கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 13,073 
 

ஊருக்கொரு பஸ் நிலையம் இருப்பது வாஸ்தவம்தான். அப்புவின் ஊரில் இருக்கும் பஸ் நிலையத்தைப் பற்றிச் சொல்வதென்றால், அதைக் கேட்பதற்கும் திடமான, உறுதியான மனது வேண்டும். காதலில் சிக்குண்டவன் மனதுபோல இருந்தால் ஆபத்து.

வலது புறத்தில் தொடங்குகிறது ஒரு நூறு அடிகளுக்கும் மேல் பழுத்த ஓலைகள், கொஞ்சம் நல்ல; அதன் கிடுகுகள் கொண்டு அமைக்கப்பட்ட, கடைக் காம்பராக்கள்.ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஞாபகப்படுத்தும் வரிசைக்கு நிகரானவை.

இடது புறத்தில் ஒரு கழிப்பறை. அங்கு கழிப்பது மட்டும்தான். அழுக்கை நீக்க தண்ணீரில்லை. தண்ணீருக்கு என்ன ஒப்பந்தமோ தெரியாது. மனிசன் போவானா அதற்குள். கழிப்பறை இருக்கும் பஸ், ஏ.சி. குளிர் இருக்கும் பஸ் எந்தக் காலத்தில் வரும்? என்று சிறுவர்களுக்கு கதையாகச் சொல்லி காலத்தைக் கழிக்கலாம்.

முதல் காம்பரா தொடக்கம் எல்லாம்

ஆறு காம்பராக்கள் பெண் வியாபாரிகளும்,

மற்றையவை ஆண் வியாபாரிகளுமாக மொத்தம் பதினொரு காம்பராக்கள். அதில் ஒன்று சில நேரம் இரண்டு.

மூட்டை தூக்கும் கூலிகள்,மற்றும் வெயிலைத் தலையில் சுமந்து ஊருக்குள் பிச்சையெடுக்க கைக் குழந்தையுடன் செல்லும் பெண்கள். ஆற அமர இருந்து வெற்றிலை போடவும்,சுமந்து திரிந்த பொதிகளின் கனத்தை ஆராய்ந்து மகிழவும். பசியால் அழுது ஓய்ந்த குழந்தைக்கு முலைப் பால் கொடுக்கவும் உதவும் தாராள மனம் கொண்டவை.

காலைச் சூரியன் ஒரே நேரத்தில் எல்லாக் கடைகளுக்கும் முன்னாலும் வந்து நின்று “பளிச்”என்று பல் இளிப்பான். அந்த “பளிச்.” பற்கதிர்களின் மேல் தண்ணீர்த் துளிகளைத் தெளித்துவிட்டு வியாபாரத்தை ஆரம்பிக்கும் பெண்களின் முகத்தில் இனி புன்னகையைக் காண முடியும்.

“வாங்களேன் சந்தைப் பக்கம்”

“நீ எங்க இருக்கே.?”

“பஸ் ஸ்டான்டுல”

“என்னடா….அம்மாவோட சண்டையா?”

“ச்சே…”

“அப்போ..பஸ் ஸ்டான்டுல உனக்கு என்ன கண்டெக்டர் வேலயா?.”

மாமாவை தொலைபேசியில் சந்தைப் பக்கம் அழைத்த குத்தம்

அவர் போட்ட கயிற்றுக்கெல்லாம் தன் கழுத்தைக் கொடுத்து முழி பிதுங்கினான் அப்பு.

தொலைபேசியில் வாயை வைத்தால் சும்மா இருக்கத் தெரியாது. “இச்…ச்…என்னு என்னது”

“முத்தமாம்” ஒரு நாள்

அத்தையும்,,மாமாவும் காதல் கதை பேசியது ஞாபகம் வந்திட்டுது அப்புவிற்கு.

மாமாவின் சந்தை வளவுக்கு முன்னால்தான் இந்த கடைக்காம்பராக்கள் இருக்கின்றன. நமது வாழ்க்கையைப் போன்று தற்காலிகமாக.

அந்த இளம் காலைப் பொழுதில் ஊரிலிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேரு இந்தச் சந்தைக்கு வராமலிருக்க மாட்டார்கள். சில வயதான மூத்த அப்பாக்கள் “மரகறி மார்கட்” என்றுதான் சொல்வர்.

சந்தைக்கு வரும் பச்சை மரக்கறிகள்,மாம்பழங்கள்,வாழை,ஈரப்பலாக்காய்,கடுகுடா,மரவள்ளி, கீரைக்கட்டுக்கள் என்று எல்லோர் மனதிலும் தனி இடத்தைப்பிடித்த “மரக்கறி மார்க்கட்” விலையும் நியாயமாக இருக்கும்.

அடுத்தாற்போல் முன்னால் உள்ள தார் வீதியைக் கடந்து இருக்கும் தேனீர்க் கடையில் அதிகாலையில் வேகவைத்த முதல் இரண்டு ரொட்டிகளைத் துண்டு துண்டுகளாக பிய்த்து அதற்கென்றே நியமிக்கப்பட்ட காகங்கள் வரும் வரை “கா.” கா” கா” என்று அழைப்பு விடும் நடுத்தர வயதை உடைய “ரொட்டி மேக்கர்” சா. அந்தக் கடையில் அவருக்கு ஒரு தனி மரியாதை கொடுக்கும் கடை முதலாளி தன் கடையில் இருக்கும், சவூதியில் இருந்து தனது மகன் கொண்டு வந்து கொடுத்த சோனி “பூபர் செட்” ல் ஒலிக்க விடுவார் ஒரு பாடல்

“சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா” பாடல் அந்த காலை நேரத்தின் இருதயம் போன்று இருக்கும்.

ஊரின் பெயரை ஒரு கிராம வாசி வெள்ளை நிற மையினால் எழுதிவிட்டாற்போல் உள்ள சிவப்பு நிற பஸ் புகை வாந்தி எடுத்து வந்து நிற்கிறதைக் கண்ட ஆமினி தன் இரு கால்களையும் எறிந்து எறிந்து நடந்தவளாக பஸ் அருகில் போய் பிரயாணிகள் வெளியே விடுதலையாகி வரும் வழியில் நின்றாள்.

“கச்சான்…… கொட்டே……” என்ற சத்தம் வந்த வழியை திரும்பிப் பார்த்தாள்.

சேர்ட் நேற்றுத்தான் கழுவியிருப்பான். கழிசன் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும் போல் தெரிகிறது. இடப்பக்கமாக நீவி விடப்பட்ட நீண்ட தலை மயிர்களும். வயதும் இருக்காது அவனுக்கு சிறுவன் வயசுதான்.

கையினால் சைகை பண்ணி அவனைக் கூப்பிட்டாள் ஆமினி.

அவனும் ஒரு வியாபாரம் கிடைத்துவிட்டது என்றெண்ணி

“ சுறுள் அஞ்சிருவா அக்கா”

இரு சுறுணைகளை பொலுத்தீன் பேக்கிற்குள்ளிருந்து எடுத்து நீட்டிக்கொண்டு ஓடியும் வந்தான். பஸ்ஸிலிருந்து தன் மகள் நிலா மரக்கறி பேக்குகளுடன் பஸ்ஸைவிட்டு இறங்குவதையும் கவனிக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆமினி.

அவன் வீட்டிலிருந்து கூடவே வந்த சிவப்பும்,கொஞ்சம் ஊத்தை மஞ்சளுமான நாய் பக்கத்து கரண்ட் கம்பத்தின் அருகில் போய் ஒரு காலைக் கிளப்பி, மறு காலில் நின்று மூத்திரம் அடித்துவிட்டு அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டது.

“என்ட மோன இங்குட்டு வா….. பயப்புடாதே வா… சாப்புட்டாயா? கச்சான் எவ்வளவுடா”

“அஞ்சிருவா”

“சரி எங்கூட வா”

இந்த ஊருக்கு வியாபாரத்திற்காக வந்த சில மாதங்களுக்குள்ளே ஊராரின் மனதிலும் ஒரு இடத்தைப் பிடித்த ஆமினி அவனுடைய ஒரு கையை பற்றிக்கொண்டு தனது மறு கையில் சில சிறிய மரக்கறி பேக்குகளையும் எடுத்துக்கொண்டு கடையை நோக்கி விரைந்து சென்றாள் நிலாவும் கூடவே மீதிச் சாமான்களை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தாள். நாயும் கூடவே.

“மோன சாப்பிட்டாயா”

“இல்லை” என்பதை தலையால் பேசினான்.

தனக்கே தாங்கொணா பசி வந்தவளாய் முன்னாலுள்ள தேனீர்க் கடையை நோக்கி நடந்தாள் ஆமினி.

சந்தையில் மூட்டை தூக்கும் கூலி நாட்டாமை வாய் கிழிய தானும் சாப்பிட்டு தன் அருகில் இருப்பவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான் கொட்டாவியை.

சுடச்சுட ரொட்டி மூன்றும் உறைப்புக்கு தேங்காய்ச் சம்பலும் பெரிய கிளாசில் நுரை பொங்க டீயும்,கையுமாக வந்து சேர்ந்த ஆமினி நயீமுக்கு என்ன அம்மாவா? என்று பார்ப்போருக்கு எண்ணத் தோன்றும்.

“இப்படி இருந்து சாப்பிடு இன்னும் வேணுமா? கேளு என்ன சரியா?” என்று சொல்லிக் கொண்டு தன் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினாள்.

ஊரிலேயே பெயர் எடுத்த குடும்பம் மரைக்கார் குடும்யம்.

ஏழு ஆண் மக்களும்,அவர்களின் பிள்ளைகளும் அதாவது பேரன் பேத்திகளும்.

ஒரு பெண் மகளும். திருமணமாகி ஏழு வருடங்கள் குழந்தை இல்லாமலிருந்த தனது மகளுக்கு அரச பொது மருத்துவ மனையில் பிரசவப்பகுதியில் இருந்து அழகான மூக்கு முழியுடன் தன் மகளைப் போன்ற நிறத்திலும் இருந்த குழந்தையை வாங்கி மகளிடம் கொடுத்து பெயருமிட்டு பிள்ளைப் பாசத்தை தொடங்கி வைத்தார்.

தாயிடமிருந்து கிடைக்கும் அன்பு, அரவணைப்பு,வீட்டில் சுதந்திரம் எல்லாம் நீடிக்கவில்லை. குழந்தை வளர, வளர அன்பு, அரவணைப்பு மொத்தமும் குன்றிப்போய்விட்டது. பல நேரங்களில் வீட்டு வேலைகளை செய்யும்படி மரைக்காரும்,மகளும் அவனை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.அவன் மரைக்கார் குடும்பத்தில் பிடிப்பு அற்றுப்போய் பத்து வயதிருக்கும்போது வீட்டை விட்டு ஓடிவிட்டான். சில நாட்கள் மட்டும் தேடிப்பார்த்துவிட்டு கை கழுவிவிட்டார்கள். மரைக்கார் குடும்பத்திற்குள் இப்படி ஒரு பிள்ளை வளர்ந்த தடமும் இல்லாமல் போயிற்று. பத்து வயதில் ஓட ஆரம்பித்தவன் மூன்று வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறான் துரத்தும் வாழ்க்கைக்கு முன்னால்.

“மோன இங்கே வா… இந்தா தண்ணி குடி”

“மடக் மடக்….மடக்..” நயீம் தண்ணீர் குடிக்கும் சத்தத்தோடு;

“உயிரே… உயிரே..வந்து என்னோடு கலந்துவிடு..

உயிரே…உயிரே…என்னை உன்னோடு கலந்துவிடு..” என்ற பாடல் முன்னால் உள்ள தேனீர்க் கடையிலிருந்து துல்லியமான இசையோடு ஒலிக்கிறது. தனக்கு எதுவுமே தெரியாது என்ற தோறணையில் தேனீர்க் கடையில் ஒலிக்கும் இந்தப் பாடலை கேட்டுக் கேட்டு மனனமாகிவிட்ட நிலையில் முணு முணுத்தாள் நிலா.

புத்தம் புது பிஞ்சு வெண்டிக்காய் போன்று செழிப்பாயும் இருக்கும் கன்னிப்பருவமுடன்; அம்மா ஆமினியின் முதுகுப்புறம் மறைந்து கொண்டு கடைக்கு கூட்டம் கூடுவதைப் பார்த்தவாறு நிற்கிறாள்.

தன் வியாபாரத்தை மறந்து நின்றிருந்த நயீமின் கச்சான் பேக்கை வாங்கி அதன் தலைப்பகுதியை நன்றாகத் திறந்து மரக்கறிகள் பரப்பியிருக்கும் மேசையில், புது கத்தரிக்காய் குவியலில் வைத்துக்கொண்டாள்.சந்தோசத்தில் பச்சைக் கறிகளை சுமந்து நிற்கும் மேசை சற்று ஆடியும் காண்பித்தது.

“அக்கா வெண்டிக்கா எம்புட்டு”

“எடுங்க..ஐயா…..ஐம்பது ரூபாய்தான்”

மற்றொருவர்.

“பழம் கொடுமா”

“மருந்து அடிக்காதது. தோட்டத்து பழம் கிலோ எழுபது ரூபாய் எடுங்கோவன்”

கூட்டத்தோடு கூட்டமாக தானும் நின்று நிலா மீது ஒரு கண்ணை விட்டு பார்த்திருந்த அப்பு எதிர் பாராத அடி பிடறியில் விழ சட்டென திரும்பினான்.

“இங்க என்னத்த புடுங்குற? ஆ…. அவளுகள் புடுங்கினத்த விக்கிறாளுகள்..ஆ..நீ… எதப் புடுங்கி..எங்க விக்கப்போற..டா..”

மாமாவின் அடியை வாங்கிய அப்பு மறு பேச்சு பேசாமல் “பொது இடங்களில் புகைத்தல் தடை”என்ற வாசகம் எழுதியிருக்கும் கம்பத்தில் சாய்த்து வைத்திருந்த தன் சைக்கிளை விரைந்து சென்று எடுத்து வேகமாய் நகருகிறான்.

மரக்கறித் தோட்டத்து வேலைகளையெல்லா இழுத்துப்போட்டுக் கொண்டு தானே செய்து, நல்ல விளைச்லையும் காணுகின்ற திறமை ஆமினியின் கணவனுக்கே சொந்தம். அதை விற்பனை செய்து குடும்பத்தை நடத்துகின்ற திறமை ஆமினிக்கே உரியது. நிலாவும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் ஒத்துழைபாய் இருந்தவள்தான்.

எதிர்பார இழப்பு அப்பாவின் மரணம். தோட்டவேலைகள் செய்யும்போது காலில் விச முள் குத்தி பல மாதங்கள் நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்து இறந்து விட்டார்.

இப்போது ஆமினிக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. கல்யாண வயதில் மகளையும் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை.

வெள்ளி, சனி இரு தினங்களிலும் கொஞ்சம் அதிகமாக காய்கறிகள், கீரைக் கட்டுகள் வியாபாரமாகும். அதனால் பஸ் ஏற வேண்டிய நிர்பந்தம் நிலாவுக்கு ஏற்பட்டது. நாளடைவில் அது அவளுக்கும் மகிழ்வைக் கொடுத்தது. தேனீர்க் கடையில் ஒலிக்கும் தமிழ் பாடல்களையும் மனனமிடும் சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. என்ற மகிழ்வு. இரண்டு நாட்களும் அம்மாவோடு உதவியாய் நின்று வியாபாரத்தையும் கற்றுக்கொண்டதாகவும் போச்சு.

பூவோட சேர்ந்தால் நாரும் மணக்கும் என்பதுபோல கத்தரிக்காய் மேலிருந்த கச்சான் சுறுணைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருந்தும் நயீம் முகத்தில் சந்தோசத்தைக் காண முடியவில்லை.

இவற்றிக்கெல்லாம் முதல் நெல்லித்தோட்டத்திற்கு போகும் பஸ் புறப்பட்டுவிட்டது. என்பதை அதன் எரிச்சலூட்டும் சத்தம் ஆமினியின் காதுகளை விட்டு இன்னும் விலகாமலிருப்பதிலிருந்து ஊகித்துக்கொண்டாள்.

“ ம்…..புடிடா மோன உன்ட கச்சான் வித்த காசி…” பொலுத்தீன் பேக்குடன் கையை நீட்டினாள் ஆமினி. தீரா வேதனையோடு நயீம் அந்த பொதீயை வாங்கிக் கொண்டான்.

“மோன இங்குட்டு பாரு அம்மாவ பாரு என்டா… முகம் மாதிரியா…அழுறயா?…உன்ட வீடு எங்கே… பேசுடா….என்ன நீ பேசாம…. கவலயா இருக்கே…”

“ஏன்ற வீடு அங்க….” என்று ஒரு கையினால் திசையைக் காட்டி; “எனக்கு உம்மா இல்ல..வாப்பா…” “இல்ல” என்று தலையை ஆட்டியும் கலங்கினான் நயீம்.

திடீரென அவன் கையைப் பிடித்து மென்மையாக இழுத்து அவன் உயரத்திற்கு தான் இறங்கி வந்து கன்னங்களிரண்டினையும் தன் கைகளால் இறுக்கி முகத்தோடு முகம் வைத்து தானும் அழுதுகொண்டே நெற்றியில் முத்தமிட்டாள் ஆமினி. அவளின் மேல் உதட்டு வியர்வை நயீமின் நெற்றியில் இன்னொரு உதடாக பதிந்திருந்தது.

“என் கூட வா..எங்க வீட்ட வாரியா?…உனக்கு அக்கா இருக்கா…உன்ன எங்க ஊரு ஸ்க்கூல்ல சேத்து படிக்க வக்கிறன்..என்ன..சொல்லு.. உங்க வீட்டுல உன்ன யாரு இப்படி கச்சான் விற்கச் சொன்னது?” ஆமினி அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் முன் நயீமின் வாய் எச்சிலுடன் திறந்தது அழ ஆரம்பித்தவாறு “உம்மாவும்,வாப்பாவும்…எனக்கு அடிப்பாங்க….நல்லா சோறும் தாரல்ல…..நான் வீட்ட விட்டு ஓடி வந்துட்டன்….” என்று நயீம் விம்மியதும். தன் தோளோடு நயீமை சாய்த்து கொண்டு சற்று சுற்றி வளைத்துப் பார்க்க ஆமினிக்கு இப்போதுதான் தோன்றியிருக்கிறது. அந்நேரம் கடை வியாபாரம் ஓய்ந்து எல்லோரும் வீடு சென்றுவிட்ட ஓசைதான் ஒலித்தது.

ஆமினி தன் பாட்டிற்கு வந்து வியாபாரத்தை முடித்து தன் பாட்டிற்குச் செல்பவள். யாரும் கூட்டு இல்லை. அதுதான் இவள் வாழ்க்கையில் விளையாடிவிட்டதோ!

“டிக்கட் டிக்கட்….நெல்லி……நெல்லி…..நெல்லி…..டிக்கட்….டிக்கட்…”

“எனக்கொண்டு”

“அம்மா..நீங்க..”

“நெல்லி ஒண்டு குடுப்பா..”

“பழமா?..காயா… என்று புன்னகையுடன் கிண்டலடிப்பது போல் அவர் டிக்கட் கிழிக்கும் ஸ்டைலே தனி ரகமாக மாறியது. கொஞ்சம் இளமைத் தோற்றம்தான். தலை மயிருக்கு மை இட்டிருக்கிறாரோ என கேட்கவேண்டும் போல தேன்றும். நெடு நாட்களாக கண்டெக்டர் ஒரு இதாத்தான் ஆமினியைப் பார்க்கிறார். ஆமினி அழகான தேக அமைப்போடும், செப்பமான முகமும் பஸ்ஸில் இருக்கும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.. பஸ் கண்டெக்டர் வேலை கிடைத்த காலம் சோமுவுக்கு மெருகேறி கொஞ்சம் அதிகமாகவே நெஞ்சைத் தூக்கி நிற்கத் தொடங்கிவிட்டார். பஸ்ஸில் ஆமினியின் இருக்கைக்கு பக்கத்திலேயே அதிக நேரம் நின்றுகொண்டு பயணிகளுக்கு டிக்கட் கிழிப்பார்.

“சோமு..சோமு”என்றுதான் றைவர் அழைப்பார். கொஞ்சம் வாடிக்கையான பயணிகளும் “சோமு” என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல தடவைகள் ஆமினியின் மரக்கறி லக்கேஜ்களுக்கு டிக்கட் கிழிக்காமல் சும்மா விடுவார். ஆனாலும் ஆமினி அதற்குண்டான காசை அவரிடம் திணித்து, எதிலும் ஒரு நாணயமாகவே நடந்து கொள்வாள்.. பல சமயங்களில் வியாபாரம் செய்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள்ளும் நேரம் வரும். அந்த நேரத்தையும் வீணாக்காமல் தன் கணவனின் நினைவலைகளைச் சுழல விட்டு இதயத்தால் வரும் இன்பப் பூரிப்புக்கு பின்னால் அதே அலைகளில் மூழ்கி மூச்சுத் திணறி அழுதும் கொள்வாள்.

கண்களினாலும் இவளுக்கு வியர்வைதான் வருகிறது என்பது போன்று பையில் இருக்கும் சீலைத் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்து குடும்பப் பொறுப்புள்ள ஒரு ஆண் போன்று தன்னை எண்ணி தைரியத்தை வரவழைத்துக் கொள்வாள். ஆமினியின் முகம் துடைக்கும் சீலைத்துண்டில் வரும் மணம் அவள் குமர் பருவத்திலிருந்து விரும்பிய மல்லிகை மணம். வீட்டிலிருந்து வரும்போது மல்லிகை வாசனைக் குளோனைப் பூசியே கொண்டுவருவாள். அவள் விரும்பியதில் மல்லிகை மணம்தான் கூட வருகிறது. மணந்தாளே அவன் கூட வரமுடியாமல் போய்விட்டானே! என்றும் தன் கணவன் நினைவை மனதில் செருகுவாள்.

ஆமினியைத் தன் வசப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்த சோமு அவளின் தனிமையை பயன்படுத்திக் கொண்டு பஸ்ஸில் கூட்டம் அதிகமாகும்போது அவளின் இருக்கைப் பக்கம் நின்று அவள் உடலோடு தன் உடல் படும்படி நடந்து கொள்வான்.

“உன்ன கல்யாணம் செஞ்சிக்க விரும்புறன் எனக்கு உன்ட சம்மதம் தேவை..அதாலதான் பின்னாலே அலையுறன் ஆமினி…என்னப் புரிஞ்சிக்க மாட்டியா?.” என்ற கெஞ்சல் தொடர்ந்த நிலையில்…. அவள் தனித்து பஸ்ஸில் இருக்கும் நேரங்களிலெல்லாம் கெஞ்சுவான் சோமு.

சேமுவின் ஆசை வார்த்தைக்கு மயங்கி ஒரு நாள் அவள் தன்னையே கொடுத்துவிடுகிறாள்.

“அப்ப பண்ணிக்குவம்…இப்ப பண்ணிக்குவம்..கல்யாண வயசு பெட்டையும் இருக்கு கொஞ்சம் பொறுத்துக்கோ..நம்ம கல்யாணத்த பிறகு பாக்கலாம்” என்று சொல்லி காலத்தைக் கடத்தினான் சோமு. தனது பசியைத் தீர்த்துக் கொண்ட திருப்தி மட்டும் அவன் முகத்தில் தெரியும். நாணயக்காரி ஆமினிக்கு அது அப்போது புரியவில்லை. நாலு மாதங்கள் கடந்த நிலையில் தான் கருவுற்றிருக்கும் நிலையை அறிகிறாள். இதை அறிந்த சோமு ஆமினியை ஏறெடுத்தும் பாக்காமல் விலகி நடக்கத் தொடங்கினான்.

ஆமினியின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்பதை கொஞ்சமும் உணராமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கவலையில்லாமல் சிகரெட்டைப் புகைத்துப் புகைத்து நிம்மதியாக திரிகிறான்.

மெல்ல மெல்ல அம்மாவின் முக பாவங்கள், அன்றாட கருமங்கள் எல்லாம் நிலாவுக்கு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது. “என்னம்மா ஆச்சி நோக்கு..? நீ முன்ன மாதிரி நல்லா இல்லய ஏமா…?” என்று வினவுகிறாள். அம்மாவும், மகளும் நண்பிகள் போலவே எப்போதும் பழகுவார்கள்.

“ஒன்னுமில்லடா” என்று சொல்லி எத்தனை நாளைத்தான் கடத்த முடியும். மனதுக்குள்ளே கேட்டுக்கொள்கிறாள். எல்லா உண்மைகளையும் போட்டு உடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை காலம் உருவாக்கிவிட்டது. அன்று சனிக்கிழமை உச்சி வெய்யிலின் சூடு தாங்காமல் ஆமினி மயங்கி மகளின் தோளிலே சாய்கிறாள். சந்தையில் உலாவித்திரிந்த ஆட்டோ ஒன்றை வரவழைத்து அம்மாவை அந்த ஊர் வைத்தியரிடம் அழைத்துச் சென்று விபரமறிகிறாள் நிலா. எல்லாப் பெண்களையும் போல அம்மா மீது வெறுப்போ, கோபமோ காட்டாமல் மிக அன்பாக நடந்து கொள்ளும் நிலாவை நினைத்து கண் கலங்குகிறாள் ஆமினி.

இந்த விசயத்தை நாளாக நாளாக வயிறே காட்டிக் கொடுத்துவிடும் என்றறிந்த ஆமினி தன் ஊருக்கு கொஞ்ச நாளைக்கு போகாமல் தான் பொழப்பு பார்க்கும் இந்த ஊரில் தங்கிட முடிவெடுத்து; மகளையும் அந்த பஸ்ஸில் வராமல் வேறு பஸ்ஸில் வரும்படி பணித்தாள். தொடர்ந்து வராமல் தன் ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களின் வீட்டில் இருக்கும் படி மேலும் மகளுக்கு நிலைமையை உணர்த்தினாள். தான் பொழப்புக்கு வந்த இந்த ஊரிலேயே சிறு வாடகை வீட்டில் தங்கி மகள் கொண்டு வந்து கொடுக்கும் காய் கறிகளை விற்று அந்த நாட்களை கடத்தத் தொடங்கினாள் தோட்டத்தைக் கவனிக்க கூலிக்கு ஆளும் வைத்து தன்னைப் போன்று திறமையும் உட்சாகமுமாக நிலா இருப்பதையிட்டு ஆமினி பூரித்துப் போகிறாள். தன்னுடன் பக்கத்துக் காம்பராக்களில் வியாபாரம் செய்யும், பெண்கள், மற்றும் ஆண்கள் பலதையும் கதைத்தார்கள். சேமுவும் சில மாதங்களாக பஸ் நிலையத்திற்கு வேலைக்கு வருவதைக் காணவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு நாட்களைத் தள்ளிய ஆமினிக்கு ஒரு புதன் கிழமை சந்தையில் வைத்தே பிரசவ வலி எடுக்க; என்னதான் தவறாக பேசினாலும் இந்த நிலமையில் உள்ள பெண்ணை யார்தான் தவிக்க விடுவர்கள். அப்படிக் கல் நெஞ்சக்காரர்களும் இந்த உலகில் இருப்பார்களா?. சக பெண் வியாபாரிகளின் உதவியுடன், அரச பொது மருத்துவ மனையில் பிரசவ வொட்டில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரம் வரை வலியில் துடித்து ஒரு அழகான ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அந்த பிஞ்சுக் குழந்தையை அந்த வொட்டிலே கண்டு ஆசைப்பட்டு ஆமினியிடம் கெஞ்சிக் கேட்ட அந்த பெரியவர் கையில் ஒப்படைத்துவிட்டு விம்மி அழுத அந்த நினைவை; நயீமை தன்தோளில் சாய்த்தவண்ணம் மீட்டுகிறாள் ஆமினி. தன்னைப் பிரிந்த குழந்தை வளர்ந்து ஆளாகி இந்நேரம் இந்த நயீமைப் போன்ற பருவத்தில் இருப்பான். என்றெல்லாம் அவள் மனக் கண்ணில் ஒரு கணக்குச் சித்திரமாக தோன்றுகிறது.

மரைக்கார் பணக்கார புத்தியும் திமிரும் உடையவர். மார்கட்டுக்கு வந்து காய், கறி வாங்கியதே இல்லை. அதற்குத்தான் ஆள் வைத்திருக்கிறார். வீட்டு வேலைக்கு தனி ஆள். தோட்ட வேலைக்கு தனி. வயல் வேளாண்மை வேலைக்குத் தனி. காரு, றைவர் என்று எக்கச் சக்கம். எப்படிப்பட்ட மனிதனையும் ஒரு நொடிக்குள் படைத்தவன் நினைத்தால் எந்த நிலைக்கும் ஆளாக்குவான் என்பது மறுக்க முடியாத உண்மை.

தனது மோட்டார் சைக்களில் மெது மெதுவாக விரைந்து அந்த தார் வீதியில் சென்று கொண்டிருந்த மரைக்கார் இலேசாக மார்க்கட் கடைத் தொகுதிப் பக்கமாக கண்களை விட்டார்.

அவருக்கு ஒரு அதிர்ச்சி.

அங்கே தன் மகள் வீட்டில் வளர்ந்த நயீம்.

வேக வேகமாக மோட்டார் சைக்கிளைத் நிறுத்தி,

மீண்டும் திருப்பி எடுத்துக் கொண்டு கடைத் தொகுதியை நோக்கி விரைகிறார். மரைக்காரின் தலையில் “பெல்ட்டு” இடாமல் மாட்டியிருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது தெரிந்தும் நின்று அதை எடுக்காமல் ஆமினியின் கடைக்கு முன்னால் போய் நிறுத்துகிறார்.

மரைக்காரைக் கண்டு பயந்து மேசைக்கு கீழ் போய் ஒழிந்து கொண்டான் நயீம்.

மரைக்காருக்கு மற்றுமொரு அதிர்ச்சி.

நயீமை தன்னிடம் ஒப்படைத் தாய் எதிரில்.

“இத்தன வருசமா இவன நீதான் பிடிச்சி வச்சிருக்கியா?…நீதான ஹொஸ்பிட்டல்ல வச்சி கொழந்தைய ஏன்ற கையில கொடுத்த?…ஆமா நீதான் நீதான்.. எனக்கு நல்ல ஞாபகம்…” உணர்ச்சி வேகமாக சத்தம் உயர்த்திப் பேசுகிறார் மரைக்கார். அல்லையில் உலாவித்திரிந்த சிலர் ஆமினியின் கடை நோக்கி வருவது போல் இவருக்கு தெரிகிறது. தன் வெள்ளை தாடியை வலது கையினால் தடவித் தடவி “நயீம் வெளியே வாடா.. நீங்க வா.. ஆட்கள் இங்க வர்ராபோல இரிக்கி… இவன் நீ பெற்ற பிள்ளை இறைவன் உன்ட பிள்ளைய உங்கிட்டே திருப்பிக் கொடுத்துட்டான்..நீ…உன்ட ஊருக்கு இவன கூட்டின்டு போ…சரியா… நான் போறன்..”என்று சொல்லியபடி மோட்டார் சைக்களில் ஏறி நிம்மதியாக விரைகிறார் மரைக்கார்.

உடல் விறைத்து ஈரலும்,எலும்பும், சதையும் ஒன்றாக சேர்ந்து அசைவது போலவும்; வாயிலே வார்த்தை வராமல் வறண்டிருப்பதையும் எங்கோ ஓர் மூலையிலிருந்து ஆனந்தமும் கவலையும் கூடி மலைத்து நின்ற ஆமினி சில நிமிடம் ஒரு பைத்தியக்காரி போன்று அருகில் நின்ற மகளையும் விறைத்துப் பார்த்துவிட்டு “மோன மோன….என்ட மோன்டா நீ….எங்க இருந்த நீ…..ஆ……இத்தன நாளா…..என்ற கண்ணுல படாம……அந்த சாமி ஒன்ன வச்சிட்டு என்ன தவிக்க விட்டுட்டானே…..என்ற மோன..” என்று அழுதவாறு தன் மார்பில் நயீமின் முகத்தை இறுகப் பதித்து விடாமல் அழுகிறாள் ஆமினி. அவ்விடம் வந்த மூட்டை தூக்கும் கூலி “ஆமினி என்ன….பிரசின…அழுற ஏ…” தன் தடித்த, பீடிப் புகை இழுத்து வறண்ட குரலில் கேட்கிறான். “ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..” என்று அழுவதை நிறுத்திவிட்டு வேகமாக பதில் கொடுத்தவளாய் வியாபாரம் செய்த காசிப் பை, மற்றைய சிறு சிறு பொதிகள் எல்லாவற்றையும் சேகரித்து மகள் நிலாவிடம் சிலவற்றையும் கொடுத்து, தானும் முடிந்தவற்றை ஒரு கையில் எடுத்து, காசிப்பையை இடுப்பில் பாதுகாப்பாக இறுக்கிக் கட்டி நயீமையும் ஒரு கையால் இறுக பிடித்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறி நடக்கிறாள். தன் ஊர் பஸ் வந்து நிற்கும் தரிப்பிடத்தில் நின்று பஸ்ஸுக்காக தன் மகளுடனும், மகனுடனும் நெஞ்சில் தனக்கொரு ஆண் பிள்ளை இருக்கிறான் என்ற உரமுடனும், ஒரு கணவனை இழந்து, ஒரு கணவன் அதுதான் சோமு. அவன் இந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கதையும் அப்போதுதான் அவளின் காதிலும் விழ காதிருந்துள்ளது.

காத்திருக்கிறாள் ஆமினி பஸ்ஸிற்காக மட்டும்.

எந்தப் பணக்காரனோ அடித்து விரட்டிய நாயும் இவர்களுடனே……..

நாக்கை வெளியே காட்டுவதும் உள்ளிழுப்பதுமாக நின்று யாரையோ பளித்துக்காட்டுவது போலிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *