இல்லை. அங்கு கண்டிப்பாய் பெல்ட் கிடைக்கும். போய் வாங்கி வந்துவிடலாம் என்றால் யார் போவது? வழக்கமாய் வீட்டில் வேலை இல்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் டிரைவருக்கு, அதிசயமாய் குமரன் நாலு நாட்கள் திருச்சிக்கு மைத்துனியின் திருமணத்துக்காகப் புறப்பட்ட நாளில், திடும்மென்று நல்ல ஜுரம். ‘இங்கே இருக்கும் திருச்சி தானே, நாமே ஓட்டிக்கொண்டு போய் வந்து விடலாம்’ என்று கிளம்பியிருந்ததால், குமரனைத் தவிர காரில் அவன் மனைவி, ஆறு வயசு கோபி, மூன்று வயசு ராஜா, கைக் குழந்தை ஆனந்தி. இவர்களைத் தனியாய் விட்டுவிட்டு, குமரனால் எப்படிப் போக இயலும்?

அந்தச் சாலையில் வந்த லாரி, வண்டிகளை நிறுத்தி, கயிற்றால் தன் காரைக் கட்டி இழுத்துச் சென்று விழுப்புரத்தில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டவனுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. ஒருத்தரிடமும் கயிறு இல்லை. அப்படி வைத்திருந்த ஓரிருவர்கூட ‘லோடு இருக்குதுங்க…முடியாது’ என்று தயை தாட்சண்யம் இல்லாமல் மறுத்துச் சென்றார்கள்.

கடைசியாய் உன்பாடு, என் பாடு என்று ட்ராக்டரை ஓட்டி வந்த விவசாயியை மறித்தான் குமரன். நிறைய பணம் கொடுப்ப தாக ஆசை காட்டினபிறகு அவன் தன் ட்ராக்டரில் குமரனின் பியட்காரைக் கட்டி ஆடி அசைந்துகொண்டு விழுப்புரத்தில் கொண்டுவிட்டபோது மணி இரவு ஒன்பது.

திறந்திருந்த கடையைக் கண்டுபிடித்து, ஃபான் பெல்டை வாங்கிப் பொருத்தி, அருகில் இருந்த ஹோட்டலில் இரவுச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு இவர்கள் கிளம்பும்போது பத்து அடிக்கப் பத்து நிமிஷம்.

செங்கல்பட்டில் சொந்தமாய் டிஸ்பென்ஸரி வைத்து நடத்தும் முக்கிய டாக்டர்களில் குமரனும் ஒருவன். பன்னிரெண்டு வருஷ ப்ராக்டீஸில் நல்ல பேர். கைராசி டாக்டர் என்று சுற்று வட்டாரக் கிராமத்து ஜனங்கள் இவன் டிஸ்பென்ஸரிக்குப் படை எடுத்ததால் இந்தச் சின்ன வயசில், சொந்த வீடு, கார், பாங்கில் டிபாசிட் என்று ஜமாய்க்க முடிகிறது.

குமரன் நோயாளிகளைப் பரிசோதித்து, மூன்று வேளை மிக்சர், மாத்திரை கொடுக்க ரூபாய் ஐந்தும், ஊசி போட்டால் மேற்கொண்டு இரண்டும் வசூலிப்பான். அவ்வளவுதான். நாள் ஒன்றுக்கு தாராளமாய் நூறு நோயாளிகள் போல அவனிடம் வந்து குமிந்ததால் டிஸ்பென்ஸரி, கம்பௌண்டர், மருந்துகள் செலவு போகக் குமரனால் தினம் இருநூறு ரூபாய்களை எளிதாய் சம்பாதிக்க முடிகிறது.

சாதாரணமாய் கிராம ஜனங்கள் டாக்டரிடம் நம்பிக்கை வைத்துவிட்டால் லேசில் இன்னொருவரிடம் போகமாட்டார்கள். டாக்டர் ஊரில் இல்லாவிட்டால், இரண்டு நாட்கள் காத்திருந்தா வது, தங்கள் உடல் வேதனையைப் பொறுத்திருந்தாவது, அவர் திரும்பின பிறகு வருவார்களே தவிர இன்னொரு வைத்தியரிடம் செல்ல மாட்டார்கள்.

இந்தப் பழக்கத்தால்தான் குமரன் தைரியமாய் டிஸ்பென்ஸரியை நாலு நாட்களுக்கு மூடிவிட்டுத் திருச்சிக்குக் கிளம்பி விட்டான்.

மனைவி காந்தத்தின் தங்கைக்குக் கல்யாணம். ஒரே தங்கை. மாமனார் வசதியானவர். தடபுடலாய்க் கல்யாணம் செய்யும்போது மூத்த மாப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டதில் என்ன தவறு? ப பிராக்டீஸ் தொடங்கின இத்தனை வருஷங்களில் முழுசாய் நாலு நாட்களுக்கு டிஸ்பென்ஸரியை மூடிவிட்டுக் குமரன் கிளம்புவது இதுதான் முதல் தடவை. ஊருக்குள் இப்போது – டாக்டர்களின் போட்டி அதிகமாகி விட்டது. போதாக்குறைக்கு அரசாங்க பெரிய ஆஸ்பத்திரி வேறு. சேர்ந்தாற்போல பல நாட்களுக்கு டிஸ்பென்ஸரியை மூடுவது, நோயாளிகளின் நம்பிக்கையை ரொம்பவும் சோதிப்பதாகும் என்று புரிந்திருந்ததால் குமரன் இதுநாள்வரை அப்படிச் செய்ததில்லை. சென்னைக்கோ, மற்ற எந்த இடத்துக்கோ செல்லவேண்டிய நிர்பந்தம் எழுந்தால் காலையில் போய் இரவு திரும்பிவிடுவான். தவறிப்போனால்கூட இன்னும் ஒரு அரை நாள். இதற்குமேல் தாண்டினதில்லை.

தன் பிறந்த வீட்டிற்குக் கணவன் வந்து இரண்டு நாட்கள் தங்கினதில்லை என்று காந்தம் சதா குறைப்பட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டதாலும், ப்ராக்டீஸை லேசில் வேறொருத்தரால் அசைக்க முடியாது என்ற நம்பிக்கை தோன்றி விட்டதாலும் இந்த முறை நாலு நாட்களுக்குத் திருச்சிக்குச் செல்ல குமரன் கிளம்பி விட்டான்.

போய்ச் சேர்ந்த முதல் நாள் எல்லாம் சரியாக இருந்தது.

தன்னைச் சோம்பேறியாக்கி, மற்றவர்கள் அத்தனை பேரும் துரும்பை எடுக்க விடாமல் உபசரித்தது பிடித்திருந்தது. ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை’ என்று வாய்க்கு வாய் மாமனார் முதல் சின்ன மைத்துனர் வரை கொண்டாடியது பிடித்திருந்தது. ஜமா சேர்ந்து சீட்டு ஆடுவது பிடித்திருந்தது.

ஆனால், இரண்டாம் நாளிலிருந்து வெட்டியாய் உட்கார்ந் திருப்பதும் இப்படி நாலு நாட்கள் டிஸ்பென்ஸரியை மூடியது தவறு என்றும் எண்ணத் தொடங்கியதால், அவனால் திருச்சியில் நிம்மதியாய் இருக்க முடியாது போயிற்று. கல்யாணம் எப்போது முடியும் கிளம்பிவிடலாம் என்று பரக்கத் தொடங்கினான்.

புதுசாய் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்து மாலையில் தனி ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பித்திருக்கும் டாக்டர் ஜனார்த் தனத்தை நினைத்தால் கொஞ்சம் கலக்கமாய் இருந்தது. டாக்டர் ஜனார்த்தனன் எம்.டி, ரொம்ப கெட்டிக்காரர். சின்ன வயசுக்காரர், சிடுமூஞ்சித்தனமே இல்லை, பேஷண்டுகளிடம் சிரித்துச்சிரித்துப் பேசுகிறார். சார்ஜும் ரொம்ப செய்வதில்லை. குமரனின் பேஷண்டுகளில் ஓரிருவர் அங்கு போவதாக கம்பௌண்டர் சொல்லி இருக்கிறான். இப்போது யோசித்துப் பார்க்கையில் நாலு நாட்களில் நிறைய பேர் அவரிடம் போய்விடுவார்களோ, இப்படி விட்டுவிட்டு வந்தது அசட்டுத்தனமோ, என்றே குமரனுக்குத் தோன்றியது.

முதல் நாள் நலங்கும், மறுநாள் காலை முகூர்த்தமும் – ஆனவுடனேயே, மனைவியை அழைத்துக் “கல்யாணம் ஆயிடுச்சே, நாம் கிளம்பலாமா?” என்றான் மெதுவாய்.

“சாயங்காலம் ரிஸப்ஷன் இருக்கு. நாளைக்கு சம்பந்தி விருந்து இருக்கு. என்னாங்க நீங்க?” என்று ரெடியாய் கண்களில் நீரைத் தருவித்துக்கொண்டு காந்தம் கேட்கவும், குமரன் உடனே கிளம்பும் எண்ணத்தை கைவிட்டான்.

காந்தத்தின் விருப்பப்படி தங்கிக் காலையில் சம்பந்தி விருந்து முடிந்து, அவர்களை அனுப்பிவிட்டு, இவர்கள் ஆற அமரக் கிளம்பும்போது மாலை மணி நான்கு.

காரில் ஏறியபின் வெகு நேரத்துக்குப் பிறந்த வீட்டில் தாங்கள் நாலு நாட்கள் தங்கினதில் அப்பா, அம்மாவுக்கு எத்தனை சந்தோஷம் என்பதை நீளமாய் காந்தம் பேசிக்கொண்டு வந்தாள்.

உளுந்தூர்ப்பேட்டையை அடையும் வரை எல்லோரும் குஷி யுடன்தான் இருந்தார்கள். ஆனால் கார் ரிப்பேர் ஆகி, நெடுஞ் சாலையில் உதவி கிட்டாமல் தவித்து, இருள் சூழத் தொடங்கி, கொசுக்கள் மொய்க்க முற்பட்டதும் பெரிய பிள்ளை ‘பசிக்கிறது’ என்று சொன்னான். அடுத்தவன் ‘தூக்கம் வருது’ என்று முனகி னான். கைக்குழந்தை ஆனந்தி இருப்புக்கொள்ளாமல் அழத் தொடங்கினாள்.

ஒரு தினுசாய் விழுப்புரம் வந்து காரைக் கவனித்து எல்லாரும் சாப்பிட்டு மீண்டும் புறப்பட்ட பின்னர் பிள்ளைகள் பின் ஸீட்டிலும், காந்தம் மடியில் ஆனந்தியைப் போட்டுக் கொண்டு முன் ஸீட்டிலும் சாய்ந்தபடி தூங்கிப் போனார்கள்.

நாலு நாட்களாய் மாமனார் வீட்டில் இரவு கண்விழித்து விடியவிடிய சீட்டுக் கச்சேரி போட்டதன் விளைவு இப்போது குமரன் கண்களில் தீயாக எரிந்தது.

மதுராந்தகத்தை வண்டி தாண்டும்போது, ‘ஆயிற்று இன்னும் அரைமணி நேரம்; அப்புறம் வீட்டுக்குப்போய், ஜில்லென்று தண்ணீரில் குளித்துவிட்டுப் படுக்கையில் விழலாம்’ என்ற நினைப்பே குமரனுக்கு சுகமாக இருந்தது.

மாமண்டூரை நெருங்குகையில் தூரத்தில் இரண்டு மூன்று ஆட்கள் நடு ரோட்டில் நின்று கையை ஆட்டி வண்டியை நிறுத்தச் சொல்வது புரியவே காரின் வேகத்தைக் குறைத்தான் அவன்.

யாரிவர்கள்? எதற்காக வண்டியை நிறுத்துகிறார்கள்?

கல்யாணத்துக்காக காந்தம் அத்தனை நகைகளையும் வாரிக்கொண்டு வந்திருப்பது திடீரென்று குமரனுக்கு ஞாபகம் வந்தது-நெடுஞ்சாலையில் இப்படி ரா வேளையில் வண்டிகளை நிறுத்திச் சில இடங்களில் கொள்ளை அடிப்பதாக நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது.

நிறுத்தாமல் போய்விட்டால் என்ன?

வரிந்து கட்டின வேட்டியும், தலையில் முண்டாசும், வெற்று உடம்புமாய் நின்ற அவர்களைப் பார்த்தால் கிராமவாசிகள் மாதிரித் தோன்ற, சந்தேகம் குறைந்தவனாய் வண்டியை ப்ரேக் போட்டு அவர்கள் அருகில் நிறுத்தினான்.

கையில் அரிக்கேன் விளக்குடன் நின்ற ஆள் ஜன்னலிடம் குனிந்து பேசினான்.

“ஐயா-பத்து நிமிஷம் முந்தி இங்கே ஒரு விபத்து நேர்ந் துடுச்சி…அதோ அங்க பாருங்க…வண்டி மரத்துலே மோதி நிக்குது…உள்ளார ஒருத்தர் இருந்தாருங்க…தலை, முகம், உடம்பு எல்லாம் ரத்தம். இளுத்து வெளியே போட்டிருக்கோம்…உசிரு இருக்கிற மாதிரித்தான் தெரியுது. கொஞ்சம் வண்டியிலே ஏத்திக் கிட்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிலே சேர்த்துடுறீங்களா?”

அந்த ஆளின் சப்தமான பேச்சில் காந்தம் திடுக்கிட்டு எழுந்து உட்கார, காற்று நின்றுபோன புழுக்கத்தில் ஆனந்தி சிணுங்கத் தொடங்கினாள்.

தலையைத் திருப்பிப் பார்த்தான் குமரன். சற்றுத் தள்ளி இறக்கத்தில் கறுப்புக் கார் ஒன்று மரத்துடன் உறவாடிக் கொண்டிருப்பது புரிந்தது. எதுவும் தெளிவாகத் தெரியாதபடி இருள் சூழ்ந்திருந்தது. – அரிக்கேன் ஆள் தொடர்ந்து பேசினான்.

“காரு மோதின சத்தம் கேட்டு நாங்க ஓடியாந்தோம்….எங்க குடிசை அதோ அந்தப் பக்கம் இருக்குதுங்க…வந்து ஆளை இழுத்துப் போட்டுட்டு ஒரு லாரிய நிப்பாட்டினோம். அவுங்க ‘இது போலீஸ் கேஸ்’னு மறுத்துட்டாங்க…உங்களுக்குப் புண்ணியமா போவும்…கொஞ்சம் எடுத்திட்டுப் போங்க… ஒரே ரத்தங்க…மண்டை ஓடைஞ்சிருக்குங்க…”

ஆனந்தி பெரிசாய் வீறிட ஆரம்பித்தாள்.

குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு காந்தம், “அவங்க தான் நடுரோட்டில் இந்நேரத்திலே நிறுத்தறாங்கன்னா…நீங்களும் நின்று பேசிட்டிருக்கீங்க… குழந்தை அழுவறா… கிளம்புங்க….இப்படி நடுராத்திரி ஆக்ஸிடெண்டுக்கெல்லாம் கருணை காட்ட நமக்குக் கட்டுப்படி ஆகாது…” என்றாள், சலிப்பு நிறைந்த குரலில் கணவனுக்கு மட்டும் கேட்கும்படி.

குமரன் ஒரு கணம் யோசித்தான்.

இறங்கிப் போய்ப் பார்க்கலாமா? மண்டை உடைந்து விட்டது என்கிறானே-உயிர் போயிருக்குமோ? எப்படி எடுத்துப் போவது? பிள்ளைகளை முன்னுக்கு வரச்சொல்லி அடிபட்டவரை பின்னால் கிடத்தினால்? ஒரே ரத்தம் என்கிறானே. காரெல்லாம் ரத்தமாகிவிடுமே?

“என்னங்க யோசனை பண்ணறீங்க..இவங்க சொல்றது நிசமோ, இல்லை பொய்யோ? வண்டிலே குழந்தைங்க இருக் காங்க…மண்டை உடைஞ்ச ஆளையும் ரத்தத்தையும் கண்டு பயப்படப் போறாங்க….கிளம்புங்க…”

காந்தம் சொல்வது நியாயமாகப் பட வண்டியைக் கிளப்பி னான் குமரன்.

“கார் காலியா இருந்தா எடுத்துப் போகலாம்பா….வண்டிலே குழந்தைங்க இருக்காங்க…எப்படி எடுத்துட்டுப் போறது? நீ வேறு வண்டியை நிறுத்திப் பாரு…”

குமரன் மேற்கொண்டு அந்த ஆள் பேச இடம் இல்லாமல் காரை ஓட்டினான்.

“குடிச்சிட்டு வந்து கண் மண் தெரியாம ஓட்ட வேண்டியது. ஆக்ஸிடெண்ட் ஆனா, மத்தவங்க கழுத்தை அறுக்கிறது…சீ நல்ல மனுஷங்க…” காந்தம் எரிச்சலுடன் பேசி மகளைத் தட்டினாள்.

காரை ஓட்டிய குமரன் தான் ஒரு டாக்டராய் இருந்தும் இப்படி அடிபட்ட நபரைக் கவனிக்காமல் போகிறோமே என்று மனசில் எழுந்த குற்றஉணர்வை “டாக்டர்னா மட்டும் என்ன? குழந்தைகள், மனைவியைக் கஷ்டப்படுத்தியாவது என் தொழிலோட புனிதத்தனத்தை நிரூபிக்கணும்னு இருக்கா என்ன? பரிதாபப்படறதுக்கும், உதவி செய்யறத்துக்கும் நேரம் காலம் இல்லியா? பகல் வேளையாய் இருந்து காரில் இடம் இருந்தால் நிறுத்தி ஏத்திக்காமலா போவேன்? இப்போ கிட்டப் போய் பார்க்கலாம் என்றாலும் விளக்குக்கூட இல்லை…நான் என்ன பண்ண முடியும்?” என்ற சமாதானங்கள் மூலம் அடக்கிவிட்டான்.

கால்மணியில் வீட்டை அடைந்து, ஆட்களை எழுப்பி, சாமான்களை இறக்கி, பிள்ளைகளைப் படுக்க வைத்து, தாங்களும் படுத்த அடுத்த நிமிஷத்தில் இருவரும் உறங்கிப் போனார்கள்.

நல்ல தூக்கத்தில் இருந்த குமரன் டெலிபோன் மணி அடிக்கும் சப்தம் கேட்டு கண் விழித்தான். விடிகாலை மணி ஒன்று. எந்த அவசரக் கேஸ்காரன் கழுத்தை அறுக்கிறான் என்று கோபத்தோடு ரிஸீவரை எடுத்தான்.

“ஹலோ …குமரன்…ஹியர்”

“டாக்டர், நான் டாக்டர் ஜனார்த்தனன் பேசறேன்…ஸாரி டு டெல் யூ திஸ் நியூஸ். சம்பந்தன் கார் ஆக்ஸிடெண்டிலே போயிட்டார். கொஞ்சம் முன்னாலே எமர்ஜென்ஸி கேஸாக ஹாஸ்பிட்டல்லே அட்மிட் ஆனப்பவே உசிர் இல்லை. உங்களுக்கு ரொம்ப சினேகிதமாச்சேனு போன் பண்ணினேன்…ஐ ம் ஸாரி…”

“எந்த சம்பந்தம்? காஞ்சிபுரத்தில் இருக்கும் என் நண்பனா? விபத்தா? எப்படி, எங்கே நடந்தது?”-குமரனின் தூக்கம் ஓடிப் போனது.

“அவரேதான் டாக்டர்…..மாமண்டூர் பக்கத்திலே… ஸ்டீரிங் வீல் ஆக்ஸில் உடைஞ்சி, மரத்துலே கார் மோதிட்ட மாதிரி தோணுது… மற்றபடி விவரம் ஏதும் தெரியலை. மண்டையில் அடி…ஏகமாய் ரத்தம் போயிடுச்சி….ஒரு பஸ்ஸிலே யாரோ கிராமவாசிங்க ஏத்திக் கிட்டு வந்திருக்காங்க…யாராவது கார்க்காரங்க நிறுத்தி கொஞ்சம் முன்னே ஹாஸ்பிடலுக்குக் கொணர்ந்திருந்தா, அவரைச் காப்பாத்தியிருக்கலாமோ, என்னவோ? ஹைவேயில் ஆக்ஸி டெண்டு நடந்தும், ஒரு வண்டிக்காரங்க கூட நிறுத்தி உபகாரம் பண்ண லியாம்…ஐம் ஸாரி டாக்டர்… நீங்க இங்கே வரீங்களா?”

பதில் பேசாமல் போனை வைத்த குமரனுக்கு நெஞ்சை அடைத்துக் கண்களில் நீர் திரண்டது

அவனுடைய சினேகிதன் சம்பந்தம்-பக்கத்துப் பக்கத்து வீட்டில் பிறந்து வளர்ந்து, ஒரே தட்டில் உண்டு, கூடப்பிறந்த சகோதரன் போல அன்பைப் பொழிந்த சம்பந்தம்-‘நல்லா படிடா-நான்தான் படிக்கலை வியாபாரத்துலே இறங்கிட்டேன்நீயாவது படிச்சு பெரிய பாக்டரா வாடா’-என்று சதா வாழ்த்திய சம்பந்தம்-அவன் அடிபட்டுக் கிடக்கும்போதா ! வந்திருக்கிறோம்?

மனசுக்குள் நினைவுகள் சுருக்கென்று குத்தின. ஒரு டாக்டராய் இருந்தும் தன் உயிர் நண்பனின் சாவுக்குத் தானே காரணமாகிவிட்ட இந்த உறுத்தல் இனி ஆயுசுக்கும் உறுத்தப் போகிறது; இந்த உறுத்தலிலிருந்து தான் தப்பவே முடியாது என்ற எண்ணம் நெஞ்சில் மின்னலாய் இறங்க, இரண்டு கைகளிலும் முகத்தைப் பதித்துக்கொண்டு மடிந்து உட்கார்ந்து அழத் தொடங்கி னான் குமரன்.

- ராணி, 1979 

தொடர்புடைய சிறுகதைகள்
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் ...
மேலும் கதையை படிக்க...
குனிந்து கொதித்துக்கொண்டிருந்த நொய்க் கஞ்சியைக் கிளறக்கூட முடியாதபடி ஈர விறகின் புகை அவள் முகத்தைத் தாக்கியது. நன்றாய் எரியாத அடுப்பை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஊதி நிமிர்ந்தபோது புகையின் காரணமாய் அவள் கண்கள் எரிந்தன. வயிறும் மனசும் காய்ந்து எரிந்த வெப்பம் தாங்காது ...
மேலும் கதையை படிக்க...
ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிஷங்களே இருந்தன. அண்ணாவும், மன்னியும் மதுராவுடன் கிளம்பப் போகிறார்கள். ஒரு வருஷ காலமாய் என் நெஞ்சு ருசித்த இனிய உணர்வு களெல்லாம் என்னை விட்டுப் போகப் போகின்றன. என் துக்கத்தை நன்கு புரிந்துகொண்டதுபோல ஒரு பக்கம் அண்ணாவும், ...
மேலும் கதையை படிக்க...
அவன் கண்களை மூடிக்கொண்டான். மனசுக்குளே அவளை முழுசாய் நிறுத்திப் பார்க்க முயற்சித்தான். கிட்டத்தட்ட ஒரு மாசமாய் நினைத்துநினைத்துப் பழகி இருந்ததால் கூப்பிட்ட உடன் ஓடிவரும் நாய்க்குட்டி மாதிரி மனசுக்குள் வந்து நின்று கொண்டாள். அவள் ரொம்ப உயரமில்லை. ஐந்து இருநாடு இருந்தால் அதிகம். அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா..." "என்ன இந்துக் குட்டீ?" "என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?" "ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?" "இல்லேம்மா.. வந்து..." "சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு..." "நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி... நீங்களும், டாடியும் வரணும் மம்மீ.." "நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? ...
மேலும் கதையை படிக்க...
விழிப்பு
வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்
மதுரா
ஆசை ஆசை ஆசை
தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)