உறவுகள் தொடர்கதை

 

“அவ வந்திருக்காடா!” என்று ராஜம் வந்து சொன்னதும் அப்பாவின் உடலருகில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தாமு சட்டென்று கோபத்துடன் தலையை உயர்த்தி ராஜத்தைப் பார்த்தான். ராஜம் அவன் அப்பா வழி பாட்டி.

தாமுக்கு அம்மா இல்லை. அவன் சிறுவயதிலேயே காலமாகி விட்டாள். அவன் வளர்ந்தது பாட்டியுடன் தான். இன்று தாமு காலேஜ் படிப்பின் கடைசி வருஷத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறான் என்றால் அந்தப் பெருமை ராஜத்தையே சேரும்.

இதோ கிடக்கிறாரே ராஜேந்திரன், அவர் நேற்றுவரை தன் வேலையுண்டு என்றிருந்தவர். தாமு என்ன படிக்கிறான் என்று கூட தெரியாது.

இப்படி குடும்பத்தில் பற்றில்லாமல் இருந்தவருக்கு ராகினியுடன் மட்டும் எப்படிப் பழகத் தெரிந்தது என்று தாமுவுக்கு எப்போதும் கோவம் வரும்.
ராகினி ராஜேந்திரன் ஆபிசில் உடன் வேலை பார்த்தவள். நட்பில் தொடங்கிய அவர்கள் பழக்கம், வாழ்க்கையில் பங்கு கேட்கும் அளவுக்கு வளர்ந்து போன போதுதான் தாமுவுக்கும் ராஜத்துக்கும் தெரிய வந்தது.

அந்த மாலை தாமுவால் மறக்க முடியாது. சுமார் ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் தனியாக வரவில்லை. கூட ராகினியையும் அழைத்து வந்திருந்தார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது “நான் இவளைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன். உங்க ரெண்டு பேர் ஒபீனியன் கேக்கத்தான் இவளையும் கூட்டிகிட்டு வந்திருக்கேன்” என்றார்.

தாமுவுக்கு காலின் கீழிருந்த தரை நழுவியது போலிருந்தது. அப்பாவை எரித்து விடுவது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் ரூமுக்குச் சென்று கதவை அறைந்து சாத்திக்கொண்டான். ராஜம் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள். சிறிது நேரம் அப்படியே நின்றிருந்த ராகினி மெளனமாக திரும்பிப் போனாள். அன்று போனவள் இன்று தான் வந்திருக்கிறாள்.

அதற்கப்புறம் ராஜேந்திரன் அவளைப் பற்றியோ திருமணம் பற்றியோ எதுவும் பேசவில்லை. ஆனால் அவர்களுக்குள் தொடர்பு இருந்தது என்று இவர்கள் காதில் அரசல் புரசலாக விழுந்தது.

இப்படிச் சென்ற இவர்கள் வாழ்வில் மீண்டும் ஒரு புயல் வீசியது போன வாரம். ராஜேந்திரன் வீட்டுக்கு வரும் வழியில் அவர் வண்டி மீது ஒரு கார் மோதி தலையில் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் நேற்று மாலை காலமானார். இந்த சந்தர்பத்தில் தான் ராகினி மீண்டும் அவர்கள் வீடு தேடி வந்திருக்கிறாள்.

இப்படிச் சிந்தனையில் மூழ்கியிருந்த தாமு கதவருகில் நிழலாடியது கண்டு சுய நினைவுக்கு வந்தான். பார்த்தால் ராகினி.

அன்றைக்குப் பார்த்த அதே ராகினி. சற்று தலைமுடி நரைத்திருந்தது. அவ்வளவுதான் வித்தியாசம்.

அவள் கையில் ஒரு பெரிய மாலை. தோளிலிருந்த ஹேன்ட் பேக்கை கீழே வைத்துவிட்டு அப்பா உடல் மீது மாலையைப் போட்டாள். அவர் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

பின்னர் ராஜத்திடம் வந்து அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள். உடனே ராஜம் “ இங்கப்பாரும்மா! வந்த, மாலை போட்ட. இப்போ வந்த வழி போயிடும்மா. எல்லா உறவும் வர்ற நேரம்.” என்றாள்.

இதைக்கேட்டு ராகினி கண்களில் கண்ணீர். “அம்மா, ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்” என்றாள். “இன்னும் என்ன உதவி? அதான் அவனே போயிட்டானே! சரி சீக்கிரம் சொல்லு” என்றாள் ராஜம்.

“ எங்க ரெண்டு பேர் உறவ ஊர்ல என்னென்னவோ விமர்சனம் செஞ்சாங்க. இந்த பத்து வருஷமா நான் சந்திக்காத அவமானம் இல்லை. அது கூட என்னைக்காவது என் கழுத்துல இவர் கையால தாலி ஏறாதாங்கற சபலம் தான். ஆனா என் நிறைவேறாத ஆசையாவேப் போயிடிச்சு. ஆனா அதக் கூட நான் பொறுத்துப்பேன். இப்போ நான் கேக்கற உதவிய செஞ்சீங்கன்னா அதுவே போதும்.

நீங்க நம்புவீங்களோ இல்லையோ, என் கூட பழகிய ஆரம்ப நாள்ல கூட அவர் என்கிட்டே முறை தவறி நடந்துக்கவே இல்ல. ‘நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகு தான் நமக்குள்ள தாம்பத்ய உறவு’ன்னு சொல்லிட்டார். அப்புறம் தான் அன்னிக்கு சாயந்திரம் உங்க வீட்டுக்கு என்னக் கூப்பிட்டுக்கொண்டு வந்தவர் இங்க நடந்த விஷயங்களப் பாத்துட்டு ரொம்ப வருத்தப்பட்டார். ‘நெஜத்தச் சொல்லித்தானே கேட்டேன்’னு ரொம்ப வருத்தப்பட்டார்.

அதுக்கப்புறமும் நேத்து வரையில அவர் விரல் கூட என் மேல பட்டதில்ல. நான் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டுமே. தன் எண்ணங்கள, பயங்கள, கனவுகள பகிர்ந்து கொள்ளும் ஒரு தோழியா மட்டும் தான் நடத்தினார். ‘என்னிக்கு என் மகன் சரின்னு சொல்றானோ அன்னிக்கு நீ என் மனைவி’ன்னு எப்பவும் சொல்லுவார். அது என் பாக்யத்துல இல்லை.

இப்போ அவரே போய்ட்டார். என் கனவுகள் எல்லாம் எடுத்துகிட்டுப் போய்ட்டார். இனிமே இந்த ஊர்ல இருக்க வேண்டாம்னு முடிவு செஞ்சுட்டேன். எங்க ஊர் பக்கம் போய்டலாம்னு ஒரு முடிவு. அதுக்கு முன்னால இந்தக் கவர உங்க கிட்ட கொடுத்துட்டு போய்டலாம்னு தான் வந்தேன் “ என்று சொல்லி தன் ஹேன்ட் பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து தாமு கையில் கொடுத்தாள்.

தாமு அதைப் பிரித்துப் பார்த்தான்,. உள்ளே ஒரு செக். முப்பது லட்ச ரூபாய்க்கு. வியப்புடன் அவளைப் பார்த்தான்.

“ இது உங்க அப்பா பணம் இல்லை. என்னோட சேமிப்பு அப்புறம் நகைகள வித்த பணம். எனக்கு இனிமே உபயோகம் இல்ல. எங்க ஊர்ல எனக்கு வீடு இருக்கு. கொஞ்சம் நிலம் இருக்கு. என் மிச்ச காலம் ஓடிடும். இது உனக்கு. உன் எதிர்காலத்துக்கு. உன் அப்பா இருந்திருந்தா செய்ய வேண்டியதை நான் செஞ்சிருக்கேன். அவ்ளோதான். வாங்கிக்க” என்று சொல்லி அதைத் தாமுவின் கையில் கொடுத்துவிட்டு திரும்பி நடந்தாள்.

ஒரு கணம் யோசித்த தாமு, “ கொஞ்சம் நில்லுங்க. இத நான் வாங்கிகணும்னா ரெண்டு கண்டிஷன்” என்றான்.

என்ன என்பது போல ராகினி திரும்பிப் பார்த்தாள்.

‘அப்பா இருந்திருந்தா செய்ய வேண்டியதை நான் செஞ்சிருக்கேன்னு’ சொன்னீங்க. அவர் இல்லாத குறையப் போக்கறதும் உங்க கடமை தானே? அதனால முதல் கண்டிஷன் நீங்க எங்கயும் போகாம எங்களோடயே இருக்கணும். என் அப்பாவுக்கு மனைவியா இனிமே நீங்க வாழ முடியாது தான் . ஆனால் இந்த வீட்டுக்கு மருமகளா வாழ முடியும். வாழணும்”

தாமுவின் வார்த்தைகளைக் கேட்ட ராகினி ராஜம் இருவரும் திகைத்தார்கள். பின்னர் இருவர் முகத்திலும் ஆனந்தக் கண்ணீர். அழுதுகொண்டே “ரெண்டாவது கண்டிஷன் என்ன” என்று கேட்டாள் ராகினி.

“உங்கள அம்மான்னு கூப்பிட எனக்கு பர்மிஷன் தரணும்” என்றான் தாமு.

- ஜூன் 2015 

தொடர்புடைய சிறுகதைகள்
கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் அப்பாவான எனக்கு அந்த ஆசை வந்திருக்கக் கூடாதுதான். அப்படி என்ன காமம்? அதுவும் ஒரு நாடோடி இனப் பெண் மீது? இது என் காமன் சென்ஸ் சொன்னது. உந்திச் சுழியின் முளைத்து எழுந்த உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் வணக்கம். முதலில் அவரைப்பற்றிய ஒரு சிறு விளக்கம். பின்னர் அவருடன் வந்திருக்கும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்” என்று அந்த ...
மேலும் கதையை படிக்க...
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன். நான் யாரு? கதை சொல்றவன்னு வச்சுக்கோங்க. அப்ப நீயும் இதக் கதைல வரியான்னு நீங்க கேட்டா இல்லைங்கறது தான் என் பதில். நான் கதாபாத்திரம் இல்லை ஜஸ்ட் எ ஸ்டோரி டெல்லர். இந்தக் கதைல ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம். அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் ...
மேலும் கதையை படிக்க...
நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஜன்னலுக்கு வெளியே இருந்த முருங்கை மரத்தை வெட்டிய நாளில் இருந்து தான் அவன் இப்படி உணர்ந்தான். நிர்மல் ஒரு கம்பெனியில் ...
மேலும் கதையை படிக்க...
புலிக்கடி கருத்தமுத்துவின் சாபம்
விலை
கானல் நீர்
ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்
முனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW