சண்முகவடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 6,673 
 

‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது.

அந்த அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை.மாற்றுப் பணியில் தொடர்ந்து ஓராண்டாக தலைமை ஆசிரியர் இருந்த நிலையில் பள்ளியின் மிக மூத்த ஆசிரியர் முருகன் பொறுப்புத்தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் ஒன்றும் மோசமான மனிதர் இல்லை. தவறு என்றால் கடிந்து கொள்ளுவார் ஆனால் யாரையும் பலர் முன் அவமானப்படுத்துபவர் இல்லை. கனிவாகவே பேசி அனைவரையும் ஊக்கப்படுத்துவார். அந்த பள்ளியில் சுமார் இருபது ஆண்டுகள் பணியாற்றியவர். கால தாமதமாக வருவது பிடிக்காது என்றாலும், அவரது கோட்பாடு உள்ளே இருக்கும் காலத்தில் கற்பி, உன்னையே நம்பி வந்துள்ள அந்த பிஞ்சு, பல இன்னல்களுக்கிடையில் கற்க வந்துள்ளது. அதை ஏமாற்றாதே. காலதாமதமாக வந்தாலும், பணியை முடித்துவிட்டு சீக்கிரம் போனாலும் பரவாயில்லை.

வடிவு அந்த பள்ளிக்கு மாற்றலாகி வந்தது சமீபத்தில் தான், கிட்டத்தட்ட 2 மாதம் இருக்கும். முருகன் தினமும் காலையில் டாடா மேஜிக் பகிர்வு ஊர்தியில் அல்லது மஞ்சள் அல்லது நீல விரைவுப் பேருந்து கிடைத்தால் சரியாக 9.15 மணிக்குப் பள்ளிக்கு வந்துவிடுவார். வரும் போது பேருந்து நிறுத்தத்தில் வடிவு நின்று கொண்டிருப்பதை தினமும் பார்ப்பார். ஆனால் அதில் அவள் ஏற மாட்டாள். தினமும் 10 மணி அல்லது 10.15 மணிக்குத்தான் காலதாமதமாக வருவாள். கால அட்டவணயில் அவளுக்கு முதல் பிரிவேளை இல்லாததால் பிரச்சனை இல்லை. பேருந்து, ஷேர் ஆட்டோ எல்லாம் இருந்தும் ஏன் அவள் காலதாமதமாக வருகிறாள்? பேருந்து நிறுத்தத்தில் அவள் வரும் நேரத்திற்கு , பள்ளிக்கு வரத் தாமதம் ஆக வேண்டிய அவசியம் இல்லையே. இந்த கேள்விகள் மனத்திலிருந்தும் அதனை கேட்க சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும்,” ஒரு நாள் கூத்துக்கு ஆனாலும் ரொம்ப ஆடறான். “ போன்ற அனாவசியமான வார்த்தைகள் வரும் என்பது அவர் அறிந்ததே. அதனால் பாவம் சின்ன பொண்னு, விட்டுதான் பிடிக்கணும் என்றே நினைத்தார். அவள் மாற்றலாகி வந்த பள்ளியிலிருந்து வந்த ஆசிரியர் ஒருவர், மகா திமிர் புடிச்ச பொண்ணு என்று சொல்லியது வேறு அவரது மண்டையை குடைந்தது.

ஆனாலும் பிரச்சினை வேற வடிவத்தில் வந்தது. ஒரு நாள் மதியம் 12 மணிக்கு வந்து கையொப்பமிட வந்த ஆசிரியை ஒருவரை அம்மா கொஞ்சம் நேரத்தோடு வரக்கூடாதா என்றதற்கு, பதிலுக்கு அந்த ஆசிரியை,” சின்ன பொண்ணா கண்ணுக்கு லட்சணமா அழகாயிருந்தா தாமதமா வந்தா கண்ணு தெரியாது” என்றதும் கூசிப் போனார். நிலைமையின் தீவிரம் புரிந்தது. தன் மகள் வயது பெண்ணை தன்னுடன் இணைத்துப் பேச இந்தப் பொறி போதும் என்று உறைத்தது. மாலையில் வகுப்பு முடிந்ததும் அவசரமாகப் புறப்பட்ட வடிவை விசாரிக்க வேண்டும் என கூப்பிட்டார். ஆனால் வடிவு குழந்தையை காப்பகத்தில் விட்டு வந்துள்ளதால் காப்பகம் அடைப்பதற்குள் செல்ல வேண்டும் எனவே நாளை பேசலாம் சார் என்றாள்.மறு நாள் காலையில் வழக்கம் போல பேருந்து நிறுத்தத்தில் வடிவு நின்றிருந்தாள். பேருந்து வந்தது. வழக்கம் போல வடிவு ஏறவில்லை.

தாங்க முடியாமல், “டீச்சர் வாங்க”, என்றதற்கு “வேண்டாம் சார்” என்றவளை வலுக்கட்டாயமாக ஏறவைத்தார். தனக்கும் அவளுக்கும் பயணச்சீட்டு எடுத்தார். பள்ளி வந்ததும் அவளிடம் தினமும் தான் காணும் நிகழ்விற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு வடிவு அழுதபடி அவரிடம் கூறியதைத் தருகிறேன்.

காதல் என்பது தும்மல் மாதிரி எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம் என்று ஒரு சினிமா பாட்டு வரும். அப்படித்தான் அது ஆரம்பித்தது . மதிவாணன் நினைவு அறக்கட்டளை கலை அறிவியல் கல்லூரியின் கலாச்சார விழா. அரவிந்தன் மேடைப் பேச்சு தோனியின் அதிரடி ஆட்டம் மாதிரி அரசியல்,இலக்கியம், கவிதை,சமுதாயம், பெண்ணடிமைத்தனம் என்று எல்லா திசைகளிலும் சிக்ஸர், பவுண்டரி என்று வெளுத்து கட்டிக் கொண்டிருந்தான்.வேற்றுக்கல்லூரி மாணவர்களும் பாரபட்சமில்லாமல் கை தட்டி பாராட்ட ஒரே கொண்டாட்டம். பரிசு அவனுக்கு என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.விழா முடிந்து புறப்படும் சமயம்.” குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்” குரல் கேட்டு திரும்பியவனிடம் ஆட்டோகிராப் நோட்டை நீட்டியபடி நின்ற பெண்ணைப் பார்த்ததும் திகைத்துப் போனான் அரவிந்தன். அந்த பெண்ணின் முகம் அதன் காந்த ஈர்ப்பு அவனை ஏதாவது பேசிடத்தூண்டியது.

அந்த கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவி சண்முக வடிவு. ஆறு முகங்களின் அழகும் அந்த ஒரே முகத்தில் கொண்டவள். அதிகம் திமிர் பிடித்தவள்.படிப்பிலும் சுட்டி. பசங்க அவளை பீல்டு மார்ஷல் மாணக் ஷா என்று ரகசியமாக அழைப்பதை அவள் மனதுக்குள் (அந்த பயம் இருக்கட்டும்) ரசிப்பாள். அந்த வடிவுதான் ஆட்டோகிராப் வாங்க அரவிந்தனை அணுகியவள். அன்று தான் காதல் இருவரிடமும் கிளை பரப்பியது, வளர்ந்தது. உண்மையில் படு கண்ணியமாகவே வளர்ந்தது. மிகச் சரியாகச் சொன்னால்அரவிந்தனால் வளர்க்கப்பட்டது. அரவிந்தன் – வடிவு காதலும் வழக்கம் போல் எதிர்ப்புகளை சந்தித்தது. அரவிந்தன் பக்கம் அதிகம் பிரச்சனை இல்லை. காரணம் அனாதையான அவனை வளர்த்த அவன் மாமாவுக்கு பெண்கள் இல்லை. வடிவு கடைசியில் வீட்டை எதிர்த்து சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் வடிவுக்கு அரசுப்பள்ளியில் ஆசிரியப்பணி கிடைத்தது. அரவிந்தனும் பேருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தான். அதிக நேரம் இலக்கிய கழகம் அது இது என்று அலைந்து கொண்டிருந்தான்.

வடிவு வீட்டிற்கும் அவளுக்கும் தொடர்பு முற்றிலும் துண்டானது. பிள்ளை பிறந்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தை அளித்தது. வடிவு தந்த அதிர்ச்சியில் அப்பா கண்ணை மூட, இறுதிச் சடங்கின் போது அம்மாவும், அண்ணன் மற்ற சொந்தங்களும் அவர் முகத்தை பார்க்கக் கூட அவளை அனுமதிக்கவில்லை. தனியே அழுத அவளை பல நாட்கள் அரவிந்தனால் தேற்றவே முடியவில்லை.

வருடங்கள் தறி கெட்டு வேகமாக ஓட ஆரம்பித்தன. அரசுப் பள்ளி ஒன்றுக்குப் பக்கத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இரண்டு படுக்கை அறை அடுக்கு மாடி வீடு அரவிந்தன் பேரில் வங்கிக்கடனில் வாங்கி விட்டனர், மாதத்தவணை அவள் சம்பளத்தில் கட்டுவது என ஆயிற்று. தகுதிக்கு மீறி நன்கொடை கொடுத்து பல சிபாரிசுகளுக்குப் பின்னர் கான்வெண்ட் பள்ளியில் குழந்தை அமலாவை முதல் வகுப்பில் சேர்த்தாயிற்று. வீட்டின் அருகேயுள்ள அந்த பள்ளிக்கு மாறுதல் பெற ஒரு லகரம் காலி ஆனது. செலவுகள் ஏறிக்கொண்டே போயின. அரவிந்தன் ஆரம்பத்தில் அவ்வப்போது கொஞ்சம் பணம் தந்தவன் அப்புறம் ஒன்றும் தருவதில்லை. கவிதை புத்தகம் வெளியிட என்று கை வளையல்கள், பத்து சவரன் சங்கிலி மோதிரம் எல்லாம் நிரந்தரமாக மார்வாடி கடையில் குடியேறிவிட்டன. அடுத்த மார்ச் வந்தால் திருமணம் ஆகி முழுசா ஐந்து வருடங்கள். அவன் தனக்கு அளித்திருப்பது கிரீடம் அல்ல முள்முடி என்பது பிடிபட்ட போது, ஒரு நாள் அவனிடம் தனியே பேச மறு நாளிலிருந்து வரவு செலவை தன் பொறுப்பில் தந்துவிடும்படி அவன் பேச மறுப்பேதும் சொல்லாமல் சரி என்றாள்.

ஒரு நாள் யாரோ அமலாவின் பள்ளியில் வெடி குண்டு வைத்திருப்பதாக வதந்தி பரவியது. அமலாவை காப்பகத்தில் கொண்டுவிட முடியாது. நீங்கள் வந்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று தொலைபேசித் தகவல் வந்ததும் பதறிப்போனாள். அன்றைக்குத்தானா முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு பார்வையிட வரவேண்டும். கண்டிப்பாக அனுமதி கிடைக்காது. அரவிந்தனை கைபேசியில் அழைக்க சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவனது அலுவலக எண்ணை தொடர்பு கொள்ள தலைவலி என்று விடுப்பில் சென்றதாகச் சொன்னார்கள். சரி என்று வீட்டு எண்ணை தட்ட பதிலளிக்க ஆளில்லை. நல்ல வேளைபார்வையிட வந்த பெண் அதிகாரி, அவள் பாடம் நடத்தியதில் திருப்தியடைந்து வெளியே வந்த போது தன் நிலையை கூற அவரே தன் வாகனத்தில் அழைத்துச் சென்றார். குழந்தையை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்த அவள் எதற்காக அழுவது என்று தெரியாமலே நெடுநேரம் அழுதாள்.

அரவிந்தன் ஏழு மணிக்கு வந்தவன் , அவளை என்ன ஏது என்று கூட கேட்கவில்லை. தொலைக் காட்சியை பார்க்க ஆரம்பித்தான். தாங்க முடியாமல், “இன்னிக்கு மதியம் எங்க போயிருந்தீங்க”? செல் போனை வேறு ஆப் செய்து வைதிருந்தீங்க.” என்றதும்,“ஆ, ஆபிஸில் தான் இருந்தேன். என்ன திடீரென்று கேள்வி”?

“ஆபிசுக்கு போன் பண்ணினேன். லீவு என்று சொன்னாங்க”.

“அ, அதுவா. ஒரு இலக்கிய விமர்சகருடன் டிஸ்கஷன். அதற்காக ஆள்வார்பேட் போயிருந்தேன். ஆபிசில் தெரிந்தா எதுனா சொல்லுவாங்க. நீ ஏன் அங்கல்லாம் கேட்கற?”

“ பாப்பாவுக்கு ஸ்கூல் திடீரென மூடிட்டாங்க. அழைச்சிட்டு வர ஆளில்லை. அதான் உங்களை கண்டாக்ட் பன்ணினேன்.”

“சரி . என் போன் வேலை செய்யலை. உன் போனை கொடு” என்று பதிலுக்குக் காத்திராமல் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

காலையில் அவன் பாண்ட் பாக்கெட்டில் இரண்டு 175 ரூபாய் அபிராமி மால் சினிமா டிக்கெட். முதல் அதிர்ச்சி. மறைத்துக் கொண்டு கிளம்பும் போது கையில் பணம் இல்லை என்பது உறைத்தது.

“ஏங்க பஸ்ஸுக்கு காசு வேணுங்க”.

“ ஆமா. ஸ்கூலுக்கு பஸ் பேர் எவ்வளவு?”

“தெரியலீங்க”.

“ இந்தா 10 ரூபாய். அதிகபட்சம் 5 ரூபாய்னாலும் போக வர 10 ரூபாய் போதும்.” செலவு அதிகமாகுது, சிக்கனமா இருக்கணும். பொட்டப்புள்ளய வேற பெத்துத் தொலச்சிருக்க” என்ற வார்த்தைகளைக் கேட்டதும் இரண்டாவது அதிர்ச்சி.

“தினமும் பத்து ரூபாய்தான். அந்த காசில் வெள்ளை போர்ட் சாதா பஸ்ஸில் தான் போக முடியும். உங்களை மாதிரி ஷேர் ஆட்டோ, மஞ்சள் போர்ட் பஸ்ஸில 10 ரூபாய் கொடுத்து வர முடியாது சார். எனக்கும் பள்ளிக்கு தாமதமா வர விருப்பம் இல்லை சார். ஆனாலும் என் நிலை அப்படி .காலையில் அப்படி வந்தால் அப்புறம் மாலையில நடந்து தான் போகணும். லேட்டா போனா, “எவங்கூட ஊர் சுத்திட்டு வரே என்ற திட்டு.” ஆனா ஃபிளாட்டில எல்லாருக்கும் கேட்கற மாதிரி, “டார்லிங் பை,” அப்படின்னு சொல்லி மற்றவங்க அவர் என் மேலஅன்பை பொழிவதாக நம்ப வைக்கிறான். இந்த டார்சரை என் மகளுக்காக பொறுத்துக் கொண்டிருக்கிறேன். ஏமாந்து போயிட்டேன் சார். தற்கொலை பண்ணிக்க நான் கோழை இல்லை சார். அவன் விளக்கு சார். நான் விட்டில் பூச்சி. ஏதோ கவர்ச்சியில் வாழ்க்கையை தொலைத்து விட்டேன். அழகை வெறுக்கிறேன் சார்”, என்றாள்.

முருகன் சார், கதையை சொல்லிவிட்டு அப்புறம் எந்த பெண்ணாசிரியையும் அதிகம் தாமதத்திற்கு விளக்கம் கேட்பதில்லை என்றார். எந்த ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு வடிவுகளின் மவுனத்திற்கும் கண்ணீருக்கும் பின்னே கண்டிப்பாக ஒரு அரவிந்தன் இருக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *